ஆகஸ்டு மாத படப்பெட்டி இதழில் வெளியாகியுள்ள துயரம் படிந்த கரைகள் ஆவணப்பட விமர்சனத்தின் சுருக்கப்பட்ட வடிவம் இது.
இலங்கைக் கடற்படையால், ராணுவத்தால் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை மீனவர்களைத் தவிர மற்றவர்கள் புரிந்துகொள்ளாத சூழ்நிலையே இன்றுவரை நீடித்துவருகிறது. அவ்வப்போது பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகளில் இடம்பெறும் இத்தகைய இடர்கள் குறித்தும் அவற்றுக்கான சமூக, அரசியல் காரணங்கள் குறித்தும் அவற்றைக் களைய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சமூக ஆர்வலர்கள், மீனவத் தலைவர்கள், வழக்கறிஞர்கள், மீனவர்கள் ஆகியோரின் கருத்துகளை உள்ளடக்கிய காட்சி வடிவிலான ஆவணம் துயரம் படிந்த கரைகள்.
கொஞ்சம்கூட மனிதாபிமானமற்றுத் தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் இலங்கைக் கடற்படை பாதுகாப்புக் காரணங்களுக்காக நடவடிக்கை மேற்கொள்வதாகக் காட்டிக்கொள்கிறது. இந்திய அரசோ தமிழக அரசோ இதைக் குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. உயிரழப்பென்றால் நஷ்ட ஈடு, ஆறுதல் வார்த்தைகள் பொதிந்த அறிக்கைகள் போன்றவற்றோடு தம் பொறுப்பைச் சுலபமாகச் சுருக்கிக்கொள்ளும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர்மீது தார்மீகக் கோபம் கொண்ட இந்த ஆவணப்படம் தம் சொந்த நாட்டு மக்கள் வேற்று ராணுவத்தால் கொல்லப்பட்டும் அதைக் கண்டும் காணாததுபோல் நடந்துகொள்ளும் இந்திய அரசின் இறையாண்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
இலங்கை தமிழ்நாடு ஆகியவற்றுக்கிடையிலான கடற்பரப்பின் சூழல், கடற்எல்லையை மீனவர்கள் கடக்க நேரிடுவது எதனால், கச்சத்தீவின் முக்கியத்துவம் என்ன, தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளின் மீனவர்கள் எதிர்கொள்ளும் வெவ்வேறு பிரச்சினைகள் என்பனவற்றை எல்லாம் விரிவாக அலசும் இந்தப் படத்தில் தனது கருத்துக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும் நேர்காணல்களும் காட்சி வடிவ வரைபட விளக்கங்களும் பார்வையாளனுக்கு மீனவர்களின் துன்பங்களை அவை ஏற்பட காரணமாக இருக்கும் இயற்கைச் சூழல்களோடு இதமாக எடுத்துரைக்கின்றன.
சீனா, பாக்கிஸ்தான் ஆகிய நமது எதிரி நாடுகளோடு இலங்கை நட்பு கொண்டுவிடக் கூடாது என்னும் ஒரே காரணத்திற்காக இலங்கையைச் சமாதானப்படுத்தும் நோக்கோடு இலங்கை, இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் பாதுக்காக்கப்படும் என்னும் உத்தரவாதத்தோடு 1974இல் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டுவிட்டதையும் 1976இல் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளில் கச்சத்தீவு ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் காரணமாக அந்த உரிமைகள் பறிபோய்விட்டதால் தமிழக மீனவர்களின் மீன்பிடிப் பரப்பு குறுகிவிட்டதையும் கவனப்படுத்துகிறது இந்தப் படம்.
கச்சத்தீவையொட்டி மீன்கள் அதிகமாக அலையும்படியான இயற்கை அமைப்புகள் உள்ளதாகவும் தீவை இழந்ததால் ஏற்படும் மீனவர்கள் பிரச்சினைகளைத் தொலைநோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகள் இந்திய அரசுக்கு அழுத்தமாக உணர்த்தத் தவறிவிட்டனர் என்கிறார் ஜோ டி குருஸ். கடலோரங்களில் ரசாயணக் கழிவுகள் கலக்கும் வகையிலான தொழிற்சாலை அமைக்கப்பட்டதன் காரணமாக கடலோர மீன்வளங்கள் முற்றிலும் நாசப்படுத்தப்பட்டதால் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார் சேதுபதி நாட்டார்.
தமிழக மீனவர்களுக்கு இந்திய அரசு அடையாள அட்டை வழங்கியுள்ளதையும் மீன்பிடிப்பதற்குத் தேவைப்படும் டோக்கன் போன்ற ஆவணங்களோடு கடலுக்குள் செல்லும் மீனவர்கள்மீது கூடத் தாக்குதலும் துப்பாக்கிச் சூடும் நடத்தப்படுகிறது என்பதையும் குறிப்பிடுகிறார் அ.புனிதன் என்னும் மீனவர். டோக்கன் பெற்றுக்கொண்டு மீன்பிடிக்கச் சென்று கடற்படையால் சுடப்பட்ட ஜூலியன்ஸ் இறப்பின் வாயில்வரை சென்றுவந்த நினைவுகளோடு மீனவர்கள் கடலில் படும் துயரங்களை, மீன்பிடித் தொழிலையே விட்டுவிடலாமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படியான விரக்தியான உணர்வை எடுத்துச் சொல்கிறார்.
கடற்புலிகளின் கட்டுப்பாட்டில் கடற்பரப்பு இருந்த காலங்களில் தமிழக மீனவர்களுக்கும் கடற்புலிகளுக் கும் மோதல்கள் வந்ததாகச் செய்திகள் கிடையாது என்கிறார் இராசேந்திரச் சோழன். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சொல்லி தமிழக மீனவர்களைத் தாக்கிய கடற்படை விடுதலை புலிகள் அழிக்கப்பட்டுவிட்ட பின்பும் அத்தகைய தாக்குதல்களைத் தொடர்கிறது. மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இந்தியர்கள் மீது தங்களுக்குள்ள வன்மத்தைத் தமிழக மீனவர்களிடம் காட்டுவதைத் தனது வாடிக்கையாகவே கொண்டுள்ளது இலங்கை ராணுவம். இதற்கெதிராகக் குரல்கொடுக்க வேண்டிய இந்திய அரசு தொடர்ந்து தன்னை மௌனத்தில் புதைத்துக்கொண்டுள்ள மரக்கட்டைத் தனமான போக்கு குறித்த ஆளுமைகளின் கோபத்தைத் தனக்குள் உள்வாங்கிக்கொண்டு அந்தக் கோபத்தை, ஆதங்கத்தைப் பார்வையாளனுக்குள் நிரப்பிட வேண்டும் என்னும் இலக்கை நோக்கி மிகத் தெளிவாக முன்னேறுகிறது இந்த ஆவணப்படம்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது இந்திய அரசு நேரடியாகக் குரல்கொடுத்தாலே மீனவர்கள்மீது கைவைக்க இலங்கை அரசு துணியாது. மேலும் கடற்பகுதியில் மீனவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இந்தியக் கடற்படை அவர்களுக்கு உடனே உதவ வேண்டும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் மட்டுமே இப்பிரச்சினை தீரும் என்கிறார் ராசேந்திரச் சோழன். இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் உரிமம் வழங்கி மீன்பிடிக்கச் செய்யலாம் என்கிறார் சேதுபதி நாட்டார். இந்தியத் தரப்பில் மீனவர்களாக இருப்பவர்களும் தமிழர்கள் இதற்கு மறு கரையில் இலங்கைத் தரப்பில் மீனவர்களாக இருப்பவர்களும் தமிழர்கள் மீன்பிடிக்க முனையும்போது இரு தரப்பினரும் எல்லை தாண்டுவது இயல்பானது எனவே எல்லை என்பதே அழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் தோழர் தியாகு. இரு நாட்டு மீனவர்களும் ஒத்திசைந்து மீன்பிடிக்கும் சூழல் உருவாக்கப்பட்டால் அனைத்தும் நலமாக மாறும் அதற்கான உடன்பாடுகள் எட்டப்பட வேண்டுமென கோருகின்றனர் மீனவப் பிரதிநிதிகள்.
மீனவர் பிரச்சினைகளின் காரணங்களைப் பல்விதப் பரிமாணத்தில் உணரத் தலைப்பட்டு அவற்றைக் களைய மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்வுகள் குறித்து அக்கறையோடு கரிசனப்படும் இப்படத்தில் இலங்கைத் தரப்பு மீனவர்கள் இவ்விஷயத்தில் என்னவித நிலைப்பாடு கொண்டுள்ளனர் என்பதுவும் சேர்க்கப்பட்டிருந்தால் அது முழு முற்றான பூரணத்துவத்தை இப்படத்திற்கு அளித்திருக்கும். நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இது தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும் என்னும் புரிதலோடுதான் இதை நாம் அணுக வேண்டியுள்ளது. முடிவற்ற முனை கொண்ட மீனவர் துயர முனையின் நீட்சியை நிறுத்தி அதை முற்றுப்புள்ளியாக்கப் போராடும் போராட்டத்தில் தனது முயற்சியையும் இணைத்துக்கொண்டதில் வெற்றிபெற்றுள்ளார் இதைப் படமாக்கி இயக்கி தயாரித்த செ.தே.இமயவரம்பன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக