நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களில் தொடரும் திருட்டு, அதைத் தட்டிக்கேட்க ஒரு காவல் நிலையம், அதன் அருகே ஒரு டெல்லி தாபா உணவகம் இந்தப் பின்னணியின் சூழலைக் களமாகக்கொண்டு ஒரு திரைப் பயணத்தைக் கொடுத்திருக்கிறார், இயக்குநர் கிருஷ்ணா.
நண்பர்களுடன் சேர்ந்து திருட்டுத் தொழிலில் ஈடுபட்ட நண்பர்களில் ஒருவனான பெரியவர் சேட்டு (கிஷோர்) லாரியில் அமர்ந்து கதை சொல்ல படம் நகர்கிறது. தாய், தந்தை இறந்துவிடும் ஒரு கார் விபத்தில் பிறக்கிறான், நாயகன் தார்ப்பாய் முருகன் (ஆரி). அந்த வழியே வரும் ஒரு நெடுஞ்சாலை வியாபாரியால் எடுத்து வளர்க்கப்படும் முருகன் ஒரு கட்டத்தில் கூட்டாளிகளுடன் சேர்ந்து அதே நெடுஞ்சாலையில் வாகனங்களில் திருடும் தொழிலில் கைதேர்ந்தவனாக ஆகிறான். திருடும் பொருட்களை அந்தப் பகுதியில் போலீஸாருக்கு மாமுல் கட்டித் தொழில் நடத்தும் நாட்டு சேகரிடம் (சலீம்குமார்) கொடுத்து, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். நாயகி மங்கா (ஷிவாதா) டெல்லி தாபா உணவகம் நடத்துகிறார். ஆரம்பத்தில் இருந்தே முருகனுக்கும் மங்காவிற்கும் இடையே முட்டலும், மோதலுமாகவே இருக்கிறது. இந்தச் சூழலில் அந்த ஊர் காவல்நிலையத்திற்கு மாசானமுத்து (பிரசாந்த் நாராயணன்) இன்ஸ்பெக்டராக வருகிறார். இதற்கு முன் இருந்த இன்ஸ்பெக்டர்களைப் போலவே மாசானமுத்துவையும் நெடுஞ்சாலைத் திருட்டைக் கண்டுகொள்ளாமல் இருக்கச் செய்கிறார்கள், கூட்டுக்களவானிகள்.
டெல்லி தாபா உணவகத்தை நடத்தும் மங்காவின் அழகில் மாசானமுத்து மயங்குகிறார். அவளையே சுற்றி சுற்றி வருகிறான். இன்ஸ்பெக்டர் என்பதால் அவரைப் புறக்கணிக்க முடியாமல் மங்கா ஜாக்கிரதையாக அவருடன் பழகுகிறாள். ஆனால் ஒருநாள் எல்லை மீறி மங்காவிடம் தவறாக நடக்க மாசானமுத்து முயலும்போது அவரை அடித்து அனுப்பிவிடுகிறாள் அவள். அடிபட்ட புலியான மாசானமுத்து மங்காவைப் பழிவாங்கத் துடிக்கிறார். பாலியல் தொழிலில் ஈடுபட்டாள் எனக் குற்றம்சுமத்தி நீதிமன்றத்தில் அவளை நிறுத்துகிறார். பொய்ச்சாட்சியாக முருகனைக் கொண்டுவருகிறான். இன்ஸ்பெக்டரை பழிவாங்க நினைத்த முருகன் நீதிமன்றத்தில் உண்மையைச் சொல்கிறான். மங்காவின் மானம் காப்பாற்றப்படுகிறது. அவள் இதுவரை வெறுத்த முருகன் மீது காதல்வயப்படுகிறாள்.
தொடக்கத்தில் மங்காவைக் காதலிக்கவில்லை முருகன். ஒரு கட்டத்தில் மங்கா தனது மானத்தைவிட்டு முருகனின் உயிரைக் காப்பாற்றுகிறாள். இதன் பின்னர் முருகனுக்கும் மங்கா மீது காதல் வந்துவிடுகிறது. மாசானமுத்து எரிகிறான். மங்கா முருகன் காதல் கைகூடியதா, மாசானமுத்துவின் பழிவாங்கும் முயற்சி வென்றதா என்பதே நெடுஞ்சாலையாக விரிந்துள்ளது.
நாட்டுசேகராக வரும் சலீம்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பிரசாந்த் நாராயணன் நடிப்பும் கம்பீரம். முறுக்கேற்றிய உடம்பு, தாடி என்று திரியும் நாயகன் ஆரியின் கதாபாத்திரம் பருத்திவீரன் கார்த்தியை நினைவுபடுத்துகிறது. அறிமுக நாயகி ஷிவாதா தன்னுடைய பகுதி நடிப்பைச் சிறப்பாகவே வெளிப்படுத்தியுள்ளார்.
நாயகி ஷிவாதா படம் முழுவதும் அந்தக் கவர்ச்சி உடையிலேயே வர வேண்டிய அவசியம் இல்லை. கோர்ட்டில் மாசானமுத்துவை மாட்டிவிட்டு மங்காவை காப்பாற்றும் காட்சி மென்மை. உடனே அந்த இடத்தில் நாயகிக்கு, முருகன் மீது காதல் பூத்து, பின்னணி பாடல் வரைக்கும் கொண்டு போகச்செய்த யோசனை தமிழ் சினிமாவில் பழைய பாணிதான். அளவுக்கு அதிகமான கெட்டவார்த்தைகள் படத்தில் இழையோடுகின்றன.
டெல்லி தபாவில் மாஸ்டராக வரும் தம்பிராமையாவின் நையாண்டி காமெடி ரசிக்க வைக்கிறது. வறட்சியையும், இரவு நேர நெடுஞ்சாலையையும் அழகாக படம்பிடித்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் ராஜவேல். கதையோடு பயணிக்க வைக்கும் அழகான ஒளிப்பதிவு. அதிகாலையின் ரம்மியும் இருளின் மௌனமும் நெடுஞ்சாலையின் பரபரப்பும் எனக் காட்சிகளுக்குத் தேவையான அழகியலை அள்ளித்தருகிறார் ஒளிப்பதிவாளர் ராஜவேல்.
பின்னணி இசை, பாடல்களில் தனிக் கவனம் செலுத்திய சத்யாவையும் பாராட்டலாம். சண்டை காட்சிகளும் அபாராம். முருகனை மரத்தில் கட்டிப்போட்டு அடிக்கும் கிளைமேக்ஸ் காட்சி நெகிழ்ச்சி.
திரைக்கதையில் அழுத்தமான காட்சிகள் இல்லை. முருகன் வெளியே சென்றால் அவன் உயிருக்கு ஆபத்து என்பதால் அவனைத் தடுத்து நிறுத்துவதற்காகப் பொட்டுத் துணியில்லாமல் நிற்கிறாள் மங்கா. தன் மானத்தைக் காப்பாற்றியவன் உயிரைக் காப்பாற்ற மானத்தைப் பற்றிய கவலை அற்று நடந்துகொள்கிறாள் மங்கா. அழுத்தமாக அமைந்திருக்க வேண்டிய காட்சி மேம்போக்காக அமைந்துள்ளது. காதல், சோகம், துரோகம் போன்ற உணர்வுகள் ஆழமாக வேரூன்றாமல் அவசரத்துக்கு நட்டுவைத்த மரம் போல் செயற்கையாக இருக்கின்றன
இடைவேளை வரை ஓரளவு விறுவிறுவென சென்ற திரைக்கதை அதன் பின்னர் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டது போல ஊர்கிறது. கதையை நகர்த்திச் செல்லத் தேவையான சம்பவங்களே இல்லை என்பதால் சோர்வடையவைக்கிறது பின்பாதி. எம்ஜிஆர் மரணம் போன்ற முக்கியச் சம்பவம் வெறுமனே அது 1987 என்பதை உணர்த்த மட்டுமே பயன்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் திருட்டைச் சாதுர்யமாக காட்சிப்படுத்தியதைப் போல காதல், காவல்நிலையச் சூழல், அடிதடி திருப்பங்களிலும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக படம் அமைந்திருக்கும் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் தன் கணவனின் காதலியை சேர்த்து வைக்க நினைக்கும் மனைவியின் அழகான மனநிலையைப் புதுமையாகப் பதிவுசெய்த இயக்குநர், இந்த நெடுஞ்சாலை பயணத்திலும் இன்னும் மெருகூட்டி சொல்ல முயன்றிருக்கலாம்.