இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016

சினிமாஸ்கோப் 13: அப்பா


வாழ்வில் நம்முடன் இணைந்துவரும் உறவுகளால் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் விதவிதமானவை. அவர்களால் ஏற்படும் இன்பங்களும் துன்பங்களும் தவிர்க்க இயலாதவை. திரைப்படங்களில் இத்தகைய உறவு சார்ந்த சம்பவங்களுக்கு முக்கியமான இடமுண்டு. உறவு சார்ந்த விஷயங்களை வைத்துத் திரைக்கதையை நகர்த்தும்போது அது சட்டென்று பார்வையாளர்களின் மனதைத் தொட்டுவிடும். உறவுகளுக்குள் ஏற்படும் நெகிழ்ச்சியான, கோபமான, கொந்தளிப்பான பல விஷயங்களைத் திரைக்கதையில் செருக முடியும். காதலன்-காதலி, கணவன்-மனைவி, தாய்-மகன், தாய்-மகள், தந்தை-மகன், தந்தை-மகள், அண்ணன்-தங்கை எனப் பல உறவுகளைப் பற்றிய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. இதில் தந்தை-மகன் உறவு குறித்த படங்களை முதலில் அணுகலாம்.

நமது தந்தை மகன் உறவு என்றவுடன் ‘தெய்வ மகன்’, ‘தங்கப் பதக்கம்’ முதல் சமீபத்திய ‘அப்பா’வரை பல படங்கள் எல்லோருடைய நினைவிலும் வந்து மோதும். இயக்குநர் மகேந்திரனின் ‘மெட்டி’, ‘ஜானி’ போன்ற படங்களின் தந்தை மகன் சித்தரிப்பு பிற படங்களிலிருந்து வித்தியாசமானது. ‘மெட்டி’ படத்தில் தாயைக் கைவிட்ட தந்தைமீது கொலைவெறி கொண்டிருப்பான் மகன். ‘ஜானி’ படத்திலோ இரண்டாம் நிலையில் தன் தாயை வைத்திருக்கும் தகப்பனின் கடனை மகன் அடைப்பான். இத்தகைய அபூர்வமான உறவைப் பிற படங்களில் பார்ப்பது கடினம். ஓர் உறவைச் சித்தரிப்பது இயக்குநரின் வாழ்வனுபவத்தையும் புரிதலையும் பொறுத்து அமைகிறது.

தமிழ்க் குடும்பங்களில் அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு மிகவும் பூடகமானது. பெரும்பாலான குடும்பங்களில் வயதுவந்த மகனுடன் தந்தை அமர்ந்து பேசுவதே மிகவும் சொற்பம். அகத்தில் ஆழமாக வேரூன்றிய பாசத்தை, தந்தை என்னும் உறவு வெளிப்படையாகக் காட்டுவதில்லை. அப்படிக் காட்டும்போது அந்தப் பாசம் நாடகத்தன்மை கொண்டதாக ஆகிவிடலாம் என்ற ஐயம்கூட ஒரு காரணமாக இருக்கலாம். இதுதான் யதார்த்தம். ஆனால், நம் படங்களில் அப்பாவுக்கும் மகனுக்குமான உறவை யதார்த்தமாகக் காட்டியிருக்கும் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அல்லது இல்லை என்று சொல்லிவிடலாம்.

தமிழில், மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட ‘தங்கப் பதக்கம்’ படத்தில் கடமையின் பொருட்டுத் தன் மகனையே சுட்டுக் கொன்ற பாசமிகு தந்தையைப் பார்த்திருக்கிறோம். சமூகம் மதிக்கும் வகையில் மகனை வளர்க்க விரும்பியும் அவன் ஒரு தறுதலையாக வந்து நிற்பதைக் கண்டு மனமுருகும் தந்தை வேடத்தில் நடிகர் சிவாஜி கணேசனும் தாய் வேடத்தில் நடிகை கே.ஆர்.விஜயாவும் மிதமிஞ்சிய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். படம் பெரிய வெற்றியைப் பெற்றது. தான் இயக்கிய முதல் படத்தில் வசனங்களை இயன்றவரை தவிர்த்த மகேந்திரன் ‘தங்கப் பதக்க’த்தின் கதை, வசனகர்த்தாவாக அழுத்தம் திருத்தமான ஏராளமான வசனங்களை எழுதியிருப்பார். இந்தப் படத்தில் அண்ணாயிஸத்தைக் கிண்டலடித்திருப்பார் நடிகர் சோ.

‘தங்கப் பதக்க’த்தில் போலீஸ் தந்தையின் கண்டிப்பு என்றால் ‘ஸ்படிகம்’ (1995) மலையாளப் படத்தில் இதே போன்றதொரு கண்டிப்பான தந்தை வேடத்தில் கணித ஆசிரியராகத் திலகன் நடித்திருப்பார். தன்னைப் போலவே மகனையும் ஒரு கணித வல்லுநராக மாற்ற வேண்டும் என்பதில் அவர் கொண்ட ஆர்வத்தால் மகனின் அறிவியல் ஆர்வத்தைக் குழி தோண்டிப் புதைத்து அவன் ஒரு ஊரறிந்த ரவுடியாக மாறக் காரணமாகிவிடுவார். அந்த மகனாக மோகன்லால் நடித்திருப்பார். பரதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படமும் கேரளத்தில் வசூல் சாதனை படைத்த ஒன்று. இதன் மோசமான மறு ஆக்கப்படம் சுந்தர் சியின் இயக்கத்தில் ‘வீராப்பு’ என்னும் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. ‘ஸ்படிகம்’ படமே டப்பிங் செய்யப்பட்டு, ‘யுத்தம்’ என்னும் பெயரில் தமிழ்நாட்டில் வெளியானது.

பொதுவாகவே நாயகர்கள் இரண்டு வேடங்களில் நடிக்கும்போது அப்பாவும் மகனுமாக நடித்துவிடுவது மிகவும் எளிதான ஒன்று என்பதால் அப்படியான படங்கள் அநேகம். ஒரு சக்கரத்தைச் சுழற்றிவிட்டோ, காலண்டர் தாள்களைப் படபடவெனக் கிழித்தோ குழந்தையை வளரச் செய்துவிடலாம். ஆனால், அதே மகனை வளர்த்தெடுப்பதற்குள் தந்தை படும் பாடு சொல்லி மாளாது. அதை அடிப்படையாகக் கொண்டுதான் தன் ‘அப்பா’ படத்தைப் படைத்திருந்தார் சமுத்திரக்கனி. குழந்தை வளர்ப்பு பற்றிய பல போதனைகளை அவர் பெற்றோருக்கு வழங்கியிருப்பார். ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும், அதன் திறமைகளை எப்படிக் கண்டறிய வேண்டும், காதல் என்னும் உணர்வைத் தன் குழந்தை கண்டுணரும்போது தகப்பன் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என ஏகப்பட்ட அறிவுரைகள், ஆலோசனைகள். அந்தப் படத்தைப் பார்த்தபோது அவருக்கு இன்னும் ஏன் ஷெவாலியே விருது கிடைக்கவில்லை என்றே தோன்றியது.


ஐந்து வயது முதல் பத்துப் பன்னிரெண்டு வயதுக்குள் ஒரு மகனின் மனத்தில் தந்தையின் தாக்கம் என்பது உருவாகிவிடுகிறது. தன் தந்தை எப்படிப்பட்டவர் என்பதை அவன் அந்த வயதில் உணர்ந்துகொள்கிறான். அந்தப் பருவத்தில்தான் மகனுக்கும் தந்தைக்குமான உறவு என்பது வேர்விடத் தொடங்குகிறது. அப்போது அவன் மனதில் தந்தை உருவாக்கும் தாக்கம்தான் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அவனை வழிநடத்துகிறது. இதை உணர்த்தும் வகையிலான படங்கள் குறித்து யோசிக்கும்போது இரண்டு படங்கள் நினைவில் எழுந்தன. ஒன்று இத்தாலியப் படமான ‘த லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ (1997)- இது பெரும்பாலானோர் அறிந்த படம்தான், அடுத்தது ரஷ்யப் படமான ‘த ரிடர்ன்’ (2003).

‘த லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’லும் ‘த ரிடர்’னும் தமிழ்ப் படங்களிலிருந்து மாறுபட்டவை. முதல் படத்தில் வாழ்க்கைப் பாடங்களை விளையாட்டுப் போல் மகனுக்குக் கற்றுத்தருவார் அந்தத் தந்தை. இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாஜிக்களிடம் மாட்டிக்கொண்டு யூதர்கள் வதை முகாமில் அனுபவித்த வேதனையைப் பேசும் படம் இது. தன் மகன் எந்தக் கஷ்டத்தையும் அனுபவித்துவிடக் கூடாது என்று வதைமுகாமில் தனது துயரங்களை எல்லாம் ஒரு விளையாட்டின் பகுதியென மகனிடம் சொல்லி அவனை நம்பச் செய்வார். சாதுரியமாக மகனின் உயிரைக் காப்பாற்றும் அந்தத் தந்தை இறுதியில் கொல்லப்பட்டுவிடுவார். அடுத்த படமான ‘தி ரிடர்’னிலோ இதற்கு நேரெதிராகத் தந்தை நடந்துகொள்வார். அவரும் தன் மகன்களுக்குப் பாடங்களைக் கற்றுத்தருவார். ஆனால் வாழ்வின் சிறு சிறு விஷயங்களையும் மிகவும் கண்டிப்புடன் கற்றுத்தருவார். மகன்களுக்கு எரிச்சல் வரும் வகையில் பாடங்களைக் கற்றுத்தரும் அவர் எதிர்பாராத ஒரு தருணத்தில் மரணமடைந்துவிடுவார். அப்போதுதான் அவர் கற்றுத்தந்த பாடங்கள் மகன்களுக்குக் கைகொடுக்கும். தந்தையின் கண்டிப்புக்குப் பின்னாலான தூய அன்பு அவர்களுக்குப் புரியும்.

இந்தப் படங்களைப் பார்க்கும்போது இத்தாலிப் படத்திலும் ரஷ்யப் படத்திலும் குழந்தை வளர்ப்பு குறித்து சில விஷயங்களை உணர்த்துவதையும், அதே விஷயத்தைத் தமிழ்ப் படங்கள் போதிப்பதையும் நம்மால் உணர முடியும். அதனால்தான் போதிக்கும் படங்களைப் புறந்தள்ளும் பார்வையாளர்கள், உணர்த்தும் படங்களை உன்னதங்களாகக் கருதுகிறார்கள்.

< சினிமா ஸ்கோப் 12 >                              < சினிமா ஸ்கோப் 14 >

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2016

சினிமா ஸ்கோப் 12: பயணங்கள் முடிவதில்லை


சினிமாவைப் பொறுத்தவரை புத்திசாலித்தனத்தையும் சாமர்த்தியத்தையும் வெளிப்படுத்த முதலில் திரைக்கதைதான் வாய்ப்பு தரும். புதுமையான பாதையில் நடைபோடும் புத்துணர்வுமிக்கத் திரைக்கதை அமையும்போதுதான் அந்த சினிமா கவனிக்கப்படும். ஆண்டுக்கு இப்படி ஓரிரு படங்கள் வருவதே இப்போது அதிசயம். சிலவேளைகளில் மாறுபட்ட திரைக்கதைகளைக் கொண்ட படங்கள் வணிகரீதியாக வெற்றிபெறாமல் போகலாம். ஆனால் சினிமா வரலாற்றில் அவை கரிசனத்துடன் அணுகப்படும். தமிழில் வெளியான ‘12பி’ (2001) படத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். சட்டென்று ஞாபகத்தில்வந்த படம் இதுவே. ‘12பி’ படத்தில் இருவேறு பாதையில் ஒரே கதை பயணப்படும். அதுதான் திரைக்கதை உத்தி. அது ஒன்றும் சுயம்புவான திரைக்கதையல்ல. ‘ஸ்லைடிங் டோர்’ (1998) என்ற ஆங்கிலப் படத்தின் பாதிப்பில் உருவான திரைக்கதைதான். ஆனால் ‘ஸ்லைடிங் டோர்’ படமே ‘ப்ளைண்ட் சான்ஸ்’ (1981) என்னும் போலந்துப் படத்தின் மோசமான நகல் என்கிறார் அக்னியெஸ்கா ஹாலந்த் என்னும் இயக்குநர். 

ஆகவே அசலா நகலா என்ற விஷயத்துக்குள் போகாமல் எடைபோடும்போது தமிழில் ‘12பி’யை உருப்படியான ஓரிடத்தில்தான் நிறுத்தியிருக்கிறார் ஜீவா. ஜெர்மானியப் படமான ‘ரன் லோலா ரன்’ (1998) போன்ற படங்களைப் பார்த்து ரசிக்கும் உலகப் பட ரசிகர்களுக்கு ‘12பி’ பெரிய சுவாரசியத்தைத் தராமல் போயிருக்கலாம். அது நியாயம்தான். ஆனால் ‘கபாலி’ போன்ற மிகச் சாதாரணத் திரைக்கதை கொண்ட படங்களைத் தலையில் தூக்கிவைத்துக் கரகம் ஆடும் நமக்கு ‘12பி’ புது அனுபவத்தைத் தந்த திரைக்கதையே. அந்தப் படம் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை என்றாலும் வித்தியாசமான படம் குறித்து யோசிக்கும்போது அது நினைவுகளில் தட்டுப்பட்டுவிடுகிறது. 


எண்பதுகளில் வெளியானது டி.ராஜேந்தரின் ‘ஒரு தலை ராகம்’ (1980). இளம் ஆண்களும் பெண்களும் காலையில் கிளம்பி, ரயிலில் கூட்டமாகக் கல்லூரி செல்வார்கள், கல்லூரியில் காதல், கலாட்டா. மீண்டும் மாலையில் அதே ரயிலில் கும்மாளமாக வீட்டுக்குத் திரும்புவார்கள். திராவிடப் பாரம்பரியத்தில் வந்த, எதுகை மோனைக்குப் பெயர்பெற்ற டி.ராஜேந்தர் காதலனுக்கும் காதலிக்குமான உரையாடல் வசனங்களை எழுத அவசியமே ஏற்படவில்லை. காரணம் நாயகனும் நாயகியும் பேசிக்கொள்வதே இல்லை. அப்படியான திரைக்கதை அது. இறுதியில்கூடக் கைகூடாத. அந்தக் காதலிலிருந்து நாயகனை மரணம் காப்பாற்றிவிடும். 

இப்போது அந்தப் படத்தின் ஒரு காட்சியைக்கூடச் சிரிக்காமல் பார்க்க முடியாது. ஆனால் அது வெளியான காலத்தில் அது புதுமையான திரைக்கதை, அது ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகம். அப்போது விழுந்து விழுந்து பார்க்கப்பட்ட அந்தப் படத்தை இப்போது பார்த்தால் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிவிடுகிறதே ஏன்? அது கால மாற்றத்தின் முன் நிற்க முடியாத திரைக்கதை அது. ஆனால் ஒரு நல்ல திரைக்கதையை அதற்குத் தக்கவிதத்தில் படமாக்கும்போது அது காலத்தைக் கடந்து நிற்கும். இப்போது பார்த்தாலும் வித்தியாசமாக இருக்கிறதே என்று தோன்ற வேண்டும். அப்படியான திரைக்கதையை அமைப்பதுதான் சவால்.    


ரோஜா என்றாலே ஒவ்வாமை ஏற்படும் அளவுக்குத் தன் படத்தில் ரோஜாக்களைப் பயன்படுத்திய இயக்குநர் கதிரின் படமான ‘இதயம்’ (1991) தொண்ணூறுகளில் வந்தது. மருத்துவராகும் ஆசையில் கல்லூரியில் சேர்ந்த மாணவர் ஒருவர் காதலால் நோயாளியாக வீட்டுக்குத் திரும்புவதைப் பயணமாகக் கொண்ட திரைக்கதை. காதலை ஏற்கக்கூட முடியாத அளவு நாயகனுடைய இதயம் பலவீனமடைந்திருக்கும். ஒரு தலை ராகத்தில் நாயகி காதலைச் சொல்லாமல் இழுத்தடிப்பாள், இதயத்திலோ அந்த வேலையை நாயகன் செய்வார். மற்றப்படி பெரிய வித்தியாசமில்லை. ஆனால் தொண்ணூறுகளின் இறுதியில் வெளியான ‘சேது’ (1999) திரைப்படம் வணிக சூத்திரத் திரைக்கதையைத்தான் கொண்டிருந்தது. ஒரு தலை ராகத்தைப் போல இதயத்தைப் போல சேதுவிலும் நாயகன் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிப்பார். என்றாலும் அதில் பாண்டிமடம் என்ற புதிய நிறத்தைப் பூசியிருந்தார் பாலா. அதுதான் ‘சேது’வை வித்தியாசப்படுத்தியது. அத்திபூத்தாற்போன்ற திரைக்கதை என்ற மிகையுணர்வுக் கூற்றுகளைப் புறந்தள்ளிவிட்டாலும் சேது ஒரு சுவாரசியமான திரைக்கதையே.  அதைத் தொடர்ந்துவந்த ‘காதல்’ (2004) மதுரை என்ற ஊரை மையப்படுத்தி திரைக்கதை அமைத்துத் தப்பித்துக்கொண்டது. இது உண்மைச் சம்பவம் என்ற செய்தி வேறு இந்தப் படத்துக்குப் புதிய வண்ணம் தந்தது. இதன் சாதியக் குளறுபடிக்குள் நுழையாமல் பார்த்தால் இதுவும் நினைவுகொள்ளத்தக்க திரைக்கதையே. இதே ஆண்டில் வெளியான ஆட்டோகிராஃப் ஒரு இளைஞனின் பல காதல்களைப் பேசியது.

மேற்கண்ட படங்கள் எல்லாமே காதலால் ஆணுக்கு ஏற்படும் பாதிப்புகளை மட்டுமே பேசுகின்றன. ஒருவகையில் பெண்களைக் குற்றப்படுத்துகின்றன. காதலால் பெண்ணுக்கு ஏற்படும் இன்னல்களைப் பேசும் திரைக்கதை தமிழில் எழுதப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. ஓர் இளம்பெண்ணின் பல காதல்களைக் காட்சிகளாகக் கொண்ட இயல்பான ஒரு திரைக்கதையை உருவாக்க முடியுமா என்பது பற்றிப் புதிதாகத் திரைக்கதை எழுதுவோர் யோசிக்கலாம். இது அட்டகத்தி யுகம். இப்போது ஒரு தலை ராகம் வகைப் படங்களுக்குப் பெரிய வேலை இல்லை. காதலுக்கும் கல்யாணத்துக்கும் குழந்தைகளுக்கும் என்ன தொடர்பு என்பதாகக் காலம் மாறிவருகிறது. அதற்கேற்பத் தன்னிச்சையாகத் திரைக்கதையின் வெளிப்பாடும் மாறுபடுகிறது. 


புத்தாயிரத்தில் திரைக்கதையின் மாறுபாட்டுக்கு உதாரணமாக ‘சுப்ரமணியபுரம்’ (2008) படத்தைச் சொல்லலாம். அதில் எண்பதுகள் என்ற காலகட்டத்தையே திரைக்கதையின் ஒரு அங்கமாக்கினார் சசிகுமார். எண்பதுகளின் சம்பவங்களை இரண்டாயிரத்தின் பார்வையுடன் அணுகிய படம் அது. நட்பு, காதல், உறவு போன்றவற்றின் நாளங்களில் பாயும் துரோக அரசியலை அநாயாசமாக வெளிப்படுத்திய திரைக்கதை அது. சமூகம் பற்றிய சக மனிதர்கள் பற்றிய அவதானிப்பை உள்ளடக்கிய அப்படத்தின் எளிய காட்சிகள் ஆழ் மனதில் உருவாக்கிய பூகம்ப அதிர்வுகள் முன்னுதாரணமற்றவை. அதுதான் சுப்ரமணியபுரத்தின் அடையாளம். ஆனால் அதற்குப் பின்னர் சசிகுமாரின் எந்தத் திரைக்கதையும் இதன் அருகில்கூட வர முடியவில்லை.  

இதன் பின்னர் 2013-ல் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் திரைக்கதை சம காலகட்டத்துக்கான திரைக்கதை. ஒரு பெரிய பாரம்பரியத்திலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்ட திரைக்கதை அது. அந்தப் புதிய ஜீவனில் அதன் முன்னோரின் சாயலைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. மரபில் கால் பதிக்காமல் பண்பாட்டு வரலாற்றின் புழுதி படியாமல் எழுதப்பட்ட திரைக்கதை அது. பீட்சா, ஆரண்யகாண்டம் எனத் தொடர்ந்த படங்களில் எல்லாமே திரைக்கதைக்குப் பிரதான இடமிருந்தது. இரண்டாயிரத்துக்குப் பின்னர் தொழில்நுட்பத்தின் உதவியால் வித்தியாசமான திரைக்கதைகளை எளிமையாகத் திரையில் காட்ட முடிந்தது. ஆகவே மாறுபட்ட திரைக்கதைகளால் தமிழ்ப் படங்கள் முன்னைவிட வீரியமாக எழுந்திருக்க வேண்டும். ஆனால் அந்த அளவு திரைக்கதைகள் எழுச்சி பெறவில்லை என்பதே யதார்த்தம்.

சனி, ஆகஸ்ட் 20, 2016

இறைவி: சிற்பி சிதைத்த சிலைகள்


ஓரிரு படங்கள் இயக்கிய பின்னர், தான் ஒரு இயக்குநர் என்ற அந்தஸ்தை எட்டியதும் சமூக அக்கறை தொனிக்கும் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்ற வேட்கை ஓர் இயக்குநருக்கு எழுவது இயல்பு. கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ அப்படி உருவான படைப்பே. எல்லாப் படங்களையும் போலவே இதிலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் வருகிறார்கள். இது பெண்களுக்கான படமோ ஆண்களுக்கான படமோ அல்ல, இது குத்துப்பாடலைக் கலையாகக் கருதும் சராசரியான ஒரு சினிமா. ஆனால் ஒரு வணிக சினிமாவாக ‘ஜிகர்தண்டா’ கொண்டிருந்த நேர்த்தி இதில் இல்லை. ‘இறைவி’யில் சில நெகிழ்ச்சியான, உயிரோட்டமான தருணங்களை உருவாக்கித் தர முயன்றிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அந்த முயற்சி பல இடங்களில் தோல்வியையே அடைந்துள்ளது. வெற்றி தோல்வி முக்கியமல்ல முயற்சியே போதும் என்று மொழியும் நல் மனங்களைக் கொண்டோர் அவரை உச்சிமோந்து வருகிறார்கள்.   

கார்த்திக் சுப்புராஜ் ஒரு நேர்காணலில், இது பெண்ணியப் படமல்ல என்று தெரிவித்தார். அது உண்மை என்பது படத்தைப் பார்த்த பின்னர் தெளிவாகப் புலனாகிறது. கதையின் மையமான வடிவுக்கரசி ஏற்றிருக்கும் மீனாட்சி என்னும் கதாபாத்திரம் படம் முழுவதும் கோமா நிலையில் இருக்கிறது என்பதுதான் உண்மையில் ஒரு குறியீடு. மீனாட்சியின் மூத்த மகனான இயக்குநர் அருள் செல்வன் என்ற வேடமேற்றிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்த வேடம் அவரைக் காப்பாற்றியிருக்கிறது. அவருக்குத் தொந்தரவு தராத வேடமான இதுதான் படத்தின் பிரதான வேடம். ‘இறைவி’யின் ஆதிச் சிக்கல் அவரிடமிருந்துதான் தொடங்குகிறது. அருள் பிரமாதமான இயக்குநர் என்பதாக அவரும் அவருடைய குடும்பத்தினரும் நம்புகிறார்கள். அவருடைய மே 17 படம் படமாக்கப்பட்டும் வெளிவர இயலவில்லை. தயாரிப்பாளர் முகுந்தனுக்கும் அருளுக்கும் ஏற்பட்ட ஈகோ மோதலே இதற்குக் காரணம். படம் வெளியானால் அருள் செல்வன் உலகத் தமிழர்களால், புலம் பெயர் தமிழர்களால் விதந்தோதப்படலாம் என்னும் நம்பிக்கை அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் உள்ளது. ஆனால் இறுதிவரை அந்தப் படம் வெளியானதா இல்லையா என்பதை யாராலும் எளிதில் சொல்லிவிட முடியாது.


தமிழர்களின் உணர்ச்சியை உத்தேசித்து கண்ணகியையும் ஈழத் தமிழர் விஷயத்தையும் கதையில் சேர்த்திருக்கிறார்கள். சிலப்பதிகாரம், இலங்கைத் தமிழர் விவகாரம் என்ற சங்கதிகள் இணையும்போது படத்தின் நிறம் மாறும். கூடவே மகளிரின் பாலியல் சுதந்திரம் பற்றிப் பேசும்போது அப்படத்துக்குத் தனிக்கவனம் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் படத்தை உருவேற்றியிருக்கிறார்கள். இவையெல்லாம் இப்படத்திற்கு ஒரு அறிவுஜீவித் தனமான பிம்பத்தை உருவாக்கும் முயற்சி என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. இது படத்தைச் சந்தைப்படுத்தும் ஓர் உத்தி. அந்த உத்தி வெற்றியடைந்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் படம் ஒரு போலி அறிவுஜீவித்தனமான படமாகவே காட்சி கொள்கிறது. இயல்பான சம்பவங்களோ, காட்சியமைப்போ, வசனங்களோ இல்லாமல் எல்லாமே போலச் செய்தது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. பாலசந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் ஆகியோரது படங்களின் பாதிப்பில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பள்ளிக் குழந்தைகள் ஆசிரியர் வேடம் போட்டது போல் படம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மீனாட்சி, யாழினி, பொன்னி, மலர்விழி என்ற நான்கு பெண்களின் வாழ்வு அவர்களைச் சேர்ந்த ஆண்களால் எப்படிச் சிதைக்கப்படுகிறது என்பதே கதை. ஆனால் அது திரைக்கதைக்குத் தாவும்போது தடாலடியாகக் கீழே விழுந்து படத்துக்கு மிகப் பெரிய சேதாரத்தை ஏற்படுத்திவிடுகிறது. கதைக்குத் தேவையான திரைக்கதை அமைக்கப்படாமல் திரைக்கதையின் பயணம் வேறொரு திசையில் செல்கிறது. படத்தின் முக்கியத் திருப்பங்கள் சீரியல் தனமானவை. திரைக்கதையை நகர்த்த வேண்டும் என்ற முனைப்பே பிரதானமாக உள்ளது காட்சிகளின் நம்பகத் தன்மை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. விஜய் சேதுபதி போலீஸ் வாகனத்திலிருந்து தப்பிச் செல்லும் காட்சியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். படத்தில் இடம்பெறும் இரு கொலைகளும் அவசியமில்லாதவை. அதிலும் தயாரிப்பாளரை மைக்கேல் கொல்லும் காட்சி வன்முறையானது. தான் எதைச் சொல்லப்போகிறோம் என்ற தெளிவு இயக்குநரிடம் இல்லாத தன்மையையே இது காட்டுகிறது. கதாபாத்திரங்கள் தங்கள் சிக்கலைத் தீர்த்துக்கொள்ளத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் அபாயகரமானவை அதனாலேயே அவை கொண்டாடப்படவும் செய்கின்றன என்பது ஒரு முரண்நகை அல்லது தற்போதைய தமிழ்ச் சூழல்.


இயக்குநர் அருள் செல்வன் படம் முடங்கிப்போய்விட்ட காரணத்தால் முழு நேரக் குடிகாரனாகிவிட்டார். தன்னைத்தானே சிதைத்துக்கொள்கிறார். படத்தை வெளியிட சிலைகளைக் கொள்ளையடிக்கும் முயற்சிக்கு அருள் செல்வனின் தந்தையான சிற்பி தாஸ் வரை அனைவரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ‘தங்களிடம் பராமரிப்பே இல்லாத நிலையில் இருக்கும் சிலை அது பேணப்படும் இடத்திற்குச் செல்வது சரிதானே’ என்று தன் மனைவியைக் குறிப்பிட்டு தாஸ் வசனம் பேசுவதன் மூலம் சப்பைக்கட்டு கட்டப்படுகிறது. இது சரியென்றால் குடிகார அருள் செல்வனைவிட்டு அவருடைய மனைவி யாழினி விலகிச் செல்ல விரும்புவது நியாயம்தானே? ஒருவேளை மே 17 என்னும் படம் வெளியாகி அப்படம் தோற்றுவிட்டால் அவர் மீண்டும் குடிகாரனாகும் வாய்ப்பு உள்ளதே. அப்படிப்பட்ட ஒரு குடிகாரக் கணவனைவிட்டு யாழினி செல்லாமல் அருள் செல்வனைத் தியாகியாகக் காட்டியிருப்பது எந்தவகை நியாயம் எனத் தெரியவில்லை. அதிலும் இறுதியில் அவர் பேசும் ஆண் நெடில் என்னும் வசனம் அருவருப்பானது ஆனால் திரையரங்கில் இந்த வசனத்துக்குக் கிடைக்கும் வரவேற்பு குமட்டச்செய்கிறது.       

மலர்விழி கதாபாத்திரம் காதல் கணவனை இழந்தபிறகு துணையாக மைக்கேலைக் கொள்கிறார். அவருக்கு மைக்கேல் மேல் துளியும் காதலில்லை. ஆனால் உடல் தேவைக்காக அவரைப் பயன்படுத்திக்கொள்கிறார். மைக்கேல் மலர்விழியைக் காதலிக்கிறார். அவரையே மணந்துகொள்ள விரும்புகிறார். ஆனால் மலர்விழி மறுக்கவே பொன்னியை மணந்துகொள்கிறார். மலர்விழி கதாபாத்திரம் தனது பாலியல் தேவையை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்தக் கதாபாத்திரத்தின் மீது புனித மழை நீரை இயக்குநர் தெளிக்கிறார். மைக்கேல் மழையில் நனைந்தபடி வெளியேறுவதை மாடியிலிருந்து பார்க்கும் மலர் கண்ணீர் வடிப்பதை வேறு எப்படிப் புரிந்துகொள்வது?


ஜெகன் கதாபாத்திரச் சித்தரிப்பும் சரிவரக் கையாளப்படவில்லை. பெண்களின் துயரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர் அவர். ஆனால் அவரால்தான் பொன்னியின் வாழ்க்கையில் சிக்கலே வருகிறது. அவருக்குப் பொன்னி மீது காதல். பொன்னியை விரும்புவதை வெளிப்படையாகச் சொல்கிறார். சமூகம் போதித்த கட்டுப்பாடுகளை பொன்னியால் மீற முடியாமல் அந்தக் காதலை மறுக்கிறார். ஆனால் பொன்னியை அடைய ஜெகன் போடும் திட்டமோ சிறிதுகூடத் திரைக்கதைக்கு வலுச்சேர்க்கவில்லை. அந்தத் திட்டம் நம்பத்தகுந்ததாகவோ, ஏற்றுக்கொள்ளும்படியாகவோ அமைக்கப்படவில்லை.   

கதை தொடர்பான அனுபவமோ புரிதலோ இல்லாமல் படத்தைக் கையாண்டிருப்பதால் படத்துடன் ஒன்றுவது சிரமமாக உள்ளது. அஞ்சலி கதாபாத்திரம் மட்டுமே படத்தின் சினிமாத்தனத்தை மீறி இயல்பாக உலவுகிறது. பாலசந்தரின் படங்களிலும் ‘அவள் அப்படித்தான்’ போன்ற படங்களிலும் பெண் கதாபாத்திரங்களிடம் காணப்பட்ட தெளிவு இந்தப் படத்தின் கதாபாத்திரங்களிடம் காணப்படவில்லை. படத்தின் பல காட்சிகளில் மழை பொழிகிறது. மழையில் நனையப் பெண்கள் விருப்பம் கொள்கிறார்கள், ஆனால் நனைவதே இல்லை. பெண்களின் சிக்கலுக்கு ஆண்களே காரணம் என்ற கருத்தியல் முன்வைக்கப்படுவது ஆண் பெண் உறவு குறித்த புரிதலின் போதாமையினாலேயே. இத்தகைய கதையைக் கையாளும் பக்கும் இன்னும் கார்த்திக் சுப்புராஜுக்கு கைவரவில்லை என்பதையே இப்படம் உணர்த்துகிறது.     

நண்பர் முரளியின் அடவி இதழில் ஆகஸ்டு 2016இல் வெளியானது.

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016

சினிமாஸ்கோப் 11: குரு சிஷ்யன்


ஒரு கதையைத் திரைக்கதையாக மாற்றும்போது, அத்திரைக்கதையை நமது விருப்பத்துக்கு ஏற்ப வளர்த்தெடுப்பது நமது கற்பனைத் திறனுக்குச் சவால்விடும் ஒரு வேலை. அதன் பயணத்தை ருசிகரமான வழியில் கொண்டுசென்று அதற்கு ஏற்றபடி கதையின் முடிவை அமைத்துக்கொள்ள முடியும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்யும் வகையில், ஆனால் அவர்கள் எதிர்பாராத திசையில் அவர்கள் நம்பத்தகுந்த வகையில் திரைக்கதையின் பயணம் அமையும்போது பார்வையாளர்களை அந்தத் திரைக்கதை எளிதில் ஈர்த்துவிடும்.

ஒரு புள்ளி வழியே எண்ணற்ற கோடுகளை வரைய முடியும் என்பதைப் போல் ஒரு கதைக்கு எண்ணற்ற வழியில் திரைக்கதையை அமைக்க இயலும். ஒரே கதை எண்ணற்ற வழியில் பயணிக்கும் சாத்தியம் திரைக்கதையின் மாயத்தன்மையில் ஒன்று. அவரவரது சாமர்த்தியத்தையும் கற்பனையையும் பொறுத்து ஒரே கதையைப் பல படங்களாக மாற்றலாம். கதை ஒன்றாக இருந்தாலும் திரைக்கதை வெவ்வேறாக இருக்கும்பட்சத்தில் பார்வையாளர்கள் அனைத்தையும் வரவேற்கிறார்கள். பார்வையாளர்களைப் பொறுத்தவரையில் படம் அவர்களைத் திருப்தி செய்தால் போதும் அது ஏற்கெனவே வந்த கதையா, வராத கதையா என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. வந்த கதையையே மறுபடியும் மறுபடியும் பார்க்கப் பார்வையாளர்கள் அலுத்துக்கொள்வதே இல்லை. அப்படி அவர்கள் அலுத்துக்கொள்ளத் தொடங்கும்போது தமிழ்ப் படங்களும் புதுவிதமான பயணத்தை மேற்கொள்ளலாம்.


ஒன்றைப் போல் மற்றொன்றாக அமைந்த பல தமிழ்ப் படங்கள் உண்டு. இயக்குநர் வஸந்த் ‘ஆசை’ என்றொரு திரைப்படத்தை உருவாக்கினார். அவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்த மு. களஞ்சியமும் எஸ்.ஜே.சூர்யாவும் முறையே ‘பூமணி’, ‘வாலி’ ஆகிய படங்களை உருவாக்கினார்கள். இந்த மூன்று படங்களும் ஒரே விதமான கதையைக் கொண்டவைதான். ‘ஆசை’ மனைவியின் தங்கைமீது ஆசை கொண்டவனின் கதை. ‘பூமணி’யோ தம்பியின் மனைவியின் மீது வேட்கைகொண்டவனின் கதை. ‘வாலி’யும் அதேதான். ஆனால் மூன்று படங்களின் திரைக்கதைப் பயணமும் வெவ்வேறானவை.

‘ஆசை’யும் ‘வாலி’யும் நகரத்துப் பின்னணியில் நகர்ந்தன, ‘பூமணி’யோ கிராமப் பின்னணியில் சென்றது. ‘ஆசை’யில் நடித்த பிரகாஷ்ராஜை களஞ்சியம் பயன்படுத்திக்கொண்டார், எஸ்.ஜே.சூர்யாவோ அஜீத்தைக் கதாநாயகனாக்கினார். இந்த மூன்று கதைகளுக்கும் அடிப்படை ராமாயணம்தான். ராவணன் சீதை மீது கொண்ட காமத்தையே இவை நடப்புக் காலத்துக்கு ஏற்ற வகையில் வரித்துக்கொண்டன. ‘ஆசை’ திரைப்படத்தின் தொடக்கத்திலேயே ராவணன் சீதை மீது கொண்ட ஆசை ராவணின் பெண்ணாசை என்னும் தெருக்கூத்து வடிவத்தில் இடம்பெறும். இந்த மூன்று படங்களுக்குமே பார்வையாளர்களின் பெரிய வரவேற்புக் கிட்டியது. ‘பூமணி’ படத்துக்காகச் சிறந்த கதையாசிரியர் விருதைத் தமிழக அரசு மு.களஞ்சியத்துக்கு வழங்கியது.


இதைப் போலவே கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்க பாரதிராஜா திரைக்கதை அமைத்து இயக்கிய ‘புதிய வார்ப்புகள்’ படத்திலும் பாக்யராஜ் இயக்கிய ‘அந்த ஏழு நாட்கள்’ படத்திலும் அடிப்படைக் கதை ஒன்றுதான். ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தில் நாயகன் கிராமத்துக்குப் பள்ளி ஆசிரியராகப் பணியேற்க வருகிறான். அங்கே கிராமத்துப் பெண் ஒருவர்மீது காதல் வயப்படுகிறான். இருவரும் மணமுடிக்க விரும்புகிறார்கள். ஆனால் இருவரும் பிரிய நேரிடுகிறது. மீண்டும் நாயகியை நாயகன் சந்திக்கும்போது நாயகிக்கு மணமாகியிருக்கிறது. இப்போது என்ன செய்வது? அவள் கணவனுடனேயே இருந்துவிடுவாளா அல்லது காதலனுடன் செல்வாளா என்பதே க்ளைமாக்ஸ்.

‘அந்த ஏழு நாட்க’ளிலோ இசையமைக்க வாய்ப்புத் தேடி மெட்ராஸுக்கு வருகிறான் நாயகன். அங்கே தமிழ்ப் பெண்ணான வசந்தியுடன் காதல் ஏற்படுகிறது. மணமுடிக்க வேண்டிய தருணத்தில் எதிர்பாராத வகையில் அவர்கள் பிரிகிறார்கள். மீண்டும் அவளைச் சந்திக்கும்போது அவள் மற்றொருவரின் மனைவியாக இருக்கிறாள். இப்போது அவள் கணவனுடன் இருப்பதா காதலனுடன் செல்வதா என்பதே க்ளைமாக்ஸ்.

பாரதிராஜா ஓர் இயக்குநர் என்பதற்கேற்ப அவரது திரைக்கதையின் முடிவை அமைத்துக்கொண்டார். கே.பாக்யராஜ் ஒரு திரைக்கதையாசிரியர் என்பதற்கேற்ப அவர் படத்து முடிவு அமைந்தது. ‘புதிய வார்ப்புக’ளில் தான் கட்டிய தாலியைத் தானே கழற்றி, தன் மனைவியைக் காதலனுடன் அனுப்பிவைத்துவிடுவான் அந்தக் கணவன். தாலி பற்றிய எந்த வியாக்கியானமும் அங்கே பேசப்படுவதில்லை. மிக இயல்பாக அந்தக் கயிறைக் கணவன் அறுத்துவிடுவான். ஆனால் ‘அந்த ஏழு நாட்க’ளில் கதையே வேறு. அங்கு காதலன் மரபு. பாரம்பரியம், பண்பாடு என்று கதை பேசி, தாலி என்னும் பழமைவாதத்தின் சரடுகளில் முறுக்கேற்றி காதலியை அவளுடைய கணவனுடனேயே விட்டுவிட்டு வந்துவிடுவான்.


முதலிரவன்றே தற்கொலைக்கு முயன்ற நாயகியை அவளுடைய காதலனுடன் சேர்த்துவைப்பதாகவும் ஒரு வாரம் மட்டும் பொறுத்துக்கொள்ளும்படியும் கணவன் கூறுவதில்தான் படமே தொடங்கும். ஆனால் அதன் முடிவோ அதற்கு எதிராக அமைந்திருக்கும். அவள் மீண்டும் தற்கொலைக்கு முயல மாட்டள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. தாலி செண்டிமெண்ட் என்ற பலமான அஸ்திரத்தைப் பாக்யராஜ் பயன்படுத்தி க்ளைமாக்ஸை அமைத்துக்கொண்டார். ஆனாலும் இப்போதும் அப்படத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் ரசிக்க முடிகிறது. சந்திரபாபுவின் வாழ்க்கைச் சம்பவத்தின் அடிப்படையிலான கதை என்ற அம்சமும் படத்தின் சுவாரசியத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறது.

‘புதிய வார்ப்புக’ளில் காதலியும் காதலனும் சேருவதை நியாயமென்று பார்த்த அதே பார்வையாளர்கள்தான் ‘அந்த ஏழு நாட்க’ளில் கணவனுடன் காதலியை விட்டுவிட்டு வரும் காதலனைக் கைதட்டி வரவேற்றார்கள். இந்த இரண்டு படங்களையும் பார்க்கும்போது ‘புதிய வார்ப்புகள்’ இயக்குநரின் படமாகவும் ‘அந்த ஏழு நாட்கள்’ திரைக்கதையாசிரியரின் படமாகவுமே காட்சி கொள்கின்றன.


‘புதிய வார்ப்புக’ளில் கிராமத்து வாழ்க்கையை அதன் பெரிய மனிதரிடம் காணப்படும் சின்னத்தனங்களை, கிராமங்களில் புரையோடிப் போய்க் கிடக்கும் மூடப் பழக்கவழக்கங்களை எளிய காட்சிகள் மூலம் பாரதிராஜா வெளிப்படுத்துவதில் தென்படும் திரைமொழி நம்மை ஆச்சரியப்படுத்தும். பூக்காரப் பெண்மணி கதாபாத்திரம், சமூக சேவகி கதா பாத்திரம், நாயகியான ஜோதி கதாபாத்திரம் ஆகியவை வெவ்வேறு வகையான பெண்களின் குணாதிசயங்களையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். சமூக சேவகியின் குடும்ப பின்னணியை ஒரு கடிதம் மூலமே உணர்த்தியிருப்பார். தாயைக் காப்பாற்றும் பொறுப்பை நிறைவேற்ற கிராமத்துக்குப் பணிக்குவரும் அவரது கனவைக் கிராமத்து நிலவுடைமையாளரின் சிற்றின்ப வேட்கை சீரழித்துவிடும். தனது திரைக்கதையில் தமிழ்க் கிராம வாழ்க்கையை, அதன் கீழான மனிதர்களை, அதன் உன்னதங்களைக் காட்சிகளாக மாற்றியதில் பாரதிராஜா தனித்துத்தெரிகிறார்.

ஒரு திரைக்கதையின் அடிப்படை நோக்கம் பார்வையாளர்களின் திருப்திதான். ஆனாலும் சுவாரசியமான, கற்பனையான சம்பவங்களால் மட்டுமே அதை உருவாக்காமல் சமூக அக்கறைக்கும் இடமளித்தால் திரைப்படம் வெறும் கேளிக்கைக்குரியதாக மாறும் அபாயம் தவிர்க்கப்படும். அப்படியான திரைக்கதைகள் தான் காலத்தை வென்று நிற்கும்.

ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016

சினிமா ஸ்கோப் 10: ஒரு ஓடை நதியாகிறது

இயக்குநர் ஸ்ரீதர்

ஒரு திரைக்கதையை எதற்குப் படமாக்குகிறார்கள்? சும்மா பொழுதுபோக்குக்காகவா? நூற்றுக்கணக்கானோர் இரவு பகல் பாராமல் உழைத்து ஒரு படத்தை உருவாக்குவதன் காரணம் வெறும் கேளிக்கையல்ல. பொழுதுபோக்குக்கான சினிமாவில்கூட ஏதாவது செய்தி சொல்லவே திரைப்படத் துறையினர் விரும்புகிறார்கள். பிறகு ஏன் சிலர் படங்கள் புகழப்படுகின்றன, சில படங்கள் இகழப்படுகின்றன என்று கேட்கிறீர்களா? ஒரு படம் நல்ல படமாவதும் கெட்ட படமாவதும் திரைக்கதையில் இல்லை. அந்தத் திரைக்கதையை எப்படித் திரையில் காட்சிகளாகக் காட்டுகிறார்களோ அந்தத் தன்மையில் இருக்கிறது. அதாவது அதை எப்படிக் காட்சிப்படுத்துகிறார்கள் என்பதில்தான் அதன் தரம் அடங்கியுள்ளது.

அடிப்படையில் மகேந்திரன் முதல் விசுவரை அனைவரும் சமூகத்தை மேம்படுத்த வேண்டும் என்றுதான் படமெடுக்கிறார்கள். இயக்குநர் மகேந்திரன் போன்றோர் தங்கள் திரைக்கதையில், அது சொல்லவரும் விஷயத்தை நேரடியாக வெளிப்படுத்தும் காட்சிகளை அமைக்காமல், திரைக்கதை எதை உணர்த்த வேண்டுமோ அது தொடர்பான காட்சிகளை அமைக்கிறார்கள். ‘உதிரிப் பூக்கள்’ படத்தின் ஒரு காட்சி சட்டென்று நினைவுக்குவருகிறது. தன் குழந்தைக்குப் பெரியம்மை என ஆதுரத்துடன் அஸ்வினி கூறுவார். மிகவும் பொறுமையாக விஜயன், ‘பெரியம்மையை ஒழித்துவிட்டதாக அரசு சொல்கிறது, அரசாங்க மருத்துவமனையில் போய்ச் சொல் பணம் தருவார்கள்’என உரைப்பார். தன் குழந்தையின் நோய் குறித்த விஷயத்தில் இப்படிக் குரூரமாக ஒரு தகப்பனால் யோசிக்க முடியும் என்றால் அவர் எப்பேர்பட்ட சாடிஸ்டாக இருக்க முடியும் என்று பார்வையாளர்கள் புரிந்துகொள்வார்கள். இப்படியான காட்சிகளைக் கொண்ட திரைக்கதை மேம்பட்டதாக வெளிப்படும்.

