இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், நவம்பர் 30, 2015

ஆரோக்கியம் கெடுக்கும் விஓசி பெயிண்ட்


நிம்மதியாக வாழப்போகும் வீட்டைக் கட்டி முடித்த பின்னர் இறுதியாக வந்து நிற்கும் வேலை வண்ணமடிப்பது. அவ்வளவு எளிதில் வீட்டுக்குத் தேவையான வண்ணங்களை நாம் தேர்ந்தெடுத்துவிடுவதில்லை. பார்ப்பதற்கு அழகாகத் தோன்றும் வண்ணங்களை அடிக்க வேண்டும் என்பதில் கவனத்துடன் இருக்கிறோம். நண்பர்கள் பரிந்துரைக்கும் இணையத்தை மேய்கிறோம், யாரிடமெல்லாம் கேட்க முடியுமோ அனைவரிடமும் கேட்கிறோம். ஏற்கனவே கட்டி முடித்திருக்கும் வீடுகளை எல்லாம் ஆவலுடன் கவனிக்கிறோம்.

அந்த வண்ணங்கள் நம் வீட்டுக்கு எப்படி இருக்கும் என மனசுக்குள் அநேக வண்ணங்களை மாற்றி மாற்றி வண்ணப்பூச்சு செய்து பார்க்கிறோம். கடைசியாக வீட்டுக்கு வண்ணமடிப்பதற்காக பெயிண்ட் வாங்கக் கடை கடையாக அலைந்து திரிகிறோம், ஒருவழியாக நமக்குத் தேவையான வண்ணத்தைக் கண்டடைகிறோம். அதையே வீட்டுக்குப் பூசி அழகு பார்க்கிறோம். அதில் மகிழ்ச்சியுடன் குடியேறிவிடுகிறோம். எல்லாம் சரிதான். பெயிண்ட்களில் கலந்துள்ள சில வேதிப் பொருட்கள் நோய்களை உருவாக்கிவிடுகின்றனவாம் அதை உணர்ந்து பெயிண்ட் தேடினீர்களா, வாங்கினீர்களா?

வழக்கமாக பெயிண்ட்களில் விஓசி எனச் சொல்லப்படும் நச்சுத் தன்மை கொண்ட எளிதில் ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் கலந்துள்ளன. வீட்டின் உள்ளே சுழன்று வரும் காற்றை மாசுபடுத்துவதிலும் இவற்றின் பங்கு அதிகம். ஏனெனில் இந்த விஓசிகள் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டவை என்பதால் காற்றில் எளிதில் கலந்துவிடும். இந்த விஓசியின் சில வகைகள் கண், காது, தொண்டை எரிச்சல், தலைவலி, ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்றும் சில வகை விஓசியால் புற்றுநோய்கூட ஏற்படக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.

பெயிண்டுகளைப் பொறுத்தவரை ஒரு லிட்டருக்கு 50 கிராம் விஓசி வரை இருந்தால் அதனால் பெரிய பாதிப்பில்லை. அதற்கு மேல் விஓசி இருக்கும்போது அது வீட்டில் வசிப்போரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கவே செய்யும். மேலும் அடர் வண்ணங்களைவிட மென்மையான வண்ணங்களில் விஓசியின் அளவு குறைவாகவே இருக்கும், மணமும் நாசியை நெருடாமல் இருக்கும்.

பெயிண்டுகளில் மட்டுமல்ல வீட்டின் சில அறைக்கலன்கள் உருவாக்கத்திலும், வீட்டின் சுத்தப்படுத்தலுக்குப் பயன்படும் திரவத்திலும்கூட இந்த விஓசிகள் கலந்துள்ளன. ஆகவே ஆரோக்கியமான வாழ்வுக்கும் வீட்டுக்கும் விஓசியைக் கண்டறிந்து களைய வேண்டும். குறைந்தபட்சம் இதை மட்டுப்படுத்த வேண்டும்.

வீட்டில் பயன்படும் க்ளீனிங் பவுடரிலோ, திரவத்திலோ ஃபார்மால்டிஹைடு பென்சீன், அம்மோனியா, குளோரின், சோடியம் லாரல் சல்பேட் போன்ற வேதிப்பொருள்கள் கலந்திருக்கின்றனவா என்பதைக் கவனியுங்கள். இவை தீங்கு விளைவிக்கும் விஓசிகளைத் தர வல்லவை. எனவே இவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வீட்டைச் சுத்தப்படுத்தவும் உணவுப் பாத்திரங்களைச் சுத்தப்படுத்தவும் நாம் பயன்படுத்தும் வேதிப்பொருள்கள் நமக்கு நோய்களை ஏற்படுத்திவிடாதவாறு நாம்தான் பாதுகாக்க வேண்டும்.

அறைகளில் நறுமணம் வீச வேண்டும் என்பதற்காக ஏர் ஃப்ரஷ்னர்களைப் பயன்படுத்துகிறோம். இதிலும் பென்சீன், ஃபார்மால்டிஹைடு ஆகிய வேதிப் பொருள்கள் உள்ளனவா என்பதைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இவற்றில் கவனம் வைக்காவிட்டால் நறுமணம் தவழ விரும்பி நச்சுக் காற்றைச் சுவாசிக்க நேரிடும்.

அதேபோல் பெண்கள் அதிகமாகப் பயன்படுத்தும் நெய்ல் பாலீஷ் ரிமூவர்களிலும் விஓசிகள் உமிழப்படும் வாய்ப்புகள் அதிகம். அறைக்கலன்களின் பாலீஷ் வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களிலும் விஓசிகள் உள்ளன. இவை காற்றில் கலந்துவிடுவதால் நாம் சுவாசிப்பதன் மூலம் இவை நம் உடம்புக்குள் சென்றுவிடும்.

அதே போல் இத்தகைய வேதிப்பொருட்களை எக்காரணத்தைக் கொண்டு பெரிய அளவில் வீடுகளில் சேமித்துவைக்கக் கூடாது. புதிய வீடுகளின் பணியின் போது இத்தகைய பொருள்களை வாங்கி வைக்க நேர்ந்தால்கூட அவற்றைத் தனியே இருக்கும் அறைகளில் வைத்திருக்கலாமே தவிர நாம் புழங்கும் அறைகளில் வைத்திருப்பது ஆரோக்கியமானதல்ல. வீடுகளில் மிகச் சாதாரணமாக நுழைந்து நோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள் விஷயத்தில் கவனமாகத் தான் இருக்க வேண்டும்.

நவம்பர் 28 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, நவம்பர் 29, 2015

கடிதங்கள் கூறும் கருணையின் சரிதம்!


அன்னை தெரசாவின் சேவைகள் அவருடைய மனத்தைப் போலவே எல்லையற்றவை. ஐம்பதாண்டு காலத்துக்கும் மேலாக, தன் வாழ்வின் சம்பவங்களை, அவற்றில் பல சொல்ல முடியாத சோகங்களை உள்ளடக்கியவை, தனது நீண்ட நாள் நண்பருக்குத் தான் எழுதிய கடிதங்களில் இதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கடிதங்களை அன்னை தெரசா அழித்துவிட விரும்பினார். ஆனால், அவை அழிக்கப்படவில்லை, 2009-ம் ஆண்டில் ‘மதர் தெரசா: கம் பீ மை லைட்’ என்னும் பெயரில் நூலாக வெளிவந்தன. இந்த நூலை அவருடைய போதகர் பிரைய்ன் கோலொடியஜுக் தொகுத்திருந்தார்.

அன்னை தெரசாவின் இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு ‘த லெட்டர்ஸ்’ என்னும் ஹாலிவுட் திரைப்படம் ஒன்று டிசம்பர் 4 அன்று வெளியாக இருக்கிறது. வில்லியம் ரியட் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதையை அவரே எழுதியிருக்கிறார். அமெரிக்காவின் இல்லினாய் மாகாணத்தைச் சேர்ந்த இந்த இயக்குநர் அநேக ஆவணப் படங்களையும் ‘ஸ்கார்பியன்’, ‘ஐலண்ட் ப்ரே’ உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இருள் நிறைந்த வாழ்வில் இறை நம்பிக்கை கொண்ட பெண்ணாகவும் பின்னர் உலகமறிந்த அன்னையாகவும் அவர் பரிணமித்த முழு வாழ்வையும் இந்தக் கடிதங்கள் வாயிலாகச் அறிந்துகொள்ள முடியும். இந்தப் படம் அந்த சம்பவங்கள் அனைத்தையும் காட்சிகளாகக் கொண்டிருக்கிறது. பல சம்பவங்களை அவ்வளவு எளிதில் திரையில் கொண்டுவர முடியவில்லை. பிறப்பு முதலாக அன்னை தெரசாவின் வாழ்வை அப்படியே அறிந்துகொள்ள உதவும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதே போல் கத்தோலிக்க மிஷனரிகளின் தோற்றமும் வளர்ச்சியும் படத்தின் காட்சிகளின் வழியே உணர்த்தப்பட்டிருக்கிறது. அன்னை தெரசாவின் போராட்டமான வாழ்க்கையிலும் இறை நம்பிக்கையை விடாமல் தன் வாழ்நாளின் இறுதி வரை அவர் சேவையாற்றச் சிறிதும் சுணங்கியதில்லை என்ற அடிநாதத்தை வலுவேற்றும் விதத்தில் ‘த லெட்டர்ஸ்’ உருவாகியிருக்கிறது.

‘மோனலிசா ஸ்மைல்’, ‘ட்ருலி மேட்லி டீப்லி’ உள்ளிட்ட படங்கள் மூலமாக நன்கு அறிமுகமான நடிகை ஜுலியட் ஸ்டீவன்சன் அன்னை தெரசா வேடமேற்றிருக்கிறார். ரட்ஜர் ஹெவர், மேக்ஸ் வான் சிடோ, பிரியதர்ஷினி போன்ற நடிகர்கள் முக்கிய வேடங்களை ஏற்றிருக்கின்றனர். ஹாலிவுட்டின் சுயசரிதைப் படங்கள் வரிசையில் ‘த லெட்டர்ஸ்’ முத்திரை பதிக்கும் என்பதைப் படத்தின் ட்ரைலர் உறுதிசெய்கிறது. ஆகவே, படத்தைக் காண ஹாலிவுட் திரைப்படங்களின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அன்னை தெரசாவின் நேயர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

திங்கள், நவம்பர் 23, 2015

பொன்விழா கொண்டாடும் சுரங்கப் பாதை

சுரங்கப் பாதைகள் மட்டும் இல்லாவிட்டால் பரபரப்பான சென்னையில் சாலைகளைப் பாதசாரிகள் கடப்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது. அதுவும் அண்ணாசாலை போன்ற, வாகனங்கள் எப்போதும் சீறிப் பாய்ந்துகொண்டிருக்கும் ஒரு சாலையின் நிலையை நினைத்தாலே கதி கலங்குகிறது. அப்படியொரு இடத்தில் சுமார் ஐம்பது ஆண்டுகளாக சேவையாற்றிவருகிறது சுரங்கப்பாதை ஒன்று.

அது, எல்லிஸ் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை ஆகிய மூன்றும் சந்திக்கும் இடத்தில் உள்ள ரவுண்டானா சுரங்கப் பாதை. நெடுஞ்சாலைத் துறையினரின் பதிவேடுகளில் ‘ரவுண்டானா சுரங்கப் பாதை’ என்னும் இந்தப் பெயரால்தான் இந்தச் சுரங்கப் பாதை குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏனெனில் இந்தச் சுரங்கப் பாதை இருக்கும் இடத்தில் இதற்கு முன்பு ரவுண்டானா இருந்தது. மேலும் இதன் அருகில் ரவுண்டானா ஐலண்ட் என்னும் கட்டிடமும் இருந்திருக்கிறது.

சுமார் 25 கார்களை ஒரே நேரத்தில் நிறுத்தும் அளவுக்கு இடம் கொண்டிருந்திருக்கிறது இந்தக் கட்டிடம். இது இருந்த இடத்தில்தான் இப்போது இந்தச் சுரங்கப் பாதை இயங்கிவருகிறது எனச் சொல்லப்படுகிறது.

அப்போது அண்ணாசாலையில் இருந்த எல்ஃபின்ஸ்டோன் தியேட்டருக்கு வருபவர்கள் படம் பார்த்துவிட்டு ரவுண்டானா ஐலண்டில் அமைந்திருந்த ஜாஃபர்ஸ் ஐஸ்கிரீம் சென்டருக்கு வந்து செல்வார்களாம். இந்த தியேட்டர் 1970-கள் வரை செயல்பட்டிருக்கிறது. பின்னர் 1979-ல் இது ரகேஜா வணிக வளாகமாக மாறிவிட்டது. இது ரிச்சி தெருவின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது. இந்த தியேட்டரில் பிரபல மலையாளப் படம் செம்மீன் ஓராண்டு காலம் வரை ஓடியிருக்கிறது.

இவ்வளவு பெருமைமிக்க இந்த ரவுண்டானாவில் பல திரைப்படக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. எண்பதுகளில் வெளியான படம் முதல் இன்று வெளியாகும் படம் வரை அநேகப் படங்களில் இடம்பெற்றிருக்கிறது இந்த ரவுண்டானா சுரங்கப் பாதை. சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘பிசாசு’ படத்தின் பாடல் காட்சி இந்த சுரங்கப்பாதையில்தான் படமாக்கப்பட்டது. ஜெய் நடிப்பில் வெளியான ‘வலியவன்’ படத்திலும் இந்தச் சுரங்கப்பாதை இடம்பெற்றிருக்கும்.

இந்தச் சுரங்கப் பாதையை உருவாக்கும் பணி 1965-ம் ஆண்டில் தொடங்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகள் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடந்திருக்கின்றன. அதன் பிறகு பணிகள் 1967-ம் நிறைவுபெற்றிருக்கிறது. அந்த ஆண்டிலேயே மக்களின் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. இது இந்தச் சுரங்கப்பாதைக்குப் பொன்விழா ஆண்டு. இந்தச் சுரங்கப் பாதையை அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் திறந்துவைத்திருக்கிறார். இப்போது எல்லீஸ் சாலையிலிருந்து வருபவர்கள் வாலாஜா சாலையைக் கடக்க வேண்டும் என்றாலும், அண்ணா சாலைக்குச் செல்ல வேண்டும் என்றாலும் இந்தப் பாதையைத்தான் பயன்படுத்த வேண்டும். மிகவும் பெரிய சுரங்கப் பாதையான இதில் தினமும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்றுவருகிறார்கள்.

நவம்பர் 21 தி இந்து நாளிதழில் வெளியானது

திங்கள், நவம்பர் 16, 2015

இனிமை தரும் இயற்கை ஒளி

இயற்கையில் கிடைக்கும் சூரிய ஒளி இனிய இல்லத்துக்கு மிகவும் அவசியம். எவ்வளவு சூரிய ஒளி வீட்டுக்குள் வருகிறதோ அந்த அளவுக்கு நம்முடைய வீட்டுக்கு நல்லது. சூரிய ஒளி வீட்டுக்கு உள்ளே தங்கு தடையின்றி வருவதால் வெளிச்சம் கிடைப்பது ஒரு பயன் என்றால் நமது ஆரோக்கியத்துக்கும் அது உதவும் என்பது கூடுதல் பயன். ஏனெனில் சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது.

மேலும் போதுமான சூரிய ஒளி வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் அநாவசியமாகப் பகல் வேளைகளில்கூட மின்விளைக்கை எரியவிட்டு மின்சாரச் செலவைக் கூட்டிக்கொள்ள வேண்டாம். ஆனால் பலவேளைகளில் வீட்டுக்குள் ஒளிவருவதைத் தடுக்கும் வகையில் நாம் நடந்துகொள்கிறோம் நமது செயல்கள் அமைந்துவிடுகின்றன என்பதை உணர்ந்துகொண்டாலே போதும்.

அந்தத் தவறை நாம் சரிசெய்துவிடலாம். தேவையான அளவுக்கு ஒளியையும் பெற்றுக்கொண்டுவிடலாம். குகையில் வாழ்வதைப் போல் வீட்டுக்குள் வாழ்ந்தால் பகல் முழுவதும் விளக்கெரிய வேண்டியதிருக்கும் ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். வீட்டுக்குள் அதிக ஒளி வர என்ன செய்ய வேண்டும்?

வீட்டுக்குள் கண்ணாடிகளை அதிகமாக வைக்கலாம். இதன் மூலம் வீட்டுக்குள் வரும் சூரிய ஒளி பிரதிபலித்து வீட்டுக்கு அதிக இயற்கை ஒளி கிடைக்கும். சுவர்களில் எதிரெதிராக கண்ணாடிகளைத் தொங்கவிடலாம். கண்ணாடியிலான அறைக்கலன்களைப் பயன்படுத்தலாம். அறைக்கலன்கள் கண்ணாடியால் ஆனதாக இருக்கும்போது அதுவும் ஒளியைப் பிரதிபலிக்கும் ஆகவே வீட்டுக்குக் கிடைக்கும் வெளிச்சம் அதிகரிக்கும். கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றுக்கும் கண்ணாடியைப் பயன்படுத்தலாம்.

வீட்டின் சுவர்களுக்கு வண்ணமடிப்பதிலும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அடர்த்தியான நிறங்களைத் தவிர்த்துவிட வேண்டும். அடர் வண்ணங்கள் சூரிய ஒளியை அதிகமாகப் பிரதிபலிக்காது. எனவே மென் நிறங்களையே வீட்டுச் சுவர்களுக்கு வண்ணங்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மென் நிறங்களைச் சுவர்களில் பூசும்போது அவை ஒளியை அதிகப்படியாகப் பிரதிபலித்து வீட்டின் இயற்கை ஒளியை ஏற்றித் தரும்.

வீடுகளின் பயன்பாட்டுக்காக நாம் போட்டுவைத்திருக்கும் அறைக்கலன்கள் சூரிய ஒளியை அடைப்பது போல் அமைந்துவிடக் கூடாது. பல வீடுகளில் கட்டில், பீரோ போன்றவற்றை ஜன்னலை அடைத்தது போல் போட்டுவிடுவார்கள். எனவே ஜன்னல்கள் வழியே உள்ளே புகும் சூரிய ஒளியை அவை தடுத்துவிடும். வீட்டுக்குக் கிடைக்க வேண்டிய இயல்பான ஒளியும் குறைந்துவிடும். கண்ணாடி அறைக்கலன்கள் பயன்படுத்தினால் இந்தத் தொல்லை இல்லை. இல்லாத பட்சத்தில் ஜன்னல்கள், கதவுகள் போன்றவற்றை அடைக்காத வகையில் அறைக்கலன்களைச் சிறிது இடம்விட்டுப் போட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் சூரிய ஒளியைத் தடுக்கும் வகையில் அறைக்கலன்களைப் போடக் கூடாது என்பதைக் கவனமாகப் பின்பற்றுங்கள்.

நமக்கு எப்படி ஆடையைப் பார்த்துப் பார்த்து வாங்குவோமோ அப்படியே நமது பிரியத்துக்குரிய வீட்டுக்கும் கடை கடையாக அலைந்து திரிந்து அருமையான துணியை எடுத்து திரைச்சீலைகளைத் தைத்துப் போடுவோம். திரைச்சீலைகளும் சிலவேளைகளில் வீட்டுக்கு உள்ளே வரும் ஒளியைத் தடுத்துவிடும். மிகவும் அடர்த்தியான துணிகளில் திரைச்சீலைகளைத் தைத்துப் போட்டால் அவை வீட்டுக்குள் அதிக ஒளியை வர விடாது. ஆகவே ஒளி ஊடுருவும், மென்மையான துணியாலான திரைச்சீலைகளையே வீடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

வீடுகளின் உள்ளே அடங்கிய அறைகளுக்கு மிகவும் தடிமனான கதவுகளைப் பொருத்தக் கூடாது. அப்படிப் பொருத்தினால் சிறிதுகூட வெளிச்சம் அந்த அறைக்குக் கிடைக்காது. கதவுகளிலேயே சிறிய திறப்புகள் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் நல்லது. இல்லையெனில் கண்ணாடிக் கதவை அங்கே பொருத்தலாம்.

இயற்கையாக நமக்குக் கிடைக்கும் ஒளியைப் பயன்படுத்தி வீட்டுக்குப் போதுமான வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. இயற்கையான ஒளியைப் பயன்படுத்தினால் நமக்கும் நல்லது; சுற்றுச்சூழலுக்கும் நல்லது. அதுவும் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் சூரிய ஒளியை முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டுவருவதை மனதில் இருத்தி நம்மாலான முயற்சியைக் காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும்.

நவம்பர் 14 தி இந்துவில் வெளியானது

ஞாயிறு, நவம்பர் 15, 2015

வெற்றி பெறுவாரா ஏஞ்சலினா ஜோலி?


பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தன் கணவர் ப்ராட் பிட்டுடன் இணைந்து நடித்திருக்கும் சமீபத்திய படம் ‘பை த ஸீ’. 2005-ல் வெளியான ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஸ்மித்’ படத்துக்குப் பின்னர் இருவரும் இணைந்து நடித்திருக்கும் முதல் படம் இது. ஏஞ்சலினா ஜோலி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மூன்றாம் படம் இது.

படத்தின் திரைக்கதையையும் எழுதி ப்ராடுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கவும் செய்கிறார் ஏஞ்சலினா ஜோலி. லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிடியூட்டின் திரைப்பட விழாவில் இந்தப் படம் முதலில் திரையிடப்பட்டது. விமர்சகர்களின் வரவேற்பு இந்தப் படத்துக்குப் பெரிதாகக் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்படம் அமெரிக்காவில் நவம்பர் 13 அன்றும், இங்கிலாந்தில் டிசம்பர் 11 அன்றும் வெளியாகவிருக்கிறது.

பிரான்ஸில் 1970-களின் மத்தியில் நடைபெற்ற சம்பவங்களைச் சித்தரிக்கும் இந்தக் கதையைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏஞ்சலினா ஜோலி எழுதியிருப்பதாகவும் தம்பதியருக்கிடையே ஏற்படும் உறவுச் சிக்கல் பற்றி இந்தத் திரைக்கதை அலசுவதாகவும் சொல்கிறார்கள். பிரிந்துவிடுவதென்று முடிவெடுத்தபின், தம் மண வாழ்வைக் காப்பாற்றும் இறுதி முயற்சியாக பிரான்ஸ் நாட்டின் ஒரு கடற்கரையோர நகரத்துக்குச் சுற்றுலா செல்லும் தம்பதியர், அங்கே எதிர்கொள்ளும் சம்பவங்களே திரைக்கதையாகியுள்ளன. ‘த ஒயிட் ரிப்பன்’ படத்தில் தான் மேற்கொண்ட சிறந்த ஒளிப்பதிவுக்காக ஆஸ்கர் விருது பெற்ற, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் கிறிஸ்டியன் பெர்கர் இப்படத்தைப் படம் பிடித்திருக்கிறார். படம் முழுவதும் பெரும்பாலான காட்சிகளில் இயற்கையான ஒளியையே கையாண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ல் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு 2014 நவம்பர் 10 அன்று நிறைவடைந்திருக்கிறது. ரோலண்ட் என்னும் அமெரிக்க எழுத்தாளர் கதாபாத்திரத்தில் கணவனாக ப்ராட் பிட்டும், வனெஸ்ஸா என்னும் நடன மங்கை கதாபாத்திரத்தில் மனைவியாக ஏஞ்சலினா ஜோலியும் நடித்திருக்கிறார்கள். இப்படம் தொடர்பாக இதுவரை வெளியான விமர்சனங்களைப் பொறுத்தவரை படத்துக்கு ஆதரவாக அவை அமையவில்லை. படத்தின் நீளம் மிகவும் அதிகம் எனவும், படம் பார்க்கும் ரசிகர்களைச் சோர்வையடையச் செய்யும் வகையில் காட்சிகள் அமைந்திருக்கின்றன எனவும் விமர்சகர்கள் சிலர் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ஹாலிவுட்டின் பிரபலமான தம்பதி பத்தாண்டுகளுக்குப் பின்னர் ஒன்றுசேர்ந்து நடித்திருப்பதைக் காண விரும்பும் ரசிகர்கள் ஒருவேளை திரையரங்கில் குவியலாம். ஆஸ்கர் விருது பெற்ற ஏஞ்சலினா ஜோலி என்னும் நடிகையின் ரசிகர்கள் படத்துக்குக் கைகொடுக்கலாம்.

ஞாயிறு, நவம்பர் 08, 2015

விஞ்ஞானிகள் உருவாக்கும் பேய்!


ஹாரி பாட்டர் படத்தில் பிரதான வேடமேற்ற டேனியல் ரேட்க்ளிப் இப்போது இளைஞனாகிவிட்டார். அவர் நடித்த ‘விக்டர் ஃப்ராங்கென்ஸ்டைன்’ என்னும் ஹாலிவுட் திரைப்படம் நவம்பர் 25 அன்று வெளியாக இருக்கிறது. பிரபல கவிஞர் ஷெல்லியின் மனைவியான மேரி ஷெல்லி என்னும் ஆங்கில எழுத்தாளர் 1818-ம் ஆண்டில் எழுதிய ஃப்ராங்கென்ஸ்டைன் என்ற கிளாஸிக் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் திரைக்கதையை எழுதிய மேக்ஸ் லேண்டிஸ், மேரி ஷெல்லி எழுதிய பேய்க்கதையை அடிப்படையாக வைத்துத் திரைக்கதையை எழுதினாலும் சம காலத்துக்கு ஏற்ப அதில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். ‘அமெரிக்கன் அல்ட்ரா’, ‘க்ரோனிக்கிள்’ போன்ற படங்களுக்கு இவர் எழுதியிருந்த திரைக்கதை ஹாலிவுட் ரசிகர்களால் ஆர்வத்துடன் ரசிக்கப்பட்டது.

விஞ்ஞானியான டாக்டர் ஃப்ராங்கென்ஸ்டைனுடைய உதவியாளர் இகோரின் பார்வையில் இந்தப் படம் சொல்லப்படுகிறது. வழக்கமான பாதையில் செல்லாமல் புதிய பாதையில் இந்தப் படம் பயணப்படுகிறது என்பதற்கு இதுவே உதாரணம். இகோரின் வேடமேற்றிருக்கிறார் டேனியல் ரேட்க்ளிப். டாக்டர் வேடமேற்றிருப்பவர் நடிகர் ஜேம்ஸ் மேக்வோய். டாக்டர் ஃப்ராங்கென்ஸ்டைன் என்று நாம் அறியும் பிரபல மனிதர் பிரபலமடைந்த பாதையில் அவருடன் பயணப்பட்ட அவருடைய உதவியாளர் இகோருக்கும் டாக்டருக்கும் இடையே நிலவிய நட்பு சார்ந்த பல சம்பவங்கள் இந்தக் கதையை நகர்த்திச் செல்கின்றன. ஃப்ராங்கென்ஸ்டைனின் பேய்க்கதையைப் படமாக்குபவர்கள் ஃப்ராங்கென்ஸ்டைனுக்கும் அவர் உருவாக்கும் பேயுருவுக்கும் இடையேயான உறவை அதிகமாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பேயுரு படத்தின் பாதியிலேயே திரைக்கு வந்துவிடும். ஆனால் இப்போது வெளிவர உள்ள இந்த ஃப்ராங்கென்ஸ்டைன் படத்தின் இறுதியில்தான் அது கதைக்குள் நுழைகிறது. இதை உறுதிப்படுத்துவது போல் டேனியல் ரேட்க்ளிப் ஒரு நேர்காணலில், மேரி ஷெல்லியின் நாவலைப் படித்தவர்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா என்பது கேள்விக்குறிதான் எனத் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் டாக்டர் ஃப்ராங்கென்ஸ்டைனின் பேயுரு கிட்டத்தட்ட படத்தின் இறுதியில்தான் இடம்பெறுகிறது என்பதைக் குறிப்பிட்டு இப்படிச் சொல்லியிருக்கிறார். ஆனால் ரசிகர்களைப் பயமுறுத்தும் காட்சிகளைவிட அதிகமாக ஆக்‌ஷன் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன என்பதால் படத்தின் சுவாரஸ்யத்துக்குக் குறைவிருக்காது என்றும் கூறியிருக்கிறார். மொத்தத்தில் பல வேடிக்கை சம்பவங்களும் சாகச நிகழ்ச்சிகளும் நிறைந்த இந்தச் சுவாரஸ்யமான பேய்க்கதையை ஹாலிவுட்டுக்கே உரிய பிரமாண்டத்துடன் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பால் மெக்குயிகன்.

ஞாயிறு, நவம்பர் 01, 2015

அமெரிக்கா எதிர்பார்க்கும் படம்!


பிரபல அமெரிக்கத் திரைப்பட இயக்குநரும் நடிகருமான தாமஸ் மெக்கர்த்தி இயக்கத்தில் வரும் நவம்பர் 6 அன்று திரைக்கு வர இருக்கிறது ‘ஸ்பாட்லைட்’ என்னும் ஹாலிவுட் திரைப்படம். இயக்குநர் மெக்கர்த்தி தனது ‘அப்’ திரைப்படத்தின் திரைக்கதைக்காக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ‘ஸ்பாட்லைட்’ திரைப்படம் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற வெனிஸ் திரைப்பட விழாவில் முதன்முதலில் திரையிடப்பட்டு விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவில் வெளிவரும் ‘த பாஸ்டன் க்ளோப்’ பத்திரிகையின் ஸ்பாட்லைட் குழுவினர் மேற்கொண்ட விசாரணையைப் பற்றிய படம் இது. 2002-ம் ஆண்டு மாஸாசுசெட்ஸ் மாகாணத்திலுள்ள கத்தோலிக்க ஆலயத்தில் நடைபெற்ற பாலியல் முறைகேடுகளைத் துப்புத் துலக்கி விளக்கமான அறிக்கைகளைத் தொடர்ந்து பிரசுரித்துவந்தது ‘த பாஸ்டன் க்ளோப்’ பத்திரிகை. இதற்காக 2003-ம் ஆண்டு அந்தப் பத்திரிகைக்கு புலிட்ஸர் விருதும் கிடைத்தது. இந்தச் சம்பவங்களை உள்ளடக்கியதே இந்த ஸ்பாட்லைட் திரைப்படம்.

கத்தோலிக்க ஆலயத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் சுரண்டலுக்காக ஐந்து கத்தோலிக்கப் பாதிரியார்கள்மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான விவகாரத்தில் ‘த பாஸ்டன் க்ளோப்’ பத்திரிகை துணிச்சலுடன் செயல்பட்டுத் திரைமறைவு ரகசியங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுப் பாதிரியார்கள் செய்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. பின்னர் அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான ‘த பாஸ்டன் க்ளோப் ’ அறிக்கைகள் படு சூடாக அமெரிக்காவில் விவாதிக்கப்பட்டன. இந்தச் சூடான சம்பவங்களை அப்படியே ருசிகரமான திரைக்கதையாக்கியிருக்கிறார் தாமஸ் மெக்கார்த்தி. இதைத் திரைக்கதையாக்கியதில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் ஜோஷ் சிங்கர்.

கால ஓட்டத்தில் இந்தப் பாலியல் முறைகேடுகள் தொடர்பான முணுமுணுப்புகள் சிறிது சிறிதாகச் சமூகத்தினரிடையே ஒலித்து மறைந்துவிட்டது. மக்களும் ஊடகங்களும் இந்த அவமானகரமான கதையை மறந்துவிட்டுத் தத்தம் செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். சட்ட அமைப்பும் காவல்துறையும்கூட இந்தச் சம்பவத்தை விட்டு விலகி நெடுதூரம் வந்துவிட்டன. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிலர் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால் இந்த விவகாரத்தின் பின்னணியில் மறைந்து கிடந்த உண்மையைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தியது பாஸ்டன் க்ளோப் பத்திரிகை. உண்மையை வெளி உலகுக்குத் தெரியப் படுத்த துணிச்சலுடன் செயலாற்றியது.

இதுதான் இப்போது திரைப்படமாகியிருக்கிறது. ஒரு கத்தோலிக்க ஆலயத்தின் பாலியல் முறைகேடுகளை அறியாத தலைமுறையினருக்கு இந்தப் படம் அந்த மோசமான சம்பவங்களை நினைவுபடுத்தும். இந்தப் பத்திரிகையின் ஸ்பாட்லைட் குழுவினராக மார்க் ரூஃபலோ, மைக்கேல் கீட்டன், ரேச்சல் மெக்காதம்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கான திரைக்தையை மெக்கார்த்தியும் ஜோஷ் சிங்கரும் கடந்த 2013-ம் வருடத்திலேயே முடித்துவிட்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2014 செப்டம்பர் 24 அன்று பாஸ்டனில் தொடங்கி நடைபெற்றிருக்கிறது. கடந்துபோன வரலாற்றின் கறை படிந்த தருணங்கள் மீண்டும் வெள்ளித்திரையில் வலம் வரும்போது அது என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்துமோ என்ற ஆவலுடன் அமெரிக்கா இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

அக்டோபர் 30 தி இந்து நாளிதழில் வெளியானது

காதலில் கசிந்துருகிய ஆன்மாவின் கதை

தமிழ்த் திரையுலகில் தனது நடிப்புத் திறனால் நீங்காத இடம்பிடித்த நடிகை சாவித்திரி. திரையுலக வாழ்வில் மகத்தான வெற்றிகளைப் பெற்ற இவரது தனிப்பட்ட வாழ்க்கை சொல்லொணாத் துயரங்களைக் கொண்டது. சாவித்திரியின் இறுதிக்கால வாழ்க்கையின் சம்பவங்களைக் கேட்கும் யாரின் கண்களிலும் கண்ணீர் ததும்பாமல் இருக்காது. அப்படியான நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதிக் கொண்டுவருவதற்கே தனி தைரியம் தேவை. ஏனெனில் அசாத்தியத் துணிச்சல் இருந்தால் மட்டுமே அவருடைய வாழ்வின் சம்பவங்களை ஒரு நூலாகத் தொகுக்க முடியும். அந்தத் துணிச்சல் கைவரப்பெற்ற நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா இந்த நூலை உருவாக்கியுள்ளார்.

இந்த நூல் நேர்கோட்டு வடிவில் சாவித்திரியின் வாழ்வைச் சொல்லவில்லை. மாறாக அவருடைய வாழ்வில் நடந்தேறிய முக்கியமான நிகழ்வுகளை அரிய தருணங்களை விவரிப்பதன் மூலம் படிப்பவருக்கு சாவித்திரியின் வரலாறு சொல்லப்படுகிறது. சாவித்திரிக்கும் ஜெமினி கணேசனுக்கும் இடையே மலர்ந்த காதல் விலாவாரியாக விவரிக்கப்படுகிறது. ஜெமினியால் அவரடைந்த மனத் துயரும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு நடிகையாக அறிமுகமான சாவித்திரி தயாரிப்பாளராக மாறியதால் அடைந்த துயரங்களுக்கும் அளவில்லை. அந்தத் துயரக் கதையும் இந்நூலின் பக்கங்களை நிறைத்துள்ளது. சாவித்திரியின் ஜனனம் தொடங்கி மரணம் வரையான பல முக்கிய தருணங்களையும் நிகழ்வுகளையும் கொண்டுள்ள இந்த நூலில் சாவித்திரியின் வாழ்வு தொடர்பான பல அரிய ஒளிப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அவர் பங்களித்த திரைப்படங்களில் பட்டியல் தரப்பட்டுள்ளது. மொத்தத்தில் சாவித்திரியின் வாழ்வை அறிந்துகொள்ள விரும்பும் வாசகரை இந்நூல் கவர்ந்துவிடும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

கனிவான பாடல்கள் தந்த கவியரசு

தமிழ்க் கவிஞர்களில், பாடலாசிரியர்களில் கண்ணதாசனுக்குக் கிடைத்திருக்கும் இடமும் புகழும் அளப்பரியது. தனது வாழ்வில் கடந்துவந்த சம்பவங்களைப் பாடல்களாகச் சமைத்து அவற்றுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்தவர் கண்ணதாசன். இன்றும் காற்றில் தவழ்ந்து வரும் ஏதாவது ஒரு கண்ணதாசனின் பாடலைக் கேட்கும்போது அது தொடர்பான ஒருசில செய்திகளை நம் மனம் அசைபோடும். அப்படியான கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளை, பாடல்களை ரசித்த கவிபாஸ்கர் அவற்றை ஆய்வு செய்து கட்டுரைகளாக்கியிருக்கிறார். கண்ணதாசனின் கவிதைகளில் காணப்படும் கவிநயம், அழகியல் போன்றவற்றை விவரிக்கும் அதே நேரத்தில் திரைப்படப் பாடல்களில் தென்படும் நயத்தையும் அழகையும் சுட்டிக்காட்ட கவிபாஸ்கர் தவறவில்லை.

கண்ணதாசன் பாடல்களைப் புனைந்த சம்பவங்களைப் பற்றிய பல கதைகள் காற்றில் தவழ்ந்துகொண்டேயிருக்கின்றன. அவற்றில் எது புனைவு எது நிஜம் என்பதைக் கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. இதை கவிபாஸ்கரும் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயத்தில் அவரும் சில பாடல்களின் பின்னணியாகச் சொல்லப்பட்டும் சில சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இலக்கிய ரசனையும் கவிமனமும் கொண்ட கவிபாஸ்கரின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இந்த நூல் கண்ணதாசனின் ரசிகர்களுக்குப் பிடிக்கக்கூடியது; அவர்கள் விரும்பிப் படிக்கக்கூடியது.

அக்டோபர் 30 தி இந்து நாளிதழில் வெளியானது