இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, டிசம்பர் 04, 2011

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்


படித்தவர்களின் சூதும் வாதும்


எப்போதும்போல் மலர்ந்த அந்த நாள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் (த. அ. ப. தே.) தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் வழக்கமான நாளாக முற்றுப்பெற வில்லை. அவர்கள் புரிந்திருந்த ஊழல்களும் முறைகேடு களும் கடந்த அக்டோபர் 14 அன்று வெளியுலகுக்குக் காட்சியாகத் தொடங்கியது.  த. அ. ப. தே. தலைவர் ஆர். செல்லமுத்து, உறுப்பினர்கள் 13 பேர் ஆகியோர் வீடுகளிலும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நிகழ்த்திய திடீர்ச் சோதனை பற்றிய தகவல் செய்தியாகத் தொலைக்காட்சி அலை வரிசைகளில் ஒளிபரப்பானதைக் கண்டபோது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பற்றி அறிந்திருந்தோர், பணி நியமனத்திற்கெனக் காத்திருந்தோர் மத்தியில் அதிர்ச்சி அலைகள் பரவத் தொடங்கின. லஞ்ச ஒழிப்பு இயக்குநர் மகேந்திரனின் தலைமையில் ஏறக்குறைய நூற்றைம்பது பேர் இந்தச் சோதனையை நிகழ்த்தியிருந்தனர். த. அ. ப. தே. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தியது இதுதான் முதல்முறை என்பதால் இந்நடவடிக்கை பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. முறையற்ற வழிகளில் பணம் சம்பாதிக்கத் துடித்த ஆணையத்தின் தலைவர்; உறுப்பினர்கள்; மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையிலான அதிகாரிகள் போன்றோருக்கும் அவர்களது சட்டபூர்வமற்ற நடவடிக்கைகளுக்குத் துணைபோனவர் களுக்கும் இது மனக் கலக்கத்தை உண்டுபண்ணியது. 

சமூகத்தின் வேர்வரை பரவியுள்ள பொருளீட்டும் வெறி, கையூட்டுக் கொடுப்பவர்களையும் வாங்குபவர் களையும் ஒருசேர ஆக்கிரமித்திருப்பதால் இத்தகைய ஊழல்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. குழந்தைகளது கல்விக்கான செலவுகளை முதலீடாகப் பார்க்கும் பெற்றோர்கள் ஏதாவது ஒருவகையில் தம் மக்களைச் சமூகத்தின் உயர்தட்டில் அமர்த்த விரும்புகின்றனர். அதற்கான முறையான தகுதி தம் பிள்ளைகளிடம் இல்லாதபோது சமூகத்தில் காணப்படும் ஓட்டைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அவர்களை முன்னேற்ற பெற்றோர்கள் விழைகின்றனர். இதன் காரணமாகவே வேலைக்கெனப் பணம் கொடுப்பது இவர்களைப் பொறுத்தவரை சமூகக் குற்றமாகத் தென்படாமல் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கான முயற்சியாகச் சுருங்கிவிடுகிறது. பணம் கொடுக்க இயலாமல் அல்லது விரும்பாமல் திறமையை மட்டுமே நம்பி உழைத்துவருபவர்களது வேலைகளைத் தாங்கள் கைப்பற்றுகிறோம் என்ற குற்றவுணர்வு சிறிதுமற்றுக் குறுகிய மனோபாவம் கொண்டவர்களாக இவர்கள் மாறுகிறார்கள். அழுகிக்கொண்டிருக்கும் சமூகத்தைக் குற்றம்சாட்டும் இந்தப் பெற்றோர்கள் அதற்குத் தாங்களும் ஒரு காரணமாக விளங்குவதை உணரவியலாத அளவுக்குப் புத்திர பாசம் இவர்கள் கண்களை மறைக்கிறது.  

இத்தகைய பெற்றோரிடம் வகைதொகையின்றிப் பணம் பெற்றுச் சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொண்டோர் என நம்பப்படுபவர்களது வீடுகளில்தாம் அன்று சோதனை நடத்தப்பட்டது. உதவிப் பல் மருத்து வர்கள், 2006-2008ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகன ஆய்வாளர்கள், குரூப் 1 அதிகாரிகள் போன்ற வர்களைத் தேர்வுசெய்ய நடத்தப்பட்ட தேர்வுமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் காரணமாக எழுந்த குற்றச்சாட்டையொட்டியே சோதனை நிகழ்த்தப்பட்டி ருந்தது. த.அ.ப.தே. தலைவர், உறுப்பினர்கள்மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டோர், உதவிப் பல் மருத்துவர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்ப் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படு வதற்கு முன்பு அதைப் பார்வையிடக் கோரியுள்ளனர்; 2006-2008ஆம் ஆண்டுகளுக்கான மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கான தேர்வு முறைகளில் ஊழல் புரிந்துள்ளனர்; இவற்றின் மூலம் விதிகளைமீறி முறையற்ற வழிகளில் பொருளாதாரரீதியான பயன்பெற முயன்றுள்ளனர்.

துணை ஆட்சியர், காவல் துறை உதவிக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் குரூப் 1 தேர்வுகளில் நடைபெற்றுவரும் ஊழல்களைத் தடுக்கும்வகையில் தேர்வாணையச் செயலர் த. உதயச்சந்திரன் துணிச்சலுடன் செயல்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் விதிமுறைகளுக்குக் கட்டுப்படாமல், செயலரைச் செயல்படவிடாமல் தடுத்துள்ளனர். தங்கள் பெயர்களின் பின்னே ரயில் பெட்டிகள்போல் பட்டங்களைச் சுமந்துதிரியும் இவர்கள் அனைவரும் பொறுப்பான உயர்பதவிகளை வகித்துப் பின்னரே தேர்வாணையப் பணிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைக்கும்போது மனத்தில் அச்சமெழுகிறது. 

இந்தச் சோதனையில் கையெழுத்திடப்படாத பணி நியமன உத்தரவு நகல்கள், போட்டித் தேர்வு எழுதியவர்களின் நுழைவுச்சீட்டுகள், பல்வேறு பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல், அரசியல்வாதிகளும் முக்கிய ஆளுமைகளும் வழங்கியிருந்த பரிந்துரைக் கடிதங்கள், கிராம நிர்வாக அலுவலர் தேர்வெழுதியவர்களின் பதிவு எண்கள் கொண்ட பட்டியல், மாணவர் களின் சான்றிதழ்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வுகளை எழுதியவர்களின் மதிப்பெண் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள், மையிட்டு நிரப்பப்பட்ட விடைத் தாள்கள், புதிய சொத்துகள் வாங்கியதற்கான சான்றுகள் போன்ற அநேக ஆவணங்களும் ரொக்கப் பணம் லட்சக்கணக்கிலும் கைப்பற்றப்பட்டிருந்தன. ஓய்வுபெற்ற காவல் துறை ஐ. ஜி. துரைராஜின் தம்பியான உறுப்பினர் சண்முகநாதன் வீட்டில் ஏறக்குறைய இருபத்தைந்து லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அறத்தைச் சுத்தமாகப் புறக்கணித்துவிட்டுப் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டதாக நம் சமூகம் மாறிவிட்டதன் அப்பட்டமான சான்று இது.

தேர்வெழுதும் மாணவ, மாணவிகள்
      
2005இல் தனது பவளவிழாவைக் கொண்டாடிய இந்த ஆணையம் ஊழல்களுக்குப் பேர்போனது. காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வரும்போதெல்லாம் அதை மையமிட்டு அநேக ஊழல் ஊற்றுகள் வெவ்வேறு மட்டங்களில் சுரக்கும். கேள்வித் தாள்களை வழங்குவது, விடைகளைத் தேர்வுக்கு முன்னமே விண்ணப்பதாரர்களுக்கு அறியத் தருவது, நேர்முகத் தேர்வில் அளிக்கப்படும் மதிப்பெண்களைப் பெற்றுத் தருவது, விரும்பிய இடத்திற்கு பணி நியமன உத்தரவை மாற்றித் தருவது என எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கிருந் தெல்லாம் இப்போது லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கியுள்ள தலைவரும் உறுப்பினர்களும் பணம்பெற்றுள் ளதாகச் சொல்லப்படுகிறது. விதிமுறை மீறலும் அதற்கு நிர்ணயிக்கப்படும் சட்டபூர்வமற்ற கட்டணமும் நேர்விகிதப் பொருத்தமுடையன. தேர்வாணையத்துக்குத் தொடர்பே இல்லாத இடத்தில் ஆட்கள் சந்தித்துச் சங்கேத வார்த்தைகளோடு சட்டபூர்வமற்ற விதத்தில் ஆவணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதாகவும் கதைகள் உலவுகின்றன. எப்படியாவது அரசு வேலையைப் பெற்று விட்டால் போதும் எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் நிம்மதியாகக் கழித்துவிடலாம் என்று நினைத்தும் அதற்கான உழைப்பைச் செலுத்தத் தயாராக இல்லாத நடுத்தரவர்க்க விண்ணப்பதாரர்களை இலக்காகக் கொண்டே இந்த முறைகேட்டாளர்கள் செயல்படுகின்றனர். கற்பனைக்கெட்டாத விதத்தில் பல ரூபங்களில் பணி நியமன உத்தரவு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெருமளவில் இவர்கள் பொருளாதாரப் பயனடைந்துள்ளனராம். தன்னாட்சி அதிகாரம்கொண்ட அமைப்பாக இருப்பதால் தங்களைக் கேள்விகேட்க எவருமில்லை என்ற அதீத நம்பிக்கையின்பொருட்டுத் தைரியமாக முறைகேடுகளில் ஈடுபட்டுப் பெருவாரி யான தொகையைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு ஆனந்த வாழ்வு நடத்திவந்ததாகச் சொல்லப்படும் ஆணைய உறுப்பினர்களுக்கும் தலைவருக்கும் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் நல்ல சகுனமாக இருக்கவில்லை. 

தமிழகத்தில் அறிவியல் முறை ஊழலுக்கு வித்திட்ட வராக அறியப்பட்டிருக்கும் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லாமல் இருந்தது. முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும்போது கண்டிப்புடன் நடந்துகொள்ளாமல் தாயுள்ளத்தோடு நடந்து கனிவை வெளிப்படுத்திப் பிரச்சினையைப் பெரிதுபடுத்தாமல் சுமூகமாகத் தீர்த்துவிடும் சாணக்யர் அவர். தமிழகத்தில் ஊழலை வளர்த்தெடுத்ததில் ஜெயலலிதாவின் பங்கும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல என்பதையும் அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு தற்போது பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருவதையும் மறந்திட இயலாது. என்றாலும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்த அலட்சியப்படுத்தவியலாத குற்றச்சாட்டுகள் அரசின் தலைமைப் பீடத்தில் அழுத்தமாக வைக்கப்பட்டதாலும் இயல்பாகவே அவரிடம் மண்டிக்கிடக்கும் திமுக எதிர்ப்புணர்வின் காரணத்தாலும் அவர் தலைமை யிலான தமிழக அரசு இவ்விஷ யத்தில் மேம்போக்கான நடை முறையைத் தளர்த்திக்கொண்டு ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு நகர்ந்திருக்கிறது. 

நேர்மையான அதிகாரிகளான த. உதயச்சந்திரனையும் வெ. இறையன்புவையும் முறையே தேர்வாணையத்தின் செயலாளராகவும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளராகவும் நியமித்ததைத் தேர்வாணைய முறைகேடுகளுக்கெதிரான அரசின் முதல் நடவடிக்கையெனக் குறிப்பிடலாம். 2011, ஆகஸ்ட் ஒன்பதாம் நாள் அன்று தமிழக அரசு த. அ. ப. தே. தலைவர், உறுப்பினர்களை ஊழல் தடுப்புச் சட்டம்-1988இன் கீழ் ஊழல் தடுப்பு வரம்புக்குள் கொண்டுவர அரசாணை பிறப்பித்த செயல் அடுத்த நடவடிக்கை. த.அ.ப.தே. தலைவர், உறுப்பினர்கள்மீது புகாரளிக்கப்பட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்களை விசாரிப்பதற்கான அதிகாரத்தை இந்த அரசாணை பெற்றுத்தந்தது. தேர்வாணையத்தின் மீதான அரசின் பிடி தொடர்ந்து இறுகிக்கொண்டிருந்ததை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியது.
  
2011 ஜூலையில் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வின் விடைத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாகவே வெளியாகி விட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் அறுநூறு பேர் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையளித்திருந்ததாகத் தினத் தந்தியில் வெளியான செய்தி போன்றவற்றின் விளைவாகத் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒரு குழுவினர் தலைமைச் செயலகத்திற்குச் சென்று தலைமைச் செயலரைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் நடந்தேறிய அதிகளவிலான முறைகேடுகள் மூலமாகத் தகுதியற்ற பலர் தேர்ச்சி பெற்றுள்ளது குறித்து விசாரிக்க வேண்டுமெனவும் தேர்வு எழுதிய சிலர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்துள்ளனர். தேர்வாணையம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளனைத்தையும் சேகரித்த லஞ்ச ஒழிப்புத் துறை அவற்றை ஒழுங்குபடுத்தித் தலைவர், உறுப்பினர்கள் 13 பேர்மீது வழக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கும்படி அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. இதைப் பரிசீலித்த தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி உடனே அனுமதி வழங்கி முறைப்படியான துறை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆகவே திடீரெனச் சோதனை நடத்தப்பட்டிருந்தாலும் அதற்கான செயல்வடிவம் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டுப் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சோதனையில் தேர்வாணையத்தினர் அணிந்திருந்த முகமூடிகள் ஒவ்வொன்றாகக் கழற்றியெறியப்பட்டன.
  
