இந்த வலைப்பதிவில் தேடு

காமெடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமெடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 14, 2020

பொழுதுபோக்கும் அம்மன்


மக்களின் கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தி ஆன்மிகவாதிகள் என்னும் போர்வையில் மதவாதிகள் எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை நகைச்சுவையாகக் கூறியிருக்கும் படம் மூக்குத்தி அம்மன். அரசியல் காமெடிப் படமாக எல்.கே.ஜி.யைத்தந்த ஆர்ஜே பாலாஜி இப்போது இந்த பக்தி காமெடியை என்ஜே.சரவணனுடன் இணைந்து தந்திருக்கிறார். மூக்குத்தி அம்மனாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அழகழகான சேலைகளில் தரிசனம் தந்து பெண்களைப் பரவசப்படுத்துகிறார். 

நாகர்கோவிலில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஏங்கெல்ஸ் ராமசாமி (ஆர்.ஜே.பாலாஜி). இவருக்கு தெய்வாமிருதம், தேவாமிருதம், வேண்டாமிருதம் என மூன்று தங்கைகள். அப்பா குடும்பத்தைவிட்டு ஓடிச் சென்றுவிட்டார். அம்மா ஊர்வசி. அப்பாவழித் தாத்தா மௌலி. வெள்ளிமலைப் பகுதியில் 11,000 ஏக்கர் நிலத்தை சாமியார் ஒருவர் ஆக்கிரமிக்க முயல்கிறார். இதைச் செய்தியாக்குகிறார் ஏங்கெல்ஸ் ராமசாமி. 

வீட்டுக்கு ஒரு மகாலட்சுமி வந்தபின்னரே வீட்டு மகாலட்சுமிகளை வெளியில் அனுப்ப வேண்டும் என்பதால் முதலில் ஏங்கெல்ஸுக்குத் திருமணத்துக்குப் பெண் பார்க்கிறார் அம்மா. சுசீந்திரம் கோயிலில் சென்று பெண் பார்க்கிறார்கள். அவரும் திருமணத்துக்கு மறுப்பு சொல்கிறார். எதுவுமே சரியாக நடக்காததால் குடும்பத்துடன் ஒருநாள் குலதெய்வம் கோயிலுக்குப் போகும் ஆர்.ஜே.பாலாஜிக்கு குலதெய்வமான மூக்குத்தி அம்மன் காட்சி தருகிறார். முதலில் கடவுள் என்பதை நம்ப மறுக்கிறார் பாலாஜி. பின்னர் அம்மன் நிகழ்த்திய அதிசயத்தை உணர்ந்த பின்னர் நம்புகிறார். 


பக்தர்களே வராமல் பாழடைந்த தன் கோவிலைப் பிரபலமாக்கும் வேலையை அம்மன் பாலாஜியிடம் ஒப்படைக்கிறார். அவரும் அதற்கு முயல்கிறார் ஆனால், பாச்சா பலிக்கவில்லை. அப்போது தான் அம்மன் ஒரு ஐடியா தருகிறார். அம்மன் கோயில் புற்றிலிருந்து பாலை ஊற்றெடுக்கவைக்கிறார் அம்மன். இப்போது புற்றில் பால் பொங்கிவழிவதைப் பார்க்க ஊரார் திரண்டு வருகிறார்கள். மூக்குத்தி அம்மனும் பிரபலமாகிறாள். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பகவதி பாபா என்னும் சாமியார் 11,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்கப் பார்க்கிறார். சாமியார் நிலத்தை ஆக்கிரமித்தாரா, மூக்குத்தி அம்மன் ராமசாமிக்கு ஏன் காட்சி தந்தார் போன்ற கேள்விகளுக்கு விடைதருகிறது மூக்குத்தி அம்மன். 

நாடி ஜோதிடர்கள் முதல் யோகா சாமியார்வரை மக்களை எப்படிப் பணத்துக்காக ஏமாற்றுகிறார்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது மூக்குத்தி அம்மன்.  தமிழில் இப்படிப் பல படங்கள் வந்துள்ளன. வி.கே.ராமசாமி தயாரித்த ருத்ர தாண்டவம் தொடங்கி சிம்பு தேவனின் இயக்கத்தில் வெளிவந்த அறை எண் 305-ல் கடவுள் எனப் பல படங்களைப் பார்த்துள்ளோம். இதுவும் அதே விஷயத்தைத் தான் சொல்கிறது என்பதால் புதிதாக எதுவும் இல்லை. சம கால விஷயங்களைக் குறிப்பிடுவதால் அவற்றுடன் பொருத்திப் பார்த்துச் சிரிக்க முடிகிறது. மற்றபடி இந்த மூக்குத்தி அம்மன் பெரிய விசேஷமானவள் அல்ல. 

படத்தை ஊர்வசி ஓரளவு கலகலப்பாக்குகிறார். என்றாலும் அவரை இப்படியான பல படங்களில் பார்த்துப் பார்த்து சலித்துவிட்டது. மௌலியை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கிறோம் என்பதைத் தவிர பெரிய திருப்தி இல்லை. அடுத்ததாக, படத்தின் பெரிய பலவீனம் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. அவரைப் பார்க்கத்தான் சுத்தமாக முடியவில்லை. அதுவும் அவர் விரைவாக சத்தமாக மளமளவென வசனங்களைப் பேசுவது ஆகியவற்றை ரசிக்க முடியவில்லை. இதுபோதாதென்று ரஜினி படத்தில் ரஜினி ஷாட்டுக்கு ஷாட் வருவது போல் இவரும் படம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறார். 


கதை இலாகா உதவியுடன் கதையை எழுதியுள்ள பாலாஜி, நண்பர்கள் உதவியுடன் திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கிறார். படத்தைப் பார்க்கும்போது, அத்திவரதர், நித்தியானந்தா, ஜக்கிவாசுதேவ் எனப் பலர் நினைவுக்கு வருகிறார்கள்.  எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒரு அம்மன் பாடல் இடம்பெற்றுள்ளது. குறிப்பிடத் தகுந்த படம் இல்லை என்றாலும், சும்மா பொழுதுபோக்க குடும்பத்துடன் பார்க்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜோராக ஜொலிக்கவில்லை என்றாலும் பார்க்கக்கூடியவள் இந்த மூக்குத்தி அம்மன்.

ஞாயிறு, மார்ச் 23, 2014

காமெடியேதான் வேணுமா?

(தி இந்துவில் 2014 மார்ச் 21 அன்று வெளியானது)


தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் வசூலை வாரிக் குவித்த படங்கள் கரகாட்டக்காரனும் சின்ன தம்பியும். இரண்டிலும் இசையும் நகைச்சுவையும் முக்கியப் பங்கு வகித்தன. இரண்டுமே கவுண்டமணி நடித்த படங்கள். 75 வயது நிறையும் கவுண்டமணி 700க்கும் மேற்பட்ட படங்களில் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைத் தன்பால் ஈர்த்தவர். ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக அவ்வளவாக நடிப்பதில்லை என்றாலும் யுடியூபிலும் தொலைக் காட்சி சேனல்களிலும் அதிகம் பார்க்கப்படும் நகைச்சுவைக் காட்சிகளின் நாயகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டைக்கு அருகே உள்ள வல்லக்குண்டாபுரத்தைச் சேர்ந்த கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணி. சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அப்படி நடித்த ஒரு நாடகத்தில் கவுண்டர் என்னும் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இதனால் 16 வயதினிலே படத்தில் இவரை அறிமுகப்படுத்தியபோது இயக்குநர் பாரதிராஜா சுப்பிரமணியைக் கவுண்டமணி ஆக்கிவிட்டார். கதாநாயகர்களுடன் மட்டுமே அடையாளம் காணப்படும் முத்திரை வசனங்களைக் கவுண்டமணி தன் பாணியில் காமெடி ரசத்துடன் பேசித் திரையரங்குகளை அதிரவைத்தார். அறிமுகப் படத்திலேயே ‘பத்த வச்சிட்டயே பரட்ட’ என்னும் பஞ்ச் வசனம் கவுண்டமணியை அடையாளம் காட்டியது. வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் ‘பெட்ரோ மாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’, சூரியன் படத்தின் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ போன்ற வசனங்கள் பல்வேறு தருணங்களில் அன்றாட வாழ்வில் மக்களால் நினைவுகூரப்படுகின்றன.

கவுண்டமணி செந்தில் ஜோடியினர் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். இவர் சத்யராஜுடன் ஜோடி சேர்ந்து நடித்த படங்களும் ரசிகர்களைச் சிரிக்கவைத்தன. நடிகன், பிரம்மா, ரிக்‌ஷா மாமா, தாய்மாமன், மாமன் மகள் போன்ற படங்களின் காமெடி காட்சிகள் எப்போது பார்த்தாலும் பெரும் சிரிப்பை எழுப்ப வல்லவை. ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய படங்களாலான நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள் போன்றவற்றில் கவுண்டமணியின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிகர்களால் விரும்பப்படுகின்றன. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களுடன் நடித்த காட்சிகளிலும் கவுண்டமணி தனக்குரிய ஆளுமையை விட்டுக்கொடுத்ததில்லை. மன்னன், உழைப்பாளி ஆகிய படங்களில் நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தைச் சர்வ சாதாரணமாக முந்திச் செல்வார் கவுண்டமணி. விஜயசாந்தி முன்பு திரையரங்க மேடையில் ரஜினிகாந்த் உடைந்த கண்ணாடியுடன் தோன்றும் காட்சியில் ரஜினியைக் கிண்டல் செய்ய வேறு நகைச்சுவை நடிகர்களால் முடிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே.

இயக்குநர் மணிரத்னத்தின் பகல் நிலவு, இதயக்கோவில் ஆகிய படங்களிலும் ஷங்கரின் ஜெண்டில்மேன் படத்திலும் கவுண்டமணிதான் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார். சக நடிகர்கள் வெளிப்படுத்தும் வசனங்களுக்கு இயல்பான எதிர் வசனங்கள் பேசுவதில் கவுண்டர் மன்னர். சில சமயங்களில் அது மிகவும் சாதாரணமான வசனமாகவும் இருக்கும். ஆனால் சிரிப்புக்கு உத்தரவாதம் இருக்கும். உதயகீதம் படத்தில், செந்தில் “அண்ணே, நீங்க அறிவுக் கொழுந்துண்ணேன்” என்பார். பதிலாக கவுண்டமணி “கிள்ளி வாயில போட்டுக்கோடா” என்பார். இயக்குநர் மணிவண்ணன் நகைச்சுவைப் பாத்திரங்களில் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியதும் கவுண்டமணியின் நகைச்சுவைப் படங்கள் குறையத் தொடங்கியதும் ஒருசேர நடந்தன. கவுண்டமணி சக்கை போடு போட்ட காலத்தில் சக நடிகர்களை அடிப்பதும், உடல் உருவத்தின் அடிப்படையில் நாகரிகமற்றுக் கிண்டல் செய்வதும் காமெடியா என்ற விமர்சனம் எழுந்தது. ஆனாலும் கவுண்டமணியின் ரசிகர்கள் எண்ணிக்கை குறையவில்லை.

நகைச்சுவைப் பாத்திரங்களில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் தனது பங்களிப்பை முழுமையாகச் செலுத்திவருகிறார் கவுண்டமணி. இடையில் சில வருட ஓய்வுக்குப் பின்பு மீண்டும் வாய்மை, 49 ஓ ஆகிய படங்களில் தற்போது நடித்துவருகிறார். இதில் 49 ஓ படத்தின் கதாநாயகனே கவுண்ட மணிதான். ஏற்கனவே பணம் பத்தும் செய்யும், ராஜா எங்க ராஜா, பிறந்தேன் வளர்ந்தேன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் கவுண்ட மணி கதாநாயகனாக நடித்துள்ளார். கவுண்டமணி தான் ஒரு திரைப்பட நடிகர் என்பதில் தெளிவாக இருக்கிறார். தன்னைப் பார்க்க வேண்டுமானால் ரசிகர்கள் திரையரங்கிற்குத்தான் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அநாவசியமாகப் பிற ஊடகங்களில் அவர் தலைகாட்டுவதில்லை. தொலைக்காட்சிகளிலோ கலை நிகழ்ச்சிகளிலோ கவுண்டமணியைப் பார்க்க முடியாது. நகைச்சுவையைப் போலவே இதிலும் அவரது பாணி தனிப் பாணிதான்.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்