இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், மே 20, 2010

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்

ஆழத்தில் சொரணையான கர்ஜனை




கடந்த ஏழாம் தேதி தென்காசி தாய்பாலாவில் மாலைக்காட்சியில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படம் பார்த்தேன். இருபது ரூபாய் டிக்கெட்டுக்கு நாற்பது ரூபாய் கவுண்டரிலேயே வாங்கினார்கள். தியேட்டரில் பெரிய கூட்டமில்லை. இடைவேளை வரை படம் சாதாரணமான படமாக தோன்றியது. படம் முழுவதும் பார்த்து முடிந்த பின்பு இது சாதாரண படமாக தோன்றவில்லை. ஓரளவு சென்ஸிபிளான படமெனத் தோன்றியது. ஆனால் அதன் காரணமாகவே படம் ஓடாதோ எனவும் தோன்றியது. படத்தை நண்பர்கள் யாரும் பெரிதாக சிலாகிக்கவில்லை. எனக்கென்னவோ படம் சரியாக கவனிக்கப்படவில்லையோ என்ற எண்ணம் எழுந்தது. எனவே குறைந்தபட்சம் படம் குறித்து வலைப்பதிவிலாவது எழுதிவிட வேண்டுமென நினைத்தேன். எனவே பின்வரும் விமர்சனம்.

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தலைவனின் மர்மமான மரணம். தலைவனில்லாத நேரத்தில் அம்மக்களைக் கொடுமைப்படுத்தும் கொடுங்கோலன். யாராவது இந்த மக்களைக் காப்பாற்ற மாட்டார்களா என்றிருக்கும்போது தலைவனைப்போல தோற்றம் கொண்ட ஒருவரை தலைவனாக முன்னிறுத்துதல். அவர்கள் கூட்டத்திலேயே துரோகி ஒருவன் முளைப்பது. நேர்மையான தலைவனுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டத்தின் கதை அடி நீரோட்டமாக இருக்க அதன்மேல் எழுப்பப்பட்டிருப்பதோ கௌபாய் உலகம்.

நிறைய விஷயங்களைச் சொரணையோடு சொல்லிச் செல்கிறார் இயக்குநர். புரட்சி, சுய உரிமை எனத் தமிழன் குழி தோண்டிப்புதைத்துவிட்ட விஷயங்கள் எல்லாம் படத்தில் பேசப்படுகின்றன. சுயமாய் யோசிக்கும் எல்லோருக்கும் எழும் இயல்பான ஆதங்கங்கள் எந்தவிதமான ஆரவாரமுமின்றி போகிறபோக்கில் சொல்லப்பட்டிருக்கின்றன.


இப்படத்தை வெறும் நகைச்சுவைப் படமாக சுருக்கிவிட மனமில்லை. படத்தின் திரைக்கதையில் சின்னச்சின்ன விஷயங்களும்கூட மிக நுண்ணிப்பாக கவனமாக கையாளப்பட்டுள்ளன. அணு ஒப்பந்தத்தை நக்கல் செய்வது அதுவும் வீரராகவனின் அந்தக் கேள்வி சுய மரியாதையிலிருந்து முளைப்பது. மொழிபெயர்ப்பின் அபத்தம் அழகான நகைச்சுவையாக்கப்பட்டிருக்கிறது. அப்படியே டிட்டோவாக ஆத்ரிகேசாவின் ஒவ்வொரு சொல்லையும் அசைவையும் ட்ரான்ஸ்லேட்டர் லீ மொழிபெயர்ப்பது. இறுதியில் பள்ளத்தில் தவறி விழுந்து தொங்கும்போது ஆத்ரி கேசா வெளிப்படுத்தும் அலறலைக்கூட மொழிபெயர்க்கிறார் லீ.

சோப்பு டப்பா விக்க வந்த நம்ம ராபர்ட் கிளைவுக்கே நூத்தம்பது வருஷமாக கழுவி விட்டவனுக தான இவனுக என்னும் வசனத்தைப் பேசும் போது வெளிப்படும் நாசரின் சைகை சுரீரெனப் பாய்கிறது நமது அசட்டுத்தனத்தின் மேல்.

புதையலைத் தேடி புறப்படும் பயணமும் முடிந்த அளவு கிரியேட்டிவிட்டியோடு நிகழ்த்தப்பட்டுள்ளது. தனது இனமே அழிக்கப்பட்ட நேரத்திலும் எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் துரோகிகளுக்கு துணைபோன கூட்டத்தின் சொரணையற்ற தன்மை கண்ட வேதனையில் உருவாகியுள்ளதோ இத்திரைக்கதை என்ற நினைப்பே படத்தைப் பார்க்கையில் மேலெழுகிறது. அதன்காரணமாகவே - இலங்கைப் பிரச்சினையை இவ்வளவு நுண்ணுணர்வோடு சொல்லியதாலேயே - படத்தின் குறைகளைப் பட்டியலிடவும் மனம் கூசுகிறது. மொத்தத்தில் கவனிக்கப்பட வேண்டிய படம் இது. ஆனால் கவனிக்கப்படுமா?

3 கருத்துகள்:

  1. ஆர்வத்தை தூண்டுகிறீர்கள். அந்த அளவிற்கு ஒரு தமிழ்ப்படம் வந்திருப்பதே வியப்பிற்குரியதுதான்.

    பதிலளிநீக்கு
  2. முடிந்தால் பாருங்கள். பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. எனக்கென்னவோ உங்களுக்குப் பிடிக்கும் எனத் தோன்றுகிறது. சில குறைகள் இருக்கின்றன ஆனால் அவற்றை மன்னித்துவிடலாம், சொல்ல விரும்பிய விஷயத்திற்காக.

    பதிலளிநீக்கு
  3. படம் பார்த்தேன்.
    நீங்கள் தலைப்பிட்டபடிதான் படம் இருக்கிறது.
    இன்னும் சொன்னால் ஆழத்தில் என்று சொல்வதைவிட வெளிப்படையாகவே தெரிகிறது.
    (நாசரின் அந்த ஒற்றைக் கண்ணை காலால் மிதித்து பொடிக்கும் அளவுக்கு கோபம் வெளிப்படை.)

    பதிலளிநீக்கு