இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, நவம்பர் 05, 2010

நரகாசுரன் வீட்டுத் தீபாவளி

எல்லோருக்கும் வெண்பட்டு விரிப்பதில்லை வாழ்க்கை. சிலரைக் சுட்டெரிக்கும் வெயிலில் கட்டாந்தரையிலோ சுடுமணலிலோ அமரவைத்து வேடிக்கை பார்க்கும் அது. குரூரத்தை மனிதனைவிட கடவுளிடம் (அப்படி ஒருவன் இருக்கிறான் என்ற அனுமானத்தில் நம்பிக்கை இருப்பதாகக் கொண்டால்) தான் அதிகம் பார்க்க முடியும். தனக்குப் பிடிக்காதவர்களைக் கஷ்டப்படுத்துவதில் கடவுளிடம் பெண்கள்கூடத் தோற்றுப்போவார்கள். சற்று விரக்தியான மனநிலையில் மூழ்கியெழுந்து வெளிவரும் இந்தச் சொற்கள் யாரிடமும் ஆறுதலையோ தேறுதலையோ எதிர்பார்க்கவில்லை. வலியின் கொடுந்துயர் வலை பின்னும்போது அலறும் மனத்தின் ஓலம் எப்படிச் சந்தங்களைத் தன்னிடம் கொண்டதாக இருக்கும். அதன் போக்கில் அது வரும்.


இன்று தீபாவளி. ஊர் நரகாசுரனின் மரணத்தைக் கொண்டாடுகிறது. ஆனால் நரகாசுரன் வீட்டை மகிழ்ச்சிக் காற்று தீண்டுவதில்லை. அது மரணத்தைச் சந்தித்திருக்கும் வீடு. மரணம் தரும் வாதையில் தனது சுயத்தைச் சிதைத்துக்கொண்ட வீடு அது. வேதனையின் தூரிகைகள் அவ்வீட்டின் சுவர்களில் விநோதமான சித்திரங்களைத் தீட்டியுள்ளன. கூர்ந்து கவனித்தால் ஓவியங்கள்கூட துயரத்தின் சாயையைக் கொண்டிருக்கும். ஓரமாக வைக்கப்பட்டிருக்கும் தூரிகைகளிலிருந்து இன்னும் உலராத குருதி துளித்துளியாக வடிந்து வீட்டை நிறைத்துக்கொண்டிருக்கிறது. வீடெங்கும் ரத்தத்தின் இரும்பு வாடை வீசிக்கொண்டிருக்கிறது. வீட்டின் வெளியே கொடியவன் மறைந்த மகிழ்ச்சி கோலாகலமாக வலம் வந்துகொண்டிருக்கிறது. வெளியே ஓசைகள் இன்பத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும். வீட்டினுள்ளே துக்கத்தின் ஓலங்கள் உறைந்துபோயிருக்கும். அவ்வீட்டில் சாவின் சாயை படிந்து உயர ஒட்டியிருக்கும் ஒட்டடையில் எல்லாம் கோரம் தனது முகத்தைப் பதிந்துவைத்திருக்கிறது. அந்த வீடு எப்போதுமே அப்படித்தான். ஒவ்வோர் ஆண்டும் இதே முறையில் தான் நரகசுரன் இறந்துகொண்டேயிருக்கிறான் அங்கே.

மரணம் ஒரே தடவையோடு முடியாத விநோதமான வீட்டில் குடியிருப்பவர்கள் அவர்கள். அவர்களின் முகங்களை ஆழமாக ஊடுருவுபவர்கள் கண்களின் ஆழத்தில் புதைந்திருக்கும் வாதையின் சுவடுகளை உணர்ந்துகொள்ள இயலும். கண நேரம் கூட அங்கே மகிழ்ச்சி நீடிப்பதை இறைவன் விரும்புவதில்லை. அவனது கவனம் முழுக்க அவர்கள் மகிழ்ச்சியைப் பறிப்பதிலேயே குறியாக இருக்கும். அப்படி நினைப்பது ஒருவகையில் சுய பச்சாதாபம் தான். ஆனாலும் அப்படித்தான் தோன்றுகிறது. இறைவன் எல்லோரிடமும் அப்படித்தான் நடந்துகொள்கிறான். அவனது வேலையே வெறும் மவுனசாட்சியாக இருப்பதுதானே. அன்பு பிரியம் கருணை என்பதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்பது மறந்தேபோய்விட்டதாம் அவனுக்கு. சந்தோஷ தேவதை தன்னை அலங்கரித்துக் கொண்டு அந்த வீட்டை நோக்கி வருவதைத் தூரத்தில் இருந்து பார்த்தாலே போதும் அவளை அங்கிருந்து நகர்த்துவதில் தனது குயுக்தியைப் பயன்படுத்த தொடங்கிவிடுவான் அவன். அவ்வீட்டு மனிதர்கள் மீது மந்திர சக்தியைக் கொண்ட சொற்களை ஏவிவிடுவான். அந்தச் சொற்கள் விநோதமான சக்தியைப் பெற்று விபரீதக் குணத்துடன் வெளிப்படும். மற்றவர்களால் புரிந்துகொள்ளப்பட முடியாத வீரியம் கொண்டவை அவை. கண்களைக் கட்டிக்கொண்டு கைபோன போக்கில் ஆயுதங்களை வீசுவதைப் போல் சொற்களை மாற்றி மாற்றி எறிவார்கள். தங்களது பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி அவர்களை காயப்படுத்துவிட்டு மாயமாய் மறைந்துவிடும் அந்தச் சொற்கள். வெறும் சொற்கள் என அவற்றை எப்படிச் சொல்ல முடியும்? ஆனாலும் அவை வெறும் சொற்கள். ஆனால் சூத்ரதாரி அவன் தானே?

வியாழன், செப்டம்பர் 16, 2010

விருது பெறும் பசங்க

பதிவை வாசிக்கும் நண்பருக்கு வணக்கம். நீங்க மட்டும்தான் வாசிப்பீங்கன்னு எனக்குத் தெரியும். இது உங்களுக்கும் தெரியும். எப்பவோ எழுதிய விமர்சனமொன்றை இப்ப பதிவிட நேர்ந்ததன் அவசியம் பற்றி சொல்லிவிடுகிறேன். இதை எழுதிய சமயத்தில் நான் வலைப்பதிவு தொடங்கவில்லை; நான் எழுதியதை எல்லாம் பிரிசுரிக்க எனக்குத் தெரிந்த பத்திரிகைகளும் இல்லை. எழுதியதை எல்லாம் புத்தகம் போடும் சாமர்த்தியமோ சம்பாத்தியமோ என்னிடம் இல்லை. ஆனாலும் கையரிப்பு எழுதிவைத்தேன். இதைப் பதிவிட இதைவிட வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. ஏனெனில் இத்திரைப்படம் தேசிய விருதுகளை வென்றுள்ளது. இயக்குநர் இப்படத்திற்கான சிறந்த வசனகர்த்தா என்ற விருதையும் பெற்றுள்ளார். இது ஒரு முரண்நகைதான். சரி, பதிவிற்கு நகருங்கள் பொறுமையிருந்தால்.

ஊசியாய் இறங்கும் எள்ளல்கள்



குழந்தைகளுக்கான திரைப்படம் எனப் பரவலாகச் சொல்லப்பட்ட படமாயிருந்த போதும் சிறுவர்கள் நடித்த பெரியவர்களுக்கான படமே இது. குழந்தைகள் அந்தந்த கனங்களில் வாழ்பவர்கள். அத்தகு வாழ்வு ஒரு வரம். வளர வளர அந்த வரத்தை இழந்துவிகிறோம். கடந்துசென்ற நாட்களின் சுகமான நினைவுகளை அசைபோடுவதில் மன்னர்கள் பெரியவர்களே. பால்ய காலத்து நினைவுகள் ஒவ்வொருவரை ஒவ்வொருவிதமாகப் பாதிக்கிறது. கடந்துபோன கால்சட்டை காலத்திற்குள் மீண்டும் காலம் நம்மை இழுத்துச் சென்று இருத்திவிடாதா என்ற ஏக்கத்தோடேயே எஞ்சிய நாள்களைக் கழித்துவிடுகிறோம். நழுவிச் சென்ற தருணங்களையும் பாதைகளையும் பருவத்தில் வந்த காதல் நினைவுகளையும் நினைந்து நினைந்து உருகி உருகி மேலும் உருகிப் படமெடுப்பவர்களிடம் பயின்றுவந்தவர் பாண்டிராஜ் என்ற செய்தியையும் மீறிப் பசங்களைப் பார்த்தபோது அவர் தனது முன்னவர்களை மிக நுணுக்கமாகக் கடந்துவந்துள்ளதை உணர இயலுகிறது.

சொந்த வீடு ஒன்றே வாழ்வின் உயர்ந்த லட்சியம் அதைச் சம்பாதித்துத் தர வக்கற்றவன் தனக்கு வந்து வாய்த்தது தான் செய்த பாவத்தால்தான் என நம்பும் சராசரியான இல்லத்தரசிகளின் தேந்தெடுத்த மாதிரி போதும் பொண்ணு, வந்ததைக் கொண்டு வாழ வேண்டும் வசதியை நோக்கிய பயணத்தில் வாழ்வைத் தவறவிடுதல் சரியல்ல என வாழும் எதார்த்தவாதியும் தான் அணியாமல் மற்றவருக்கு மட்டும் முகமூடி விற்பவருமான வெள்ளைச்சாமி, இவர்களுக்குப் பிறந்து ஐஏஎஸ் ஆவது என்ற கனவில் வலம்வரும் சிறுவன் அன்புக்கரசு ஐஏஎஸ், இவனது தங்கை தெய்வக் கனி, செல்லக்குட்டி கௌதம் (புஜ்ஜிமா) இந்தக் குடும்பத்தோடு வந்து தங்கி இன்ஸ்சூரன்ஸ் ஏஜண்ட்டாகப் பணிபுரியும் வெள்ளைச்சாமியின் சகோதரன் மீனாட்சி சுந்தரம் இத்தனை பேரை உள்ளடக்கிய குடும்பம் விராச்சிமலையில் புதிய வீடு ஒன்றிற்குக் குடிவருகிறது.

எதிர்வீட்டில் முத்தடக்கி அவரது கணவர் கணக்கு வாத்தியார் சொக்கலிங்கம் இவர்களது மகன் சிறுவன் ஜீவானந்தம் அவனது அக்கா பால்வாடி டீச்சர் சோபிக்கண்ணு ஆகியோர் வசித்துவருகின்றனர். வாத்தியார் பணியாற்றும் பள்ளியில் ஜீவாவோடு எப்போதும் ஒட்டிக்கொண்டு திரியும் குழந்தை வேல் (பக்கடா), (குட்டி) மணி இவர்கள் வகுப்பிலேயே படிக்கும் ஜீவாவின் அத்தை மகள் மனோன்மணி போன்றோர்தான் முக்கியக் கதைமாந்தர்கள்.

ஜீவாவின் பள்ளியில் புதிதாக வந்து சேர்ந்திருக்கும் அன்புக்கும் ஜீவாவுக்கும் பள்ளியில் ஏற்படும் உரசல் அதன் விளைவான மோதல், செல்லும் பாதையில் சந்தித்துக்கொள்ளும் மீனாட்சி, சோபிக்கிடையே ஏற்படும் பருவத்துப் பார்வை உரசல் விளைவிக்கும் காதல் ஆகியவை காரணமாகக் கதாபாத்திரங்களுக்கிடையே நிகழும் மாற்றங்களை ஒரு கல்வி ஆண்டில் நடக்கும் சம்பவங்களால் தொடுத்துத் திரைக்கதையாக்கியுள்ளார் இயக்குநர்.

ஜீவா குழுவினரின் அட்டகாசம் தாங்காமல் அவர்களைக் குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் பெரியவர்கள் சிலர் முறையிடுவதில் தொடங்குகிறது படம். இக்காட்சி சற்று மிகைப்படுத்தப்பட்ட ஒன்றுதான். ஆனால் குறும்புச் சம்பவங்கள் இயல்பானவையே. அன்பு அறிமுகமாகும் அந்தப் பாடல் காட்சி வழக்கமாக இளம் கதாநாயகர்கள் அறிமுகமாகையில் அவர்களது கதாநாயக அந்தஸ்தை உயர்த்துவதற்காக அவர்களை ஆஹா ஓஹோ என வர்ணித்து அமைக்கப்படுவது போலவே அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒளிந்துள்ள நையாண்டி நைச்சியமாக உள்ளது. வகுப்பில் லீடராக அன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் இடம்பெறும் பாடல் காட்சியிலும் இப்படிப்பட்ட நையாண்டி மூலம் நமக்குத் தொடர்பில்லாத அம்சங்களைக் கையாண்டு படமாக்கப்பட்டிருந்த சில பழைய பாடல் காட்சிகள் எள்ளி நகையாடப்பட்டிருக்கின்றன. இத்தகு எள்ளல்கள் படம் முழுக்கவே அறையில் சூழும் சாம்பிராணிப் புகையாக ஒன்றறக் கலந்துள்ளது. உதாரணமாகப் பள்ளிக்கு முதன்முதலில் வரும் அன்புவிடம் அவனது பெயரைக் கேட்க அவன், “அன்புக்கரசு ஐஏஎஸ்என்கிறான் உடனிருக்கும் குழந்தை வேல், “அன்புக்கரசுங்குறது உன்னோட பேரு ஐஏஎஸ்ஸுங்கிறது நீ வாங்குன பட்டமா... பட்டமா... பட்டமா...எனப் பல திசைகளில் திரும்பிப் பார்த்துக் கேட்கிறான். மற்றோரிடத்தில் தான் லீடராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தன்னை அனைவரும் கேப்டன் கேப்டன்என அழைக்க வேண்டும் என்கிறான் ஜீவா. தன்னை மறந்து சிரிக்க முடிகிறது இத்தகு காட்சிகளில்.

தமிழ்த் திரைப்படப் பெரியவர்களிடமும் திரைப்படங்களிலும் காணப்படும் குழந்தைத்தனங்களைச் சிறுவர்களைக்கொண்டே அம்பலப்படுத்தியிருக்கும் விதம் புதிதாக இருக்கிறது. இத்தகைய சுய எள்ளல்கள் ஆரோக்கியமான விஷயமே.

குடும்பம், சமூகம், அரசியல் சார்ந்து மேலோட்டமாகப் பல கேள்விகளைத் தொட்டுச் சென்றுள்ளார் இயக்குநர். ஆங்கில வழிப் பள்ளிகளின் சுரண்டலிலிருந்து தப்பிப்பதற்காகவே அன்புவை அரசுப்பள்ளிக்கு மாற்றுகிறார் வெள்ளைச்சாமி. வசதி வாய்ப்புகள் இருந்த போதும் தனது மகனைத் தன் பள்ளியிலேயே படிக்கவைத்து வருகிறார் சொக்கலிங்கம். பணத்திற்காகச் சுயநலக் கும்பலிடம் தங்களை ஒப்புவிக்கும் கூட்டத்தினரில் ஒருவனாகத்தான் குழந்தை வேல் காட்சியளிக்கிறான். ஜீவாவிடம் அவன் சேர்வதற்கு அவனது வறுமைச் சூழல்தான் காரணமாகிறது. தின்பண்டங்கள் வாங்கக்கூட வசதியற்ற, கிழிந்த கால்சட்டைகளோடு உலவும்படியான பள்ளிப்பருவம்தான் அவனுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதைக்கூட அவன் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறான். தனது சூழ்நிலையை நகைச்சுவையாக வெளிப்படுத்துகிறான். அவனது சூழ்நிலையில் அவன் படிப்பில் உயர்ந்து நின்றிருக்க வேண்டும். ஆனால் படிப்பில் அவன் ஜொலிக்கவில்லை. மாணவர்கள் அவனைப் பக்கடா என அழைப்பது ரசிக்கும்படியாகவே உள்ளது; ஆசிரியரும் அப்படி அழைப்பது உறுத்தலாக இருக்கிறது.



பெற்றோர்களின் நிரந்தர சண்டை காரணமாகக் குடும்பத்தில் அமைதியற்ற சூழல் இருந்தபோதும் படிப்பில் கெட்டிக்காரனாகவே இருக்கிறான் அன்பு. அமைதியான சூழல் அமையப்பெற்ற ஜீவா கல்வியில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளான். பெண்ணுன்னா அடிமையா எனச் சரிக்குச் சரி கேட்கும் போதும் பொண்ணுவின் வாழ்வில் நிம்மதிக்குலைவு நிறைந்து வழிகிறது. எந்தக் கேள்விகளுமேயற்ற முத்தடக்கி எப்போதும் கலகலவெனச் சிரித்தபடியே இருக்கிறாள்.

சைக்கிள் ஸ்லோ ரேஸில் கலந்துகொள்ள அன்புவிடம் சைக்கிள் இல்லை. மனம்வாடி தனியாகச் சென்று அழுகையில் குடும்பம் அவனைத் தேற்றுகிறது. பின்னணியில் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடல் ஒலிக்கிறது. குடும்பத்தினர் தந்த உற்சாகத்தால் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறுகிறான் அன்பு. தனது குடும்பத்தினர் தன்னை உற்சாகப்படுத்தாததாலேயே தான் வெற்றிபெற இயலவில்லை என்கிறான் ஜீவா.

இக்காட்சிகள் மூலம் தான் சொல்ல விரும்புவதைப் பார்வையாளனுக்கு உணர்த்திவிட முயல்கிறார் இயக்குநர். ஒரு படத்திலேயே அத்தனை விஷயங்களையும் பேச ஆசைப்பட்டவராய் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வசனங்கள் வழியே தனது குமுறல்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சமீப காலமாக அரிதாரம் பூசாத அசல் தமிழ் முகங்கள் திரையில் மலர்வது அதிகரித்துள்ளது. இதிலும் பக்கத்துவீட்டு மனிதர்கள் போன்றவர்களே அதிகம். மீனாட்சி, சோபி காதல் காட்சிகள் சில்லென்ற மண்பானைத் தண்ணீர்போல் புத்தம் புதுசாகக் குளிர்ச்சியாக மலர்ச்சியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. வித விதமான செல் போன் ரிங் டோன்கள் பொருத்தமாகக் கையாளப்பட்டிருப்பது உற்சாகம் தருவதாய் அமைந்துள்ளது. படத்தின் முற்பகுதி நீளமாக அமைக்கப்பட்டிருப்பதால் சற்று அலுப்பு ஏற்படுகிறது. ஆசிரியர் தினமோ குழந்தைகள் தினமோ குடியரசு தினமோ சுதந்திர தினமோ நினைவுகூரப்படாத போதும் ஏழைக் குழந்தைகள் கல்விக்கு உதவிய காமராஜரின் பிறந்த தினமான ஜூலை 15 நினைவுகூரப்பட்டுள்ளது படத்தில். குழந்தைகள் உலகில் பழிவாங்க எடுக்கப்படும் ஆயுதங்களாக் கருநாக்கு, காசுவெட்டிப்போடுதல், தேன் போன்றவை பயன்பட்டிருப்பது அழகு. ஒற்றைக் கால் செருப்பைத் தவறவிட்டு அதை எடுக்கப்போகும் போது அந்தத் திருப்பத்தில் பேருந்து விர்ரென விரையும் ஷாட், புஜ்ஜிமா குத்துப் பாட்டை வரி மாறாமல் பாடுவது, பேனாவின் திருகைக் கழற்றி மை கடன் வாங்கும் ஷாட் போன்ற அனுபவம் தொடர்பான சம்பவக் காட்சிகளில் பலம் பெற்றிருக்கும் இயக்குநர் பிரச்சினைகளின் தீர்வுகளை நோக்கி நகர்கையில் தடுமாறியுள்ளார். பாராட்டுகள் குழந்தைகளை ஊக்குவிக்கும் என்பது உண்மைதான் ஆனால் பிற்பகுதியில் பாஸிடிவ் பாயிண்ட்களின் அதிகப்படியான ஆதிக்கம் காரணமாகத் தான் தப்பிக்க முயன்ற சினிமாத்தனத்திற்குள் தானும் தள்ளப்பட்டிருக்கிறார் பாண்டிராஜ். மருத்துவமனைக் காட்சியில் அன்புவை நினைவுக்குக் கொண்டுவர அனைவரும் கைதட்டி ஆரவாரமிடுகையில் அந்த மருத்துவர் குதிரை ரேஸில் கத்துவதுபோல கமான் கமான் என்பது அபத்தம். அக்காட்சியே படத்தின் திருஷ்டிப் பொட்டான காட்சிதான். சிறுசிறு குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் இப்படியொரு படத்தை முதல் படமாக எடுத்த இயக்குநரும் வாய்ப்பளித்த தயாரிப்பாளரும் தமிழ்த் திரைப்படப் பாதையில் சிறு திருப்பத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர் என்பதில் மிகையில்லை.

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

மனமே மயங்காதே

நீண்ட நாட்களுக்குப் பின்பு மீண்டும் ஒரு பதிவிடல். இதற்கு முந்தைய பதிவிடல் ஜூனில் நிகழ்ந்துள்ளது. ஏன் இவ்வளவு இடைவெளி என யாரும் கேட்கப்போவதில்லை, ஆஹா மறுபடியும் ஆரம்பிச்சிட்டானா என்று தான் நினைப்பீர்கள் ஆனாலும் என்ன செய்ய இந்தப் பாழாய்ப்போன மனம் இருக்கிறதே அது படுத்தும்பாடு கொஞ்சம்கூட வெட்கமே கிடையாது அதற்கு. அது தான் என்னிடம் சொன்னது எழுது எழுது என. எழுதுவதற்கு எதுவுமே இல்லையே எதை எழுத என அதனிடமே கேட்டேன். அது என்னைப் பார்த்து நக்கலாகச் சிரித்தது. உங்களுக்குப் புரிந்தது போலவே எனக்கும் புரிந்தது. நீங்கள் நினைத்தது சரிதான். அதையே தான் அதுவும் சொன்னது. என்னமோ இவ்வளவு நாளா ரொம்ப நல்ல சிந்தனைகளையும் மிக சுவாரசியமான பதிவுகளையும் எழுதிக்குவித்தது போல சலிச்சுக்கிடாத தம்பி. சிறப்பாக நீ இயங்குவதாக தப்பித்தவறி கூட எண்ணிவிடாதே. ஏதோ ஒரு வகையில் நீ இயங்க வேண்டும் என்பதற்காகத் தான் அப்படிச் சொன்னேன் என்ற மனத்திடம் நான் என்ன பேச முடியும்?

ஆவி ஜோசியம் பார்க்கும் போது, வட்ட வடிவமான காசையோ டம்பளரையோ நாம் நகர்த்த வேண்டியதில்லை அதுவாக ஒரு பக்கம் போகும். அதைப் போல் தான் எழுத ஆரம்பித்த உடனேயே எழுத்துகளெல்லாம் அவை விரும்பிய படி அவற்றை அமைத்துக்கொள்கின்றன. ஆசை ஆசையாய் மகனின் தலையில் எண்ணெய் தேய்க்க அம்மா ஓடோடி வருவாள் போக்கிரிப் பிள்ளையோ அங்கேயும் இங்கேயும் ஓடி அவளை அலைக்கழிக்க ஓட்டத்தில் எண்ணெய் எல்லாம் சிந்திவிடவே அகப்படும் மகனின் தலையில் வெற்றுக் கரங்களை ஆவி பறக்க தேய்க்கும் தாய் போல எழுத நினைத்தவுடன் மனத்தில் ஏதேதோ வரிகள் அங்கும் இங்கும் ‘சர் சர்’ரென நடைபோட அவற்றை இழுத்துப் பிடித்து நிறுத்திவிட்டால் போதும் சமாளித்துக்கொள்ளலாம் என நினைத்தேன் ஆனால் அந்தத் தாய் போல நானும் ஏமாந்துவிட்டேன். ஒரு எழவும் இந்தப் பதிவிலும் கிடையாது என்பதைச் சொல்ல வைத்து விட்டது அந்த நல்லவன் வேஷம் போடும் மனம்.


விடையற்ற கேள்விகள் ஏராளமாக நிரம்பி வழிகின்றன எனது மேசையின் இழுப்பறையில். தெரிகிறதோ தெரியவில்லையோ தேர்வு நேரம் முடியும் வரை பேனாவை கன்னத்திலும் டெஸ்க்கிலும் தட்டியபடி யோசிப்பதாக பாவனை புரியும் அப்பாவி/அடப்பாவி மாணவனைப் போல் அந்தக் கேள்விகளுக்கு விடை தேடி நான் யோசிப்பேன்/யோசிப்பது போல் பாவனை புரிவேன். எதன் மீதும் யார் மீதும் மரியாதையோ நம்பிக்கையோ அற்ற சபிக்கப்பட்ட வாழ்க்கை எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. எனது துயரங்கள் எனது இன்பங்கள் எல்லாவற்றையும் நான் ஒருவன் மாத்திரமே அனுபவிக்கிறேன். அது ஒரு வகையில் பேராசை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் யாரையும் என் வீட்டுக்கு வர விடாத பாம்பொன்று என் வீட்டைக் காவல் காக்கிறது. என்னால் அதைக் கொல்ல முடியாது, ஏனெனில் அதன் நோக்கம் நூறு சதவிகிதம் என் நலம். அதை மீறி யார் அங்கே வரப்போகிறார்கள். அப்படி வந்தும் அவர்கள் சாதிக்கப்போவதென்ன?


நாம் சரியென நினைக்கும் ஒன்றைச் செய்ய முடியாதவரை தவறு என நினைக்கும் ஒன்றைச் செய்யும் வரை ஏதோ ஒரு இயக்கத்தின் கட்டளைப்படிதானே நாம் செயல்படுகிறோம். அந்த இயக்கம் எது அதன் பெயர் என்ன? யார் யாரோ என்ன என்னவோ சொல்கிறார்கள் எதுவுமே புரியவில்லை. இரண்டும் மூன்றும் ஐந்து. மிகத் தெளிவாகப் புரிகிறது. அப்படிப் புரிய வேண்டும் வாழ்க்கையும் என ஆசைப்படுகிறது மனம். பேராசைதான் அதற்கு. ஆனால் எத்தனைமுறை போட்டு பார்த்தாலும், மிகக் கவனமாய் வகைகளை எழுதிப் பார்த்தாலும் விடை மட்டும் எப்போது தவறாகவே வருகிறது. சற்றும் மனம் தளராத மனமோ மீண்டும் மீண்டும் போட்டு முட்டி முட்டி பாடாய்ப்படுகிறது. அவஸ்தைதான். தொடர்ந்த அவஸ்தையின் காரணமாக அவஸ்தை இல்லாவிடின் ஏதோ ஒன்றை இழந்ததுபோல் ஆகிறது. மகிழ்ச்சியும் துக்கமும் ஒன்றென்பதை ஏன் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. உணர்வென்று பார்த்தால் சந்திப்பும் பிரிவும் ஒன்றுதானே. ஆனால் எப்போதும் இன்பம் மட்டுமே ஏன் எதிர்பார்க்கிறோம். வெற்றிக்கான வரிசை மிக நீளமாக இருக்கும் போது ஏன் எல்லோரும் அங்கேயே குவிகிறார்கள்? தத்துவமும் எதார்த்தமும் ஏன் சந்தித்துக்கொள்வதில்லை, ஒன்றையொன்று சந்திக்காமலே போய்விடுமோ?


வாலற்ற நாய்களுக்கு எலும்புத் துண்டுகள்கூடக் கிடைக்கப்போவதில்லை என்பது தெரிந்தும் வாலோடு சேர்த்து இரும்புக்கம்பியைக் கட்டிக்கொண்டுவிட்ட மனத்தை என்ன செய்வது? திடும் திடுமென எங்கிருந்தோ எங்கேயோ தாவும் மனத்தை அது இஷ்டத்திற்கு விடுவதா கட்டி நிறுத்துவதா? சாக்கடையில் உருண்டு புரண்டு எழும் மனம் அடுத்த நொடி சந்தனம் கம கமக்க சபையில் வந்து அமர்ந்துவிடுகிறது. அடிக்க ஓங்கும் கை அணைக்கத்தானே முடியும். இப்படித் தான் ஆகிறது எப்போதும். மீண்டும் ஒரு நாள் சந்திக்கிறேன் இப்போது விடை பெறுகிறேன். தொடர்ந்து சட்டசபைக்குப் போகாவிடில் பதவி இழக்க நேரிடும் என்பதால் கையெழுத்துப் போட்டுவிட்டு வராண்டாவில் சற்று அமர்ந்துவிட்டுப் போகும் எம்எல்ஏ போல நீண்ட இடைவெளிபோக்க ஒரு சிறு பதிவு செய்தாகிவிட்டது, இனி ஜென்மம் சாபல்யமாகிவிடும்.

வியாழன், ஜூலை 01, 2010

வேலைக்காரிகளின் புத்தகம் (கட்டுரைகள்)


தேசத்துரோகி என்னும் சிறுகதைத் தொகுப்பு, கொரில்லா, ம் போன்ற நாவல்களைத் தொடர்ந்து ஷோபா சக்தி எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பு வேலைக்காரிகளின் புத்தகம். இலங்கையின் அரசியல் சூழலைத் தனது எழுத்துக்கள் மூலம் முற்றிலும் புதிதான கோணத்தில் அணுகுகிறார். வெகுஜன ஊடகங்களால் அறியப்பட்ட இலங்கையின் சூழல் மெல்ல மெல்ல மறைந்து இவர் எழுத்துகளால் உருவான இலங்கையின் சூழலை மனம் உணரும்போது ஒருவித அதிர்ச்சி பரவுகிறது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என எல்லா வகையான மனிதர்கள் மேலும் மனித நேயமற்றுப் பாய்ந்த குண்டுகள் சிங்கள ராணுவம், விடுதலை இயக்கங்கள், அமைதிக்கெனச் சென்ற ராணுவப்படை போன்ற எல்லா இடங்களிலிருந்தும் புறப்பட்டுச் சென்றிருக்கின்றன.

தெரிவிக்க வேண்டிய செய்திகளைப் பாசாங்குகளற்றுத் துணிவுடனும் தெளிவுடனும் எழுதிச் செல்லும் ஷோபா சக்தியின் எழுத்துகளில் அமைதியை எதிர்நோக்கும் கலகக்காரனின் அறை கூவலே மேலோங்கி ஒலிக்கிறது. பொது ஊடகக் கருத்துகளோடு பொருந்தி நிற்கும் மனம் இவருடைய கட்டுரையைப் படித்தபின் இலங்கை பற்றிய தன் சித்திரத்தை நிச்சயமாக மாற்றிக் கொள்ளும். தீவிர அரசியல் கட்டுரை, கலை இலக்கிய அலசலை அடிப்படையாகக்கொண்டு அரசியலைத் தீவிரமாகப் பேசும் கட்டுரை என ஒன்று மாற்றி ஒன்று அமைந்த எட்டுக் கட்டுரைகள் கொண்ட தொகுப்பிது. 

தனது சொந்த கிராமமான அல்லைப் பிட்டிக்கு நேர்ந்த அவலத்தில் ஆரம்பமாகும் முதல் கட்டுரை முதல் புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளர் கே.எஸ். ராஜாவின் மரணம் பற்றிய செய்தியோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தில்தான் இருந்ததைப் போகிற போக்கில் தெரிவிக்கும் கடைசிக் கட்டுரைவரை பக்கத்திற்குப் பக்கம் இலங்கை மக்களின் குருதிக் கறையே தென்படுகிறது. ஆணிவேர் திரைப்படத்தைக் கலைப் பொக்கிஷமாகக் கருதுவோரின் தலையில் குட்டிப் புரஹந்தகளுவர, இர மத்திமய போன்ற சிங்களக் கலைப் படைப்புகள் குறித்து விரிவாக அலசியுள்ளார். கலை மற்றும் இலக்கியப் படைப்புகள் துதிகளாவதையும் பிரச்சாரப் பிரதிகளாகச் சுருங்கிப்போவதையும் கடுமையாகச் சாடுகிறார். 

இத்தொகுப்பின் பிரதானமானது அக்டோபர் எழுச்சி, சாதியொழிப்புப் போராட்டம், சாதியம் குறித்து அலசும் நீண்ட கட்டுரையே. இதில் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களின் வளர்ச்சி பற்றி ஆதாரங்களோடு விளக்குகிறார். யாழ் நகர மேயரை நூலகத்தைத் திறக்கவிடாமல் செய்தது, யாழ்ப்பாண மத்தியக் கல்லூரியின் முதல்வர் கணபதி இராஜதுரையைக் கொலைசெய்தது என்பது போன்ற பல சான்றுகள் மூலம் விடுதலைப் புலிகளின் சாதிய ஒடுக்குமுறையை எடுத்துக் கூறுகிறார்.
1947இல் ஜோன் ஜெனே எழுதிய Les Bonnes (பணிப்பெண்கள்) நாடகம் பற்றிய கட்டுரையில் இந்நாடகம் வேலைக்காரிகளின் புத்தகமாகக் கருதப்படும்படியான ஒன்று என்கிறார். இது எதிர்த்துக் கேட்க அகத்தில் தீராத விழைவிருந்தும் ஒத்துழைக்க மறுக்கும் புறச்சூழல்களோடு போராடும் வேலைக்கார மனங்களில் புதைந்துகிடக்கும் கலகச் சக்திகளை இயன்ற அளவு ஒன்றிணைக்கும் புத்தகம். எனவே, வேலைக்காரிகளின் புத்தகம் என்பது இக்கட்டுரைத் தொகுப்புக்கான தலைப்பாகியிருக்கக்கூடும். 

ஐ.நா. சபையின் சிறப்பு விசாரணையாளர் பிலிப் அல்ஸ்டனின் அறிக்கையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரையில் இலங்கையில் 2002 யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்பு நடந்த அரசியல் படுகொலையின் குத்துமதிப்பான விவரக் கொத்தை அது தந்திருப்பதாக எள்ளல் தொனிக்கத் தெரிவிக்கிறார். இடதுசாரி, முஸ்லிம் அரசியல் தலைமைகளின் குரல் அறிக்கையில் தவிர்க்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். புலிகள் தனி அரசாங்கம் நடத்துவதைப் போலத் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களைக் கடுமையாக மறுக்கிறார். அரசு, புலிகள் இரண்டின் மனித உரிமை மீறல்களையும் விவரமாகக் கூறி இருதரப்பும் சர்வதேசக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்று பிலிப் கூறுவதன் உட்பொருளை உணர்த்துகிறார் ஷோபா சக்தி. 

தம்பி விமரிசனம் வழியாகத் திரைத் துறையின் மோகத்தால் பித்துப்பிடித்து அலைவதையும் புரட்சிக்குரியவர்களின் படங்களையும் மேற்கோளையும் காட்டுவதால் மட்டுமே ஒரு படம் புரட்சிப் படம் என நம்பும் அரைவேக்காட்டுத் தனத்தையும் தனக்கே உரிய நக்கலுடன் சாடுகிறார். சி. புஷ்பராஜாவின் நூலை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரையில் புலிகள் மற்றும் புலி ஆதரவாளர் தவிர்த்த மற்றொரு வரலாறு என்னும் வகையில் நூலை வரவேற்கிறார். ஈழப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கைப் புலிகளின் வரலாறு இருட்டடிப்புச் செய்திருப்பதைக் குறிப்பிடுகிறார். 

மொத்தத்தில், தமிழர், சிங்களர் என்னும் வேறுபாடின்றிப் பயங்கரவாதத்திற்கும் வன்முறைக்கும் பலியாகும் அப்பாவி மக்களின் உயிரிழப்பு குறித்த கவலையும் கோபமும் வெளிப்படுகின்றன, கட்டுரைகளில். புலிகளின் பாசிசச் செயல்பாடுகள், அரச பயங்கரவாதம், ஏகாதியபத்திய எதிர்ப்பு இவையனைத்துக்கும் எதிராகப் போராட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறார். தலித்துகள், முஸ்லிம்கள் இருவருக்காகவும் பெருமளவில் வாதாடுகிறார். கேள்விகளற்ற விசுவாசங்கள்மீது கட்டப்பட்ட பலமான இயக்கமான விடுதலைப் புலிகளின் அடித்தளத்தையே ஆட்டங்காணச் செய்யும் கேள்விகளை ஆதாரங்களுடன் அடுக்கியுள்ளார். விசுவாசங்களுக்குப் பழகிய மனத்தின் எதிர்ப்பையும் கலகக்கார மனத்தின் பெருத்த ஆதரவையும் ஒரே சமயத்தில் ஈட்டிக்கொள்ளும் புத்தகம் இது.

வெளியீடு:
கருப்புப் பிரதிகள்
45ஏ, இஸ்மாயில் மைதானம்
லாயிட்ஸ் சாலை, சென்னை 5
முதல் பதிப்பு: ஜனவரி 2007.
பக். 144. ரூ. 64.99


காலச்சுவடு 2007 செப்டம்பர் இதழில் வெளியானது.  

வியாழன், ஜூன் 24, 2010

ராவணன்

சில படங்களை அதிகமாக எதிர்பார்த்துப் போவோம். ஏமாற்றத்தோடு திரும்புவோம். எதை எதிர்பார்த்தோம் எனக் கேட்டால் சொல்லத் தெரியாது; ஆனால் ஏமாற்றம் என்பதை மட்டும் உணரமுடியும். அதிர்ஷ்டவசமாக சில படங்கள் எதிர்பார்த்த மாதிரியே இருக்கும். அதிலொன்று ராவணன். படம் வெளியான அன்று, படம் பார்த்த ஆர்வத்தில் சிலர் படத்தை ஆஹோ ஓஹோ என்றனர். எனக்கென்னவோ படத்தின் முன்னோட்டங்களைப் பார்த்து பெரிய நம்பிக்கை வரவில்லை. ஆனால் படம் நன்றாக இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்களே எனக் குழப்பமாக இருந்தது. அக்குழப்பத்தோடேயே படம் பார்க்கச் சென்றேன். மணி சார் அவரது ரசிகனான என்னை ஏமாற்றவில்லை. நான் யூகித்தது சரியாகவே இருந்தது. திருப்தியோடு தியேட்டரைவிட்டு வெளியே வந்தேன். எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்த படம் பார்த்தால் திருப்தியாகத் தானே இருக்கும்.
இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க கற்பனையே. உயிருள்ள அல்லது மாண்டுவிட்ட யாரையும் குறிப்பவை அல்ல என முதலில் எச்சரித்துவிடுகிறார் சார். ஆனால் கதை என யார் பெயரும் டைட்டில் இடம்பெறவில்லை. ஆனால் அதைப் பற்றி நாம் கேள்வி கேட்கக்கூடாது. ஏனெனில் அவர் விவரம் தெரியாதவரல்ல. மணி சார் என்றால் சும்மாவா. அவரது ஒவ்வொரு அசைவுக்கும் ஏதாவது பொருள் இருக்கும். நமக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம். கிட்டத்தட்ட பதினான்கு கூட்டல் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முந்தி அதாவது 1991, 1992 களில் சார் இயக்கிய தளபதி, ரோஜா ஆகிய படங்களை அப்படியே உல்டாவாக்கி ஒரு புதுப் படமாக எடுத்தால் நமக்கு சப்பென்று போய்விடும். ஆனால் சாருக்கு வயதாகிவிட்டது. டிவிடியும் எவ்வளவு நாளைக்குத் தான் கைகொடுக்கும். ஆனால் படம் எடுத்தாக வேண்டுமே. மறுபடி மறுபடி யோசித்தாலும் அந்நியப் படங்களின் காட்சிகள் தாம் ஞாபகம் வருகிறதே ஒழிய புதிதாய் ஒரு காட்சிகூடத் தோன்றவில்லை. என்ன செய்வார் சார்?
படித்த படிப்பு எந்த நேரத்திலும் கைகொடுக்காமல் போகாது என்பதற்கு சார் உதாரணம். இவரது எம்பிஏ படிப்பு கைகொடுத்துவிட்டது. ஆனாலும் அதுவும் கொஞ்சம் பழைய உத்திதான் ஆனால் வேறு வழி இல்லை. அதே தளபதி, ரோஜாவில் பயன்படுத்திய உத்திதான். புராண முலாம் பூசுவதுதான். சாருக்கு நன்றாகத் தெரியும் அந்தப் பூச்சு இல்லை என்றால் இது விலைபோகாது என. எனவே சாதுர்யமாக ராமன் ராவணன் சீதா என செய்திகளை ஊடகங்களில் கசியவிட்டார். இப்போது அவரது வேலை சுலபம். படம் பார்ப்பவன் ராமன் யார் ராவணன் யார் கும்பகர்ணன் யார் சூர்ப்பனகை யார் என தன் அறிவைச் சோதிப்பதில் ஆர்வத்தோடு இருக்கும்போது சார் படத்தை அழகாக நகர்த்திச்சென்றுவிடலாமே. எனவே தான் கார்த்திக் கதாபாத்திரத்தை வேண்டுமென்றே மரத்திற்கு மரம் தாவவிட்டிருக்கிறார். போதாக்குறைக்கு வீரப்பன் மாவோயிஸ்ட் சங்கதிகள் வேறு. அவருக்குத் தெரியாதா என்ன, எங்கே அடித்தால் எங்கே விழுவான் ரசிகன் என. எவ்வளவோ ஆண்டு காலமாக புத்திசாலித்தனமாக மக்களை ஏமாற்றிய சாதிசார் மூளையின் மிச்ச சொச்சம் இல்லாமலா போய்விடும். எனவேதான் எள்ளளவும் உள் அடுக்குகளற்ற தட்டையான படமொன்றை ஏதோ ஒன்று இருப்பதுபோல் பம்மாத்து காட்டுகிறார் சார். மற்றபடி குறியீடு அது இதுவென்ற புண்ணாக்குகள் எவையுமில்லை இப்படத்தில்.
அந்நியச் சரக்கின்மீது மேட் இன் இந்தியா அச்சிடுவதில் சமர்த்தர் சார். சொந்தமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக உற்பத்தி செய்துள்ளார் சார் அதை மறுக்க முடியாது. அந்த ஏழு நாட்களை உல்டா பண்ணி மவுன ராகம் கொடுத்தார். அலைபாயுதேவின் திரைக்கதை அமைப்பு அப்படியே மவுனகீதங்களை ஞாபகமூட்டும். ஆனாலும் சாரின்மீது நமக்கு மரியாதை இருந்தது. என்னதான் காப்பி என்றாலும் ரசிக்கும்படி தருவார். ஆனால் சமீப காலமாக அந்த நம்பிக்கையை அவர் தகர்த்தெறிந்துவிட்டார். எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் ராவணன் மூலமாக நிர்மூலமாக்கிவிட்டார்.படத்தில் நித்தி பக்தை மட்டுமே கைதட்டல் வாங்குகிறார். அதற்காகவும் மணி சார் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது அது தம்பி நித்தியின் கைங்கர்யம். வெறுமனே தொழில்நுட்பங்களை வைத்து மட்டும் மிரட்டமுடியாது சார், புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எந்தத் தொழில்நுட்பத்தை நம்புகிறீர்களோ அந்த தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியே உங்களை அம்பலப்படுத்திவிடுமே சார். அதை ஏன் நீங்கள் யோசிக்கவே இல்லை. யோசித்திருப்பீர்கள், யார் நம்மைக் கேள்விகேட்பார்கள் என்ற தைரியமா ரசிகன் முட்டாள்தானே என்ற எண்ணமா எது உங்கள் யோசனையை முனை மழுங்கவைத்தது? முன்பெல்லாம் உங்களுக்கு மட்டுமே எட்டும் உயரத்தில் இருந்த உலகப் பட டிவிடிகள் இப்போது கண்ட இடங்களிலும் சீரழிந்துகிடக்கிறதே. இணையதளங்களிலோ கேட்கவேண்டாம். உலகத்தின் நல்ல படங்களை எல்லாம் உங்களது படங்களை வாய்பிளந்து பார்த்த அந்த சுந்தரபாண்டியபுரத்துக்கார ரசிகனும்கூட பார்த்துவிடுகிறான். எனவே உங்களது ரீயூசபிள் மில்க் ஸ்வீட் சமாச்சாரம் தொடர்ந்து எடுபடாது. அரசியல்வாதிகள் நோன்புக் கஞ்சி குடித்த மாதிரி இருக்கிறது நீங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் குறித்து பேசுவது. உங்கள் மனையாட்டி சுஹாசினி தயவால் எப்போதோ இறந்துபோன சுஜாதாவை நல்ல வசனகர்த்தா என நினைக்கவேண்டி உள்ளது.
மணி ரத்னம் சார் நீங்க ரொம்ப நல்லவர். அமைதியானவர். உங்களுக்கு ஓய்வு தேவை. நிறைய உழைச்சிட்டீங்க. ஓய்வெடுங்க. அதச் சொல்ல நீ யாருடான்னு கேட்டீங்கன்னா நல்ல படமெடுங்க, ப்ளீஸ் டோண்ட் ட்ரை டூ டேக் த ஜெராக்ஸ் காப்பிஸ். நிறைய இளைஞர்கள் படம் பண்ண வாய்ப்பில்லாம அலைஞ்சுகிட்டு இருக்காங்க. அவர்களில் பாதிப்பேருக்கும் மேல மணிசார் மாதிரி வர வேண்டுமென கனவு காண்கிறார்கள். தயவுசெய்து அவர்கள் கனவைக் கலைக்காதீர்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில் இனி படமெடுக்கப் போவதில்லையென்றும் கொடைக்கானலிலோ ஊட்டியிலோ போய் கோல்ஃப் விளையாடப் போவதாகவும் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல முடிவு. இப்படமெடுக்கும் முன்பே செய்திருக்கலாம். பரவாயில்லை. இப்போதாவது அதை செயல்படுத்துங்கள். இது கடைசி தேர்தல் இது கடைசி தேர்தல் எனக் கருணாநிதி போலோ இது கடைசிப் படம் இது கடைசிப் படமென ரஜினி போலோ பூச்சாண்டி காட்டிவிடாதீர்கள். உங்கள் மீது இன்னும் மரியாதை இருக்கிறது. சற்று காட்டமாக இருந்தாலும் உங்களை அணு அணுவாக ரசித்தவனுக்கு அந்த உரிமை கூட இல்லையா என்ன. இதுகூட புரியாதவரா சார் நீங்கள். அப்படியே உங்களுக்குக் கோபம் வந்தால் ராவணனில் ராமரின் மன்னிக்கவும் தேவின் வசனம் ஒன்று குறிப்பிடுகிறேன்: உண்மை சில சமயம் கேவலமாகத் தான் காதில் விழும்
நன்றி. வணக்கம்.

வெள்ளி, ஜூன் 18, 2010

சூப்பர் சிங்கர் ஜூனியர் 2

மலையாளத் தொண்டையிலிருந்து
புறப்பட்டு வரும்
தமிழகத்தின் செல்லக் குரல்


ஓராண்டு காலமாக தமிழக மத்திய தரக் குடும்பத் தாய்மார்களும் குழந்தைகளும் குடும்பத்தினரும் வாரத்தில் நான்கு நாட்கள் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கண்டுகழித்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 தமிழகத்தின் செல்லக் குரலாக ஒரு மலையாளக் குரலைத் தேர்ந்தெடுத்து ஓய்ந்துவிட்டது. இசைக்கு மொழி இல்லை அது இல்லை. இது இல்லை. எதுவுமே இல்லை. மேலோட்டமாக பார்த்தால் திறமை உள்ளவர்களுக்குத் தானே பரிசு கிடைக்கும் என்று எளிதாகக் கூறிவிடலாம். ஆனால் எல்லாவற்றையும் நாம் எளிதாக எடுத்துக்கொள்வதால் தான் வர்றவன் போறவன் எல்லாம் தமிழனின் தலையில் மிளகாய் அரைக்கிறான். வாரத்தில் நான்கு நாட்கள் சராசரியாக சுமார் ஆறு மணி நேரம் மொத்தம் 52 வாரம் மொத்தத்தில் சுமார் 310 மணி நேரம் தமிழகக் குடும்பத்தினர் பார்த்த நிகழ்ச்சி இது. இதன் மூலம் தொலைக்காட்சி அலைவரிசைக்குக் கிடைத்த விளம்பர வருவாய் எல்லாம் தமிழனின் இளிச்சவாய்த்தனத்தால் அவனது பையிலிருந்து மறைமுகமாக எடுக்கப்பட்டது. அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு இவன் தனது கைபேசியிலிருந்து ஒரு குறுஞ்செய்திக்கு சுமார் மூன்று ரூபாய் செலவழிப்பான்.

இங்கே இப்படி நடப்பது போல் ஒரு மலையாள அலைவரிசையில் நடத்தப்படும் போட்டிகளில் தமிழனுக்கு பரிசு கிடைக்கிறதா எனத் தெரியவில்லை. அங்கே அதை அனுமதிப்பார்களா? அம்மையப்பனிடம் இருந்து ஒரு பழம் கிடைக்காத கோபத்தில் தனியாய்ச் சென்று அமர்ந்தவன் முருகன். ஒரு பழம் தானே அது என்ன பெரிய விஷயமா என இறைவனே நினைக்கவில்லை. எனவே ஒரு அப்பாவி மனிதனால் இதை எப்படி எளிதாக எடுத்துக்கொள்ள இயலும். இத்தகைய நிகழ்ச்சிகளை ஏன் தமிழர்கள் நிராகரிக்கக் கூடாது. ரிமோட் நம் கையில் இருந்தும் நாம் ஏன் மற்றொருவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். விழித்தெழவே மாட்டோமா? தமிழனின் தலையில் சந்தனம் தடவவேபடாதா?

புதன், ஜூன் 16, 2010

டாஸ்மாக் பாரில் சிதறிக் கிடக்கும் சொற்கள்


எச்சரிக்கை: குடி குடியைக் கெடுக்கும். (இது ஒரு சிலேடை) இந்தப் பதிவைப் படிப்பது நேரத்தைக் கெடுக்கும். எச்சரிக்கை பண்ணிட்டேன் இனி உங்கள் பாடு.

எவண்டா கண்டுபிடிச்சான் இந்தக் கருமத்த. 

தலைப்பை வைத்துத் தப்பாப் புரிஞ்சுக்காதீங்க. தம்பி வேற எதையோ சொல்லப்போறான். இல்ல கொல்லப்போறான். 

எதோ செஞ்சுட்டுப் போட்டும் விடுடா. 

டேய் நான் கேட்ட கேள்விக்குப் பதிலச் சொல்லுடா. 

என்னடா கேட்ட? 

அட கருமம் பிடிச்சவன மொத வரியப் படிடா. 

அதுவா கவித்துவமா எழுதுறதா நினைச்சு உளறி வச்சிருக்க. 

அட எரும அது தலைப்புடா அதையாடா வாசிக்கச் சொன்னேன் கூறுகெட்டவனே நானே திருப்பியும் கேட்குறேன். எவண்டா கண்டுபிடிச்சான் இந்தக் கருமத்த? 

டேய் கொல்லாதடா நீதானடா கேக்குற நீதாண்டா பதிலையும் சொல்லணும். 

ஏன் நீ சொல்லு... இல்ல அவனச் சொல்லச் சொல்லு. 

எவன எவனும் இங்க இல்ல. நீயே சொல்லு. 

அது தாண்டா கல்யாணத்த...

அது ரொம்பப் புனிதமான விஷயம்டா. 

என்ன பெரிய புனிதம் புண்ணாக்கு. 

ஒருதருக்கு ஒருத்தரு ஆறுதலா வாழ்க்கையின் கடைசி வரைக்கும் ஒரு மாரல் சப்போர்ட்டா... 

ஏய் ஸ்டாப். இந்த வெங்காயம் எல்லாம் வேண்டாம். காசு கொடுத்து பொம்பளைட்ட போனா போலீஸு புடிச்சிக்கும். ஆனா எல்லாருமா சேர்ந்து ஒரே வீட்டுக்குள்ள ஆம்பளையும் பொம்பளையும் அடைச்சு வப்பாங்க. ஹால்ல யார் இருந்தாலும் கவலைப்படாம பெட்ரூம்ல கூத்தடிக்கலாம். அது தான. 

டேய் இந்த மாதிரில்லாம் பேசி பேசி வீணாப் போயிராத. இதெல்லாம் நாங்க புதுமைப்பித்தனிலேயே படிச்சிட்டோம். ஒழுங்கா காலகாலத்துல கல்யாணம் பண்ணாட்டி வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வராது. மனசுக்குப் பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்ந்து பாரு அப்ப புரியும் ஒனக்கு. ஒனக்கு ஒண்ணுனா அவ துடிப்பா. உம்மேல பாசத்தக் கொட்டுவா. 

அதுலயே போட்டு மூடிடுவாடா பேமாணி. பாசமாம் மாரல் சப்போர்ட்டாம். டேய் இப்படித்தாண்டா நெறையப் பேரு மண்ணாப்போயிருக்கான். நீ சொல்ற மாதிரி பாசம் பந்தம் நட்பு உறவு எல்லா எழவும் வெறும் கால்குலேஷன் தானடா? அதத் தாண்டி ஒன்னும் இல்லடா. அது உனக்குப் புரியல. காதல் கல்யாணம் பொண்டாட்டி புள்ள குடும்பம் அது இது எல்லாமே உன்னோட சந்தோஷத்தைக் குழி தோண்டிப் பொதச்சிரும்டா. ஆனா ராஸ்கல்ஸ் ரொம்ப ப்ளான் பண்ணி இத கட்டமைச்சிருக்கானுகடா. கல்யாணம் பண்ணிய உடனே எல்லாரும் ஒட்டுமொத்தமா அதுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பிச்சிட்றீங்களே. 

பெற்றோர்களுக்கு இது தானடா சந்தோஷம். 

அப்ப கல்யாணம் பண்ணிட்டா பெற்றோர்களோட எல்லாப் பிரச்சினையும் தீந்திருமா? 

அப்படி இல்லடா அவங்களுக்குன்னு ஒரு கடமை இருக்குல்லா. அத அவங்க நிறைவேத்தாட்டி அவங்க மனசு எவ்வளவு சங்கடப்படும் அதயும் நெனச்சிப்பாருடா.

இவ்வளவு பேசுறிய கல்யாணமே பண்ணாம இப்ப நீ என்ன பெரிய சந்தோஷத்தக் கண்டுட்ட. 

மச்சான் கோவப்படாதடா கல்யாணம் பண்ணின நீயும் நானும் ஒரே பார்ல தானடா சரக்க மாஞ்சு மாஞ்சு ஊத்திட்டிருக்கோம். பெரிய காந்தி பேரன் மாதிரி போதிக்கிற. 

டேய் இதுக்கெல்லாம் எதுக்குடா காந்தி பேர இழுக்குற அவரு மகான். 

ஓஹோ. அப்ப 23வயசுலய நாட்டுக்காக செத்த பகத்சிங் உடம்புரீதியான பிரச்சினைகளோட கடைசிவரை நாட்டுக்காக போராடின நேதாஜி இவங்கலாம் மகான் இல்லயா. நல்லவனா இருக்கிறதவிட நல்லவனா காட்டிக்கிட்றது முக்கியம் இல்லையா? 

டேய் நான் என்ன சொன்னா நீ எப்படிப் புரிஞ்சுக்கிற... உனக்கு ஓவரா ஆயிட்டு. வா கிளம்புவோம். 

சரி மாப்ள தெளிவாவே கேட்கிறேன். எனக்கு கல்யாணம் ஆகல மாரல் சப்போர்ட்டுக்கு யாரும் இல்ல நான் தண்ணியடிச்சா அதுல ஒரு நியாயம் இருக்கு. உனக்கு அழகான பொண்டாட்டி புள்ள எல்லாமே இருக்கத்தானடா செய்யுது பொறகு ஏண்டா நீயும் இங்க வந்து கூத்தடிக்கிற. 

கல்யாணத்துல பிரச்சினை இருக்குங்குறதுக்காக எல்லாரும் உன்னமாதிரியே வெட்டி நியாயம் பேசிக்கிட்டே இருக்க முடியாது. நீ ஒரு கோழை. குடும்ப பாரத்த தூக்க உனக்குத் தெம்பில்ல, எதையெதையோ போட்டு கொழப்பிக்கிற...

சரிடா ஒனக்குப் பதில் சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் ஏத்திக்கிறேன் சார்ஜ் எறங்குன மாதிரி இருக்கு...

புதன், ஜூன் 09, 2010

உறக்கத்தைத் துரத்தும் உண்மைகள்


ஜூன் 4 அன்று தி நகர் செ.தெ. நாயகம் மேல் நிலைப் பள்ளியில் உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட அரங்கக் கூட்டத்தில் பழங்குடியினருக்கு எதிராக நடத்தப்படும் பச்சை வேட்டையைக் கண்டித்து அருந்ததி ராய் பேசினார். அரங்கக்கூட்டம் நிரம்பி வழிந்தது. தான் எழுத்தாளர் பேச்சாளர் அல்ல எனச் சொல்லித் தனது உரையைத் தொடங்கினாலும் தெளிவான ஆங்கிலத்தில் நிதானமாக ஆனால் அவரது கருத்தை அழுத்தமாக எடுத்துரைத்தார் அவர். பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பணக்கார இந்தியர்களுக்கும் நல்லது செய்ய நினைக்கும் அரசு பழங்குடி மக்கள்மீது கரிசனமோ இரக்கமோ கொள்வதில்லை. ப சிதம்பரம் போன்ற ஒருவரை உள்துறை அமைச்சராகியதில் நமது பங்கும் இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ அவருக்கு ஓட்டுப்போட்டது நாம் செய்த தவறு. பழங்குடியினர் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு முக்கியமான காரணம் சிதம்பரம். சிதம்பரம் மிக நல்ல தலைவர். தமிழகத்தை ஆள்வதற்குத் தகுதியானவர் என்றெல்லாம் ஒரு காலத்தில் நினைத்தது எவ்வளவு தவறு என்பது புரிகிறது.

அரசுக்கும் அதிகாரத்திற்கும் பயப்படாமல் உண்மையைத் துணிந்து சொல்வதும் கேள்விகள் கேட்பதும் நேர்மையான எழுத்தாளரின் கடமை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. விருதுகளுக்கும் விருந்துகளுக்கும் விலைபோகிவிடும் நமது எழுத்தாளர்கள் தங்களுக்குள் நடக்கும் வெட்டித்தனமான சண்டைகளிலேயே தமது ஆற்றலை வீணாக்குபவர்கள். பொறுப்பாக அரசு வேலைகளில் இருந்துகொண்டு காகிதப்போர் நிகழ்த்துபவர்கள். அரசாங்கத்தை எதிர்த்து பேச வேண்டுமானால் அவர்கள் ஓய்வுபெறும்வரை பொறுத்திருக்க வேண்டும். கூழ் குடிக்கும் ஆசையில் மீசையை இழக்கத் தயங்காதவர்கள். மீசை என்னடா மீசை பொல்லாத மீசை முண்டாசுக்கவிஞனைப் போல் பொங்கிப்பாய்ந்தால் வாழும்வரை நிம்மதியாக வாழ முடியாது சந்ததிகளுக்கு சொத்து சேர்க்க முடியாது எனும்போது எதற்கு வெட்டி வீராப்பு எதிர்த்துபேசி பொல்லாப்பைச் சம்பாதிப்பதற்குப் பதில் பாராட்டுகள் எழுதி பணம் காசு சேர்ப்பதில் திருப்தி காண்பவர்கள். புரட்சி, போராட்டம் இதெல்லாம் வேலைக்காகாத வேலை என்ற ஞானம் கொண்டவர்கள்.

அருந்ததி ராய் பேசும் போது இந்தியாவை அச்சுறுத்தும் பிரச்சினை எனக் குறிப்பிட்டது மத்தியதர வர்க்கத்தின் பேராசை. எல்லாருக்கும் எல்லாம் தெரியும். ஆனால் எந்த விஷயத்திலும் அமைதியாய் இருப்பதில் நாம் பிரியப்பட்டவர்கள். நமக்கு மட்டும் எதற்கு அந்த வேலை. ஒழுங்காகப் படித்தோமா பணம் கொட்டிக்கொடுக்கும் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தோமா என்றிருப்பது எவ்வளவு நிம்மதி. அரசியல், போராட்டம் என்றெல்லாம் நாம் போக முடியுமா? தேவையில்லாத விஷயத்தில் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? எதையும் கண்டுகொள்ளாமல் போய் விடுவது நல்லது என்ற அறிவுரை ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்திருக்கிறது நமக்கு. எல்லாப் பிள்ளைகளும் ஒழுங்காத்தானடா இருக்கு உனக்கு மட்டும் ஏண்டா இந்த வேலை என்று சொல்லியே வாயை அடைத்து விடுகிறார்கள். நடப்பதைக் கண்டும் காணாமல் இருப்பது தவறு என்று தெரிந்தும் கண்டும் காணாததது போல் நடந்துகொள்வதைத் தவிர்த்து எதுவுமே செய்ய முடியாது என்பதை நினைக்க நினைக்க எரிச்சலாக இருக்கிறது. எதிர்விளைவாகக் குறைந்தபட்சம் சமூகம் எதையெதை தேவை என்று கருதுகிறதோ அதற்கு அடி பணியாமல் திமிறித் திரிய வேண்டும் என்னும் வேகம் எழுகிறது, அப்படித் திரிவதனால் அழிவு தான் முடிவென்று அறிவுறுத்தப்பட்டாலும். இங்கே சுகமாக வாழ்வதைவிட அழிவது சுகமாகத் தான் உள்ளது.


வியாழன், மே 20, 2010

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்

ஆழத்தில் சொரணையான கர்ஜனை




கடந்த ஏழாம் தேதி தென்காசி தாய்பாலாவில் மாலைக்காட்சியில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படம் பார்த்தேன். இருபது ரூபாய் டிக்கெட்டுக்கு நாற்பது ரூபாய் கவுண்டரிலேயே வாங்கினார்கள். தியேட்டரில் பெரிய கூட்டமில்லை. இடைவேளை வரை படம் சாதாரணமான படமாக தோன்றியது. படம் முழுவதும் பார்த்து முடிந்த பின்பு இது சாதாரண படமாக தோன்றவில்லை. ஓரளவு சென்ஸிபிளான படமெனத் தோன்றியது. ஆனால் அதன் காரணமாகவே படம் ஓடாதோ எனவும் தோன்றியது. படத்தை நண்பர்கள் யாரும் பெரிதாக சிலாகிக்கவில்லை. எனக்கென்னவோ படம் சரியாக கவனிக்கப்படவில்லையோ என்ற எண்ணம் எழுந்தது. எனவே குறைந்தபட்சம் படம் குறித்து வலைப்பதிவிலாவது எழுதிவிட வேண்டுமென நினைத்தேன். எனவே பின்வரும் விமர்சனம்.

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தலைவனின் மர்மமான மரணம். தலைவனில்லாத நேரத்தில் அம்மக்களைக் கொடுமைப்படுத்தும் கொடுங்கோலன். யாராவது இந்த மக்களைக் காப்பாற்ற மாட்டார்களா என்றிருக்கும்போது தலைவனைப்போல தோற்றம் கொண்ட ஒருவரை தலைவனாக முன்னிறுத்துதல். அவர்கள் கூட்டத்திலேயே துரோகி ஒருவன் முளைப்பது. நேர்மையான தலைவனுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டத்தின் கதை அடி நீரோட்டமாக இருக்க அதன்மேல் எழுப்பப்பட்டிருப்பதோ கௌபாய் உலகம்.

நிறைய விஷயங்களைச் சொரணையோடு சொல்லிச் செல்கிறார் இயக்குநர். புரட்சி, சுய உரிமை எனத் தமிழன் குழி தோண்டிப்புதைத்துவிட்ட விஷயங்கள் எல்லாம் படத்தில் பேசப்படுகின்றன. சுயமாய் யோசிக்கும் எல்லோருக்கும் எழும் இயல்பான ஆதங்கங்கள் எந்தவிதமான ஆரவாரமுமின்றி போகிறபோக்கில் சொல்லப்பட்டிருக்கின்றன.


இப்படத்தை வெறும் நகைச்சுவைப் படமாக சுருக்கிவிட மனமில்லை. படத்தின் திரைக்கதையில் சின்னச்சின்ன விஷயங்களும்கூட மிக நுண்ணிப்பாக கவனமாக கையாளப்பட்டுள்ளன. அணு ஒப்பந்தத்தை நக்கல் செய்வது அதுவும் வீரராகவனின் அந்தக் கேள்வி சுய மரியாதையிலிருந்து முளைப்பது. மொழிபெயர்ப்பின் அபத்தம் அழகான நகைச்சுவையாக்கப்பட்டிருக்கிறது. அப்படியே டிட்டோவாக ஆத்ரிகேசாவின் ஒவ்வொரு சொல்லையும் அசைவையும் ட்ரான்ஸ்லேட்டர் லீ மொழிபெயர்ப்பது. இறுதியில் பள்ளத்தில் தவறி விழுந்து தொங்கும்போது ஆத்ரி கேசா வெளிப்படுத்தும் அலறலைக்கூட மொழிபெயர்க்கிறார் லீ.

சோப்பு டப்பா விக்க வந்த நம்ம ராபர்ட் கிளைவுக்கே நூத்தம்பது வருஷமாக கழுவி விட்டவனுக தான இவனுக என்னும் வசனத்தைப் பேசும் போது வெளிப்படும் நாசரின் சைகை சுரீரெனப் பாய்கிறது நமது அசட்டுத்தனத்தின் மேல்.

புதையலைத் தேடி புறப்படும் பயணமும் முடிந்த அளவு கிரியேட்டிவிட்டியோடு நிகழ்த்தப்பட்டுள்ளது. தனது இனமே அழிக்கப்பட்ட நேரத்திலும் எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் துரோகிகளுக்கு துணைபோன கூட்டத்தின் சொரணையற்ற தன்மை கண்ட வேதனையில் உருவாகியுள்ளதோ இத்திரைக்கதை என்ற நினைப்பே படத்தைப் பார்க்கையில் மேலெழுகிறது. அதன்காரணமாகவே - இலங்கைப் பிரச்சினையை இவ்வளவு நுண்ணுணர்வோடு சொல்லியதாலேயே - படத்தின் குறைகளைப் பட்டியலிடவும் மனம் கூசுகிறது. மொத்தத்தில் கவனிக்கப்பட வேண்டிய படம் இது. ஆனால் கவனிக்கப்படுமா?

சனி, மே 15, 2010

நான் அவனல்ல...

எங்களுக்கிடையே இருப்பதெல்லாம் ரசம்பூசிய கண்ணாடி. சாம்பார் பூசிய கண்ணாடி கிடைக்கலையாடா. அவன் தான். அவனது அட்டகாசம்தான் இது. அதற்குமுன் ஒரு சிறு எச்சரிக்கை.

என் சோகக் கதையைக் கேளு என்று எல்லோரையும் இறுத்திவைத்து கூர் தீட்டிய செவன் ஓ க்ளாக்கை முகத்துக்கு நேரே நீட்ட நான் விரும்பவில்லை. ஆனால் இந்தப் பதிவு அப்படியான நீட்டல்தான். புத்தியுள்ள பிள்ளைகள் பிழைத்துக்கொள்ளட்டும். இது முழுக்க முழுக்க சுயம் சார்ந்த புலம்பல். பாரில் அமர்ந்து காதலின் துயரத்தை அறிமுகமற்ற மனிதர்களிடம் கொட்டித் தீர்ப்பது போன்ற அர்த்தமற்ற உளறல். ஒரு சிறு எச்சரிக்கை செய்தாகிவிட்டது. இனி பயணிக்கலாம். திரும்பிப் பார்க்கிறேன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் வரவில்லை. ஒருவர்கூட வரமாட்டார்களோ என மனம் ஏங்குகிறது. வெட்கம்கெட்ட மனம். இவ்வளவு எச்சரிக்கையையும் கொடுத்துவிட்டு இன்னும் யாரையாவது எதிர்பார்க்கிறதே!

ஒண்ணுமே புரியல. அதுதான் என்னோட பிரச்சினை.எல்லாரையும் வருத்தப்படுத்தி விட்டு நான் மட்டும் சந்தோஷமாக இருக்கிறேன். எனது சந்தோஷம் மற்றவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. கொஞ்சம்கூட ஈரமற்றவனாக இருக்கிறானே என நினைக்கின்றனர். எனக்குப் பிடித்த விஷயத்தை மட்டும் நான் செய்ய நினைக்கிறேன் செய்கிறேன் ஆனால் அது மட்டும் போதாது என அடம் பிடிக்கின்றனர். நான் செய்வது சரியோ தவறோ எனக்கு அது குறித்த நிச்சமில்லை. ஆனால் உள் மன உந்துதலின்றி எதையும் செய்ய முடியாது என்னால். டேய் தம்பி தமாஷ் பண்ண ஆரம்பிச்சிட்டயா?

எதையோ எழுத நினைத்தேன் எதையோ எழுதுகிறேன். அது தானே விதி. அது என்ன விதி? இது அந்த விதியா அல்லது இலக்கண விதியா? எல்லாம் விதிய்யா விதி. சரி சைத்தான் வந்துருச்சு. இப்படித்தான் எதைஎதையோ யோசித்து என்னவென்னவோ செய்கிறேன். இதுக்கெல்லாம் பைசா பிரயோஜனம் உண்டா? விஷயம் இங்கே தான். பிரயோஜனமான விஷயங்களச் செய்யனுமாம். எது பிரயோஜனமான விஷயம்? அப்படிக்கேளுடா தம்பி. அடுத்த பாராவைப் பார். நான் எழுத ஆரம்பித்த தவறு யோசிக்க ஆரம்பித்த உடனே ஒரு வாசகன் உருவாகிவிடுவான் எனக்குள் இருக்கும் அவனை என்னால் விரட்டவே முடியாது. அவனுக்கும் எனக்குமான உரையாடல் இடைவிடாது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அவன் வாயை அடைக்கும் வழி எனக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் நான் இப்படி உளறிக்கொண்டிருந்திருக்க மாட்டேன். இந்த நேரத்தில் எதையாவது உருப்படியாக செய்திருப்பேன். எனது மிகப் பெரிய எதிரி அவன். நீ கெட்ட கேட்டுக்கு உனக்கெல்லாம் எதிரியா, தமாஷ்தாண்டா! அவன் தான்.

எனது ஒவ்வொரு சொல்லையும் நான் எழுத எழுத அவற்றைக் காலி செய்வதுதான் அவன் வேலை. அவனை ஒழிப்பதுதான் எனது ஒரே நோக்கம். ஆனால் என்னால் அவனை எதுவுமே செய்ய இயலவில்லை. இயலாமையின் காரணமாக எனது கோபம் அதிகரித்துக் கொண்டேபோகிறது. கோபக்காரனுக்கு புத்திமட்டுதானே. நான் ஒரு மந்தபுத்திக்காரனாகிறேன். ஒரு புத்திசாலியை மந்த புத்திக் காரனாக்கிவிட்ட கோபம் அவன் மேல் மீண்டும் வருகிறது. விளைவு முந்தைய வரிக்கு முந்தைய வரியின் இரண்டாவது வார்த்தையிலிருந்து மீண்டும் படியுங்கள். இது ஒரு சுழல் எனக்குப் புரிகிறது வெளியேறிவிட்டேன். ஆனால் சுழல் எனத் தெரியாத பல சூழல்களில் நான் என்ன செய்ய முடியும்? என்ன சொல்ல வருகிறேன் எனப் புரிகிறதா உங்களுக்கு? யாருமே இல்லையே யாரிடம் கூறுகிறான் எனத் திகைக்காதீர்கள். ஒருமைக்கே ஆள்கள் இல்லை இதில் பன்மைவேறா. எல்லாமே கற்பனைதானே நீ நடத்துடா.

நான் உங்களிடம் பேச வந்தேன் ஆனால் பாருங்கள் அவன் அதைச் செய்யவிடாமல் இந்த உரையாடலை அவனுடனானதாக மாற்றிக்கொள்கிறான். டேய் இந்த நடிப்புதான வேண்டாங்கிறது. முதல் பாரா எழுதிட்டே திரும்பிப்பாத்தியே ஒரு ஈ காக்கா கூட வரலைங்குறது உனக்கும் தெரியும்லாடா. பெறகு ஏண்டா இப்படி வாழையிலையில் நெய் தடவி வெளியில் போடுற. இந்த நடிப்புதாண்டா உன்னோட பெரிய வியாதி. அதைத் தான் நான் சொல்லிட்டே இருக்கிறேன். ஆனால் உனக்குப் புரியல. உன்னப் பாத்தாலும் பாவமா இருக்குடா நானும் போயிட்டா நீ யாருட்டடா பேசுவ. கிட்டத்தட்ட எல்லாரையும் பகைச்சுட்ட. மீதி இருக்குறவங்களையும் சீக்கிரம் பகைச்சுக்கிடுவே. அதுக்கப்புறம் உன்னோட கதி. யோசிச்சுப்பாரு நான் மட்டும் தான். இது தாங்க இவனிடம் எனக்குப் பிடிக்காத விஷயம். எனது அடிமன ஓட்டங்களை அட்சரம்பிசகாமல் அப்படியே படித்துவிட்டு அதை என்னிடம் விமர்சிப்பான். இப்படிப்பட்ட ஒரு உறவு இவனோடு எனக்குத் தேவையா? ஆனால் உறவு தொடர்கிறது. இவனை மீறி ஒன்றையும் என்னால் பகிர்ந்துகொள்ள முடியாது. இவனை எப்படியாவது எங்கேயாவது விட்டுவிட்டு நாம் பேசுவோம். இப்போது அது முடியாது. நான் விடைபெறுகிறேன். நீ அடங்க மாட்டியாடா?

செவ்வாய், ஏப்ரல் 20, 2010

எஸ்கலேட்டர்

வந்து
நின்று
சென்று
நெடுந்தூரம் பயணிக்கும்
நீண்ட புகைவண்டியும்
இரு புள்ளிகளுக்கிடையே தான்
நகர்கிறது
புரியாமல்
புகைவண்டி பார்த்து
பெருமூச்சுவிட்டபடி
மேலும் கீழும்
நகர்ந்துகொண்டே இருக்கிறது
நகரும் படிக்கட்டு.

வியாழன், ஏப்ரல் 08, 2010

அங்காடித் தெரு

கண்ணீரையோ செந்நீரையோ வேண்டி நிற்கும் வீதி


வழக்கமாக செல்லும் ரயிலில் விதவிதமாக பிச்சைஎடுப்பவர்களை காண நேரிடும். சில குரல்களுக்குச் சில்லறை போடத் தோணாது. சில குரல்களுக்கு கை தானாய் காசைத் தடவும். ஒரு குரலைக் கேட்கும்போது மட்டும் அந்தக் குரலுக்குரியவரைக் கொன்றுபோடத் தோன்றும். ஏனோ அந்தக் குரலில் அவ்வளவு கழிவிரக்கம் பொங்கி வழியும். அப்படி வாழ்ந்து என்ன செய்யப் போகிறார்? அண்ணன் அகோரி வந்தால் நலம் என நினைப்பேன்.

தமிழகப் பெற்றோர்களைக் கண்ணீரால் குளிப்பாட்டி எடுத்த காலத்தால் அழிக்க முடியாத திரைக் காவியம் தவமாய்த் தவமிருந்து பார்த்துத் திரும்பிய அன்று மனம் மிக லேசாக இருந்தது. பொதுவாக மனசு விட்டுச் சிரிக்கும்போது மட்டுமே குறிப்பாக டி.ராஜேந்தர் படத்தின் சோகக் காட்சிகள் பார்க்கும்போது - அத்தகைய இறகுத்தன்மையை மனம் உணரும். படம் எப்படி என நண்பர் ஒருவர் கேட்டார். சிரித்தேன். தியேட்டரிலும் அதையே செய்ததாகக் கூறினேன். அந்த உன்னதக் காவியத்தை நான் நக்கல் செய்துவிட்ட வருத்தம் நண்பருக்கு. எனக்கு பெற்றோரின் கஷ்டம் புரியாததால் படத்தை நிராகரித்துவிட்டதாகக் கூறினார். பழியேற்றுக்கொண்டேன். வேறு வழி?

எப்படியோ தப்பித் தவறி என்னிடம் ஒன்பது ரூபாய் நோட்டு டிவிடி ஒன்று வந்துவிட்டது. அதை அப்புறப்படுத்த நான் பட்ட பாடு அய்யோ எப்படிச் சொல்வேன். தமிழ் வாழ்வைச் சொல்வதாக தமிழர்களைச் சாகடிக்கும் இந்தச் சினிமாக்களிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுவாயா தமிழ்க் கடவுளே? அப்பா ஞானபண்டிதா வேலவா விரைந்துவா!

மேலே குறிப்பிட்ட தனித்தனியான விஷங்களுக்குள் ஓர் ஒற்றுமை இழை ஓடிக்கொண்டிருக்கிறது. கல்லூரி என்றொரு படம் வந்தது. காதல் இயக்குநரின் அடுத்த படைப்பு என்பதால் ஆர்வத்தோடு சென்று வரவழைத்துக்கொண்ட தலைவலியை இப்போது நினைத்தாலும் தலை கிர்ரென்கிறது. அதிலும் அந்தப் படம் தந்த அருவருப்பு உணர்வை வேறு எந்தப் படமும் தந்ததில்லை. அந்த வருத்தத்தைப் போக்க வாராது வந்த மாமணியாய் வந்து சேர்ந்திருக்கிறது அங்காடித்தெரு.

வெயில் தந்த உற்சாகத்தால் தமிழ் வாழ்வை நோக்கிக் கவனத்தை திருப்பிய வசந்த பாலனின் அடுத்த படைப்பு. மாயக்கண்ணாடி, பொக்கிஷம் அனுபங்களை அண்ணன் சேரனிடம் வசந்த பாலன் கேட்டுக்கொள்வது நலம். ஏனென்றால் தமிழகம் கொண்டாடும் படம் என்பதாகத் தான் அவர் எண்ணிக்கொண்டிருப்பார். அவரிடம் மாற்றுக்கருத்து சொல்லப்படப்போவதில்லை. சொல்லப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர் இருக்கமாட்டார். காதல் படரும் தொடக்க நாள்களில் காதலனைப் பற்றி நெருங்கிய தோழியே கூறினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாள் காதலி. வேண்டாத்தனத்துக்கு சொல்வதாகத் தான் நினைப்பாள். காலம் புரியவைக்கும் அவளுக்கு.

அங்காடித் தெரு நன்றாக இல்லை என உணர்ந்தவர்கள் கூட அதைச் சொல்லத் தயங்குகிறார்கள். தான் மட்டும் தனிமைப்பட்டுவிடுவோமோ எனப் பயப்படுகின்றனர். நான் முதலில் குறிப்பிட்ட பிச்சைக்காரச் சம்பவத்தில் வரும் எரிச்சல் டோன் இப்படம் முழுவதும் நிரம்பி வழிகிறது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என் தங்கை கல்யாணி வாழ விட்டதா சமூகம் அவளை... கல்யாணியை என்னெவெல்லாமோ துரத்தியது ஆனால் இந்தப் படத்தில் நாயகனையும் நாயகியையும் துரத்தோ துரத்தென்று துரத்துகிறது பிரச்சினைகள். தமிழ் வாழ்வின் அசல் படைப்பில் இதெல்லாம் சாத்தியம் தானே! நீண்டுபோன நீதிபோதனை வகுப்பில் இன்னும் சில கதைகள் கூறும் சிகரெட் நாற்ற வாத்தியார் போல் கிளைமாக்ஸில் திகட்ட திகட்ட நீதி போதனை.

இட்டாமொழியில் நாயகனின் - அதுவும் ப்ளஸ் டூ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவன் தந்தை இறக்க, இல்லாவிட்டால் அவன் எப்படி சென்னை வரமுடியும்? இங்கே நடக்கும் அநியாயங்களுக்கு ஆட்பட முடியும்? இயக்குநரும் தமிழரின் நொறுங்குண்ட வாழ்வைக் காட்சிப்படுத்த முடியும், தேரிக்காட்டில் பிழைக்க வழியற்ற நிலையில், செந்தில்வேல் முருகன் ஸ்டோரில் வேலைக்கு ஆள்கள் எடுக்க அங்கே வருகின்றனர். நாயகனும் அவன் நண்பனும் காதலுக்கு ஒரு நண்பன் அவசியம் என்பது தமிழர் வாழ்வில் ஒரு அங்கம் தானே சென்னை வருகின்றனர். கொடுமையிலும் கொடுமை செய்யும் முதலாளி அவரைவிட மோசமான சூப்பர்வைசர் தொழிலாளிகளை நசுக்கிப் பிழியும் கொடுமை. பிஞ்சுகளை வதைக்கிறார்களே பதறுகிறது மனம்! அதிலும் தனது காதலனே வேலைக்குப் பயந்து தான் காதலிக்கவில்லை என்று கூறும்போது கண்களை முழுவட்டமாக்கி அந்தப் பெண் கதறும் காட்சியைப் பார்த்தபோது இந்த ஆண்டுக்கான தேசிய விருதை வெல்லப் போவது வசந்தபாலன் தான் என்று நம்ப முடிகிறது. நான் கடவுளுக்கு பாலாவுக்கு விருது கிடைத்ததே. சேதுவுக்கு கிடைக்காத விருது நான் கடவுளுக்கு கிடைக்கிறதென்றால் தேர்வுக்குழுவினர் எதிர்பார்ப்பு என்னவென்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த எதிர்பார்ப்பை தேவைக்கும் அதிகமாகவே பூர்த்திசெய்கிறது அங்காடித் தெரு. செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல் அங்காடி நாய் போல் அலைந்தனையே நெஞ்சமே என்றார் பட்டினத்தடிகள். அங்காடி நாய் போன்ற நெஞ்சம் கண்டதையும் யோசிக்கிறது என்ன செய்ய?

அங்காடித் தெருவின் துயரம் உங்களுக்குப் புரியவில்லை என யாராவது நண்பர் உரைக்கக் கூடும். கதாநாயகியை சூப்பர் வைசர் அடித்துதுவைத்து எடுக்க, திரும்பிவரும் நாயகியிடம் நாயகன் எப்படித் தப்பித்தாய் எனக் கேட்கிறான். அவள் சொல்கிறாள், மாரைப் பிசைந்தான் பேசாமல் இருந்தேன். இந்தத் துயரமிகு காட்சியைக் காணும்போது வந்த வாந்தியை அடக்கப் பெரும்பாடுபட வேண்டியதிருந்தது. காட்சிப்படுத்தல் தந்த அருவருப்பு அடங்க வெகு நேரமாகியது. அங்கங்கே வரும் சிறு சிறு பாத்திரங்கள் மூலம் நைந்துபோன தமிழர் வாழ்வை நம்மை உணரச் செய்வதில் பெரு வெற்றி பெறுகிறார் இயக்குநர். இந்தத் துயரங்களை எல்லாம் உணராமலே போய்விட்டோமே என வருத்தமாக இருந்தது. நவீன இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் சாரின் வசனங்கள் ஒவ்வொன்றும் சாட்டையடி. சும்மா பின்னியெடுக்கிறார். அதிலும் உயரம் குறைந்த மனிதரின் மனைவிக்கு அவரைப் போலவே குழந்தை பிறக்க வருத்தப்படுகிறார் அவர். ஆனால் அந்தப் பெண் சொல்வதாக வருகிறதே ஒரு வசனம் ஜெயமோகன் சார் நெக்குறுகிப் போய்விட்டேன். என்னவொரு பின் நவீனத்துவக் கருத்து. தமிழகத் தாய்மார்களின் கௌரவத்தை இமயத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.
அங்காடித் தெரு மனிதர்களுக்கு வாழ்வில் நீண்டுகொண்டே போகும் துன்பம்போல் எழுத எழுத நிறுத்தவே மனம் வரவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம் இந்த படத்திற்காக நிச்சயம் விருதுகளைக் குவிக்கப்போகிறார் வசந்தபாலன். அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. ஆனால் அவரது அடுத்த படத்தை நினைத்தால் இப்போதே கதி கலங்குகிறது. மீண்டும் ஒருமுறை மாயக் கண்ணாடியையும் பொக்கிஷத்தையும் நினைவுபடுத்துவது அவசியமாகிறது. முடிந்தால் ஒரு முறை சுப்பிரமணியபுரம் பாருங்கள். படம் முடிந்த உடன் இடைவெளி விடாமல் அங்காடித் தெருவைப் பாருங்கள். வித்தியாசம் விளங்கலாம். தயவுசெய்து தனியாகப் பாருங்கள். நலம்விரும்பிகள் எப்போதும் மாற்றுக்கருத்து சொல்வதில்லை. அவர்கள் கைகளில் எப்போதும் அரூப ஜால்ரா பளபளவென மின்னிக்கொண்டே இருக்கும்.