சில படங்களை அதிகமாக எதிர்பார்த்துப் போவோம். ஏமாற்றத்தோடு திரும்புவோம். எதை எதிர்பார்த்தோம் எனக் கேட்டால் சொல்லத் தெரியாது; ஆனால் ஏமாற்றம் என்பதை மட்டும் உணரமுடியும். அதிர்ஷ்டவசமாக சில படங்கள் எதிர்பார்த்த மாதிரியே இருக்கும். அதிலொன்று ராவணன். படம் வெளியான அன்று, படம் பார்த்த ஆர்வத்தில் சிலர் படத்தை ஆஹோ ஓஹோ என்றனர். எனக்கென்னவோ படத்தின் முன்னோட்டங்களைப் பார்த்து பெரிய நம்பிக்கை வரவில்லை. ஆனால் படம் நன்றாக இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்களே எனக் குழப்பமாக இருந்தது. அக்குழப்பத்தோடேயே படம் பார்க்கச் சென்றேன். மணி சார் அவரது ரசிகனான என்னை ஏமாற்றவில்லை. நான் யூகித்தது சரியாகவே இருந்தது. திருப்தியோடு தியேட்டரைவிட்டு வெளியே வந்தேன். எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்த படம் பார்த்தால் திருப்தியாகத் தானே இருக்கும்.
“இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க கற்பனையே. உயிருள்ள அல்லது மாண்டுவிட்ட யாரையும் குறிப்பவை அல்ல” என முதலில் எச்சரித்துவிடுகிறார் சார். ஆனால் கதை என யார் பெயரும் டைட்டில் இடம்பெறவில்லை. ஆனால் அதைப் பற்றி நாம் கேள்வி கேட்கக்கூடாது. ஏனெனில் அவர் விவரம் தெரியாதவரல்ல. மணி சார் என்றால் சும்மாவா. அவரது ஒவ்வொரு அசைவுக்கும் ஏதாவது பொருள் இருக்கும். நமக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம். கிட்டத்தட்ட பதினான்கு கூட்டல் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முந்தி அதாவது 1991, 1992 களில் சார் இயக்கிய தளபதி, ரோஜா ஆகிய படங்களை அப்படியே உல்டாவாக்கி ஒரு புதுப் படமாக எடுத்தால் நமக்கு சப்பென்று போய்விடும். ஆனால் சாருக்கு வயதாகிவிட்டது. டிவிடியும் எவ்வளவு நாளைக்குத் தான் கைகொடுக்கும். ஆனால் படம் எடுத்தாக வேண்டுமே. மறுபடி மறுபடி யோசித்தாலும் அந்நியப் படங்களின் காட்சிகள் தாம் ஞாபகம் வருகிறதே ஒழிய புதிதாய் ஒரு காட்சிகூடத் தோன்றவில்லை. என்ன செய்வார் சார்?
படித்த படிப்பு எந்த நேரத்திலும் கைகொடுக்காமல் போகாது என்பதற்கு சார் உதாரணம். இவரது எம்பிஏ படிப்பு கைகொடுத்துவிட்டது. ஆனாலும் அதுவும் கொஞ்சம் பழைய உத்திதான் ஆனால் வேறு வழி இல்லை. அதே தளபதி, ரோஜாவில் பயன்படுத்திய உத்திதான். புராண முலாம் பூசுவதுதான். சாருக்கு நன்றாகத் தெரியும் அந்தப் பூச்சு இல்லை என்றால் இது விலைபோகாது என. எனவே சாதுர்யமாக ராமன் ராவணன் சீதா என செய்திகளை ஊடகங்களில் கசியவிட்டார். இப்போது அவரது வேலை சுலபம். படம் பார்ப்பவன் ராமன் யார் ராவணன் யார் கும்பகர்ணன் யார் சூர்ப்பனகை யார் என தன் அறிவைச் சோதிப்பதில் ஆர்வத்தோடு இருக்கும்போது சார் படத்தை அழகாக நகர்த்திச்சென்றுவிடலாமே. எனவே தான் கார்த்திக் கதாபாத்திரத்தை வேண்டுமென்றே மரத்திற்கு மரம் தாவவிட்டிருக்கிறார். போதாக்குறைக்கு வீரப்பன் மாவோயிஸ்ட் சங்கதிகள் வேறு. அவருக்குத் தெரியாதா என்ன, எங்கே அடித்தால் எங்கே விழுவான் ரசிகன் என. எவ்வளவோ ஆண்டு காலமாக புத்திசாலித்தனமாக மக்களை ஏமாற்றிய சாதிசார் மூளையின் மிச்ச சொச்சம் இல்லாமலா போய்விடும். எனவேதான் எள்ளளவும் உள் அடுக்குகளற்ற தட்டையான படமொன்றை ஏதோ ஒன்று இருப்பதுபோல் பம்மாத்து காட்டுகிறார் சார். மற்றபடி குறியீடு அது இதுவென்ற புண்ணாக்குகள் எவையுமில்லை இப்படத்தில்.
அந்நியச் சரக்கின்மீது மேட் இன் இந்தியா அச்சிடுவதில் சமர்த்தர் சார். சொந்தமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக உற்பத்தி செய்துள்ளார் சார் அதை மறுக்க முடியாது. அந்த ஏழு நாட்களை உல்டா பண்ணி மவுன ராகம் கொடுத்தார். அலைபாயுதேவின் திரைக்கதை அமைப்பு அப்படியே மவுனகீதங்களை ஞாபகமூட்டும். ஆனாலும் சாரின்மீது நமக்கு மரியாதை இருந்தது. என்னதான் காப்பி என்றாலும் ரசிக்கும்படி தருவார். ஆனால் சமீப காலமாக அந்த நம்பிக்கையை அவர் தகர்த்தெறிந்துவிட்டார். எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் ராவணன் மூலமாக நிர்மூலமாக்கிவிட்டார்.படத்தில் நித்தி பக்தை மட்டுமே கைதட்டல் வாங்குகிறார். அதற்காகவும் மணி சார் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது அது தம்பி நித்தியின் கைங்கர்யம். வெறுமனே தொழில்நுட்பங்களை வைத்து மட்டும் மிரட்டமுடியாது சார், புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எந்தத் தொழில்நுட்பத்தை நம்புகிறீர்களோ அந்த தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியே உங்களை அம்பலப்படுத்திவிடுமே சார். அதை ஏன் நீங்கள் யோசிக்கவே இல்லை. யோசித்திருப்பீர்கள், யார் நம்மைக் கேள்விகேட்பார்கள் என்ற தைரியமா ரசிகன் முட்டாள்தானே என்ற எண்ணமா எது உங்கள் யோசனையை முனை மழுங்கவைத்தது? முன்பெல்லாம் உங்களுக்கு மட்டுமே எட்டும் உயரத்தில் இருந்த உலகப் பட டிவிடிகள் இப்போது கண்ட இடங்களிலும் சீரழிந்துகிடக்கிறதே. இணையதளங்களிலோ கேட்கவேண்டாம். உலகத்தின் நல்ல படங்களை எல்லாம் உங்களது படங்களை வாய்பிளந்து பார்த்த அந்த சுந்தரபாண்டியபுரத்துக்கார ரசிகனும்கூட பார்த்துவிடுகிறான். எனவே உங்களது ரீயூசபிள் மில்க் ஸ்வீட் சமாச்சாரம் தொடர்ந்து எடுபடாது. அரசியல்வாதிகள் நோன்புக் கஞ்சி குடித்த மாதிரி இருக்கிறது நீங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் குறித்து பேசுவது. உங்கள் மனையாட்டி சுஹாசினி தயவால் ‘எப்போதோ இறந்துபோன’ சுஜாதாவை நல்ல வசனகர்த்தா என நினைக்கவேண்டி உள்ளது.
மணி ரத்னம் சார் நீங்க ரொம்ப நல்லவர். அமைதியானவர். உங்களுக்கு ஓய்வு தேவை. நிறைய உழைச்சிட்டீங்க. ஓய்வெடுங்க. அதச் சொல்ல நீ யாருடான்னு கேட்டீங்கன்னா நல்ல படமெடுங்க, ப்ளீஸ் டோண்ட் ட்ரை டூ டேக் த ஜெராக்ஸ் காப்பிஸ். நிறைய இளைஞர்கள் படம் பண்ண வாய்ப்பில்லாம அலைஞ்சுகிட்டு இருக்காங்க. அவர்களில் பாதிப்பேருக்கும் மேல மணிசார் மாதிரி வர வேண்டுமென கனவு காண்கிறார்கள். தயவுசெய்து அவர்கள் கனவைக் கலைக்காதீர்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில் இனி படமெடுக்கப் போவதில்லையென்றும் கொடைக்கானலிலோ ஊட்டியிலோ போய் கோல்ஃப் விளையாடப் போவதாகவும் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல முடிவு. இப்படமெடுக்கும் முன்பே செய்திருக்கலாம். பரவாயில்லை. இப்போதாவது அதை செயல்படுத்துங்கள். இது கடைசி தேர்தல் இது கடைசி தேர்தல் எனக் கருணாநிதி போலோ இது கடைசிப் படம் இது கடைசிப் படமென ரஜினி போலோ பூச்சாண்டி காட்டிவிடாதீர்கள். உங்கள் மீது இன்னும் மரியாதை இருக்கிறது. சற்று காட்டமாக இருந்தாலும் உங்களை அணு அணுவாக ரசித்தவனுக்கு அந்த உரிமை கூட இல்லையா என்ன. இதுகூட புரியாதவரா சார் நீங்கள். அப்படியே உங்களுக்குக் கோபம் வந்தால் ராவணனில் ராமரின் மன்னிக்கவும் தேவின் வசனம் ஒன்று குறிப்பிடுகிறேன்: “உண்மை சில சமயம் கேவலமாகத் தான் காதில் விழும்”
நன்றி. வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக