இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, நவம்பர் 28, 2014

ஆறே மாதத்தில் அறிவாளி


எல்லாரும் தன்னை முட்டாள்னு நினைக்கிறாங்களோன்னு வெகுளி வெள்ளச்சாமிக்கு மைல்டா ஒரு சந்தேகம் வந்துச்சு. நாமளும் அறிவாளியாகிறனும்னு முடிவுபண்ணிட்டான். வீட்டில் அவனோட மனைவி பார்க்குற சீரியல்ல ஆறு மாசத்துல கதாநாயகன் அறிவாளியாகுறான்.

தமிழே தட்டுத் தடுமாறி பேசுற ஆளு ஆங்கிலத்துல பொளந்துகட்டுறான். இன்னொரு சீரியலில் ஒரு பெண்ணு கல்யாணம் ஆன பின்னாடி ஆனா ஆவன்னால்லாம் கத்துக்குறா. பி.எச்டி. படிச்சிருக்கும் தன்னோட பொண்டாட்டி அத விழுந்து விழுந்து பார்க்குறா. உச்சு கொட்டுறா. அப்படி இருக்கும்போது தான் ஏன் அறிவாளி ஆகக் கூடாதுன்னு நினைச்சான். போதாக் குறைக்கு அறிவாளின்னு சொல்லப்படுற ஆள்களோட பேச்சுகள பேப்பரில் படிச்சுப் பார்க்கும்போது அவனைவிட அவங்கல்லாம் மோசமா பேசுறதுபோலதான் அவனுக்குத் தெரிஞ்சுது. அதனால் அறிவாளி ஆவது ஈஸியான வேலையாத்தான் இருக்கும்னு முடிவுக்கு வந்துட்டான். 

அவனோட நண்பர் வீராசாமிட்ட போயி ஆலோசனை கேட்டான். வெள்ளயப் பொறுத்தவரை வீரா வற்றாத அறிவு ஆறு. எதிரில் ஆளே இல்லாட்டிக்கூட அலைகடலென மக்கள் திரண்டிருப்பது போல நினைத்துக்கொண்டு 26 எழுத்துக்களக் கொண்ட ஆங்கிலத்துல பிச்சு ஒதறுவான். தமிழ்னா கேட்கவே வேண்டாம் 247 எழுத்தாச்சா. கொளுத்திருவான். அவன் பேச்சு நடக்கிற இடங்களில் ஃபயர் சர்வீஸ் வண்டிய நிப்பாட்டுற அளவுக்குப் பேச்சுல பொறி பறக்கும்னு பேசிக்குவாங்க. 

அப்படி ஒரு ஆவேசமும் ஆற்றலும் இருக்கும் பேச்சுல. ஒரு டம்ளர் தண்ணி வேணும்னாகூட முல்லை பெரியாறு, காவிரின்னு சமூக விஷயங்களத் தொட்டுத் தான் தொடங்குவான். உலக வரலாறெல்லாம் அவனுக்கு அத்துப்படி. தூக்கத்துல எழுப்பிக் கேட்டாக்கூட ரோமாபுரியின் சரித்திரத்தை ரத்தம் சொட்டச் சொட்ட சொல்லுவான் பாவிப்பய. தாய்ப்பாலு குடிச்சு வளராம வரலாறையே வாரி வாரிக் குடிச்சே வளர்ந்திருப்பான்போல. அப்படியொரு வரலாற்று ஞானம் வீராவுக்கு. தன்னோட அறிவ நம்பி ஒரு எலக்‌ஷனில் வார்டு மெம்பரா போட்டிபோட்டான். பாவம் ஒரு ஓட்டுகூட அவனால வாங்க முடியல. அவனோட ஓட்டுச் சீட்ட பெட்டியில போடுற சமயத்துல, உள்ளுக்குள்ள வந்த டிவிக்காரங்கட்ட பேசிட்டே அத கையோட எடுத்துட்டு வந்துட்டான். 

வீராவிடம் கேட்டதுக்கு அவன், தன்னைப் புத்தகங்கள்தான் இந்தக் கதிக்கு ஆளாக்குச்சுன்னு சொன்னான். அதனால நல்ல புத்தகத்தப் படிச்சா போதும் நினைத்தது நடக்கும்னான். உனக்கு ஏண்டா நினைச்சது நடக்கலன்னு ஒரு சின்ன கேள்வி வெள்ளைக்கு வந்துச்சு. ஆனா டைமிங் சரியில்ல, கேட்க வேண்டாம்னுட்டு கம்முன்னு இருந்துட்டான். முதலில் ஒரு புத்தகக் கடைக்குப் போனான் வெள்ளை. 

“ஆறு மாசத்துல அமெரிக்க அதிபர் ஆவது எப்படி?” ஒபாமாவே வாசித்துப் பின்பற்றிய தமிழ் நூல்ங்கிற புத்தகத்துக்குப் பின்னால் முப்பதே நாள்களில் மூன்று மொழிகள் என்று ஒரு புத்தகம் இருந்துச்சு. அந்த மொழிகள்ல இங்கிலிஷும் ஒண்ணு. வெள்ளைக்கு ஆங்கிலம் கொஞ்சம் வீக்குதான் ஆனா கணக்கு ஸ்ட்ராங். முப்பது நாளில் மூன்று மொழின்னா ஒரு மொழிக்குப் பத்து நாள். ஆக பத்தே நாளில் இங்கிலிஷ் படிச்சுட்டு வீராசாமி மாதிரி நரம்பு வெடிக்க ஆங்கிலத்தில் பேசணும்னு துடிச்சான். 

நாலஞ்சு புத்தகத்த வாங்கிட்டு வந்துட்டான். ஒரு தடவை படிக்கிறதவிட நாலஞ்சு தடவ படிக்கிறது நல்லதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கல்லா? அதனால நாலஞ்சு தடவ படிக்கணுங்கிற ஆசையிலதான் அத்தனையையும் வாங்குனான். ஒரே புத்தகத்த திருப்பி திருப்பிப் படிக்கிறதவிட வேற வேற புத்தகத்தை படிக்கிறது நல்லதுங்கிறதால அப்படி ஒரு ஐடியா பண்ணினான். எல்லாப் புத்தகத்தையும் விடிய விடிய படிச்சான். ஆனாலும் படிக்கிற வெறி அவனுக்கு அடங்கவே இல்ல. முழுக்க படிச்சு முடிச்ச உடனே புத்தகத்தை கரைச்சே குடிச்சான். முதலில் கொஞ்சம் குமட்டுச்சு. ஆனா அறிவாளி ஆகணும்னா சில கஷ்டம் இருக்கத்தானே செய்யும்னு, தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கிட்டான். 

உள்ளுக்குள்ள குறுகுறுன்னுதான் இருந்துச்சு. திடீர்னு வாந்தி வர்ற மாதிரியிருந்துச்சு. குபுக்னு வாந்தியே எடுத்துட்டான். ஆனா வந்து விழுந்ததெல்லாம் இங்கிலிஷ் லெட்டர்ஸா இருந்துச்சு. தனக்குள்ள ஆங்கிலம் பரவியிருச்சுங்கிற சந்தோஷத்துல தலை கால் புரியாம ஆடினான். வீட்டுக் கூரை, நடு ரோட்ல, பஸ்ஸுக்கு முன்னாலன்னு எங்க எங்கயோ சந்தோஷமா ஆடுனான். 

அறிவாளி ஆயிட்டோம்… இனி டிவியில பேசலாம், பத்திரிகைல கருத்து சொல்லலாம், இப்படியெல்லாம் நினைக்கும்போதே வெள்ளைக்கு பூரிப்பா இருந்துச்சு. ஆனா அதுக்கும் அறிவுக்கும் என்னடா சம்பந்தம்னு அவனோட நண்பன் ஒருத்தன் வெள்ளைட்ட கேட்டான். அப்படியா, அப்பன்னா இந்த அறிவ வச்சுட்டு என்ன பண்றதுன்னு வெகுளியா கேட்டான் வெள்ள. கேன்சர் வந்தாக்கூட அறுவை சிகிச்சை பண்ணி தூக்கிரலாம். ஆனா இத வச்சுக்கிட்டு ஒரே ரோதனைதான்னு சொல்லிட்டுப் போயிட்டான் அவனோட ஃப்ரண்ட். வெள்ளைக்குப் பயமா போயிருச்சு. தன்னோட டிரஸ் அழுக்கா இருக்கிற மாதிரி அசிங்கமா தோணுச்சு. 

முன்னால இப்படி எல்லாம் யோசிச்சதே இல்லயே. அறிவ எப்படியும் போக்குறதுக்கு என்ன பண்ணலாம்னு நியூஸ் சேனலில் எடிட்டரா இருக்கும் ஃப்ரண்டுட்ட கேட்டான். பேசாம என்னைப் போல் டிவியில சேர்ந்துரு, தானா சரியாயிரும்னு சொன்னான். அது நல்ல யோசனைன்னு ஒரு டிவி சேனலுக்கு இண்டர்வியூக்குப் போயிருக்கான் வெள்ளை. 

தி இந்துவில்  வெளியானது.

வெள்ளி, நவம்பர் 21, 2014

சுத்தமான விளம்பரம்


இன்னிக்குத் தன்னோட தலைவர் தாமரை காந்தின் பொறந்தநாள். அதைக் கொண்டாடத் தயாராயிட்டான் வெகுளி வெள்ளச்சாமி. வழக்கமா அவரு பொறந்தநாள் சமயத்தில் வடக்க எங்கயோ இருக்குற ஒரு சாமியாரப் பார்க்கப் போயிருவாரு. ஒருமுறை அப்படி இமய மலையின் அடிவாரத்தில் தாமரை காந்த் உட்கார்ந்திருந்தபோது, அவரு யாருன்னு தெரியாம யாத்ரீகர் ஒருவர் பிச்சைக்காரர்னு நினைத்து அவருக்கு ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தைப் போட்டுட்டாராம். ஆனா தாமரை காந்த் தங்கமானவர். கோபமே படல. அந்த நாணயத்தையும் எடுத்துத் தன்னோட பாக்கெட்டுல போட்டுக்கிட்டாராம். பத்திரிகையில எழுதியிருந்தாங்க.

அந்த அளவு அன்பும் இரக்கமும் பிறர் மீது அக்கறையும் கொண்ட தனது தலைவரைப் பார்க்க ஒவ்வொரு வருஷமும் அவரு வீட்டுல போயி காத்துக் கிடப்பான் வெள்ள. ஆனா அவன நாயி மாதிரி அடிச்சு விரட்டிருவாங்க தலைவர் வீட்டுக் காவலாளிங்க. அன்பான தன்னோட தலைவர் இரக்கப்பட்டு இவங்களுக்கு வேலை கொடுத்திருப்பார். ஆனா இவங்க இப்படி அன்பே இல்லாம நடந்துக்கிறாங்க, தலைவரப் பாக்கும்போது அவர்ட்ட சொல்லனும்னு நினைச்சுக்குவான். ஆனா ஒரு தடவைகூட அவரைப் பார்க்க முடியல. 

இந்தத் தடவை அவரு பிறந்தநாளுக்கு வெள்ளயோட தெருவைக் கூட்ட வருவார்னு சொன்னாங்க. எப்போதும் பளிச்சுன்னு சுத்தமா இருக்குற தன்னோட தெருவத் தலைவர் ஏன் பெருக்கணும்னு வெள்ள நெனச்சான். அழுக்கான மனிதர்கள் அழுக்குத் தெருவச் சுத்தப்படுத்தும்போது சுத்தமான தலைவர் சுத்தமான தெருவத்தானே சுத்தம் பண்ண முடியும்னு அவனுக்குத் தோணுச்சு. எவ்வளவு லாஜிக்கா யோசிக்கிறோம்னு வெள்ள தானா சிரிச்சுக்கிட்டான். தலைவர் எதையும் சிறப்பா செய்வார்னு புத்தகத்துல படிச்சிருக்கான். 

இன்னக்கி தெருவச் சுத்தப்படுத்திட்டுச் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுக்குறதுக்குக்கூட ஏகப்பட்ட தடவ ஒத்திகை பார்த்தாராம். துணை நடிகர்கள் நான்கைந்து பேரைக் கூட்டிட்டு வந்து ஒத்திகை பார்த்திருக்காரு. அதை அப்படியே படம்பிடித்து எடிட் பண்ணி தன்னோட ஆபீஸ்ல இருக்குற தியேட்டர்ல போட்டுப் பார்த்து, அது ஓகே ஆன பிறகுதான் அவருக்குத் திருப்தி ஏற்பட்டுச்சாம். அதுக்கான செலவை அவரது புதுப் படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் ஏத்துக்கிட்டார். 

அந்த ஒத்திகைக்கே பத்து லட்சம் செலவாச்சாம். ஒத்திகையின்போது கவனமாப் பேசிட்டிருந்த தாமரை உடன் தலையாட்ட வேண்டிய நபர் ஒருமுறை தலையாட்டத் தவறியதை நுட்பமாகக் கவனிச்சுக் கண்டிச்சாராம். அந்த அளவுக்குத் தலைவருக்கு பெர்பெக்‌ஷன் மேல காதல். மனிதர் உணர்ந்துகொள்ள அது மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டிப் புனிதமானது, புனிதமானது. 

தன்னோட தலைவர் பார்க்காத ஒலகப் படமே இல்லங்கிறது வெள்ளயின் அசைக்க முடியாத நம்பிக்கை. தான் பார்த்தது மட்டும் போதாது தன்னோட ரசிகர்களும் அதைப் பார்க்கணும். ஆனா அவங்களுக்குத் தமிழ் மட்டும்தானே தெரியும். அதனால் தனக்குப் பிடிச்ச படத்தை எல்லாம் பட்டியல் போட்டு ஒண்ணொன்னா தமிழில் எடுத்துச் சேவை செஞ்சுகிட்டிருந்தார். அவரோட நல்ல உள்ளத்தைப் புரிஞ்சிக்காம அவர ‘காப்பிகளின் தலைவர்’னு சிலர் கிண்டல் பண்றாங்களேன்னு வெள்ளைக்கு வேதனையா இருக்கும். தலைவர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாருன்னு அறிவிச்சாங்க. 

அப்போது பள பளன்னு ஒரு புது கார் வந்தது. தலைவரோட சொந்த காரு அது தூரத்துல வரும்போது வெள்ள பார்த்துட்டான். தலைவர் இறங்கின உடனே தன்னோட கையில் இருந்த பூக்களை அவர் மீது போடணும்னு தயாரானான். கூட்டத்தினரை முண்டியடித்துக்கொண்டு முன் வரிசைக்கு வந்தான். கார் வந்து நின்றதும் அதிலிருந்து நான்கைந்து பேர் குப்பை நிரம்பி வழியும் கூடையோடு இறங்கினார்கள். 

எல்லோரும் அதை அழகாகத் தெருவெங்கும் கொட்டினார்கள். சுத்தமான அந்தத் தெருவைக் கொஞ்ச நேரத்தில் அசுத்தமாக்கிட்டாங்க. அனேகமா இயக்குநர் தயிராவின் பட்டறையில் பட்டம் தீட்டப்பட்ட வைரங்களா இருப்பாங்கபோல. கொஞ்ச நேரத்துல அந்த இடத்தையே குப்பை மேடா ஆக்கிட்டாங்க.
கொஞ்ச நேரத்துல தலைவர் வந்தாரு. கையில் அழகாக தொடப்பத்த ஏந்தினாரு. வாழ்க்க பூராவும் தெருவையே பெருக்குபவர் போலவே, அப்படியொரு செய்நேர்த்தியுடன் தொடப்பத்த ஏந்தியிருந்தாரு. தெருவில் கிடந்த சிறு தூசைக்கூட அவரு தொடப்பம் தொடாமலே அந்தத் தெரு முழுக்கக் கூட்டி சுத்தம் செஞ்ச எஃபக்ட தன்னோட பாடி லாங்குவேஜ்லயே கொடுத்தாரு. அவருடைய உதவியாளர் ஆப்பிள் ஜூஸக் கொண்டுவந்து நீட்டினாங்க. இது என்னோட வியர்வைக்கு இல்ல உங்களோட உழைப்புக்குக் கிடைத்த மரியாதைன்னு அழகுத் தமிழில் சொல்லிட்டு அவரே குடிச்சாரு. ரசிகர்களுக்கெல்லாம் வயிறு குளிர்ந்திருச்சு. 

அடுத்ததா செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்தாங்க. கையில் மைக்க பிடிச்சாரு. தன்னோட அரசியல் பிரவேசம் பற்றி அதிரடியாப் பேசினாரு. அநேகமா வரவிருக்கும் தன்னோட படத்தில் அரசியல் கருத்துகள் இருக்கும்ங்கிறத ரொம்ப சூசகமாச் சொன்னாரு. ஆனா அரசியலுக்குத் தான் வருவதா, வேண்டாமாங்கிறத இங்க கேட்டு முடிவு பண்ணுவேன்னு நெஞ்சுல கையை வச்சாரு. சட்டைப் பைக்குள்ள அவருடைய மனைவி போட்டோ தெரிஞ்சுது. பெண்களை அவர் எவ்வளவு மதிக்குறாருன்னு வெள்ளைக்குப் புல்லரிச்சுப் போச்சு. 

தி இந்துவில் வெளியானது.

வெள்ளி, நவம்பர் 14, 2014

இதுதாண்டா நடிப்பு

வெகுளி வெள்ளச்சாமிக்குத் திடீர்னு சினிமா இயக்கணும்னு ஆசை வந்துருச்சு. ஃபிலிம் சுருளுக்குள்ள நடிகர்கள் எல்லாம் எப்படி போய் உக்காந்துக்குறாங்க, எப்படி சண்டை எல்லாம் போடுறாங்கன்னு ஆச்சரியப்பட்டு ஃபிலிம் ரோலைக் கழற்றி அப்படி இப்படின்னு திருப்பிப் பார்க்குற வெள்ளைக்கு, இப்படி ஓர் ஆசை ஏன் வந்துச்சுன்னே தெரியல. ஆனா, அதுக்கு முன்னால நிறைய தமிழ்ப் படமா பார்த்தான். அதைப் பார்த்ததுக்கு அப்புறமா படம் எடுக்குற அறிவு தனக்கு நிறைய இருக்குதுன்னு அவனுக்கு ஒரு நம்பிக்க வந்துருச்சுபோல.

அவன் படமெடுக்கப்போறான்னு தெரிஞ்சு உடனே அவனைச் சுத்தி ஐந்தாறு அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸும் கூடீட்டாங்க. அதில் முதலில் வந்தவரு ஆறு பேருக்கு மேல யாரையும் சேர்க்க மாட்டோம்னு அதன் பின்னால வர்றவங்களை எல்லாம் அனுப்பிவச்சுட்டார். தான் மனசுல நெனச்ச உடனேயே இவங்கள்லாம் ட்ரை பண்ண ஆரம்பிச்சுருப்பாங்களோன்னு வெள்ளைக்கே மைல்டா ஒரு டவுட். ஆனா யாருமே சம்பளம் எவ்வளவுன்னு கேட்கவோ வெள்ளைச்சாமி யாருட்ட அஸிஸ்டண்டா இருந்தான்னு யோசிக்கவோ இல்லங்கிறதால அவனுக்கும் அவங்கள ரொம்ப பிடிச்சுப்போச்சு.

தான் எடுக்கும் படம் வித்தியாசமானதா இருக்கணும்னு வெள்ள ஆசப்பட்டான். அத தன்னோட அஸிஸ்டண்ட்ஸ்கிட்ட சொன்னான் வெள்ள. கதை இல்லாம படமெடுக்குறாங்க, ஃபிலிம் இல்லாம படமெடுக்குறாங்க, பாட்டு இல்லாம படமெடுக்குறாங்க, ஏன் புத்தியில்லாமகூடப் படமெடுக்குறாங்க ஆனா இதுவரைக்கும் யாரும் நடிப்பு இல்லாம படமெடுக்கலன்னு கூவினான் ஒரு ஒண்ணாந்தர அஸிஸ்டண்ட். அதக் கேட்ட வெள்ளை நடிப்பே இல்லாம படமெடுக்கணும்னு முடிவு பண்ணிட்டான்.

கதைக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சான். அப்ப ஒரு அஸிஸ்டண்ட் நாம் படம் தயாரிக்கறதா சொல்வோம். நிறைய பேரு கதை சொல்ல வருவாங்க, அதுல ஒரு நல்ல கதையா எடுத்துக்கிடலாம்னு ஐடியா கொடுத்தான். புத்திய கத்தி மாதிரி தீட்டுறானேன்னு வெள்ளைக்கே புல்லரிச்சுப் போச்சு. ஆனா, நாளைக்கு அவன் கோர்ட் கேஸுன்னு போயிட்டா என்ன பண்றதுன்னு வெள்ளைக்குப் பயம் வந்துருச்சு. அதனால் அவன் வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சான்.

ராத்திரியெல்லாம் மூலையில உட்கார்ந்து மூளையைக் கசக்கினான் வெள்ளை. ஃபார் எ சேஞ்ச் (தனக்கு இங்கிலீஷ்லாம் வருதேன்னு வெள்ளைக்கு வெட்கமே வந்துருச்சு) பழைய தமிழ்ப் படத்துல இருந்தே, ஏன் கதையை சுடக் கூடாதுன்னு முடிவு பண்ணினான். உதவியாளர்கள்ட்ட கேட்டான். அதுவும் புதுசு இல்ல அப்படின்னு, அதுக்கு நிறைய உதாரணங்களை உதவியாளர்கள் அள்ளிப்போட்டாங்க. இவ்வளவு அறிவுக் கொழுந்துகளா இருக்காங்களே பயபுள்ளய்ங்கன்னு நெனச்சு வெள்ள கண்ணுல தண்ணி வந்துருச்சு.

ஓடாத ஒரு படத்தைப் பார்த்து அப்படியே சீன் பை சீன் எடுக்க ஒரு வழியா முடிவு பண்ணினான். குண்டு குண்டா அழகா எழுதும் ஓர் ஒல்லியான அஸிஸ்டண்ட் ராத்திரியெல்லாம் முழிச்சு படத்தப் பார்த்து திரைக்கதை, வசனம் எழுதிட்டான். நடிக்கவே தெரியாத ஒரு நடிகன் பற்றிய கதை அது. இதுக்கு ஹீரோவா யாரெப் போடலாம்னு யோசிச்சாங்க.

நம்ம நடிகர்கள் நடிப்புன்னு வந்துட்டா சோறு தண்ணியில்லாம பாடுபடுவாங்க. கேரக்டருக்காக ஒல்லியாவாங்க, குண்டாவாங்க, மொட்டை போடுவாங்க, தலைகீழா நிப்பாங்க... அப்படிப்பட்டவங்களுக்கு இந்த ரோல் அல்வா சாப்டுற மாதிரி... ஏகப்பட்ட நடிகர்கள் இப்படி ஒரு கேரக்டருக்குக் காத்திட்டிருக்காங்க, ஆனாலும் கப்ஸா காந்த் இதப் பண்ணலாம். அவர்தான் எல்லா விஷயத்தையும் கத்து வச்சிருக்கதா சொல்றாரு. நடிக்கத் தெரியாத நடிகன் ரோல பண்ண அவரவிட்டா ஆளே இல்லன்னு முடிவு பண்ணி அவர்ட்ட சொன்னாங்க.

இதுதாண்டா நடிப்புன்னு டைட்டில் வச்சாங்க. கீழ சின்னதா ‘அன் ஆக்டர் வித்தவுட் ஆக்டிங்’ அப்படின்னு கேப்ஷனும் போட்டாங்க. கப்ஸாவை சும்மா சொல்லக் கூடாது, மனுஷன் பிச்சு உதறிட்டாரு. அனைத்து ஷாட்டும் ஒரே டேக்கில் ஓகேயாச்சு. மறதியாகக்கூட அவர் ஒரு காட்சியிலும் நடிக்கல. அதை எல்லா டிவி பேட்டியிலயும் வெள்ள சொன்னான். அந்த அளவு அவர் அந்த கேரக்டரோட கேரக்டரா மிங்கிள் ஆயிட்டார். படம் கேக்கவே வேண்டாம். அப்படி ஒரு ஹிட். வசூல் கன்னாபின்னான்னு எகிறிருச்சு. இந்தி, தெலுங்கு டப்பிங் உரிமை இதுவரை இல்லாத அளவுக்குப் பேசப்படுதுன்னு பத்திரிகைல எழுதினாங்க. அப்புறம்தான் அது வெள்ளைக்கே தெரிய வந்துச்சு.

கப்ஸா காந்தின் நடிப்புத் திறமை இவ்வளவு நாளும் வெளியவே வரலன்னு எல்லோரும் சொன்னாங்க. படத்தில் தென்பட்ட பின் நவீனக் கூறுகளை எல்லாம் புத்திசாலி விமர்சகர்கள் பூதக் கண்ணாடியால பார்த்துப் பார்த்து புட்டு புட்டு வச்சாங்க. அப்பதான் ஒரு பூதம் கெளம்புச்சு. படத்தின் கதை தன்னோடதுன்னு ஒருத்தரு கெளம்பி வந்தாரு. வெள்ளைக்கு ஒண்ணுமே புரியல. ஆனாலும் இதை அப்படியே விடக் கூடாதுன்னு பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு பண்ணினான். அந்தக் கதைக்காக தான் பட்ட பாடெல்லாம் சொன்னான். ஒரு பாட்டில் ரத்தத்தை வித்து ஒரு பாட்டில் மை வாங்குனத சொன்னபோது, எளகுன மனசு கொண்ட ஓரிரு செய்தியாளர்கள் கர்சீப்பால் கண்களைத் தொடச்சுக்கிட்டாங்க.

தன்னோட பேட்டிய டிவியில பாத்த வெள்ளைக்கு சட்டென்று பல்பு எரிந்தது, அடுத்த படத்துல தானே கதாநாயகனா நடிக்கணும்னு முடிவுபண்ணிட்டான்.

தி இந்துவில் வெளியானது.

வெள்ளி, நவம்பர் 07, 2014

அதுல எம் பேரு இருக்கா?

ஊரே ஒரே பரபரப்பா இருந்துச்சு. எல்லாரும் பட்டியலப் பத்தியே பேசுனாங்க. வழக்கமாவே வெகுளி வெள்ளச்சாமிக்கு ஒண்ணும் புரியாது. இட்லிய வச்சு கம்யூனிசத்த விளக்கும் பட வசனம்கூட அவனுக்கு கம்யூனிசம்னா என்னன்னு புரியவைக்க முடியலன்னா பாத்துக்கோங்களேன். அவன் அவ்வளவு வெகுளி. 

வெளுத்ததெல்லாம் விலை உயர்த்தப்பட்ட பால்னு நினைக்கிற ரகம். லாண்டரியில் உள்ள வெளுத்த உருப்படியக்கூட பால்னு நினைச்சிருக்கான். அப்டியாப்பட்ட ஆளுதான் அண்ணன் வெள்ள. அவனுக்கு இந்தக் கறுப்புப் பணம் கறுப்புப் பணம்னு சொல்றாங்களே, அது என்ன, அத ஏன் விக்ஸ் பேங்குல போட்டு வைக்கிறாங்கன்னு ஒரே ஆச்சரியம். 

அவனோட ஆத்ம நண்பனிடம் கேட்டு விளக்கம் பெறலாம்னு நினைத்து அவனைப் பார்க்கப் போனான். அந்த நண்பனால கறுப்புப் பணம் பத்தி ஒண்ணும் சொல்ல முடியல. ஆனா அத போட்டு வச்சிருக்கும் இடம் விக்ஸ் பேங்கு இல்ல சுவிஸ் பேங்குங்குற விஷயத்தை மட்டும் விவரமா சொன்னான். அப்படியான்னு கேட்ட வெள்ள சுவிஸ் பேங்குக்கே போய் விஷயத்தைத் தெரிஞ்சுக்கலாம்னு யோசிச்சான். 

ஆனா இதப் போய் யாருட்டயும் கேட்க வேண்டாம். நாமளே தேடிப் பாக்கலாம்னு முடிவு பண்ணினான். தெருத் தெருவா அலஞ்சான். அந்த ஊரில் எஸ்பிஐ இருந்துச்சு, எஸ் பேங்க் இருந்துச்சு, இன்னும் என்னவெல்லாமோ பேங்க் இருந்துச்சு. முழு ஊரையும் சுத்திப் பாத்துட்டான் சுவிஸ் பேங்க காணவே இல்ல. கறுப்புப் பணத்தைப் போல் பேங்கையும் பதுக்கிட்டாங்களோன்னு அவனுக்குப் பலத்த சந்தேகம் வந்துருச்சு. 

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்கிற லெவலுக்குப் போயிட்டான். வெள்ளச்சாமி வெகுளியா இருந்தாலும் ஓவியம் வரையத் தெரிஞ்சவன். அதனால நெறங்களப் பத்தி அவனுக்கு நல்லாத் தெரியும். கறுப்புப் பணம்னு சொல்றாங்க அதனால அது கறுப்பாத்தான் இருக்குங்கிறதுல அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் அது ஏன் கறுப்பா இருக்குதுங்கிறத தெரிஞ்சுக்க ஆசைப்பட்டான்.

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரத்தைப் போய் பார்த்தான். அவர் ஓர் எழுத்தாளர். உட்கார்ந்த இடத்துல இருந்தே உலக விஷயங்களை எல்லாம் பின்னிப் பெடலெடுக்குற ஆளு. அவரிடம் போய் வெள்ள நின்னான். டெய்லி ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவிக்கும் அந்த எழுத்தாளரிடம் வெள்ள கேட்ட கேள்விகளால பாவம் வெலவெலத்துப் போயிட்டார். 

புராணங்களை எல்லாம் கரைத்துக் குடித்திருந்த அந்த எழுத்தாளருக்குத் திருவிளையாடலில் சிவனே வந்து கொசுக்கடி தாங்காம ஒரு பாட்ட எடுத்து விட்ட மாதிரி, வெள்ள கடவுளோட அவதாரமோன்னு சந்தேகம் வந்துருச்சு. அவன அன்பா உபசரிச்சு, சாப்பாடு போட்டு, அனுப்பிவச்சுட்டாரு. நேரில் கண்ட இறைவன்ங்கிற பேரில் ஒரு கட்டுரை எழுதி அதை இணையத்துல போட்டாரு. போட்ட மாத்திரத்தில அத வாசகர்கள் வரிஞ்சு கட்டிட்டுப் படிச்சாங்க. லட்சக்கணக்கான ஷேர். சரி அதவிடுங்க வெள்ள விஷயத்துக்கு வருவோம். 

வழியில் வெள்ள ஒரு பத்திரிகைக்காரரைப் பார்த்தான். அவருக்குக் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும்னு நெனச்சி அவர்ட்ட விவரம் கேட்டான் வெள்ள. அது ஒண்ணுமில்ல வெள்ள, பணக்காரங்க பணத்தை மத்தவங்க கண்ணுல படாம பாதுகாக்கிறதுக்காக மண்ணத் தோண்டி புதைச்சு வச்சிருவாங்க. அப்போது தூசு துப்பட்டன்னு அதுல துரு ஏறிரும். 

அதனால அது கறுப்பா மாறியிரும்னு தனக்குத் தெரிந்த விஞ்ஞான அறிவை வைத்துச் சொன்னாரு. வெள்ளைக்கு ஓரளவு புரிஞ்ச மாதிரி இருந்துச்சு. தனக்கு இது தோணாமப் போச்சேன்னு அவனுக்கு ரொம்ப வெட்கமாப் போச்சு. இவ்வளவு அறிவு இருப்பதால்தான் பத்திரிகையில் வேலை பார்க்க முடியுதுபோல் என நினைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான். 

கறுப்புப் பணம் பத்தி தெரிஞ்ச வெள்ள மறு நாள் பேப்பர் வாங்க அதிகாலையிலேயே பேப்பர் கடையில போய் நின்னான். பேப்பர வாங்கி பிரிச்சுப் பார்த்த வெள்ளைக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுப்போச்சு. அவன் பேரில் விக்ஸ் பேங்குல அதான் சுவிஸ் பேங்குல ரூ.50,000 கோடி இருந்துச்சுன்னு அதுல போட்டிருந்தாங்க. தான் ஒருவேளை சாப்பாடு இல்லாம ஒரு ரூபாய் இட்லி சாப்பிட்டு வாழுறோம், நம்ம பேருல ரூ.50,000 கோடியான்னு அதிர்ச்சியில அவன் மயக்கம்போட்டு விழுந்துட்டான். 

தி இந்துவில் வெளியானது.