இயக்குநர் மகேந்திரன் 

இயக்குநர்கள் சிலர் தாம் சொல்ல வரும் விஷயத்தை அப்படியே காட்சியாக்கிவிடுகிறார்கள். இயக்குநர் விசு வகையறா படங்கள் இப்படி நேரடியான வெளிப்படுத்தல்களாக இருக்கும். ஒரு விஷயத்தை இலைமறை காயாக உணர்த்தும்போது அதில் வெளிப்படும் நாசூக்குத் தன்மை திரைக்கதையின் கலையம்சத்தைக் கூட்டுகிறது. பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தால் திரைக்கதை சிதறு தேங்காய் போல் ஆகிவிடுகிறது. கலை எதையும் நேரடியாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்தும். கோவிலில் சிலை மூலம் கடவுளை உணர்த்துவதைப் போன்றது அது. அதே நேரத்தில் சமூகத்தின் பழக்க வழக்கங்களை அப்படியே விதந்தோதுவதும் ஒரு நல்ல திரைக்கதையின் வேலையாக இருக்காது. அது சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் வழக்கங்களைக் குறித்த பல கேள்விகளை எழுப்பும். அதுதான் திரைக்கதையின் பிரதானப் பண்பு. அப்படியெழும் கேள்விகளுக்கான பதில்களை நோக்கிப் பார்வையாளர்களை நகர்த்தும். இந்த இடத்தில் ஸ்ரீதரின் ‘அவளுக்கென்று ஓர் மனம்’ ஞாபகக் குளத்தின் மேற்பரப்பில் ஓரிலையாக மிதக்கிறது.

திரைக்கதையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புவர்கள் ஸ்ரீதரின் எந்தப் படத்தையும் தவறவிட மாட்டார்கள். அவரது திரைக்கதை உத்தி மிகவும் கவனிக்கத்தக்கது. மிக இயல்பாகத் திரையில் சம்பவங்களை நகர்த்திச் செல்லும் சாமர்த்தியம் கொண்டவர் அவர். இல்லையென்றால் ஒரு வரிக் கதையான ‘தென்றலே என்னைத் தொடு’ படத்தைச் சுவையான பாடல்களால் உருப்வேற்றி ஒரு வருடம் ஓடக்கூடிய வெற்றிப் படைப்பாக மாற்றியிருக்க முடியுமா? அவரது எல்லாத் திரைக்கதைகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. பெரும்பாலானவை முக்கோணக் காதல் கதைகள். பார்வையாளர்களின் உணர்வெழுச்சியை ஒட்டியே விரிந்து செல்லும் திரைக்கதையின் முடிவில் அவர்கள் எதிர்பாராத முடிவு காத்திருக்கும்.


‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கணவன் உயிரை முன்னாள் காதலனிடம் விட்டுவிட்டுக் காத்திருக்கிறாள் மனைவி. கணவன் பிழைப்பானா மாட்டானா என்று எல்லோரும் காத்திருக்க அவர் ஈவு இரக்கமற்று, சற்றும் எதிர்பாராத வகையில் மருத்துவரைக் கொன்றுவிடுகிறார். ஆனால் தன் பிரியத்துக்குரிய காதலியின் கணவரது உயிரைக் காப்பாற்றிவிட்டார் மருத்துவர். அந்த மன நிறைவே அவருக்குப் போதும், இதற்கு மேல் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறார் என்பதே திரைக்கதை உணர்த்தும் செய்தி.

‘அவளுக்கென்று ஓர் மனம்’ படமும்கூட ஒருவகையில் முக்கோணக் காதல் கதையே. இந்தப் படத்தின் தலைப்பே வித்தியாசமானது. பொதுவாக ஒரு சொல்லைத் தொடர்ந்து உயிரெழுத்துடன் ஆரம்பிக்கும் சொல் வரும்போது மட்டுமே ஓர் என எழுதுவது தமிழ் மரபு. அப்படிப் பார்த்தால் அவளுக்கென்று ஒரு மனம் என்பதுதான் தலைப்பாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் அவளுக்கென்று ஓர் மனம் எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது, தலைப்பு இலக்கணத்தை மீறியத்தைப் போலவே இந்தப் படத்தின் நாயகியும் இலக்கணங்களை மீறியவள். அதைத் தான் தலைப்பின் மூலம் சொல்லாமல் சொல்கிறார் ஸ்ரீதர் என்று தோன்றுகிறது. அவள் இலக்கணங்களை எதற்காக மீறுகிறாள் என்பதை அறியும் பார்வையாளர்கள் அவளது மீறல்களின் நியாயங்களை உணர்ந்துகொள்வார்கள். அதுதான் இந்தத் திரைக்கதையின் சிறப்பு.


செல்வந்தப் பெண்ணான லலிதா பருவ வயதில் பெற்றோரை இழந்து, உயர் நீதிமன்ற நீதிபதியான மாமா வீட்டில் தஞ்சமடைகிறாள். மாமாவின் மகன் கண்ணனைக் காதலிக்கிறாள். இருவருக்கும் மணம் முடிக்க வேண்டும் எனக் கண்ணனின் பெற்றோர் நினைக்கிறார்கள். கண்ணனுக்கோ லலிதாவின் கல்லூரித் தோழி மீனா மீது காதல். மீனா ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் கண்ணனின் நண்பனான கோபால் என்னும் இளைஞனைக் காதலிக்கிறாள். அவன் ஒரு பெண் பித்தன். தன் சுகத்துக்காகப் பிறரைப் பயன்படுத்தத் தயங்காதவன். யதேச்சையாக அவனது சுயரூபத்தை அறிந்துகொண்ட மீனா அவனிடமிருந்து விலகிவிடுகிறாள். அவள் விலகிய தருணத்தில் தோழி லலிதா மூலம் கண்ணனின் கண்களில் பட்டுவிடுகிறாள். அவனுக்கு மீனாவை மிகவும் பிடித்துவிடுகிறது. அவளையே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். லலிதா ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு தோழிக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்கிறாள்.

இதன் பின்னர் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களால் லலிதாவுக்கும் கோபாலுக்கும் உறவு ஏற்படுகிறது. லலிதாவின் நடவடிக்கைகள் மாறுகின்றன. இரவில் தாமதமாக வீட்டுக்கு வருகிறாள். சில நாள்களில் குடித்துவிட்டு வருகிறாள். இதனால் குடும்ப மானம் போவதாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் குடும்ப மானத்தைக் காப்பாற்றத்தான் லலிதா இவை அனைத்தையும் செய்கிறாள் என்பதுதான் திரைக்கதையின் விசேஷம். குடும்ப மானத்தைக் காப்பாற்ற மீனா வீட்டிலேயே பூஜை செய்கிறாள், தீர்த்தம் பருகுகிறாள், லலிதாவோ கோபாலுடன் பாருக்குப் போகிறாள், குடிக்கிறாள். இரண்டும் இரண்டு துருவமான செய்கைகள். ஒன்றை உலகம் கையெடுத்துக் கும்பிடும். மற்றொன்றைக் காறித் துப்பும். ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கும்போது குடிகாரியாக மாறிய லலிதாமீது நம்மால் கோபப்பட முடியாது. அவளது செய்கைகளுக்குப் பின்னே அப்பழுக்கற்ற தூய எண்ணம் நிறைந்திருப்பதை நம்மால் உணர முடியும். அப்படியான திரைக்கதையை அமைத்திருப்பார் ஸ்ரீதர். அதுதான் ஒரு திரைக்கதையின் சிறப்பு.