மனசுக்குள் காயம் ஏற்படும்போதெல்லாம்
ஒரு மாயக் கரம் வந்து
மருந்து போட்டுவிட்டுப் போகிறது
அந்தக் கம்பீரமலை கலங்கி அழும்போதெல்லாம்
கண்ணுக்குத் தெரியாத சுட்டுவிரல் ஒன்று
தொட்டுத் துடைத்துவிட்டுப் போகிறது
மனசுக்குள் காயம் ஏற்படும்போதெல்லாம்
ஒரு மாயக் கரம் வந்து
மருந்து போட்டுவிட்டுப் போகிறது
அந்தக் கம்பீரமலை கலங்கி அழும்போதெல்லாம்
கண்ணுக்குத் தெரியாத சுட்டுவிரல் ஒன்று
தொட்டுத் துடைத்துவிட்டுப் போகிறது



"சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்குவது ஆசிரியர்களே"
இன்றைய நாளிதழ் ஒன்றில் மேற்கண்ட தலைப்பு இடம்பெற்றிருந்தது.
இந்தத் தலைப்பு கீழ்க்காணும் வகையில் அமைந்திருந்தால் அது சிறப்பு:
"சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்குபவர் ஆசிரியரே"
இரண்டு தலைப்புகளுக்கும் என்ன வேறுபாடு? நாளிதழின் தலைப்பில் ஆசிரியரை அஃறிணை ஆக்கியிருக்கிறார்கள்; ஆனால், ஆசிரியர் உயர்திணை.

தமிழில் மெய்யெழுத்து எப்படிச் சொல்லுக்கு முதலில் இடம்பெறாதோ அப்படி உயிரெழுத்து சொல்லுக்கு இடையில் இடம்பெறாது. ஆகவே, மறு ஆய்வு, இட ஒதுக்கீடு என்று இந்தச் சொற்களைப் பிரித்துதான் எழுத வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஏ.ராஜ்குமார் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். 1964 ஆகஸ்ட் 23 அன்று செல்வராஜன் கண்ணம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் அவர். அவரது இசையில் ஒலித்த ‘பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா…’ என்ற ‘புதுவசந்தம்’ படப் பாடல் அதுவரையிலான தமிழ்த் திரைப்படத்தின் பாடல்களிலிருந்து வேறுபட்டு ஒரு புத்துணர்வைத் தந்தது. ‘இது முதன்முதலா வரும் பாட்டு’, ‘ஆயிரம் திருநாள்’, ‘போடு தாளம் போடு’ போன்ற பாடல்களும் அலுக்க அலுக்கக் கேட்டு ரசித்தவை. ஆனால், அது இவரது முதல் படமல்ல. இந்தப் படத்துக்காகவும் இதன் கன்னட மறு ஆக்கப் படமான ‘ஸ்ருதி’க்காகவும் இவர் ஃபிலிம்பேர் விருதுபெற்றிருக்கிறார். பதின் பருவத்தில் கேட்ட இந்தப் படத்தின் பாடல்களில் தொனித்த தனித்துவம் காரணமாக இவை மனத்துக்கு நெருக்கமாக இருந்தன. கதாபாத்திரங்களுக்குத் தேவையான ஜீவனைச் சுமந்து வந்த இசை என்பதால் இருக்கலாம்.
‘லாலல்ல
லலலா லாலல்ல லலலா’ என்னும் விக்ரமன் படத்துக் குழுவோசை கேட்கும்போதெல்லாம் மனம் தானாக
எஸ்.ஏ.ராஜ்குமாரை நினைந்து மீளும். பாடல்களின் சிறப்பைச் சேர்க்கும் விதமாக இப்படியான
குழுவோசையை அதிகப்படியாகப் பயன்படுத்தியவர் இவர். விக்ரமன் படத்து இசையமைப்பாளர் என்று
இவர் அறியப்பட்டபோதும் இவரை முதலில் அறிமுகப்படுத்தித் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தவர்கள்
ராபர்ட் ராஜசேகரன் இரட்டை இயக்குநர்கள். தெக்கத்தி நகரங்களிலும் கிராமங்களிலும் செல்லும்
வாகனங்களில் இளையராஜாவின் பாடல்களுக்கு இணையாக எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்த பாடல்களும்
இசை சேவை செய்தன.
இளையராஜா
கொடிகட்டிப் பறந்த காலத்தில் சங்கர் கணேஷ், சந்திரபோஸ் போன்றோரைப் போல ஓர் இசையமைப்பாளராக
அறிமுகமாகிப் பல வெற்றிகளைப் பெற்றவர் இவர். டி.ராஜேந்தரைப் போல இவரும் ஒரு கவிஞனாக
இருப்பதால் இசையமைப்பாளராக அறிமுகமான தொடக்க காலத்தில் இவர் இசையமைத்த படங்களில் பெரும்பாலான
பாடல்களை இவரே எழுதியுள்ளார். பல பாடல்களுக்குத் தொடக்கத்தில் இசைக்காக இவர் எழுதிய
டம்மியான வரிகளே இறுதிப்பாடலாக வடிவம் பெற்றுள்ளனவாம். பழனிபாரதி, முத்துலிங்கம் போன்ற
பாடலாசிரியர்களுடன் இணைந்து ஒவ்வொரு வரியாக ஒருவர் மாற்றி ஒருவர் எழுதிய அனுபவமும்
இவருக்கு இருந்திருக்கிறது.
சூப்பர்
குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக 36 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்திருக்கிறார்.
‘பூவே உனக்காக’ இவரது ஐம்பதாம் படம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனக் கிட்டத்தட்ட 250 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
‘ஆனந்தம்’ திரைப்படத்தில் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ என்னும் பாடல் மூலம்
பிரபலக் கவிஞர் யுகபாரதியைப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியவர் இவர்தான். இதைப் போல்
பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்தி ஆனந்தமடைந்தவர் ராஜ்குமார்.
அவர் முதன்முதலில் இசையமைத்த ‘சின்னபூவே மெல்லபேசு’ படம் 1987 ஏப்ரல் 17 அன்று வெளியானது. ராபர்ட் ராஜசேகரன் இயக்கிய, கல்லூரிக் காதலைக் கதைக் களமாகக் கொண்ட இந்தப் படத்தில் அவரது இசைக்கு முக்கியப் பங்குண்டு. படத்தில் மொத்தம் பத்துப் பாடல்கள். சோகம், கும்மாளம், டூயட், கலாட்டா எனப் பல வகையான சூழலுக்கு ஏற்ற பாடல்களைத் தந்து அசத்தியிருப்பார் எஸ்.ஏ.ராஜ்குமார். எஸ்.பி.பாலசுப்ரமணியன், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், எஸ்.பி.ஷைலஜா ஆகியோருடன் சுந்தர்ராஜன், தினேஷ் எனும் பாடகர்களையும் அறிமுகப்படுத்தியிருந்தார். தினேஷ் பாடிய ‘கண்ணே வா பாடிவருவது உன் கீதம்’ பாடலை கம்ப்யூட்டர் துணையுடன் உருவாக்கியிருப்பார். அந்தப் பாடல் உருவாக்கத்தில் உதவியவர் அவரது கீ போர்டு பிளேயரான திலிப். திலிப் வேறு யாருமல்ல ஏ.ஆர்.ரஹ்மான்தான். இந்தப் படத்தின் அசோசியேட் இசையமைப்பாளர் வித்யாசாகர். ‘ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படுதாயி’ என்னும் சோகப் பாடலை எஸ்.ஏ.ராஜ்குமாரே பாடியிருப்பார். இசையமைப்பாளர்களுக்கேயான தனித்துவமான குரலில் அந்தப் பாடல் இரவில் ஏகாந்தத்துக்கு ஏற்றது. இந்தப் படத்தை திருநெல்வேலி ராயல் தியேட்டரில் பார்த்திருக்கிறேன்.
‘இன்னிசை
பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை’ என்னும் பாடல் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில்
நான்குமுறை இடம்பெறும். இதே படத்தில் ‘இருபது கோடி நிலவுகள் சேர்ந்து பெண்மை ஆனதோ’
என்னும் மேற்கத்திய சாயல் கொண்ட வைரமுத்து எழுதிய பாடல் குறிப்பிடத்தகுந்தது. ‘ரோசாப்பூ
சின்ன ரோசாப்பூ’ பாடல் ‘சூர்யவம்சம்’ படத்தில் மூன்றுமுறை இடம்பெறும். ‘சூர்யவம்சம்’
படத்துக்காகத் தமிழக அரசின் விருதைப் பெற்றிருக்கிறார். ஒரே பாடலை ஒன்றுக்கு மேற்பட்ட
முறை பயன்படுத்தும் இந்தப் போக்கு எல்லாம் இப்போது திரைப்படங்களில் பார்க்க இயலாதவை.
இயக்குநர்கள்
ராபர்ட் ராஜசேகரன், விக்ரமன் ஆகியோரது முதல் படங்களுக்கு இசையைத் தந்திருந்த இவர்தான்
கே.எஸ்.ரவிகுமார், லிங்குசாமி, எழில், ராஜகுமாரன், எஸ்.பி.ராஜ்குமார் ஆகியோரது முதல்
படங்களுக்கும் இசையமைத்தவர்.
நடிகர்
விஜயின் ‘பூவே உனக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பிரியமானவளே’ போன்ற படங்களுக்கும்
அஜித் நடித்த ‘அவள் வருவாளா’, ‘ராஜா’ போன்ற படங்களுக்கும் இசையமைத்தவர் இவர். ‘பிரியாத
வரம் வேண்டும்’, ‘வானத்தப்போல’, ‘பிரியமான தோழி’, போன்ற படங்களும் ‘போறவளே பொன்னுத்தாயி’
(‘இரயிலுக்கு நேரமாச்சு’), ‘பொன் மாங்குயில்’ (‘மனசுக்குள் மத்தாப்பு’) ‘மனம் பாடிட
நினைக்கிறதே’ (‘பறவைகள் பலவிதம்’) ‘செவ்வந்தி மாலை கட்டு’ (‘தங்கத்தின் தங்கம்’), ‘பூவே
இது காற்றின் கீதம்’ (‘முதல் பாடல்’), ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா’ (‘பெண்ணின்
மனதைத் தொட்டு’), ‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு’ (‘மறுமலர்ச்சி’) போன்ற
பாடல்களும் எஸ்.ஏ.ராஜ்குமாரை இசை ரசிகர்களின் நினைவில் கொண்டுவந்து சேர்த்துக்கொண்டே
இருக்கும். அவருடைய பிறந்தநாளான இன்று அவரை மனதார வாழ்த்துவோம்.
இந்து தமிழ் திசை இணையத்தில் வெளியான கட்டுரை.
‘பைரவி’
திரைப்படம் 1978-ம் ஆண்டில் வெளியாகியுள்ளது. இதே ஆண்டில் வெளியான ‘முள்ளும் மலரும்’
போல் இதுவும் ஓர் அண்ணன் தங்கைப் படமே. ‘பைரவி’ வெளியாவதற்கு முன்னரே ரஜினி, ‘மூன்று
முடிச்சு’, ‘அவர்கள்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘16 வயதினிலே’, ‘காயத்ரி’ போன்ற பல
வெற்றிகரமான படங்களில் நடித்துவிட்டார். ஆனால், தனியான கதாநாயகனாக அவர் நடித்த முதல்
படம் என்பதே M.பாஸ்கர் M.A. இயக்கிய ‘பைரவி’யின் தனிச் சிறப்பு.
படத்தில்
ரஜினியின் பெயர் மூக்கையன். அவருக்கு ஒரு தங்கை. அவளது பெயர்தான் பைரவி (கீதா). தாயற்ற
குடும்பம். ஒரு நாள் குடிகாரத் தந்தை வைத்திருந்த பணத்தை எடுத்துத் தங்கைக்கு உணவு
வாங்கி வருகிறான் சிறுவனான மூக்கையன். இதில் ஆத்திரமடைந்த தந்தை அரிவாளை எடுத்துக்
குழந்தைகளை வெட்ட வருகிறார். அவரிடமிருந்து தப்பித்து வரும் மூக்கையன் நதியோரம் கிடந்த
பரிசலில் தங்கையை அமர்த்தி, பரிசலை ஓட்டி வருகிறான். நதியின் சுழலில் மாட்டிய பரிசல்
கவிழ்கிறது. மூக்கையனும் பைரவியும் நதியில் விழுகிறார்கள். மூக்கையன் பிழைத்துவிடுகிறான்.
தங்கை பெயர் சொல்லிக் கதறிப் பார்க்கிறான். ஆனால் பதிலேதுமில்லை. தங்கை இறந்துவிட்டதாகக்
கருதி, துயரத்துடன் தான் ஒதுங்கிய கிராமத்துக்கு வருகிறான்.
அந்த
ஊரின் பண்ணையார் குடும்பத்துப் பெண்மணி அவனுக்கு அடைக்கலம் தருகிறார். தன் மகன், மகளுடன்
மூக்கையனையும் வளர்க்கிறார் அவர். அந்த நன்றிக்கடனுக்காகவே அவன் வயதையொத்த பண்ணையார்
ராஜலிங்கம் (ஸ்ரீகாந்த்) கூடவே இருக்கிறான் மூக்கையன். அவருக்கு எதிராக யாரும் ஒரு
சொல் சொன்னாலும் மூக்கையன் வெகுண்டெழுந்துவிடுவான். அவனது அநீதிகளுக்குத் துணைபோகிறான்.
பழியேற்றுக்கொள்கிறான். ராஜலிங்கத்தின் தங்கை மீனா (Y.விஜயா). அவளுக்கு அண்ணன் செயல்
பிடிக்கவேயில்லை. மூக்கையன் மேல் பரிதாபமேகொள்கிறாள்.
அதே கிராமத்தைச் சேர்ந்த பவுனுக்கு (ஸ்ரீபிரியா) மூக்கையன் மீது காதல். அவளும் சொல்லிப் பார்க்கிறாள் ஆனால், மூக்கையன் முதலாளி விசுவாசத்தை விடுவதாக இல்லை. ராஜலிங்கத்துக்கு எதிராக நடந்துகொள்பவர்களை காட்டு பங்களாவில் அடைத்துவிடுவது மூக்கையனின் வழக்கம். அப்படியொரு நாளில், பக்கத்து ஊர் கன்னிப்பெண்ணான பாக்கியம் என்பவளைக் கரும்பு திருடியதற்காகக் காட்டு பங்களாவில் அடைக்கச் சொல்கிறான் ராஜலிங்கம். மூக்கையன் அப்படியே செய்கிறான். மூக்கையனுக்குத் தெரியாமல் அந்தப் பெண்ணைப் பாலியல் வல்லுறவுசெய்துவிடுகிறான் ராஜலிங்கம். மயக்கமுற்ற அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். பாக்கியத்தின் அண்ணன்கள் மாணிக்கமும் (சுதிர்), பழைய பண்ணை பஞ்சாட்சரமும் (சுருளி ராஜன்) அவளைக் காப்பாற்ற முயல்கிறார்கள். அவர்கள் குறித்து அறிய வந்த மூக்கையனுக்கு, தன் தங்கை பைரவி சாகவில்லை, பாக்கியம்தான் பைரவி என்ற உண்மை தெரியவருகிறது. சொந்தத் தங்கை சீரழியக் காரணமாகிவிட்டோமே என்று வருந்துகிறான்.
தன் முதலாளியிடம் தங்கைக்கு வாழ்க்கை தருமாறு கோருகிறான். அப்போதுதான் ராஜலிங்கத்தின் சுயரூபம் மூக்கையனுக்குத் தெரியவருகிறது. பாக்கியத்தை மூக்கையன்தான் வல்லுறவு செய்தான் என்று பழியை அவன்மீது போட்டு அவனைச் சிறைக்கு அனுப்புகிறான் ராஜலிங்கம். சிறையிலிருந்து தப்பிய மூக்கையன் ராஜலிங்கத்தைப் பழிவாங்கப் புறப்படுகிறான். மருத்துவமனையிலிருந்த பாக்கியத்தைக் கொன்று அந்தப் பழியையும் மூக்கையன் மேல் போடுகிறான் ராஜலிங்கம். தன் தங்கையைச் சீரழித்துக் கொன்ற மூக்கையனைப் பழிக்குப் பழி வாங்குவேன் என்று சூளுரைக்கிறான் மாணிக்கம். மாணிக்கத்திடம் மூக்கையன் மாட்டினானா, ராஜலிங்கத்தை அவனால் பழிவாங்க முடிந்ததா என்பதையெல்லாம் எஞ்சிய படம் விவரிக்கிறது.
படத்தைத் தயாரித்திருக்கும் கலைஞானம் எழுதிய கதைக்குத் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதியுள்ளார் மதுரை திருமாறன். கதையம்சம் வலுவாக உள்ள படம்தான். நகைச்சுவைக்காக சுருளிராஜன், வி.கே.ராமசாமி, மனோரமா ஆகியோர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். நகைச்சுவை பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ‘உனெக்கெல்லாம் எதுக்கு மீசை’ என்று மனோரமா கேட்கையில், ‘தானா வளருது யூரியா போட்டா வளர்க்கேன்’ என சுருளி சொல்வது நயமான பதில். வீரத்துக்கு அடையாளமான ஜல்லிக்கட்டு இந்தப் படத்தில் நகைச்சுவைக்குப் பயன்பட்டுள்ளது.
ரஜினிக்கு நல்ல கதாபாத்திரம். ரசிகர்களை ஈர்க்கும்படியான வேடம். முதலாளிக்கு விசுவாசமாக இருந்தும் சொந்தத் தங்கை மீது அவன் நடந்துகொண்ட விதம் ரஜினிக்கு ஆத்திரமூட்டும்போது அவர் விஸ்வரூபம் எடுக்கிறார். அப்போது பேசும் வசனங்களும் நடிப்பும் ரஜினியின் இமேஜை உயர்த்தியதில் பெரும்பங்காற்றியுள்ளன. இடக் கண்ணை மூடிக்கொண்டு உடல்மொழியில் ரஜினி காட்டும் ஸ்டைல் கவரக்கூடியது. தான் ஒரு சூப்பர் ஸ்டார்தான் என்பதை நிரூபிக்க தனக்குக் கிடைத்த வாய்ப்பை ரஜினி சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.
இளையராஜாவின்
இசையில் ‘கட்டபுள்ள குட்ட புள்ள…’ என்னும் காதல் பாடலும், ‘நண்டூருது நரியூருது…’ என்னும்
சோகப் பாடலும் இப்போது கேட்டாலும் அலுக்காதவை. ரஜினிக்கு டி.எம்.சௌந்திரராஜனின் குரல்தான்.
இந்தப் படத்தை எண்பதுகளின் இறுதியில் ஏதோ ஒரு கோயில் திருவிழாவுக்காக திருநெல்வேலி
மாவட்டம், இப்போது தென்காசி மாவட்டம், இலஞ்சியில், திரை கட்டி படம் போட்டபோது பார்த்திருக்கிறேன்.
அதன் பின்னர் இப்போது யூடியூபில் பார்த்தேன். படம் அலுப்பேற்படுத்தாமல் இப்போதும் சுவாரசியமாகப்
பார்க்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ரஜினி நடித்த ’வேலைக்காரன்’, ’முத்து’ போன்ற படங்களில் ரஜினி ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்கு இந்தப் படத்தின் மூக்கையன் கதாபாத்திரம் தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும். படத்தில் நட்பு இருக்கிறது, காதல் இருக்கிறது, அண்ணன் தங்கைப் பாசம் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து ஒரு முழுமையான வணிகப்படமாக்கியதில் பாஸ்கரின் இயக்குமும் முக்கியப் பங்குவகிக்கிறது. ரஜினி காந்த் சிறையிலிருந்து தப்பித்து வரும் காட்சியில் கட்டவிழ்த்து ஓடி வரும் குதிரையையும் ரஜினியையும் மாற்றி மாற்றிக் காட்டும் காட்சியில் இயக்குநரின் முத்திரை தென்படுகிறது.
தன்னைத்
தேடிக்கொண்டு போலீஸ் ஸ்ரீபிரியா வீட்டுக்கு வந்து விசாரிக்கும்வேளையில், மரத்தடியில்
மறைந்திருப்பார் ரஜினி. அப்போது நல்ல பாம்பு ஒன்று வர அதைக் கையில் பிடித்துக்கொண்டு,
படமெடுத்தாடும் அதன் தலையில் தட்டுவார். ரஜினி ரசிகர்களைப் பெரிதும் கவரும் வகையில்
காட்சி அமைந்திருக்கும். பாம்பைப் பிடித்தபடி ரஜினி மரத்தடியில் மறைந்திருக்கும் காட்சியை
சுவரொட்டியில் பயன்படுத்தியுள்ளார் அப்படத்தின் சென்னை விநியோகஸ்தரான கலைப்புலி தாணு.
அது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் சுவரொட்டிகளில் சூப்பர் ஸ்டார்
ரஜினி என தாணு அச்சிட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறார். அந்த சூப்பர் ஸ்டார் என்னும்
முன்னொட்டு இன்றுவரை ரஜினியின் பெயரை அலங்கரிக்கிறது.
இந்தப் பாம்புக் காட்சியில் பல் பிடுங்காத பாம்பே பயன்படுத்தப்பட்டிருந்ததாம். அதை முதலில் அறியாத ரஜினிகாந்த் காட்சியில் நடித்துவிட்டார். அடுத்து அவருக்கு உண்மை தெரிந்தபோது, பல் பிடுங்காத பாம்பைப் பிடித்துக்கொண்டு நடிக்கப் பயந்துள்ளார். ஆனால், பாஸ்கர் தொடர்ந்து காட்சியின் முக்கியத்துவம் கருதி பாம்பைப் பிடிக்க வலியுறுத்தியதுடன் எப்படிப் பிடிக்க வேண்டும் என பல் பிடுங்காத பாம்பைப் பிடித்து நடித்துக் காட்டியுள்ளார். அதன் பின்னரே ரஜினி அந்தக் காட்சியில் நடித்துக்கொடுத்திருக்கிறார்.
ரஜினி ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டியதொரு தொடக்கக் காலப் படம் பைரவி.