இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், பிப்ரவரி 07, 2011

தீக்குள் விரலை வைத்தால்...

நந்தலாலா

நண்பர் முரளியின் அடவி பிப்ரவரி இதழில் இந்த விமர்சனம் வெளியாகியுள்ளது. அச்சில் தென்பட்ட ஒரு சில பிழைகளை மட்டும் திருத்தி இதில் பதிவிட்டுள்ளேன்.

திரையரங்குகளுக்காகத் தயாரிக்கப்படும் அனைத்துப் படங்களும் வணிக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பினும் தங்கள் திரைப்படங்கள்மீது சுமத்தப்படும் வணிகப் பொதியைத் தாண்டி அவற்றை அர்த்தமிக்க கலைப் படைப்பாக மாற்ற விரும்பும் பயணத்தையும் அவ்வப்போது இயக்குநர்கள் மேற்கொள்கிறார்கள். வணிகத்துக்கும் கலைக்கும் இடையே சதா சர்வகாலமும் பனிப்போர் ஒன்று நிகழ்ந்துவருகிறது. திரை ரசிகர்களில் ஒரு சாரார் வணிகத்தின் பக்கமும் ஒரு சாரார் கலையின் பக்கமும் தங்களை இருத்திக்கொள்கிறார்கள். இவை இரண்டும் சரிவிகிதத்தில் கலந்த கலவையெனச் சில படங்கள் தமிழில் வந்துள்ளன, உதாரணமாகத் தேவர் மகன், சேது போன்ற படங்களைச் சுட்டமுடிகிறது. சட்டென ஞாபகம் வந்தவை இவை அவ்வளவே. ஆனால் தமிழின் நல்ல படம் ஒன்றை யாரேனும் வினவினால் உடனேயே ஞாபகத்தில் வந்து நிலைப்பது உதிரிப்பூக்கள் மட்டுமே. ஆனாலும் தமிழில் மாற்றுப்பட முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவாறு தான் உள்ளன. கலையா கவளமா எனப் போட்டி வரும்போது அங்கே பலியாவது சந்தேகமே இல்லாமல் கலையே. மறைந்திருந்து வீழ்த்திவிடுகிறது கவளம். ஆனாலும் மீண்டும் உயிர்த்தெழுந்து விடும் மாய சக்தி மட்டுமே கலைக்கு கைவரப்பெற்றிருக்கிறது. சித்திரம் பேசுதடி, அஞ்சாதே போன்ற ஜனரஞ்சகத் திரைப்படங்களை இயக்கியிருப்பினும் மாற்றுப்பட முயற்சிக்குரிய திரைப்படம் இதுவெனத் திரைக்கு வருவதற்கு முன்பே நந்தலாலாவைத் தன் சாதுர்யத்தால் மிஷ்கின் பேசவைத்திருந்ததால் அதன்மீது ஒரு தனிக்கவனம் இருந்தது சினிமா ஆர்வலர்களுக்கும் ரசிகர்களுக்கும். ஆனால் திரையரங்க அனுபவம் சிலாகிக்கவைத்த ஒன்றாக இருக்கவில்லை. மானசீகமாக மனத்தில் கட்டியமைக்கப்பட்ட பிம்பத்துக்கும் நேரிலே திரையில் அசையும் சலனக் காட்சிகளாலான பிம்பத்துக்கும் இடையே பெருவாரியான வேறுபாடுகளை மனம் உணர்ந்திருக்கக்கூடும்.

குழந்தைகளோடு குழந்தையாய் வளர வேண்டிய பிராயத்தில் தனியனாகப் பாட்டியோடு வாழ நேர்ந்த சிறுவன் அகிலேஷ். அவனுடைய தாய் மற்றொருவரை மணந்துகொண்டு அன்னவயல் என்னும் கிராமத்தில் வாழ்ந்துவருகிறாள். அதையறியாத அகி தன்னைக் காண அவள் வருவாள் வருவாள் என எதிர்பார்த்து ஏமாந்து இறுதியில், தன் தாயைக் கண்டு அவள் கன்னத்தில் முத்தமொன்று தரும் ஆசையில் பள்ளியில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் அவளைத் தேடி ஓடிவருகிறான். ஜுரம் நின்ற பின்னும் ஊசிபோட்டுக் கொடுமை பண்ணும் மனநலக் காப்பகத்தில் தன்னைக் கொண்டு சேர்த்த தாய் வீட்டிற்கு அழைத்துப்போக வரவே வராத கோபத்தால் அவளது கன்னத்தில் அறைய வேண்டும் என்னும் ஆர்வத்தில் அங்கிருந்து தப்பித்த பாஸ்கர் மணி அவள் வசிக்கும் தாய் வாசலுக்கு தாயைத் தேடிப் போகிறான். இருவரும் இணையும் புள்ளியில் தொடங்குகிறது, நந்தலாலாவின் பயணப்பாதை. பயணம் பேருந்தில் தொடங்கி, ஆட்டோ, போலீஸ் ஜீப், டிராக்டர், புதுக்கார், லாரி, மாட்டுவண்டி, பைக் எனப் பலவகையான வாகனங்களில் நடந்தேறுகிறது. அந்த நிலவியலும் சம்பவங்களும் தருக்கங்களுக்குட்படாமல் பார்வையாளனிடமிருந்து அந்நியப்பட்டே நிற்கின்றன. அந்தப் பயணத்தில் எதிர்ப்படும் சம்பவங்கள், அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் இவற்றை மட்டுமே வைத்துக் கதை நகர்த்த துணிந்தற்கு மிஷ்கின் கிகுஜிரோவுக்கு மனத்திலாவது நன்றி சொல்ல வேண்டும்.

காற்றைத் தவிர ஒன்றுமில்லை தந்த இளையராஜா படத்தின் குறைகளைக் களைந்து படத்தின் தரத்தை உயர்த்த முயன்றதில் கிட்டத்தட்ட களைத்தேபோய்விட்டார். மாறுபட்ட பல கோணங்களில் காட்சிகளை ஒளிப்படச் சுருளுக்குள் சிறைப்பிடித்ததில் ஒளிப்பதிவாளரின் பங்கும் உயர்வான இடத்திலேயே உள்ளது. அநாவசியமான கூட்டங்கள் எதுவும் இல்லை படத்தில். சாதிக்கலவரம் நடந்த ஊரைக்கூட ஊருக்கு வெளியே காண்பித்ததால் கலவரப் பூமியையும் பெருகியோடும் குருதியையும் திரையில் பார்க்க வேண்டிய பாரமில்லை. ஆபாசமான வசனங்களில்லை. உரையாடல்கள் பக்கம் பக்கமாகப் பேசப்படவில்லை. பெரும்பான்மையான காட்சிகளில் மிக நீளமான காட்சிகளில் கூட வசனங்கள் மௌனித்திருக்க இசை மட்டும் உணர்ச்சிகளைக் கொட்டுகிறது. இப்படிப் பலவிதமான நேர்மறையான கூறுகளுக்கான அம்சங்களைக் கொண்டிருந்தும் உன்னதத் திரைப்படத்தைப் பார்த்த திருப்தி தர வேண்டிய நந்தலாலா அதிலிருந்து தவறியதாலேயே இப்படம் குறித்த கோபம் கொப்பளிக்கிறது.


நல்ல படம் ஒன்றிற்குத் தேவைப்படும் அனைத்துக் கூறுகளும் நிரம்பிவழிவது போன்ற தோற்றம் கொண்டிருந்தபோதிலும் நல்ல படம் இதுவெனும் கூற்றை ஏற்பதா மறுப்பதா என்பதை அவதானிக்க இயலாமல் தத்தளிக்கும் மனம் இறுதியில் மறுப்பின் பக்கமே நிற்கிறது. பார்வையாளனுக்கும் திரைக்கும் நடுவே கண்ணுக்குப் புலப்படாத கண்ணாடிச் சுவர் ஒன்று எழும்பி நிற்கிறது. அதன் வழியே தான் அவன் கதாபாத்திரங்களைக் காண்கிறான். இசையெனும் ஈரமான விழுதுகள் அவனை நோக்கி வளைந்து நெளிந்து வந்தும் அந்தக் கண்ணாடிச் சுவரைக் கடக்க இயலாமல் திரும்புகிறது. திரைக்கதையின் நுட்பமான இழைகள் இசை வழியே கதாபாத்திரங்களுக்கும் பார்வையாளனுக்கும் இடையே நெருக்கமான உறவைப் பின்னியிருந்தால் படம் முடியும் தருவாயில் அந்த உறவிலிருந்து தன்னைக் கழற்றிக்கொள்ள அவன் பிரயத்தனப்பட வேண்டியதிருந்திருக்கும். ஆனால் அப்படியொரு இழை உருவாவதை அறிந்தோ அறியாமலோ மிகக் கவனமாகத் தடுத்துவிடுகிறார் இயக்குநர். கதாபாத்திரங்களோடு பார்வையாளனுக்கு ஏற்பட வேண்டிய அன்னியோன்ய உறவு ஏற்படாமலே போய்விட்டபோது அதன் நிறைகள் எவையுமே மனத்தில் தங்கவில்லை.

கதாபாத்திரங்களில் இயக்குநரின் தாக்கம், குறிப்பாக அவரது தன்முனைப்பு அதிக அழுத்தத்துடன் பதிந்திருக்கிறது. அதனதன் இயல்புகளோடு திரிய வேண்டியவை இயக்குநரின் கருத்துகளைத் தாங்க முடியாமல் தங்கள் இயல்பிலிருந்து பிரிந்து அந்நியத்தன்மையைத் தழுவிக்கொள்கின்றன. கதையோட்டத்தின் போக்கில் அவனை உள்ளிழுக்கத் தவறி அவனைவிட்டு எங்கோ தொலைதூரத்துக்குப் பயணிக்கிறது திரைக்கதை. மாடோட்டுபவர்கூட ஒரு மாட்டுக்கு ராமன் என்றும் மற்றொன்றுக்கு ராவணன் என்றும் பெயர்வைத்திருக்கிறார். ஒரு காட்சியில், “நீ என்ன சாதி?” என பாஸ்கர் மணியிடம் வினவுகையில் அவன் “மெண்டல்” எனப் பதில் தருகிறான், கேள்வி கேட்டவள், “அது என்ன சாதி?”யென வெகுளியாகக் கேட்கிறாள். இத்தகைய அசட்டறிவு தூசியாகப் படம் முழுவதிலும் பரவிக்கிடக்கிறது.

அகியின் தாயைப் பாஸ்கர் மணி சந்திக்கும் காட்சியில் காலம்காலமாக வசனங்களால் கட்டியமைக்கப்பட்ட புனிதம் வசனமே இல்லாமல் இசையின் துணையோடு கட்டியமைக்கப்பட்டுள்ளது மட்டுமே புதுமை. அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் அங்கேயே விழுந்துகிடப்பதால் என்ன பயன்? அகியின் தாய் பாஸ்கர் மணியின் காலில் விழுந்து கதறி அழுகிறாள். கழுத்திலிருக்கும் நகையைக் கழற்றிக்கொடுக்கிறாள், பணத்தைக் கொடுக்கிறாள். எல்லாவற்றையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு ஓங்கி அவள் கன்னத்தில் அறைகிறான் பாஸ்கர் மணி. அங்கே இயக்குநரின் முதிராத் தன்மையை எதிர்கொள்கையில் பார்வையாளனுக்கும் திரைக்குமான தூரம் பல மடங்கு அதிகரிக்கிறது.



பாலியல் தொழிலாளியை அவளது சிக்கலிலிருந்து மீட்ட பின்பு அவள் பேசும் வசனங்களைக்கூடத் தாங்கிக்கொள்ளலாம்- சிக்மண்ட் ஃப்ராய்ட்கூட நினைவுருத்தப்படுகிறார்- ஆனால் அதன் பின்பு அவளது அழுக்கைப் போக்குவதற்காக அவளை மழை நீரில் குளிப்பாட்டும் அபத்தத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அது போதாதென்று குறியீடு போல மலைப்பாம்பொன்றை நகரச் செய்தது அபத்தத்திலும் அபத்தம். பாஸ்கர் மணி அவனது தாயைச் சந்திக்கும் காட்சியில் பார்வையாளனுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்திருக்கிறார் இயக்குநர். மனநிலை பிசகிய நிலையில் அந்தத் தாய் இருப்பதற்கான நியாயமான காரணங்கள் எவையுமே இல்லை. ஏனெனில் அவள்தான் மகனை மனநலக் காப்பகத்தில் சேர்ந்து வந்திருக்கிறாள் அவள் ஏன் மன நலம் பாதித்தவளாக மாற வேண்டும் என்ற நியாயமான கேள்விகள் எழுவதையும் தடுக்க முடியவில்லை. இப்படியான தருக்கங்கள் எவற்றிற்கும் பதில் கிடைக்காத காரணத்தினாலேயே தன்னளவில் தனிப்பட்டுப் போய்விடுகிறது இப்படம். எல்லாவற்றுக்கும் காரணம் வேண்டுமா என்னும் கேள்வியில் தருக்கங்களை எல்லாம் மூழ்கடித்துவிட முடியாது. தருக்கங்களைப் பற்றி யோசிக்காமல் திரைக்கதையில் ஒன்றிவிட்ட பார்வையாளர்கள் வேண்டுமானால் தீக்குள் விரலைவைக்கும்போது நந்தலாலாவைத் தீண்ட முடியும் - அத்தகைய ஒன்றுபடலின் காரணம் ஞானமா, அறியாமையா? - நாம் சூடு கண்டதுதான் மிச்சம்.

2 கருத்துகள்:

  1. மறுபடியும் மிகவும் பொருத்தமான தலைப்பு. திரைப்படத்தைப் பார்க்காமலேயே விமர்சனத்தை விமர்சனம் செய்தால் தப்பா... உங்கள் வார்த்தைப் பிரயோகங்களில் தமிழின் அழகும் கம்பீரமும் துள்ளி விளையாடுகின்றன...

    பதிலளிநீக்கு
  2. எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்து கருத்துரையும் இடும் தங்களுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு