இந்த வலைப்பதிவில் தேடு

புதன், செப்டம்பர் 30, 2015

வேலி

டாலர் எனும் புதிருக்குள் சிக்கிய வாழ்க்கை



அந்த மாலைப்பொழுது கொஞ்சம் இறுக்கமானதாக அமைந்ததுகண்முன்னே  அமெரிக்கத் தம்பதி ஒன்றின் குடும்பச் சிக்கல் அரங்கேறிக்கொண்டிருந்தது. தீவிர மன உணர்வுகளைக் கிளறியபடி நகர்ந்துகொண்டிருந்ததுஅல்லயன்ஸ் பிரான்சேயில் கண்ட நாடகமான வேலிநவீன வாழ்வின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருட்டு மனிதர்கள் தேசங்களின் எல்லையை எளிதாகக் கடந்து சென்றுவிடுகிறார்கள்.ஆனால் அவர்களது மனதில் சொந்த தேசம் விதைத்த எண்ணங்களே பரிபூரணமாக நிரம்பிவழிகின்றன.தாங்கள் சென்ற நாட்டில் திடீரென ஒரு சிக்கல் ஏற்படும்போது நிலைதவறிவிடுகிறார்கள்உறவுகளுக்குள்ளேயே சிக்கல் முளைத்துவிடுகிறதுஇதற்கெல்லாம் மனிதர்களின் மனோபாவம் காரணமா,அவர்கள் சென்று வசித்துவரும் வெளிநாடு காரணமா இப்படிப் பலகேள்விகளை எழுப்புகிறது வேலி


எந்த நேரத்திலும் மனிதர்களை மனப்பிறழ்வுக்குள்ளாக்கிவிடும் சாத்தியங்களைக் கொண்ட நெருக்கடிகளைத் தாராளமாகத் தந்துகொண்டேயிருக்கிறது அந்த அமெரிக்க வாழ்க்கைஅப்படியொரு வாழ்க்கை வாழ்ந்துவருகிறான் ராஜன் தன் மனைவி ஜெயாவுடன்டாலர்களைக் குவிப்பதற்காக,படுக்கையறையின் ஒரு பகுதியில் தலையணை போல் எப்போதும் இடம்பிடித்துக் கொள்கிறது மடிக் கணினி. தன் ஒன்றரை வயதுக் குழந்தை கட்டிலிலிருந்து தவறி விழுந்து விபத்து நேர்ந்துவிடுவதாக ராஜன் கூறுகிறான்அதை அவனுடைய மனைவியும் நம்புகிறாள்குழந்தை சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க மருத்துவர்களது அறிக்கை சொல்கிறதுகுழந்தை வளர்க்கும் தகுதி ராஜனுக்கு இல்லை என்று அவர்களின் சட்டம் சொல்ல முற்படுகிறதுசராசரியான இந்தியத் தாயான ஜெயாவுக்குத் தங்கள் குழந்தை தங்களிடமிருந்து பிரிக்கப்பட்டுவிடுமோ என்னும் பதற்றம் தொற்றிக்கொள்கிறதுராஜனின் நெருங்கிய நண்பன் கோபால்அவனுடைய மனைவி ரேகா ஆகியோரின் உதவியை நாடுகிறார்கள்அவர்கள் ஆலோசனையின் பேரில் வழக்கறிஞர் காந்தாவை இந்த வழக்குக்காக அமர்த்துகிறார்கள்.

நாடகத்தில் ஒரு புதிர் மெல்ல மெல்ல அவிழ்கிறதுஅது முழுவதுமாக அவிழ்ந்துகொள்ளும்போது நாடகம் நிறைவடைகிறது பார்வையாளனின் மனத்தில் வாழ்வு குறித்த வெறுமை சூழ்ந்துகொள்கிறது.வாழ்க்கையின் ஆதார நம்பிக்கைகளை மிக லாவகமாக ஆனால் தீவிரமாக அசைத்துப் பார்க்கிறது இந்த நாடகம்போலி ஆசாபாசத்துடன் நவநாகரிக உடையணிந்து நடமாடும் நவீன மனிதர்களை எள்ளி நகையாடுகிறது வேலிமனிதர்களின் அகத்தில் கரைபுரண்டு ஓடும் சாக்கடையின் துர்நாற்றத்தைபுறத்தில் போட்டுக்கொள்ளும் ஒப்பனையால் தவிர்க்க நினைக்கும் அறியாமையைக் கொடூரத்துடன் குத்திக்காட்டுகிறது நாடகம்.


பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான் அவன் மீது அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான் என்கிறது பரிசுத்த வேதாகமம்தான் எப்படியிருந்தாலும் தன் குழந்தை ஊரார் மெச்சும் உத்தமனாக வளர வேண்டும் என்பதே பெற்றொரின் விழைவுஅதன் பொருட்டே அவர்கள் குழந்தைகள் தவறு செய்யும்போது கண்டிக்கிறார்கள்ஆனால் அது வரம்பை மீறிவிடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறதுஅப்படியான பொறுப்பில் அவர்கள் சிறிதளவு பிசகினாலும் சட்டம் தன் கடமையைக் கவனிக்க வந்துவிடுகிறதுஇது அமெரிக்காவின் சட்டம்ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவில் ஏற்படும் சிக்கலைச் சட்டம் கண்காணிக்கத் தொடங்கினால் அங்கே உணர்வுக்கு வேலையில்லைஅமெரிக்க சட்டத்தின் நோக்கம் ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதல்ல தனிமனிதனின் உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்பதே.

ஐந்து கதாபாத்திரங்கள், ஒன்றரை வயதுக் குழந்தை அப்பு உள்பட காட்டப்படாத ஓரிரு கதாபாத்திரங்கள்,டிரேயில் ஒரு தண்ணீர் ஜாடிஇரண்டு டம்ளர்கள்சில கோப்புகள்லேடிஸ் பேக்ஜெண்ட்ஸ் பேக்ஒரு சீப்பு,ஒரு மொபைல்ஒரு பேனாஒரு டைரிஅநேகமாக இவைதான் அரங்கத்தில் இடம்பெற்றிருந்தனஆனால் பார்வையாளன் கண்முன்னே அமெரிக்காவைஅங்கே ஒரு தம்பதி எதிர்கொள்ளும் உளவியல் நெருக்கடிகளைசட்டச் சிக்கல்களைத் தவிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்இதைச் சாத்தியப்படுத்தியதில் நாடக இயக்குநரின் பண்பட்ட இயக்கத்தை உணர்ந்துகொள்ள முடிகிறதுநாடகத்தின் பேசுபொருளை மிகத் தீவிரமாகவும் தீர்க்கமாகவும் சித்தரித்திருக்கிறது நாடகம்ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்த வேடத்துக்கு ஏற்றபடி மிக பாந்தமாகப் பொருத்தியிருக்கிறதுஅது மிகவும் தத்ரூபமாக அமைந்திருப்பதால் தான் பார்வையாளனால் அந்த வழக்கறிஞர் பாத்திரத்துடன் ஒன்றவே முடியவில்லை.அது நாடகத்தின் சிருஷ்டியில் நேர்ந்திருக்கும் ரஸவாதம்.


கணவனுக்குப் பயந்து அவனுக்கு அடங்கியே நடந்துபழகிய ஜெயாவின் உடல்மொழியிலேயே சதா ஒரு பயம் தென்படுகிறதுதயக்கத்தின் வேர் அவளுடைய நடையையே பாதித்திருக்கிறதுஆனால் அவள் குழந்தைக்குக் கணவனால் ஆபத்து என்று தெரிந்தபோது அவளிடம் வெளிப்படும் ஆங்காரம் அவளிடம் குடிகொண்டிருக்கும் இந்திய தாய் மனத்தை வெளிக்கொண்டுவந்துவிடுகிறதுசிறுவயதில் தந்தையின் கடுமையான தண்டனைகளைப் பெற்று வளர்ந்திருந்த ராஜன்அவனுக்கும் ரேகாவுக்குமான வெளியில் சொல்ல முடியாத உறவுவேலையின் நெருக்கடி ஆகியவற்றால் எப்போதும் தீராத மனக் குழப்பத்துடனேயே இருக்கிறான்அதிலிருந்து தப்ப தற்காலிகத் தீர்வாகக் குடியை நாடுகிறான்ரேகா ஒரு புதுமைப்பெண்அவள் மென்மையானவள்தான்ஆனால் அது சுரண்டப்படும்போது அவள் கொதித்தெழுகிறாள்எந்த எல்லைக்கும் சென்று தன் கோபத்தைக் காட்டுகிறாள்ராஜன் மீது அவளுக்கிருப்பது சாதாரண பழிவாங்கும் உணர்வல்ல.அது ஆண்களின் கயமைத் தனத்தின்மீது ஒரு பெண்ணுக்கு ஏற்படும் தார்மிகக் கோபத்தின் வெளிப்பாடு.அதனால் தான் அவளால் ஜெயாவுக்கு இரக்கப்பட முடிகிறதுஇந்த நாடகத்தில் அந்த கோபால் பாரதி சுட்டும் ஒரு வேடிக்கை மனிதன் அவ்வளவேஅவனது அறியாமை அவனைப் பாதுகாத்துக்கொள்கிறது.குழந்தை இல்லை என்னும் ஏக்கம் தத்து எடுக்க விரும்பாத மனைவி என அவனது வாழ்க்கை நித்ய கண்டம் பூரண ஆயுசு ரகம் தான்

மனித வாழ்வைப் புரட்டிப் போட்ட நவீன சாதனமென மொபைலைச் சொல்லலாம்நவீன வாழ்வில் செய்திகளும்சம்பவங்களும் உடனுக்குடன் பரிமாறப்படுகின்ன. தீர்வுக்கான முயற்சியாக இவைஅடையாளம் காணப்பட்டாலும் மன அழுத்தத்தை உருவாக்குவதிலும் அதிகரிப்பதிலும் மொபைலுக்கு உள்ள பங்கை எளிதில் புறந்தள்ள முடியாதுஇந்த நாடகம் அதை நுட்பமாகச் சித்தரித்திருக்கிறதுஜெயா தன் தாயுடன் மொபைலில் மேற்கொள்ளும் உரையாடலில் தொடங்கும் நாடகம் ராஜன் வழக்கறிஞர் காந்தாவுடன் மொபைலில் வாக்குமூலம் தருவதாகச் சொல்வதுடன் நிறைவடைகிறதுஒரு திரைப்படம் தரும் அனுபவத்திலிருந்து நாடகம் தரும் அனுபவம் முற்றிலும் வேறுபடுகிறதுநாடகத்தின் அனுபவம் மனதில் அடியாழம்வரை ஊடுருவுகிறதுதீவிர நாடகமான வேலி மனத்தில் வெவ்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறதுவாழ்வு தொடர்பான நமது புரிதலை வளப்படுத்த உதவுகிறது.ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நாடகம் என்னும் ஒரு கலையின் மகத்துவத்தை நம்மிடையே புரியவைத்து விடைபெறுகிறது இந்த வேலி

வங்காள நாடகம் பலோக்
எழுதியவர் :சுதிப்தா பாமிக்

நடிகர்கள்:
ராஜீவ் ஆனந்த் - ராஜன்
பரீன் அஸ்லம் - ஜெயா
அமல் -கோபால்
டெல்பின் ராஜேந்திரன் - ரேகா
விலாசினி - காந்தா லால்வாணி

ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் ஒளி அமைப்பு : சுனிபா பாசு.

மேடை நிர்வாகம் : மணிபாலன் , மனோ , பார்த்திபன்

தமிழ் மொழிபெயர்ப்பு & தயாரிப்பு : அம்ஷன் குமார்
இயக்கம் : பிரணாப் பாசு

இந்நாடகம் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. இந்தக் கட்டுரையின் சுருக்கம் தி இந்து நாளிதழில் வெளியானது.

ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

மீண்டும் மெக்பெத்!

ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களில் பிரதானமானது ‘த ட்ராஜெடி ஆஃப் மெக்பெத்’. மத்திய கால ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மெக்பெத் மிகப் பெரிய போர் வீரன்; தன்னை உணராதவன்; மனைவியின் ஆலோசனையைக் கேட்டு மதியிழந்தவன். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆசையில் மன்னனைக் கொல்கிறான். நண்பனின் வாரிசு அரசனாகக் கூடும் என நண்பனைக் கொல்கிறான்.

மன்னனான பின்னர் அவனால் நிம்மதியாக ஆட்சி நடந்த முடிந்ததா, ஆசையில் ஆட்சியைப் பிடித்த அவனும் அவனுடைய மனைவியும் இன்பத்தை அனுபவித்தார்களா என்று கேட்டால் அதுதான் வாழ்வின் சுவாரஸ்மான திருப்பம். மன்னனைக் கொல்லத் தூண்டிய குற்றவுணர்வில் லேடி மெக்பெத் அவதியுறுகிறாள். ஆட்சி அதிகார போதையில் மெக்பெத் தன் நிம்மதியை இழக்கிறான், சீரான வாழ்வுக்குப் பதில் சீரழிவே மிஞ்சியது.

ஒரு கதையாகப் பல்வேறு திருப்பங்களையும் அதிகார போதையையும் நவீன மனிதனின் உளவியல்ரீதியான அலைக்கழிப்புகளையும் உள்ளடக்கிய நாடகம் இது. அதனால் இது எந்தக் காலத்துக்கும் பொருந்தும். ஆட்சி அதிகாரத்தின் மீது நாட்டம் கொண்டு கேடுகெட்ட செயல்களில் ஈடுபடும் மனிதர்கள் இருக்கும்வரை மெக்பெத் நாடகம் உயிர்ப்புடன்தான் இருக்கும்.

இந்தக் கதை பிடித்துப்போனதால் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் அகிரா குரோசோவா இதை அடிப்படையாகக் கொண்டு, அதில் ஜப்பானியக் கலாச்சார நுட்பங்களைக் கலந்துதான் ‘த்ரோன் ஆஃப் ப்ளட்’ படத்தை உருவாக்கினார். பிரபல இயக்குநர் ரோமன் பொலான்ஸ்கி இந்தக் கதையைப் படமாக்கியிருக்கிறார். இவை தவிர அநேக திரையாக்கங்களைக் கண்ட நாடகமான இது இங்கிலாந்தில் இப்போது மீண்டும் படமாகியிருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் நடத்தியிருக்கிறார்கள். ‘ஸ்நோடவுன்’ படத்தின் மூலம் அறியப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய இயக்குநர் ஜஸ்டின் கர்சல் இயக்கியிருக்கும் மெக்பெத், 2015 மே 23 அன்று கான் படவிழாவில் முதலில் திரையிடப்பட்டது. கானின் தலையாய விருதான தங்கப் பனைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ‘இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’, ‘12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் நடிகர் மைக்கேல் ஃபாஸ்பெண்டர் இந்தப் படத்தில் மெக்பெத்தின் வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார். ‘எ வெரி லாங் எண்கேஜ்மெண்ட், இன்ஸெப்ஷன் ஆகிய படங்களின் வழியே பரிச்சயமாகியிருக்கும் நடிகை மரியான் காட்டிலார்டு லேடி மெக்பெத் வேடமேற்றிருக்கிறார்.

இதன் முதல் டீஸர் 2015 ஜூன் 4 அன்று யூடியூபில் வெளியானது. அதை 26 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். மெக்பெத்தின் கதை எத்தனை முறை படமானாலும் அத்தனை முறையும் அதைப் பார்க்க ரசிகர்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் படைப்புத் திறனால் அது சாத்தியமாகியிருக்கிறது. ஏற்கெனவே பார்த்த கதைதானே என ரசிகர்கள் இந்தக் கதையை ஒதுக்குவதில்லை என்பதற்கு வெளியாகியிருக்கும் பல மெக்பெத்கள் சான்றுகள்.
அதே எதிர்பார்ப்புடன்தான் இப்போது அவர்கள் இந்த மெக்பெத்துக்கும் காத்திருக்கிறார்கள். குருதியின் சேற்றில் கால் பதித்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இந்த மெக்பெத், கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை வழியில் விடுதலை வாங்கிக்கொடுத்த காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று இங்கிலாந்தில் வெளியாகப்போகிறது என்பது ஒரு முரண்நகையே. அமெரிக்காவில் டிசம்பர் மாதம்தான் திரைக்கு வரவிருக்கிறது.

செப்டம்பர் 25 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, செப்டம்பர் 20, 2015

பதேர் பாஞ்சாலி

சூறையை எதிர்த்து நிற்கும் சிறு குடில்


சத்யஜித் ராயின் பதேர் பாஞ்சாலி வெளியாகி 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதும் முழுமையான திரைப்படம் குறித்த உரையாடலின் ஏதாவது ஓரிடத்தில் தன் முகம் காட்டித்தான் செல்கிறது அந்தப் படம். பொருளாதாரரீதியான பல சிரமங்களுக்குப் பின்னர் அரசின் நிதி உதவியில் வெளியானது அந்தப் படம் என்பது முரண்நகையே. வணிகப் படங்களின் வெற்றிக்குக் கைகொடுத்த வங்காளத்தின் பெருவாரியான ரசிகர்களால் அந்தப் படமும் ரசிக்கப்பட்டது என்பது இந்தியத் திரைப்பட ரசனையின் வளர்ச்சிதான். இந்தியத் திரைப்பட வரலாற்றின் செறிவான பாதையில் அப்படம் ஒரு கைகாட்டியாக இன்றளவும் நின்றுகொண்டிருக்கிறது. 2005-ம் ஆண்டில் வெளியான ‘டைம்’ பத்திரிகையின் தலைசிறந்த 100 படங்கள் பட்டியலில் அது இடம்பெற்றிருந்தது. பதேர் பாஞ்சாலியின் பெருமை குறித்து இப்போதுகூட எழுதுகிறோம். ஆனால், படம் வெளியானபோது சென்னையின் திரையரங்கில் இரண்டு நாட்கள் மட்டுமே ஓடியது என்று அறியும்போது மனதில் கசப்பின் நெடி மண்டுகிறது.


பதேர் பாஞ்சாலி ஒரு குடும்பப் படம். வளர்ப்புப் பிராணிகளும் பறவைகளும் மனிதர்களும் ஒருங்கே வாழும் ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளைச் சித்தரிப்பதன் வாயிலாகப் பல விஷயங்களைத் தழுவிச் செல்லும் படம். ஒரு குடும்பத்தின் வாழ்வினூடே ஒரு தேசத்தை, அதன் குடிமக்களை, இலக்கிய ரசனையை, வளமிழக்கும் கிராம வாழ்வை, நகரத்தில் குழும நேரிடும் சூழலை, ஏழ்மையை… மொத்தத்தில் அக்காலத்தின் சமூக வாழ்வை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது படம். நாடு விடுதலை பெற்று எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியான அந்தப் படம், இந்தியப் படங்களில் இன்றுவரையிலும் அரிதாகவே சாத்தியப்பட்ட தீவிரத்தைத் தன் இயல்பாகக் கொண்டிருந்தது. பழுதுபார்க்கப்பட வேண்டிய வீடு, இரவின் குளிரைப் போக்கப் போர்வைகூட இல்லாமல் அல்லாடும் பாட்டி, போதிய உணவில்லாத சூழலில் பால்யத்தைக் கழிக்கும் குழந்தைகள், முன்னோருடைய வீட்டைக் காலிசெய்ய இயலா மனம் கொண்ட குடும்பத் தலைவன், நல்ல வாழ்வை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குடும்பத் தலைவி போன்ற சித்தரிப்புகள் ஆழமான சமூகப் பார்வையின்பாற்பட்டவை. இத்தகைய சித்தரிப்பின் காரணமாகப் படம் விமர்சனங்களையும் எதிர்கொண்டது.


தீவிர திரைப்படப் பார்வையாளர்கள் சிலர் சாருலதா திரைப்படம்தான் சத்யஜித் ராயின் உன்னதப் படைப்பு என்று கொண்டாடும்போதும், சத்யஜித் ராய் என்ற சொல்லைத் தொடர்ந்து தன்னிச்சையாக ஒலிக்கும் சொல் பதேர் பாஞ்சாலி என்பதற்குக் காரணம், அது அவரது முதல் படம் என்பது மட்டுமல்ல. ஒளிப் படங்களை மட்டுமே எடுத்துக்கொண்டிருந்த சுப்ரதா மித்ராவைத் தன் படத்துக்கு ஒளிப்பதிவாளராக்கியது, பிரபல இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கரை இந்தப் படத்துக்கு இசையமைக்கவைத்தது போன்ற பல புதிய முயற்சிகளை உள்ளடக்கிய படம் என்பதாலேயே.


திரைப்படக் கலையின் அடர்த்தியை உள்வாங்கிய படமாக பதேர் பாஞ்சாலி திரையில் அழகியல் மிளிர நகர்கிறது. காட்சிகளின்போது பார்வையாளனுக்குள் சுரக்க வேண்டிய உணர்வைத் தூண்டும் விதமாகவே இசை ஒலிக்கிறது. அடர்ந்த இரவில் பாட்டி பாடும்போது அதில் ஒலிக்கும் துயரத்தைக் கண்டு தொலைவிலேயே நின்றுவிடுகிறது இசை. உற்சாகமான தருணங்களில்கூட இசை அதன் எல்லையைத் தாண்டுவதில்லை. வரம்புக்குள் வலிமையாக ஒலிப்பதாலேயே படத்தின் உயிரோட்டத்துக்கு உதவுவது மட்டுமே இசையின் பணியாக உள்ளது. நேரடியான காட்சிச் சித்தரிப்பின்போது சுற்றுப்புறத்தின் சம்பவங்களை பார்வையாளரிடம் கொண்டுவந்து சேர்க்கிறது இசை. வீட்டில் குழந்தைகள் அப்புவும் துர்காவும் ரயில் குறித்துப் பேசும்போது பின்னணியில் தொலைவில் ஒலிக்கிறது ரயில் செல்லும் ஓசை.


படத்தின் காட்சிகள் செறிவு மிக்கவை. திருவிழாவின்போது அரங்கேறும் நாடகத்தைக் காணும் அப்புவின் சிறிய கண்களில் தென்படும் தீவிரம், கலையின் தாக்கத்தை எளிதில் புலப்படுத்திவிடுகிறது. தனக்கு மீசை வைத்துக்கொண்டும், கிரீடம் சூட்டிக்கொண்டும் கண்ணாடியில் தன்னை அழகு பார்த்துக்கொள்ளும் அப்புவின் மனநிலை கலை ரசனையால் தாக்கத்துக்கு உள்ளாகும் கலைஞனின் மனநிலை. இப்படி ஒவ்வொரு ஷாட்டிலும் வாழ்வின் ஏதாவது ஒரு கூறு பொதியப்பட்டுள்ளது. சிறுசிறு அசைவுகளில், பார்வைகளில், மனிதர்களின் பண்புநலன்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. ரயில், கடிதம் போன்றவை எல்லாம் கிராமத்தையும் வந்தடைகின்றன. ஆனால் அவற்றால் மனித வாழ்வு மேம்படுகிறதா என்ற ஆதாரக் கேள்வி படத்தில் தொக்கி நிற்கிறது. இதற்கு விடைகாண விழையும் பார்வையாளனைப் படம் வேறொரு தளத்துக்கு நகர்த்துகிறது. இதுவே பதேர் பாஞ்சாலியின் பிரதான அம்சம். அக்காலச் சமூகம் எப்படி இருந்தது என்பதை உணர்த்தும் ஆவணமாக ஒரு புனைவு மாறுகிறது என்பதே பெரும் புதுமை.


வனாந்திரத்தில் காற்றின் ஓசையைக் கிழித்துக்கொண்டு ரயில் செல்வதை துர்காவும் அப்புவும் பார்ப்பது, பாட்டியின் மரணம், கடும் மழையின் சீற்றம், அதனால் நோய்ப் படுக்கையில் துர்கா வீழ்ந்து கிடப்பது போன்ற காட்சிகளின் படமாக்கத்தில் தென்படும் துல்லியமும் நேர்த்தியும் அழகியலும் பதேர் பாஞ்சாலியை தரமான படமாக்குகின்றன. மனிதர்களிடையேயான பிணைப்பின் நெகிழ்ச்சி, வெறுப்பின் வெம்மை, நிறைவேறா எதிர்பார்ப்பு போன்ற உணர்வுகளை நிதானமாகவும் வலுவாகவும் தெளிந்த நீரோடை போல் நகர்ந்து செல்லும் காட்சிகள் விளக்கிச் செல்கின்றன.

பாரம்பரியம் என்னும் பெயரில் பழமைவாதத்தைப் பற்றிக்கொண்டு எஞ்சியிருக்கும் வாழ்வை நசுக்க இயலாது என்பதைப் படம் சொல்கிறது. ஆனால் மரபின் வழியே வந்த உயர் பண்புகளைக் கைவிடவும் முடியாது என்பதையும் அது உணர்த்துகிறது. அதனால்தான் துர்கா திருடிய மாலையை இறுதியில் அப்பு குளத்தில் வீசுகிறான். பூர்வீக கிராமத்தில் வாழ வழியின்றி அந்தக் குடும்பம் நகரத்தை நோக்கி நகர்ந்த பின்னர், அந்த வீட்டில் நாகம் ஒன்று புகுந்துகொள்கிறது. இது ஒரு எச்சரிக்கையன்றி வேறென்ன? சொற்களால் விளக்க முடியாத உயிர்ச் சித்திரமான பதேர் பாஞ்சாலியைப் பார்க்கும் அனுபவம் அலாதியானது. அதனாலேயே அது உலகின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றளவும் போற்றப்படுகிறது.

தி இந்து நாளிதழில் செப்டம்பர் 6 அன்று வெளியான கட்டுரை இது.

காட்டுச் சிறுவனின் ஆக்‌ஷன் அவதார்!

வால் டிஸ்னி பிக்ஸர்ஸ் தயாரிப்பில் 1967-ல் வெளியான சாகசத் திரைப்படம் த ஜங்கிள் புக். இதே பெயரில் ரூத்யார்டு கிப்லிங் 1894-ல் எழுதிய கதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அனிமேஷன் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. நான்கு மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் 205.8 மில்லியன் டாலர் வசூலித்துக் கொடுத்திருக்கிறது. இப்போது இயக்குநர் ஜான் ஃபேவ்ரோ இயக்கத்தில் மீண்டும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் 1967-ல் வெளிவந்த திரைப்படத்தைவிட அதிக சுவாரஸ்யத்தைத் தரும் வகையில் இப்போது இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. முதலில் அனிமேஷன் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள். பின்னர் லைவ் ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். அதன் பின்னர் இரண்டையும் ஒன்று சேர்த்துவிட்டிருக்கிறார்கள். பார்ப்பதற்கு லைவ் ஆக்‌ஷன் படம் போல் தென்பட்டாலும் இந்தப் படத்தில் மோக்லி வேடமேற்றிருக்கும் நீல் சேதி மட்டுமே உயிருள்ள மனிதன்.

மீதி அனைத்துமே கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டவை. படத்தில் இடம்பெற்றிருக்கும் விலங்குகளுக்கு பில் முர்ரே, பென் கிங்ஸ்லி, இட்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் வால்கன் போன்ற பல பிரபலங்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். கம்ப்யூட்டரில் அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் விலங்குகள் பார்க்க உயிருள்ள மிருகங்கள் போன்றே இருக்கின்றன. கார்ட்டூன் படங்களுக்கு உயிரூட்டப்பட்டது போன்ற தோற்றம் இல்லை.

ஒரு பிரம்மாண்டமான பயணத்தின் தொடக்கம் போன்று வெளியாகியிருக்கும் இதன் ட்ரெயிலர் வெளியிடப்பட்ட ஒரு நாளில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். இந்த ட்ரெயிலர் தரும் பிரமிப்பைப் பார்க்கும்போது முழுப் படத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றாமல் இருக்காது.

காட்டில் மோக்லி எதிர்கொள்ளும் அத்தனை விலங்குகளையும் கம்ப்யூட்டரில் அனிமேஷன் தொழில்நுட்பத்தின் உதவியால்தான் உருவாக்கியிருக்கிறார்கள் என்ற நினைவே எழாதவண்ணம் அவை நிஜ விலங்குகள் போலவே கிலி ஏற்படுத்துகின்றன. காட்டில் மாட்டிக்கொள்ளும் மோக்லி புலி, யானை போன்ற பல வன விலங்குகளிடமும் மாட்டிக்கொண்டு தப்பித்துவிடுகிறான் ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் மாட்டிக்கொள்வதையும் தப்பிப்பதையும் பார்ப்பவர்களுக்கு உயிர் போய் உயிர் வருகிறது.

அடுத்தடுத்து என்ன நிகழுமோ என்னும் எதிர்பார்ப்பையும் என்ன அசம்பாவிதம் சம்பவிக்குமோ என்னும் அச்சத்தையும் தரும் வகையிலும் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாகசக் காவியம் போல் இந்தப் படத்தின் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜான் ஃபேவ்ரோ. இந்தப் படத்தில் நடித்திருக்கும் நீல் சேதி இந்தப் பாத்திரத்தில் நடிக்கும் முயற்சியில் சுமார் ஆயிரம் பேரைத் தாண்டி வெற்றிபெற்றிருக்கிறான்.

அவனுக்கு அடுத்து இந்தப் படத்தில் ரசிகர்களைக் கவரப்போவது அந்தப் பாம்புதான். அதன் முன்பு மிரட்சியுடன் நிற்கிறான் மோக்லி ஆனால் பாம்போ அவனுக்குத் தைரியமூட்டுகிறது. எத்தனையோ ஆபத்துகள்; அத்தனையையும் தனி ஒருவனாகச் சமாளித்து சிறுவன் மோக்லி மேற்கொள்ளும் சாகசப் பயணத்தின் ஒவ்வொரு கணமும் பார்ப்பதற்கு அலுக்காது.

படத்தின் காட்சிகள் அனைத்தையும் ஒரு சிற்பம்போல் செதுக்கியிருக்கிறார்கள். படத்தின் உயிரோட்டமான இசையும் நம் கண் முன்னே தெரியும் அந்த மாய உலகத்தை நிஜ உலகம் என நம்பவைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லரே படம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதைச் சொல்லிவிடுகிறது. அந்தப் பிரமாண்டத்தின் முழுப் பரிமாணத்தையும் பார்க்க நீங்கள் தியேட்டருக்குத்தான் செல்ல வேண்டும்.

செப்டம்பர்18 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, செப்டம்பர் 13, 2015

உச்சி தொடும் பயணம்... உயிரே பணயம்!

உலகின் மிக ஆபத்தான பகுதிகளுள் ஒன்று எனச் சொல்லப்படுவது எவரெஸ்ட் சிகரப் பகுதி. இந்தச் சிகரத்தின் உச்சியைத் தொடும் சாகசப் பயணத்தில் உயிரைப் பணயம் வைத்துச் செல்லும் பலர் வெற்றிபெற்றுள்ளனர், பலர் வாழ்வை இழந்துள்ளனர். 1996-ம் ஆண்டில் எவரெஸ்டில் நிகழ்ந்த பேரழிவுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வில்லியம் நிக்கல்சனும், சைமன் போஃபாயும் எழுதிய கதையை ‘எவரெஸ்ட்’ என்னும் பெயரிலேயே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பால்டஸார் கார்மேகர்.

ஜூனில் வெளியான இப்படத்தின் ட்ரெயிலரை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் யூடியூபில் பார்த்துள்ளனர். இப்படத்தைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் கொண்டுள்ளார்கள் என்பதற்கு இதுவே சான்று.

உயிரைத் துச்சமாக மதித்து ஜேஸன் க்ளார்க் தலைமையிலான ஒரு குழுவும், ஜேக் கிலினால் தலைமையிலான ஒரு குழுவும் எவரெஸ்டில் ஏறுகின்றன. அப்போது அவர்கள் எதிர்கொள்ளும், ஒருபோதும் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாத தடைகளை, நெருக்கடிகளை, அவற்றைச் சமாளித்து அவர்கள் மேற்கொள்ளும் துணிச்சலான பயணத்தை மயிர்க்கூச்செறியும் வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

உறைந்த பனிமலையில் காற்றுகூட அரிதான சூழலில் எப்படியும் உச்சியைத் தொட வேண்டும் என்ற வெறியுடன் செல்லும் குழுவினருடன் ரசிகர்களும் செல்லும் உணர்வைத் தரும் வகையில் காட்சிகள் உயிரோட்டத்துடன் படமாக்கப்பட்டுள்ளன. பரந்த பனிமலையின் தோற்றத்தைப் பார்க்கும்போதும் அதில் அவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான சாகசப் பயணத்தைக் காணும்போதும் மனத்தில் எழும் கிலி அடங்குவதேயில்லை.

உயர்ந்து எழுந்து நிற்கும் மலையில் குழுவினர் ஏறிக்கொண்டிருக்கும்போது உலகையே விழுங்கிவிடுவது போன்ற பெரும் பசியுடன் சரிந்து விழும் பெரும் பனித் திரளில் குழுவினர் மாட்டிக்கொள்வார்களோ என்ற பதைபதைப்பை மனம் உணர்கிறது. திகில் சிறையில் மாட்டிக்கொண்டு லப்டப் என இதயம் துடிக்கும் ஓசையைத் துல்லியமாகக் கேட்கும் அனுபவத்தை இப்படம் உருவாக்கிவிடுகிறது.

இயற்கையின் சீற்றத்தை எதிர்த்துத் துணிச்சலுடன் முன்னேறி இயற்கையின் குழந்தையான எவரெஸ்டின் உச்சியை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என்று தொடர்ந்து முன்னேறும் குழுவினரின் ஒவ்வொரு அடியிலும் ஆபத்து காத்திருக்கிறது. அத்தனையையும் சமாளித்துச் செல்லும் அவர்கள் இறுதியில் உச்சியைத் தொட்டார்களா, அதலபாதாளத்தில் வீழ்ந்தார்களா என்ற விடைதெரியாத கேள்விக்கு விடைகாண இந்தப் படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும்.

செப்டம்பர் 18-ல் திரையரங்குக்கு வரவிருக்கிறது இந்தப் படம். பயம், துணிச்சல், நம்பிக்கை, காதல் போன்ற உணர்வுகள் பின்னிப்பிணைந்த திரைக்கதையின் பயணத்தில் முன்னணியில் இருப்பது சாகச உணர்வு மட்டுமே. சாகச விரும்பிகளின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் எவரெஸ்ட் நிச்சயம் அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்றே தோன்றுகிறது.
செப்டம்பர் 11 தி இந்து நாளிதழில் வெளியானது