இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், அக்டோபர் 29, 2019

பிகில்: விளையாட்டுத்தனம்



ஊருக்கு ரவுடியான மைக்கேல் (விஜய்) ஒரு குப்பத்து ராஜா. கதிர் (கதிர்) ஒரு மகளிர் கால்பந்துக் குழுவின் கோச். அந்தக் குழு விளையாட்டில் ஈடுபட எல்லா உதவிகளையும் பின்னணியிலிருந்து செய்கிறார் மைக்கேல். டெல்லியில் முக்கியமான போட்டியில் கலந்துகொள்ள வேண்டிய சூழலில் மைக்கேலுடைய எதிரியான அலெக்ஸ் (டேனியல் பாலாஜி) கதிரைக் கத்தியால் குத்திவிடுகிறார். உயிருக்குப் போராடும் கதிர் பிகிலால் மட்டுமே இப்போதைக்குக் கால்பந்து குழுவின் கோச்சாகச் செயல்பட்டு வெற்றியைத் தேடித் தர முடியும் என்கிறார். பிகிலுக்கு குழு ஒத்துழைத்ததா, மகளிர் குழு கால்பந்துப் போட்டியில் கலந்துகொண்டதா, வெற்றிபெற்றதா போன்ற கேள்விகளுக்கான விடை பிகில்.

எளிய கதை. திரைக்கதையோ மிகவும் சாதாரணம். குப்பத்து மனிதர்களுக்குப் பெருமைக்குரிய அடையாளத்தை விளையாட்டே தரும் என்பது மட்டுமே திரைக்கதையில் நல்ல விஷயம்.  அதுவும் இதுவரை நாம் பார்த்திராததில்லை. விஜய் என்னும் பெரிய நடிகர் நடித்திருப்பதாலேயே என்ன காட்சி வைத்தாலும் ரசிகர்கள் பார்த்துவிடுவார்கள் என்று நினைத்தைப் போல்  மிகவும் சாதாரணக் காட்சிகளால் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.


ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டுகின்றன தொடக்க காட்சிகள். அதை நினைவூட்டுவதைத் தவிர வேறு எந்த விளைவையும் ஏற்படுத்தாத காட்சிகள் அவை. குப்பத்து ராஜாவான மைக்கேல் ஏதோ சாஃப்ட்வேர் இன்ஜினீயர் போல் பள பளவென்றிருக்கிறார். விஜயின் தந்தையான ராயப்பன் தொடர்பான காட்சிகள் ’தளபதி’ திரைப்படத்தை நினைவுபடுத்துகின்றன. பிகிலுக்காக விளையாட்டுக் குழுவின் தலைவர் ஜாக்கி ஷெராபை ராயப்பன் சந்தித்துவரும் காட்சி ’பாட்ஷா’வை நினைவுபடுத்துகிறது. இப்படி எல்லாமே ஏற்கெனவே பல படங்களில் நாம் பார்த்த காட்சிகளாகவே உள்ளன. ஒரு காட்சிகூடப் புதிதாக இல்லை.  ஆனாலும், படம் நீளமோ நீளம்.  


பிகில், ராயப்பன் என்னும் இருவேடங்களில் விஜய். லேசாகத் தலை நரைத்த ராயப்பன் என்னும் உள்ளூர் தாதா வேடத்தில் விஜய் தாத்தா போல் சன்னமான குரலிலும் நிதானமாகவும் பேசுகிறார். சண்டைக் காட்சிகளில் படு வேகமாக இயங்குகிறார். இதுதான் நடிப்புபோலும். பிகில் வேடத்தில் இளைஞனுக்குரிய சுறுசுறுப்புடன் பவனி வருகிறார். எத்தனை வேடம் தந்தாலும் விஜய் எளிதாக நடித்துவிடுவார் எனும் நம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது. பெரிய மெனக்கெடல் அவருக்குத் தேவையே படவில்லை. ரசிகர்களுக்குப் பிடித்துவிடலாம்.

சமீப காலங்களில் இவ்வளவு நோஞ்சான் காதல் காட்சிகள் எந்தப் படத்திலும் இடம்பெற்றதில்லை. ஏஞ்சல் என்னும் பிசிசியோதெரபிஸ்ட் பாத்திரத்தில் நயன்தாரா. பாவம்தான். கதாநாயகி என்பதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதுவும் தேவாலயத் திருமணக் காட்சிகள் ஒவ்வொன்றும் அலுப்பு.   


விஜயும் கால்பந்து விளையாட்டும் மட்டுமே முதன்மைப் படுத்தப்பட்டிருப்பதால் ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு போன்ற  நடிகர்களுக்குப் பெரிய வேலை இல்லை.

ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு பிரம்மாண்டமாக உள்ளது. கால்பந்தாட்டக் காட்சிகளில் சுவாரசியம் பெரிதாக இல்லை. ஆனால், அந்தக் காட்சிகளைப் படமாக்கிய விதம் சுவாரசியமாக உள்ளது.  மகளிர் குழுவில் அனிதாவாக நடித்திருந்த ரெபோ மோனிகா ஜானின் பின்னணிக் கதை நெகிழ்ச்சியூட்டுவதற்காகவே கதையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதே போல் காயத்ரி கதையும். பெண்ணுக்கான அடையாளம் தரப்பட வேண்டும் என்பதை வலிந்து சொல்கிறது.


கோச்சை வெறுக்கும் பெண்கள் அவரை விரும்புவதற்கான காரணக் காட்சி, அமில வீச்சால் பாதிக்கப்பட்ட அனிதாவை விளையாட சம்மதிக்கவைக்கும் காட்சியில் கதை சொல்வது போன்றவை எந்தவித அழுத்தமுமின்றிச் சாதாரணமாக உள்ளன. படத்தின்  வசனங்கள் நல்லெண்ண கருத்துகள் நிறைந்தவையாக மட்டுமே உள்ளன. ’திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் முகம் தேவை இல்லம்மா’ ஒரு உதாரணம்.

வலுவற்ற திரைக்கதையை ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும் வலுப்படுத்த முடியவில்லை. இயக்குநர் அட்லீ கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார். வசனத்திலும் திரைக்கதையிலும் ரமணகிரிவாசன் இணைந்து பங்கெடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்கு இத்தனை பேர் தேவையா?


விளையாட்டை மையமாகவைத்து எடுக்கப்பட்ட விளையாட்டுத்தனமான படம் பிகில்.  

வியாழன், அக்டோபர் 17, 2019

பெரிய திரையில் வாட்ஸ் அப் பாருங்கள்

எப்போதும் ஸ்மார்ட்போனிலே வாட்ஸ் அப் பார்த்து அலுப்பாக இருக்கிறதா? கவலையே படாதீர்கள். உங்கள் வாட்ஸ் அப் செய்திகளையும் வீடியோக்களையும் கணினியில் எளிதாகப் பார்க்கலாம். எப்படி? 



உங்கள் ப்ரௌசரில் https://web.whatsapp.com/ என்னும் முகவரியைச் சொடுக்குங்கள். அதைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் ஒரு QR code இடம்பெறும். இப்போது உங்கள் மொபைலில் வாட்ஸ் அப்பைத் திறந்துகொள்ளுங்கள். வாட்ஸ் அப் பக்கத்தில், வலது மூலையில், உயரத்தில் மூன்று புள்ளிகள் மேலிருந்து கீழாக இடம்பெற்றிருக்கும். அதைத் தொடுங்கள். வரிசையாக ஆறு செய்திகள் மேலிருந்து கீழாகத் திரையில் தோன்றும். அதில் மூன்றாவதாக whatsApp Web என்பது இடம்பெற்றிருக்கும். அதைத் தொட்டீர்கள் என்றால் Scan QR code என்ற கட்டளையுடன் திரை QR codeஐத் தேடும். 



இப்போது கணினியில் உள்ள QR codeஐ மொபைல் மூலம் ஸ்கேன் செய்தீர்கள் என்றால் உங்கள் வாட்ஸ் அப் கணக்கு கணினிக்குத் தாவிவிடும். இனி, மொபைலைக் கீழே வைத்துவிட்டு கணினி வழியாகவே நீங்கள் வாட்ஸ் அப்பை இயக்கிக்கொள்ளலாம். மொபைலில் வாட்ஸ் அப் இணைப்பு துண்டிக்கப்படும்வரை கணினியில் வாட்ஸ் அப் இயங்கும்.

ஞாயிறு, அக்டோபர் 13, 2019

உண்ணாதீங்க உயிர் போயிடும்!




உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெகன் (சித்தார்த்) கலப்படம் இல்லாத உணவை வழங்குவதே தன் கனவு என்ற லட்சியத்துடன் பணியில் செயல்படுகிறார். உணவுப் பொருளை மோப்பம் பிடித்தே கலப்படம் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார். அவர் கலப்பட உணவுப் பொருள்கள் தொடர்பான எல்லா இடங்களையும் சீல் வைத்துப் பூட்டுகிறார். இதனால் உணவுத் தொழிலதிபர்களின் பகையைச் சம்பாதிக்கிறார். பள்ளி ஆசிரியையான ஜோதியின் (கேத்ரின் தெரசா) சேவை மனப்பான்மையால் ஈர்க்கப்படுகிறார். எந்த மணத்தையும் மோந்தறிய இயலாத தன் குறை காரணமாகத் திருமணத்தைத் தவிர்க்கிறார் ஜோதி. ஜெகன், ஜோதி திருமணம் நடந்ததா, ஜெகனின் தொழிற்பகையால் அவருக்கு ஆபத்து ஏற்பட்டதா போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது அருவம்.


கதையில் இரண்டு நல்ல விஷயங்கள் உள்ளன. ஒன்று கலப்பட உணவுக்கு எதிராகச் செயல்படும் நேர்மையான அதிகாரி. இரண்டு, வாசம் என்றால் என்னவென்பதே தெரியாத பெண். இந்த இரண்டையும் பிணைத்து, சமூக அக்கறை, அமானுஷ்யம் ஆகியவற்றின் வழியே சொல்லப்பட்ட திரைக்கதை சுவாரசியமாக இல்லை. எந்த காட்சியும் ரசிகரை நிமிர்ந்து உட்காரவே விடவில்லை. உணவுப் பாதுகாப்பு அதிகாரியாக சித்தார்த் விரைந்து சென்று கடைகளுக்கும் நிறுவனங்களும் சீல் வைக்கும் காட்சிகள் மட்டுமே விறுவிறுப்பாக இருக்கின்றன. ஆனாலும் அவை அளவுக்கு மீறிய விரைப்புத்தன்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது அலுப்பு. இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பேய் பழிவாங்கும் என்னும் கதையைப் படமாக்குவார்கள்?


சித்தார்த் உருவமாகவும் வருகிறார் அருவமாகவும் இருக்கிறார். இரண்டிலுமே ரசிகர்களைக் கவரும் வாய்ப்பு அமையவில்லை. கண்டிப்பான அதிகாரியாக அவர் காட்டும் மிடுக்கும் எல்லையைத் தாண்டிவிட்டதால் காமெடியாகிவிடுகிறது. கேத்ரின் தெரசா அழகாக இருக்கிறார். அவரை ஆக்‌ஷன் காட்சிகளில் பார்க்க நகைச்சுவையாக இருக்கிறது.

ஆடுகளம் நரேன், சதீஷ், இளங்கோ குமாரவேல் எனப் பல நடிகர்கள் இருந்தும் ஒரு காட்சியைக்கூட ரசிக்க முடியாதபடி படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சாய் சேகர். ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு பார்க்கும்படி இருக்கிறது. இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் அழுத்தமான இசை தருவதாக நினைத்து சத்தமான இசையைத் தந்திருக்கிறார். சரியான சவுண்ட் ம்யூசிக். படத்தில் ஓரிரு பாடல்களும் இருக்கின்றன.  


ஒரு படத்தின் முதல் பத்து நிமிடங்களுக்குள் ரசிகர்களைக் கவர்ந்துவிட வேண்டும் என்னும் அடிப்படைப் பாடத்தையே இயக்குநர் மறந்திருப்பார் போல. படத்தின் தொடக்கமே படு மந்தம். எல்லா அபத்தங்களையும் காட்சிகளாகக் காட்டிவிட்டு, வெறும் படம் என்று ஒரு காட்சி எடுத்துவிட்டால் அபத்தம் போய்விடும் என்று இயக்குநர் நினைத்திருக்கிறார். நல்ல விஷயங்களைச் சொல்லும் அக்கறை இருந்தால் மட்டும் போதாது அவற்றை ரசிக்கும்படியாக அழுத்தமாகச் சொல்லும் திறமையும் தேவை என்பதை இயக்குநர் அறிவது நல்லது.


அருவம் ஆச்சரியம்தராத வெறும் உருவம்.

ஞாயிறு, அக்டோபர் 06, 2019

அசுரன்: ஒடுக்கப்பட்டவர்களின் நாயகன்.


சிவசாமி (தனுஷ்) குடும்பத்தினரிடம் இருக்கும் சிறு நிலத்தைத் தன் தம்பி வெங்கடேசன் (பவன்) தொடங்கப்போகும் தொழிற்சாலைக்காக வாங்கத் துடிக்கிறான் வடக்கூரான் நரசிம்மன் (ஆடுகளம் நரேன்). சிவசாமியோ அது அவருடைய மனைவிக்கு அவளது அண்ணன் தந்த நிலம். அதை விற்க முடியாது என மறுக்கிறார். இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சிவசாமியின் மூத்த மகன் முருகனை ஆள்வைத்துக் கொன்றுவிடுகிறான் நரசிம்மன். இதை நேரில் பார்த்த சிவசாமியின் இரண்டாம் மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்) அதற்குப் பழிவாங்கும்வகையில் நரசிம்மனையே கொன்றுவிடுகிறான். பள்ளிச் சிறுவனான அவன் செய்த கொலையால் அவனை நரசிம்மன் குடும்பத்தினரிடமிருந்தும் போலீஸாரிடமிருந்தும் காப்பாற்றுவதற்காகக் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறார் சிவசாமி. அவர்கள் போலீசாரிடம் மாட்டினார்களா, காட்டுக்குள் சென்ற அவர்களது நிலை என்ன போன்ற கேள்விகளுக்கு விடைகளாக இருக்கிறது அசுரன்.  


எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிமாறனும் வெற்றிமாறனும் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளனர். நாவலின் சில அம்சங்களைத் திரைப்படத்துக்காக மாற்றியுள்ளனர். திரைக்கதையில் பஞ்சமி நிலப் பிரச்சினை, ஒடுக்கப்பட்டோருக்கான உரிமை போன்ற அம்சங்களைச் சேர்த்து அதற்கு வேறு வண்ணம்பூசியுள்ளனர். திரைக்கதையை விறுவிறுப்பாகவே அமைத்துள்ளனர். வணிகநோக்கத்துடன் கதாநாயக அம்சம் தூக்கலாகத் தெரியும் வகையில் மூன்று சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.  அது சற்று நெருடலாகவே உள்ளது. மற்றபடி திரைப்படம் ஒரு நாவலை வாசிப்பதுபோல் அடர்த்தியாகவே உள்ளது. 


தனுஷ் என்னும் நடிகரை நம்பியே இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தனுஷும் அதற்குத் தன்னுடைய முழு உழைப்பை வழங்கியுள்ளார். தொடக்கத்தில் தனுஷுக்குப் பொருந்தாததுபோல் தோன்றிய அந்தக் கதாபாத்திரத்துக்கு தனது நடிப்பால் ஈடுகட்டிவிடுகிறார். மஞ்சு வாரியர் உடை, தோற்றம், நடிப்பு எல்லாம் ஓகே ஆனால் குரலில்தான் அந்நியத்தன்மை தென்படுகிறது.  பசுபதி, ஆடுகளம் நரேன், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ் என நடிகர்கள் எல்லோரும் தெக்கத்தி மனிதர்களாகவே மாறியுள்ளனர். 

வேல்ராஜின் ஒளிப்பதிவு தேரிக்காட்டைத் துல்லியமாகப் படம் பிடித்திருக்கிறது. காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட இருள், ஒளி ஆகியவற்றின் வழியே கதாபாத்திரங்களின் மனநிலையைத் தத்ரூபமாக வெளிப்படுத்திவிடுகிறார்கள். 


அவனுக்கு நாய் போச்சுன்னு கஷ்டமாயிருக்கு எனக்கு நாயோட போச்சேன்னு ஆறுதலாயிருக்கு… காடு இருந்தா எடுத்துக்கிடுவானுவ ரூபா இருந்தா புடுங்கிக்கிடுவானுவ ஆனா படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது… போன்ற வசனங்களிலும் பெண் குழந்தையைத் தாய் என அழைக்கும் நுட்பத்திலும் கவனிக்கவைக்கிறார்கள் வசனம் எழுதிய சுகாவும் வெற்றிமாறனும்.

பாடல்களைவிடப் பின்னணியிசையில் ஜி.வி.பிரகாஷ்குமார் கவனத்தை ஈர்க்கிறார். அதிலும் அசுரன் தீம் ம்யூசிக்கில் அதிகமாக ஸ்கோர் செய்கிறார். கால கட்டத்தைச் சித்தரிப்பதில் கலை இயக்குநர் குறிப்பிடத்தக்கவகையில் பங்களித்துள்ளார். 


ஒரு நாவலை வெற்றிகரமான திரைப்படமாக்கியதில் இயக்குநர் வெற்றிமாறன் திறமையைக் காட்டியுள்ளார். ஒடுக்கப்பட்ட மனிதர்கள் செருப்பு அணிவதைக்கூட அனுமதிக்க முடியாமல் இருந்த காலநிலையையும் பெரிய மனிதர்களின் மனப்போக்கையும் அழுத்தமான காட்சிகளின் வழியே சித்தரித்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குக் கல்வி மட்டுமே உயர்வைத் தரும் என்பதை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். இதற்காகவெல்லாம் இயக்குநரைப் பாராட்டலாம். ஆனால், எண்பதுகள், அறுபதுகள் எனும் காலகட்டத்தை உணர்த்தும்போது சுவர் விளம்பரங்கள், பின்னணிப் பாடல்கள் போன்றவற்றையே தொடர்ந்து பயன்படுத்துவது அலுப்பு. ஒருவிதமான டெம்பிளேட் இயக்குநராகும் அபாயத்தின் விளிம்பில் நிற்கிறார் வெற்றிமாறன்.