அரசியல்வாதிகள் தலையீடு இருக்கும்பட்சத்தில் பாரபட்சமற்ற நியாயமான அமைப்பாகச் செயல்படுவதில் இடையூறுகள் ஏற்பட்டுவிடக் கூடும் என்ற அதிஜாக்கிரதை உணர்வு காரணமாகவே அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தேர்வாணையத் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 316(1) பிரிவின்படி தமிழக ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆறு ஆண்டுகளோ அறுபத்தியிரண்டு வயதுவரையோ பணியாற்றலாம். இதில் எது முந்துகிறதோ அது வரை அவர்கள் பணி நீடித்திருக்கும். தற்போதைய தலைவரும் உறுப்பினர்களும் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலத்தின் கடைசியில் 2011, பிப்ரவரி 21 அன்று வெளியிடப்பட்ட அரசாணை [G.O (Ms)] எண் 29  மூலம் தமிழகத் தலைமைச் செயலர் எஸ். மாலதி பிறப்பித்த உத்தரவின்படி எஸ். பன்னீர்செல்வம், வி. ரத்தினசபாபதி, பி. பெருமாள் சாமி, டி. குப்புசாமி, ஜி. செல்வமணி ஆகியோர் உறுப்பினர் பதவிபெற்றுள்ளனர்.  ஆர். செல்லமுத்து மு. க. ஸ்டாலினின் சிபாரிசால் தலைவராக்கப்பட்டார் என்கிறார்கள். கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால் கிராமப்புற மாணவர்களின் மனநிலையை நன்கு உணர்ந்துகொள்ளக் கூடியவர் என்ற நம்பிக்கையை விதைத்த தேர்வாணையத் தலைவர் இன்று தேர்வாணைய ஊழல்களின் பிதா மகனாகக் காட்சியளிப்பது அவலமே.  

தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து வீட்டில் சோதனை

தேர்வாணைய உறுப்பினரான வழக்கறிஞர் கே. எம். ரவி 1993இல் பதிவுத் துறை அதிகாரியாகத் திருப்போரூரில் பணிபுரிந்தபோது பத்தாயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதாகியுள்ளார். பின்னர் இவர்மீது சொத்துக் குவிப்பு வழக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்குகளிலிருந்து நீதிமன்றத்தில் இவர் விடுவிக்கப்பட்டுவிட்டார். அரசு வேலையை உதறிவிட்டே இவர் தேர்வாணைய உறுப்பினராகியுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு யோசிக்கும்போது ஒவ்வொரு உறுப்பினர்களின் தேர்வுகளுக்குப் பின்னணியிலும் என்னென்ன மர்மங்கள் ஒளிந்திருக்குமோ தெரியவில்லை. மராட்டிய மாநிலத் தேர்வாணைய உறுப்பினருக்கெதிரான ஊழல் வழக் கொன்றில், ஜூலை 2007இல் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. கே. பாலசுப்ரமணியம் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுகள் தேர்வாணையத் தலைவரையும் உறுப்பினர் களையும் தேர்வுசெய்யும்போது கவனமாக இருக்க வேண்டுமென்றும் அப்பழுக்கற்றவர்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்; தேர்வாணையத் தலைவரும் உறுப்பினர்களும் சீஸரின் மனைவி போல் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 2008இல் நடைபெற்ற ஒரிசா அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் டாக்டர் ஹெச். பி. மிர்தாமீதான வழக்கின் தீர்ப்பில் ஏற்கனவே ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப் பட்டிருப்பவர்களை மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் உறுப்பினராக நியமிக்கக் கூடாதென உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நேர்மையான வழியில் தேர்வாணையத்திற்குத் தலைவரும் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிப் பெரும்பாலும் அமையவில்லை என்பதுதான் சோகம். 

தமிழகத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தால் தேர்வாணையம் இப்படியொரு தலைக்குனிவைச் சந்தித்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது. தமிழக வீட்டுவசதித் துறைச் செயலராகச் செல்லமுத்து பதவி வகித்து வந்த காலத்தில் வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீட்டில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்னும் கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருவதை இங்கே நினைவுகூர வேண்டியுள்ளது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் விசாரணை நிறைவுபெறுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகுமென முதலில் கூறப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை தங்கள் விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையைத் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. எனினும் முப்பது நாட்களைத் தாண்டிய பின்னரும் விசாரணை இன்னும் இறுதிக் கட்டத்தைத் தொடவில்லை என்பதை நவம்பர் 18 அன்று நடத்தப்பட்ட சோதனை பறைசாற்றியது. 

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெற்றிருந்த மதிப்பெண்கள் இணையத்தில் வெளியிடப்படுவதாக நாளிதழ்களில் முன்னர் குறிப்பிடப்பட்ட நவம்பர் 18 அன்று தேர்வாணைய அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தேர்வாணைய இணைச் செயலர் மைக்கேல் ஜெரால்டு, சார்புச் செயலர்கள், பிரிவு அதிகாரி, உதவிப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் இந்தச் சோதனையில் அடங்குவர். முக்கியமான ஆவணங்கள் சில இதில் சிக்கியுள்ளன. தேர்வாணையத் தேர்வுகளில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களது விவரம், பெற்ற மதிப்பெண்கள் ஆகியவை குறித்தும் சோதனையிட்ட அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்துள்ளனர்.  முதல்வரும் தலைமைச் செயலரும் தேர்வாணைய முறைகேடுகள் குறித்த விஷயத்தில் தீவிர அக்கறை காட்டிவருவதாகச் சொல்கிறார்கள். 

செல்லமுத்து தலைவராகவும் ஏனைய 13 பேர் உறுப்பினர்களாகவும் செயல்பட்டிருக்கும் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் அனைத்தையும் ரத்துசெய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால், நீதிபதி டி. எஸ். சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வாணையத்தை லஞ்ச ஒழிப்புத் துறையின் கண் காணிப்புக்குக் கீழ்க் கொண்டுவந்திருந்த தமிழக அரசாணையை எதிர்த்துச் செல்லமுத்துவும் ஏனைய உறுப்பினர்களும் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்வினை புரிந்த நீதிபதிகள், தேர்வாணையம் தொடர்பான அனைத்து வழக்குகளும் தங்களின் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் தலைவர், உறுப்பினர்கள் 13 பேர் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க விரும்புகிறது என்றும் தெரிவித்திருந்தனர். 

தேர்வாணைய ஊழல் குறித்த விசாரணைகளின் இறுதியில் இவர்களது குற்றச்செயல்கள் சந்தேகத்திற்கிட மின்றி நிரூபிக்கப்பட்டால், முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரும் பதவி இழக்க நேரிடலாம். தேர்வாணையத் தலைவரையும் உறுப்பினர்களையும் பணிநீக்கம் செய்வதற்குரிய நடைமுறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 317இல் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்டுள்ளபடி, பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றும் அதே சமயம் வேறு எங்கேயும் ஊதியத்திற்காகப் பணியாற்றினாலோ பணியைச் செய்ய முடியாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலோ முறைகேடுகள் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டு அது நிரூபிக்கப்பட்டாலோ தலைவரையும் உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவர் பணிநீக்கம் செய்யலாம். முறைகேட்டில் ஈடுபட்டோரைப் பதவிநீக்கம் செய்யுமாறு மாநில அரசு ஆளுநரிடம் பரிந்துரைக்க, அவர் இந்தப் பிரச்சினையை ஜனாதிபதியிடம் கொண்டுசெல்வார். கவர்னரின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி இது குறித்து விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றத்தைக் கோருவார். உச்ச நீதிமன்றம் அளிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி அனைவரையும் பதவியை விட்டு நீக்கலாம் என்பதாகச் சட்ட அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

2007 ஜனவரியில் ஹரியானா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மேஹர் சிங் சைனி, உறுப்பினர்கள் சந்தோஷ் சிங், ராம்குமார் காஷ்யப் ஆகியோரைப் பதவிநீக்கம் செய்து ஹரியானா ஆளுநர் உத்தரவிட்டிருந்ததற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. இவர்கள்மீது சாட்டப்பட்டிருந்த ஒன்பது குற்றச்சாட்டுகளில் ஆறு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருந்தன. ஆகவே இவர்களைப் பதவிநீக்கியதற்குச் சட்டபூர்வமான காரணங்கள் உள்ளதாகத் தெரிவித்திருந்தது உச்ச நீதிமன்றம். அதே போல் கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் ஹெச். என். கிருஷ்ணா 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளுக்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்வில் விதிமுறைகளை மீறி முறைகேடான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பதவி நீக்கப்பட்டுக் குற்றப் புலனாய்வுத் துறையினரால் 2011, அக்டோபர் ஏழாம் நாளன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். இதைப் போன்ற முன்னுதாரணங்கள் இருந்தபோதும் இந்த விசாரணையில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்குமா என்பதை இப்போது ஊகித்தறிவது கடினம்.

வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சூழலில் அவற்றின் போக்கு குறித்துப் பெருமளவில் ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் குரூப் 2, கிராம நிர்வாக அலுவலர் ஆகிய தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுத் தேர்ச்சிபெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற நடைமுறைகள் நிறைவுபெற்றபோதும் அவர்களுக்குப் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படா தது குறித்த விவாதங்கள் ஊடகங்களில் இடம்பெறவில்லை. அப்படியே இடம்பெற்றாலும் அவை வெறும் ஊகத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன. பிற மாநிலங்களில் தேர்வாணைய முறைகேட்டுக்கெதிராக நடைபெற்ற வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனை குறித்த தகவல்களை இணையதளங்களில் காண முடிகிறது. ஆனால் முறைகேட்டாளர்கள் தலைமையின் கீழ்த் தேர்வாணையம் நடத்திய தேர்வுகள் பற்றி என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென்பது சரிவரத் தெரியவில்லை. 

முறையாகத் தேர்ச்சிபெற்றும் பணி கிடைக்காமல் மன உளைச்சலோடு என்ன நடக்குமோ என்ற பதை பதைப்போடு தேர்வாணைய உத்தரவுகளுக்குக் காத்துக்கிடப்பவர்களது நிலைமை துயரம்மிக்கது. இவர்கள் தேர்வாணைய அலுவலகத்தில் தங்கள் தரப்புக்கு நியாயம் கேட்டதோடு முதல்வரைத் தனிப் பட்ட முறையில் சந்தித்துத் தங்களுக்குப் பதவி வழங்கு மாறு கோரியுள்ளனர். சட்டவிதிகளை மீறிப் பலவித முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் செல்லமுத்து காலகட்டத்தின் அனைத்துப் பணி நியமனங்களையும் ரத்துசெய்துவிட வேண்டுமென்ற கோரிக்கை குறித்து நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்தமாகத் தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும் என்று எழும் குரல் மேலோட்டமான பரிசீலனையின் அடிப்படையில் ஒலிக்கிறது. இப்பிரச்சினை பற்றித் தீவிரமாக ஆலோசித்ததற்குப் பின்னர் அது எழுப்பப்படவில்லை. தேர்வுகளை ரத்துசெய்ய நேரிட்டால் முறையாகத் தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களுக்கு நியாயம் மறுக்கப்பட்டதாகிவிடும். குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டாலும் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்னும் சட்ட வழிமுறை நமது நீதியமைப்பில் பின்பற்றப்படுகிறது என்பதை நினைவில்கொள்க. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்தை அணுகும் சாத்தியமுமுள்ளது. இத்தகைய பல குழப்ப முடிச்சுகளும் அவிழ்க்கப்படும் காலம் வெகு அருகில் என நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.  

ஊழலற்ற, நேர்மையான, பாரபட்சமற்ற அமைப்பாகத் தேர்வாணையம் செயல்பட்டால் மட்டுமே அதை நம்பிப் போட்டித்தேர்வுகளுக்கெனத் தயாராகும் லட்சக் கணக்கானவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிட்டும். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுவிடுகின்றன எனும்போது அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை அறிவிக்க அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதையும் மதிப்பெண்கள் குறித்த வெளிப்படைத் தன்மையைப் பேணாததையும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியதுள்ளது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வில் மதிப்பெண்கள் அளிக்கப்படுவது முறைகேட்டை மறைமுகமாக ஊக்கு விக்கவே உதவுகிறது. பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவ ரின் மனநிலை அதற்குகந்ததாக உள்ளதா என்பதை அறிவதற்காக வேண்டுமானால் நேர்முகத் தேர்வு நடத்தப்படலாம். அதற்கு மதிப்பெண்கள் வழங்குவது அறவே ஒழிக்கப்பட வேண்டும். இந்திய ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் முகமாக இந்த நேர்முகத் தேர்வுகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுவிட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

தங்கள் மதிப்பெண்கள் குறித்த சந்தேகங்கள் எழும்போது தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்கள் நிரப்பப்பட்ட விடைத்தாளைக் கோரினால் அதன் விவரம் அவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அணுகும் விண்ணப்பதாரர் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் தடுக்கப்பட வேண்டியதும் அவசியம். இத்தகைய முறையான செயல்பாடுகள் பாரபட்சமற்றுப் பின்பற்றப்பட்டால் மட்டுமே தேர்வாணையத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அப்படியான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் தேர்வாணையத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் சமூகப் பொறுப்பு மிக்க உதயச்சந்திரன் போன்ற அதிகாரிகளின் நேர்மையான முயற்சிகள் வீணாய்ப்போய்விடும்.

ஒருவேளை இந்தத் தேர்வாணையம் கூண்டோடு மாற்றப்பட்டால் அதன்பிறகு நியமிக்கப்படும் தலைவர், உறுப்பினர்கள் தற்போதைய ஆளும் கட்சிசார்ந்த வட்டாரத்திற்கு நெருக்கமானவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடும். அவர்கள் இன்று புதிதாய்ப் பிறந்தவர்களாக இருக்கப்போவதில்லை. தொடர்ச்சியான தவறுகளும் ஊழல்களும் தொடர்வது மக்களுக்கோ ஜனநாயகத்திற்கோ ஆரோக்கியமானதல்ல. நேர்மையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தேர்வாணையச் செயலருக்கும் புதியதாக உருவாகும் தேர்வாணையத் தலைவர், உறுப்பினர்களுக்கும் இதைப் போன்ற முரண்பாடுகள் எழுந்தால் இப்போது தமிழக அரசு வழங்கிவருவது போன்ற ஒத்துழைப்பைத் தொடர்ந்து அவருக்கு வழங்கித் தனது ஜனநாயகச் செயல்பாட்டை நிரூபிக்க வேண்டும். அதற்கு மாறாகக் கட்சி விசுவாசத்தோடு அரசு நடந்துகொள்ளுமேயானால் நேர்மையான செயலர் மீண்டும் வேறு ஒரு துறைக்கு மாற்றப்படுவார். வழக்கம்போல் தேர்வாணையம் ஊழல் பாதையில் பயணத்தைத் தொடங்கிவிடும்.  

டிசம்பர் 2011 காலச்சுவடு இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது       

சனி, நவம்பர் 12, 2011

ஆதமிண்ட மகன் அபு



யாத்திரைகள் அல்லாவின்ட நிச்சயங்களானு


கண்டன்குந்நு வலியபறம்பு ஆதமிண்ட மகன் அபுக்காவுக்கும் அவருடைய மனைவி வீட்டிலப்புரையில் அய்ஷும்மாவுக்கும் கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும் வறுமையான வாழ்க்கை அமையப்பெற்றும் மரிக்கும் முன்பு புனிதமான மெக்காவில் காலடி வைத்து இஸ்லாமியரின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை நிறைவேற்றிவிட வேண்டுமென்ற நீண்ட கால மோகம் காரணமாக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பின்புலமாகக் கொண்டு இஸ்லாம் மார்க்கத்தைப் பழுதறக் கடைப்பிடிக்கும் அபுக்காவுடைய நடைமுறைச்சிக்கல் மிக்க எளிய வாழ்க்கைப் பயணத்தின் ஊடாகவும் அவர் சந்திக்கும் நபர்கள் மூலமாகவும் இஸ்லாம் மார்க்கம் குறித்த தனது பார்வையை ஆழமாகவும் செறிவாகவும் பதிவுசெய்துள்ளார் இயக்குநர் சலீம் அகமது.

தேர்ந்தெடுத்துக்கொண்ட கதையைப் பார்வையாளனுக்குக் காட்சிப்படுத்தும்போது மையக் கதையிலிருந்து சிறு விலகலைக்கூட அனுமதிக்காத கறார்தன்மையுடனும்   அக்கறையுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பார்வையாளனுக்கும் படத்திற்கும் இடையே உருவாகும் மானசீக உறவு வலுவானதாக அமைகிறது. எனவே அத்தரையும் மார்க்க நெறிகளை உரைக்கும் புத்தகங்களையும் யுனானி மருந்துகளையும் விற்பதற்காக அவற்றைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராக மசூதி மசூதியாக அலையும் அபுக்கா செல்லும் இடங்களுக்கெல்லாம் அவர் தோளில் தொங்கும் பையாகவோ கையிலிருக்கும் குடையாகவோ நாமும் செல்ல முடிகிறது.

இறைத்தூதர் உஸ்தாத் தொழுகைக்கெனப் பள்ளிக்குப் போவதில்லை; ஆனால் நாவிதர் போக்கரின் மகளின் பித்தைத் தெளியவைத்தவர், உஸ்மானின் மணமகள் பம்பாயில் இருப்பதை ஞான திருஷ்டியில் தெரிவித்தவர், வெறும் சில்லறைகள் மட்டுமே தந்து மரக்கடை ஜான்சன் மிகப் பெரிய அளவில் சம்பாதிக்க உதவிய கைராசிக்காரர். தொலைந்துபோன கோயிலின் விக்கிரஹம் ஏரிக்கடியில் மூழ்கிப்போயிருப்பதைச் சொன்னவர்.  அற்புதங்களையும் தீர்க்கதரிசனங்களையும் தன் மூலமாக இறைவன் வெளிப்படுத்துகிறானே தவிர தனக்கும் அவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தான் வெறும் கருவி மட்டுமே என்பதையும் ஆழமாக உணர்ந்துகொண்டவர். ஆனால் மற்றவர் துயரங்களைக் காற்றோடு கலந்துவரும் மாறுபாடுகளைக் கொண்டே அறிந்துகொள்பவர்.

இந்தக் காலத்தில் அத்தரை யார் விரும்புகிறார்கள்? துபாய் செண்டுக்குத்தான் மரியாதை, மார்க்கங்களைக் குறித்து அறிவதில் யாருக்கென்ன அக்கறை, அவரவருக்கு அவரவர் காரியங்கள்தாம் முக்கியமாகப் போய்விட்டது என்று அய்ஷும்மாவிடம் அபுக்கா புலம்புவதும், ஹஜ்ஜுக்குச் செல்வதற்காகச் சேமிக்கும் பணத்தைப் போட்டுவைக்கும் பெட்டியை மற்றொரு பெட்டிக்குள் வைத்து மிகப் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்துவதும் அந்தப் பணத்தை எண்ணும்போது கவனமாகச் சன்னலைப் பூட்டிவிட்டே எண்ணுவதும், பணத்தை உடம்போடு அணைத்தபடி அக்பர் டிராவல்ஸுக்கு எடுத்துச்செல்வதும் பக்கத்தில் அமர்ந்திருப்பவரைச் சந்தேகத்தோடு பார்ப்பதும் தான் எதார்த்தம். இன்றைய காலகட்டத்து சக மனிதன் குறித்த உண்மையான புரிதல் இதுதான்.  


உஸ்தாத் மறைவுக்குப் பின்னர் உடலைப் பெற்றுக்கொள்வதில் இரு கிராமத்தினரிடையே போட்டியும் பூசலும் ஏற்படுகின்றன. யாருக்கும் தேவைப்பட்டிருக்காத தாயத்தங்காடி பள்ளியில் உஸ்தாத் சமாதியின் காரணமாக மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது, தினம் 10,000 ரூபாய் பணமீட்ட முடிகிறது. உஸ்தாத்திடம் குற்றம்கண்டுபிடித்தோரெல்லாம் அவரது வழிநடப்பதாகச் சொல்லிப் பணம் பண்ணுகிறார்கள். இத்தகவலைக் கூறும் மம்மூனும் மொய்தீனும் டீக்கடையில் அமர்ந்து பேசும் காட்சியில் நாம் எதிர்கொள்ளும் எதார்த்தமான ஏமாற்றுக்கார மனிதர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் சந்திக்கிறோம்.

உஸ்தாத்மீது கொண்டுள்ள அடர்த்தியான பிரியம் நிரம்பிவழிய உஸ்தாத் மவுத் ஆன சேதியை ஆழ்ந்தவருத்தத்தில் தோய்த்தெடுத்த தொனியில் அபுக்காவிடம் கூறும் ஹைதருக்குப் உஸ்தாத்தைக் கொண்டு பொருளாதாரரீதியான பயன் இல்லை. ஆனால் பக்ரீத் அன்று உஸ்தாத் மீண்டும் அரூபமாக அவதரிப்பது அவனுக்கு மட்டுமே புலனாகிறது. ஆன்மிக அமைதி அவனுக்கு கிட்டுகிறது. அவன் ஹஜ் கடமை நிறைவேற்ற  வேண்டுமெனத் துடிக்கவில்லை. இறைவன்மீது அவன் வைத்திருக்கும் நம்பிக்கைகாரணமாகவே உஸ்தாத் அவனுக்குப் புலனாகிறார்.  மார்க்க நெறிகளை முழுமுற்றாகப் பின்பற்றியும் உஸ்தாத்திடம் மந்திரித்து தாயத்து வாங்கிக் கட்டியும் ஜான்சன், கோவிந்தன் மாஸ்டர், அஷ்ரப் போன்றோர் உளபூர்வமாக உதவ முன்வந்தும் ஹஜ்ஜுக்குச் செல்லும் பாக்கியம் அபுக்காவுக்குக் கிட்டவில்லை. உஸ்தாத்தின் மறு அவதரிப்பை ஹைதர் உணர்ந்த அந்த பக்ரீத் நாளில்கூட அபுக்கா ஹஜ் கனவிலேயே இருக்கிறார். இந்த இரு கதாபாத்திரங்களைக் கொண்டு மார்க்கத்திற்கும் இறை நம்பிக்கைக்கும் இடையே உள்ள மாறுபாட்டைப் படம்பிடித்துள்ளார் சலீம் அகமது.

தனக்கு விருப்பமான பெண்ணை நிக்காஹ் செய்துகொண்டு அவளோடு துபாய்க்குப் பிழைக்கப்போய்விட்டான் அபுவின் மகன் சத்தார். அவனுடைய மூத்த குழந்தை அபுவின் சாயலிலேயே இருப்பதையும் இரண்டாவது குழந்தைகூடக் கல்விச்சாலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டதையும் சத்தாரின் நண்பன் உஸ்மான் மூலம் அறிகிறார்கள் அபுவும் அய்சும்மாவும். பேரப்பிள்ளைகளைக்கூடத் தங்களிடம் கூட்டிவந்து காட்டாமல் தன் மகன் இருப்பதையும் தங்களைப் பெற்றோரெனக் கூறுவதில்கூட அவமானப்படுபவனாக அவன் மாறிவிட்டிருப்பதையும் குறித்து மனச்சஞ்சலத்துடன் அபுக்காவும் அய்சும்மாவும் உறங்காமல் படுக்கையில் உரையாடிக்கொள்ளும் காட்சியில் ஆக்கிரமித்துக் கிடக்கும் இருட்டு துயரடர்ந்த அந்த முதியவர்களது வேதனையையும் இயலாமையையும் மேற்பூச்சாகக் காணப்படும் மெல்லிய வெளிச்சம் வாழ்க்கைமீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் உணர்த்துகின்றன. பணம்கொழித்த நிலையில் மூன்று நான்குமுறை ஹஜ்ஜுக்குப் போய்வரும் மாலியக்கிள் அஸினார் ஹாஜியாருக்கோ அவரின் மகன் கார் வாங்கிக்கொடுக்கிறான். இந்த முரண்பாடுகளுக்குப் பின்னணியிலுள்ள காரணங்கள் பற்றிய சிந்தனை கிளறப்படுவது இப்படத்தின் மூலம் சாத்தியப்படுகிறது.
    
மெக்காவெனும் புனித பூமியின் ஹஜ் நிகழ்ச்சிகளைக் கண் நிறையக் காண்பதில் தனக்குள்ள மோகத்தை ஆர்வத்தோடும் ஏக்கத்தோடும் அய்ஷும்மாவிடம் விவரிக்கும்போதும், மெதினாவில் அய்ஷும்மாவின் கையை இறுக்கப் பிடித்தபடி ரசூலுல்லாவை வணங்கியதாகக் கண்ட கனவு குறித்து விவரிக்கும்போதும், மிகப் பாடுபட்டு சம்பாதித்த பணத்தைக் கொண்டு வாங்கிவந்த பாஸ்போர்ட்டை அஷ்ரப் மிகச் சாதாரணமாகக் கையாளுவதைக் கண்டு பதற்றப்படும் போதும், அஸ்ரப்பைச் சந்தித்துத் திரும்பும்போது அவர் தன் மகன் சாயலில் இருப்பதாக அய்ஷும்மா சொல்வதைக் கேட்டவுடன், இல்லையென மறுத்து அஸ்ரப் நல்லவன் எனக் கூறும்போதும், நிலத்தகராறுக்கு வரும் சுலைமான், தொப்பியும்  தாடியும் வைத்துக்கொண்டு ஐந்துவேளை தொழுதால் மட்டும் முஸ்லிமாகிவிட முடியாது ஜீவித்துக்காட்ட வேண்டும் எனக் கூறி தன்னை இழிவுபடுத்தும்போது சுலைமானே எனச் சஞ்சலத்துடன் விளிக்கும்போதும், ஹஜ்ஜுக்குப் போகும் முன்பு அவனைக் கண்டு அவன் இருக்கும் கோலம் கண்டு வேதனையோடு நெகிழும்போதும், ஹஜ்ஜுக்கான பணத்தை ஜான்சனிடமும் கோவிந்தன் மாஸ்டரிடமும் அஷரப்பிடமும் மார்க்க நெறிகளைக்கூறி மறுக்கும்போதும், ஹஜ் செல்ல இயலாத நிலைமைக்குத் தனது செயல்களே பொறுப்பென அதை தனது தவறாக எடுத்துக்கொள்ளும்போதும் அசலான முஸல்மானாகவும் முதியவனாகவுமே மாறிவிட்டார் சலீம் குமார். பிற கதாபாத்திரங்களைக் கையாண்டவர்களும் தங்களால் இயன்ற அதிகபட்ச உழைப்பைக் கொடுத்துள்ளனர் என்பது அவதானிக்கக் கூடியதாக உள்ளது.


தனித்துவமான திரைமொழியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஒளிப்பதிவும் இசையும் படத்தோடு படமாக பிரித்துணரமுடியாதபடி ஒரே அங்கங்களாகி திரைப்படத்தை  வலுவாக்கியுள்ளன. கண்களின்வழி பார்வையாளனுக்குள் புகும் காட்சிகளில் கதாபாத்திரங்களின் உணர்வுகளைச் செம்மைப்படுத்துவதில் பின்னணியிசை அமைத்த ஐசக் தாமஸ் கொடுக்காபள்ளியின் பங்கு குறிப்பிடத்தக்க விதத்தில் அமைந்துள்ளது. அதீதப் புனைவாகக் காட்சியளிக்கும் திரைப்படத்தின் வெளிச்சம் பாயும் பகுதிகளைவிட வெளிச்சம் பாயாத மறைவுப் பகுதிகளே மார்க்கம் குறித்த இயக்குநரின் அபிப்பிராயங்களை விமர்சனங்களை மென்மையாக எடுத்துவைக்கின்றன. இறை நம்பிக்கைக்கும் மார்க்கத்தைப் பின்பற்றுதலுக்குமான வேறுபாடுகளை மிக நுட்பமாக உள்ளுக்குள் மறைந்திருக்கும் நுண்ணடுக்கில் இயக்குநர் காட்சிக்குவைக்கிறார். மேலோட்டமான அதீதப் புனைவின் மயக்கம் தெளிந்து சற்று ஆழமாக இறங்கித் திரைப்பிரதியை அணுகும்போது இந்த நுண்ணிய வேறுபாட்டைக் கண்டுபிடித்து மனம் ஆசுவாசம் கொள்கிறது.

தான் பார்த்துப் பழகிய வாழ்க்கையை அது சார்ந்த மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சினைகளை  உள்ளடக்கிய படைப்புத்திறன் மிளிரும் இது போன்ற அசலான திரைப்படம் விருதுகளுக்கென அனுப்பப்படுவதால் நம் கலாச்சாரம் வெளியுலகுக்குப் பரிச்சயமாவதோடு படைப்பாளியின் படைப்புத்திறன் உலகளவில் உரிய அங்கீகாரமடைவது சாத்தியமாகிறது.  உலகப்படங்களை நகல் செய்து நல்ல படங்கள் எனக் கூச்சமின்றி கூறுவதோடு அத்தகைய படங்களைத் திரைப்படத்திற்கென வழங்கப்படும் உச்சபட்ச விருதுகளுக்கும் மனசாட்சியின்றி அனுப்பிவைப்பவர்கள் நிறைந்துள்ள சூழலில் இதைப் போன்ற படங்கள் விருது பெறுவதும் அதற்கான ஊக்குவிப்பது கிடைப்பதும் அவசியமானதே.

நவம்பர் 2011, படப்பெட்டி இதழில் வெளிவந்துள்ள விமர்சனம் இது
  


வெள்ளி, நவம்பர் 04, 2011

வாகை சூட வா

வேர்களோ விழுதுகளோ அற்ற ஆலமரம்


திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு வெளியாகும் முன்னோட்டக்  காட்சிகளும் ஊடகங்களில் கசியவிடப்படும் தகவல்களும் படம்மீதான பார்வையாளனின் கவனத்தைக் கோரி அவனைத் திரையரங்கிற்கு வரவழைக்கும் முயற்சிகளே. அவற்றை முழுவதுமாகப் புறக்கணித்துவிட்டு முன் அவதானிப்பு எதுவும் இன்றித் திரைப்படத்தை எதிர்கொள்வது சாத்தியமல்ல. களவாணி என்னும் பொழுது போக்குத் திரைப்படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தைத் தொடங்கியிருந்த இயக்குநர் சற்குணம்  திரைப்படமாக்கலில் கடைப்பிடித்திருந்த செய்நேர்த்தியின் காரணமாக அவர்மீது கவனம் பதிந்திருந்தது. தன்மீது குவிந்த கவனத்தைக் கருத்தில்கொண்ட அவர் அதற்கான காரணத்தை உள்வாங்கிக்கொள்ளவில்லையோ என எண்ணவைத்துள்ளது வாகை சூட வா.     
     
இப்படத்தின் காட்சியமைப்புகள் 1966இல் நடப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தமிழர்கள் தெரிந்துவைத்திருக்கும் எம்ஜிஆர் குறித்த துணுக்கொன்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் தொடக்கக் காட்சி சற்குணத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் ஆணிவேரை அறுக்கத் தொடங்குகிறது. அடுத்ததாகக் கதாநாயகன் விமலின் தந்தையாகப் பத்திர எழுத்தர் பாக்யராஜ் அறிமுகமாகும் காட்சியில் அவர் சுமந்துவரும் முருங்கைக்காய்ப் பையைத் தனித்துவமாகப் பார்வையாளனுக்குக் காட்டும்போது ஏதோ தவறு நேர்ந்து கொண்டிருப்பதை உணர, பதைபதைப்பு உண்டாகிறது. கலவிக்கும் முருங்கைக்காய்க்கும் தொடர்பு இருப்பதான நம்பிக்கையைப் பாக்யராஜ் உருவாக்கியது எண்பதுகளில் வெளியான அவரது முந்தானை முடிச்சில். அத்திரைக்கதைக்கு அது அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும், கல்விக்கும் அதுவும் 1966இல் நடக்கும் சம்பவங்களுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? திரைக்கதையின் பயணத்தில் பார்வையாளன் எதிர்கொள்ளும் இந்த முதிர்ச்சியின்மை படத்தின் இறுதிவரையிலும் அவனோடு இணை கோட்டில் பயணிக்கிறது. 
 
அடிப்படைப் புரிதலற்ற காட்சியமைப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டுப் படத்தோடு ஒன்றி அதன் மற்ற சிறப்புகளை ரசிக்க ஏனோ முடியவில்லை. இயக்குநரின் முழுக் கவனமும் கலைப் பொருட்கள்மீது சென்றுவிட்டது போலும். திரைக்கதையமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அக்கறையைப் பார்வையாளனுக்குக் கலைப் பொருட்களைக் காண்பிப்பதில் செலவிட்டாலே படம் கலைப்படமாக மாறிவிடும் என்னும் அதீத நம்பிக்கையின் காரணத்தால் பேணிவளர்க்கப்பட வேண்டிய திரைக்கதையை ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’ என்னும் நிலைக்குத் தள்ளிவிட்டாரோ இயக்குநர்?

சிட்டுக் குருவிகளுக்காக விசனப்படும் அந்தக் குருவிக்காரர் கதாபாத்திரமும் அவரது பரிதவிப்பும் பகடிக்குரியன. கைத்தொலைபேசிக் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் சிட்டுக்குருவிகள் காணாமல் போய்விட்டதாகச் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் துக்கம் கொள்வது இந்தக் காலகட்டத்திற்கான ஓர் உணர்வு தானே? 1966இல் குருவிகளுக்கு என்ன சிக்கல்? தானே ஆசானாகும் அளவுக்கு அறிவையும் சமூக அக்கறையையும் ஒட்டுமொத்தக் கிராமத்தின் ஆதரவையும் பெற்ற அந்தக் குருவிக்காரர், அந்த வறண்ட நிலத்துக்கு வாத்தியாராய் விமல் வந்தவுடன் அவதார புருஷர் வந்துசேர்ந்ததைப் போல ‘அவன் வந்துட்டான். அவன் வந்துட்டான்’ எனப் புளகாங்கிதமடைவது நகைப்புக் குரியதாகப்படவில்லையா? அசட்டுக் காரணத்திற்காகக் குருவிக்காரர் மரணமடைவதால் அதுவும் அர்த்தமற்ற ஒன்றாகிவிடுகிறது. அந்தக் கிராமத்தின் நலனுக்காக அவர் உயிர்விட்டதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

குருவிக்காரர் இறந்தவுடன் ஊர் குழுமுவதைக் காட்சிப் படுத்துகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் காமராக் கோணத்தில் மனம் லயித்துக்கிடந்தாலும் கண்டெடுத்தான் காடு செயற்கையாக அமைக்கப்பட்ட ஒன்று என்பதை அந்தப் பறவைக்கோணத் துண்டுக் காட்சி அம்பலப்படுத்திவிடுகிறது. கிராமமென முன்னிருத்தப்பட்டாலும் கிராமமாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ஒவ்வாத தன்மையுடன் அது உருவாக்கப் பட்டிருக்கிறது. கல்வியறிவே இல்லாத அக்கிராமத்தில் அஞ்சல் பெட்டி ஒன்று உள்ளது. நலிவடையும் நிலையிலுள்ள அஞ்சல் துறையினர் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளலாம். நாயகியின் குடிசையில் அபூர்வமாக ஒரேயொரு வாழைமரம் மட்டும் முளைத்திருக்கிறது. இவையெல்லாம் அது கிராமமல்ல செயற்கை அரங்கென்பதை உணர்த்திக்கொண்டே இருப்பது உறுத்தலாக அமைந்துவிட்டது.


கல்வி என்பது சமூக விழிப்புணர்வைத் தரும் ஒன்றாக இல்லாமல் பணமீட்டும் கருவியாக மாறிவிட்டதைக் கிட்டத்தட்ட முழுச்சமூகமும் சரிதானென நம்புமளவுக்குச் சரிவைச் சந்தித்துவரும் கல்விச் சூழலோடு பொருந்திப்போவதாகவே இப்படத்தின் கல்வி குறித்தான புரிதல் உள்ளது. படத்தின் இறுதியில் தாங்கள் செய்த வேலைக்குரிய கூலியை மிகச் சரியாகக் கணக்குப் பார்த்துக் குழந்தைகள் வாங்கிக்கொள்ளும் காட்சியோடு அவர்களின் கல்வியறிவு வளரத் தொடங்கிவிட்டதைக் குறிப்புணர்த்திப் படம் நிறைவடைகிறது. அடுத்ததாகக் காட்டப்படும் குறிப்போ இத்திரைப்படம் குழந்தைத் தொழிலாளர்களுக்குச் சமர்ப்பிக்கப்படுவதாகப் பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த முரணை எப்படிச் சகித்துக்கொள்வது?  

முந்தைய படம் முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கை மையமாகக்கொண்டிருந்ததால் அடுத்து சமூக அக்கறை கொண்ட திரைக்கதையைப் படமாக்கித் தனது சமூகக் கடப்பாட்டை நிரூபிக்க இயக்குநர் நினைத்திருக்கலாம். இந்த மனோபாவம் பெரும்பாலான இயக்குநர்களைப் பீடிக்கும் நோய்தான். தான் வாழும் சமூகச் சூழலுக்கு உகந்ததெனப் பொதுச்சமூகம் நம்பும் கருத்துகளை உள்ளடக்கிய படங்களை உச்சிமுகரத்தக்கவையாகவும் அத்தகைய கருத்துகளற்று வெறுமனே சுவாரசியத்தைக் குறிவைத்து எடுக்கப்படும் படங்கள் வணிகத் திரைப்படம் என்ற எல்லைக்குள் சுருங்கிவிடுவதாகவும் நினைத்து அந்த எல்லையை மீறிச் சென்று கலைப்படங்களுக்கான எல்லையைத் தொடுவது மட்டுமே திரைப்பயணத்தில் தனது வளர்ச்சி என்பதாக எண்ணுவதால் இந்தக் கருத்து நோய் பீடிக்கிறதோ என்னவோ!

இத்தகைய கருத்துப் படங்கள் தோல்வியடைந்தால், ‘பார்வையாளர்கள் வணிகத் திரைப்படங்களையே விரும்புகிறார்கள்; இதைப் போன்ற சமூக அக்கறை கொண்டவற்றைப் புறக்கணித்துவிடுகிறார்கள்’ என எளிதாக அவர்கள்மேல் பழிபோட்டுவிட்டு வழக்கம் போல் காரம், மணம், சுவை கூடிய திரைப்படமெடுக்கத் திரும்பிவிடுகிறார்கள். ஆனால் கருத்து உள்ளதோ இல்லையோ அதைப் பற்றிய கவலையற்றுத் திரைப் படமாக அது எந்த அளவு பரிணமித்திருக்கிறதோ அதைப் பொறுத்தே  பார்வையாளனிடம் படத்திற்கு வரவேற்பு கிட்டும் என்ற அடிப்படை உண்மையை இயக்குநர்கள் மறந்துவிட்டுத் தாங்கள் எடுத்த அதி உன்னதத் திரைப் படத்தை வரவேற்கும் அளவுக்குப் பார்வையாளர்களின் புரிதல் வளர்ச்சியடையவில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்; தங்கள் படைப்புத் திறனில் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகத் தாங்கள் உருவாக்கிய படத்தில் நேர்ந்த தவறு குறித்து யோசிக்கப் பிரியப்படுவதில்லை; அவர்களைச் சுற்றியிருக்கும் நலம் விரும்பிகளும் வருடிக் கொடுப்பதிலேயே அக்கறை காட்டுவார்கள்; மாற்றுக் கருத்துகளுக்கோ வெவ்வேறு விதமான சாயங்கள் பூசி அவற்றைக் காழ்ப்புணர்ச்சி என்னும் கூட்டிற்குள் அடைத்தும் விடுவார்கள். களவாணியில் வாகை சூடிய இயக்குநர் கருத்தென்னும் மாயச் சுழலில் சிக்கிக்கொண்டுவிட்டதை உணர்ந்து அதிலிருந்து மீண்டுவருவார் என்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.  

காலச்சுவடு நவம்பர் 2011 இதழில் வெளியாகியுள்ள விமர்சனக் கட்டுரை இது                       

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

பார்த்ததும் உணர்ந்ததும்


16.04.2011, மாலை 6:00 மணி, கன்னிமாரா நூலக அரங்கு, எழும்பூர், சென்னை.

நிழற்படம்: செல்லையா முத்துசாமி

நினைவச்சில் சுழலும் சக்கரம்

சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த, பழ. அதியமான் பதிப்பித்த கு. அழகிரிசாமி சிறுகதைகள் முழுத் தொகுப்பு நூலாக்க நேர்த்திக்குத் தரப்பட்ட கவனம் காரணமாகச் சற்றுத் தாமதமாக ஏப்ரலில் தயாரானது. எனவே, காலச்சுவடு பதிப்பக வெளியீடான கு. அழகிரிசாமி சிறுகதைகள் முழுத் தொகுப்பு, சுந்தர ராமசாமி எழுதிய கு. அழகிரிசாமி நினைவோடை ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா 2011, ஏப்ரல் 16 அன்று மாலை ஆறு மணி அளவில் சென்னை எழும்பூரிலுள்ள கன்னிமாரா நூலக அரங்கில் வைத்து நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துள்ளதால் இப்போது புத்தக வெளியீட்டு நிகழ்வு குறித்த அறிவிப்பு, அழைப்பைப் பதிப்பகங்களாலும் எழுத்தாளர்களாலும் வாசகர்களிடம் மிக எளிதாகக் கொண்டுசேர்த்துவிட முடிகிறது. ஆனால் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை விழாவாக மாற்றுவதும் சிறு நிகழ்வாகச் சுருக்குவதும் வாசகர்களின் கையில்தான் இருக்கிறது, அது முழுக்க முழுக்க வாசகர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. அரசியல் விழாக்களுக்குக் கூட்டம் கூட்டுவது எளிது. கையில் பணமிருந்தால் போதும் அரங்கை நிறைத்து மறு நாளைய தினசரிகளில் திரண்டிருந்த கூட்டத்தின் காட்சிகளைப் படமாகப் பிரசுரித்து வரலாறாக்க முடியும். ஆனால் அந்த அளவுக்கு இன்னும் இலக்கிய உலகின் அறம் வீழ்ச்சியடையவில்லை என்பதால் இங்கே கூட்டமானது கூட்டுவதல்ல கூடுவது. கு. அழகிரிசாமி என்னும் எழுத்தாளர் சம்பாதித்துவைத்திருக்கும் வாசக பலம் நிகழ்வரங்கை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. இருக்கைகள் நிரம்பி வழிய அமர இடமற்ற வாசகர்கள் பலர் கடைசியில் நின்றபடியே நிகழ்ச்சிமீது கண்பதித்திருந்தனர். 

எழுத்தின் வசீகரம் வாசக மனங்களை அதன் பக்கம் ஒருவிதக் கிறக்கத்துடன் சாய்ந்துகொள்ளவைக்கிறது. தான் உணர்ந்த, தான் கடந்த, தான் அனுபவித்த சம்பவம் போன்ற ஒன்றைத் தான் வாசிக்கும் கதையில் காணும் வாசகன் அது புனையப்பட்டுள்ள நேர்த்தி, நம்பகத்தன்மைக்குத் தக்க அந்த எழுத்தோடும் அதன் காரணமாக எழுத்தாளனோடும் மானசீக உறவுகொள்கிறான். அந்த உறவின் பலத்தோடு நேர்விகிதத் தொடர்பு கொண்டது எழுத்தாளனின் ஆயுள். லௌகீக இறப்பைத் தாண்டியும் படைப்பாளியின் ஆயுள் நீள்வதும் அவருக்காக வாசகர்கள் கூடுவதும் இதன் காரணமாகவே. அப்படியோர் அற்புதப் படைப்பாளியாகப் பரிணமித்திருந்தவர் அழகிரிசாமி என்பதை வந்திருந்த பார்வையாளர்கள் கூட்டம் நிரூபித்தது.  

சுபவீ, வண்ண நிலவன், பிரபஞ்சன், திலீப் குமார், ஞாநி, ட்ராட்ஸ்கி மருது, அம்ஷன் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் திரளான வாசகர்களும் நிகழ்வின் தொடக்கத்திலிருந்தே அரங்கில் குழுமியிருந்தனர். அரங்கம் நிறைய ஆட்களோடு பல கேமராக்கள் நிகழ்வை நிரந்தர ஒளிப்பட ஆவணமாக்கிக்கொண்டிருந்தன. நகர்ந்து செல்லும் தருணங்களை இழுத்துப் பிடித்துநிறுத்தி அவற்றைப் படைப்புக்குள் புகுத்திவிட முயன்று அதில் பெரிய வெற்றியும் பெற்ற அழகிரிசாமியின் முழுத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு ஆறு மணிக்குத் தொடங்கியது. மேடையில் இடப்புறம் பழ. அதியமானில் தொடங்கி சா. கந்தசாமி, கி. ராஜநாராயணன், சீதாலக்ஷ்மி அழகிரிசாமி, விஜயலட்சுமி சொக்கலிங்கம், இறுதியாக வலப்புறம் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். கு. அழகிரிசாமி சிறுகதைகள் முழுத் தொகுப்பை எழுத்தாளர் கி.ரா. வெளியிட அழகிரிசாமியின் மனைவி சீதாலட்சுமி பெற்றுக்கொண்டார். சுந்தர ராமசாமி எழுதிய நினைவோடையை எழுத்தாளர் சா. கந்தசாமி வெளியிட அழகிரிசாமியின் சகோதரரின் மனைவியான விஜயலட்சுமி சொக்கலிங்கம் பெற்றுக்கொண்டார்.  

நாற்காலியில் அமர்ந்தபடி அரங்கில் தனது கிராமிய மனம் கமழும் குரலை ஒலிக்கவிட்டார் கி. ரா. அவரது உரையில் அவன் இவன் என உரிமையோடு விளிக்கப்பட்ட பால்ய கால நண்பனான அழகிரிசாமியோடு இணைந்த சிறு பிராயத்து நினைவுகள் அவருக்கே உரித்தான கரிசல் தமிழில் தெளிவாக, சுவாரசியமாக வெளிப்பட்டு அரங்கை நெகிழ்த்தின. அழகிரிசாமியின் சிறுகதைகள் முழுத்தொகுப்பை வெளியிடுவது குறித்துப் பெருமிதம் கொண்ட கி. ரா., அவரது கதைகள் குறித்து விரிவாகப் பேச பதினைந்து நிமிடங்கள் போதாது என்பதால் அவற்றைத் தவிர்த்துவிட்டதாகக் குறிப்பிட்டு, மனத்தின் நினைவலைகளில் தானாக எழும்பி மேலாக மிதந்த சில ஞாபகச் சிதறல்களைப் பசுமை உணர்வோடு எடுத்தடுக்கினார். 

1940களின் தொடக்கத்தில் முதன்முறையாகக் கன்னிமாரா நூலகத்திற்கு அழகிரிசாமியுடன் வந்திருந்ததை நினைவுகூர்ந்த கி.ரா., அதன் பின்பு இப்போதுதான் இங்கே வந்திருப்பதாகச் சொன்னார். ஒவ்வொரு மனிதரும் சில வகையான செயல்களைத் தன்னிச்சையாகச் செய்துகொண்டே இருப்பார்கள். அப்படி அழகிரிசாமியிடம் காணப்பட்ட விரல்களால் காற்றில் ஏதாவது எழுதிக்கொண்டிருப்பது, கையில் ஏதாவது காகிதம் கிடைத்துவிட்டால் அதில் பேனாவால் மனத்தில் தோன்றும் எண்ணங்கள் எவற்றையாவது அப்படியே எழுதுவது - அது கிறுக்கலல்ல - ஆகிய மானரிஸங்களை ஆர்வத்துடன் குறிப்பிட்டதோடு அப்படியான எழுத்துக் காகிதங்களைத் தானோ அவரது குடும்பத்தாரோ சேகரித்துவைக்காமல் போய்விட்டதை எண்ணி ஆதங்கம் கொண்டார் அவர். அடுத்ததாக அழகிரிசாமியிடம் வழக்கத்திலிருந்த வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் பற்றியும் பகிர்ந்துகொண்டார். அழகிரிசாமி வெற்றிலை பாக்கைக் குதப்பிக்கொண்டு பேசுவது எப்படி இருக்கும் என வாயில் வெற்றிலை பாக்கு போட்ட சாறு உமிழ்நீருடன் கலந்து வாய் நிறைய இருப்பதுபோல் வாயை வைத்துக்கொண்டு கி.ரா பேசிக் காட்டினார், அதில் சிறப்பம்சம் என்னவென்றால் துளி எச்சில்கூட அழகிரிசாமி பேசும்போது வெளியில் தெறிக்காதாம். மணநாள் அன்று தாலி கட்டும் நேரத்தில்கூட வாயில் வெற்றிலைச் சாற்றுடன்தான் தான் தன் மனைவிக்குத் தாலி கட்டியதாக அழகிரிசாமி வேடிக்கையாகச் சொல்வார் என்றும் தெரிவித்தார் கி.ரா. இசையில் அழகிரிசாமிக்கிருந்த ஆர்வத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, இசையறிவு கொண்ட மனைவியை மணக்க வேண்டும் எனத் தாங்கள் இருவரும் முடிவெடுத்திருந்ததாகவும் அந்த விஷயத்தில் அழகிரிசாமி கொடுத்துவைத்தவர் எனவும் சொல்லியபோது அதுவரை பெரிய சலனம் எதுவுமின்றி நிகழ்வைக் கவனித்துக்கொண்டிருந்த அழகிரிசாமியுடைய மனைவியின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பிற்று. தான் அறிந்த மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களைத் தனது சிறுகதையில் உட்புகுத்தும்போது ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றிவிடுவார். சம்பந்தப்பட்ட ஆட்களுக்கே தாங்கள் இடம்பெற்றிருப்பது தெரியாதவிதமாக அமைந்துவிடும் அது. அவருடன் மிக நெருங்கிப் பழகுபவர்களுக்கு மட்டுமே யார் என்ன என்பது தெரியுமென்ற கி. ரா., தென்காசியில் டிகேசி வீட்டில் என். எஸ். கிருஷ்ணனுடன் கழித்த சம்பவமொன்றையும் ஞாபகப்படுத்திவிட்டுத் தனது உரையை அமைதிப்படுத்தினார். 

கி.ராவுக்கு அடுத்தபடியாக, நினைவோடையை வெளியிட்ட சா. கந்தசாமியை உரையாற்ற அழைத்தார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அரவிந்தன். அழகிரிசாமியுடன் தனக்கு நெருங்கிய பழக்கம் இல்லாவிடினும் சுந்தர ராமசாமி, அழகிரிசாமி ஆகிய இருவரையும் அறிந்தவன் என்னும் முறையில் தான் பேசுவதாகச் சொன்னார் கந்தசாமி. தமிழின் மொழி நடையில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாகத் தமிழ் செம்மொழியானதற்கு அழகிரிசாமி போன்ற படைப்பாளிகள்தாம் காரணமே ஒழிய பேராசிரியர்கள் அல்ல என்னும் கருத்தை அள்ளித் தெளித்துவிட்டு அமர்ந்துகொண்டார் அவர். 

அழகிரிசாமியின் சிறுகதைகள் குறித்து உரையாற்ற அடுத்து வந்தார் ச. தமிழ்ச்செல்வன். மிகச் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு வந்திருப்பதால் சுருக்கமாகப் பேசச் சொன்னது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறித் தொடங்கினார் தனது உரையை அவர். இந்த உலகில் அவருக்கு மிக அதிகமாகப் பிடித்த நபர் கு. அழகிரிசாமிதான் என்றபோது குரலில் தொனித்த பாவம் அவருக்கு அழகிரிசாமியின் எழுத்தின் மீதிருக்கும் லாகிரியைப் படம்பிடித்தது. அழகிரிசாமியின் எழுத்துக்கள் தன்னைப் பண்படுத்தியதாகவும் மனிதனின் ஆணவம் முதலான அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் கரையவைக்கக்கூடிய எழுத்து அவருடையது என்றும் இறுக்கம் தளர்ந்த நெகிழ்வான குரலில் மொழிந்தார். 

அதியமான் தன் பதிப்புரையில் வெறும் நாய், காற்று முதலிய கதைகளை தாமரை வகைக் கதைகள் எனவும் வழக்கமாக அழகிரிசாமியின் கதைகளின் அடிநாதமாக ஒலிக்கும் கேலியோ சோகமோ இவ்வகைக் கதைகளில் குரலெடுக்கத் தொடங்கும் எனவும் எழுதியிருந்தார். இப்படிக் கொஞ்சம் தாழ்ந்தவரிசையில் தாமரையில் பிரசுரமான கதைகளை வைத்துப் பார்த்தது சங்கடத்தையும் வருத்தத்தையும் அளிப்பதாகவும் தாமரை வகைக் கதைகள் என்பதை உயர்வான வகையாகக் குறிப்பிட்டிருக்கலாமே என்றும் கேள்வியெழுப்பினார் அதியமானிடம் தமிழ்ச்செல்வன். அதியமானின் பதிப்புரை அழகிரிசாமியைப் பற்றிய தெளிவான அறிமுகத்தைத் தருகிறது என்பதை வெறும் வாய் வார்த்தையாக வெளிப்படுத்தாமல் ஆத்மார்த்தமாக அனுபவித்துச் சொன்னார் அவர். ஆனால் பாவண்ணனின் முன்னுரை இத்தொகுப்பின் திருஷ்டிப்பொட்டாக அமைந்துவிட்டதாகவும் அவரிடம் தரப்பட்டிருந்தாலும் அவர் இந்தப் பணியைத் தவிர்த்திருக்க வேண்டுமென்றும் நண்பராக இருந்தபோதும் அழகிரிசாமி கதைகளை அவர் மதிப்பிடுவதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டதோடு அடுத்த பதிப்பில் பாவண்ணனின் முன்னுரையை எடுத்துவிட்டால் நன்றாக இருக்கும் என்றும் மனத்தில் பட்டதை எவ்வித நாசூக்கும் இன்றி பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் தமிழ்ச்செல்வன். எழுத்தாளனை ஆராதிக்கும் வாசகத் தொனியே அந்த வேண்டுகோளை முழுவதுமாக நிறைந்திருந்தது. பெரும் படைப்பாளிகளின் நூலுக்கு முன்னுரை எழுதுவதற்கு மன முதிர்ச்சியும் வாழ்வனுபமும் அதிகப்படியாகத் தேவை என்னும் உள்ளடக்கிடக்கையே அப்படியொரு வேண்டுகோளை வார்த்தெடுத்துத் தந்திருக்கும் என எண்ணவைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தில், காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மௌனி படைப்புகளுக்கு நண்பர் கே.என்.செந்தில் எழுதிய முன்னுரை சட்டென மனத்தின் மூலையில் தோன்றி மறைந்தது. மௌனியின் மேல் அளவுகடந்த பிரியம் கொண்ட வாசகர் ஒருவர் அந்த முன்னுரையை வாசிக்க நேரும்போது அவரது மனம் மலருமா சுருங்குமா என்ற யோசனையில் மனம் லயித்துக்கிடந்தது. 

அழகிரிசாமியின் பதிமூன்று தொகுப்புகளையும் தான் சேகரித்துவைத்திருந்ததையும் நண்பர் ஒருவரிடம் சென்ற அவை திரும்பவில்லை என்பதையும் சொன்னபடியே அவரது கதைகளில் தான் சிலாகித்த விஷயங்களைப் பார்வையாளர்களோடு பகிர்ந்துகொண்டார் தமிழ்ச்செல்வன். அதிகம் கொண்டாடப்படாத படைப்பாளி அழகிரிசாமி என்பதால் அவருக்கு இப்படியொரு தொகுப்பு கொண்டுவந்திருப்பதன் மூலம் இனி அவர் பரவலாக எடுத்துச்செல்லப்படும் வாய்ப்பை இது உருவாக்கும் என்னும் தன் நம்பிக்கையைப் பரவவிட்டார் அவர். கோவில்பட்டிக்காரனாகவும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவனாகவும் தான் இருக்கும் காரணத்தால் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருப்பதாக அவர் கருதுவதாகவும் கூறி வாய்ப்பளித்தற்கு நன்றி சொல்லி விடைபெற்றார் அவர்.

இறுதியாகப் பதிப்பாசிரியர் பழ. அதியமான் உரையாற்றினார். முன்னர் பேசிச் சென்ற அனைவரும் சுருக்கமாக முடித்திருந்ததால் அதிகப்படியான நேரம் தனக்கிருந்ததால் தொகுப்பு குறித்தும் நினைவோடை குறித்தும் மேலதிகத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் அதியமான். தொகுப்பில் இடம்பெற்றிருந்த 105 கதைகளையும் காலவரிசைப்படி அடுக்கியிருப்பதை இரண்டு மூன்று முறை குறிப்பிட்டதோடு இத்தகு முழுத்தொகுப்பு வெளிவரும்போது எழுத்தாளர் பற்றிய சிறப்பான அறிமுகத்திற்கு உதவியாக இருக்கும் என்பதால் நினைவோடையை இப்போது வெளியிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அன்பளிப்பு கதையை வாசகர்களில் பெரும்பாலானோர் படித்திருக்கக்கூடும் என்பதை அறிந்திருந்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்ததன் காரணமான உற்சாக மிகுதியாலோ என்னவோ அதியமான் கிட்டத்தட்ட அந்தச் சிறுகதை பற்றியும் இன்னும் சில கதைகள் குறித்தும் அதிகப்படியாகவே சிலாகித்துவிட்டார். அழகிரிசாமி எழுதியிருக்கும் கதைகளில் வரும் வரி போன்ற ஏதாவது ஒரு வரியை எழுதிவிட்டால்கூடப் போதும் என ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ்ச்செல்வன் யாரிடமோ பகிர்ந்துகொண்டிருந்ததைக் கேள்விப்பட்டு அழகிரிசாமிமீது அவருக்கிருக்கும் ஆழமான நேசத்தை உணந்திருந்ததன் காரணமாகவே அவரை அழைத்திருப்பதாகவும் பகன்றார் அதியமான். தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக அதியமான் பயன்படுத்திக்கொண்டதாக அரவிந்தன் கூறியது பாராட்டென்றே தோன்றியது.
கடுமையான உழைப்பின் பயனாகக் காலகாலத்திற்கும் நிலைத்திருக்கும் வகையிலான தொகுப்பைப் பதிப்பித்திருந்த அதியமான் தனது உரையையும் அதேயளவு நேர்த்தியோடு சொற்சிக்கனத்தைக் கடைப்பிடித்து செறிவுள்ள ஒன்றாக வெளிப்படுத்தியிருந்தால் நிகழ்வு முழுமையான திருப்தியை அளித்திருக்கும். கச்சிதமாக முடிக்க வேண்டிய உரையைச் சற்று நீட்டியதன் காரணமாக மெல்லிய சோர்வை இறுதியில் உண்டுபண்ணிவிட்டார் என ஒரு சில பார்வையாளர்கள் தங்களுக்குள் பேசியபடியே விடைபெற்றுச் சென்றது தவிர்க்கப்பட்டிருந்தால் நலமாக இருந்திருக்கும் ஆனால் எல்லாமும் நாம் நினைத்தபடியா நடந்துவிடும், சில விஷயங்களில் லகான் அரூபமான ஒன்றாக அல்லவா அமைந்துவிடுகிறது. 

(இந்தப் பதிவு காலச்சுவடு மே, 2011 இதழில் பத்திரிகைக்குத் தக்க சில மாற்றங்களோடு வெளியானது. அதன் இணைப்பு : http://www.kalachuvadu.com/issue-137/page65.asp )

சனி, அக்டோபர் 01, 2011

பெய்கிறது மழை



மழை பெய்வதற்கு வாய்ப்பற்ற நிலத்தில்
வசிப்பிடம்
அமையப்பெற்றவன்
தாவரங்களில் மிதந்தலையும் ஈரத்தின் வாசனை
நாசியைத் துளைக்கும் கனவுகளில்
வெம்மையைக் கரைத்திட முயல்வான்

சாளரத்தின் வழியே
வானத்தில் கருமேகங்கள் திரளாதா
என
அவதானிப்பதைப் போன்ற கண்கள் அவனுக்கு

மழைத்துளியின் ஈரம் நிலத்திலிருந்து அகலவே அகலாத
தொலைதூர நகரமொன்றிற்குப் புறப்படும்
அவனது எத்தனிப்புகள்
முறியடிக்கப்பட்டுவிடுகின்றன

அவனது வறண்ட நிலத்தை நோக்கி
வந்த மழைத்துளிகளில் நனையத் தலைப்பட்டவன்
கரத்தினில் திணிக்கப்பட்ட கருங்குடை
அன்பால் நெய்யப்பட்டு
அக்கறையால் பிணைக்கப்பட்டிருந்தது
அதன் வளைந்த கைப்பிடிக்குள் அகப்பட்டுக்கொண்ட
நனைதலின் வேட்கை
உப்பாய்க் கரைந்தது

அந்தச் சிறு பறவை
ஈர இறகுகளோடு பறந்தது

எல்லோரையும் நனைக்கும் பொருட்டு மழை தொடர்ந்து பெய்கிறது

சனி, செப்டம்பர் 24, 2011

முடிவற்ற முனை கொண்ட துயரம்

ஆகஸ்டு மாத படப்பெட்டி இதழில் வெளியாகியுள்ள துயரம் படிந்த கரைகள் ஆவணப்பட விமர்சனத்தின் சுருக்கப்பட்ட வடிவம் இது. 

இலங்கைக்  கடற்படையால், ராணுவத்தால் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை மீனவர்களைத் தவிர மற்றவர்கள் புரிந்துகொள்ளாத சூழ்நிலையே இன்றுவரை நீடித்துவருகிறது. அவ்வப்போது பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகளில் இடம்பெறும் இத்தகைய இடர்கள் குறித்தும் அவற்றுக்கான சமூக, அரசியல் காரணங்கள் குறித்தும் அவற்றைக் களைய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்  குறித்தும் சமூக ஆர்வலர்கள், மீனவத் தலைவர்கள்,  வழக்கறிஞர்கள், மீனவர்கள் ஆகியோரின் கருத்துகளை உள்ளடக்கிய காட்சி வடிவிலான ஆவணம் துயரம் படிந்த கரைகள்.  

கொஞ்சம்கூட  மனிதாபிமானமற்றுத் தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் இலங்கைக் கடற்படை பாதுகாப்புக் காரணங்களுக்காக நடவடிக்கை மேற்கொள்வதாகக் காட்டிக்கொள்கிறது. இந்திய அரசோ தமிழக அரசோ இதைக் குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. உயிரழப்பென்றால் நஷ்ட ஈடு, ஆறுதல் வார்த்தைகள் பொதிந்த அறிக்கைகள் போன்றவற்றோடு தம் பொறுப்பைச் சுலபமாகச் சுருக்கிக்கொள்ளும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர்மீது தார்மீகக் கோபம் கொண்ட இந்த ஆவணப்படம் தம் சொந்த நாட்டு மக்கள் வேற்று ராணுவத்தால் கொல்லப்பட்டும் அதைக் கண்டும் காணாததுபோல் நடந்துகொள்ளும் இந்திய அரசின் இறையாண்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.  


இலங்கை  தமிழ்நாடு ஆகியவற்றுக்கிடையிலான கடற்பரப்பின் சூழல், கடற்எல்லையை மீனவர்கள் கடக்க நேரிடுவது எதனால், கச்சத்தீவின் முக்கியத்துவம் என்ன, தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளின் மீனவர்கள் எதிர்கொள்ளும் வெவ்வேறு பிரச்சினைகள் என்பனவற்றை எல்லாம் விரிவாக அலசும் இந்தப் படத்தில் தனது கருத்துக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும் நேர்காணல்களும் காட்சி வடிவ வரைபட விளக்கங்களும் பார்வையாளனுக்கு மீனவர்களின் துன்பங்களை அவை ஏற்பட காரணமாக இருக்கும் இயற்கைச் சூழல்களோடு இதமாக எடுத்துரைக்கின்றன.  

சீனா, பாக்கிஸ்தான் ஆகிய நமது எதிரி  நாடுகளோடு இலங்கை நட்பு  கொண்டுவிடக் கூடாது என்னும் ஒரே காரணத்திற்காக இலங்கையைச் சமாதானப்படுத்தும் நோக்கோடு இலங்கை, இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் பாதுக்காக்கப்படும் என்னும் உத்தரவாதத்தோடு 1974இல் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டுவிட்டதையும்  1976இல் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளில் கச்சத்தீவு ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் காரணமாக அந்த உரிமைகள் பறிபோய்விட்டதால் தமிழக மீனவர்களின் மீன்பிடிப் பரப்பு குறுகிவிட்டதையும் கவனப்படுத்துகிறது இந்தப் படம்.   


கச்சத்தீவையொட்டி  மீன்கள் அதிகமாக அலையும்படியான  இயற்கை அமைப்புகள் உள்ளதாகவும் தீவை இழந்ததால் ஏற்படும் மீனவர்கள் பிரச்சினைகளைத் தொலைநோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகள் இந்திய அரசுக்கு அழுத்தமாக உணர்த்தத் தவறிவிட்டனர் என்கிறார் ஜோ டி குருஸ். கடலோரங்களில் ரசாயணக் கழிவுகள் கலக்கும் வகையிலான தொழிற்சாலை அமைக்கப்பட்டதன் காரணமாக கடலோர மீன்வளங்கள் முற்றிலும் நாசப்படுத்தப்பட்டதால் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார் சேதுபதி நாட்டார்.
  
தமிழக மீனவர்களுக்கு இந்திய அரசு அடையாள அட்டை வழங்கியுள்ளதையும்  மீன்பிடிப்பதற்குத் தேவைப்படும்  டோக்கன் போன்ற ஆவணங்களோடு கடலுக்குள் செல்லும் மீனவர்கள்மீது  கூடத் தாக்குதலும் துப்பாக்கிச் சூடும் நடத்தப்படுகிறது  என்பதையும் குறிப்பிடுகிறார் அ.புனிதன் என்னும் மீனவர். டோக்கன் பெற்றுக்கொண்டு மீன்பிடிக்கச் சென்று கடற்படையால் சுடப்பட்ட ஜூலியன்ஸ் இறப்பின் வாயில்வரை சென்றுவந்த நினைவுகளோடு மீனவர்கள் கடலில் படும் துயரங்களை, மீன்பிடித் தொழிலையே விட்டுவிடலாமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படியான விரக்தியான உணர்வை எடுத்துச் சொல்கிறார். 

கடற்புலிகளின் கட்டுப்பாட்டில் கடற்பரப்பு இருந்த காலங்களில் தமிழக  மீனவர்களுக்கும் கடற்புலிகளுக்கும்  மோதல்கள் வந்ததாகச் செய்திகள்  கிடையாது என்கிறார் இராசேந்திரச் சோழன். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சொல்லி தமிழக மீனவர்களைத் தாக்கிய கடற்படை விடுதலை புலிகள் அழிக்கப்பட்டுவிட்ட பின்பும் அத்தகைய தாக்குதல்களைத் தொடர்கிறது. மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இந்தியர்கள் மீது தங்களுக்குள்ள வன்மத்தைத் தமிழக மீனவர்களிடம் காட்டுவதைத் தனது வாடிக்கையாகவே கொண்டுள்ளது இலங்கை ராணுவம். இதற்கெதிராகக் குரல்கொடுக்க வேண்டிய இந்திய அரசு தொடர்ந்து தன்னை மௌனத்தில் புதைத்துக்கொண்டுள்ள மரக்கட்டைத் தனமான போக்கு குறித்த ஆளுமைகளின் கோபத்தைத் தனக்குள் உள்வாங்கிக்கொண்டு அந்தக் கோபத்தை, ஆதங்கத்தைப் பார்வையாளனுக்குள் நிரப்பிட வேண்டும் என்னும் இலக்கை நோக்கி மிகத் தெளிவாக முன்னேறுகிறது இந்த ஆவணப்படம்.

   
தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது இந்திய அரசு நேரடியாகக் குரல்கொடுத்தாலே மீனவர்கள்மீது கைவைக்க இலங்கை அரசு துணியாது. மேலும் கடற்பகுதியில் மீனவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இந்தியக் கடற்படை அவர்களுக்கு உடனே உதவ வேண்டும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் மட்டுமே இப்பிரச்சினை தீரும் என்கிறார் ராசேந்திரச் சோழன். இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் உரிமம் வழங்கி மீன்பிடிக்கச் செய்யலாம் என்கிறார் சேதுபதி நாட்டார். இந்தியத் தரப்பில் மீனவர்களாக இருப்பவர்களும் தமிழர்கள் இதற்கு மறு கரையில் இலங்கைத் தரப்பில் மீனவர்களாக இருப்பவர்களும் தமிழர்கள் மீன்பிடிக்க முனையும்போது இரு தரப்பினரும் எல்லை தாண்டுவது இயல்பானது எனவே எல்லை என்பதே அழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் தோழர் தியாகு. இரு நாட்டு மீனவர்களும் ஒத்திசைந்து மீன்பிடிக்கும் சூழல் உருவாக்கப்பட்டால் அனைத்தும் நலமாக மாறும் அதற்கான உடன்பாடுகள் எட்டப்பட வேண்டுமென கோருகின்றனர் மீனவப் பிரதிநிதிகள்.  

மீனவர்  பிரச்சினைகளின் காரணங்களைப்  பல்விதப் பரிமாணத்தில் உணரத்  தலைப்பட்டு அவற்றைக் களைய மேற்கொள்ளப்பட வேண்டிய  தீர்வுகள் குறித்து அக்கறையோடு கரிசனப்படும் இப்படத்தில் இலங்கைத் தரப்பு மீனவர்கள் இவ்விஷயத்தில் என்னவித நிலைப்பாடு கொண்டுள்ளனர் என்பதுவும் சேர்க்கப்பட்டிருந்தால் அது முழு முற்றான பூரணத்துவத்தை இப்படத்திற்கு அளித்திருக்கும். நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இது தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும் என்னும் புரிதலோடுதான் இதை நாம் அணுக வேண்டியுள்ளது. முடிவற்ற முனை கொண்ட மீனவர் துயர முனையின் நீட்சியை நிறுத்தி அதை முற்றுப்புள்ளியாக்கப் போராடும் போராட்டத்தில் தனது முயற்சியையும் இணைத்துக்கொண்டதில் வெற்றிபெற்றுள்ளார் இதைப் படமாக்கி இயக்கி தயாரித்த செ.தே.இமயவரம்பன்.

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

இருட்டைத் துரத்தும் ஒற்றைச் சுடர்


ஆகஸ்டு அடவி இதழில் வெளியாகியுள்ள நாடகப் பதிவு இது.


பெருநகரான சென்னையில் இலக்கிய அரசியல் நிகழ்வுகள் பெருமளவில் நடந்தேறுகின்றன. நம்மைக் கடந்துசெல்லும் வெறும் சம்பிரதாய நிகழ்வுகளை ஞாபகத்தில் இருந்து சுத்தமாகத் துடைத்தழித்துவிட்டுத் தினசரிக் கடமைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்கிறோம். ஆனால் எதேச்சையாக நாம் பங்குகொள்ளும் சில நிகழ்வுகள் நமது சிந்தனை மையத்தை ஆதிக்கம் செலுத்தும்விதமாக அமைந்துவிடுகின்றன. அத்தகு நிகழ்வுகளை நம்மால் மிகச் சாதாரணமாகக் கடந்துவிட முடிவதில்லை. அவை உருவாக்கிய சுறுசுறுப்பான உற்சாக எண்ண ஓட்டங்கள் நம் சிந்தனையைக் கூர்மையடையச்செய்கின்றன. நாம் அறிந்திராத மற்றொரு தளத்திற்கு நம்மை அழைத்துச்செல்ல முயலும் அவை நமது புரிதலின் பரப்பை மேலும் சில அடிகள் நகர்த்திச் செல்லும். அப்படியொன்றுதான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக ஏப்ரல் 1, 2011 அன்று மாலை சென்னை தேனாம்பேட்டை நரேஷ் பால் மையத்தில் நடைபெற்ற லே மஷாலே நாடக நிகழ்வு. 
  
இரோம் ஷர்மிளாவும் மணிப்பூரின் அமைதிக்கான போராட்டமும் என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு சிவிக் சந்திரன் மலையாளத்தில் எழுதிய, பெங்குயின் பதிப்பகம் 2009இல் வெளியிட்ட மெய்ரா பெய்பி என்னும் நாடகத்தை ஆங்கில மொழி பயன்படுத்தி தனியொரு ஆளாக நிகழ்த்திக் காட்டினார் மகாராஷ்டிர மாநில நாடக ஆளுமையான,  இருபத்தைந்து வயது ஓஜாஸ் சுனித் விஜய். மெய்ரா பெய்பி என்னும் பதம் சுடரேந்திய பெண் என்பதைக் குறிக்கிறது. ஷர்மிளா என்னும் மணிப்பூரைச் சார்ந்த இளம்பெண் தனது மாநிலத்தில் நிலவும் வன்முறைகளுக்கெதிராக அஹிம்சை வழியில் மேற்கொண்டிருக்கும் பதினோறாண்டுகால உண்ணாவிரதப் போரை மையப்படுத்தி அம்மாநிலக் கலாச்சாரம், பண்பாடு, அம்மக்களின் வாழ்வு சீரழிக்கப்படும் விதம் போன்றவற்றை நம் கண்முன் கொண்டுவந்துவிடுகிறது நாடகத்தின் சித்திரிப்பு குறிப்பாக ஓஜாஸின் நடிப்புத் திறன்.  “ஐம் இரோம் ஷர்மிளா, இரோம் ஷர்மிளா சானு” என்னும் வார்த்தைகளோடு தொடங்கும் இந்நாடகம் பார்வையாளர்களை மானசீகமாக மணிப்பூருக்கு அழைத்துச்சென்று அம்மக்களின் நிலவியல், நாட்டுப்புறக் கதைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர்களிடம் அன்னியோன்யத்துடன் கூறுகிறது. நாடகம் முடியும்போது வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் அடக்குமுறைகள் குறித்து பகிரப்பட்ட தகவல்களின் காரணமாக ஏற்பட்ட பதற்றமும் அதிர்ச்சியும் பார்வையாளனுக்குள் பரவி அவனை அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக ஏதாவது செய்துவிட மாட்டாமோ என ஏங்கவைக்கிறது. 


கடுமையான சோர்வை ஏற்படுத்தும்படியான பயணத்தை மேற்கொண்டால் மட்டுமே மாநிலத்தின் தலைநகரமாக இருந்தபோதும் புகைவண்டி நிலையம்கூட இல்லாத இம்பாலுக்குச் செல்ல முடிவது; வாரத்தில் 24 மணி நேரம் மட்டுமே மின்சார வசதி கிடைப்பது; திடீர் திடீரென ஆள்கள் காணாமல்போவது, பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவது போன்ற நாடகத்தில் ஓஜாஸ் வெளிப்படுத்தும் பல தகவல்கள் நம்மை உலுக்குகின்றன. ஷர்மிளா படித்த வரலாற்றுப் புத்தகங்களில் அவளது மாநிலத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களது சரிதம் குறிப்பிடப்படவில்லை. அந்தப் புத்தகங்களை ஓஜாஸ் தேடும் விதம் பல ஆண்டுகள் அதில் நகர்வதைக் குறிப்புணர்த்துவதுபோல் உள்ளது. நமது தேசியகீதத்தில்கூட வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இல்லை. ஏன் அப்படி? தேசியகீதம் பின்னணியில் ஒலிக்க இந்திய தேசத்தைப் போன்ற வளைவு சுழிவுகளோடு நளினமாக நாட்டிய அசைவுகளைத் தருகிறார் ஓஜாஸ். வழக்கமாக, தேசிய கீதம் ஒலிக்கும்போது இறுக்கமாக நேராக நெஞ்சு நிமிர்த்தி நின்றே பழகிய நம்மை அர்த்தமுள்ள பகடிக்குள் அமிழ்த்துகிறது இந்தக் காட்சி. இந்த மாதிரியான சூழலில் வழக்கமான மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த ஷர்மிளா படிக்கிறார், வளர்கிறார், கவிதை எழுதுகிறார் இறுதியில் ஒரு மனித உரிமை அமைப்பில் பணியில் அமர்கிறார். 
  
2004ஆம் ஆண்டு ஜூலை 10 அன்று தங்க்ஜம் மனோரமா தேவி என்னும் 32 வயது பெண்ணின் சடலம் அவளது வீட்டிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் கிடைத்தது. அந்த இளம்பெண் அவளது வீட்டிலிருந்து பிரிவினையைத் தூண்டும் போராட்டக்காரர்களுடன் அவளுக்குத் தொடர்பிருக்கிறது என்னும் குற்றச்சாட்டின் பேரில் துணை ராணுவப் படையினரால் பிடித்துவரப்பட்டிருந்தாள். சில மணி நேரங்கள் கழித்து அவளது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவளது யோனியில் துப்பாக்கி ரவை பாய்ந்திருந்தது, அவள் உடலில் துப்பாக்கி ரவைகள் ஏற்படுத்திய காயமும் சித்திரவதை செய்யப்படிருந்ததற்கான அடையாளங்களும் தென்பட்டன. இச்சம்பவத்திற்கெதிராக இம்பாலில் உள்ள அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு அலுவலகத்தின் முன்பு ஜூலை 15, 2004 அன்று பெண்கள் நிர்வாணமாக நின்று அஸ்ஸாம் ரைபிள்ஸுக்கெதிராகப் போராடிய காட்சியைக் காட்டும் படம் ஒன்று இந்நாடகத்தின் ஊடாகத் திரையில் வந்துசென்றது. இந்திய ராணுவம் எங்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கியது என்னும் பதாகையைத் தாங்கியிருந்தனர் அவர்கள். படைப்பிரிவினர் மணிப்பூரி இளைஞர்களை ஒருவரையொருவர் அடிக்கச்சொல்லி வதைக்கும் காட்சியும் திரையில் விரிந்து திகைக்கவைத்தது. மணிப்பூரின் கிராமம் ஒன்றுக்கு 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி வண்டியில் வந்த ராணுவப்படையினர் தங்களது வேலைகளில் ஈடுபட்டிருந்த அங்கிருந்த அப்பாவி மக்களில் பத்துப் பேரை துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தினர். அவர்களுள் முதிய பெண் ஒருவரும் வீரத்திற்காகத் தேசிய விருது பெற்ற இளைஞனும் அடக்கம். மணிப்பூரிகளாக இருந்ததைத் தவிர வேறு எந்தக் குற்றமும் செய்திராத அப்பாவிகள் அவர்கள். 

 
  
இந்திய தேசத்தில் வாழும் அம்மக்களுக்கு ஏன் இப்படியொரு நிலைமை, அவர்கள் செய்த குற்றம்தான் என்ன என்னும் கேள்விகள் நாடகத்தைப் பார்க்கும்போது நமக்கு ஏற்படுவது போல் தான் இத்தகைய நிகழ்வுகளை நேரில் பார்த்த ஷர்மிளாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது. என்னவொன்று, நமக்கு நாடகம் ஒரு முறை தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனவே அதைப் பற்றி சிறிது சிந்தித்துவிட்டு நாம் நமது வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிடுகிறோம். ஆனால் ஷர்மிளாவுக்கு அவை தினசரிக் காட்சிகள், அதுவும் சொந்த மண்ணில் சொந்த ராணுவத்தால் சொந்த மக்களுக்கு ஏற்படும் வலி மிக்க அந்தத் துயரம் பெரும் சுமையாக அவளுள் இறங்கியது. அந்த இளம்பெண்ணால் அச்சுமையை எளிதாகத் தூக்கிப்போட இயலவில்லை. அந்தத் துயரத்தை மாற்ற தன்னால் ஆன எதைச் செய்ய முடியும் என ஆழமாக யோசித்த அவளுக்கு முன்னால் பெரியதொரு வெளிச்சமாக தோன்றியது அஹிம்சை முறையிலான உண்ணாநோன்புதான். அவளிடம் ஆயுதங்கள் இல்லை. ஆனால் அவள் போரிட வேண்டியது ஆயுதமேந்திய வீரர்களிடம். அவளிடம் இருந்த ஒரே ஆயுதம் அவளது மன வலிமை மட்டுமே. இருக்கும் ஆயுதத்தை மறந்துவிட்டுப் புலம்பத் தயாராகயில்லாத அவள் போரிடுகிறாள். அந்தப் போராட்டம் பதினோரு ஆண்டுகளாகத் தொடர்கிறது. 

இந்நாடகத்தில் ஒன்பது சூரியன்கள் விரட்டப்படுவது குறித்து இடம்பெறும் நாடோடிக் கதை ஒன்றில் மணிப்பூரில் ஒன்பது சூரியன்கள் இருந்ததாகவும் மணிப்பூரின் மூதாதைப் பெண்கள் வில் தொடுத்து அம்பெய்து அவற்றுள் எட்டை வீழ்த்தியதாகவும் இறுதியில் ஒன்பதாவது சூரியன் தானாகவே பயந்து ஓடிவிட்டதாகவும் அதன் பின்புதான் அவர்கள் தங்களுக்கான இரவை, தங்கள் காதலை, பிரியத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான இருளைக் கண்டுகொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் 1958 இல் ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் [Armed Forces Special Powers Act (AFSPA)] அமல்படுத்தப்பட்ட பிறகு அந்த இருள் அகன்று போய்விட்டது; இப்போது இருப்பதெல்லாம் ராணுவத்தினரின் பயம் மிரட்டும் இருட்டுதான் என்கிறார் ஓஜாஸ். நாற்பது லட்சம் மக்களை அடக்குமுறைக்குள்ளாக்கும், இந்தியாவின் ஆபரணம் என பண்டித ஜவஹர்லால் நேரு வர்ணித்த மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை அரசாங்கம் திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் இவர் போராடுகிறார். இதில் வெற்றிபெறாமல் ஷர்மிளா தன் தாயைக்கூடப் பார்க்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். “உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதை உலக நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டுமானால் இந்தச் சட்டம் திரும்பப்பெறப்பட வேண்டும்” என்கிறார் இவர். தற்கொலைக்கு முயன்றார் எனும் குற்றச்சாட்டின் பேரில் ஷர்மிளாவைக் கைது செய்தது அரசு. ஆனால் ஷர்மிளா சாக விரும்பவில்லை. வாழ்வதற்காக, கௌரவமாக வாழ்வதற்குரிய அனைத்து உரிமைகளையும் அனுபவித்து வாழ்வதற்காகத்தான் ஆசைப்படுகிறார். 


ரத்தக்கறை படிந்த செய்தித் தாள், சில புத்தகங்கள், காலியான தண்ணீர் பாட்டில், ராணுவச் சீருடை ஒன்று, ஒரு சில தீப்பந்தங்கள் முதலான சிறு சிறு பொருள்களைக் கொண்டு கிடைத்த இடத்தை மேடையாகப் பயன்படுத்தி வடகிழக்கு மாநிலமொன்றில் போராடும் இளம்பெண்ணின் கதையை நாடகம் ஒன்றின் மூலம் இந்தியா முழுவதும் பரப்பி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ராணுவக் கொடுமைகளுக்கெதிராக மக்களைக் கேள்வி கேட்கவைக்கும் ஓஜாஸின் முயற்சிக்காக அவரைப் பெருமிதத்தோடு பார்க்கும் அதே நேரத்தில் நம் சொந்தச் சகோதரர்கள் அண்டை நாட்டில் சாகும் நேரத்தில் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கக்கூடிய இடத்தில் இருந்தபோதும் அதை எண்ணிக் கண்ணீர் சிந்திக் கவிதை மட்டுமே எழுத முடிந்த முதல்வர் நமக்குக் கிடைத்த கொடுமையை நினைக்கும்போது “சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்” என்னும் பாரதியின் வரிதான் மனத்தை ஆக்கிரமித்து நிற்கிறது.   

சனி, ஆகஸ்ட் 06, 2011

எதிர்வினை


பாஸ்கர் சக்தி சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் காலச்சுவடு இதழில் நான் எழுதிய விமர்சனம் குறித்து இவ்வாறு கூறியிருந்தார்...


காயப்படுத்திய காலச்சுவடு!

 - எழுத்தாளர் பாஸ்கர் சக்தி


"அழகர்சாமியின் குதிரை' படம் குறித்து காலச்சுவடு காட்டமான விமர்சனத்தை வெளிப்படுத்தியிருந்ததே?

ஒரு படைப்பு பொதுவெளிக்கு வரும்போது அது சகலவிதமான விமர்சனங்களுக்கும் உட்பட்டதுதான். அந்தப் படைப்பை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால், அந்த விமர்சனத்தில் ஒரு அடிப்படை நியாயம் இருக்க வேண்டும்.
இந்தப் படத்திற்கு தொண்ணூறு சதவிகித விமர்சனங்கள் பாராட்டித்தான் வந்தன. மீதி பத்து சதவிகித விமர்சனங்கள் கூட நேர்மையான விமர்சனங்கள்தான். அந்த விமர்சனங்கள் சுட்டிக்காட்டிய குறைகளை நானும் கூட ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், "காலச்சுவடு' இதழின் விமர்சனம் காழ்ப்புணர்ச்சியோடு எழுதப்பட்டிருந்தது. எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்த அம்சம் அதுதான்.

அந்த விமர்சனத்தில் வசனங்கள் எல்லாம் சீரியலுக்கு எழுதப்படும் வசனங்கள் போல இருந்தது என்று எழுதியிருந்தார்கள். இது நான் வசனகர்த்தாவாக இருப்பதால் மட்டுமே எழுதப்பட்ட வாக்கியம். வேறு யார் அந்த வசனம் எழுதியிருந்தாலும் இப்படி எழுதியிருக்க மாட்டார்கள் இல்லையா?

அந்த வாக்கியத்தில் பாஸ்கர் சக்தி சீரியலுக்கு வசனம் எழுதுபவர் என்கிற ஒரு முன் தீர்மானம் இருக்கிறது. விமர்சனத்தை எழுதிய அந்த நண்பர் உண்மையிலேயே கவனத்துடன் சீரியல்களைப் பார்த்திருந்தால் அவருக்கு சீரியலுக்கான வசனம் எப்படியிருக்கும் என்பது புரிந்திருக்கும்.
இது தவிர அடிப்படையிலேயே அந்த விமர்சனத்தில் ஒரு கேலியான தொனி இருந்தது. அந்த ஊரின் பெண்களெல்லாம் தெருவில்தான் மாவாட்டுகிறார்கள். குழந்தையை தெருவில்தான் குளிப்பாட்டுகிறார்கள் என்று வரி... கிண்டலாம்!

அய்யா எங்கள் ஊரில் அப்படித்தான்... தெருவில்தான் குழந்தையை குளிப்பாட்டுவார்கள். மாவாட்டுவார்கள்... விமர்சனம் எழுதிய நண்பர் நகரத்திலேயே பிறந்து, வளர்ந்தவராக இருக்கலாம். என்ன செய்ய? அப்புறம் அப்புக்குட்டி எங்கே திரும்பி வந்து அந்தப் பெண்ணை கல்யாணம் செய்துகொள்வானோ என்று பயந்தேன் என்றெல்லாம் எழுதுகிறார்கள்.
ஒரு தனிப்பட்ட மனிதனின் விமர்சனம் எப்படி பொது விமர்சனமாக இருக்க முடியும்? அந்த ஒரு விமர்சனம் மட்டும்தான் என்னை காயப்படுத்தியது. ஒரு விமர்சனத்தில் குறைந்தபட்ச நேர்மை என்பது இருக்க வேண்டும். அப்படியில்லாத "காலச்சுவடு' விமர்சனத்திற்கு மதிப்போ, மரியாதையோ தர தேவையில்லை என்றே கருதுகிறேன்.
-நன்றி சினிமா எக்ஸ்பிரஸ்

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

மாயமான்



நள்ளிரவின் விபரீதக் கனவால்
உறக்கம் தொலைய
அநிச்சையாய்க் 
கை
துழாவி எடுத்தது அலைபேசியை
படிக்கப்படாத குறுஞ்செய்தி ஒன்று
முகப்பில் ஒளிர்ந்தது
குருட்டுத்தனமாக உன்னை நம்புபவர்களை
குருடர்கள் என ஒருபோதும் நிரூபித்துவிடாதே என்றது
இரவு வணக்கத்திற்கென
பின்னிரவில்
தோழியால் அனுப்பப்பட்ட அச்செய்தி
அவள் குருடியா
நான் நம்புகிறேனா
நான் குருடனா
அவள் நம்புகிறாளா
மனம் வலை பின்னத் தொடங்கியது
துயில் தடைபட்டது.   

திங்கள், ஜூலை 11, 2011

சிருங்காரச் சிலைகள்

டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் 


 சென்னை தமிழிசைச் சங்கம் இருக்கும் ராஜா அண்ணாமலை மன்றத்தின் முன்னே ஆஜானுபாகுவாக நின்ற நிலையில் நிறுவப்பட்டிருக்கும் சிலை அண்ணாமலை செட்டியாருடையது. 1964 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று மைசூர் மகாராஜா திறந்துவைத்த சிலை இது. நிகழ்ச்சிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சர் சி. பி. ராமசாமி அய்யர் தலைமை வகித்தார். தமிழிசைச் சங்கத்தை 1943இல் நிறுவி அதன் தலைவராகவும் இருந்த அண்ணாமலை செட்டியார் 1881 செப்டம்பர் 30 அன்று சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் பிறந்தார். இவர் உருவாக்கியதே அண்ணாமலை பல்கலைக்கழகம். சென்னை மாநகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரைக் கௌரவப்படுத்த இந்திய அஞ்சல் துறை தபால்தலை வெளியிட்டுள்ளது. அண்ணாமலைச் செட்டியார் பர்மா, பிரெஞ்சு, இந்தோ சீனா போன்ற நாடுகளில் இருந்த இந்தியர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து முயற்சி எடுத்தவர். அதன் காரணமாக 1935இல் இந்தியப் பிரதிநிதியாக லண்டனுக்கும் பாரிஸுக்கும் போய் வந்தார். 1921இல் இம்பீரியல் வங்கியின்(தற்போதைய பாரத ஸ்டேட் வங்கி) தொடக்கத்தில் அதன் கவர்னராக இருந்துள்ளார். இந்தியன் வங்கியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு இவருக்கு. 1948 ஜூன் 15இல் இவர் காலமானார்.

 ராஜா சர் முத்தையா செட்டியார்



சென்னை ரிப்பன் கட்டடத்தில் இவருக்கு வெங்கலச்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அக்டோபர் 27, 1994 அன்று முதல்வர் ஜெ.ஜெயலலிதா திறந்துவைத்த சிலை இது. சிற்பி கோ.மோகன்தாஸ் உருவாக்கிய சிலை இது. இவர் 1905, ஆகஸ்ட் 5இல் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் பிறந்தார். 1922இல் சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் குடும்ப வியாபார சம்பந்தமாக பர்மா சென்றார். மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். 1929இல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினரான இவர் 1933- 34இல் சென்னை மேயரானார். பூண்டி நீர்த்தேக்கம் அமைவதற்கு இவரும் உதவினார். இவருடைய முயற்சியால் சென்னை மாநகராட்சியின் சார்பில் குறைந்த சக்தி கொண்ட வானொலி நிலையம் அமைக்கப்பட்டது. தென்னிந்திய வர்த்தக சபையின் உறுப்பினராக இருந்தார். 1941இல் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்வி மீது ஆர்வம் என்பது இவரது பரம்பரை வழக்கம்.  மீனாட்சி கல்லூரியை உருவாக்குவதில் தந்தையாருக்கு துணை புரிந்தார். சட்டப்பேரவை உறுப்பினர் நீதிக்கட்சியின் தலைவர் என தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டபோதும் கல்வி மீது இவருக்கு ஆர்வம் தொடர்ந்திருந்துவந்தது. 1936இல் கல்வி, மக்கள்நலவாழ்வு, சுங்க துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.  அப்போது ஓராண்டு வரை சென்னை பல்கலைக்கழகத்தின் கௌரவ வேந்தராகவும் இருந்தார். 1937 - 39 ஆம் ஆண்டுகளில் ராஜாஜி முதல்வராக இருந்தபோது இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். பச்சையப்பா அறக்கட்டளையில் நிர்வாகக் குழுவில் 33 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார். சென்னை ஐஐடியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்தார். 1941இல் சர் பட்டம் பெற்றார். 1948இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கௌரவ வேந்தரானார். தமிழ் மொழி, தமிழிசை, தமிழ் இலக்கியம், தமிழ்க் கலாச்சாரம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 1973இல் இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் பட்டமளித்தது. 1979இல் தமிழக அரசிடமிருந்து தமிழிசைக் காவலர் என்னும்  பட்டம் பெற்றிருந்தார். 1984 மே 12இல் இவர் காலமானார். இந்திய அரசாங்கம் 1987 டிசம்பர் 21இல் இவரது நினைவாக தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது.


பெ.தெ.லீ. செங்கல்வராய நாயக்கர்



சென்னை ராஜாஜி சாலையில் மெட்ரோபாலிடன் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் அருகே செங்கல்வராய நாயக்கர் சிலை உள்ளது. மார்பளவுக்கான இந்த வெங்கல சிலையை பிப்ரவரி 23, 2006 அன்று நீதியரசர் கே எம் நடராஜன் திறந்துவைத்தார். செங்கல்வராய நாயக்கர் 1886இல் ஆரம்பித்த டிரஸ்ட் பல கல்வி சேவைகளைப்  புரிந்துவருகிறது. 1829இல் பிறந்த இவர் 1874இல் காலமானார். இவர் தன் சொத்துக்களை அறக்கட்டளையாக்கி வன்னிய மக்களின் கல்விக்காக என உயில் எழுதி வைத்துள்ளார். இந்த அறக்கட்டளை 1886இல் ஏற்படுத்தப்பட்டது. 


சமநீதிகண்டசோழன்



மெட்ராஸ் உயர் நீதிமன்ற வளாகத்தில் மனுநீதி சோழனின் பிரம்மாண்டமான சிலை நிறுவப்பட்டுள்ளது. 1996 இல் மெட்ராஸ் சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதும் உயர் நீதிமன்றம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்றே அழைக்கப்படுகிறது. இச்சிலையைத் திறந்துவைத்தவர் தமிழக ஆளுநர் பி.சி.அலெக்ஸாண்டர். உயர் நீதிமன்றத்தின் 125ஆவது ஆண்டுவிழாவை நினைவுகூர்வதற்காக இது நிறுவப்பட்டுள்ளது. 

தன் மகனால் இறந்த பசுவின் துயரத்தைக் காணப் பொறாமல் அதே துயரம் தனக்கும் கிடைக்கச்செய்வதே சரியான நீதி என்றெண்ணி தனது மகனை தேர்க்காலில் மாட்டச்செய்து இறக்கச் செய்தான் மனுநீதிச் சோழன். இவனது சிலை நீதிமன்றத்தில் இருப்பது சரியான நீதியை உணர்த்தவே.