இயக்குநர் தனிதகரம் இயக்கும் படம் என்றால் வெகுளி வெள்ளைச்சாமிக்கு உயிர். அனைத்துப் படங்களின் பெயரையும் தமிழிலேயே வைப்பதால் அவர்மீது வெள்ளைக்குத் தனிப் பிரியம். அவரது நரியகன் படம் வந்தபோது வெள்ளை பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். அந்தப் படத்தைப் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டான். ஹாலிவுட்டில் வெளியான படத்தை அப்படியே எடுத்துவிட்டார் எனப் பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். அதைப் பார்த்த வெள்ளைக்குப் பத்திரிகைகள் மீது பயங்கர வெறுப்பு. ஓர் இயக்குநர் எவ்வளவு சிரமப்பட்டு ஒரு படத்தை இயக்குகிறார் இவர்கள் ஓர் அறையில் உட்கார்ந்து கொண்டு எளிதாக இப்படிக் கிண்டலடிக்கிறார்களே முட்டாள்கள் எனக் கோபம் கோபமாய் வரும். ஆனால் தனிதகரம் இதற்கெல்லாம் கோபப்படவே மாட்டார் போல. உண்மை அறிந்த ஞானி போல் தனி சார் இருப்பார் என வெள்ளைக்குத் தோன்றும்.
நரியகன் படத்தில் நடிகர் கம்மல் தமிழ் சாவுக்கு ஹாலிவுட் அழுகை அழுவார். அதைப் பார்க்கும்போதே கண்களில் நீர் கொட்டோ கொட்டென்று கொட்டும். “நாலு பேர் நாசமாப் போகனும்னா எதைச் செஞ்சாலும் சரிதான்” என்று வில்லன் பேசும் வசனம் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டது. அதன் பின்னர் அநேகப் படங்களில் அந்த வசனத்தைக் கிண்டல் செய்து நகைச்சுவைக் காட்சிகளில் பயன்படுத்திக்கொண்டார்கள். அந்த அளவுக்கு தீர்க்கதரிசன காட்சிகளை அமைப்பதில் தனிசாருக்கு நிகர் தனிசார்தான். நரிநாயகனை லூஸ்கர் பரிசு விழாவுக்கு அனுப்பினார்கள். ஆனால் அதைப் போலவே ஒரு ஹாலிவுட் படம் வெளியாகிவிட்டதால் நரிநாயகனுக்குப் பரிசு கிடைக்கவில்லை. ஆனால் அதன் பிறகு நடிகர் கம்மல் லூஸ்கர் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
ரோகினி நட்சத்திரம் இரண்டு புருஷர்கள் படம். கிருஷ்ணரின் நட்சத்திரமான ரோகினியில் பிறந்த கதாநாயகனின் அம்மா ரோகினிக்கு இரண்டு கணவர்கள். மூத்த கணவர் பிள்ளைக்குக் கிடைக்கும் மரியாதை இரண்டாவது கணவரின் பிள்ளைக்குக் கிடைக்காது. அதை வைத்து அட்டகாசமாகப் படம் பண்ணியிருப்பார். யாருடைய தாலி தனது கழுத்தில் இருக்க வேண்டும் என தன் மகன்கள் அடித்துக்கொள்வதைப் பார்க்க முடியாமல் இறுதியில் தாலியை அடகுக் கடையில் கொண்டு நிரந்தரமாகவைத்து விடுவார் ரோகினி. அந்தப் பணத்தில் இரு கணவருக்கும் இரு மகன்களுக்கும் ஆளுக்கொரு க்வாட்டர் வாங்கித் தந்து அருந்தச் சொல்வார். தமிழ்ச் சமூகத்தை ஒரு கலக்கு கலக்கியது அந்தப் படம். ஒரு மனைவிக்கு இரு கணவர்களா தமிழ்ச் சமூகத்துக்கு இழுக்கு என்று தமிழ்ப் பண்பாட்டாளர்கள் பொங்கி எழுந்தார்கள். அவர்கள் அனைவருமே இரண்டு மனைவிக்காரர்கள் என்று தனிசார் தனது உதவி இயக்குநர்களிடம் கிண்டலாகக் கூறினாராம். அதையும் பத்திரிகையில்தான் படித்தான் வெள்ளை.
இலங்கைப் பிரச்சினையை வைத்து அவர் எடுத்த கடலில் தள்ளிவிட்டால் படம் வெள்ளைக்கு மிகவும் பிடித்த ஒன்று. இலங்கை கொடூரமான நாடு என்று எண்ணி வந்த வெள்ளையின் கண்களைக் கடலில் தள்ளிவிட்டால் படம்தான் திறந்தது. இலங்கை பசுமையான தேசம், சிங்களர்கள் கண்ணியமானவர்கள் என்பன போன்ற தனிதகரத்தின் சித்தரிப்புகள் அவர் எவ்வளவு பெரிய அறிவுஜீவி, ஞானி என்பதைக் காட்டியது. அந்தப் படத்தைப் பார்த்த பின்னர் எந்தக் காரணத்தைக் கொண்டும் யாரையும் தத்து எடுத்துவிடக் கூடாது என்னும் ஞானம் வெள்ளைக்கு ஏற்பட்டுவிட்டது. தத்து எடுப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை அவ்வளவு அழகாக அவர் படமாக்கியிருந்தார்.
குருடர் படத்தில் தமிழ் அரசியல் தலைவர்களின் அந்தரங்கப் பிரச்சினைகளைப் படமாக்கியிருந்தார். கொள்கைரீதியான விமர்சனங்கள் இல்லையே எனக் கேள்வி எழுந்தபோது எனக்கு என்ன வருமோ அதைத் தானே நான் எடுக்க முடியும் எனச் சொல்லி கேள்வி கேட்டவர்களின் வாயை அடைத்தார் தனிசார். துரு வீடுகளில் பழைய இரும்பு சாமான்களைப் பொறுக்கித் திரிந்த இளைஞர் நாட்டின் இரும்பு எஃகு தொழிலின் சக்கரவர்த்தியாக உயர்வதைக் காட்டியிருப்பார். அந்தப் படத்தில் வட இந்திய இளைஞர் நெல்லைத் தமிழ் பேசி வருவதைப் பார்க்கும்போதே மனக் கவலை எல்லாம் மறந்து அழகாகச் சிரிக்கலாம். அப்படி ஒரு கற்பனையை தனிசார் மட்டும்தான் தர முடியும்.
இப்போது அவரது ஆ சாதல் பொன்மொழி படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் வசனகர்த்தா இயக்குநர் தனிதகரத்திடம் அதிக சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் தனிதகரம் அவ்வளவு தர ஒப்புக்கொள்ளவில்லையாம். தனிசார் சொன்ன தொகைக்கு ஒரு பக்கம் வசனம் மட்டுமே எழுத முடியும் என்றார் வசனகர்த்தா. அது போதும் அதிலேயே பாதியைத் தான் பயன்படுத்துவேன் எனத் தடாலடியாகச் சொன்னாராம் தனிசார். ஏற்கனவே இட்லியைத் திருடாதே, கலைசாயுதே போன்ற படங்களில் எல்லாம் காதலைக் கண்ணாபின்னாவென்று காட்டியுள்ளார் என்பதால் இந்தப் படமும் சிறப்பாக இருக்கும் என்று வெள்ளைக்கு நம்பிக்கை இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக