கடல் நீரும் கடற்கரை மணலும்
தேசிய விருது பெற்ற பசங்க திரைப் படத்தை இயக்கியவர் பாண்டிராஜ் என்பதாலும் சின்னத் திரையில் தனது எள்ளல் மிக்க பாணியின் காரணமாகப் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்திருந்த சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததாலும் வெளியாவதற்கு முன்பே பிரத்யேகக் கவனம்பெற்றிருந்தது மெரினா. ஒரு திரைப்படம் வெளியாகும் முன்பும் வெளியான பின்பும் அதைப் பற்றிக் கட்டமைக்கப்படும் உரையாடல்கள் சின்னத் திரையில் பரவலாக இடம்பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இது ஒருவகையான வியாபார உத்தி. பெரிய திரை, சின்னத் திரை இரண்டும் இதனால் பயனடையுமென நம்பப்படுகிறது. அத்தகைய நிகழ்ச்சிகளில் திரைப் படத்தைப் பற்றி வெளிப்படுத்தப்படும் கருத்துகள் அதைச் சந்தைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.
மெரினா பற்றிய முன்னோட்டங்களும் அத்தகையானவையாகவே இருந்தன. இந்த உத்தி வியாபாரத்திற்கு உகந்ததாக இருக்கலாம். ஆனால் திரைப்படத்தைக் கலையாக மாற்ற இது சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடாது. வணிகரீதியாக ஒரு திரைப்படம் வெற்றிபெறும் போது அதன் தயாரிப்பாளர் பெருமகிழ்ச்சிகொள்கிறார்; கலைரீதியாக வெற்றியடையும்போது இயக்குநருக்கு மனத் திருப்தி ஏற்படும். இங்கே மெரினாவில் தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒருவரே. எனவே வணிகரீதியிலும் கலைரீதியிலும் வெற்றிபெற்றால் மட்டுமே அது பாண்டிராஜைத் திருப்திப்படுத்தும். அதைப் பார்வையாளன்தான் பெற்றுத்தர முடியும். ஆனால் அப்படியான வெற்றி சாத்தியப்பட்டிருப்பதான பிம்பத்தை உருவாக்குவதில் சின்னத்திரை ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது.
மெரினாவின் தொடக்கத்திலிருந்தே அதன் பயணம் பார்வையாளனின் மனத்தைத் தொட்டுவிட வேண்டுமென்பதிலேயே குறியாக இருக்கிறது. அமரர் ஊர்தி எனத் தெரியாமல் அதில் பயணித்து மெரினாவுக்கு ஆதரவற்றவனாக வந்திறங்கும் சிறுவன் அம்பிகாபதி, பின்னர் நில மோசடி குறித்தெல்லாம் பேசும் அளவுக்கு ஞானம் பெற்று விடுகிறான். மெரினாவை மையமிட்டுப் பிழைப்பு நடத்துபவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் வியாபாரம் பாதிக்காத வகையில் அழகியலைப் புறக்கணித்துவிட்டு அநாயாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். சென்னைக் கடற்கரையில் சுண்டல் விற்பதில் கிடைக்கும் நிம்மதி வேறு எந்தத் தொழிலிலும் கிடைக்காதோ என எண்ணுமளவுக்கு அந்தச் சிறுவர்களின் வாழ்க்கை முறை அவ்வளவு உற்சாக மானதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.
தன் ஆசான்களிடம் கற்ற வித்தைகளைப் போதும் போதும் என்னும் அளவிற்கு அள்ளிவழங்கியுள்ளார் பாண்டிராஜ். மற்றொரு தேசிய விருதுக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் மனிதாபிமான, சமூக நல்லிணக்கக் கருத்தாக்கங்கள் அடிப் படையிலமைந்த கதாபாத்திரங்களையும் கதை நிகழ்வுகளையும் உலவவிட்டதில் அவரது கற்பனைத் திறனும் படைப்புத் திறனும் மிளிர்வதை உணரும் பார்வையாளன் நெகிழ்ந்துபோவான். குறிப்பாக அந்த அஞ்சல்காரர், மெரினாவில் உயிரோட்டமான அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை அலையவிடுவதற்கே அசாத்தியமான தன்னம்பிக்கையும் துணிச்சலும் வேண்டும். யாரையாவது ‘உஷார்பண்ணி’ மெரினாவுக்கு அழைத்துவந்து கிளுகிளுப்பாக இருக்க ஆசைப்படும் செந்தில்நாதன், உணவுப் பிரியையான அவன் காதலி சொப்னசுந்தரி, படிப்பதற்காகப் பணம் சேமிக்கும் அம்பிகாபதி, பணத்தைச் சுத்தமாக மதிக்காத -மனநிலை பிறழ்வுகொண்ட-அன்புச் செல்வன் ஐஏஎஸ், குடும்பத்தின் மீதான கோபத்தைப் பிச்சையெடுத்துத் தீர்க்கும் முதியவர், இப்படியான கதாபாத்திரங்களைத் தேசிய விருது பெற்றுத்தந்த உற்சாகத்தில்தான் இயக்குநரால் படைத்திருக்க முடியும். ஒழுக்க சீலர்களும் பிரதிபலன் எதிர்பாராமல் உதவுபவர்களும் நிறைந்த இடம் மெரினா என்னும் யதார்த்தத்தை நமக்குப் புரியவைக்க ஒரு பாண்டிராஜ் தேவைப்படுகிறார். மெரினாவில் பிழைப்பு நடத்தும் விளிம்புநிலை மனிதர்கள் ஒரு நாளைக் கழிக்கப் படாதபாடுபடுவார்கள் என்னும் நம்பிக்கை இந்தப் படத்தின் மூலம் குப்புறக் கவிழ்க்கப்பட்டுவிட்டது. ஒன்பது ரூபாய் நோட்டு, பொக்கிஷம், சொல்ல மறந்த கதை போன்ற அசல் தமிழ்ப் படங்கள் நனைக்க மறந்த இடங்களையும் பூதக்கண்ணாடியால் கண்டறிந்து நனைத்துச் செல்கிறது இந்தப் படம்.
படத்தில் இடம்பெறும் பிபிசிக்கான ஆவணப்படமாக்கக் காட்சியில், காமராஜர் படிப்பென்றால் என்னவென்றே தெரியாத அப்பாவியாகவும் காலில் செருப்பு போட்டால் நடக்கும்போது சுண்டலில் மணல் தெறித்துவிடும் என்பதை அறியாத அளவுக்கு வெகுளியாகவும் காட்சியளிக்கும் அதன் இயக்குநர் சிந்தனையைக் கிளறிவிடும் கேள்விகளால் பார்வையாளர்களைப் பதம்பார்த்து விடுகிறார். உதாரணமாக ‘சுண்டல் மிஞ்சினா என்ன பண்ணுவீங்க?’, நீங்க என்ன படிச்சிருக்கீங்க?’, ‘உங்கள் லட்சியமென்ன?’ போன்ற சீரிய கேள்விகள். இத்தகைய வலுவான கேள்விகளுக்குப் பின்னாலுள்ள ஆவணப்பட இயக்குநரின் அறிவு முதிர்ச்சி அதிரவைத்தது. அப்படத்தால் சிறார்கள் வாழ்வு மலர்ச்சி பெறும் என்பதில் பெண் இயக்குநருக்கு உறுதியான நம்பிக்கையில்லை. ஆனாலும் அதை நோக்கிய பயணத்தை அவர் மேற்கொள்கிறார். ஒட்டுமொத்தமாக அந்தக் காட்சியின் நேர்த்தியில் பாண்டிராஜ் தனிக் கவனம் எடுத்திருக்கிறார். ஆறு மாதக் காலம் இயக்குநர் மெரினா குறித்து ஆய்வுசெய்துள்ளதாகக் கேள்விப்பட்டது உண்மைதானோ!
மருமகள் கொடுமை தாங்காமல் வீட்டைவிட்டு ஓடிவந்து மெரினாவில் பிச்சை எடுக்கும் தாத்தாவுக்கும் அம்பிகாபதிக்கும் நிகழும் உரையாடலின்போது வெளிப்படும் வசனங்கள் மனித நேயத்தில் வருடக்கணக்காக மூழ்கியெழுந்தவையோ என எண்ணு மளவுக்குக் கச்சிதமாக அமைந்துள்ளன. “வந்தாரை வாழவைக்கும் சென்னை உன்னை மட்டும் வாழ வைக்காதா என்ன?” என்று கேட்கும் தாத்தாவிடம் மறுமொழியாக அவன், “அப்புறம் ஏன் தாத்தா உங்களமட்டும் பிச்சை எடுக்கவச்சுச்சு?” எனக் கேட்கும்போதும் மற்றொரு காட்சியில் அவரது கடந்த காலம் உள்ளத்தை உருக்கும் பின்னணி இசையோடு வெளிப்படுத்தப்படும்போதும், அம்பிகாபதியின் கேள்வியால் அவர் திருந்தி புல்லாங்குழல் விற்பனையாளராக மாறும்போதும் பார்வையாளன் மனத்தில் மெல்ல மெல்ல இரக்கவுணர்ச்சி சுரக்கத் தொடங்குகிறது. உறவுகளின் அருமை, மேன்மை குறித்து அவர் விதந்தோதும்போது அவ்வுணர்ச்சி ததும்பல் நிலையை எட்டுகிறது. வீட்டைவிட்டுத் தனியே வந்து, சிறார்கள் அனைவருக்கும் நல்லது செய்துவிட்டு இறுதியில் அவர் மரணமடைந்து உறவுகள் புடைசூழ மயானத்திற்குச் செல்கையில் அந்த உணர்ச்சி குடைசாய்கிறது. ராஜ மரணத்துக்கும் தகுதியான பின்னணியிசை துயரத்தை இடைவிடாது வழங்குகிறது. ‘இந்தியா எப்பவும் தோக்காதுடா கிரிக்கெட் தான் ஜெயிக்கும் தோக்கும்’, ‘வெள்ளைக்காரனவிட இந்தத் தமிழன் தாழ்ந்தவனாடா?’ போன்ற இனத்தை, தேசத்தைத் தூக்கிப் பிடிக்கும் வசனங்கள் வலுவானவை. வாழ்க பாரதம்! வாழிய செந்தமிழ்!
மனித மனங்களின் ஆழத்தில் சுரக்கும் உணர்ச்சிகள் ஒளிவுமறைவில்லாமல் படம் முழுவதிலும் பாய்ந்தோடுகிறது. கடற்கரையில் கண்டெடுக்கும் தங்கச் சங்கிலியைத் தனக்குத் தர மறுத்த அம்பிகாபதிக்கு அடி கிடைக்கும்போது அதைப் பார்த்து ரசிக்கும் வகையில் குதிரையில் அமர்ந்து மெல்லிய புன்னகையை வீசுகிறார் குதிரைக்காரர். தன்னைப் பற்றிய கவலையற்று மற்றொருவரோடு காதல்கொண்டு ஓடிவிட்ட தாய் பட்ட கடனை அடைக்கத் தான் ஏன் கஷ்டப்பட வேண்டுமெனக் கைலாசம் சொல்லும் காட்சியில், மௌனமாக ஒரு பறவை தன் அலகுகளால் தன் குஞ்சுக்கு இரையூட்டும் மாண்டாஜைக் காணும்போது தமிழ்த் திரைப்படத்தின் காட்சியமைப்பில் வந்துசேர்ந்திருக்கும் நுட்பம் குறித்த ஆச்சரியம் பெருகுகிறது.
சிறுவர்களை மீட்டுச்சென்று கல்வி, அதன் அவசியம், அரசாங்கச் சலுகைகள் போன்றவை குறித்துச் சமூக அக்கறை தொனிக்க நீண்ட பிரசங்கம் நிகழ்த்தும் ஹோம் அதிகாரி “உங்களுக்கெல்லாம் அப்பா அம்மா இல்லாட்டி என்ன நமக்கெல்லாம் அரசாங்கம் இருக்குது” என்கிறார். நமது அரசாங்கத்தின்மீது இயக்குநருக்கு இருக்கும் நம்பிக்கையை நினைத்துப் புளகாங்கிதம் அடையாமலிருக்க முடியவில்லை. அன்னம்மா சாகக் கிடக்கும்போது அவளுடைய அப்பாவிடமிருந்து வெளியேறும் உணர்ச்சிமயமான வசனங்களும் தாத்தாவின் இறுதி வசனங்களும் பார்வையாளனை உலுக்கி விடுகின்றன. வாழ்க்கை என்பது குதிரைப்பந்தயம் அதில் வெற்றி பெற்றவனுக்குத்தான் மரியாதை ஆனால் தோற்றவனிடமும் நேசம் காட்ட வேண்டும் என்பதை உணர்த்தும்விதத்தில் அமைந்த இயக்குநர் பாண்டிராஜ் பச்சைக்கொடி காட்டித் தொடங்கி வைத்த பந்தயத்தில் அம்பிகாபதி வெற்றிபெறுகிறான். பசங்க பாண்டிராஜின் இந்த மெரினா கேன் பட விழா, ஆஸ்கார் போன்றவற்றுக்குப் பரிந்துரைக்கப்படும் வாய்ப்புள்ளது. உலகத்துப் பார்வையாளர்கள் தமிழ்ப் படத்தின் சிறப்பை உணர்ந்து குடம் குடமாய்க் கண்ணீர் சிந்தும் காட்சியை நாம் காணும் வாய்ப்பைச் சின்னத்திரை உருவாக்கித் தரும் எனும் நம்பிக்கையோடு திரையரங்கை விட்டு வெளியேறும்போது எதேச்சையாகக் கையை நெஞ்சில் வைக்க அன்பு, மனித நேயம், கல்வி, இன்னபிற அதிர்வுகளை உணர முடிந்தது. அதுதான் இப்படத்தின் வெற்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக