இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், மே 27, 2014

அம்மாவின் காதல்

1995-ல் வெளியான அமெரிக்கப் படம் த பிரிட்ஜெஸ் ஆஃப் மேடிசன் கௌண்டி. கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கி முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார். மேரில் ஸ்ட்ரீப் அவரது ஜோடியாக வேடமேற்றிருந்தார். இது ஒரு காதல் கதை. பருவ வயதுப் பெண்ணின் காதல் கதை அல்ல. பருவ வயதில் பெண்ணைக் கொண்ட ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியின் காதல் கதை. அது அவளது முதல் காதலும் அல்ல. ஏனெனில் அவள் தன்னை முதலில் காதலித்தவனைத் தான் மணமுடித்திருக்கிறாள். அவனுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்றென இரண்டு மக்களையும் கொடுத்திருக்கிறாள். இத்தாலியைச் சேர்ந்த அவளது மரணத்துடன் படம் தொடங்குகிறது. தாய் இறந்த செய்தி கேட்டு, தங்கையின் அழைப்பின் பேரில் அவளது மகன் வருகிறான். தன்னை எரியூட்டித் தனது சாம்பலை அப்பகுதியில் இருக்கும் பாலத்தின் மீது தூவ வேண்டுமென தாய் விரும்பம் தெரிவித்திருக்கிறாள். மகனுக்கும் மகளுக்கும் இது அதிர்ச்சியைத் தருகிறது. கிறித்தவர்கள் இறந்தபின்னர் உடலைப் புதைப்பதுதான் வழக்கம். இவள் ஏன் தன்னை எரிக்கச் சொல்லி உயில் எழுதியிருக்கிறாள். முடியாதென மகன் மறுக்கிறான். தனது வாழ்வில் தன் குழந்தைகள் அறியாத மர்மப் பிரதேசத்தை தாய் மூன்று நோட்டுப் புத்தகங்களில் குறிப்புகளாக எழுதிவைத்துள்ளார். அதன் மூலம் அவளது வாழ்வை அர்த்தப்படுத்திய அந்த நான்கு நாட்களின் சம்பவங்கள் விரிகின்றன. 
இத்தாலியின் பாரி பகுதியில் பிறந்தவள் பிரான்செஸ்கா. அமெரிக்காவைச் சார்ந்த ராணுவ வீரரான ஜான்சன் போர் நிமித்தம் இத்தாலி வருகிறார். அவரைக் காதலித்து அவருடனேயே அமெரிக்கா வந்து குடிபுகுந்துவிடுகிறாள். இதெல்லாம் நடந்து முடிந்து 16, 17 ஆண்டுகளுக்குப் பிறகு அவளுக்கு ஒரு தனிமை வாய்க்கிறது. கணவரும் பருவ வயதுக் குழந்தைகளும் பக்கத்து நகருக்கு நான்கு நாட்கள் கண்காட்சிக்குச் செல்கிறார்கள். அவள் மட்டும் தனித்திருக்க வேண்டிய நிலைமை. அப்போதுதான் ராபர்ட் வருகிறார். அவர் ஒரு புகைப்படக்காரர். அவளில் பூர்த்தியாகாத உணர்வுகளை நிறைவேற்றக்கூடியவராக அவர் இருந்தார். அவர் ஒரு வழிப்போக்கன். புகைப்படம் எடுத்தல் அவரது தொழில், வேட்கை. நாடு நாடாகச் சுற்றியிருக்கிறார். அவரைச் சந்தித்த கணத்திலிருந்தே பிரான்செஸ்காவின் மனம் ராபர்ட் பக்கம் சாய்கிறது. மிக இயல்பாக அவருடன் ஒட்டிக்கொள்கிறாள். அங்கிருக்கும் மேற்புரம் மூடப்பட்ட பாலம் ஒன்றின் முகவரி கேட்டுத்தான் முதலில் அவளை ராபர்ட் தொடர்புகொள்கிறார். அவருடன் சென்று பாலத்தைக் காட்டுகிறாள். அவர்களிடையே நிகழும் உரையாடல் மூலம் ஏதோ ஒரு இனம்புரியாத அன்னியோன்யம் அவளுக்குள் அவனை நோக்கி இழையோடுகிறது. கண்ணுக்குத் தெரியாத நேச இழை இருவரையும் இணைக்கிறது. அவளுள் இதுவரை திறந்திராத பாற்கடல் திடீரெனப் பொங்கி பிரவாகம் எடுக்கிறது. அவளால் அதன் பிரவாகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனுள் இருவரும் மூழ்கித் திளைக்கிறார்கள். நான்கு நாட்கள் நிறைவடைகின்றன. பிரிவு வரும் தருணம் வந்தேவிடுகிறது. தன்னுடன் வந்துவிடுமாறு ராபர்ட் அழைக்கிறார். ஆனால் பிரான்செஸ்காவால் குழந்தைகள் கணவன் ஆகியோரை விட்டுவிட்டுச் செல்வது சரியாகப் படவில்லை. மறுத்துவிடுகிறாள். ஆனால் வெறுமை அவளைப் பிடுங்கித் தின்கிறது. ராபர்ட்மீது கொண்ட காதல் ஆயுளின் எஞ்சிய நாட்களெல்லாம் அவளைத் துரத்துகிறது. அவளது கனவுலகிற்கு அவளை அழைத்துச் சென்ற ராபர்ட்டுடன் அந்தச் சுதந்திர வெளியில் சுற்றித் திரிந்த நாட்களை மனத்தில் சுமந்தபடியே ஆயுளைக் கரைக்கிறாள் பிரான்செஸ்கா.
பிரான்செஸ்கா வேடம் ஏற்றிருக்கும் மெரில் ஸ்ட்ரீப் நடுத்தரவயதுப் பெண்ணின் காதல், ஏக்கம், எதிர்பார்ப்பு, பரிதவிப்பு, வெறுமை, குடும்பச் சிறைக்குள் தனது விருப்பங்களை அடக்கிக்கொண்டு சிறைப்படும் துயரம் போன்றவற்றை அப்படியே உடல்மொழியிலும் கண்பார்வையிலும் வெளிப்படுத்திப் பார்வையாளனுக்கு மிக நெருக்கமாகிவிடுகிறார். நகரத்தில் முன்னால் செல்லும் காரில் தனது காதலன் ராபர்ட் இருப்பதை, பின்னாலுள்ள காரில் கணவனுடன் பார்க்கும் காட்சியில் அவரது காதல் உணர்வு காதலனை நோக்கிப் பலத்துடன் தள்ளுகிறது. ஆனால் அருகிலுள்ள கணவன், குடும்பம் ஆகிய பந்தம் பெருஞ்சுவராய் எழுந்து தடுக்கிறது. இந்த இரண்டுக்குமிடையில் மாட்டித் தவிக்கும் தவிப்பைத் தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.  

தாயை எரிக்க மறுக்கும் மகன் படத்தின் இறுதியில் தாயின் உண்மையான காதலைப் புரிந்துகொண்டு அவளுடைய சாம்பலை மேற்புரம் மூடப்பட்ட பாலத்தின் மீது தூவுகிறான். அங்கு தான் தாயின் காதலன் ராபர்ட்டின் சாம்பலும் தூவப்பட்டிருந்தது. தனக்கு இரு குழந்தைகளைத் தந்து தன்னை அன்போடும் அக்கறையோடும் கவனித்துக்கொண்ட தன் கணவன் புதைக்கப்பட்ட கல்லறைக்கருகில் தன்னைப் புதைக்க பிரான்செஸ்கா கோரவில்லை. தன் வாழ்நாளில் நான்கே நாட்கள் தன்னுடன் கழித்த ராபர்ட்டின் சாம்பல் தூவப்பட்ட பாலத்தில் தன் சாம்பல் தூவப்பட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்துள்ளது. குடும்ப வாழ்வு எல்லாவற்றையும் கொடுக்கிறது ஆனால் அது காதலைத் தருகிறதா என்னும் ஆழமான கேள்வியை இப்படம் எழுப்புகிறது?  

தி இந்துவில் வெளிவந்த கட்டுரை  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக