தீவிர இலக்கியத்தில் இறுமாப்போடு இயங்கியவர்கள் சினிமாத் துறைக்குள் நுழையும்போது, சிறந்த சினிமா, எழுத்துக்களை வாசக மனம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அதற்குத் தாங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பாளிகள் அல்ல என்பதான விதத்தில் சினிமாவில் தமது இருப்பை உறுதிப்படுத்த அவர்கள் மேற்கொள்ளும் 'நெளிவுசுழிவுக'ளால் வாசகனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரு வணிகனின் இடத்தை ஒரு இலக்கியவாதி ஆக்கிரமித்ததைத் தாண்டிச் சிறப்பு நிகழ்வுகள் எதுவும் நிகழ்த்தப்படுவதில்லை.
இத்தகு சூழலில் வாசகனோடு நெருக்கத்தை உண்டாக்கக்கூடிய விதமான கட்டுரைகளாக இருப்பதாலேயே அம்ஷன் குமாரின் இத்தொகுப்பு தனித்துத் தெரிகின்றது. பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு பாரதி பாடிய "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா. . ."வில் பேசும் பொற்சித்திரமென குழந்தை வருணிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தை ஒரு குழந்தைபோல் நேசிக்க முடிந்தமையால் இத்தலைப்பு சாத்தியமாயிருக்கக்கூடும்.
இன்னமும் திரைப்படம் பொழுதுபோக்குச் சாதனம் மட்டுமே என்ற பரவலான புரிதலின் அறியாமையைப் போக்கும் ஆர்வத்துடனும் முயற்சியுடனும் காட்சி ஊடகத்தின் பன்முகங்களான திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரப்படங்கள் போன்ற பலவற்றையும் கையிலெடுத்து அவற்றின் தோற்றம், வளர்ச்சி, அரசியல், உளவியல் என அனைத்துக் கூறுகளையும் அலசுகிறார் அம்ஷன் குமார். குறுகிய கண்ணோட்டத்தில் சினிமாவைப் பொழுதுபோக்காக மட்டும் குறுக்காமல் அதைத் தொழிலாகவும் கலையாகவும் முன்னெடுத்துச்செல்லும் வேகத்துடன் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட போதிலும் ஒருசேர வாசிக்கும்போது வெளிப்படும் ஆசிரியரின் சினிமா குறித்த பார்வை சீராக உள்ளதை அவதானிக்க முடிகிறது. வெறுமனே திரைப்படக் கதைகளாகச் சொல்லி அலுப்பூட்டாமல் திரைப்படங்கள் பற்றிய கதைகளை, வரலாறுகளைச் சொல்லிச் செல்லும் விதம் வாசிப்பில் அயர்ச்சியை அகற்றுகிறது.
ஸ்ரீதர்,ஜெயகாந்தன், பாலுமகேந்திரா, மகேந்திரன், அடூர் கோபாலகிருஷ்ணன், ஜி. அரவிந்தன், ஜான் ஆப்ரஹாம், சத்யஜித் ராய், நிமாய் கோஷ், ரித்விக் கட்டக், சாப்ளின், அகிரா குரோசாவா, இங்மர் பெர்க்மென், கோதார் (Godard), பிரடரிகோ ஃபெல்லினி போன்ற பல ஆளுமைகளின் திரைப்படங்களும் அவற்றின் தன்மைகளும் கட்டுரைகளில் குறுக்கும் நெடுக்குமாக ஆராயப்படுகின்றன. புள்ளிவிவரங்களும் வரலாறுகளும் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. எங்கேயும் பெயர்களைக் கூறி வாசகனைப் பிரமிப்பில் ஆழ்த்த வேண்டும் என்ற தொனி இன்றி அத்தகு பெயர்களையும் அவற்றோடு சம்பந்தப்பட்ட செய்திகளையும் வாசகனுக்கு இணக்கமாக்கும் முனைப்பே கட்டுரைகளின் மையமாகத் தென்படுகிறது.
திரைப்படம் குறித்த எந்த விஷயமும் விடுபட்டுவிடக் கூடாது என்ற அக்கறையோடு தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல். தொலைக்காட்சியில் ரசிக்கப்படும் விளம்பரங்கள் தியேட்டர்களில் ஏன் வெறுக்கப்படுகின்றன என்பதை, பிறமொழி பேசுவோர் சினிமாவில் கையாளப்படும் விதத்தை, சினிமா சங்கங்களின் கதையை எனப் பலவற்றையும் ஆராய்கிறார் ஆசிரியர். ஆவணப்படங்கள், குறும்படங்களுக்கு மாற்றுத் திரையரங்குகள் தேவைப்படுவதையும் காட்சிக்கெனக் கட்டணத்தைப் பார்வையாளர்களைத் தரச்செய்ய வேண்டுமென்ற அக்கறையையும் ஒரு கட்டுரை கோடிட்டுக் காட்டியுள்ளது.
நிமாய் கோஷின் ஒளிப்பதிவில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் பொன்வயல் (1954) என அவரே தன்னிடம் தெரிவித்ததாகவும் ஆனால், அதற்கு முன்னரே 1953இல் இன்ஸ்பெக்டர் படத்திற்கு அவர் ஒளிப்பதிவு செய்ததாக ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் நூல் ஒன்று குறிப்பிடுவதாகவும் சொல்கிறார் இவர் (பக்.48). எது சரி எது தவறு என எந்தக் குறிப்பும் இல்லை. செய்திகளைச் செய்திகளாகவே பதிவுசெய்துள்ள விதம் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. பல அரிதான திரைப்படங்களோடு திரை ஆளுமைகளும் தொடர்ந்து வலம்வந்தபடியே இருக்கின்றனர் கட்டுரைகளில். திரைத் துறை பற்றிய விழிப்புணர்வும் ஆழ்ந்த புரிதலும் தொடர்ந்து அதன் இயக்கத்தோடு தொடர்பும் கொண்ட ஒருவரால்தான் அதன் அனைத்துப் பரிமாணங்களையும் ஆராயவும் வெளிப்படுத்தவும் முடியும். தான் அத்தகையவர் என்பதை இக்கட்டுரைகள் மூலம் நிரூபித்துள்ளார் அம்ஷன் குமார்.
ஹாலிவுட் படங்களை அப்பட்டமாகக் காப்பி அடித்து அவற்றை அவர்களிடமே அனுப்பி ஆஸ்கார் பரிசும் கேட்கிற லஜ்ஜையின்மை இங்கு குடிகொண்டுள்ளது. (பக். 111, 112) கலைஞர்கள் என்று தங்களை அழைக்க வேண்டுமென்று விரும்புவார்கள். பட்டப் பெயர்களையெல்லாம் சூட்டிக்கொண்டு மகிழ்வார்கள். ஆனால், அவர்கள் பங்கேற்கும் படம் கலைப்படமா என்று யாராவது கேட்டுவிட்டால் போதும். உடனே தோப்புக்கரணம் போடாத குறையாக அது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம் என்று கதறுவார்கள் (பக். 156) என எழுதும் போது ஒரு கலைஞனின் நியாயமான கோபம் சம்பந்தப்பட்டவர்களின் போலித்தனத்தை உரிக்கிறது.
வாசித்தலின்போது சின்னச் சின்னப் பிழைகள் ஆங்காங்கே எதிர்ப்படுகின்றன. இவை தவிர்க்கப்பட்டிருப்பின் நலமாய் இருந்திருக்கும். பக்கம் 115இல் அடிக்குறிப்பு 3இல் 'பார்க்க: காலச்சுவடு இதழ் எண் 167 ப. 20' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காலச்சுவடின் 167ஆம் இதழ் இன்னும் வெளிவரவில்லை. இது போன்றவை அடுத்த பதிப்பில் களையப்படும் என நம்பலாம். நூலில் கடைசியாக இடம்பெற்றுள்ள பொருளடைவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்நூல் சினிமா குறித்து அறிய விரும்புபவருக்கும் அறிந்து வைத்திருப்பவருக்கும் வாசித்தலில் நிறைவைத் தரும். அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் நாவலைப் போன்று சினிமா, சினிமாக்காரர்கள் குறித்த ஒரு முழுமையான சித்திரத்தை வாசகனின் மனத்திரையில் காட்சிப்படுத்துகிறது இந்நூல்.

காலச்சுவடு ஜூலை 2008 இதழில் வெளிவந்த மதிப்புரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக