இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, டிசம்பர் 07, 2012

அம்மாவின் கைப்பேசி


காக்கைக்குஞ்சு...


அம்மாவின் கைப்பேசி படத்தின் அறிவிப்பு வந்தபோது அதில் தலைப்புக்குக் கீழே சிறிய எழுத்தில் ஆங்கிலத்தில் A Mother’s Hand Phone எனத் துணைத் தலைப்பு ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. படத்தின் மீது ஒரு கவனத்தை உருவாக்கியது அந்த மொழியாக்கம்தான். பொதுவாக, டி.ராஜேந்தர், விஜயகாந்த், பவர் ஸ்டார் போன்றவர்களின் திரைப்படங்கள் எப்போதுமே முழு பொழுதுபோக்குக்கு உத்தரவாதமளிப்பவை. அந்த வகையான படமாக அம்மாவின் கைப்பேசி இருக்க முடியாது என்பதில் முழுமையான நம்பிக்கை இருந்தது. ஏனெனில் சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் போன்ற உலகத் தரமெனத் தான் நம்பிய படங்களைத் தாம் தங்கர் பச்சான் இதுவரை உருவாக்கியுள்ளார். அவரது நோக்கம் நல்ல திரைப்படம் என்பதால் அம்மாவின் கைப்பேசியைப் பார்ப்பதில் ஆர்வம் இருந்தது. இத்திரைப்படம் வெளியாகும் முன்னர் தங்கர் தொலைக் காட்சிகளில் அளித்திந்திருந்த நேர்காணல்கள் அனைத்திலும் கிராமத்துத் தாயையும் நகரத்து மகனையும் ஒரு செல்போன் மட்டுமே இணைக்கும் என்று ஏகத்துக்குத் தெரிவித்திருந்த செண்டிமெண்ட் குறித்த பயம்  எழாமல் இல்லை. அந்த நேர்காணல்களில் அவரிடம் தென்பட்ட பண்பட்ட பாவம் ரசிக்கத்தக்கதாக இருந்தது. இந்தத் திரைப்படத்தை 500 ஆண்டுகளுக்குப் பின்னர்கூட யாராவது ஒருவர் பார்த்து ரசிப்பார் என்று ரசனையோடும் பயபக்தியோடும் கலைச் செருக்கோடும் ஒரு நேர்காணலில் அவர் குறிப்பிட்டார். ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய அவ்வளவு ஞானச் செருக்கும் நம்பிக்கையும் தங்கர் பச்சானிடம் இருந்தது குறித்து ஆச்சரியம் எழுந்தது.

அம்மாவின் கைப்பேசியில் காட்சிகள் ஒவ்வொன்றாய் தோன்றித் தோன்றி மறைந்தன. இந்தத் திரைப்படம் குறித்து மனம் அதுவரை உருவாக்கி வைத்திருந்த பிம்பங்களை முற்றிலும் கலைத்துப்போடச் செய்துவிட்டார் இயக்குநர் தங்கர் பச்சான்.  


கிராமத்துக் குடும்பத்தில் இளைய பிள்ளை அண்ணாமலை. அவனுடைய அம்மா வழக்கமான கிராமத்துத் தாய். ஏழெட்டுப் பிள்ளை பெற்று ஒருவரால்கூட மகிழ்ச்சியை அனுபவித்தறியாதவள். அண்ணாமலை பொறுப்பில்லாமல் சுற்றினாலும் அந்தத் தாய்க்கு மகன் என்றால் உயிர். இடுப்பில் முடிந்துவைத்த பணத்தை அவன் திருடுவதைக் கூட ரசிப்பவள். சின்னச் சின்னத் திருட்டை வீட்டில் தொடர்ந்து மேற்கொள்பவன் அவன். அவன் செய்த ரசனை மிக்க திருட்டு மாமன் மகள் செல்வி. அண்ணாமலையின் சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் ‘இந்தக் காலத்து’ மனிதர்களைப் போல் சூதுவாது கொண்டவர்களாக இருந்தாலும் கதையின் நாயகன் நற்குணசீலனாகவே இருக்கிறான். செல்வி அவனுக்காகவே உருகினாலும் வேலை வெட்டி அற்ற அவனை அவள் வெறுப்பதுபோல் நடிக்கிறாள். செல்வியின் மீது அண்ணாமலை கொண்ட காதல் அவனை மற்றவர் வியக்கும் வண்ணம் உயர்த்துகிறது. 


அம்மாவின் கைப்பேசி எனத் தலைப்பிட்டோம், அதையே முன் நிறுத்தினோம் என்பது குறித்து அலட்டிக்கொள்ளவே இல்லை இயக்குநர். அம்மா மகன் பாசத்தை ஒழுங்காகச் சித்தரிக்க வேண்டுமென்ற பதற்றமின்றி  நிஜமான கலைஞன் போல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதைத் திரையில் ஒளி ஓவியமாகச் செதுக்கியதில் தங்கர் தனித்துத் தெரிகிறார். ஒரு காட்சியில் கூடத் தாய் மகன் பாசம் மனதைத் தொடும்படி அமையாததற்காகத் தங்கர் பச்சான்மீது வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யாதவர் அவர். தனது திரைப்படத்தைக் காணப் போகும் ரசிகன் குறித்த கவனம் அவருக்கு இருக்கவே இல்லை. முழுக்க முழுக்க ஒரு ‘கலைப்படைப்பை’ உருவாக்குவதில் அவர் தன்னை இழந்துவிட்டார். அதனால் தான் படத்தின் கதைக்குத் தொடர்பு இல்லாவிட்டாலும் அங்கங்கே ஆடு, மாடு, கோழி, நாய் என அப்பாவி விலங்குகளை மனிதர்களோடு உலவவிட்டிருக்கிறார். பன்றியைக் கூட விட்டுவைக்கவில்லை. இத்தகைய காட்சிகளைக் காணும்போது தமிழன் வாழ்க்கை முறையைத் திரையில் காட்சியாக மாற்றுவதில் இயக்குநர் தங்கர் பச்சானிடம் தென்படும் அப்பாவித்தனத்தை என்னவென்று சொல்வது? நீளமான ஷாட்களைப் பயன்படுத்திப் பார்த்துள்ளார். மௌனமான ஷாட்களை முயன்றுள்ளார். எவையுமே அவருக்குக் கைகூடாமலே போய்விட்டது. சினிமா என்னும் கலை தங்கர் பச்சானுக்குக் கைகூடிவரவேயில்லை. 

படத்தின் பின்னணி இசையில் காட்சிக்குப் பொருத்தமாக ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளின் ஓசைகளை ஒலிக்கவிட்டிருப்பதில், குறிப்பாக செல்போன் ஒலிக்கும்போது பின்னணியில் பறவைகளின் கேவலை ஒலிக்கச் செய்திருப்பதை ரசித்துதான் உருவாக்கியிருப்பார். ஆனால் அதில் உணர்ச்சியே இல்லையே, என்னசெய்வது? காட்சிகளும் கதாபாத்திரங்களும் உயிர்ப்போடு இருக்க வேண்டியது உணர்வுபூர்வத் திரைப்படத்திற்கு அடிப்படை, அதை எதிர்பார்த்துத் தானே பார்வையாளன் வருவான். கருத்துகளைக் காது வலிக்கும்வரை சொல்வதை அவன் விரும்புவான் என உண்மையிலேயே எதிர்பார்க்கிறாரா தங்கர் பச்சான்?



அண்ணாமலைமீது திருட்டுப் பட்டம் கட்டும் சகோதரர்கள் செயல் கண்டு கோபம் கொண்ட தாய் வேறு வழியின்றிக் கையில் கிடைத்த துடைப்பத்தைக் கொண்டு அடித்து அவனை ஊரைவிட்டு வெளியேற்றுகிறாள். தான் உயிராய் நேசித்த ஊர், அம்மா, செல்வி என அனைத்தையும் விட்டுப் பிரிகிறான். அனைத்தும் பார்த்து பார்த்து அலுத்துப்போன சம்பவங்கள். அண்ணாமலையின் நினைவுவரும்போதெல்லாம் தான் செய்த இந்த அடாத செயலுக்காக வருத்தம் மேலிட அழுதுகொண்டேயிருக்கிறாள் அந்தத் தாய். ஆசை ஆசையாய்க் காதலிக்கு செல்போன் வாங்கித் தரும் காதலனைத் தானே இயக்குநர்கள் இதற்கு முன் திரையில் உலாவவிட்டார்கள். தங்கர் அங்குதான் மாற்றி யோசிக்கிறார்.  அண்ணாமலை  அம்மாவுக்கு வாங்கித் தருகிறான். இதே அண்ணாமலை கிராமத்தில் இருந்தபோது கிடைத்த சிறிய பணத்தைக் கொண்டு செல்விக்குப் பாவாடை தாவணியும் நவீன மார்க்கச்சையும் வாங்கித் தந்தவன்தான். ஏழாண்டுகளாக யாரையும் தொடர்புகொள்ளாமல் வைராக்கியமாக வாழ்ந்துவிடுகிறான் அண்ணாமலை. அதற்கான எந்தப் பின்புலமும் அழுத்தமாகக் கொடுக்கப்படவில்லை. திரைக்கதையில் நிகழும் எல்லா மாற்றங்களுமே திரையரங்கில் சிலைடுகளின் மாற்றம்போல் நிகழ்ந்துவிடுகின்றன. இவை திரைப்படத்தின் மொழி குறித்த அறியாமையை வெளிப்படுத்துகின்றன.

அண்ணாமலை தோல் பதனிடும் ஆலையில் வேலைக்குச் சேர்கிறான். அந்தத் தொழிலாளிகளின் துயரம் அவனது வாந்தியில் தெறிக்கிறது. ஒரேயொரு துண்டுக்காட்சியில் தோல் பதனிடும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் துயரங்களைச் சொல்லாமல் சொல்லும் வித்தையை தங்கர் எங்கே கற்றாரோ? சிறுபான்மைச் சமூகத்தை சேர்ந்த அந்த முதலாளி அவன் மீது பரிவுகொள்கிறார். அவனை கிரானைட் குவாரி நடத்தும் எதார்த்தத்தில் எங்கு தேடியும் காணக் கிடைக்காத, படுசுத்தமான முதலாளியிடம் அறிமுகப்படுத்திவைக்கிறார். அண்ணாமலையை அதிர்ஷ்ட தேவதை தன் சொந்தக் குழந்தையைப் போல் பாவிக்கிறாள். குவாரியில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அநீதி கண்டு பொங்குகிறான் அண்ணாமலை. விளைவு அண்ணாமலையை விபரீதத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. 



படத்தில் கோலோச்சுவது அந்த ப்ரசாத் கதாபாத்திரமே. அதில் தான் இயக்குநர் தனக்கான அதிகபட்ச மதிப் பெண்களை குவித்திருக்க வேண்டும். நயவஞ்சகம், வெகுளித்தனம், குற்ற உணர்ச்சி போன்ற மனித உணர்வுகள் மாறி மாறி எழும் கதாபாத்திரம் அது. ஓர் ஆக்டோபஸ் போல் அந்தக் கதாபாத்திரம் மற்ற அனைத்து விஷயங்களையும் வாரிச் சுருட்டி கக்கத்தில் திணித்துக்கொண்டு சென்றுவிடும் என்ற நம்பிக்கையில் தான் அது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திரைமொழி வசப்படாத காரணத்தால் அந்த எண்ணம் ஈடேறவில்லை என்பதுதான் குரூர எதார்த்தம், தங்கர் பச்சான் திரையில் காட்டும் சினிமா எதார்த்தமல்ல. 

உச்சக் காட்சியில் தன்னைக் கொல்ல வரும் வஞ்சகர்களை எதிர்த்து ஒரு வார்த்தை பேச வேண்டுமே அண்ணாமலை. பேசவே இல்லை. ஓடி ஒளிகிறான். அவன் பலரைப் பந்தாடும் நாயகத்தன்மை மிக்கவன் அல்லவே, ரத்தமும் சதையுமான  சாதாரணமான மனிதன். குவாரியில் முதல் நாளில் பொங்கியெழுந்த அதே அண்ணாமலை உயிர் பிச்சை கேட்டு மன்றாடுகிறான். ஆனால் எதுவும் நடக்கவில்லை. துரோகம் அவனை அழிக்கிறது. வீட்டை இடிக்கும் சூழலிலும் தன் இளைய மகன் வந்துவிடுவான் என நம்பியே இருந்த தாயின் நம்பிக்கை கைகூடவே இல்லை. இதுதான் கலைப்படத்தின் கூறு என்பது இயக்குரின் எண்ணம்போல. 

ஏழாண்டுகளாக வராத காதலன் இனிமேலா வந்துவிடுவான். காத்திருந்து காத்திருந்து நம்பிக்கை இழந்த காதலி காதலன் இறந்துவிட்டான் என நம்பிவிடுகிறாள். காதலன் இறந்த பின்னர் ஒரு தமிழ்ப் பெண் என்னசெய்வாளோ அதையே அச்சுப் பிசகாமல் செய்கிறாள். கண்ணுக்கு லட்சணமான பையன் கிடைத்தவுடன் மண முடித்துக்கொள்கிறாள். காதலன் உயிருடன் இருப்பது அறிந்து அவனது கடிதத்தை வைத்துக்கொண்டு கணவன் உறங்கிய பின்னர் குளியலறைக்குச் சென்று அழுகிறாள். அவள் அழுதுவிட்டுக் கட்டிலில் படுக்கும்போது ஆணாதிக்க கரம் ஒன்று அவள் மீது விழுகிறது.  


அழிந்துவரும் கலையான தெருக்கூத்து இந்தப் படத்தில் தங்கரின் கையில் அகப்பட்டுக்கொண்டது. சந்நதம் கொண்ட சாமியாடிபோல் மனிதர் பிய்த்து உதறுகிறார். அவர் ஆடும் உற்சாக நடனம் தங்கரின் நடிப்பு வெறியை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. தெருக்கூத்துக் கலை மீது இயக்குநர் தங்கர் பச்சானுக்கு தீராத காதல் இருந்திருக்கிறது. அதை மறுக்க முடியாது. ஆனால் நமக்குப் பிரியமான ஒன்றை இப்படியா வதைப்பது? துணிச்சலுடன் தெருக்கூத்து உடையில் ஒரு பாடல் காட்சியை ரசிகர்களுக்குப் படைக்க முன்வந்ததற்கு காரணம் என்னவோ? தமிழ் பார்வையாளனின் ரசனை மட்டம் அதிக உயரத்தில்தான் உள்ளது. அவன் தனது கைக்கெட்டும் இடத்தில் இருக்கிறான் என நினைத்து ஏமாந்துவிட்டார் தங்கர் பச்சான்.  

திரைக்கதை எதையாவது மையப்படுத்துவது அவசியம். ஆனால் இப்படத்தில் இயக்குநர் கையாண்ட திரைக் கதையில் கருத்து என்பது மையமாகிப்போனது ஒரு மோசமான விபத்து. தமிழ்த் திரையுலகில் கருத்து சொல்லவும் தமிழனை சினிமா வழி நல்வழிப்படுத்தவும் ஆளே இல்லை என்று யாரோ தங்கரிடம் ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில் சொல்லியிருக்கக் கூடும். அதை அவர் நம்பியிருக்கலாம். 

அழகி, தங்கர் பச்சான் இயக்கிய முதல் திரைப்படம். அது தமிழின் உன்னதத் திரைப்படம் என்று சிலாகிக்கப்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது. தமிழ்த் திரைப்பட ரசனையில் வறட்சி ஏற்பட்டுவிட்டதோ எனத் தோன்றியது. இதுவரை தமிழில் எதார்த்தப் படங்களே வந்ததில்லை என்பது போன்று வாராது வந்த மாமணி போன்று அந்தத் திரைப்படத்தை ஒருசிலர் கொண்டாடித் தீர்த்தனர். தகுதிக்கு மீறித் தங்கரைப் பாராட்டி அவரது சினிமா படைப்பூக்கத்தைக் கிட்டத்தட்ட சிதைத்துவிட்டார்கள். கிடைத்த பாராட்டை உண்மையானது என்றே நம்பியிருக்கலாம் கிராமத்து மனிதரான தங்கர். அதனால்தான் எதார்த்தப் படம் என்னும் பெயரில் கற்பனையூரையும் அதன் மனிதர்களையும் சித்தரித்தே திரைப்படங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் அவர். அவர் சித்தரிப்பில் எள்ளளவும் எதார்த்தம் இல்லை என்னும் உண்மையை அவர் உணரவே இல்லை என்பதைத் தான் தொடர்ந்து வெளிவரும் அவரது திரைப்படங்கள் அனைத்தும் நிரூபிக்கின்றன. தான் படமாக்க நினைத்த திரைப்படத்தை இன்னும் தங்கர் பச்சான் உருவாக்கவில்லை என்றே எண்ண முடிகிறது. அதை அவர் உருவாக்க விரும்பினால் விருப்பு வெறுப்பற்று அவர் தனது திரைப்படங்களை மறுஆய்வு செய்து பார்க்க வேண்டும்.  அடுத்த முறையாவது ஓரளவு தரமான திரைப்படத்தைத் தர அவர் முயல்வது அவசியம். அழகி மிகச் சிறந்த திரைப்படமல்ல அது ஒரு சாதாரணத் திரைப்படம் என்னும் எளிய உண்மையை மனப்பூர்வமாக உணர்ந்துகொண்டால் தான் தங்கரால் அம்மாவின் கைப்பேசி போன்ற அபத்த சினிமாக்களைத் தவிர்க்க முடியும்.   

காலச்சுவடு டிசம்பர் இதழில் வெளிவந்த திரைப்பட விமர்சனம் இது.     

செவ்வாய், நவம்பர் 06, 2012

35க்கும் 100க்குமிடையே



... அவர் என் நண்பர்
அவர் மீது எனக்கு 
பகையுணர்ச்சி அதிகம்
நட்புணர்ச்சி குறைவு
பிறகெப்படி
அப்படித்தான்
அவரை 
விரும்ப விரும்பவில்லை
வெறுக்க வெறுக்கவில்லை
இன்னுமா
இனியும்
அவர் என் நண்பர்...


திங்கள், அக்டோபர் 01, 2012

சின்ன விஷயங்களின் கடவுள்: காமத்திப்பூவும் கடவுளும்

தமிழ்மொழி மூலமாக உலக இலக்கியப் பரிச்சயம்கொண்ட வாசகனின் நீண்ட கால எதிர்பார்ப்பு அன்று பூர்த்தியடைந்தது. அருந்ததி ராய் எழுதிய தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் புக்கர் பரிசுபெற்றதிலிருந்தே அந்நாவல் குறித்த பாராட்டு மொழிகளும் அதன்மீது தூற்றப்படும் அவதூறுகளும் எண்ணிக்கையில் அடங்காதவை. 28 ஜூலை 2012 வரை 38 மொழிகளில் பெரும் வாசகப் பரப்பை அடைந்திருந்த நாவல் அன்று தமிழிலும் வெளியாகி வாசகர்களின் எண்ணிக்கையை மேலும் சில அல்லது பல ஆயிரங்கள் அதிகரித்துக்கொண்டது- வெளியான அன்றே விற்றுத்தீர்ந்த பிரதிகள் அதற்குச் சான்று. இப்போது 39 மொழிகளில் வெளியான நாவல் என்னும் பெருமையையும் அது பெற்றுள்ளது. அருந்ததி ராயின் சின்ன விஷயங்களின் கடவுள் தன்னுடன் மேலும் 3 நூல்களை இணைத்துக்கொண்டு அரங்கேறியது. கிறிஸ்தவர்களின் மற்றொரு பக்கத்தைத் தோலுரித்த கடவுள் வெளியாக மேடை அமைத்துத் தந்தவர்கள் கிறிஸ்தவ அமைப்பினர் என்பது பகைவனையும் நேசிக்கக் கற்றுக்கொடுத்த கிறிஸ்துவின் வார்த்தைகள் வெறும் போதனைகளாகச் சுருங்கிவிடவில்லை என்பதை உணர்த்தியது. அதை உறுதிசெய்வது போல் அருந்ததி ராயைச் சமூக நீதிக்கான குரலை வலுவாக வெளிப்படுத்துபவர் என ஜான் அலெக்ஸாண்டர் புகழ்ந்துரைத்து வரவேற்புரை நிகழ்த்தினார். 

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள டான் போஸ்கோ பள்ளியின் ஒலிக்காட்சி அரங்கில் அந்தச் சனிக்கிழமை மாலையில் முதலில் மலர்ந்தது காமத்திப்பூ. இதிலிருந்து சில கவிதைகளை ஏற்ற இறக்கங்களோடு ரசித்துதான் வாசித்தார் சுகிர்தராணி. அந்த அரங்கில் காமம் குறித்த தன் அவதானிப்பை, காதலுக்கும் காமத்திற்குமான விலக்க முடியாத நெருக்கத்தை, மனம் சார்ந்த புனிதமும் உடம்பு சார்ந்த இழிவும் கட்டமைக்கப்பட்ட வரலாற்றைச் சொற்களால் அடுக்கிக்கொண்டே போனார் அருந்ததி ராய் வெளியிட்ட காமத்திப்பூவைப் பெற்றுக் கொண்ட பிரபஞ்சன். ஆண்குறியினரின் அபத்தங்களையும் யோனி கொண்டோரின் சிறப்புகளையும் அரங்கைச் சற்றே சலன மடையச் செய்யும் விதத்தில் அவர் வெளிப்படுத்தினார். இறுதியாக யோனியை ஆயுதமாகக் கொண்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பை எழுதியதன் மூலம் ஔவையார், ஆண்டாள் வரிசையில் அடுத்த கவிஞர் சுகிர்தராணிதான் என மொழிந்து தன் உரையைப் பிரபஞ்சன் நிறைவுசெய்தார். யோனியை ஆயுதமாக்கிய கவிஞர் எனப் பிரபஞ்சனால் புகழப்பட்ட சுகிர்தராணி பிரியம் வழிந்த அணைப்பை அவருக்குக் காணிக்கையாக்கினார். அரங்கில் நெகிழ்ச்சி அடங்கச் சில நிமிடங்கள் பிடித்தன.

அடுத்ததாகக் காலச்சுவடு நவயானா இணைந்து வெளியிட்டிருக்கும் பீமாயணம் என்னும் மொழிபெயர்ப்பு நூல் அரங்கின் மேடைக்கு வந்தது. சமூக விடுதலைக்கும் தீண்டாமைக்கும் குரல் கொடுத்த அம்பேத்கரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரங்கள் மூலமாக உணர்த்தும் புத்தகம் அது. வண்ணச் சித்திரங்களுக்கும் குழந்தைகளுக்குமான தீராப் பிணைப்பை உணர்த்தும் விதத்தில் அதைப் பெற்றுக்கொண்டவர்கள் சோனியா, திருமூர்த்தி என்னும் குழந்தைகள். நூலை அருந்ததி ராய் வெளியிட்டார். நவயானா ஆனந்த் இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் சித்திரங்கள் குறித்த விளக்கங்களை அளித்தார். அடுத்ததாக வெளியான ராஜா சாண்டோ ஒரு பதிப்பு நூல். பேசும் படம் என்னும் இதழை நடத்திய டிவி ராமநாத் எழுதிய இந்த நூலை டிராட்ஸ்கி மருது வெளியிட்டார். இந்தியா முழுவதும் சுற்றித்திரிந்து கலை வளர்த்த ராஜா சாண்டோவின் நூலைச் சென்னை முழுவதும் மிதிவண்டியில் - மிகச் சமீபத்திலிருந்து மோட்டார் வாகனத்தில் - சுற்றித் திரிந்து புத்தகங்களை வாசகர்களிடம் சேர்ப்பிக்கும் நண்பர் பரிசல் செந்தில்நாதன் பெற்றுக்கொண்டதும் பொருத்தமானதே. இந்நூல் குறித்து உரையாற்றிய தியடோர் பாஸ்கரன் மௌனப்படக் காலத்தின் சிறப்பைப் பற்றிச் சில வார்த்தைகள் மொழிந்தார். டிராட்ஸ்கி மருது உரை நிகழ்த்தியபோது, ஆளுமைகளின் பதிவு குறித்த அவசியத்தைச் சுட்டினார். பதின் பருவத்தில்தான் பார்த்து ரசித்த ஒளிப்பதிவாளர் சுப்பாராவ் போன்ற ஆளுமைகள் குறித்தும் ஓரிரு சம்பவங்கள் குறித்துமான சில ஞாபக துணுக்குகளைப் பகிர்ந்துகொண்டார். 

இறுதியாக வெளியிடப்பட்டது சின்ன விஷயங்களின் கடவுள். வெளியிட்டவர் சுகுமாரன், பெற்றுக்கொண்டவர் கலீஸியன் எழுத்தாளர் மரியா ரெமோண்ட். தமிழறியாத இவர் வாசித்த கொஞ்சு தமிழ் உரையை அரங்கினர் ரசித்தனர் என்பதன் வெளிப்பாடுதான் சுகுமாரன் அவருக்குத் தெரிவித்த கைகுலுக்கலுடன் கூடிய பாராட்டு. இந்நூல் வெளியீடு குறித்த பல விவரங்கள் விரிவாக இதே இதழில் தொடர்ந்த பக்கங்களில் வெளியாகியுள்ளன. இறுதியாக மைக்கேல் அமலதாஸ் நன்றியுரை நிகழ்த்தினார். அரங்கை வடிவமைத்திருந்த ரோஹிணி மணி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நிகழ்வில் இடம்பெற்ற ஒளிப்படக் காட்சிக்குப் பின்னணிக் குரல் கொடுத்த சிந்து, விட்டு விடுதலையாகி என்னும் பாரதியின் பாடலைப் பாடிய ரவி சுப்பிரமணியன் போன்ற பலரது துணையுடனும் பார்வையாளர்களின் ஒத்துழைப்புடனும் எளிமையாகவும் சிறப்பாகவும் நிறைவேறியது காலச்சுவடு பதிப்பகத்தின் இவ்வெளியீட்டு நிகழ்வு. இந்த மாலையின் நினைவைப்போல், பள்ளிக் குழந்தைகள் உருவாக்கிய, ஆசிரியர் எஸ். டி. ராஜ் அணிவித்த ஏலக்காய் மாலையின் மணமும் சில நாட்களுக்கு அருந்ததிக்குள் கமழ்ந்துகொண்டிருக்கக் கூடும்.

