இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2020

புதுவசந்தம் பாடிய எஸ்.ஏ.ராஜ்குமார்

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஏ.ராஜ்குமார் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். 1964 ஆகஸ்ட் 23 அன்று செல்வராஜன் கண்ணம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் அவர். அவரது இசையில் ஒலித்த ‘பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா…’ என்ற ‘புதுவசந்தம்’ படப் பாடல் அதுவரையிலான தமிழ்த் திரைப்படத்தின் பாடல்களிலிருந்து வேறுபட்டு ஒரு புத்துணர்வைத் தந்தது. ‘இது முதன்முதலா  வரும் பாட்டு’, ‘ஆயிரம் திருநாள்’, ‘போடு தாளம் போடு’ போன்ற பாடல்களும் அலுக்க அலுக்கக் கேட்டு ரசித்தவை. ஆனால், அது இவரது முதல் படமல்ல. இந்தப் படத்துக்காகவும் இதன் கன்னட மறு ஆக்கப் படமான ‘ஸ்ருதி’க்காகவும் இவர் ஃபிலிம்பேர் விருதுபெற்றிருக்கிறார். பதின் பருவத்தில் கேட்ட இந்தப் படத்தின் பாடல்களில் தொனித்த தனித்துவம் காரணமாக இவை மனத்துக்கு நெருக்கமாக இருந்தன. கதாபாத்திரங்களுக்குத் தேவையான ஜீவனைச் சுமந்து வந்த இசை என்பதால் இருக்கலாம்.

‘லாலல்ல லலலா லாலல்ல லலலா’ என்னும் விக்ரமன் படத்துக் குழுவோசை கேட்கும்போதெல்லாம் மனம் தானாக எஸ்.ஏ.ராஜ்குமாரை நினைந்து மீளும். பாடல்களின் சிறப்பைச் சேர்க்கும் விதமாக இப்படியான குழுவோசையை அதிகப்படியாகப் பயன்படுத்தியவர் இவர். விக்ரமன் படத்து இசையமைப்பாளர் என்று இவர் அறியப்பட்டபோதும் இவரை முதலில் அறிமுகப்படுத்தித் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தவர்கள் ராபர்ட் ராஜசேகரன் இரட்டை இயக்குநர்கள். தெக்கத்தி நகரங்களிலும் கிராமங்களிலும் செல்லும் வாகனங்களில் இளையராஜாவின் பாடல்களுக்கு இணையாக எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்த பாடல்களும் இசை சேவை செய்தன.

இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலத்தில் சங்கர் கணேஷ், சந்திரபோஸ் போன்றோரைப் போல ஓர் இசையமைப்பாளராக அறிமுகமாகிப் பல வெற்றிகளைப் பெற்றவர் இவர். டி.ராஜேந்தரைப் போல இவரும் ஒரு கவிஞனாக இருப்பதால் இசையமைப்பாளராக அறிமுகமான தொடக்க காலத்தில் இவர் இசையமைத்த படங்களில் பெரும்பாலான பாடல்களை இவரே எழுதியுள்ளார். பல பாடல்களுக்குத் தொடக்கத்தில் இசைக்காக இவர் எழுதிய டம்மியான வரிகளே இறுதிப்பாடலாக வடிவம் பெற்றுள்ளனவாம். பழனிபாரதி, முத்துலிங்கம் போன்ற பாடலாசிரியர்களுடன் இணைந்து ஒவ்வொரு வரியாக ஒருவர் மாற்றி ஒருவர் எழுதிய அனுபவமும் இவருக்கு இருந்திருக்கிறது.


சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக 36 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்திருக்கிறார். ‘பூவே உனக்காக’ இவரது ஐம்பதாம் படம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனக்   கிட்டத்தட்ட 250 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ‘ஆனந்தம்’ திரைப்படத்தில் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ என்னும் பாடல் மூலம் பிரபலக் கவிஞர் யுகபாரதியைப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியவர் இவர்தான். இதைப் போல் பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்தி ஆனந்தமடைந்தவர் ராஜ்குமார்.   

அவர் முதன்முதலில் இசையமைத்த ‘சின்னபூவே மெல்லபேசு’ படம் 1987 ஏப்ரல் 17 அன்று வெளியானது. ராபர்ட் ராஜசேகரன் இயக்கிய, கல்லூரிக் காதலைக் கதைக் களமாகக் கொண்ட இந்தப் படத்தில் அவரது இசைக்கு முக்கியப் பங்குண்டு. படத்தில் மொத்தம் பத்துப் பாடல்கள். சோகம், கும்மாளம், டூயட், கலாட்டா எனப் பல வகையான சூழலுக்கு ஏற்ற பாடல்களைத் தந்து அசத்தியிருப்பார் எஸ்.ஏ.ராஜ்குமார்.  எஸ்.பி.பாலசுப்ரமணியன், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், எஸ்.பி.ஷைலஜா ஆகியோருடன் சுந்தர்ராஜன், தினேஷ் எனும் பாடகர்களையும் அறிமுகப்படுத்தியிருந்தார். தினேஷ் பாடிய ‘கண்ணே வா பாடிவருவது உன் கீதம்’ பாடலை கம்ப்யூட்டர் துணையுடன் உருவாக்கியிருப்பார். அந்தப் பாடல் உருவாக்கத்தில் உதவியவர் அவரது கீ போர்டு பிளேயரான திலிப். திலிப் வேறு யாருமல்ல ஏ.ஆர்.ரஹ்மான்தான்.   இந்தப் படத்தின் அசோசியேட் இசையமைப்பாளர் வித்யாசாகர். ‘ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படுதாயி’ என்னும் சோகப் பாடலை எஸ்.ஏ.ராஜ்குமாரே பாடியிருப்பார். இசையமைப்பாளர்களுக்கேயான தனித்துவமான குரலில் அந்தப் பாடல் இரவில் ஏகாந்தத்துக்கு ஏற்றது. இந்தப் படத்தை திருநெல்வேலி ராயல் தியேட்டரில் பார்த்திருக்கிறேன்.


இதே ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியான ‘வீரன் வேலுத்தம்பி’ படத்தில் கலைஞர் மு. கருணாநிதி எழுதிய ‘சுருளு மீசைக்காரனடி’ பாடலை இவர் பாடியுள்ளார். ‘பாடல்கள் என்பவை காலத்தின் கண்ணாடி. பாடல்களில் வெளிப்படும் இலக்கியம் அழிந்துவிட்டால் இசை அழிந்துவிடும்’ என்று கூறும் ராஜ்குமார் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோர் உருவாக்கியிருந்த மரபின் இழையைப் பின்பற்றிப் பின்னணியிசையிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பார். ‘புது வசந்தம்’ படத்தில் சாலையோரம் பாடிக்கொண்டிருக்கும் முரளி குழுவினரின் இசைக்கருவிகளைக் காவலர்கள் லாரியில் அள்ளிப்போட்டுக் கொண்டு செல்லும்போது, பின்னணியில் ஒலிக்கும் இவரது, ‘தந்தானா தந்தானா தந்தானானேனா’ பின்னணிக்குரல் அந்தக் காட்சியின் உணர்வைப் பார்வையாளர்களிடம் எளிதில் கொண்டு சேர்க்க உதவியது.  

‘இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை’ என்னும் பாடல் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் நான்குமுறை இடம்பெறும். இதே படத்தில் ‘இருபது கோடி நிலவுகள் சேர்ந்து பெண்மை ஆனதோ’ என்னும் மேற்கத்திய சாயல் கொண்ட வைரமுத்து எழுதிய பாடல் குறிப்பிடத்தகுந்தது. ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ பாடல் ‘சூர்யவம்சம்’ படத்தில் மூன்றுமுறை இடம்பெறும். ‘சூர்யவம்சம்’ படத்துக்காகத் தமிழக அரசின் விருதைப் பெற்றிருக்கிறார். ஒரே பாடலை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்தும் இந்தப் போக்கு எல்லாம் இப்போது திரைப்படங்களில் பார்க்க இயலாதவை.

இயக்குநர்கள் ராபர்ட் ராஜசேகரன், விக்ரமன் ஆகியோரது முதல் படங்களுக்கு இசையைத் தந்திருந்த இவர்தான் கே.எஸ்.ரவிகுமார், லிங்குசாமி, எழில், ராஜகுமாரன், எஸ்.பி.ராஜ்குமார் ஆகியோரது முதல் படங்களுக்கும் இசையமைத்தவர். 

நடிகர் விஜயின் ‘பூவே உனக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பிரியமானவளே’ போன்ற படங்களுக்கும் அஜித் நடித்த ‘அவள் வருவாளா’, ‘ராஜா’ போன்ற படங்களுக்கும் இசையமைத்தவர் இவர். ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘வானத்தப்போல’, ‘பிரியமான தோழி’, போன்ற படங்களும் ‘போறவளே பொன்னுத்தாயி’ (‘இரயிலுக்கு நேரமாச்சு’), ‘பொன் மாங்குயில்’ (‘மனசுக்குள் மத்தாப்பு’) ‘மனம் பாடிட நினைக்கிறதே’ (‘பறவைகள் பலவிதம்’) ‘செவ்வந்தி மாலை கட்டு’ (‘தங்கத்தின் தங்கம்’), ‘பூவே இது காற்றின் கீதம்’ (‘முதல் பாடல்’), ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா’ (‘பெண்ணின் மனதைத் தொட்டு’), ‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு’ (‘மறுமலர்ச்சி’) போன்ற பாடல்களும் எஸ்.ஏ.ராஜ்குமாரை இசை ரசிகர்களின் நினைவில் கொண்டுவந்து சேர்த்துக்கொண்டே இருக்கும். அவருடைய பிறந்தநாளான இன்று அவரை மனதார வாழ்த்துவோம்.  

இந்து தமிழ் திசை இணையத்தில் வெளியான கட்டுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக