இந்த வலைப்பதிவில் தேடு

இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், நவம்பர் 16, 2015

இனிமை தரும் இயற்கை ஒளி

இயற்கையில் கிடைக்கும் சூரிய ஒளி இனிய இல்லத்துக்கு மிகவும் அவசியம். எவ்வளவு சூரிய ஒளி வீட்டுக்குள் வருகிறதோ அந்த அளவுக்கு நம்முடைய வீட்டுக்கு நல்லது. சூரிய ஒளி வீட்டுக்கு உள்ளே தங்கு தடையின்றி வருவதால் வெளிச்சம் கிடைப்பது ஒரு பயன் என்றால் நமது ஆரோக்கியத்துக்கும் அது உதவும் என்பது கூடுதல் பயன். ஏனெனில் சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது.

மேலும் போதுமான சூரிய ஒளி வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் அநாவசியமாகப் பகல் வேளைகளில்கூட மின்விளைக்கை எரியவிட்டு மின்சாரச் செலவைக் கூட்டிக்கொள்ள வேண்டாம். ஆனால் பலவேளைகளில் வீட்டுக்குள் ஒளிவருவதைத் தடுக்கும் வகையில் நாம் நடந்துகொள்கிறோம் நமது செயல்கள் அமைந்துவிடுகின்றன என்பதை உணர்ந்துகொண்டாலே போதும்.

அந்தத் தவறை நாம் சரிசெய்துவிடலாம். தேவையான அளவுக்கு ஒளியையும் பெற்றுக்கொண்டுவிடலாம். குகையில் வாழ்வதைப் போல் வீட்டுக்குள் வாழ்ந்தால் பகல் முழுவதும் விளக்கெரிய வேண்டியதிருக்கும் ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். வீட்டுக்குள் அதிக ஒளி வர என்ன செய்ய வேண்டும்?

வீட்டுக்குள் கண்ணாடிகளை அதிகமாக வைக்கலாம். இதன் மூலம் வீட்டுக்குள் வரும் சூரிய ஒளி பிரதிபலித்து வீட்டுக்கு அதிக இயற்கை ஒளி கிடைக்கும். சுவர்களில் எதிரெதிராக கண்ணாடிகளைத் தொங்கவிடலாம். கண்ணாடியிலான அறைக்கலன்களைப் பயன்படுத்தலாம். அறைக்கலன்கள் கண்ணாடியால் ஆனதாக இருக்கும்போது அதுவும் ஒளியைப் பிரதிபலிக்கும் ஆகவே வீட்டுக்குக் கிடைக்கும் வெளிச்சம் அதிகரிக்கும். கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றுக்கும் கண்ணாடியைப் பயன்படுத்தலாம்.

வீட்டின் சுவர்களுக்கு வண்ணமடிப்பதிலும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அடர்த்தியான நிறங்களைத் தவிர்த்துவிட வேண்டும். அடர் வண்ணங்கள் சூரிய ஒளியை அதிகமாகப் பிரதிபலிக்காது. எனவே மென் நிறங்களையே வீட்டுச் சுவர்களுக்கு வண்ணங்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மென் நிறங்களைச் சுவர்களில் பூசும்போது அவை ஒளியை அதிகப்படியாகப் பிரதிபலித்து வீட்டின் இயற்கை ஒளியை ஏற்றித் தரும்.

வீடுகளின் பயன்பாட்டுக்காக நாம் போட்டுவைத்திருக்கும் அறைக்கலன்கள் சூரிய ஒளியை அடைப்பது போல் அமைந்துவிடக் கூடாது. பல வீடுகளில் கட்டில், பீரோ போன்றவற்றை ஜன்னலை அடைத்தது போல் போட்டுவிடுவார்கள். எனவே ஜன்னல்கள் வழியே உள்ளே புகும் சூரிய ஒளியை அவை தடுத்துவிடும். வீட்டுக்குக் கிடைக்க வேண்டிய இயல்பான ஒளியும் குறைந்துவிடும். கண்ணாடி அறைக்கலன்கள் பயன்படுத்தினால் இந்தத் தொல்லை இல்லை. இல்லாத பட்சத்தில் ஜன்னல்கள், கதவுகள் போன்றவற்றை அடைக்காத வகையில் அறைக்கலன்களைச் சிறிது இடம்விட்டுப் போட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் சூரிய ஒளியைத் தடுக்கும் வகையில் அறைக்கலன்களைப் போடக் கூடாது என்பதைக் கவனமாகப் பின்பற்றுங்கள்.

நமக்கு எப்படி ஆடையைப் பார்த்துப் பார்த்து வாங்குவோமோ அப்படியே நமது பிரியத்துக்குரிய வீட்டுக்கும் கடை கடையாக அலைந்து திரிந்து அருமையான துணியை எடுத்து திரைச்சீலைகளைத் தைத்துப் போடுவோம். திரைச்சீலைகளும் சிலவேளைகளில் வீட்டுக்கு உள்ளே வரும் ஒளியைத் தடுத்துவிடும். மிகவும் அடர்த்தியான துணிகளில் திரைச்சீலைகளைத் தைத்துப் போட்டால் அவை வீட்டுக்குள் அதிக ஒளியை வர விடாது. ஆகவே ஒளி ஊடுருவும், மென்மையான துணியாலான திரைச்சீலைகளையே வீடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

வீடுகளின் உள்ளே அடங்கிய அறைகளுக்கு மிகவும் தடிமனான கதவுகளைப் பொருத்தக் கூடாது. அப்படிப் பொருத்தினால் சிறிதுகூட வெளிச்சம் அந்த அறைக்குக் கிடைக்காது. கதவுகளிலேயே சிறிய திறப்புகள் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் நல்லது. இல்லையெனில் கண்ணாடிக் கதவை அங்கே பொருத்தலாம்.

இயற்கையாக நமக்குக் கிடைக்கும் ஒளியைப் பயன்படுத்தி வீட்டுக்குப் போதுமான வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. இயற்கையான ஒளியைப் பயன்படுத்தினால் நமக்கும் நல்லது; சுற்றுச்சூழலுக்கும் நல்லது. அதுவும் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் சூரிய ஒளியை முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டுவருவதை மனதில் இருத்தி நம்மாலான முயற்சியைக் காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும்.

நவம்பர் 14 தி இந்துவில் வெளியானது

ஞாயிறு, செப்டம்பர் 13, 2015

உச்சி தொடும் பயணம்... உயிரே பணயம்!

உலகின் மிக ஆபத்தான பகுதிகளுள் ஒன்று எனச் சொல்லப்படுவது எவரெஸ்ட் சிகரப் பகுதி. இந்தச் சிகரத்தின் உச்சியைத் தொடும் சாகசப் பயணத்தில் உயிரைப் பணயம் வைத்துச் செல்லும் பலர் வெற்றிபெற்றுள்ளனர், பலர் வாழ்வை இழந்துள்ளனர். 1996-ம் ஆண்டில் எவரெஸ்டில் நிகழ்ந்த பேரழிவுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வில்லியம் நிக்கல்சனும், சைமன் போஃபாயும் எழுதிய கதையை ‘எவரெஸ்ட்’ என்னும் பெயரிலேயே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பால்டஸார் கார்மேகர்.

ஜூனில் வெளியான இப்படத்தின் ட்ரெயிலரை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் யூடியூபில் பார்த்துள்ளனர். இப்படத்தைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் கொண்டுள்ளார்கள் என்பதற்கு இதுவே சான்று.

உயிரைத் துச்சமாக மதித்து ஜேஸன் க்ளார்க் தலைமையிலான ஒரு குழுவும், ஜேக் கிலினால் தலைமையிலான ஒரு குழுவும் எவரெஸ்டில் ஏறுகின்றன. அப்போது அவர்கள் எதிர்கொள்ளும், ஒருபோதும் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாத தடைகளை, நெருக்கடிகளை, அவற்றைச் சமாளித்து அவர்கள் மேற்கொள்ளும் துணிச்சலான பயணத்தை மயிர்க்கூச்செறியும் வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

உறைந்த பனிமலையில் காற்றுகூட அரிதான சூழலில் எப்படியும் உச்சியைத் தொட வேண்டும் என்ற வெறியுடன் செல்லும் குழுவினருடன் ரசிகர்களும் செல்லும் உணர்வைத் தரும் வகையில் காட்சிகள் உயிரோட்டத்துடன் படமாக்கப்பட்டுள்ளன. பரந்த பனிமலையின் தோற்றத்தைப் பார்க்கும்போதும் அதில் அவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான சாகசப் பயணத்தைக் காணும்போதும் மனத்தில் எழும் கிலி அடங்குவதேயில்லை.

உயர்ந்து எழுந்து நிற்கும் மலையில் குழுவினர் ஏறிக்கொண்டிருக்கும்போது உலகையே விழுங்கிவிடுவது போன்ற பெரும் பசியுடன் சரிந்து விழும் பெரும் பனித் திரளில் குழுவினர் மாட்டிக்கொள்வார்களோ என்ற பதைபதைப்பை மனம் உணர்கிறது. திகில் சிறையில் மாட்டிக்கொண்டு லப்டப் என இதயம் துடிக்கும் ஓசையைத் துல்லியமாகக் கேட்கும் அனுபவத்தை இப்படம் உருவாக்கிவிடுகிறது.

இயற்கையின் சீற்றத்தை எதிர்த்துத் துணிச்சலுடன் முன்னேறி இயற்கையின் குழந்தையான எவரெஸ்டின் உச்சியை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என்று தொடர்ந்து முன்னேறும் குழுவினரின் ஒவ்வொரு அடியிலும் ஆபத்து காத்திருக்கிறது. அத்தனையையும் சமாளித்துச் செல்லும் அவர்கள் இறுதியில் உச்சியைத் தொட்டார்களா, அதலபாதாளத்தில் வீழ்ந்தார்களா என்ற விடைதெரியாத கேள்விக்கு விடைகாண இந்தப் படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும்.

செப்டம்பர் 18-ல் திரையரங்குக்கு வரவிருக்கிறது இந்தப் படம். பயம், துணிச்சல், நம்பிக்கை, காதல் போன்ற உணர்வுகள் பின்னிப்பிணைந்த திரைக்கதையின் பயணத்தில் முன்னணியில் இருப்பது சாகச உணர்வு மட்டுமே. சாகச விரும்பிகளின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் எவரெஸ்ட் நிச்சயம் அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்றே தோன்றுகிறது.
செப்டம்பர் 11 தி இந்து நாளிதழில் வெளியானது

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்