வியாழன், செப்டம்பர் 18, 2014

பிக் பாக்கெட்

குற்றமல்ல கலை





பலவீனமான மனிதன் மிஷெலின் குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாமல் பிரியத்தின் காரணமாக அவனை வந்தடைகிறாள் ஜியன். இந்த இரண்டு ஆன்மாக்களும் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ளும் வித்தியாசமான பயணம்தான் 1959-ல் படமாக்கப்பட்ட ராபர்ட் பிரெஸ்ஸன்னின் பிக்பாக்கெட். காதலில் ஈடுபடுவதைவிட ஈர்ப்புடன் அவன் பிக் பாக்கெட் அடிப்பதில் ஈடுபடுகிறான். அவனைப் பொறுத்தவரை பிக் பாக்கெட் அடிப்பதால் உச்சச்கட்ட பரவசம் கிடைக்கிறது; அவனுக்கு அது ஓர் ஆன்மிக அனுபவம். பியோதர் தஸ்தோயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் ஈர்ப்பு காரணமாகவே இத்திரைப்படத்தை பிரெஸ்ஸன் உருவாக்கியுள்ளார். படமாக்கப்பட்ட விதத்தால் உலகத்தின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக பிக்பாக்கெட் மாறுகிறது.

கத்தோலிக்கரான ராபர்ட் பிரெஸ்ஸன் பிரெஞ்சு புதிய அலை சினிமாவின் இயக்குநர்களில் ஒருவர். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் 18 மாதங்களை ஜெர்மனியின் சிறைக் கொட்டடியில் கழித்தவர். மதம் போதிக்கும் அறத்தை, நியாயத் தீர்ப்பு என்னும் கோட்பாட்டை அர்த்தம் தொனிக்கும் தீவிரக் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார். ஆனால் கேள்விகள் வெளிப்படையாய் ஒலிப்பதில்லை; படத்தின் இருளில் மறைந்துகிடக்கின்றன. பின்னணி ஒலியும் காட்சிகளில் படரும் இருளும் ஒளியும் படத்தைப் பொருள்மிக்கதாக்குகின்றன.


படம் வாழ்வு குறித்த ஆழ்ந்த தத்துவக் கருத்துகளை மனதில் எழுப்புகிறது; மோதவிடுகிறது. தனிமனித ஆசைக்கும் சமூகம் வலியுறுத்தும் விழுமியங்களுக்கும் இடையில் அலைபாயும் வாழ்வின் ஊசலாட்டமும் உளவியல் சிக்கலும் காட்சிகளுக்கிடையே பொதிந்து கிடக்கின்றன.

நவீன உலகில், விருப்பமான வாழ்வுக்கும் விதிக்கப்படும் வாழ்வுக்கும் இடையில் காணப்படும் இட்டு நிரப்ப முடியாத இடைவெளியின் வெம்மையை உணர்த்துகிறது மிஷெலின் வாழ்க்கை. ஒல்லியான உருவம், ஒடுங்கிய முகம், கூர் நாசி, எப்போதும் கூச்சத்தில் மூழ்கிக் கிடப்பது போன்ற தோற்றம், மற்றவரின் கவனத்தை ஈர்க்க விரும்பாத எண்ணம் ஆகியவை கொண்டவன் மிஷெல். அவன் தன்மீது வைத்திருப்பதைவிடத் தன் தாய்மீது அதிகப் பிரியம் வைத்திருக்கிறான் அதே நேரத்தில் அவளை அடிக்கடி சென்று பார்ப்பதைத் தவிர்க்கிறான். தாய் இறந்த பின்பு அந்தத் தேவாலயத்தில் மிஷெலின் கண்களிலிருந்து வழிந்து கன்னத்தில் படர்ந்திருக்கும் கண்ணீர்க் கறையும் கேவல் மிக்க பார்வையும் பின்னணியில் ஒலிக்கும் துயரார்ந்த இசையும் அவனது துன்பத்தை மட்டுமல்ல அவனது பிரியத்தையும் துல்லியமாகச் சொல்கின்றன. மிஷெலை உருவாக்கியவர் பிரெஸ்ஸன். சிருஷ்டித்தாரெனில் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர் மார்ட்டின் லசால். அவர் தொழில்முறை நடிகரல்ல, ஆனால் பிரெஸ்ஸனின் மனதிலிருந்த மிஷெல்லைத் திரையில் அப்படியே கொண்டுவந்திருக்கிறார்.



சாதாரண குற்றச் செயல் எனப் புரிந்துகொள்ளப்படும் பிக் பாக்கெட் அடிப்பதை அவன் தொழிலாகப் பாவிக்கிறான். அதன் அத்தனை நுணுக்கங்களையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்றுத் தேர்ந்துகொள்கிறான்; அதில் வெற்றிபெறுகிறான்; தோல்வியுறுகிறான்; அவமானப்படுகிறான்; எல்லாமும் நிகழ்கிறது. தர்க்கத்தின்பால் ஈர்க்கப்படும் மனதைப் புறந்தள்ளி, மிஷெலை அவனது ஆசாபாசங்களுக்கு உட்பட்ட நிலையிலேயே நடமாட வைத்துள்ளார் ராபர்ட் பிரெஸ்ஸன். மிஷலின் நடை, உடை, பாவனைகள் அவனை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. ஆனால் அவன் அவர்களில் ஒருவன். இந்த முரண்தான் பிக் பாக்கெட் படத்தின் உணர்வுபூர்வ இழை. அறிவுக் கத்தியால் சம்பவங்களைக் கூறுபோட நினைக்கும் தர்க்க மனதைச் சர்வ சாதாரணமாக ஏமாற்றி ஒரு கலைஞனாக மிளிர்கிறார் ராபர்ட் பிரெஸ்ஸன்.

மிஷெல் சாதாரணமானவன். ஆனால் அவனது செயல் அவனை சூப்பர்மேனாக உணரச் செய்கிறது. அந்தப் பரவசம் மீண்டும் மீண்டும் அவனை அச்செயலில் ஈடுபடச் செய்கிறது. அவன் வாழ்ந்ததற்கான பொருளை அச்செயல் அவனுக்கு அளிக்கிறது. அவன் வேறு வேலை செய்து பிழைத்திருக்க முடியும். ஆனால் அவன் பிக்பாக்கெட் அடித்தே வாழ்கிறான். அதன் பின்னணியிலிருக்கும் அத்தனை ஆபத்தையும் மீறி அவனுக்குச் சாகசச் செயல் செய்த திருப்தி கிடைக்கிறது. வேறு எந்த வேலையிலும் கிடைக்காத திருப்தியை அவன் பிக்பாக்கெட் அடிக்கும் போது உணர்கிறான். அது அவனை ஆட்கொள்கிறது. பிக்பாக்கெட் அடிக்கும் தொழிலை அவன் தேர்ந்தெடுக்கவில்லை. அந்தக் கலை அவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. துயரத்தின் கதவை அவனாகவே சென்று தட்டுகிறான். அதை அவன் தவிர்த்திருக்கலாம் ஆனால் அவனால் தவிர்க்க இயலவில்லை. அந்த மாயச் சூழல் அவனை வழிநடத்துகிறது. சமூகப் பார்வையில் அது ஒரு பொறி, அதில் அவனாகச் சென்று சிக்குகிறான். பொறிக்குள் மாட்டிக்கொள்வதில் அவனுக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியே அவனது துக்கமாகவும் மாறுகிறது. துக்கம் தரும் மகிழ்ச்சியில் திளைக்கிறான் மிஷெல். இது புதிரானது, புரியாதது. ஆனால் தனது படத்தின் காட்சிகளில் இந்தப் புரிதலைப் புதைத்துவைத்துள்ளார் இயக்குநர் பிரெஸ்ஸன். அர்த்தமற்ற வழக்கங்களுக்குள் புகுந்துகொண்டு வர மறுக்கும் அபத்தத்தை அனாயாசமாக விளக்குகிறார் பிரெஸ்ஸன்.

தி இந்துவில் வெளியானது

செவ்வாய், ஆகஸ்ட் 05, 2014

நைட் டிரெயின் டூ லிஸ்பன்

பரவசம் தரும் தேடல்


சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் பாஸ்கல் மெர்ஸியர் எழுதிய நாவல் நைட் டிரெயின் டூ லிஸ்பன். இந்த நாவல் ஜெர்மனியில் 2004-ல் வெளியானது. இதே நாவல் 2008-ல் ஆங்கிலத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது; பெஸ்ட் செல்லர் நாவல் என்னும் பெருமையும் கிடைத்தது. இந்த நாவலை இதே பெயரில் படமாக்கினார் டென்மார்க்கைச் சேர்ந்த இயக்குநர் பில்ல ஆகஸ்ட் (Bille August). இப்படம் முதலில் 2013 பிப்ரவரியில் ஜெர்மனியில் நடைபெற்ற பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

ரெய்மென்ட் கிரெகோரியஸ் என்பவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர். அவர், லத்தீன், ஹீப்ரு போன்ற பழங்கால மொழிகளில் நல்ல பரிச்சயம் கொண்டவர். மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் தனியே வசித்துவருகிறார். படத்தின் தொடக்கத்தில் அவர் அவருடனேயே செஸ் விளையாடுவார். அவரது தனிமையை உணரும்போது மனத்தில் மெல்லிய சோகம் ததும்பும். ஒருநாள் அவர் வழக்கம்போல் கல்லூரிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். மழை பொழிந்துகொண்டிருக்கிறது. அவர் செல்லும் வழியில் உள்ள ஆற்றுப் பாலத்தின் மேல் ஒரு பெண் கீழே உள்ள ஆற்றில் குதித்து உயிரைவிட யத்தனிக்கிறாள். இதைப் பார்த்த கிரெகோரியஸ் பாய்ந்து சென்று அவளைத் தடுத்துத் தன்னுடன் அழைத்துவருகிறார். வகுப்பறையில் அவளை ஓரமாக அமர்த்திவிட்டு வகுப்பெடுக்கத் தொடங்குகிறார். சிறிது நேரத்தில் அவள் சென்றுவிடுகிறாள். ஆனால் அவள் அணிந்திருந்த சிவப்பு ரெயின் கோட்டை மறந்துவிட்டுப் போய்விடுகிறாள்.



அவளது கோட்டில் புத்தகமும் அதில் போர்ச்சுகலின் நகரான லிஸ்பனுக்குச் செல்லும் டிரெயின் டிக்கெட் ஒன்றும் உள்ளன. கிரெகோரியஸ் ரயில் நிலையத்திற்கு விரைகிறார். ரயில் கிளம்பும் சமயம். அவள் அங்கு இல்லை. வகுப்பறையைப் பாதியில் விட்டு வந்த அவர் சிறிதும் யோசனையின்றிச் சுமார் 2000 கி.மீ. தள்ளியுள்ள ஊருக்குப் போக அந்த ரெயிலில் ஏறிவிடுகிறார். அந்தப் பயணத்தின்போது அவர் வாசித்த அந்தப் புத்தகம் அவரது வாழ்வை மாற்றிப்போடுகிறது; அவரை அவருக்கே அடையாளம் காட்டுகிறது. அவருக்குள் உறைந்துபோயிருந்த பல வாசகங்களை அந்தப் புத்தகத்தில் அவர் உயிர்ப்புடன் கண்டு திகைக்கிறார். ஒரு பரவசமான உலகம் அவரை உள்ளிழுத்துக்கொள்கிறது. இது ஒரு கதை.

மற்றொரு கதை அந்தப் புத்தகத்தின் வழியே விவரிக்கப்படுகிறது. அதில் நாயகன் டாக்டரான அமெதேயு தே அல்பிரதோ. ஜோர்ஜ், ஜோவோ ஆகியோர் அவனுடைய தோழர்கள். ஜோர்ஜின் மனைவி எஸ்தபேனியா. அவர்களுக்குள் உள்ள உறவும் போர்ச்சுகல் சர்வாதிகாரி அன்டோனியோ தே ஒலிவெய்ரா சலசாரின் வலது சாரி ஆட்சிக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டமும் அதன் பாதிப்புகளும் சொல்லப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாட்டில் நீதிபதியாக இருப்பவர் அமெதேயுவின் தந்தை. சல்சாருக்கு எதிரான தனது கண்டனத்தைத் தந்தை எதிரே உள்ளபோதே சபையில் உரையாக முன்வைக்கிறார். இதனால் தந்தைக்கும் தனயனுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.
சர்வாதிகாரத்தின் தாக்கமும் நெருக்கமான நண்பர்களிடையே பெண்ணால் ஏற்படும் துரோகம், காதல், உறவு, பிரிவு ஆகியவையும் தத்துவார்த்தமாகவும் கவிமொழியிலும் காட்சிகளாகியுள்ளன. எஸ்தபேனியா எல்லாவற்றையும் மறக்காமல் நினைவில்வைத்திருக்கிறாள்.



மறைமுகப் போராட்டம் நடத்தும்போது அனைவரது முகவரியையும் தொடர்புஎண்களையும் அவள் மனதிலிருந்தே எடுத்துப் போடுகிறாள். அந்த ஞாபகங்கள் அவளுக்கு மறப்பதேயில்லை. படத்தின் தனித்துவமான கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று. படத்தில் இந்த இரு கதைகளும் மாறிமாறி, இறந்த காலமும் நிகழ்காலமும் பின்னிப்பிணைந்து வந்து செல்லும். தேடலை அடித்தளமாகக் கொண்டிருந்தும் ஒரு த்ரில்லரின் தன்மையையும் கொண்டிருப்பதால் மாறுபட்ட படமாகிறது. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு சம்பவங்களை வெளிப்படுத்தும் தனித்தனியே துண்டு துண்டாகத் தெரியும் சம்பவங்களால் உருவாகும் முழு சித்திரம் படத்தில் வெளிப்படும் தருணத்தில் ஒரு முழுமையை உணர முடியும். அந்த முழுமை படம் குறித்தது மாத்திரமல்ல வாழ்வு குறித்ததுமாகும்.

இப்படம் உங்களை உற்சாகப்படுத்தும் படமல்ல, ஆனால் உள்முகப்படுத்தும் படம். உங்களது வாழ்வைப் பரிசீலிக்க வைக்கும் படம். படத்தின் கவித்துவமான, தத்துவார்த்தமான வசனங்களும் தொனியும் உங்கள்மீது நறுமணமாகப் படரும். அது உங்கள் உதிரத்தில் கலந்து மூளையைக் கலக்கும். அர்த்தமற்ற வாழ்வின் அர்த்தங்களைச் சொல்லிடத் துடிக்கும். அறத்திற்கும் கடமைக்கும் இடையேயான ஊசலாட்டத்தை உணர்த்தும். உறவு முக்கியமா, உண்மை முக்கியமா என்னும் கேள்விகளை எழுப்பும். தருணங்களால் ஆன வாழ்வில் திட்டமிடாமல் நம்மை இயக்கும் உள்ளுணர்வைப் புரிந்துகொண்டு செயல்படுபவர்களுக்கு வாழ்க்கை தனது பரவசத்தைத் தர காத்திருக்கும் உண்மையை உணர்த்தும்.

தி இந்துவில் வெளியானது

புதன், ஜூலை 23, 2014

தேசிய விடுதலை இயக்கத்தின் பிதாமகர்

பால கங்காதர திலகர் பிறந்தநாள் ஜூலை 23


சுதந்திரம் எனது பிறப்புரிமை என முழங்கிய பால கங்காதர திலகர் 1856-ம் ஆண்டு ஜூலை 23 அன்று பிறந்தார். சிப்பாய்க் கலகம் ஏற்படுவதற்கு ஓர் ஆண்டு முன்னர் பிறந்த திலகர் ஓர் அறிஞர்; கணிதத்தில் புலமை மிக்கவர்; தத்துவவாதி; தேசிய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். மராட்டிய மாநிலம் ரத்தினபுரியில், நடுத்தர வர்க்கத்துப் பிராமணக் குடும்பத்தில் பிறந்த திலகர் சிறு பிராயத்திலிருந்தே அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்தார். நேர்மையும் உண்மையும் கடைப்பிடிக்கத் தகுந்தவை என எண்ணி இறுதிவரை செயல்பட்டார். பத்து வயதில் தாயை இழந்த திலகர் பதினாறு வயதில் தந்தையையும் இழந்தார்.

பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் டெக்கான் கல்லூரியில் சேர்ந்து 1877-ல் பி.ஏ. கணிதம் பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் பயின்றார். ஆனால் திடீரென்று கணித ஆசிரியராக முடிவுசெய்தார். பூனாவில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்குக் கணிதத்தைக் கற்பித்தார். மேற்கத்திய கல்வி முறை இந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாழ்படுத்துவதாக எண்ணினார். இந்தப் பள்ளி வாழ்வே அவரது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டது. இந்தப் பள்ளியைத் திலகர் கல்லூரியாக உயர்த்தப் பாடுபட்ட திலகர் அதில் வெற்றியும் பெற்றார். நல்ல கல்வியே சிறந்த குடிமக்களை உருவாக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டார் திலகர். அதனால் தன் தோழர்களான அகர்கர், சமூக சீர்திருத்தவாதி விஷ்ணுசாஸ்திரி சிப்லங்கர் ஆகியோர் ஒத்துழைப்புடன் டெக்கான் எஜுகேஷன் சொஸைட்டி என்னும் அமைப்பை உருவாக்கி அநேகருக்கு ஆங்கில மொழியையும் முறையான கல்வியையும் கற்றுக்கொடுத்தார்.

ஆங்கிலேய ஆட்சியின் அலங்கோலங்களைக் கண்ட திலகர் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என விரும்பினார். இதனால் கேசரி, மராத்தா என்னும் இரண்டு வார இதழ்களை நடத்தினார். கேசரி மராட்டிய மொழியிலும் மராத்தா ஆங்கில மொழியிலும் வெளிவந்தது. இவற்றின் மூலம் திலகர் வெளிப்படுத்திய கருத்துகள் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வையும் விடுதலை வேட்கையையும் உருவாக்கின. உறங்கிக் கிடந்த தேசத்தின் ஆன்மைவைத் திலகரின் எழுத்துகள் உலுக்கின. 1890-ல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.


தேசம் முழுவதும் ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான மனநிலையை உருவாக்கவும் தேசியவாத இயக்கம் பரவவும் மக்களை ஒன்று திரட்டவும் அவர் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டையும் வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் பயன்படுத்திக்கொண்டார். இவரது முயற்சியால் தேச விடுதலைப் போராட்ட மனநிலை நாடு முழுவதும் உருவானது. இதனால் சினம் கொண்ட ஆங்கிலேய அரசு 1897-ல், சட்டம் ஒழுங்கைக் குலைப்பதாகவும் சமூக ஒழுங்குக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தி அவரைச் சிறையிலடைத்தது. ஆனால் சிறை சென்ற அவருக்கு லோகமான்ய அதாவது மக்களால் விரும்பப்படும் தலைவர் என்னும் அடைமொழி கிடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் 1905-ல் கர்சன் பிரபு கொண்டுவந்த வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து சுதேசி இயக்கத்தைத் திலகர் தீவிரமாக முன்னெடுத்தார்.

1906-ல் தேசத் துரோகக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி மீண்டும் திலகரை பர்மாவில் உள்ள மண்டலே சிறையிலடைத்தது ஆங்கிலேய அரசு. அப்போது கீதாரகசியா என்னும் நூலை எழுதினார். சிறையிலிருந்து வெளிவந்த திலகர் தீவிரவாதிகளையும் மிதவாதிகளையும் ஒன்றிணைக்கப் போராடினார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. 1916-ல் ஹோல் ரூல் இயக்கத்தைத் தொடங்கி இந்தியா முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்றார். 1919-ல் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலை திலகரைக் கடுமையாகப் பாதித்தது. 1920-ம் ஆண்டு ஆகஸ்டு 1 அன்று திலகர் காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பம்பாயில் இருந்த அவரது இல்லத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்