அவனை நான் தினந்தோறும் பார்த்துவிடுகிறேன். அவனைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்ப்பட்டுவிடுகிறான். சில சமயங்களில் அவன் முகத்தில் எல்லாவற்றையும் அடைந்துவிட்ட ஒரு திருப்தி தென்படும். பல சமயங்களில் எதையோ எதிர்பார்த்து அது இன்னும் நிறைவேறாத காரணத்தால் மட்டுமே உயிர் வாழ்கிறேன் எந்தக் கணத்தில் எனது எண்ணம் ஈடேறுகிறதோ அந்தக் கணத்தில் உயிரை விட்டுவிடத் தயாராக இருக்கிறேன் என்று சொல்பவன் போல் தோற்றம் கொண்டிருப்பான். அந்த சமயங்களில் காரண காரியம் தெரியாமல், உள்ளே சுக்கு நூறாக நொறுங்கிப்போயிருக்கும் ஆனால் வலுவாக மூடப்பட்டிருக்கும் ஒரு தெர்மாஸ் குடுவை எனது நினைவுகளில் வந்துபோகும்.
வாழ்க்கை என்னும் நதி சுழித்து நுரைத்து செல்வதை வேடிக்கை பார்ப்பதாக நினைத்துகொண்டே இருப்பவன் போன்ற அவனிடம் சொல்ல இயலாத சோகம் உறைந்துகாணப்படுவதாய் எனக்கு ஒரு நினைவு எழும். ஆனால் ஒரு நாளும் அவனிடம் பேசியதில்லை. எனக்கு ஏனோ அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றியதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அவனிடம் எனக்குப் பயம். அவனிடம் பேசும்போது அவன் நிச்சயம் உண்மையைத் தான் பேசுவான் என எனது உள்ளுணர்வு எச்சரித்துக்கொண்டே இருக்கும். அவன் சொல்லும் உண்மைகளை தாங்கிக்கொள்ள முடியாது என்ற பயத்திலேயே அவனுடனான உரையாடலைத் தவிர்த்து விடுகிறேன்.
புறவயமான உரையாடல் தடைபட்டதாலோ என்னவோ தெரியவில்லை. அகவயமான ஒரு உரையாடல் எனக்கும் அவனுக்கும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த அகவயமான் உரையாடலின் காரணமாக அவனது பிம்பம் எனது மனத்தில் நிலையாய் தங்கிவிட்டது. அதற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் அது அவன் தான். நாளாவட்டத்தில் அந்தப் பிம்பத்துக்கும் எனக்கும் பிரிக்க முடியாத ஒரு உறவு ஏற்பட்டுவிட்டது. எனது தனிமையை செங்கல் செங்கல்லாக பிரித்து எடுத்துவிட்டு அவன் வேடிக்கை பார்க்கிறான். யாருமே அற்ற எனது இல்லத்தில் அவனுக்கான இடத்தை அவன் உரிமையோடு எடுத்துக்கொண்டுவிட்டான். அவனைத் துரத்திவிட எண்ணும்போதெல்லாம் அவனது அப்பாவித்தனமான முகம் வந்து என்னைத் தடுத்துவிடும். என்னை எப்போதும் வேவு பார்த்துக்கொண்டிருக்கிறான் அவன் என்பதை நினைக்கும்போதெல்லாம் அவன் மீது வெறுப்பு கவியும். அவனை நானாக உள்ளே கொண்டுவந்து விட்டேன். இப்போது அவனை நானாக வெறுக்கிறேன். இது எதையும் அவன் அறிந்தவனில்ல. ஏன் ஒரு விருப்பு? பின்னர் ஏன் இந்த வெறுப்பு... எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இப்போது அவனை துரத்தி அடிப்பது மட்டுமே என் தலையாய செயலாக உள்ளது. உங்களால் முடிந்தால் எனக்கு உதவுங்கள். என்னாலேயே முடியவில்லை, வழிப்போக்கர்கள் நீங்கள் என்ன செய்துவிட முடியும்? நானும் ஒரு வழிப்போக்கன் தானே அதை எப்படி மறந்தேன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக