கண்ணீரையோ செந்நீரையோ வேண்டி நிற்கும் வீதி
வழக்கமாக செல்லும் ரயிலில் விதவிதமாக பிச்சைஎடுப்பவர்களை காண நேரிடும். சில குரல்களுக்குச் சில்லறை போடத் தோணாது. சில குரல்களுக்கு கை தானாய் காசைத் தடவும். ஒரு குரலைக் கேட்கும்போது மட்டும் அந்தக் குரலுக்குரியவரைக் கொன்றுபோடத் தோன்றும். ஏனோ அந்தக் குரலில் அவ்வளவு கழிவிரக்கம் பொங்கி வழியும். அப்படி வாழ்ந்து என்ன செய்யப் போகிறார்? அண்ணன் அகோரி வந்தால் நலம் என நினைப்பேன்.
தமிழகப் பெற்றோர்களைக் கண்ணீரால் குளிப்பாட்டி எடுத்த காலத்தால் அழிக்க முடியாத திரைக் காவியம் தவமாய்த் தவமிருந்து பார்த்துத் திரும்பிய அன்று மனம் மிக லேசாக இருந்தது. பொதுவாக மனசு விட்டுச் சிரிக்கும்போது மட்டுமே – குறிப்பாக டி.ராஜேந்தர் படத்தின் சோகக் காட்சிகள் பார்க்கும்போது - அத்தகைய இறகுத்தன்மையை மனம் உணரும். படம் எப்படி என நண்பர் ஒருவர் கேட்டார். சிரித்தேன். தியேட்டரிலும் அதையே செய்ததாகக் கூறினேன். அந்த உன்னதக் காவியத்தை நான் நக்கல் செய்துவிட்ட வருத்தம் நண்பருக்கு. எனக்கு பெற்றோரின் கஷ்டம் புரியாததால் படத்தை நிராகரித்துவிட்டதாகக் கூறினார். பழியேற்றுக்கொண்டேன். வேறு வழி?
எப்படியோ தப்பித் தவறி என்னிடம் ஒன்பது ரூபாய் நோட்டு டிவிடி ஒன்று வந்துவிட்டது. அதை அப்புறப்படுத்த நான் பட்ட பாடு அய்யோ எப்படிச் சொல்வேன். தமிழ் வாழ்வைச் சொல்வதாக தமிழர்களைச் சாகடிக்கும் இந்தச் சினிமாக்களிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுவாயா தமிழ்க் கடவுளே? அப்பா ஞானபண்டிதா வேலவா விரைந்துவா!
மேலே குறிப்பிட்ட தனித்தனியான விஷங்களுக்குள் ஓர் ஒற்றுமை இழை ஓடிக்கொண்டிருக்கிறது. கல்லூரி என்றொரு படம் வந்தது. காதல் இயக்குநரின் அடுத்த படைப்பு என்பதால் ஆர்வத்தோடு சென்று வரவழைத்துக்கொண்ட தலைவலியை இப்போது நினைத்தாலும் தலை கிர்ரென்கிறது. அதிலும் அந்தப் படம் தந்த அருவருப்பு உணர்வை வேறு எந்தப் படமும் தந்ததில்லை. அந்த வருத்தத்தைப் போக்க வாராது வந்த மாமணியாய் வந்து சேர்ந்திருக்கிறது அங்காடித்தெரு.
வெயில் தந்த உற்சாகத்தால் தமிழ் வாழ்வை நோக்கிக் கவனத்தை திருப்பிய வசந்த பாலனின் அடுத்த படைப்பு. மாயக்கண்ணாடி, பொக்கிஷம் அனுபங்களை அண்ணன் சேரனிடம் வசந்த பாலன் கேட்டுக்கொள்வது நலம். ஏனென்றால் தமிழகம் கொண்டாடும் படம் என்பதாகத் தான் அவர் எண்ணிக்கொண்டிருப்பார். அவரிடம் மாற்றுக்கருத்து சொல்லப்படப்போவதில்லை. சொல்லப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர் இருக்கமாட்டார். காதல் படரும் தொடக்க நாள்களில் காதலனைப் பற்றி நெருங்கிய தோழியே கூறினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாள் காதலி. வேண்டாத்தனத்துக்கு சொல்வதாகத் தான் நினைப்பாள். காலம் புரியவைக்கும் அவளுக்கு.
அங்காடித் தெரு நன்றாக இல்லை என உணர்ந்தவர்கள் கூட அதைச் சொல்லத் தயங்குகிறார்கள். தான் மட்டும் தனிமைப்பட்டுவிடுவோமோ எனப் பயப்படுகின்றனர். நான் முதலில் குறிப்பிட்ட பிச்சைக்காரச் சம்பவத்தில் வரும் எரிச்சல் டோன் இப்படம் முழுவதும் நிரம்பி வழிகிறது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என் தங்கை கல்யாணி வாழ விட்டதா சமூகம் அவளை... கல்யாணியை என்னெவெல்லாமோ துரத்தியது ஆனால் இந்தப் படத்தில் நாயகனையும் நாயகியையும் துரத்தோ துரத்தென்று துரத்துகிறது பிரச்சினைகள். தமிழ் வாழ்வின் அசல் படைப்பில் இதெல்லாம் சாத்தியம் தானே! நீண்டுபோன நீதிபோதனை வகுப்பில் இன்னும் சில கதைகள் கூறும் சிகரெட் நாற்ற வாத்தியார் போல் கிளைமாக்ஸில் திகட்ட திகட்ட நீதி போதனை.
இட்டாமொழியில் நாயகனின் - அதுவும் ப்ளஸ் டூ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவன் – தந்தை இறக்க, இல்லாவிட்டால் அவன் எப்படி சென்னை வரமுடியும்? இங்கே நடக்கும் அநியாயங்களுக்கு ஆட்பட முடியும்? இயக்குநரும் தமிழரின் நொறுங்குண்ட வாழ்வைக் காட்சிப்படுத்த முடியும், தேரிக்காட்டில் பிழைக்க வழியற்ற நிலையில், செந்தில்வேல் முருகன் ஸ்டோரில் வேலைக்கு ஆள்கள் எடுக்க அங்கே வருகின்றனர். நாயகனும் அவன் நண்பனும் – காதலுக்கு ஒரு நண்பன் அவசியம் என்பது தமிழர் வாழ்வில் ஒரு அங்கம் தானே – சென்னை வருகின்றனர். கொடுமையிலும் கொடுமை செய்யும் முதலாளி அவரைவிட மோசமான சூப்பர்வைசர் தொழிலாளிகளை நசுக்கிப் பிழியும் கொடுமை. பிஞ்சுகளை வதைக்கிறார்களே பதறுகிறது மனம்! அதிலும் தனது காதலனே வேலைக்குப் பயந்து தான் காதலிக்கவில்லை என்று கூறும்போது கண்களை முழுவட்டமாக்கி அந்தப் பெண் கதறும் காட்சியைப் பார்த்தபோது இந்த ஆண்டுக்கான தேசிய விருதை வெல்லப் போவது வசந்தபாலன் தான் என்று நம்ப முடிகிறது. நான் கடவுளுக்கு பாலாவுக்கு விருது கிடைத்ததே. சேதுவுக்கு கிடைக்காத விருது நான் கடவுளுக்கு கிடைக்கிறதென்றால் தேர்வுக்குழுவினர் எதிர்பார்ப்பு என்னவென்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த எதிர்பார்ப்பை தேவைக்கும் அதிகமாகவே பூர்த்திசெய்கிறது அங்காடித் தெரு. செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல் அங்காடி நாய் போல் அலைந்தனையே நெஞ்சமே என்றார் பட்டினத்தடிகள். அங்காடி நாய் போன்ற நெஞ்சம் கண்டதையும் யோசிக்கிறது என்ன செய்ய?
அங்காடித் தெருவின் துயரம் உங்களுக்குப் புரியவில்லை என யாராவது நண்பர் உரைக்கக் கூடும். கதாநாயகியை சூப்பர் வைசர் அடித்துதுவைத்து எடுக்க, திரும்பிவரும் நாயகியிடம் நாயகன் எப்படித் தப்பித்தாய் எனக் கேட்கிறான். அவள் சொல்கிறாள், “மாரைப் பிசைந்தான் பேசாமல் இருந்தேன்”. இந்தத் துயரமிகு காட்சியைக் காணும்போது வந்த வாந்தியை அடக்கப் பெரும்பாடுபட வேண்டியதிருந்தது. காட்சிப்படுத்தல் தந்த அருவருப்பு அடங்க வெகு நேரமாகியது. அங்கங்கே வரும் சிறு சிறு பாத்திரங்கள் மூலம் நைந்துபோன தமிழர் வாழ்வை நம்மை உணரச் செய்வதில் பெரு வெற்றி பெறுகிறார் இயக்குநர். இந்தத் துயரங்களை எல்லாம் உணராமலே போய்விட்டோமே என வருத்தமாக இருந்தது. நவீன இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் சாரின் வசனங்கள் ஒவ்வொன்றும் சாட்டையடி. சும்மா பின்னியெடுக்கிறார். அதிலும் உயரம் குறைந்த மனிதரின் மனைவிக்கு அவரைப் போலவே குழந்தை பிறக்க வருத்தப்படுகிறார் அவர். ஆனால் அந்தப் பெண் சொல்வதாக வருகிறதே ஒரு வசனம் ஜெயமோகன் சார் நெக்குறுகிப் போய்விட்டேன். என்னவொரு பின் நவீனத்துவக் கருத்து. தமிழகத் தாய்மார்களின் கௌரவத்தை இமயத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.
அங்காடித் தெரு மனிதர்களுக்கு வாழ்வில் நீண்டுகொண்டே போகும் துன்பம்போல் எழுத எழுத நிறுத்தவே மனம் வரவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம் இந்த படத்திற்காக நிச்சயம் விருதுகளைக் குவிக்கப்போகிறார் வசந்தபாலன். அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. ஆனால் அவரது அடுத்த படத்தை நினைத்தால் இப்போதே கதி கலங்குகிறது. மீண்டும் ஒருமுறை மாயக் கண்ணாடியையும் பொக்கிஷத்தையும் நினைவுபடுத்துவது அவசியமாகிறது. முடிந்தால் ஒரு முறை சுப்பிரமணியபுரம் பாருங்கள். படம் முடிந்த உடன் இடைவெளி விடாமல் அங்காடித் தெருவைப் பாருங்கள். வித்தியாசம் விளங்கலாம். தயவுசெய்து தனியாகப் பாருங்கள். நலம்விரும்பிகள் எப்போதும் மாற்றுக்கருத்து சொல்வதில்லை. அவர்கள் கைகளில் எப்போதும் அரூப ஜால்ரா பளபளவென மின்னிக்கொண்டே இருக்கும்.
நன்றாக இருக்கிறது
பதிலளிநீக்குநன்றி.
பதிலளிநீக்கு