வியாழன், ஆகஸ்ட் 30, 2012

என்னைப் போல் ஒருவன்

அவனை நான் தினந்தோறும் பார்த்துவிடுகிறேன். அவனைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்ப்பட்டுவிடுகிறான். சில சமயங்களில் அவன் முகத்தில் எல்லாவற்றையும் அடைந்துவிட்ட ஒரு திருப்தி தென்படும். பல சமயங்களில் எதையோ எதிர்பார்த்து அது இன்னும் நிறைவேறாத காரணத்தால் மட்டுமே உயிர் வாழ்கிறேன் எந்தக் கணத்தில் எனது எண்ணம் ஈடேறுகிறதோ அந்தக் கணத்தில் உயிரை விட்டுவிடத் தயாராக இருக்கிறேன் என்று சொல்பவன் போல் தோற்றம் கொண்டிருப்பான். அந்த சமயங்களில் காரண காரியம் தெரியாமல், உள்ளே சுக்கு நூறாக நொறுங்கிப்போயிருக்கும் ஆனால் வலுவாக மூடப்பட்டிருக்கும் ஒரு தெர்மாஸ் குடுவை எனது நினைவுகளில் வந்துபோகும்.
  

வாழ்க்கை என்னும் நதி சுழித்து நுரைத்து செல்வதை வேடிக்கை பார்ப்பதாக நினைத்துகொண்டே இருப்பவன் போன்ற அவனிடம் சொல்ல இயலாத சோகம் உறைந்துகாணப்படுவதாய் எனக்கு ஒரு நினைவு எழும். ஆனால் ஒரு நாளும் அவனிடம் பேசியதில்லை. எனக்கு ஏனோ அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றியதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அவனிடம் எனக்குப் பயம். அவனிடம் பேசும்போது அவன் நிச்சயம் உண்மையைத் தான் பேசுவான் என எனது உள்ளுணர்வு எச்சரித்துக்கொண்டே இருக்கும். அவன் சொல்லும் உண்மைகளை தாங்கிக்கொள்ள முடியாது என்ற பயத்திலேயே அவனுடனான உரையாடலைத் தவிர்த்து விடுகிறேன். 

புறவயமான உரையாடல் தடைபட்டதாலோ என்னவோ தெரியவில்லை. அகவயமான ஒரு உரையாடல் எனக்கும் அவனுக்கும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த அகவயமான் உரையாடலின் காரணமாக அவனது பிம்பம் எனது மனத்தில் நிலையாய் தங்கிவிட்டது. அதற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் அது அவன் தான். நாளாவட்டத்தில் அந்தப் பிம்பத்துக்கும் எனக்கும் பிரிக்க முடியாத ஒரு உறவு ஏற்பட்டுவிட்டது. எனது தனிமையை செங்கல் செங்கல்லாக பிரித்து எடுத்துவிட்டு அவன் வேடிக்கை பார்க்கிறான். யாருமே அற்ற எனது இல்லத்தில் அவனுக்கான இடத்தை அவன் உரிமையோடு எடுத்துக்கொண்டுவிட்டான். அவனைத் துரத்திவிட எண்ணும்போதெல்லாம் அவனது அப்பாவித்தனமான முகம் வந்து என்னைத் தடுத்துவிடும். என்னை எப்போதும் வேவு பார்த்துக்கொண்டிருக்கிறான் அவன் என்பதை நினைக்கும்போதெல்லாம் அவன் மீது வெறுப்பு கவியும். அவனை நானாக உள்ளே கொண்டுவந்து விட்டேன். இப்போது அவனை நானாக வெறுக்கிறேன். இது எதையும் அவன் அறிந்தவனில்ல. ஏன் ஒரு விருப்பு? பின்னர் ஏன் இந்த வெறுப்பு... எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இப்போது அவனை துரத்தி அடிப்பது மட்டுமே என் தலையாய செயலாக உள்ளது. உங்களால் முடிந்தால் எனக்கு உதவுங்கள். என்னாலேயே முடியவில்லை, வழிப்போக்கர்கள் நீங்கள் என்ன செய்துவிட முடியும்? நானும் ஒரு வழிப்போக்கன் தானே அதை எப்படி மறந்தேன்?  

திங்கள், ஜூலை 30, 2012

கிருஷ்ணவேணி பஞ்சாலை


வெவ்வேறு வர்ணங்கள் கொண்ட நூல்கள்


எண்பதுகளில் தொடர்ந்து வெற்றிப்படங்கள் வழங்கிய கதாநாயகன் ஒருவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அவர் நடிப்பில் 19 திரைப்படங்கள் வெளியானதாகக் கூறினார். ஆச்சரியமாக இருந்தது. செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளின் வரவால் தமிழ் திரைப்படங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மனம் உணர்ந்து லேசாக அதிர்ந்தது. பெரும்பாலான தொலைக்காட்சிகள் சினிமாவை மையங்கொண்டுதான் இயங்குகின்றன என்றபோதும் திரைப்படங்களின் பொற்காலத்தை மங்கச்செய்துவிட்டன இந்த தொலைக்காட்சிகள். இப்போது ஒரு படம் பத்து நாள்கள் ஓடினாலே இமாலய வெற்றி எனப் பறைசாற்றப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப சாத்தியத்தின் எல்லை விரிந்துகொண்டே செல்கிறது. எண்பதுகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பவர்கள் தாய்க்குலங்களாக இருந்தனர். இப்போது வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பவர்கள் இளம்வயதினர் என்னும் நம்பிக்கை ஆழமாக வேரூன்றியுள்ளது. இளம் வயதினரைக் குறிவைத்தே பெரும்பாலான படங்களின் கதைகள் அமைகின்றன. கடந்த பத்தாண்டுகளாக ஐம்பதுகளை கடந்த இயக்குநர்கள்கூட யூத் சப்ஜெக்ட் தேடி உதவி இயக்குநர்களை விரட்டிவருவது நடைமுறை எதார்த்தம். 

ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெளியான, முற்போக்கு முகாம்களில் பெரிதும் சிலாகிக்கப்பட்ட திரைப்படம் ஒன்று ஏழு நாட்களுக்குப் பின்னே என்ன ஆனது என்பதே தெரியாமல் போனது. இந்தப் படம் பிரமாண்ட வெற்றி பெற்றது என்னும் பிம்பத்தை உருவாக்கியதில் சின்னத்திரைக்கு முக்கியமான இடமுண்டு. உண்மை இதற்கு நேரெதிராக இருந்திருக்கலாம் எனினும் சுற்றுக்குவிடப்பட்ட இந்த பிம்பம் அழிவற்றதாக வரலாற்றின் பக்கங்களில் நிலைத்திருக்கக்கூடும். கம்யூனிச சித்தாந்ததையும் சம கால பிரச்சினையையும் எதார்த்தமாக எடுத்துக்காட்டியது போன்ற பாவனையில் ரசிகர்களை லாவகமாகவும் சுலபமாகவும் சுரண்டியது அந்தப் படம். அதற்கு நேர்மாறாகப் படமாக்கப்பட்டிருந்தது ஜூனில் வெளியான கிருஷ்ணவேணி பஞ்சாலை. பஞ்சாலை குறித்த படம் எனக் கேள்விப்படும்போது எவையெல்லாம் நம் மனத்தில் தோன்றுமோ அவை எல்லாம் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன. விமர்சனத்துடன் கூடிய கம்யூனிச சித்தாந்தம், பஞ்சாலை அதன் மனிதர்கள் அவர்களுக்கிடையே எழுந்த உணர்வு, உறவுச் சிக்கல் போன்றவற்றை உள்ளடக்கி இருந்தது இதன் கதை. சிலாகிக்கப்பட்ட படம் சினிமாத்தனமான திரைக்கதையின் பலத்தில் எதார்த்தமான படமாகத் தோற்றம்கொண்டது; எதார்த்தமான படமோ சினிமாத்தனமற்ற திரைக்கதையால் உரிய அடையாளத்தைக்கூடப் பெறவில்லையோ எனத் தோன்றியது. யோசித்தால் திரைக்கதை என்பது ஒரு ஏமாற்றுவேலை; நுட்பமாக ஏமாற்றுவதுதான் திரைக்கதையின் தாரக மந்திரம. இங்கு வெற்றிபெறுவது அறிவுஜீவித்தனம் அல்ல புத்திசாலித் தனம்.


ஆங்கிலேயே ஆட்சியை அகற்றி அந்த இடத்தில் அமர்ந்து நம்மவர்கள் சவாரியைத் தொடங்கிய சில வருடங்களுக்குப் பிறகு  -அதாவது ஐம்பதுகளில் - தமிழகத்தின் கொங்குப் பகுதியில் உடுமலைப்பேட்டை என்னும் ஊரில் ஊர்மக்களை ஒரு கூரையின் கீழ் இணைக்கும் வேலையை தொடங்கியது பஞ்சாலை ஒன்று. சாதி வேறுபாடுகள் கொண்ட சமூகத்தில் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட ஆலையில் எல்லாச் சமூகத்தினரும் ஒரே இடத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பு சமூகத்தில் நிலவிவந்த சாதி வேற்றுமையைத் தடயமற துடைத்திருக்கலாம்தான். ஆனால் தனி மனித வீராப்பு சகலத்தையும் அழித்துவிடும் அளவுக்கு வீரியம் கொண்டதாக இருக்கும்போது சமூகப் புரட்சியின் முனை மழுங்கிப் போவது குரூரமான எதார்த்தம். 

இந்தப் படத்தில் ஒரு பஞ்சாலையும் ஒரு சமூகச் சூழலும் இணைகோட்டில் பயணிக்கிறது. இறுதியில் இரண்டுமே தடம்புரண்டு தடுமாறுகின்றன. தன்னிடம் இருக்கும் பணம் தனது மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பணக்காரர் ஒருவர் பஞ்சாலையைத் தொடங்குகிறார். அறிவு உள்ள இடத்தில் நயவஞ்சகமும் எளிதாக குடியேறிவிடும் என்பதற்கிணங்க அந்த ஆலையை நடத்தும் மேலாளர் செயல்படும்போது உரிமையாளர் கோபம் கொள்கிறார். பாமரனின் கோபம் எப்போதும் பதவிசாக வெளிப்படுவதில்லையே. மேலாளரையும் கொன்று தன்னையும் மாய்த்துக்கொள்கிறார் பெரியவர். அவரின் உயில் பிரகாரம் அவருடைய மகன் பஞ்சாலைக்குப் பொறுப்பேற்க நேர்கிறது. வெளிநாட்டில் வசித்துவந்த மகன் சொந்த ஊருக்குத் திரும்புகிறான். காதல் மனைவியை பிரிந்த பிறகு அவனுக்கு எல்லாமே அவனது ஆலை என்றாகிவிடுகிறது. இந்த ஆலை அதைச் சார்ந்த மனிதர்கள் அவர்களைச் சுற்றி பின்னப்பட்ட சம்பவங்கள் மூலம் இயக்குநர் தான் அறிந்த ஒரு வாழ்க்கையை அதை அறியாத பார்வையாளர்களுக்குத் திரைமொழியில் வெளிப்படுத்துகிறார்.  


இப்படத்தின் கதையில் நாம் இறங்கிச் செல்ல படிகள் பல  காணக்கிடைக்கின்றன. வெற்று செண்டிமெண்ட் அற்ற புரிதலோடு சித்தரிக்கப்பட்டுள்ளன பல கதாபாத்திரங்கள். பொதுவாக தமிழ் சினிமாவில் அம்மா என்றால் அவள் மிகப் புனிதமானவளாக எல்லா அறங்களையும் பழுதின்றிப் பின்பற்றுபவளாகவே சித்தரிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் அம்மா அப்படியானவள் அல்ல. அவளுக்குத் தன் குழந்தைகளைவிடச் சாதி முக்கியமானதாகப் படுகிறது. அவளது சாதி அபிமானத்தால் குரூரமான முடிவுகளை எடுக்கிறாள். அவளது வீராப்பு அவளது கடைசிச் சொட்டுக் குருதியையும் குடித்துவிட்டுத்தான் சாந்தமடைகிறது. பஞ்சாலை தொடங்கிய பெரியவரின் வீராப்பு அவரது மூச்சுக்காற்றை எரித்துவிட்டுத்தான் அடங்குகிறது. ஆலையை நடத்தும் மகனின் வீராப்பு பஞ்சாலையை காற்றில் பறக்கவிட்டுவிடுகிறது. தொழிலாளர்களின் வீராப்பு அவர்களது வேலையை பதம் பார்த்தபின்னர் ஓய்கிறது. 

இந்த அழிவுகள்,  தோல்விகள் அனைத்துமே மிக எளிதாக தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஏன் அப்படி அமையவில்லை? மனிதர்கள் எங்கே சறுக்குகிறார்கள் எனச் சிந்திக்கவைக்க விரும்பியுள்ளார் இயக்குநர். சிந்தனையைத் தூண்ட விரும்புபவர்கள் அனைவருமே மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் நாமறிந்த வரலாறு. கம்யூனிஸ சித்தாந்தம் என்னவென்று அறியாத அரைகுறை, மூலதனத்தைப் படித்தால் எல்லா நோய்களும் நீங்கிவிடும் என்று நம்பும் மூடன்தான் கிட்டு. இவனைப் போன்றவர்கள் தொழிற்சங்கத் தலைவர்களானால் எப்படி ஒரு தொழிற்சாலை உருப்படும்? தொழிற்சாலையில் அதிகப்படியான லாபம் வந்தபோது வாரிக்கொடுத்தவர் எதிர்பார்த்த லாபம் கிடைக்காத பொழுதில் போனஸைக் குறைக்கும்போது தொழிலாளி வெகுண்டெழுகிறான். தான் சுரண்டப்படுவதாய்ப் போதிக்கப்படுகிறான். புரட்சிக்குக் குரல் கொடுக்கிறான். தான் படித்த வசனங்களை முழங்குவதற்கு வாய்ப்பு கிடைத்ததெனப் பொழிந்துதள்ளுகிறான். நீடித்த புரட்சியால் வீட்டின் அடுப்பில் பூனை குடியேறிவிடுகிறது. வயிறு காயும்போது உண்மை எனும் சித்தாந்தம் விளங்கத் தொடங்குகிறது. மெல்லப் படி இறங்குகிறான். நிலைமை இப்போது கைமீறிப் போய்விட்டது. இரக்கம் காண்பித்த ஆலை உரிமையாளர் கூட எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நாசியை மூழ்கடித்து நிற்கிறது வெள்ளம்.

சித்தாந்தங்களைத் தங்களுக்கு வாகாகப் பயன்படுத்திக்கொள்ளும் மனிதர்களை, அவர்களது அறியாமைகளைத் துணிச்சலோடு அடையாளங்காட்ட முயன்றுள்ளார் தனபால். முற்போக்கு முகமூடிகளை சுலமாகக் கழற்றிவிட முடியுமா என்ன? பணக்காரர்கள் எல்லோரும் பூர்ஷ்வாக்கள் ஏழைகள் அனைவரும் இறைவனின் குழந்தைகள்; நேர்மையாளர்கள் அவர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வருகிறார்கள் என்ற பலமான நம்பிக்கையின் வேரை அசைப்பது அவ்வளவு எளிதல்ல. அத்தகைய முயற்சியை மேற்கொண்டதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். புரட்சிப் போராட்டம் வென்று இறுதிக் காட்சியில் பஞ்சாலையிலேயே அதன் உரிமையாளரைத் தொழிலாளிகள் ஒன்றுதிரண்டு கூறுபோட்டிருக்கலாம் அந்தக் காட்சியின் முடிவில் கார்ல் மார்க்ஸின் புகைப்படத்தை மெதுவாக ஜூம் இன் செய்திருக்கலாம். தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக என முழங்கியிருக்கலாம்தான். ஆனால் எதார்த்தமாக என்ன நடக்குமோ அதைக்காட்டும்போது அதை எப்படி எதிர்கொள்ள முடியும்? புரட்சி என்ற ஒன்று தோல்வியில் முடிவதை என்னருமைத் தோழர்களே எப்படித் தாங்கிக்கொள்ள இயலும்? தனிமனிதர்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் அவர்களையே பலிகொள்ளும் அபத்தத்தை விளங்கவைப்பது தேவையில்லாத வேலைதானே? அதைத் தான் செய்துள்ளார் தனபால் இந்தப் படத்தில். 


ஒரு குடும்பத்துக்குள்ளேயே சுற்றிசுற்றி வந்து தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும் அம்மாக்களில் ஒருத்தி ரேணுகா. சமையல் செய்வது, ஒயர் கூடை பின்னுவது என்று வாழும் அவளுக்குள் இருக்கும் சாதிப் பிடிமானம் சார்ந்த வைராக்கியம் ஏற்படுத்தும் விபரீதங்கள் சமூகத்தின் நிலவும் சாதிக்கொடுமையைச் செயல்களால் விவரிக்கின்றன. மனிதர்களின் ஆழ்மனத்தில் புதைந்துள்ள சாதி வேர்களைச் சுத்தமாக அறுப்பது என்பது சாத்தியமே அல்ல என்னும் உண்மை செரிக்க இயலாததாக நெஞ்சுக்கு மேலே எழுப்பிக்கொண்டே இருக்கிறது. வறட்டு கௌரவத்தால் நாம் பல விஷயங்களை இழந்துவருவதை ரேணுகா பாத்திரம் மூலம் விளக்குகிறார் இயக்குநர். தன் கணவனுடன் தான் வாழ்ந்த வீட்டை விட்டு அவள் வெளியேற வேண்டிய அவசியத்தை உருவாக்கியது வெறும் வறட்டு கௌரவம் அன்றி வேறென்ன? சாதிசார்ந்த சகிப்பின்மையைக் கைக்கொள்வதைவிடப் பாடையை ஏற்றுக்கொள்வது மேல் என சராசரியான ஒரு குடும்பப் பெண்ணை எண்ணவைக்கும் சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்பதை மறுக்க முடியவில்லை. 

பஞ்சாலையை ஆழமாக நேசிப்பவராகவும் அதன் ஊழியர்களை சொந்த குழந்தைகள் போல பாவிக்கும் உரிமையாளரால் எப்போதும் அப்படி இருக்க முடியவில்லை. ஏதோவொரு தருணத்தில் அவருக்குள்ளும் வீம்பு குடிகொண்டு விடுகிறது. ஆலை போனாலும் பரவாயில்லை எனத் தனது முடிவில் உறுதியாக இருந்துவிடுகிறார். 


படத்தின் கதைகளில் மெல்ல மெல்ல ஆழம்வரை இறங்க முடிந்த நம்மால் அதன் திரைக்கதையில் அழுத்தம் எதையும் காண முடியவில்லை. பார்வையாளன்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக காட்சிகள் அமையாதது திரைக்கதையின் மிகப் பெரிய பலவீனம். கருத்தியல் ரீதியில் தான் தேர்ந்தெடுத்த கருத்துக்கு வலுசேர்க்கும் இந்தப் படம் காட்சியல் ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ளது. ஒரு கதைக்கும் அதன் திரைக்கதை வடிவத்திற்கும் இடையில் சாமானியர்களால் புரிந்துகொள்ள முடியாத மாயாஜாலம் நிகழ்த்தப்பட்டிருந்தால் மட்டுமே திரைக்கதை பார்வையாளனின் மனத்தில் நிலைபெறும் சித்திரங்களாக உரு மாற இயலும். ஒரு சாதாரணக் கதையை பார்வையாளனை மிரண்டுபோகச் செய்யும் வித்தை அதன் திரைக்கதையிடம் தான் ஒளிந்திருக்கிறது. திரைக்கதை உருவாக்கம் காமத்தைக் கையாளுவது போல் நுட்பமானது; அது ஒரு தேடிக்கண்டடைதல். கற்றுத்தந்த, கற்றுக்கொண்ட எல்லா வழிமுறைகளும் காலாவதியாகும் மாய பயிற்சி அது. அறிவால் கண்டடைய முடியாததது அந்த நுட்பம். ஆனால் அது கைவரப்பெற்றால் மட்டுமே ஒரு சாதாரண கதை கூட ரசனைமிகு திரைப்படமாக மிளிரும். கதை வாசிப்பனுபவம் சார்ந்தது. வாசகன் தனக்குப் பிடித்த ரூபங்களை விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களுக்குக் கொடுத்து தன்னைக் கதையோடு பிணைத்துக்கொள்வான். திரைப்படத்தில் அவை அனைத்தும் இயக்குநரால் - திரைக்கதையையும் இயக்குநரே உருவாக்கும்போது - தீர்மானிக்கப்படுகிறது. வெவ்வேறு வகையான பார்வையாளர்கள் ஒரு குடையின் கீழ் வரும்போது அவருக்கான பொறுப்பு கூடுகிறது. அதைச் சரிவர நிறைவேற்றும்போது பார்வையாளனை அவரால் பரவசப்படுத்த முடியும். திரைக்கதையோடு பார்வையாளனுக்கு உருவாகும் நெருக்கம்தான் படத்தை வெற்றிப்பாதைக்கு - வணிகரீதியான, கலைரீதியான வெற்றி இரண்டையும் உள்ளடக்கிய பாதை - அழைத்துச்செல்லும். பஞ்சாலையும் அதன் மனிதர்களையும் பார்வையாளன் மனத்தில் நிலைபெற்றிருக்கச்செய்வதில் திரைக்கதை கைகொடுக்கவில்லை; அதைப்போலவே நடிகர்களும் - ஷிப்டில் பணியாற்றுவது போல வந்துவிட்டுப்போய்விட்டார்கள். அதனால் இந்தப் படத்தை பார்த்துவிட்டு வரும்போது இது ஒரு நாவலாக எழுதப்பட்டிருந்தால் மிக நேர்த்தியான நாவலாக உருவாகியிருக்குமோ என்னும் எண்ணம் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு நல்ல படம் தர வேண்டும் என்ற இயக்குநரின் ஆசையை படத்தின் உருவாக்கத்தில் உணர முடிகிறது; ஆனால் சிறந்த படத்திற்கு அது மட்டும் போதாதே?   
        

வியாழன், மே 03, 2012

மெரினா

கடல் நீரும் கடற்கரை மணலும்



தேசிய விருது பெற்ற பசங்க திரைப் படத்தை இயக்கியவர் பாண்டிராஜ் என்பதாலும் சின்னத் திரையில் தனது எள்ளல் மிக்க பாணியின் காரணமாகப் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்திருந்த சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததாலும் வெளியாவதற்கு முன்பே பிரத்யேகக் கவனம்பெற்றிருந்தது மெரினா. ஒரு திரைப்படம் வெளியாகும் முன்பும் வெளியான பின்பும் அதைப் பற்றிக் கட்டமைக்கப்படும் உரையாடல்கள் சின்னத் திரையில் பரவலாக இடம்பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இது ஒருவகையான வியாபார உத்தி. பெரிய திரை, சின்னத் திரை இரண்டும் இதனால் பயனடையுமென நம்பப்படுகிறது. அத்தகைய நிகழ்ச்சிகளில் திரைப் படத்தைப் பற்றி வெளிப்படுத்தப்படும் கருத்துகள் அதைச் சந்தைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

மெரினா பற்றிய முன்னோட்டங்களும் அத்தகையானவையாகவே இருந்தன. இந்த உத்தி வியாபாரத்திற்கு உகந்ததாக இருக்கலாம். ஆனால் திரைப்படத்தைக் கலையாக மாற்ற இது சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடாது. வணிகரீதியாக ஒரு திரைப்படம் வெற்றிபெறும் போது அதன் தயாரிப்பாளர் பெருமகிழ்ச்சிகொள்கிறார்; கலைரீதியாக வெற்றியடையும்போது இயக்குநருக்கு மனத் திருப்தி ஏற்படும். இங்கே மெரினாவில் தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒருவரே. எனவே வணிகரீதியிலும் கலைரீதியிலும் வெற்றிபெற்றால் மட்டுமே அது பாண்டிராஜைத் திருப்திப்படுத்தும். அதைப் பார்வையாளன்தான் பெற்றுத்தர முடியும். ஆனால் அப்படியான வெற்றி சாத்தியப்பட்டிருப்பதான பிம்பத்தை உருவாக்குவதில் சின்னத்திரை ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது.

மெரினாவின் தொடக்கத்திலிருந்தே அதன் பயணம் பார்வையாளனின் மனத்தைத் தொட்டுவிட வேண்டுமென்பதிலேயே குறியாக இருக்கிறது. அமரர் ஊர்தி எனத் தெரியாமல் அதில் பயணித்து மெரினாவுக்கு ஆதரவற்றவனாக வந்திறங்கும் சிறுவன் அம்பிகாபதி, பின்னர் நில மோசடி குறித்தெல்லாம் பேசும் அளவுக்கு ஞானம் பெற்று விடுகிறான். மெரினாவை மையமிட்டுப் பிழைப்பு நடத்துபவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் வியாபாரம் பாதிக்காத வகையில் அழகியலைப் புறக்கணித்துவிட்டு அநாயாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். சென்னைக் கடற்கரையில் சுண்டல் விற்பதில் கிடைக்கும் நிம்மதி வேறு எந்தத் தொழிலிலும் கிடைக்காதோ என எண்ணுமளவுக்கு அந்தச் சிறுவர்களின் வாழ்க்கை முறை அவ்வளவு உற்சாக மானதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.


தன் ஆசான்களிடம் கற்ற வித்தைகளைப் போதும் போதும் என்னும் அளவிற்கு அள்ளிவழங்கியுள்ளார் பாண்டிராஜ். மற்றொரு தேசிய விருதுக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் மனிதாபிமான, சமூக நல்லிணக்கக் கருத்தாக்கங்கள் அடிப் படையிலமைந்த கதாபாத்திரங்களையும் கதை நிகழ்வுகளையும் உலவவிட்டதில் அவரது கற்பனைத் திறனும் படைப்புத் திறனும் மிளிர்வதை உணரும் பார்வையாளன் நெகிழ்ந்துபோவான். குறிப்பாக அந்த அஞ்சல்காரர், மெரினாவில் உயிரோட்டமான அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை அலையவிடுவதற்கே அசாத்தியமான தன்னம்பிக்கையும் துணிச்சலும் வேண்டும். யாரையாவது ‘உஷார்பண்ணி’ மெரினாவுக்கு அழைத்துவந்து கிளுகிளுப்பாக இருக்க ஆசைப்படும் செந்தில்நாதன், உணவுப் பிரியையான அவன் காதலி சொப்னசுந்தரி, படிப்பதற்காகப் பணம் சேமிக்கும் அம்பிகாபதி, பணத்தைச் சுத்தமாக மதிக்காத -மனநிலை பிறழ்வுகொண்ட-அன்புச் செல்வன் ஐஏஎஸ், குடும்பத்தின் மீதான கோபத்தைப் பிச்சையெடுத்துத் தீர்க்கும் முதியவர், இப்படியான கதாபாத்திரங்களைத் தேசிய விருது பெற்றுத்தந்த உற்சாகத்தில்தான் இயக்குநரால் படைத்திருக்க முடியும். ஒழுக்க சீலர்களும் பிரதிபலன் எதிர்பாராமல் உதவுபவர்களும் நிறைந்த இடம் மெரினா என்னும் யதார்த்தத்தை நமக்குப் புரியவைக்க ஒரு பாண்டிராஜ் தேவைப்படுகிறார். மெரினாவில் பிழைப்பு நடத்தும் விளிம்புநிலை மனிதர்கள் ஒரு நாளைக் கழிக்கப் படாதபாடுபடுவார்கள் என்னும் நம்பிக்கை இந்தப் படத்தின் மூலம் குப்புறக் கவிழ்க்கப்பட்டுவிட்டது. ஒன்பது ரூபாய் நோட்டு, பொக்கிஷம், சொல்ல மறந்த கதை போன்ற அசல் தமிழ்ப் படங்கள் நனைக்க மறந்த இடங்களையும் பூதக்கண்ணாடியால் கண்டறிந்து நனைத்துச் செல்கிறது இந்தப் படம்.

படத்தில் இடம்பெறும் பிபிசிக்கான ஆவணப்படமாக்கக் காட்சியில், காமராஜர் படிப்பென்றால் என்னவென்றே தெரியாத அப்பாவியாகவும் காலில் செருப்பு போட்டால் நடக்கும்போது சுண்டலில் மணல் தெறித்துவிடும் என்பதை அறியாத அளவுக்கு வெகுளியாகவும் காட்சியளிக்கும் அதன் இயக்குநர் சிந்தனையைக் கிளறிவிடும் கேள்விகளால் பார்வையாளர்களைப் பதம்பார்த்து விடுகிறார். உதாரணமாக ‘சுண்டல் மிஞ்சினா என்ன பண்ணுவீங்க?’, நீங்க என்ன படிச்சிருக்கீங்க?’, ‘உங்கள் லட்சியமென்ன?’ போன்ற சீரிய கேள்விகள். இத்தகைய வலுவான கேள்விகளுக்குப் பின்னாலுள்ள ஆவணப்பட இயக்குநரின் அறிவு முதிர்ச்சி அதிரவைத்தது. அப்படத்தால் சிறார்கள் வாழ்வு மலர்ச்சி பெறும் என்பதில் பெண் இயக்குநருக்கு உறுதியான நம்பிக்கையில்லை. ஆனாலும் அதை நோக்கிய பயணத்தை அவர் மேற்கொள்கிறார். ஒட்டுமொத்தமாக அந்தக் காட்சியின் நேர்த்தியில் பாண்டிராஜ் தனிக் கவனம் எடுத்திருக்கிறார். ஆறு மாதக் காலம் இயக்குநர் மெரினா குறித்து ஆய்வுசெய்துள்ளதாகக் கேள்விப்பட்டது உண்மைதானோ!

மருமகள் கொடுமை தாங்காமல் வீட்டைவிட்டு ஓடிவந்து மெரினாவில் பிச்சை எடுக்கும் தாத்தாவுக்கும் அம்பிகாபதிக்கும் நிகழும் உரையாடலின்போது வெளிப்படும் வசனங்கள் மனித நேயத்தில் வருடக்கணக்காக மூழ்கியெழுந்தவையோ என எண்ணு மளவுக்குக் கச்சிதமாக அமைந்துள்ளன. “வந்தாரை வாழவைக்கும் சென்னை உன்னை மட்டும் வாழ வைக்காதா என்ன?” என்று கேட்கும் தாத்தாவிடம் மறுமொழியாக அவன், “அப்புறம் ஏன் தாத்தா உங்களமட்டும் பிச்சை எடுக்கவச்சுச்சு?” எனக் கேட்கும்போதும் மற்றொரு காட்சியில் அவரது கடந்த காலம் உள்ளத்தை உருக்கும் பின்னணி இசையோடு வெளிப்படுத்தப்படும்போதும், அம்பிகாபதியின் கேள்வியால் அவர் திருந்தி புல்லாங்குழல் விற்பனையாளராக மாறும்போதும் பார்வையாளன் மனத்தில் மெல்ல மெல்ல இரக்கவுணர்ச்சி சுரக்கத் தொடங்குகிறது. உறவுகளின் அருமை, மேன்மை குறித்து அவர் விதந்தோதும்போது அவ்வுணர்ச்சி ததும்பல் நிலையை எட்டுகிறது. வீட்டைவிட்டுத் தனியே வந்து, சிறார்கள் அனைவருக்கும் நல்லது செய்துவிட்டு இறுதியில் அவர் மரணமடைந்து உறவுகள் புடைசூழ மயானத்திற்குச் செல்கையில் அந்த உணர்ச்சி குடைசாய்கிறது. ராஜ மரணத்துக்கும் தகுதியான பின்னணியிசை துயரத்தை இடைவிடாது வழங்குகிறது. ‘இந்தியா எப்பவும் தோக்காதுடா கிரிக்கெட் தான் ஜெயிக்கும் தோக்கும்’, ‘வெள்ளைக்காரனவிட இந்தத் தமிழன் தாழ்ந்தவனாடா?’ போன்ற இனத்தை, தேசத்தைத் தூக்கிப் பிடிக்கும் வசனங்கள் வலுவானவை. வாழ்க பாரதம்! வாழிய செந்தமிழ்!

மனித மனங்களின் ஆழத்தில் சுரக்கும் உணர்ச்சிகள் ஒளிவுமறைவில்லாமல் படம் முழுவதிலும் பாய்ந்தோடுகிறது. கடற்கரையில் கண்டெடுக்கும் தங்கச் சங்கிலியைத் தனக்குத் தர மறுத்த அம்பிகாபதிக்கு அடி கிடைக்கும்போது அதைப் பார்த்து ரசிக்கும் வகையில் குதிரையில் அமர்ந்து மெல்லிய புன்னகையை வீசுகிறார் குதிரைக்காரர். தன்னைப் பற்றிய கவலையற்று மற்றொருவரோடு காதல்கொண்டு ஓடிவிட்ட தாய் பட்ட கடனை அடைக்கத் தான் ஏன் கஷ்டப்பட வேண்டுமெனக் கைலாசம் சொல்லும் காட்சியில், மௌனமாக ஒரு பறவை தன் அலகுகளால் தன் குஞ்சுக்கு இரையூட்டும் மாண்டாஜைக் காணும்போது தமிழ்த் திரைப்படத்தின் காட்சியமைப்பில் வந்துசேர்ந்திருக்கும் நுட்பம் குறித்த ஆச்சரியம் பெருகுகிறது.

சிறுவர்களை மீட்டுச்சென்று கல்வி, அதன் அவசியம், அரசாங்கச் சலுகைகள் போன்றவை குறித்துச் சமூக அக்கறை தொனிக்க நீண்ட பிரசங்கம் நிகழ்த்தும் ஹோம் அதிகாரி “உங்களுக்கெல்லாம் அப்பா அம்மா இல்லாட்டி என்ன நமக்கெல்லாம் அரசாங்கம் இருக்குது” என்கிறார். நமது அரசாங்கத்தின்மீது இயக்குநருக்கு இருக்கும் நம்பிக்கையை நினைத்துப் புளகாங்கிதம் அடையாமலிருக்க முடியவில்லை. அன்னம்மா சாகக் கிடக்கும்போது அவளுடைய அப்பாவிடமிருந்து வெளியேறும் உணர்ச்சிமயமான வசனங்களும் தாத்தாவின் இறுதி வசனங்களும் பார்வையாளனை உலுக்கி விடுகின்றன. வாழ்க்கை என்பது குதிரைப்பந்தயம் அதில் வெற்றி பெற்றவனுக்குத்தான் மரியாதை ஆனால் தோற்றவனிடமும் நேசம் காட்ட வேண்டும் என்பதை உணர்த்தும்விதத்தில் அமைந்த இயக்குநர் பாண்டிராஜ் பச்சைக்கொடி காட்டித் தொடங்கி வைத்த பந்தயத்தில் அம்பிகாபதி வெற்றிபெறுகிறான். பசங்க பாண்டிராஜின் இந்த மெரினா கேன் பட விழா, ஆஸ்கார் போன்றவற்றுக்குப் பரிந்துரைக்கப்படும் வாய்ப்புள்ளது. உலகத்துப் பார்வையாளர்கள் தமிழ்ப் படத்தின் சிறப்பை உணர்ந்து குடம் குடமாய்க் கண்ணீர் சிந்தும் காட்சியை நாம் காணும் வாய்ப்பைச் சின்னத்திரை உருவாக்கித் தரும் எனும் நம்பிக்கையோடு திரையரங்கை விட்டு வெளியேறும்போது எதேச்சையாகக் கையை நெஞ்சில் வைக்க அன்பு, மனித நேயம், கல்வி, இன்னபிற அதிர்வுகளை உணர முடிந்தது. அதுதான் இப்படத்தின் வெற்றி!

திங்கள், பிப்ரவரி 27, 2012

மௌனகுரு

மெய்ப்பொருள் காண்பதறிவு


 


"உண்மையைக் காண முயலும் தனி மனிதன் சமூகத்தின் விதிவிலக்கு:
வாழ்க்கையின் பலிபீடம்" - புதுமைப்பித்தன்

திரைப்பட வரலாற்றில் தனக்கென ஓரிடம்பிடித்துவிட வேண்டுமென்ற விருப்பம்தான் திரைப்பட இயக்குநர்களின் உந்துசக்தி. அதுதான் அவர்களைப் படத்தை இயக்கவைக்கிறது. அந்த உந்துசக்தியின் வீரியம் எப்போதுமே காத்திரமானதுதான். என்றபோதும் எல்லாப் படங்களும் வரலாற்றுப் பக்கங்களின் வரிகளாக மாறிவிடுவதில்லை. தங்களது மனத்தில் வரித்துக்கொண்ட திரைப்படத்திற்கும் தங்களால் உருவாக்கப்பட்டுத் திரையில் காட்சிகளாக விரிந்துநிற்கும் படத்திற்கும் உள்ள இடைவெளியைப் பெருமளவுக்குக் குறைக்கும் போதுதான் படம் பார்வையாளனின் மனத்தை ஆக்கிரமிக்கிறது. அந்த இடைவெளியை எந்த அளவுக்குக் குறைக்கிறார்களோ அதைப் பொறுத்தே அவர்களது படங்களின் தரம் அமையும். இதுவரை சொல்லப்படாத கருவை மாறுபட்ட முறையில் படமாக்கித் தங்களை வேறுபட்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் முனைப்பு இருந்தபோதும் ஏதோ ஓரிடத்தில் ஏற்படும் சறுக்கலால் நினைத்ததை நிறைவேற்றுவதில் சிலர் தவறிவிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக இயக்குநர்களின் பெயரைப் பார்வையாளர்கள் மனத்தில் நிலைக்கவைக்கும்படி முதல் திரைப்படம் அமைய வேண்டும். இயக்குநர்கள் முன்னுள்ள பெரும் சவால் அது. மௌன குரு இயக்குநர் சாந்தகுமார் அந்தச் சவாலை எதிர்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

தனக்குரிய உரிமையை நிலைநாட்டுவதில் வேட்கை கொண்ட சராசரி தெக்கத்தி இளைஞனான கருணாகரனுக்குச் சமூகத்தோடு ஏற்படும் முரணையும் அதன் காரணமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் எடுத்துக்காட்டி தற்போதைய சமூக அமைப்பின் தவறான புரிதலை, உண்மையின் காட்சிப் பிழையை உணர்த்துகிறார் மௌன குரு. சமூகத்தின் மிக முக்கியப் பொறுப்பு வகிக்கும் காவல் துறை அதிகாரிகள் சிலர் தனிமனிதப் பலவீனங்களுக்கு இரையாகிக் குற்றமிழைத்து, அதற்கான தண்டனையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளச் சாதாரணக் குடிமகனான கருணாகரனைக் காவு கொடுக்கிறார்கள். தங்களது கல்வியறிவைத் தவறான வழியில் பயன்படுத்தி அவனுக்கு Recurrent persistent non-bizarre delusion, persecutory subtype என்னும் கற்பிதங்களுக்கு இரையாகும் மன நோய் இருப்பதாகச் சொல்லிச் சமூகத்தையும் நம்பவைத்துவிட அவர்களால் முடிகிறது. உயர் அந்தஸ்துக்காரர்களின் பொய்யான கூற்றை எந்தவிதக் கேள்வியுமின்றி அப்படியே நம்பத் தலைப்படும் சமூகம் எளியவர்கள் கூறும் அப்பட்டமான உண்மையை உதாசீனப்படுத்துகிறது. இதன் விளைவாகச் சமூகத்தின் ஒழுங்கு குலைக்கப்படுகிறது. பழி எளிதாகப் பலம் குறைந்தவன்மீது சுமத்தப்படுகிறது. இந்த அபத்தத்தை உணர்த்துவதைக் கருவாகக் கொண்டுள்ள மௌன குரு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்றே. சாந்தகுமார் உருவாக்கிய களம், கதாபாத்திரங்கள், திரைக்கதை ஆகியவற்றைச் சுவாரஸ்யமான ஒரு திரைப்படமாக மாற்றுவதன் பின்னணியில் செயல்பட்ட அவரது ஆளுமை, தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பு ஆகியவைசார்ந்ததே இப்படத்தின் வெற்றி.


ராஜேந்திரன் வேடமேற்றிருக்கும் மதுவின் முகத்தில் இயலாமை, எரிச்சல், கோபம் என அநேக உணர்ச்சிகள் மிக இயல்பாக வெளிப்படுகின்றன. ஜான்விஜய், பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாரிமுத்து, செல்வம், பெருமாள்சாமி ஆகிய பாத்திரங்களுக்குத் தேவையான உணர்ச்சிகளைத் தகுந்த அளவுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். பாபுவாக நடித்திருந்த முருகதாஸின் நடிப்பில் சார்லி, சின்னி ஜெயந்த் போன்றவர்களது சாயல் தென்படுகிறது. எதிர்பார்ப்பற்ற உதவிகளைப் புரியும் பாபு போன்ற கதாபாத்திரங்களைச் சாகடிக்கும் சாபம் இப்படத்திலும் தொடர்கிறது. கருணாகரன் பாத்திரமேற்றிருக்கும் அருள்நிதி மௌன குரு என்னும் தலைப்புக்கேற்ற விதத்தில் ஒரு ஞானியாகவே மாறிவிட்டார். அவரது முகபாவம் பெருமளவில் மாறுவதேயில்லை. கிட்டத்தட்ட அனைத்துக் காட்சியிலும் ஒரேவிதமான பாவத்தையே வெளிப்படுத்துகிறார். ஏற்ற இறக்கங்கள், கோபதாபங்கள், நெழிவுசுளிவுகள் அனைத்தையும் குரல்தான் ஓரளவு சரிப்படுத்துகிறது. சிபி மலயில் இயக்கத்தில் 1987இல் வெளியான தனியாவர்த்தனத்தில் மன நலம் சரியாக உள்ளவனைச் சமூகம் மனநலம் பாதிக்கப்பட்டவனாக நம்பும் சூழல் ஏற்படும். வேறு வழியற்று அவனே தன்னை மனநலம் பாதித்தவனாகக் காட்டிக்கொள்ள நேரிடும். கருணாகரனுக்கும் அதே விஷயம் நடக்கிறது. ஆனால் கதாபாத்திரம் பிரதிபலிக்க வேண்டிய உணர்ச்சிகள் கதாநாயகத்தனத்திற்குப் பலியாகிவிட்டன. மன நலம் பாதித்தவர்களை நகைச்சுவைக்குப் பயன்படுத்தும் குரூரம்தான் பல தமிழ்ப்படங்களில் காணக்கிடைக்கிறது. ஆனால் அதைத் தவிர்த்து ஓரளவு ஆக்கபூர்வமாக இப்பிரச்சினையைக் கையாண்டுள்ளதால் இயக்குநரின் புரிதல் மேம்பட்டதாகத் தோன்றுகிறது.

இயக்குநரின் மனத்தில் ஒளிந்துள்ள காட்சிகளை அவரது விவரிப்புகளைக் கொண்டு காட்சிப்படுத்தும் வல்லமைகொண்ட ஒளிப்பதிவாளரால் மட்டுமே இயக்குநரின் மனக்காட்சியைத் திரைக்காட்சியாக மாற்ற இயலும். மகேஷ் முத்துசாமி அவ்வேலையைத் திறம்படச் செய்துள்ளார். படமாக்கத்தில் இயக்குநருக்கும் ஒளிப் பதிவாளருக்குமான இணைவு உச்சத்தில் உள்ளது. எனவே இயக்குநரின் மனத்திலிருந்து காட்சிகளை உரித்து உரித்துப் படச்சுருளுக்குள் அநாயசமாகச் சிறைப்பிடித்து விடுகிறார் ஒளிப்பதிவாளர். ஒரு த்ரில்லருக்குத் தேவையான கோணங்கள், ஒளி ஆகியவற்றைப் பிரயோகித்துப் பார்வையாளனுக்குகந்ததாகப் படத்தை மாற்றிவிடுகிறார் அவர்.

அரசு மனநலக் காப்பகத்தில் வகுப்பெடுக்கப்படும் காட்சியில் ஆர்த்தியின் கைபேசி அதிர்வு நிலையில் ஒலிப்பதை உணர்த்தும் அளவுக்கு நுட்பமாக இருக்கும் பின்னணி இசை சில காட்சிகளில் பொருத்தமாக அமையாமல் பார்வையாளனைத் திகிலூட்டுவதற்குப் பதிலாகப் பயமுறுத்துகிறது. இயக்குநருக்கு ஒளி கைகொடுத்த அளவுக்கு ஒலி கைகொடுக்கவில்லை. அவரது ஆளுமைத் திறன் இசை விஷயத்தில் தளர்ந்துள்ளது. பொறுமையாக மௌனங்களைக் கையாண்டு அடுக்கப்படும் துண்டுக் காட்சிகளால்கூடப் பார்வையாளனின் மனத்தில் அழுத்தமான உணர்வலைகளை எழுப்ப முடியும். திகிலைப் பார்வையாளன் மனத்தில் உணர வேண்டும் செவியிலல்ல.


கிரைம் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், ரத்தப் பரிசோதனை செய்வதற்குப் போடப்பட்ட ஊசித்துவார ரத்தக்கசிவை நிறுத்த அதில் வைத்து அழுத்திக்கொண்டிருந்த பஞ்சை எடுத்துப்போடுவதைக்கூடப் போகிற போக்கில் காண முடிகிறது. இப்படி அட்சரம் பிசகாமல் திரைக்கதை பயணித்துள்ள படத்தில் ஒருசில விஷயங்கள் தவிர்க்கப்பட்டிருந்தால் தமிழின் முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் மௌன குரு. முதலாவது நம்பகத்தன்மையற்ற அந்தக் காதல். படத்தின் தொடக்கத்தில் தீவிரமான ஒரு விஷயம் வர இருக்கிறது என்பதை உணர்த்திவிட்டு ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள் படம் சுவாரஸ்யமற்ற காதல்வழியே நகர்கிறது. அடுத்தது ஈர்க்கும்படியாய் அமையாத சில வசனங்கள். ‘சனிக்கிழமை எண்ணெய் தேய்ச்சிக் குளி’ என்பதைச் சொல்லிச் சொல்லி அந்த இடம் தேய்ந்து அதிலிருந்து நீர் சுரக்கத் தொடங்கிவிட்டது. அப்படிப்பட்ட வசனங்கள் வாழ்க்கையில் வழக்கத்தில் இருந்தால்கூடத் திரைப்படத்தில் நிறுத்திவிடலாம். ஆந்திர மாநில வனப்பகுதி, கல்லூரி என அநாவசியமாகப் பல இடங்கள் துணைத்தலைப்புகள் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பார்வையாளனுக்குப் புரியாமல் போய்விடுமோவென்ற பதற்றமா? அருள்தாஸ் கல்லூரி முதல்வரின் மகன் செய்யும் சிறு சிறு திருட்டுகளுக்குப் பின்னணியாக அப்படியொரு நீதிபோதனைக் கதை அவசியமல்ல. அது அவனது இயல்பாகக்கூட இருக்கலாம். கதையில் அவனது திருட்டு என்னவித பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தான் முக்கியமே தவிர அதற்குப் பின்னணி அவசியமல்ல.

ஓரிரு காட்சிகளைத் தவிர அனைத்துக் காட்சிகளிலும் அமர் மனைவியின் நெற்றியில் குங்குமம் கொட்டப்பட்டுள்ளது. பாலியல் வறுமை போக்கும் தொழில் புரியும் மாயாவோ நடு வீட்டில் அமர்ந்து புகைபிடிக்கிறாள். குடும்பப் பெண் இப்படி இருப்பாள், பரத்தை இப்படி இருப்பாள் என்னும் வகையில் காட்சிப்படுத்தும் சிந்தனைகளில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்த் திரைப் படத்தைப் புது இயக்குநர்கள் தாம் விடுவிக்க வேண்டும். அதிகக் கவனத்துடனும் சிரத்தையுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் இன்னும் துணிச்சலுடன் கையாளப்பட்டிருந்திருக்கலாம். படத்தில் சிறு சிறு குறைகள் தென்பட்டபோதும் நேர்த்தியான தமிழ்ப் படமொன்றைத் தரும் திறனுள்ளவராகத்தான் தெரிகிறார் சாந்தகுமார். அதனால் தான் மைனா, ஆரண்யகாண்டம் போன்ற மாறுபட்ட முயற்சிப் படங்களின் வரிசையில் இந்த மௌன குருவையும் வைத்துவிட முடிகிறது. நேர்த்தியான படைப்பு என்னும் இலக்கை அடைவதை நோக்கமாகக்கொண்ட எத்தனிப்பே இப்படத்தைக் கவனத்துக்குரியதாக மாற்றுகிறது.

காலச்சுவடு பிப்ரவரி இதழில் வெளிவந்த விமர்சனம் இது : http://kalachuvadu.com/issue-146/page75.asp

புதன், ஜனவரி 11, 2012

காதலின் துயரம் நிரம்பிய ஆன்மா


அஸீஸ் பே சம்பவம் 



“பிறப்பு, இறப்பு என்னும் இரண்டு பெரும் தனிமைகளுக்கு இடைப்பட்ட சிறிய சாகசமே வாழ்க்கை. நம் இருப்பை வடிவமைக்கும் முழுமையிலிருந்து விலகுவதுதான் மானுடத்தின் கதை. ஓர் உடம்பிலிருந்து பிறப்பதன் மூலம் பெரிய முழுமையிலிருந்து விலகுகிறோம். இப்படியாகத் தொடங்கும் அந்தச் சாகசம் மரணம் எங்கே நமக்காகக் காத்திருக்கிறதோ அங்கே முடிவடைகிறது” என்கிறார் துருக்கி எழுத்தாளர் அய்ஃபர் டுன்ஷ். இவரது அஸீஸ் பே ஹேடசேசி என்னும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதையே அஸீஸ் பே சம்பவம். துருக்கிய கதைசொல்லும் திறனின் செவ்வியல் உதாரணமான இந்தச் சிறுகதை அய்ஃபர் டுன்ஷுக்கு மிகப் பரவலான வாசகர்களை உருவாக்கித்தந்துள்ளது.

தன் முழுவாழ்க்கையைச் செலவிட்டும் மனத்திலிருந்து களைந்தெறிய முடியாதபடி மரியத்தின் மீது தான்கொண்டிருந்த மாசற்ற கடுங்காதல் ஏற்படுத்திய தீராக் காயம் தரும் வேதனைமிகு நினைவுகளைக் கடக்க இயலாமல் தனிமையின் உக்கிரத்தில் வீழ்ந்தழிந்துபோன இசைக் கலைஞன் அஸீஸ் பேயை மையமாகக் கொண்டு விரிகிறது கதை. அவனது தம்புராவிலிருந்து புறப்படும் மெல்லியதும் துயரங்களைக் கசியவிடுவதுமான துக்கம் தோய்ந்த இசை ஸேகியின் மது விடுதியில் நடைபெற்ற அந்தத் துயரச் சம்பவத்தில் அடங்கி ஒடுங்கும்வரை இஸ்தான்புல்லிலிருந்து பெய்ரூட்வரை இழைத்து நெய்யப்பட்ட இந்தக் கதையின் அத்தனை பக்கங்களிலும் ஒலிக்கிறது. பெரும்பாலானோர் வாழ்வில் கடந்துசெல்லும் தவிர்க்க இயலாத, மிகச் சாதாரணக் காதல் கதைக்குள் பரவிக்கிடக்கும் இழைகளும் மனித உணர்வுகள் குறித்த துல்லியமான பதிவுகளும் ஏற்படுத்தும் மயக்கங்களிலிருந்து நாம் விடுபட வெகுநேரம் பிடிக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் வாசித்தபோது மனத்தில் தளும்பி நின்ற அதே உணர்வை மீண்டும் ஒருமுறை ஊற்றெடுக்கவைத்தது இந்த நெடுங்கதை. காலச்சுவடில் வெளியான மிக்கேயிலின் இதயம் நின்றுவிட்டது என்னும் டுன்ஷின் சிறுகதையையும் இந்நேரத்தில் நினைவுகூர விரும்புகிறது வாசிப்பில் புத்துணர்ச்சி கண்ட மனம்.

மிகப் பெரும்பாடுபட்டு முழுமையான ஓவியமொன்றைத் தீட்டி அதன் பகுதிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றிவைக்க மாயத்தன்மை பெறும் ஓவியம்போல் தோற்றம்கொள்கிறது இந்தக் கதையின் கூறுமுறை. அஸீஸ் பேயின் வாழ்வை விதி குழப்பிப்போட்டது. அதைப் போன்றே கதையிலும் நிகழ்வுகளைக் கையாண்டு காதல், திருமணம், வாழ்வு, தனிமை, இசை போன்றவை குறித்த விஷயங்களை அடர்த்தியுடன் பகிர்ந்துள்ளார் டுன்ஷ். காமமும் காதலும் ததும்பி மிளிர வேட்கைப் பெருமூச்சுகள் வெளிப்படப் பெருமுலைப் பெண்கள் எழுதியனுப்பிய கடிதங்களைச் சுருதி பேதங்களாகக் கருதியொதுக்கிய அஸீஸ் பே மரியத்தால் தானும் அப்படியொரு வேட்கைமிகு நிலையை எய்துவோமென ஒருபோதும் எண்ணியிருக்க மாட்டான். மரியத்தின் ஆழங்காண முடியாத கறுத்த கண்களின் பெரும் பள்ளத்தில் விழுந்துகிடந்த அவனது ஆன்மாவை மீட்கும் வழியைக் கடைசிவரை அவனிடம் மறைத்துவைத்து மாயவிளையாட்டுக்காட்டிய விதியின் சாட்டைச் சொடுக்குதலில் வாழ்வின் அத்தனை ஐஸ்வர்யங்களையும் சௌந்தர்யங்களையும் இழந்துநின்றான் அஸீஸ் பே. புறக்கணிப்பின் கொடுங்கசப்பை நினைவிலிருந்து அகற்ற முடியாமல் தவித்தவன் நாசிக்குள் அதன் காடியான நெடி மிதந்துகொண்டேயிருந்தது. 

தனது சிறிய சாகசத்தின் இறுதிக் கணங்களைக் கடந்துகொண்டிருக்கும் சமயத்தில், எப்போதும் தலையை வானத்தை நோக்கியேவைத்திருக்கும் வீறாப்புமிக்க இசைக் கலைஞனான அஸீஸ் பே ஊதா நிற சாட்டின் துணியாலான கைப் பகுதி கிழிபட்டுத் தொங்கும் கோலத்தில் தட்டுத் தடுமாறி வீட்டிற்குள் வந்தமர்கிறான்; கோல்டன் ஹார்ன் ஏரியின் மேற்பகுதியில் பிரதிபலிக்கும் நிலவின் பிம்பத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்; வெப்பமிக்க பெய்ரூட் நகரில் மரியத்துடன் கழிந்த அந்த மூன்று நாட்கள்தாம் அவனது நினைவைச் சுரண்டுகின்றன. அஸீஸ் பேயை மணந்திருக்கிறோம் என்பதை நம்ப முடியாமல் முதலிரவில் தன்னுடன் படுத்துக்கொண்டிருப்பது அஸீஸ் பே தானா என்னும் சந்தேகத்தால் அடிக்கடி எழுந்து பார்த்தவள் வுஸ்லாத். அவனை எதிர்பார்த்து ஜன்னல் முன்னால் சாய்வு நாற்காலியில் அமர்ந்து அதே கோல்டன் ஹார்ன் ஏரியைக் கண்ணெதிரில் நிறுத்தியே தனது தனிமையை, வெறுமையைக் கொன்றவள் அவள். அந்த அன்பு மனைவி வுஸ்லாத் குறித்த ஞாபகங்கள் அவனுள் புரளவில்லை. கால ஓட்டத்தில் கரைந்துபோன மரியத்தின் காதல் பற்றியே காலமெல்லாம் கவனமெடுத்திருந்த அஸீஸுக்கு வுஸ்லாத்தின் உண்மையான பிரியத்தை உணர்ந்துகொள்ள வாய்ப்பில்லாமலே போயிற்று.

அந்தத் துயரச் சம்பவத்தின் முக்கியக் காரணகர்த்தாவான ஸேகி, ‘அபி அபி’ என அன்புடன் அஸீஸை அழைத்துவந்து அவனது தம்புரா இசை மூலம் தனது வியாபாரத்தை வளர்த்து மகிழ்ந்திருந்தான். அஸீஸ் தன்னுடன் வரச் சம்மதித்திருந்த காரணத்தால் நன்றிக்குரியவனாகவும் பெருமையுடன் நடந்துகொள்பவனாகவும் இருந்தான். தொடர்ந்த துக்கப் பாடல்களால் விடுதியின் வாடிக்கையாளர்கள் குறைந்துவந்ததால் தனது வியாபாரம் நசிந்துபோவதைக் காணச் சகிக்காமல் அந்த இரவில் தானே தன்னை நம்ப முடியாத அளவுக்கு அஸீஸிடம் கடுமையாக நடந்துகொண்டான். எனவேதான் தனது செய்கை சரியா தவறா என்னும் மனக்குழப்பத்தில் தன்னுடைய மனைவியிடம் அதேவிதமான கேள்விகளை மாற்றி மாற்றிக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனது செய்கையின் நியாயங்களை அவன் உணந்துகொள்ளும் வகையில் யாராவது எடுத்துக்கூறிவிட்டால் போதும் அவனுக்குள்ளிருந்து அவனைக் கொஞ்சம்கொஞ்சமாகச் சிராய்ப்புக்கொள்ளவைக்கும் அந்த வேதனையிலிருந்து அவன் மீண்டெழுந்துவிடுவான். ஆனால் கேட்பவர்களுக்குப் போதையேற்றும் மீட்டல்களைத் தம்புராவின் தந்திகளில் மென்மையான சிறகுகளைக் கொண்ட பறவைகளைப் போலத் தவழவிடும் பெருமைமிக்க தம்புராக் கலைஞனான அஸீஸின் குழந்தைத்தனமான ஒன்றன்மீது ஒன்றாகப் பிணைந்திருந்த உறைந்துபோன கைவிரல்களைப் பிரித்துவிட ஒருவரும் இல்லாததுபோலவே ஸேகியை வேதனையிலிருந்து விடுவிக்கவும் அங்கு ஒருவருமில்லை.

மரியத்தின் கண்களில் அலை பாய்ந்துகொண்டிருந்த, தோற்றப் பிழையான காதலை அஸீஸ் பே கண்டு அதன் பின்னே பயணத்தைத் தொடங்கித் தனது அழிவிற்கான பாதையைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். பல்வேறு திருப்பங்களைக் கொண்ட அந்தப் பாதையின் முதல் திருப்பம் மரியம் பெய்ரூட் நகருக்குப் பிழைப்புக்காகக் குடும்பத்தோடு புறப்படுவது. அத்தோடு அவனை அவள் மறந்திருந்தால் இந்தக் கதை யாருமே அறியாதவண்ணம் காற்றோடு காற்றாக மறைந்திருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு நிகழாதது நமது அதிர்ஷ்டம்; அஸீஸ் பேயின் துரதிர்ஷ்டம். விளையாட்டுப் போல் கடிதமொன்றில் மரியம் விடுத்திருந்த அழைப்பு அவனைக் கிறங்கச் செய்துவிட்டது. பெருமுலைப் பெண்களிடம் சிக்காமல் அவர்களை உதா சீனப்படுத்திவிட்டு எளிதாகக் கடந்ததைப் போன்ற எச்சரிக்கையுடன் இந்தக் கடிதத்தின் அழைப்பை உதறியிருந்தால்கூட வாழ்வின் பின்னாளையச் சங்கடங்களிலிருந்து அஸீஸ் பே தப்பித்திருப்பான். பெய்ரூட் நகரில் மரியத்தின் மறக்கடிப்பால் ஏற்பட்ட மனவேதனையைப் போக்க இஸ்தான்புல்லில் வசிக்கும் தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொள்ள அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால் இஸ்தான்புல்லிலிருந்து பெய்ரூட்டுக்குப் புறப்பட்டபோது வீட்டில் உருவான கடுமையான வாக்குவாதங்களுக்குப் பின்னர் வீட்டைவிட்டு அவன் வெளியேறியபோதே அவனது அம்மா அதிர்ச்சியில் மாண்டுவிட்டிருந்ததைப் பின்னர்தான் அறிந்துகொள்கிறான் அஸீஸ். அவனுக்குச் சிறு சலுகைகூடக் காட்டாமல் ஒதுங்கிக்கொண்டது விதி. கடும் சூறைக்குத் தாக்குப்பிடிக்கமாட்டாமல் தன்னை முழுவதுமாக இழந்த குடிசை போலானான் அஸீஸ் பே. சிதிலமடைந்த அவனது வாழ்வுக்கு அவன் எந்தவிதத்திலும் பொறுப்பாளி அல்ல; ஆனால் அத்தனை சிதிலங்களும் அவனாலேயே ஏற்பட்டன. 

ஒரு கட்டத்தில் தான் தன் தந்தையைப் போல மாறிக்கொண்டிருப்பதாக உணர்ந்து அதிர்கிறான் அஸீஸ். அவனுடைய தந்தை அஸீஸ் பேயின் அம்மாவைக் காதலித்து மணம்புரிந்திருந்தார். முறிந்துபோன காதல் நினைவில் இருந்தபோதும் அவரால் மறுபடியும் காதல்வயப்பட முடிந்திருந்தது. தோல்வியுற்ற காதலின் வேதனையைத் தள்ளிவைத்துவிட்டு மணம்புரிந்து, தொடர்ந்து வேலைக்குச் சென்று குடும்பத்தைப் பராமரித்து, குடித்து, எஞ்சிய நாள்களை எல்லாம் வேடிக்கை மனிதர் போலக் கழித்துப் பிறகுதான் மறைந்திருந்தார் அவர். ஆனால் அஸீஸ் பேயால் மரியத்தின் கண்களையோ அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தையோ முறிந்துபோன அந்தக் காதலின் வலியையோ கடைசிவரையிலும் மறக்கவே முடியவில்லை. இங்குதான் வழக்கம் போல் அலுவலகம் சென்று சம்பாதித்து, வாழ்ந்து, மடிந்த எழுத்தரிடமிருந்து வேறுபட்டு நிற்கிறான் விளையாட்டாகத் தான் தொட்ட தம்புராவையே தனக்கான அடையாளமாக மாற்றிக்கொண்ட கலைஞன் அஸீஸ் பே. 

அகாலத்தில் மறைந்துவிட்டிருந்த தன்னுடைய தாத்தாவின் தம்புராவைச் சிறுபிராயத்தில் விளையாட்டுப் பொருளாகவே எடுத்துவைத்து விளையாடிக்கொண்டிருந்தான் அஸீஸ் பே. தந்தையைக் கவர்ந்திராத அந்த இசைக் கருவி அஸீஸை ஈர்த்தது. மரியத்தால் வஞ்சிக்கப்பட்டு அநாதைபோல் மொழி தெரியாத அந்தப் பெய்ரூட் நகரில் தினசரி உணவுக்கே வழியற்ற கொடுமையை விதி அவனுக்கு நேர்ந்துவிட்டபோது மனத்துயராற்ற அந்த இசைக் கருவியை எடுத்து மீட்டுகிறான் அஸீஸ் பே. அந்த மீட்டல் அவனுக்கு டோராஸ் வடிவில் மற்றொரு வாழ்வைத் திறந்துவைத்துக் காத்திருந்தது. தத்தளித்த வாழ்வில் தப்பிப் பிழைக்கச் செய்த அதே தம்புராதான் அந்தத் துயரச் சம்பவத்துக்குக் காரணமான சோகப் பாடல்களுக்கான இசையை வழியவிட்டு அவனை ஒரேயடியாக மூழ்கடித்ததும் என்பது முரணே.

தனது காதல் கைகூடாமல்போயிருந்தால் அதிலிருந்து அஸீஸ் மீண்டு வந்திருக்கக்கூடும்; ஆனால் மரியம் நம்பிக்கையோடு வரவழைத்தபின் கைவிட்டுவிட்டுப் போய்விட்டாள். அவனுக்கு மிகத் தீவிரமாகத் தென்பட்ட அந்தக் காதல் அவளுக்கு வெறும் விளையாட்டாக மட்டுமே நின்றுவிட்டதால் ஏற்பட்ட மனவருத்தம் அவனுக்குள் நிலைபெற்றுவிட்டது. தான் விரும்பிய எளிய பொம்மை கிடைக்காவிட்டால் தனக்குக் கிடைத்த அனைத்து வகை அரிய பொம்மைகளையும் தூக்கி எறியும் குழந்தைபோலானான் அஸீஸ். அவனுக்குள்ளே பரவிவந்த துக்க அலைகளில் சிக்கிக்கொள்வதில் அவன் பிரியம் கொண்டான். துக்கம் அவனுக்குப் போதை தந்தது. இன்னும் இன்னும் ஆழமாகத் துக்கத்துக்குள் இறங்கிக்கொண்டே இருந்தான். தனது துக்கத்தைத் தம்புராவின் மீட்டல் வழியே உலகுக்குப் பரப்பி அதைத் தனது துக்கத்தோடு ஒன்றிணைக்கும் வேட்கையில் துக்கத்தை விட்டு வெளியேறத் துடிக்கும் புற உலகை மறந்தான். அவனோடு முரண்பட்ட புற உலகத்தை அவனுக்கு எதிராக மாற்றமுற்பட்ட விதி ஸேகியின் மதுபான விடுதியில் தனது கடைசி பாணத்தை அஸீஸ்மேல் பாய்ச்சிய பின்னர் “எல்லாம் முடிந்தது.”   

இந்த இசைக்கலைஞனின் அனைத்துப் பிராயங்களையும் மன உணர்வுகளையும் மிகத் தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறார் அய்ஃபர் டுன்ஷ். எங்கோ துருக்கியில் நடைபெற்ற கதை என்பதாக அல்லாமல் நமக்கு நெருக்கமான ஒருவனாக அஸீஸை நம்மால் அடையாளம் காண முடிகிறது. கதை விவரிப்பில் டுன்ஷ் பயன்படுத்தியிருக்கும் நவீன மொழி நடை நம்மை வசீகரிக்கிறது. இவரது சிறுகதையான சக்ன 1989இல் கம்ஹுரியத் நாளிதழ் நடத்திய ‘யூனஸ் நாடி சிறுகதைப் போட்டி’யில் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றது. 2001இல் வெளியான இவரது “நீ ஆக்கிரமிக்கப்படாமலிருந்தால் என் பெற்றோர் உன்னைப் பார்வையிடுவர் - எழுபதுகளில் எங்கள் வாழ்க்கை” என்னும் வாழ்க்கைக் குறிப்பு நூல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பால்கன் நாடுகள் வழங்கும் சர்வதேச விருது 2003இல் இந்நூலுக்கு வழங்கப்பட்டது. இதன் அரபி மொழியாக்கம் சிரியாவிலும் லெபனானிலும் வெளியானது. துருக்கியைச் சார்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரான சையத் ஃபைக் எழுதிய சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு ‘வானத்து மேகம்’ என்னும் திரைக்கதையையும் இவர் எழுதியுள்ளார். இது படமாக்கப்பட்டுத் துருக்கித் தொலைக்காட்சி அலை வரிசையில் 2003இல் ஒளிபரப்பானது. 

இத்தகு சிறப்புகளைப் பெற்றுள்ள அய்ஃபரின் கதையைத் தமிழ்க் கதை போல் உணரச் செய்துள்ளார் சுகுமாரன்.  அஸீஸின் மனவோட்டங்களின் நெழிவுசுளிவுகளையும் ஏற்ற இறக்கங்களையும் உயர்வுதாழ்வுகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களாலான அடர்மிகு வாக்கியங்களின் வழியே நமக்கு மிகவும் நெருக்கமாக்கியுள்ளார் சுகுமாரன்.  செறிவுமிக்க நடைகொண்ட இந்தக் கதையின் துயரார்ந்த பரவசம் நம்மை முழுவதுமாக ஆக்கிரமித்து நிற்கும் அதே சமயத்தில் மொழிபெயர்ப்பைப் படிக்கும் உணர்வைத் துளிக்கூட அரும்பவிடாமல் செய்ததன் மூலம் சுகுமாரன் தனித்துத் தெரிகிறார். இதன் பின்புலமாகவுள்ள மொழியாக்கம் குறித்தான அவரது அக்கறையும் அவதானிப்பும் மூலத்தை வாசித்த வாசகனுக்குக் கிட்டிய வாசக அனுபவத்தைத் தமிழில் வாசிப்பவனுக்கும் உருவாக்கித் தந்துவிட வேண்டுமென்ற யத்தனிப்பும் இணைந்து இப்படைப்போடு வாசகன் கொள்ளும் உறவை அர்த்தமுள்ளதாக்கிவிடுகின்றன. மனத்தின் ஈரமிக்க, பசுமையான ஊற்றுக்கண்களை உருத் தெரியாமல் செய்துவிடும் படைப்புகளால் சோர்ந்து போயிருக்கும் வாசக மனங்களில் கிறங்கவைக்கும் நறுமணம்கொண்ட இலக்கிய வாசனையைக் கொண்டு வந்து சேர்த்துள்ளார் சுகுமாரன். 


அஸீஸ் பே சம்பவம் 

அய்ஃபர் டுன்ஷ்

தமிழில்: சுகுமாரன்
பக். 96. விலை: ரூ.50 (மே 2011)
வெளியீடு
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி)லிட்.
669, கே. பி. சாலை
நாகர்கோவில் - 629 001


காலச்சுவடு ஜனவரி 2012 இதழில் வெளியாகியுள்ள மதிப்புரை இது. அதன் இணைய இணைப்பு இதோ http://kalachuvadu.com/issue-145/page137.asp 

ஞாயிறு, ஜனவரி 01, 2012

2011: மாயமான் பின்னே ஓடும் வாழ்க்கை

உறவும் நட்பும் நெருங்குவதும் விலகுவதும் மிக இயல்பான செயலாக நிகழ்கிறது. மனம் ஏன் பின்னணிக் காரண காரியங்களை அலசி ஆராய்ந்து அவதியுற வேண்டும்? (2011 ஜன. 6) 

🙏

படித்து முடித்து பதினாறு வருடங்கள் கழிந்தும் ஏதோ ஒரு உப்புமா வேலையில் 8500 மட்டும் மாதச் சம்பளம் வாங்கும் பொறியியல் பட்டதாரி முட்டாள்தானே என சமூகம் நினைக்கிறது... அதன் நினைப்பு சரிதானா? (2011 ஜன. 8) 

🙏

மனசுல என்ன தோணுதோ அதை டக் டக்குன்னு பேசி பேரைக் கெடுத்துக்கொள்வதே பிழைப்பாப்போயிருச்சு. மனசுல எவ்வளவு கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்காம வளைந்து, நெழிந்து, குழைந்து, இதழோரச் சிரிப்பை நழுவவிடாமல் பேசும் வித்தையை எங்கேயாவது சொல்லித் தர்றாங்களா? (2011 மார்ச் 4) 

🙏

மௌனமாக இருக்க முடிகிறது; அமைதியை அடையத்தான் முடியவில்லை. (2011 மார்ச் 11) 

🙏

சிக்ஸர் அடித்த பந்தை 21 லட்சத்துக்கும் டாஸ் போட பயன்பட்ட நாணயத்தை சுமார் 11 லட்சத்துக்கும் ஏலம் எடுக்க எப்படித்தான் தோன்றுமோ? பணத்தை என்ன பண்ண என்றே தெரியாதவர்கள் வாழும் பூமியில் தான் நாமும் வாழ்கிறோம்? என்ன கொடுமை சரவணா! (2011 ஏப்ரல் 5) 

🙏

நமக்கு முதல்வராக வர ஆசைப்படும் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் யாருமே பத்தாங்கிளாஸ் தாண்டலை... ஒழுங்கா பத்தாங்கிளாஸோட படிப்பை நிறுத்தியிருக்கலாம் முதல்வராகவாவது ஆகியிருக்கலாம். (2011 ஏப்ரல் 10) 

🙏

எட்டுத் திக்கும் மத யானை என்ன செய்யப் போகிறார்கள் தமிழக வாக்காளர்கள்? (2011 ஏப்ரல் 11) 

🙏
 
ஜனநாயகக் கடமையை இந்த முறையும் நிறைவேற்ற முடியவில்லை. பிரதமரே நிறைவேற்றவில்லை, நமக்கென்ன என்று சமாதானம் கூறிக்கொண்டாலும் ஒரு வகையான இழப்பு தான் இது. வெளியூரில் வசிப்பவர்கள் வாக்களிக்க ஏதாவது வழிவகை செய்தால் வாக்களிப்போர் சதவிகிதம் உயரக்கூடும். அடுத்த தேர்தலிலாவது இது குறித்து ஆவன செய்யுமா தேர்தல் ஆணையம். (2011 ஏப்ரல் 13) 

🙏

ப்ரியத்தின் உச்சத்தில் ஒளிந்திருக்கிறது வெறுப்பின் தொடக்கப்புள்ளி (2011 மே 5) 

🙏

காத்திருப்பு இன்றோடு முடியப் போகிறது. நாளை எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிடும்... (2011 மே 12) 

🙏

என் புது நண்பரை எனக்குப் பிடிக்காதுதான் ஆனால் என் பழைய நண்பர் படுத்தியபாட்டால் புது நண்பரைப் பார்த்து முகம் மலர வேண்டியதாயிற்று... (2011 மே 13) 

🙏

கருணாநிதி, 1989 தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்கும்போது வானொலியில் ஆற்றிய உரையில் தமிழக மக்களை குழப்பமில்லாத ஜனநாயகவாதிகள் என்றார் அந்தக் கூற்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் அதை நினைத்துப்பார்க்க கருணாநிதி விரும்பமாட்டார் இப்போதுள்ள நிலையில்... (2011 மே 13) 

🙏

தலை அரிக்கும்போதெல்லாம் நாம் கொள்ளிக்கட்டையால் தான் தலையைச் சொறிகிறோம்... (2011 மே 14) 

🙏

வணக்கம் நண்பர்களே என்னுடைய மொபைல் இன்று மாலை தொலைந்துவிட்டது. புதிய எண் வாங்கிய பிறகு தொடர்புகொள்கிறேன். யாருமே லைக் போட முடியாத ஒரு கமெண்டை இன்று போட்டிருக்கிறேன் என எண்ணுகிறேன் (2011 ஜூன் 9) 

🙏

முழுவதும் எண்ணெயில் நனைந்த கையோடு கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாளுவது போலவே உறவையும் நட்பையும் கையாண்டும் இன்னும் ஒரு சில கண்ணாடிப் பாத்திரங்கள் என்னிடம் புழக்கத்திலுள்ளன... (2011 ஜூலை 13) 

🙏

மாயமான்கள் பின்னால் ஓடுவது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சம்தானோ? (2011 ஆகஸ்ட்5) 

🙏

அன்பு, நட்பு, பாசம், காதல், கருணை, கத்தரிக்காய் எல்லாமே ஒவ்வாமையாகவே உள்ளது (2011 ஆகஸ்ட் 19) 

🙏

ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ஜி. அவருக்கே ஏகப்பட்ட சொத்து, உல்லாசமா உலக நாடுகளைச் சுத்தி வர்றாரு. ஆனால் அவர் ஊழலுக்கு எதிராக தனது ஆதரவைத் தருகிறார். கொஞ்சம்கூட சுய சிந்தனை அற்று மத்தியதர வர்க்கம் இதை நம்பினால் அவர்கள் நிலைமை கஷ்டம்தான்... ராம் லீலா மைதானத்தில் ரவிசங்கர் வந்தே மாதரம் என்று சொன்னது வந்து ஏமாத்துறோம் என்றே என் காதில் விழுகிறது... (2011 ஆகஸ்ட் 21) 

🙏



வாகை சூட வா போய் வகையாக மாட்டிக்கொண்டேன். அடிப்படைப் புரிதலற்ற அமெச்சூர் சினிமா... (2011 அக்டோபர் 8) 

🙏
 
உரையாடல் வெளியிலிருந்து வெளியேறி விட யத்தனித்துக்கொண்டே இருக்கும் மனம்... சூழல் அதை முறியடித்துக்கொண்டே இருக்கும்... இந்தக் கண்ணாமூச்சி எப்போது நிறைவு பெறுமோ? (2011 நவம்பர் 29) 

🙏
 
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுபோல் எளிதாகப் புரிய வேண்டும் வாழ்க்கை என மனம் ஆசைப்படுகிறது. ஒன்றும் ஒன்றும் எத்தனையாக இருந்தால் உனக்கென்ன என்று மனத்திடம் வம்பு செய்கிறது வாழ்க்கை... (2011 டிசம்பர் 23) 

🙏