ஆகஸ்டு அடவி இதழில் வெளியாகியுள்ள நாடகப் பதிவு இது.
பெருநகரான சென்னையில் இலக்கிய அரசியல் நிகழ்வுகள் பெருமளவில் நடந்தேறுகின்றன. நம்மைக் கடந்துசெல்லும் வெறும் சம்பிரதாய நிகழ்வுகளை ஞாபகத்தில் இருந்து சுத்தமாகத் துடைத்தழித்துவிட்டுத் தினசரிக் கடமைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்கிறோம். ஆனால் எதேச்சையாக நாம் பங்குகொள்ளும் சில நிகழ்வுகள் நமது சிந்தனை மையத்தை ஆதிக்கம் செலுத்தும்விதமாக அமைந்துவிடுகின்றன. அத்தகு நிகழ்வுகளை நம்மால் மிகச் சாதாரணமாகக் கடந்துவிட முடிவதில்லை. அவை உருவாக்கிய சுறுசுறுப்பான உற்சாக எண்ண ஓட்டங்கள் நம் சிந்தனையைக் கூர்மையடையச்செய்கின்றன. நாம் அறிந்திராத மற்றொரு தளத்திற்கு நம்மை அழைத்துச்செல்ல முயலும் அவை நமது புரிதலின் பரப்பை மேலும் சில அடிகள் நகர்த்திச் செல்லும். அப்படியொன்றுதான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக ஏப்ரல் 1, 2011 அன்று மாலை சென்னை தேனாம்பேட்டை நரேஷ் பால் மையத்தில் நடைபெற்ற லே மஷாலே நாடக நிகழ்வு.
இரோம் ஷர்மிளாவும் மணிப்பூரின் அமைதிக்கான போராட்டமும் என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு சிவிக் சந்திரன் மலையாளத்தில் எழுதிய, பெங்குயின் பதிப்பகம் 2009இல் வெளியிட்ட மெய்ரா பெய்பி என்னும் நாடகத்தை ஆங்கில மொழி பயன்படுத்தி தனியொரு ஆளாக நிகழ்த்திக் காட்டினார் மகாராஷ்டிர மாநில நாடக ஆளுமையான, இருபத்தைந்து வயது ஓஜாஸ் சுனித் விஜய். மெய்ரா பெய்பி என்னும் பதம் சுடரேந்திய பெண் என்பதைக் குறிக்கிறது. ஷர்மிளா என்னும் மணிப்பூரைச் சார்ந்த இளம்பெண் தனது மாநிலத்தில் நிலவும் வன்முறைகளுக்கெதிராக அஹிம்சை வழியில் மேற்கொண்டிருக்கும் பதினோறாண்டுகால உண்ணாவிரதப் போரை மையப்படுத்தி அம்மாநிலக் கலாச்சாரம், பண்பாடு, அம்மக்களின் வாழ்வு சீரழிக்கப்படும் விதம் போன்றவற்றை நம் கண்முன் கொண்டுவந்துவிடுகிறது நாடகத்தின் சித்திரிப்பு குறிப்பாக ஓஜாஸின் நடிப்புத் திறன். “ஐம் இரோம் ஷர்மிளா, இரோம் ஷர்மிளா சானு” என்னும் வார்த்தைகளோடு தொடங்கும் இந்நாடகம் பார்வையாளர்களை மானசீகமாக மணிப்பூருக்கு அழைத்துச்சென்று அம்மக்களின் நிலவியல், நாட்டுப்புறக் கதைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர்களிடம் அன்னியோன்யத்துடன் கூறுகிறது. நாடகம் முடியும்போது வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் அடக்குமுறைகள் குறித்து பகிரப்பட்ட தகவல்களின் காரணமாக ஏற்பட்ட பதற்றமும் அதிர்ச்சியும் பார்வையாளனுக்குள் பரவி அவனை அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக ஏதாவது செய்துவிட மாட்டாமோ என ஏங்கவைக்கிறது.
கடுமையான சோர்வை ஏற்படுத்தும்படியான பயணத்தை மேற்கொண்டால் மட்டுமே மாநிலத்தின் தலைநகரமாக இருந்தபோதும் புகைவண்டி நிலையம்கூட இல்லாத இம்பாலுக்குச் செல்ல முடிவது; வாரத்தில் 24 மணி நேரம் மட்டுமே மின்சார வசதி கிடைப்பது; திடீர் திடீரென ஆள்கள் காணாமல்போவது, பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவது போன்ற நாடகத்தில் ஓஜாஸ் வெளிப்படுத்தும் பல தகவல்கள் நம்மை உலுக்குகின்றன. ஷர்மிளா படித்த வரலாற்றுப் புத்தகங்களில் அவளது மாநிலத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களது சரிதம் குறிப்பிடப்படவில்லை. அந்தப் புத்தகங்களை ஓஜாஸ் தேடும் விதம் பல ஆண்டுகள் அதில் நகர்வதைக் குறிப்புணர்த்துவதுபோல் உள்ளது. நமது தேசியகீதத்தில்கூட வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இல்லை. ஏன் அப்படி? தேசியகீதம் பின்னணியில் ஒலிக்க இந்திய தேசத்தைப் போன்ற வளைவு சுழிவுகளோடு நளினமாக நாட்டிய அசைவுகளைத் தருகிறார் ஓஜாஸ். வழக்கமாக, தேசிய கீதம் ஒலிக்கும்போது இறுக்கமாக நேராக நெஞ்சு நிமிர்த்தி நின்றே பழகிய நம்மை அர்த்தமுள்ள பகடிக்குள் அமிழ்த்துகிறது இந்தக் காட்சி. இந்த மாதிரியான சூழலில் வழக்கமான மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த ஷர்மிளா படிக்கிறார், வளர்கிறார், கவிதை எழுதுகிறார் இறுதியில் ஒரு மனித உரிமை அமைப்பில் பணியில் அமர்கிறார்.
2004ஆம் ஆண்டு ஜூலை 10 அன்று தங்க்ஜம் மனோரமா தேவி என்னும் 32 வயது பெண்ணின் சடலம் அவளது வீட்டிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் கிடைத்தது. அந்த இளம்பெண் அவளது வீட்டிலிருந்து பிரிவினையைத் தூண்டும் போராட்டக்காரர்களுடன் அவளுக்குத் தொடர்பிருக்கிறது என்னும் குற்றச்சாட்டின் பேரில் துணை ராணுவப் படையினரால் பிடித்துவரப்பட்டிருந்தாள். சில மணி நேரங்கள் கழித்து அவளது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவளது யோனியில் துப்பாக்கி ரவை பாய்ந்திருந்தது, அவள் உடலில் துப்பாக்கி ரவைகள் ஏற்படுத்திய காயமும் சித்திரவதை செய்யப்படிருந்ததற்கான அடையாளங்களும் தென்பட்டன. இச்சம்பவத்திற்கெதிராக இம்பாலில் உள்ள அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு அலுவலகத்தின் முன்பு ஜூலை 15, 2004 அன்று பெண்கள் நிர்வாணமாக நின்று அஸ்ஸாம் ரைபிள்ஸுக்கெதிராகப் போராடிய காட்சியைக் காட்டும் படம் ஒன்று இந்நாடகத்தின் ஊடாகத் திரையில் வந்துசென்றது. இந்திய ராணுவம் எங்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கியது என்னும் பதாகையைத் தாங்கியிருந்தனர் அவர்கள். படைப்பிரிவினர் மணிப்பூரி இளைஞர்களை ஒருவரையொருவர் அடிக்கச்சொல்லி வதைக்கும் காட்சியும் திரையில் விரிந்து திகைக்கவைத்தது. மணிப்பூரின் கிராமம் ஒன்றுக்கு 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி வண்டியில் வந்த ராணுவப்படையினர் தங்களது வேலைகளில் ஈடுபட்டிருந்த அங்கிருந்த அப்பாவி மக்களில் பத்துப் பேரை துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தினர். அவர்களுள் முதிய பெண் ஒருவரும் வீரத்திற்காகத் தேசிய விருது பெற்ற இளைஞனும் அடக்கம். மணிப்பூரிகளாக இருந்ததைத் தவிர வேறு எந்தக் குற்றமும் செய்திராத அப்பாவிகள் அவர்கள்.
இந்திய தேசத்தில் வாழும் அம்மக்களுக்கு ஏன் இப்படியொரு நிலைமை, அவர்கள் செய்த குற்றம்தான் என்ன என்னும் கேள்விகள் நாடகத்தைப் பார்க்கும்போது நமக்கு ஏற்படுவது போல் தான் இத்தகைய நிகழ்வுகளை நேரில் பார்த்த ஷர்மிளாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது. என்னவொன்று, நமக்கு நாடகம் ஒரு முறை தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனவே அதைப் பற்றி சிறிது சிந்தித்துவிட்டு நாம் நமது வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிடுகிறோம். ஆனால் ஷர்மிளாவுக்கு அவை தினசரிக் காட்சிகள், அதுவும் சொந்த மண்ணில் சொந்த ராணுவத்தால் சொந்த மக்களுக்கு ஏற்படும் வலி மிக்க அந்தத் துயரம் பெரும் சுமையாக அவளுள் இறங்கியது. அந்த இளம்பெண்ணால் அச்சுமையை எளிதாகத் தூக்கிப்போட இயலவில்லை. அந்தத் துயரத்தை மாற்ற தன்னால் ஆன எதைச் செய்ய முடியும் என ஆழமாக யோசித்த அவளுக்கு முன்னால் பெரியதொரு வெளிச்சமாக தோன்றியது அஹிம்சை முறையிலான உண்ணாநோன்புதான். அவளிடம் ஆயுதங்கள் இல்லை. ஆனால் அவள் போரிட வேண்டியது ஆயுதமேந்திய வீரர்களிடம். அவளிடம் இருந்த ஒரே ஆயுதம் அவளது மன வலிமை மட்டுமே. இருக்கும் ஆயுதத்தை மறந்துவிட்டுப் புலம்பத் தயாராகயில்லாத அவள் போரிடுகிறாள். அந்தப் போராட்டம் பதினோரு ஆண்டுகளாகத் தொடர்கிறது.
இந்நாடகத்தில் ஒன்பது சூரியன்கள் விரட்டப்படுவது குறித்து இடம்பெறும் நாடோடிக் கதை ஒன்றில் மணிப்பூரில் ஒன்பது சூரியன்கள் இருந்ததாகவும் மணிப்பூரின் மூதாதைப் பெண்கள் வில் தொடுத்து அம்பெய்து அவற்றுள் எட்டை வீழ்த்தியதாகவும் இறுதியில் ஒன்பதாவது சூரியன் தானாகவே பயந்து ஓடிவிட்டதாகவும் அதன் பின்புதான் அவர்கள் தங்களுக்கான இரவை, தங்கள் காதலை, பிரியத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான இருளைக் கண்டுகொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் 1958 இல் ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் [Armed Forces Special Powers Act (AFSPA)] அமல்படுத்தப்பட்ட பிறகு அந்த இருள் அகன்று போய்விட்டது; இப்போது இருப்பதெல்லாம் ராணுவத்தினரின் பயம் மிரட்டும் இருட்டுதான் என்கிறார் ஓஜாஸ். நாற்பது லட்சம் மக்களை அடக்குமுறைக்குள்ளாக்கும், இந்தியாவின் ஆபரணம் என பண்டித ஜவஹர்லால் நேரு வர்ணித்த மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை அரசாங்கம் திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் இவர் போராடுகிறார். இதில் வெற்றிபெறாமல் ஷர்மிளா தன் தாயைக்கூடப் பார்க்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். “உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதை உலக நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டுமானால் இந்தச் சட்டம் திரும்பப்பெறப்பட வேண்டும்” என்கிறார் இவர். தற்கொலைக்கு முயன்றார் எனும் குற்றச்சாட்டின் பேரில் ஷர்மிளாவைக் கைது செய்தது அரசு. ஆனால் ஷர்மிளா சாக விரும்பவில்லை. வாழ்வதற்காக, கௌரவமாக வாழ்வதற்குரிய அனைத்து உரிமைகளையும் அனுபவித்து வாழ்வதற்காகத்தான் ஆசைப்படுகிறார்.
ரத்தக்கறை படிந்த செய்தித் தாள், சில புத்தகங்கள், காலியான தண்ணீர் பாட்டில், ராணுவச் சீருடை ஒன்று, ஒரு சில தீப்பந்தங்கள் முதலான சிறு சிறு பொருள்களைக் கொண்டு கிடைத்த இடத்தை மேடையாகப் பயன்படுத்தி வடகிழக்கு மாநிலமொன்றில் போராடும் இளம்பெண்ணின் கதையை நாடகம் ஒன்றின் மூலம் இந்தியா முழுவதும் பரப்பி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ராணுவக் கொடுமைகளுக்கெதிராக மக்களைக் கேள்வி கேட்கவைக்கும் ஓஜாஸின் முயற்சிக்காக அவரைப் பெருமிதத்தோடு பார்க்கும் அதே நேரத்தில் நம் சொந்தச் சகோதரர்கள் அண்டை நாட்டில் சாகும் நேரத்தில் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கக்கூடிய இடத்தில் இருந்தபோதும் அதை எண்ணிக் கண்ணீர் சிந்திக் கவிதை மட்டுமே எழுத முடிந்த முதல்வர் நமக்குக் கிடைத்த கொடுமையை நினைக்கும்போது “சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்” என்னும் பாரதியின் வரிதான் மனத்தை ஆக்கிரமித்து நிற்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக