இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், ஜூலை 11, 2011

சிருங்காரச் சிலைகள்

டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் 


 சென்னை தமிழிசைச் சங்கம் இருக்கும் ராஜா அண்ணாமலை மன்றத்தின் முன்னே ஆஜானுபாகுவாக நின்ற நிலையில் நிறுவப்பட்டிருக்கும் சிலை அண்ணாமலை செட்டியாருடையது. 1964 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று மைசூர் மகாராஜா திறந்துவைத்த சிலை இது. நிகழ்ச்சிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சர் சி. பி. ராமசாமி அய்யர் தலைமை வகித்தார். தமிழிசைச் சங்கத்தை 1943இல் நிறுவி அதன் தலைவராகவும் இருந்த அண்ணாமலை செட்டியார் 1881 செப்டம்பர் 30 அன்று சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் பிறந்தார். இவர் உருவாக்கியதே அண்ணாமலை பல்கலைக்கழகம். சென்னை மாநகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரைக் கௌரவப்படுத்த இந்திய அஞ்சல் துறை தபால்தலை வெளியிட்டுள்ளது. அண்ணாமலைச் செட்டியார் பர்மா, பிரெஞ்சு, இந்தோ சீனா போன்ற நாடுகளில் இருந்த இந்தியர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து முயற்சி எடுத்தவர். அதன் காரணமாக 1935இல் இந்தியப் பிரதிநிதியாக லண்டனுக்கும் பாரிஸுக்கும் போய் வந்தார். 1921இல் இம்பீரியல் வங்கியின்(தற்போதைய பாரத ஸ்டேட் வங்கி) தொடக்கத்தில் அதன் கவர்னராக இருந்துள்ளார். இந்தியன் வங்கியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு இவருக்கு. 1948 ஜூன் 15இல் இவர் காலமானார்.

 ராஜா சர் முத்தையா செட்டியார்



சென்னை ரிப்பன் கட்டடத்தில் இவருக்கு வெங்கலச்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அக்டோபர் 27, 1994 அன்று முதல்வர் ஜெ.ஜெயலலிதா திறந்துவைத்த சிலை இது. சிற்பி கோ.மோகன்தாஸ் உருவாக்கிய சிலை இது. இவர் 1905, ஆகஸ்ட் 5இல் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் பிறந்தார். 1922இல் சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் குடும்ப வியாபார சம்பந்தமாக பர்மா சென்றார். மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். 1929இல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினரான இவர் 1933- 34இல் சென்னை மேயரானார். பூண்டி நீர்த்தேக்கம் அமைவதற்கு இவரும் உதவினார். இவருடைய முயற்சியால் சென்னை மாநகராட்சியின் சார்பில் குறைந்த சக்தி கொண்ட வானொலி நிலையம் அமைக்கப்பட்டது. தென்னிந்திய வர்த்தக சபையின் உறுப்பினராக இருந்தார். 1941இல் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்வி மீது ஆர்வம் என்பது இவரது பரம்பரை வழக்கம்.  மீனாட்சி கல்லூரியை உருவாக்குவதில் தந்தையாருக்கு துணை புரிந்தார். சட்டப்பேரவை உறுப்பினர் நீதிக்கட்சியின் தலைவர் என தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டபோதும் கல்வி மீது இவருக்கு ஆர்வம் தொடர்ந்திருந்துவந்தது. 1936இல் கல்வி, மக்கள்நலவாழ்வு, சுங்க துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.  அப்போது ஓராண்டு வரை சென்னை பல்கலைக்கழகத்தின் கௌரவ வேந்தராகவும் இருந்தார். 1937 - 39 ஆம் ஆண்டுகளில் ராஜாஜி முதல்வராக இருந்தபோது இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். பச்சையப்பா அறக்கட்டளையில் நிர்வாகக் குழுவில் 33 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார். சென்னை ஐஐடியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்தார். 1941இல் சர் பட்டம் பெற்றார். 1948இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கௌரவ வேந்தரானார். தமிழ் மொழி, தமிழிசை, தமிழ் இலக்கியம், தமிழ்க் கலாச்சாரம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 1973இல் இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் பட்டமளித்தது. 1979இல் தமிழக அரசிடமிருந்து தமிழிசைக் காவலர் என்னும்  பட்டம் பெற்றிருந்தார். 1984 மே 12இல் இவர் காலமானார். இந்திய அரசாங்கம் 1987 டிசம்பர் 21இல் இவரது நினைவாக தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது.


பெ.தெ.லீ. செங்கல்வராய நாயக்கர்



சென்னை ராஜாஜி சாலையில் மெட்ரோபாலிடன் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் அருகே செங்கல்வராய நாயக்கர் சிலை உள்ளது. மார்பளவுக்கான இந்த வெங்கல சிலையை பிப்ரவரி 23, 2006 அன்று நீதியரசர் கே எம் நடராஜன் திறந்துவைத்தார். செங்கல்வராய நாயக்கர் 1886இல் ஆரம்பித்த டிரஸ்ட் பல கல்வி சேவைகளைப்  புரிந்துவருகிறது. 1829இல் பிறந்த இவர் 1874இல் காலமானார். இவர் தன் சொத்துக்களை அறக்கட்டளையாக்கி வன்னிய மக்களின் கல்விக்காக என உயில் எழுதி வைத்துள்ளார். இந்த அறக்கட்டளை 1886இல் ஏற்படுத்தப்பட்டது. 


சமநீதிகண்டசோழன்



மெட்ராஸ் உயர் நீதிமன்ற வளாகத்தில் மனுநீதி சோழனின் பிரம்மாண்டமான சிலை நிறுவப்பட்டுள்ளது. 1996 இல் மெட்ராஸ் சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதும் உயர் நீதிமன்றம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்றே அழைக்கப்படுகிறது. இச்சிலையைத் திறந்துவைத்தவர் தமிழக ஆளுநர் பி.சி.அலெக்ஸாண்டர். உயர் நீதிமன்றத்தின் 125ஆவது ஆண்டுவிழாவை நினைவுகூர்வதற்காக இது நிறுவப்பட்டுள்ளது. 

தன் மகனால் இறந்த பசுவின் துயரத்தைக் காணப் பொறாமல் அதே துயரம் தனக்கும் கிடைக்கச்செய்வதே சரியான நீதி என்றெண்ணி தனது மகனை தேர்க்காலில் மாட்டச்செய்து இறக்கச் செய்தான் மனுநீதிச் சோழன். இவனது சிலை நீதிமன்றத்தில் இருப்பது சரியான நீதியை உணர்த்தவே.   

சனி, ஜூன் 11, 2011

சிலைகளின் சரித்திரங்கள்

வ.உ.சிதம்பரம் பிள்ளை
சென்னை துறைமுக பொறுப்புக் கழக மைய வளாகத்தின் முன்னே நிறுவப்பட்டுள்ளது வ.உ.சியின் சிலை. 1968இல் உலக தமிழ் மாநாடு நடைபெற்றபோது காமராஜர் சாலையில் சிலைகள் வைக்கப்பட்டன. அப்போது வைக்கப்பட்ட சிலைதான் இதுவும். 1968, ஜனவரி 2 அன்று அப்போதைய உணவு, வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.மதியழகன் தலைமையில் தமிழ்வேள் பி.டி.ராஜன் திறந்துவைத்தார் இச்சிலையை. 


வ.உ.சி.
வ. உ. சிதம்பரம்பிள்ளை செப்டம்பர் 5, 1872இல் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் பிறந்தார்.  சட்டக்கல்வியைத் திருச்சியில் பெற்று 1895இல் வழக்கறிஞரானார். உரிமையியல், குற்றவியல் ஆகிய சட்டத் துறைகளில் சிறந்து விளங்கிப் பொருள் குவித்தார். விவேகபானு என்கிற மாத இதழை நடத்திவந்தார். 

வ.உ.சி கைத்தொழில்சங்கம், தருமசங்கம், நூல்நூற்பு நிறுவனம், தேசியப் பண்டகசாலை ஆகியவற்றை நிறுவி சுதேசியம் வளர்த்தார். பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனத்தைப் பறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்திகாகப் பாடுபட்டார். ஆங்கிலேய  கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக, 1906ஆம் ஆண்டு “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்கிற சங்கத்தை நிறுவி அதன் செயலாளர் ஆனார். அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார். அந்தக் கம்பெனியின் சார்பில் காலியா, லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார்.

தொடர்ந்த இவருடைய சுதந்தரப் போராட்ட நடவடிக்கைகளால் எரிச்சலடைந்திருந்த ஆங்கிலேய அரசு, 1908ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று விபின் சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவுசெய்து, அரச நிந்தனைக்கு 20 ஆண்டுகள், சுப்ரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள், மொத்தம் 40 ஆண்டுகள். அதுவும் அந்தமான் சிறையில் என இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தது.  தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே. அந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போது அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. அங்கே தான் செக்கிழுக்க வைக்கப்பட்டார். தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு 1986இல் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது இவருடைய பெயர் தான் அந்த மாவட்டத்துக்கு வைக்கப்பட்டது. இந்திய அரசும் இவரைக் கௌரவித்து அஞ்சல் தலை வெளியிட்டிருக்கின்றது. நவம்பர் 18, 1936 இல் வ.உ.சி காலமானார்.

இராஜகோபாலாச்சாரியார்
சென்னை பாரிமுனையில் உயர் நீதிமன்ற வளாகத்தையொட்டி நிறுவப்பட்டுள்ளது ராஜாஜியின் முழு உருவச் சிலை. இதை 1978, டிசம்பர் 24 அன்று இந்திய துணை ஜனாதிபதி பி.டி.ஜாட்டி திறந்துவைத்தார். அந்நிகழ்ச்சிக்கு ஆளுநர் பிரபுதாஸ் பி பட்வாரி முன்னிலை வகித்தார்; முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.


மூதறிஞர் ராஜாஜி

ராஜாஜி 10 டிசம்பர், 1878இல் சேலம் மாவட்டத்தில் தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரஸில் பெரும் பங்கு வகித்தவர். 1952 வரையில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட மதராஸ் (சென்னை) மாகாணத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.

இராஜாஜியின் கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. 1900இல் தமது வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார்.பின்னர் அரசியலில் ஈடுபட்டு சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகரதந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்திச் சிறை சென்றார். 1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார். 1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1947 முதல் 1948வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். மாநிலங்கள் சீரமைப்பிற்கு முன்பான சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1954வரை பதவிவகித்தார்.  1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.  நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர்.

ராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி, இரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான “குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா” இவர் இயற்றிய பாடலே. 1954ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது பெற்றார். 1972, டிசம்பர் 25அன்று தமது 94ஆவது வயதில் காலமானார் இவர்.

உ. வே. சாமிநாதய்யர்

சென்னை மாநிலக் கல்லூரியில் உ.வே.சாமிநாதய்யரின் சிலைநிறுவப்பட்டுள்ளது.     உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் சுருக்கமாக உ.வே.சா பிப்ரவரி 19, 1855 அன்று கும்பகோணமருகே உத்தமதானபுரத்தில் பிறந்தார். இவரது தந்தையாரான வேங்கட சுப்பையர் ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசையையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் அவர் 17 வது வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதினத்தில் தமிழ் படிப்பித்துக்கொண்டிருந்த புகழ் பெற்ற தமிழறிஞர் மகாவித்துவான் என அழைக்கப்பட்ட திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழை 5 ஆண்டுகளாக பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதையர் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டு பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சா குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும் செழுமையையும் அறியச் செய்தார். உ.வே.சா 90 க்கும் கூடுதலான புத்தகங்களை அச்சுப்பதிப்பதித்தது மாத்திரமன்றி 3000 க்கும் கூடுதலான ஏட்டுச்சுவடிகள், கையெழுத்தேடுகளைச் சேகரித்தும் இருந்தார்.


உ.வே.சாமிநாதய்யார்
இராமசாமி முதலியார் என்பவரே  பின்னை நாட்களில் உ.வே.சா ஏட்டுசுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சேற்றும் பணியே மேற்கொள்ள கால்கோலியவர். இவரால் உ.வே.சாவுக்கு கையளிக்கப்பட்ட சீவக சிந்தாமணி எனும் சமண இலக்கியத்தின் செழுமை அக்காலகட்டத்தில் சமயக்காழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களை பற்றி அறியும் ஆவலையும் அதை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் அவருள் தூண்டியது. பலவிதமான சமண இலக்கியங்களைத் தேடி சேகரித்தார். 1887இல் சீவக சிந்தாமணியை பதிப்பித்து வெளியிட்டார். அடுத்து பத்துப்பாட்டு வெளிவந்தது. இவ்வாறு தொடக்கம் பெற்ற உ.வே.சாவின் தமிழ் இலக்கியங்களின் மூலச் சுவடிகளை தேடி சேமித்து, பகுத்து, பாடபேதம் கண்டு, தொகுத்து வழுநீக்கி அச்சிலேற்றும் பணியானது அவர் 84 வயதில் காலமாகும் வரை தொடர்ந்தது. இதற்காக அவர் பல ஊர்களில் ஏட்டுச் சுவடிகளை தேடியலைந்து கிடைத்தவற்றை அச்சேற்றினார்.


உ. வே. சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்பு முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார். இந்திய அரசு பிப்ரவரி 18, 2006இல் இவரது நினைவு அஞ்சல் முத்திரை வெளியிட்டுள்ளது. உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950ல் தனிப் புத்தக வடிவம் பெற்றது. ஏப்ரல் 28, 1948அன்று காலமானார் உ.வே.சா.

சனி, ஜூன் 04, 2011

அழகர்சாமியின் குதிரை


பிரச்சாரப் பொதி சுமக்கும் மரக்குதிரை 



கிராமியக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படமான அழகர்சாமியின் குதிரைக்கு இசையமைக்க ஹங்கேரி இசைக் குழுவைச் சார்ந்த ஐவர் இளைய ராஜாவால் அழைத்துவரப்பட்டிருந்தனர் என்னும் தகவல் இப் படத்தின் மீது சிறு ஈர்ப்பை உருவாக்க, உலகத் திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்படுவதற்காக இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதை அதிகப்படுத்த ‘இந்தப் படத்தின் இசையைக் கேட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்காவிட்டால் நான் இசையமைப்பதையே நிறுத்திவிடுகிறேன்’ என்ற இளையராஜாவின் அதிரடி அறிவிப்போ குதிரை இதுவரை நாம் அனுபவித்தறியாத, பயணப்பட்டிராத ஏதோ ஒரு புதிய உலகிற்கு நம்மை அழைத்துச்செல்லக்கூடும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியதால் மிகுந்த ஆர்வத்தோடு கவனத்தை எல்லாம் ஒருமுகப்படுத்தி அந்தப் பரவச அனுபவத்திற்காகக் காத்திருக்க நேர்ந்தது.  

மூன்றாண்டுகளாக அழகர் கோவில் திருவிழா நடைபெறாத காரணத்தால் மழை தண்ணீரின்றிப் பஞ்சத்தால் மல்லையாபுரம் ஊர் வாட, பிழைக்க வழியற்ற மக்கள் குழந்தைகளைத் திருப்பூர் பனியன் கம்பனிக்கு வேலைக்கனுப்பும் வறட்சியான சூழலைப் பிரதிபலிப்பதாகப் படம் தொடங்குகிறது. திருவிழா நடத்தினால்தான் ஊருக்கு விமோசனம் என்று கோடாங்கி குறி சொன்னதால் விழா எடுக்கும் உறுதியோடு வரி வசூலித்து வரும் தருணத்தில் அழகரைச் சுமந்து செல்லும் வாகனமான மரக்குதிரை காணாமல்போகிறது. தங்களது திருவிழாக் கனவின் முக்கியக் கண்ணி அறுபட்டதை உணர்ந்த கிராம மக்கள் குதிரையைக் கண்டு பிடிக்கப் போராடுகின்றனர். காவல் நிலையத்தில் புகார் அளிப்பதோடு மலையாள மந்திரவாதியை அழைத்து வெற்றிலையில் மை போட்டுப் பார்க்கின்றனர். மரக்குதிரைக்குப் பதில் நிஜக் குதிரை ஒன்று கிடைக்கிறது. மற்ற படங்களில் இருந்து இது மாறுபட்டதோ என்னும் எண்ணத்தை ஏற்படுத்தும் திருப்பம் இது.

அழகரின் திருவிழாவிற்கு அழகரே தந்த பரிசது என்ற மாந்திரீகவாதியின் பொய்வாக்கை உண்மையாக நம்பிய மக்கள் அதை அழைத்துவந்து திருவிழா கொண்டாட்டத்தில் மீண்டும் ஈடுபடுகிறார்கள். குதிரை வந்துசேர்ந்த நேரம் ஊரில் நல்ல நிகழ்வுகள் பல நடந்தேறுகின்றன. இந்தச் சமயத்தில் காணாமல்போன குதிரையைத் தேடி வந்துவிடுகிறான் அதன் சொந்தக்காரன். மீண்டும் திருவிழா தடைபட்டுவிடுமோவெனும் பயத்தில் குதிரையை அவனிடம் ஒப்படைக்க மறுக்கும் ஊர்க்காரர்களுக்கும் குதிரை இல்லாவிடின் தனக்கு நடைபெற இருக்கும் திருமணம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் எப்பாடுபட்டாவது குதிரையைக் கொண்டுபோய்விட வேண்டுமென்பதில் குறியாய் இருக்கும் உரிமையாளனுக்கும் இடையில் நாட்டாமை செய்யும் உள்ளூர் போலீஸார் திருவிழா முடியும்வரை அவனை அந்தக் கிராமத்தில் தங்கியிருக்கும்படியும் அதன் பின்னர் அவன் குதிரையை அழைத்துக்கொண்டு கிளம்பலாம் என்றும் கூற அதற்குச் சம்மதித்தவன் அங்கேயே தங்குகிறான். இறுதியில் குதிரை அவனுக்குக் கிடைத்ததா அவனது திருமணம் நடந்ததா போன்ற கேள்விகளுக்கு விடையாய் விரியும் திரைக்கதையினூடே உயர்சாதி பையனுக்கும் தாழ்ந்த சாதி பெண்ணுக்குமான பிரச்சாரக் காதல் ஒன்றும் ஊடுசரடாகப் புரள்கிறது. 


சற்று வித்தியாசமான கதை மாறுபட்ட பாதையில் பயணிக்கும் என்னும் பார்வையாளனின் எதிர் பார்ப்பு படம் தொடங்கிய பத்திருபது நிமிடத்திற்குள் நீர்த்துப் போய்விடுகிறது. சாதி, கடவுள் மறுப்புக் குறித்த பிரச்சார நெடியடிக்கும் காட்சிகளும் கோனார் தமிழ் உரை போன்று விளக்கங்களை அள்ளித் தெளித்து தொடர்ந்து முன்னேறும் வளவளா வசனங்களும் படத்தோடு பார்வையாளனை ஒன்றவிடாமல் பார்த்துக்கொள்கின்றன. நகைச்சுவை என்னும் பெயரில் மேற்கொள்ளப்படும் அரைவேக்காட்டுத் தனங்கள் வேறு பாடாய்ப்படுத்துகின்றன.

1982ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில் நடைபெறும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்தைத் திரையில் காட்சியாகக் கொண்டு வருவதற்காக அப்போதைய காசு பணம் முதற்கொண்டு அவ்வாண்டில் அறிமுகமான சத்துணவுத் திட்டம் வரையிலும் காட்சிப்படுத்தியதோடு ஓரிரு காட்சியின் பின்னணியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் தமிழ்ச்சேவையை ஒலிக்கவிட்டிருக்கின்றனர். புரோட்டாக் கடையில் மதிநுட்ப மிக்க சிறுவன் பிரபு சாப்பிடும் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும் திசை மாறிய பறவைகள் படத்தில் இடம்பெற்ற ‘கிழக்குப் பறவை மேற்கில் பறக்குது அது கிழக்கு வானை மறைக்கப்பார்க்குது’ பாடல் அச்சசல் தமிழ்ச்சேவை பாடல். 

சவ்வு மிட்டாயைக் கையில் வாட்ச் போல் கட்டுவது, வை ராஜாவை சூதாட்டம், டைனமோவில் மஞ்சள் துணியும் இரு சக்கரங்களின் நடுவிலும் கலர் பூவும் சுற்றிய சைக்கிள், பேப்பர் விசிறி, வில்வண்டி, தந்தை தைத்துத் தரும் தொளதொளா சட்டை போன்ற எண்பதுகளை நினைவூட்டும் பொருள்களாலும் சம்பவங்களாலும் காட்சிகளைப் பூசி மெழுகியுள்ளனர். இத்தகைய மெனக்கெடல்கள் படத்திற்கு விழுதுகளாயிருக்கின்றன. ஆனால் உயிரோட்டமான காட்சியமைப்புகளும் ஜீவன்மிக்க வசனங்களும் தாம் படத்தின் இயல்பான பயணத்தில் பார்வையாளர்களை அரவணைத்து உடன் அழைத்துச் செல்லும். தட்டையான காட்சியமைப்புகளும் தொலைக்காட்சித் தொடருக்கென எழுதியது போன்ற வசனங்களும் பார்வையாளனைப் படத்தின் அருகில்கூட வரவிடாமல் துரத்துகின்றன. 


காணாமல்போன தனது குதிரையைக் கண்ட ஆனந்தத்தில் சைக்கிளை அப்படியே விட்டுவிட்டு ஓடிவரும் அழகர்சாமியின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் காவல்நிலைய வாசலிலும் சைக்கிளை நிறுத்த முயலாமல் அப்படியே போட்டுவிட்டு ஓடும் பதற்றத்திற்கான காரணம் பிடிபடவில்லை, அதைவிடக் கொடுமை கிராமத்தானுக்குக் கைதிக்கும் போலீஸுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன, நேரடியாகச் சென்று கைதியிடமா முறையிடுவான்? எண்பதுகளில் இவ்வளவு அப்பாவியான மனிதர்கள் இருந்தார்களா என்ன? தான் தொலைத்த குதிரையைக் கண்டுபிடித்து அதைக் குழந்தையைப் போல் கொஞ்சி முடித்து அதை அவிழ்த்துப்போக முற்படும் சமயத்தில் ஊரார் ஒன்றுதிரண்டு அழகர்சாமியை மொத்து மொத்தென்று மொத்தும்போது நமது இதயம் படபடக்கவில்லையே, சிறு வேதனைகூட வரவில்லையே? எந்த ஒரு காட்சியிலும் கதாபாத்திரங்களின் உணர்வு பார்வையாளனுக்குள் கடத்தப்படவே இல்லை. இசையும் காட்சிகளும் வெவ்வேறு அடுக்கிலிருக்க இரண்டுக்கும் நடுவில் உள்ளீடாக நிரம்பியுள்ள வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்புவது? 

திருடன் ஒருவனை அடித்துத் துவைத்த ஊர் மக்கள் அவனைக் கட்டிப்போட்டுவைத்திருக்க, அவனருகிலே கொஞ்சம்கூட இரக்கமற்றுக் காவலர்கள் இருவரும் பெருந்தீனி தின்க, அதைக் கண்ட அழகர்சாமி திருடன்மேல் பரிதாபப்பட்டு ‘அண்ணன் பசிக்குதாண்ணன்’ எனக்கேட்டு அவனுக்கென அந்த அக்காவிடம் சோறு வாங்கிக் கொண்டு வருவதில் வெளிப்படும் மனிதநேய உணர்வை ஓரளவு உள்வாங்கிக்கொள்ள முடிகிறது, ஆனால் அந்தத் திருடனை அன்புப் பிரவாகத்தோடு ‘திருடண்ணன்’ என அவன் விளிக்கும்போது வசன கர்த்தாவின் கைவிரல்களை மானசீகமாக முத்தமிட்டு அடங்குகின்றன இதழ்கள், என்னவொரு பரிவு! இறுதியாகக் குதிரையை பிடித்துக் கொண்டு அழகர்சாமியை ராமகிருஷ்ணன் கிளம்பச் சொல்லும் சமயத்தில் அதை மறுத்துத் திருவிழா முடியும்வரை தான் போகப் போவதில்லை, இந்தத் திருவிழாவை நம்பி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை எடுத்துரைத்து ஊர் மக்களின் சந்தோஷத்திற்காகத் தன் வாழ்க்கை பற்றிய கவலை இன்றி முடிவெடுக்கும் அழகர்சாமியிடமிருந்து பொங்கிப் பாயும் நல்லுணர்வு திரையை நனைத்துவிடுமோ என்னும் அளவுக்கு அச்சத்தை உருவாக்குகிறது. எண்பதுகளில் மனிதர்கள் எவ்வளவு உயர்வான குணநலன்கள் கைவரப்பெற்றிருந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை உணரும் தருணத்தில் கண்கள் தாமாகக் கண்ணீர் உகுக்கின்றன.  

அழகர்சாமியின் குதிரைக்குத் தான் எத்துணை அறிவு? தன் எஜமானனை அடிக்கும்போது துன்பமிகுதியால் கணைக்கிறது, ஊரைவிட்டு யாருக்கும் தெரியாமல் சென்றுவிடலாம் என அழகர்சாமி அழைக்கும்போது நல்லுணர்வின் காரணமாக மறுத்துவிடுகிறது, கடைசியில் எஜமானனைக் காப்பாற்றுவதற்காகத் தீமை புரிந்தவர்களை வதம்செய்து நன்மையை நிலைநாட்டி எல்லாம் உணர்ந்த ஞானிபோல் அமைதியாக மண்டபத்தில் வந்து அமர்ந்துவிடுகிறது. அழகர்சாமிக்கும் குதிரைக்கும் இடையிலான ஆத்மார்த்த உறவுக்கான காட்சிகள் சரியாக வளர்த்தெடுக்கப்படாமல் மேம்போக்கானவையாகச் சுருங்கிவிட்டன.  எனவே தேவர், ராம நாராயணன் போன்றோரது திரைப் படங்களை மட்டுமே நினைவூட்டிச் செல்கிறது இந்த மாற்றுப்படக் குதிரை. 

தேனிக்கருகில் இருக்கும் இந்த மல்லையாபுரத்துப் பெண்கள் கடின உழைப்பாளிகளாகவே இருக்க வேண்டும். பெரும்பாலான காட்சிகளில் பெண்கள் வீதிகளில் துணி துவைத்துக்கொண்டோ பாத்திரம் கழுவிக்கொண்டோ இருக்கிறார்கள். திருவிழா சமயத்து இரவில் மாவு இடிப்பதும் இட்லிக்கு மாவாட்டுவதும்கூடத் தெருவில்வைத்துத்தான். அந்த மைனருக்குப் பெண்களை மடக்குவதைத் தவிர வேறு வேலையே இல்லை போல. ஆனாலும் படத்தில் எந்தப் பெண்ணையும் அவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தவில்லை. பெண்கள் அனைவரும் அவரின் கண்ணசைவுக்கு மயங்கி விருப்பத்தோடு தங்களை மைனரோடு இணைத்துக்கொள்ளும்போது அழகர்சாமியின் குதிரை மைனரை மட்டும் தாக்குவது அதிலும் தவறுக்கு முக்கியக் காரணமாக இருந்த ஆதார சுருதியின் வேரறுத்தது ஓரவஞ்சனையில்லையா?

பெண் பார்க்க வந்த அன்று அழகர்சாமி, குதிரையிடம் இவ்வளவு அழகானவள் தனக்கு மனைவியாக வர வேண்டாம், தன்னைப் போல் தானே அந்தப் பெண்ணுக்கும் வரக்கூடிய கணவன் குறித்தான கற்பனை இருக்கும், தன்னால் அது தகர்ந்து போய்விடக் கூடாது என்று கூறுவதைக் கேட்ட மாத்திரத்தில் அவனை முழுமனத்தோடு ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிட்டாளே அந்தப் பெண் ராணி! சாத்தியம் தானா அது என்னும் சந்தேகம் எழுவதைத் தடுக்க முடியவில்லை. அதன் பின்பு ஒருமுறை அவளைத் தொட்டுப்பார்க்க அனுமதி கேட்டு தொட்டதால் உற்சாகம் கொள்கிறான் அவன். இந்த வெகுளித் தனத்தில் தன் மனத்தைப் பறி கொடுத்திருப்பாளோ என்னவோ! குதிரை காணாமல்போய் விட்டதைக் கூற வந்திருக்கும் அழகர்சாமிக்கு ஆறுதல் தருவதோடு அவன் பூ வைத்த தினத்திலிருந்து அவனையே புருஷனாக எண்ணி வாழ்ந்துவருவதாகவும் குதிரையுடன் வராவிட்டால் செத்துவிடுவதாகவும் சொல்லும் காட்சியின் - குதிரை திரும்பக் கிடைத்தால் அழகர்சாமியை இந்தப் பெண் மணமுடிக்க வேண்டியதிருக்குமேவெனும் பயம் பார்வையாளனைப் பதைபதைக்க வைக்கிறது - முடிவில் கேமரா கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து உச்சிக் கோணத்தில் வந்து நிற்கிறதே. இந்த இடத்தில் உயர்ந்து நிற்பது பெண்மையின் பெருமையா திரைப்படத்தின் தரமா என்பதைக் கணிக்க இயலாமல் தடுமாறிப் போய் விடுவான் பார்வையாளன். கிராமத் தலைவரின் மகனும் கோடாங்கியின் மகளும் ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட தகவலைக் கேட்ட மாத்திரத்தில் இனி இந்த ஊரில் மழையே பெய்யாது என அவர் அளிக்கும் சாபத்திற்காகவே காத்திருந்ததுபோல் கொட்டித் தீர்த்துவிடுகிறதே அந்த முற்போக்கு மழை. உணர்வுக்கும் எதிர்வினைக்குமான கால அவகாசமே தரப்படாததால் செயற்கையானதாக மாறிவிடுகிறது அந்த மழை.


நல்லவன் வாழ்வான் தீயவன் அழிவான் என்று காலகாலமாய்ச் சொல்லப்படும் அதே கருத்தை உணர்த்துவதில் என்ன புதுமையைக் காண முடிகிறது என்பதே புரியவில்லை. அசலான கிராமம் என்னும் பெயரில் எதார்த்தத்தோடு எந்தவகையிலும் ஒட்டாத கதா பாத்திரங்கள் குறுக்கும் நெடுக்கும் வந்துபோகும் செயற்கையான கிராமம் தமிழ் சினிமாவின் அடிப்படைக் குணத்தில் எந்த மாற்றமுமின்றி வந்து செல்கிறது. தொடர்ந்து தமிழ்த் திரைப்படம் பார்க்கும் யாராலும் எளிதாகச் சொல்லிவிட முடியும் அந்தக் குதிரையின் சொந்தக்காரனது பெயர் கண்டிப்பாக அழகர்சாமியாகத்தான் இருக்கும் என்பதை. அவனுக்கு வேறு ஒரு பெயரை வைக்கக்கூடத் துணியாமல் தமிழ் சினிமாவின் எந்தச் சூத்திரத்தையும் கொஞ்சம்கூட மாற்றாமல் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை மாற்றுப்பட வரிசையில் வைத்துப் பார்க்க முயலும்போதுதான் இதன் அசல் தன்மை குறித்து ஆராய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. 1977இல் வெளியான 16 வயதினிலே, 1978இல் வெளியான முள்ளும் மலரும், 1979இல் வெளியான உதிரிப்பூக்கள் போன்ற படங்களில் கண்டுணர்ந்த அசல் கிராமத்தையும் மனிதர்களையும் அவர்தம் உணர்வுகளையும் 2011இல் வெளியாகியுள்ள 82இல் நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்கிய இந்த அழகர்சாமியின் குதிரையில் தரிசிக்க முடியாததன் ஏக்கம் படிப்படியாக வளர்ந்து இறுதியில் திரையரங்கைவிட்டு வெளியில் வருகையில் இந்தப் படத்தின் மீதான எதிர்மறை உணர்வைக் கொண்டுவந்து சேர்க்கிறது.   

ஒப்பனையற்ற, ரத்தமும் சதையுமான அசல் மனிதர்களைக் காட்டி விட்டாலே அது தமிழ் வாழ்வு, தமிழர் கலாச்சாரம் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் நல்ல படம் போன்ற பாசாங்கைக் கொண்டிருக்கும் படங்களையும் மாற்றுத் திரைப்பட வரிசையில் வைக்கத் துணிவதென்பது தமிழ்த் திரைப்படம் குறித்த நமது குறை மதிப்பீட்டைக் காட்டுவதாக அமைந்துவிடும். அத்தகைய ஒரு முடிவு ஒருபோதும் திரைப்படங்களுக்கோ இயக்குநர்களுக்கோ வலுச் சேர்ப்பதாக அமையாது. அங்காடித் தெரு, நந்தலாலா போன்ற பாசாங்குப் படங்கள் வரிசையில் ஒன்றாகத் தன்னையும் இணைத்துக்கொண்டுவிட்டது இந்த அழகர்சாமியின் குதிரை. 

(காலச்சுவடு ஜூன் 2011 இதழில் http://kalachuvadu.com/issue-138/page73.asp பிரசுரமாகியுள்ள விமர்சனம் இது.)   

வெள்ளி, மே 13, 2011

தலைசாய்க்கஇடமில்லை ...


பல வருடங்களுக்கு முன்பு எழுதிய சிறுகதை இது. வாசிக்கத் தொடங்கிய உடன் எழுதும் அரிப்பு ஏற்பட்டதால் எழுதினேன். இதெல்லாம் சிறுகதைன்னு ப்ளாக்ல போட்டுட்டான்... என்று யாராவது ஒருவர் திட்டக்கூடும் என்ற எண்ணம் வரத்தான் செய்கிறது ஆனாலும் அதையும் மீறி பதிவிட்டுள்ளேன்...

ஊரை விட்டுத்திரும்பும் நாள் வந்தது. ஏன்தான் வந்ததோ? அதற்குள் அப்படியென்ன அவசரம் என்றிருந்தது. எவ்வளவு நாள்கள் தங்கியிருந்தாலும் புறப்பட வேண்டிய நாள் நெருங்க நெருங்க அடிவயிற்றில் விளங்கவோ விளக்கவோ இயலாத கலக்கமோ பயமோ இரண்டும் கலந்ததை போன்ற உணர்வோ தோன்றும். வேதனை தரும். விரைந்து ஓடும் பொழுதுகள் தவழக்கூடாதா? ஏக்கங்கள் அநாவசியமானவை. ஆனாலும் எண்ணத்தை எப்படித் தடை செய்ய. 

அதிகாலை எழுந்து படுக்கையைச்சுருட்டும் போதே, வெளியில் வெளிச்சம் பரவிடினும் உள் மனதில் இருள் கவியத் தொடங்கியது. மிகப்பெரிய சந்தோஷத்தையும் ஒரு சாதாரணமான சிறிய வருத்தம் ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது. விடைபெறுதல் தரும் சோகங்களைச் சொல்லுக்கு இடம் மாற்ற முயற்சிக்கையில் மிஞ்சுவதும் சோகமே. எந்தச் சோகத்தையுமே முறையாக முழுமையாகப் பதிவு செய்கிறோமா? என மனத்தில் ஓர் எண்ணம் ஓடியது. உள்ளே உலவும் எண்ணங்களை எத்தனைப் பதமாக வெளியில் எடுக்க முயன்றாலும் கோணல் மாணலாகிவிடுகிறது. அவை ஓர்அழகென்று அப்படியே விட்டுவிடுதலே நிகழ்கிறது. 
எவ்வளவோ வேலைகளை முடிக்க நினைத்திருந்தும் எவையுமே முடிக்கப்படாததால் திருப்பதி மொட்டையாய் நின்றிருந்தது. சாயங்காலப் பொழுதுகளில் முற்றத்தில் அமர்ந்து இதமான காற்றை சுகமாக சுவாசித்தவாறு வாசிக்கவென கொண்டு வந்த புத்தகங்கள் வெளியில் எடுக்கப்படாத வேதனையால் புழுங்கின.
இம்முறை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென நினைத்திருந்த பள்ளிக்கூட காலத்து சிநேகிதன் பாலுவைக்கூட பார்க்கவில்லை. பள்ளி நாட்களில் இருவரும் ஒன்றாகத்தான் திரிவோம். எப்போதும் ஒன்றுபோல் திரிவதாலேயே அருகருகே அமர்ந்த எங்களைப் பிரித்துப் போட்ட ஆசிரியர் உண்டு. எட்டாங்கிளாஸ் காலத்திலேயே பெண்களுடன் நட்பை வளர்க்கத் தொடங்கினான். அதன் காரணமாக இப்போது அவனை மாமா என்றழைக்கும் குழந்தைகள் ஊரில் அதிகம்.
காலம் தான் எவ்வளவு விரைவாய் ஓடுகிறது! ஒரேவிதமான  சூழ்நிலைகளில் வளர்ந்த மனிதர்களையும் வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்து விட்டு எனக்கென்ன என்ற ரீதியில் ஓடிக்கொண்டிருக்கிறது. 
அரைசாண் வயிற்றை திருப்திப்படுத்த ஆரம்பித்த பெரும் போராட்டம் என்னை நகரத்து தார்ச்சாலைகளில் நிராதரவாய் விட்டுவிட்டது. கிராமத்து புழுதி பறக்கும் மாட்டுவண்டிசாலைக் கனவுகளை மனதில் தேக்கிக்கொண்டேன். புழுதிபடிந்த தெருக்களில் கிடைத்த நிம்மதியை பளிங்கு போன்ற சாலைகளில் தொலைத்துவிட்டேன். தத்தளித்தேன். கையில் கிடைத்த கட்டையைப் பற்றிக் கொண்டேன். தனம் தரும் கல்வியின் கொடையில் மாதாமாதம் சொற்ப வரும்படி கிட்டியது.
படிப்பைப் பாதியிலேயே துறந்து விட்டான் பாலு. பாவமோ? புண்ணியமோ? இருந்தால் பகவான் மட்டுமே அறிவார். பார்க்காத தொழிலில்லை அவனும். அவன் கையாண்ட வழிமுறைகளைக் கொண்டு 'ஒரே நேரத்தில் பல பெண்களைக் காதலிப்பது எப்படி? " எனுமொரு புத்தகம் எழுதியிருந்தாலே பெரும் பணக்காரன் ஆகியிருப்பான். எத்தனையோ பெண்களைக் காதலித்தும் அவர்களில் யாரையும் மணம் முடிக்காமல் வீட்டில் பார்த்த பெண்ணைத் திருமணம் முடித்துக்கொண்டான். புத்திசாலி. தற்போது சொந்தமாய் ஆட்டோ வாங்கி சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அவனே ராஜா, சேவகன் எல்லாம்.

ஓட்டிக்கு அடுத்தவன் காலைப்பிடித்து தொங்கவேண்டிய அவசியமில்லை. ' வந்து ஒரு மணி நேரம் ஆவுது... இன்னும் மெஷினத் தொடச்சு வேலய ஆரம்பிக்கல.... ஒன்னெல்லாம் வச்சு என்ன பண்ணித்தொலைய? " யார்மேலோ கொட்டப்பட வேண்டிய எரிச்சல் என் மீது கொட்டப்படும். எதிர்த்துக்கேட்க நா எழும். அடுத்துச் சுரக்கும் அமிலத்தை ஈடு செய்ய காரம் யார் தருவார்? எழுந்த நாக்கு ஒட்டிக்கொள்ளும்.
இத்தகைய தொந்தரவு அற்ற வாழ்வு. கொடுத்து வைத்தவன். நிம்மதியான சுவாசம். ஆனாலும் ஒழுங்காகப்படித்திருக்கலாம் என பார்ப்போரிடம் எல்லாம் புலமபுகிறானாம். இக்கரைக்கு அக்கரைப் பச்சை.
     
பேக்கில் கொண்டு போக வேண்டிய துணிமணிகள் மற்றும் சாமான்களை எடுத்து வைத்தேன். எப்படியும் ஏதாவது ஒன்று மறந்திருக்கும். பயணத்தின் போதோ மறந்து போனது தேவைப்படும் போதோ அது ஞாபகம் வரும். சுமை தயாராகிவிட்டது. எவ்வளவு காலம் இப்படிச் சுமைகளைச் சுமக்க வேண்டுமோ?
விடைபெற்றுக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினேன். எதிர்ப்பட்ட ஆட்டோவைக் கையைக்காட்டி நிறுத்த முயன்ற ஆசையை பொருளாதார நெருக்கடி இழுத்துப்பிடித்தது. பேருந்து நிலையம் நோக்கி சென்றேன். 
ரயிலில் போகலாமா? பஸ்ஸில் போகலாமா? குழப்பம் ஏற்பட்டது.    ' அங்க ஆக்ஸிடெண்ட்... இங்க ஆக்ஸிடெண்ட்ன்னு கேக்கும்போதெல்லாம் கொல பதறுது! சொன்னபடி கேட்டு பேசாம ட்ரெயின்லேயே போ. விதண்டாவாதம் பண்ணாத. "
அம்மாவின் குரல் செவிக்குள்ளே குறுகுறுக்க ரயிலிலேயே போகலாம் என முடிவு செய்தேன். 

இரயில் நிலையவரிசை. மிக நிதானமாக பயணச்சீட்டு வழங்கிக் கொண்டிருந்த ஊழியர் எனது பொறுமையை மல்லாக்கத் தள்ளிவிடுவாரோ எனப் பயந்தேன். நேரம் ஆகிக்கொண்டிருந்தது கூட்டமும் நடைமேடையில் அதிகமாகக் காணப்பட்டது. அதைப் பார்க்க எழுந்த எரிச்சல் ஊழியர் மேல் திரும்பியது. என் முறை வந்தது. சீட்டையும்  சில்லறையும் பெற்றுக்கொண்டு அவரை முறைத்து விட்டுத்திரும்பினேன்.
என்றைக்கும் இல்லாதவாறு இன்றைக்கு அதிக கூட்டம் தெரிந்தது. தன்மேல் விழுந்த வார்த்தைகளை யார்யார் மேலோ உதறியது வீசிக்கொண்டிருந்த காற்று. நான் மட்டுமே தனியே இருக்கிறேன் போல.எல்லோருடனும் யாராவது வழியனுப்ப வந்திருக்கின்றனர். என்னைத்தவிர எல்லோரும் ஏழாயிரம் எட்டாயிரம் சம்பாதிப்பார்கள் போலும். என்னுடனும் யாராவது வந்திருந்தால் இவர்களைப்போல மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்திருப்பேன். ஆறுதலான புத்தகத்தைப் பிரித்தேன். ரயில் வரும் முன்பு ஏற்பட்ட பரபரப்பு வாசித்தலை ஒத்திப்போட வைத்தது. 
முன்பதிவு செய்திருந்த புண்ணியவான்கள் முகங்களில் இருக்கை பற்றிய கவலைகளற்ற அமைதி படர்ந்திருந்தது. என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்க ஆர்வம் பொங்கியது. கண்ணாடியிருந்தாலும் கவனிக்கப்படுவதை அறிந்தால் பாவனையை மாற்றிக்கொள்ளுமே முகம் எனவும் தோன்றியது. 
ரயில் வந்து நின்றது. உள்ளுக்குள் ஏறி கிடைத்த இடத்தில் அமர்ந்தேன்;. வண்டி கிளம்ப, எல்லோரும் கையசைத்த நிலையில் விலகிக்கொண்டிருந்தனர். நான் யாரைப்பார்த்து கையசைக்க? விரல்களை எல்லாம் இறுக்கி மடக்கிக்கொண்டேன். இங்கே இருக்கை கிடைத்ததைப் போல் எளிதாக இருக்கை கிடைக்கப்போவதில்லை விருதுநகரில். இந்த ரயிலிலேயே வழக்கத்தைவிட அதிகமான கூட்டம். மாறயிருக்கும் ரயில் பற்றிய யோசனை நேரத்தை அரிக்க ஆரம்பித்தது
வெளிச்சத்தை உண்ண ஆரம்பித்தது இருள். ஆங்காங்கே சிதறிய உணவுத்துகளாய் மின்சார விளக்குகள் ஒளிர்ந்தன. ரயிலின் தடதடப்பு காதுகளில் மோதின. நான் கவனிப்பதைப் பொருட்படுத்தாமல் யாரையோ பற்றி கதையளந்து கொண்டிருந்த எதிர்வரிசைத் தம்பதிகளின் பேச்சில் மலையாள வாடை கசிந்து வந்தது.
மனிதர்களை அவர்கள் அறியாமல் கவனிப்பது தனி சுகம். யாரும் கவனிக்காத சூழலில் மனிதர்களின் செயல்பாடுகள் மிக இயல்பாக இருக்கும். மனதில் பழைய நினைவுகள் எழுந்தன. 
இரயில் கொடைரோட்டைத் தாண்டி விரைந்து கொண்டிருந்தது. அவ்வளவாகக் கூட்டமில்லை. மதுரையில் தன் மனைவி மற்றும் தம்பியோடு வண்டியேறிய மனிதர் அளவுக்கு மீறிய அசதியாய்க் காணப்பட்டார். உறக்கத்தின் கொடிய கரங்கள் அவரின் கண்களை அழுத்திப்பிடித்துக் கொண்டது. உட்கார்ந்த நிலையில் உறங்க முடியாமல் தவித்தவர் தரையில் நாளிதழை விரித்து ஏதோ ஒரு உலகம் சென்று விட்டார். ஆறு கண்களைத் தவிர அனைத்துக் கண்களும் திறந்திருக்க சோம்பல் கொண்டு மூடிக்கொண்டன. நான் உறங்காவிடினும் உறங்குவதைப் போன்ற பாவனை கொண்டேன். இதற்காகவே காத்திருந்ததைப் போன்ற நான்கு கண்களில் மிதமிஞ்சிய தாபம் தென்பட்டது.

தம்பியின் விரல்களிலிருந்து வெளிக்கிளம்பிய எறும்புக்கூட்டம், மனைவியின் மேனியெங்கும் சிதறிக் கிடக்கும் தேன்துளிகளை தேடித்தேடி மொய்த்தன. நான் விழுங்கிய எச்சிலில் காரணமற்ற கசப்புத்தன்மை தெரிந்தது. 
 
என்னெதிரே கச்சிதமான சித்திரத்தை இருக்க வைத்தது யாராய் இருக்கும்? அவளருகேயிருக்கும் ரயில் விட்ட புகை கொண்டு செய்த உருவமா? என்னமாய் இழைகிறாள் அவனிடம். தனித்தனியே ஒருமுறை கூட டீயோ காப்பியோ வாங்கவில்லை இருவரும.; அவள் கண்கள் தவறிப்போய்கூட பிசகவில்லை.
கருப்புச் சட்டையில் பட்ட வெண்புள்ளியை விட, வெள்ளைச்சட்டையில் பட்ட கரும்புள்ளி பளீரெனத் தானே தெரியும்!
                   
விருதுநகர்.
'சார் காபிய்ய்ய்....." ரப்பராய் நீண்ட குரல்;. கிட்டத்தட்ட லாமினேஷன் செய்த அளவு குறுக்கும் நெடுக்குமாய் செல்லோ டேப் பாய்ந்திருந்த ஐந்து ரூபாய் கைமாறி காஃபி வந்தது. வாங்கிய திரவத்தில் இனிப்பும், சூடும் இருந்தன.
'பயணிகளின் கனிவான கவனத்திற்கு...." சில நிமிடங்களுக்குப் பிறகு மாற வேண்டிய ரயில் நடைமேடைக்குள் வந்தது. எப்படியோ அடித்துப்பிடித்து வண்டிக்குள் ஏறிவிட்டேன். கம்பார்ட்மென்ட் முழுவதும் மனிதத் தலைகள். மக்கட்பெருங்கடல் பார்த்து மகிழும் நிலையில் மனதில்லை. கூட்டத்தைப் பார்க்கும் போது வெறுப்பு பொங்கியது. எல்லா இருக்கைகளும் அதிகப்படியான ஆட்களால் நிரம்பி வழிந்தது.
'சார்.... ப்ளீஸ்.... கொஞ்சம் தள்ளி உட்காருங்களேன்"னு யாரிடமும் வேண்டுகோள் வைக்க இயலாத நிலை. எல்லோரையும் இரக்கத்துடன் வருடிய பார்வை பயனற்றுத் திரும்பியது. கொஞ்சம் வசதியான இடத்தில் நின்று கொண்டேன். 
மதுரையில் யாரேனும் இறங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் கவனெமெல்லாம் இருக்கைகளில் பதிந்தது. ரயில் திருமங்கலத்தைத் தாண்டி விரைந்து கொண்டிருந்தது. ஓரத்தில் அமர்ந்திருந்தவரிடம் மதுரையில் யாராவது இறங்கப்போகிறார்களா என மெதுவாகக் கேட்டேன். அவர் பதில் எனக்கு ஆதரவாய் எனது காதில் மட்டுமே விழவேண்டும் என்ற  எண்ணம் பலித்தது. அப்பாடா! நின்ற சீர் நெடுமாறனாக நீண்ட நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை.
மதுரை.

இருக்கையில் அமர்ந்தேன். எதிர் இருக்கையின் கீழ்ப்புறம் பேக்குகளும், சூட்கேஸ்களும் புதுமணத் தம்பதிகளாய் இடைவெளியற்று நிறைந்திருந்தன. சாமான்களுக்கான பிரத்யேக மேலடுக்கு மனிதர்களைத் தாங்கிக் கொண்டிருந்தது. எனதிருக்கையின் அடியில் எனது பேக்கை வைத்தேன்.
எதிர் இருக்கைக் குடும்பத் தலைவர் நிம்மதியடைந்தார். நான் நிற்கும்போது எங்கே அவரைத் தள்ளி இருக்கச்சொல்லி வேண்டுகோள் வைத்து விடுவேனோ என்ற பயத்திலேயே பார்வையைக் கட்டாயமாக வேறு பக்கம் செலுத்தினார். இப்போது என்னைப் பார்த்தார். 
'எங்க சார் போகனும் நீங்க? "
     
'மெட்ராஸ் சார்."
'அவ்ளோ தூரம் எப்படி அன்ரிஸர்வ்ட்ல... ரிஸர்வ் பண்ணியிருக்கலாமே? "
'யோவ்! உனக்கிது அவசியமா... வேலயப் பாத்துட்டுப்போவியா... அதவுட்டுட்டு.... ஏன் ரிஸர்வ் பண்ணல? எதுக்குப் பண்ணல "ன்னு சொல்லாமல் 'எப்போதும் ரிஸர்வ் பண்ணிருவேன் இந்த தடவ கொஞ்சம் திடீர்னு கௌம்ப வேண்டியதாயிருச்சு. அதனாலதான். "
பொய். பச்சைப்பொய். ஒரேயொரு முறை தவிர எப்பொழுதுமே முன்பதிவு செய்து கொண்டதில்லை. அம்முறை ஏதோ ஆசையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டு செல்லலாமென நினைத்து முன்பதிவு செய்தேன். சாப்பிட்ட பின்பு படுக்கையில் படுத்தேன். புரண்டு புரண்டும் படுத்தேன். ஆனாலும் என்ன பிரயோஜனம்? கொட்டக்கொட்ட விடியும்வரை முழித்திருந்தது தான் மிச்சம். இரண்டு நாள் சம்பளத்தை காலிசெய்திருந்தது படுக்கைக்கான கட்டணம். அதை நினைக்கும் போதெல்லாம் வயிற்றெரிச்சல்தான்.
கால்கள் வலித்தன. ஒரேநிலையில் நீண்ட நேரம் வைத்திருந்த பாதிப்பு. இருக்கையின் அடியில் எனது பேக் இருந்ததால் உட்புறம் மடக்கி வைத்துக்கொள்ள முடியவில்லை. எதிரிலும் நீட்ட இயலாது. நடுவில் தரையில் ஒருவர் உறங்குகிறார். அவருக்கும் பேக்குக்கும் இடைப்பட்ட சொற்ப இடத்தில் எவ்வளவு நேரம் தான் கால்கள் தங்கும்? நீட்டவோ மடக்கவோ முடியாமல் குடைச்சல் பரவி தொந்தரவு தந்தது. சிறிது நேரம் இருக்கையில் தூக்கி வைத்து, முட்டியைச்சுற்றி கைகளால் பிணைத்து ஒடுங்கி உட்கார்;ந்தேன். இருக்குமிடத்தில் சம்மணம் நினைத்துப் பார்க்கவே இயலாது. 
நேரமாக ஆக உறக்கம் வேறு வந்து தொலைத்தது. எங்கேயாவது படுத்துறமாட்டமா... குறுக்கச்சாய்ச்சா சுகமாயிருக்குமே... என்றிருந்தது. கீழே படுத்திருந்தவர் திருச்சியில் இறங்க, அந்தயிடத்தில் படுக்க எத்தனித்தேன். விதி எதிரிலிருந்த குடும்பத் தலைவரின் குழந்தை ரூபத்தில் சதி செய்தது. இதுவரை இருக்கையின் உட்புறம் படுத்திருந்த குழந்தையை பெட்ஷீட் விரித்து கீழே படுக்க வைத்து விட்டார். இருந்த ஒரு கதவும் அடைக்கப்பட்டு விட்டது. இனி வழியேயில்லை. சென்னை வரை உறக்கத்துடன் போராடியே பயணிக்கவேண்டும்.
'சே... இன்னக்கி கௌம்பிய நேரமே சரியில்ல போல..."வென முணுமுணுத்தேன். நான் ஒருவன் மட்டுமே சரியான இடமின்றி உறங்க இயலாமல் அவஸ்தை அநுபவிக்கிறேன். எல்லோரும் கிடைத்த இடங்களில் நிம்மதியாய் உறங்குகின்றனர். இருந்தவாறே உறங்கும் ஒரு பிரகஸ்பதியின் குறட்டைச்சத்தம் ரயிலின் கூக்குரலையே போட்டிக்கு அழைக்கிறது. 
எப்படி இவர்களால் மட்டும் முடிகிறது? கொடுத்த வைத்த ஜென்மங்கள். வழக்கமாகப் படுக்கும் இடம் மாறினாலே தூக்கம் வராத துக்கமற்றவர்கள். தூங்கிக் கண்டார் சுகம் தூங்கிக் கண்டால்தானே புரியும். இப்போது கடவுள் தோன்றி, என்ன வேண்டுமோ கேள் என்றால் உறங்குவதற்கு ஓரிடம் மட்டும் போதுமென்றே சத்தியமாய் சொல்வேன்.
இருக்கக்கூட இடமில்லாத இந்த இக்கட்டான நேரத்தில் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வரும் தூக்கம் எத்தனை இரவுகளில் கண்ணாமூச்சு காட்டியிருக்கிறது. நாயைக் கண்டால் கல்லைக் காணோம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம். இதுதான் விதியின் விளையாட்டா?
விழுப்புரம் கடந்த பின்பு நெருக்கடி அதிகமாகியது. வேலைக்குச் செல்வோர் கூட்டம் வழிநெடுக ஏறினர். இரவின் இருள் மெதுமெதுவாக விலகி பகலின் வெளிச்சத்திற்கு இடம் விட ஆரம்பித்தது.
கூட்டம் பற்றிய எந்தக்கவலையுமின்றி அவரவர் பாட்டிற்கு எதையெதையோ பேசிக் கொண்டு வந்தனர். உரையாடல்கள் எவ்வித சுவாரசியமுமின்றி காதில் விழுந்தது.
இரவு முழுவதும் உறங்காத அசதியை உடம்பு உணர்ந்தது. கண்களில் தீராத எரிச்சல். எப்படியும் இன்று வேலைக்குப் போயாக வேண்டும். ஓய்வெடுக்க இயலாது. என்னடா பொழப்பு இது! எப்படா தாம்பரம் வரும் என்றாகிவிட்டது.  


வண்டி அனுராக் தியேட்டரைக் கடந்து வந்தது. அதன் முன்சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஆபாசச் சுவரொட்டி கண்ணில் பட்டது. இந்த எரிச்சல் மத்தியிலும் முதன்முதலில் பார்த்த ஆபாச படம் நினைவில் வந்தது. படம் பார்த்த அன்று உலகத்தில் யாருமே செய்யாத தவறைச் செய்தது போன்ற குற்றஉணர்வு இருந்தது. முதலில் இருந்த குற்றஉணர்வு தொடர்ந்த தவறுகளால் காணாமலே போய்விட்டது.
வண்டியின் வேகம் குறைந்தது.
'சிக்னலுக்காகப் போட்டிருக்கான்..." யாரோ கூறினார். சிக்னல் வேறு என்னைச் சீண்டியது. பேக்கை வெளியில் எடுத்தேன். வண்டி நகர்ந்து தாம்பரம் வந்தது. 
மக்களை மேனி தொட்டு விலக்கி இறங்கினேன். இறுதிவரை பயணச்சீட்டு பரிசோதகர் வரவேயில்லை. டிக்கெட் எடுத்தது அநாவசியமோவென நினைத்தது வெட்கம் கெட்ட மனது. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன். தலை முடியை அழுத்தமாக வாரிக்கொண்டேன். அழுக்கால் சீப்பின் நிறமே மாறிவிட்டது. அழுக்கெடுக்க வேண்டுமென நினைத்தவாறே நடக்க ஆரம்பித்தேன். 
இனிமேல் உயிர் போகும் அவசரம் என்றால் கூட இதைப்போன்ற அன்ரிஸர்வ்ட் கோச் பயணத்தை வைத்துக் கொள்ளவே கூடாது என நினைத்துக் கொண்டேன் எப்போதும் போல.      

வியாழன், மே 12, 2011

ஒரு சில சிலைகளும் தகவல்களும்


ஆர்.கே.சண்முகம் செட்டியார்

இராஜா அண்ணாமலை மன்றத்தில் நுழைகையில் எதிர்ப்படும் மார்பளவு சிலை ஆர் கே சண்முகத்தின் சிலை. இச்சிலையைத் திறந்துவைத்தவர் நாராயணசாமி. தமிழிசைச் சங்கத்தின் தலைவராக 1948முதல் 1953வரை இருந்துள்ளார் சண்முகம் செட்டியார். சுதந்தர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார். இவர் 1892 அக்டோபர் 10ஆம் நாள் பிறந்தார். பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் சுதந்தர இந்தியாவின் முதல் அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது அதில் காங்கிரஸ் கட்சியில் இல்லாத இருவர் பங்குபெற்றனர். ஒருவர் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்; மற்றவர் சட்ட அமைச்சர் அம்பேத்கர்.  


நிதியமைச்சராக இருந்த சண்முகம், ஒரே ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோயம்புத்தூர் திரும்பிவிட்டார். இவர் காங்கிரஸில் இருந்திருக்கிறார். பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்சினை வலுத்தபோது காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். நீதிக்கட்சியின் ஆதரவில் தேர்தலில் நின்றுள்ளார். பிறகு அந்தக் கட்சியுடனான தொடர்பை நீட்டிக்கவில்லை. பெரியாருடன் நெருங்கிய நட்பு பாராட்டி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்துள்ளார். ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் அந்த இயக்கத்திலிருந்து விலகியுள்ளார். அடிப்படையில் பெரியாரின் பிற சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்ட இவர், கடவுள் நம்பிக்கையை விடத் தயாராக இல்லை.

இந்தியாவுக்கு சுதந்தரம் வேண்டும் என்று கேட்டுப் போராடிய பலருள் இவர் இருந்திருக்கிறார். ஆனால் தெருவில் இறங்கிப் போராடி ஜெயிலுக்குப் போகவில்லை. கடைசிவரை ஆங்கிலேய அரசாங்க அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆனால் அதே நேரம், இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்று தன்னாட்சி அதிகாரத்துடன் விளங்க வேண்டும் என்பதில் இவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இந்திய நிதியமைச்சராக இருந்தபோது பிரிட்டன் இந்தியாவுக்குத் தர வேண்டிய பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட் சுமார் 1,500 கோடி ரூபாயைப் பெறுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். கோயமுத்தூர் பகுதியைத் தொழிற்சாலைகள் நிறைந்த இடமாக்கியதில் முக்கியமான பங்கு இவருக்கு இருந்திருக்கிறது. கொச்சி சமஸ்தான திவானாக 7 ஆண்டுகள் இருந்து, அந்த இடத்தில் பெரும் வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளார். தமிழிசை இயக்கத்தில் முக்கியமானவராக இருந்துள்ளார். ராஜா அண்ணாமலை செட்டியாருடன் சேர்ந்து தமிழிசை இயக்கத்தை ஆரம்பித்து, அண்ணாமலை செட்டியாருக்கு அடுத்து அந்த இயக்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்துள்ளார். அண்ணாமலைப் பலகலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து உரை எழுதியுள்ளார். தமிழ்க் கல்விக்காக பேரூரில் ஒரு கல்லூரி உருவாக்கியுள்ளார். தாழையூத்துவிலும் சங்ககிரியிலும் சிமெண்ட் தொழிற்சாலைகள் அமைய பெருமுயற்சி மேற்கொண்டு, அதற்கான உரிமமும் வழங்கியுள்ளார். 1920ஆம் ஆண்டு நீலகிரி தொகுதியின் எம்.எல்.சி ஆனார். இவரது நேர்மையான, தூய வாழ்வையும் பெரியார் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியும், எழுதியும் பாராட்டியுள்ளார். சுமார் 60 ஆண்டுகள் வாழ்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது பேரன் ஆர்.சுந்தரராஜ், ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி சண்முகம் செட்டியாரது சிலை கோவை நகரில் நிறுவப்பட வேண்டுமென கோவை மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இவர் மே 5, 1953இல் காலமானார்.

சர் டி முத்துசாமி ஐயர்

சர் டி முத்துசாமி ஐயருக்கு சென்னை உயர் நீதிமன்ற கட்டட மாடியில் மூல விக்கிரகம் போல் சலவைக் கல்லில் சிலை நிறுவப்பட்டுள்ளது. 1862இல் உருவாக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் இவர். முத்துசாமி ஐயர் திருவாரூரைச் சார்ந்தவர். மிக ஏழைக் குடும்பத்தில் ஜனவரி 28, 1832இல் பிறந்த இவர் பல இன்னல்களிடையே போராடி படித்து படிப்படியாக அரசாங்க உத்தியோகத்தில் முன்னேறினார். 1878இல் ஹாலோவே என்னும் வெள்ளைக்கார நீதிபதி ஓய்வுபெற்றபோது அந்த இடத்திற்கு அன்றைய பிரிட்டிஷ் அரசு இவரை நியமித்தது. முத்துசாமி ஐயர் 17 ஆண்டுகள் உயர் நீதிபதியாக பணிபுரிந்தார். 



மாவட்ட முன்சீப் பதவியிலிருந்து வளர்ந்து வந்தவர் என்பதால் இவருக்கு எல்லா வகையான சட்டதிட்டங்களின் நுணுக்கங்களும் தெரிந்திருந்தது. நிலவரிச் சட்டங்கள், கொடுக்கல் வாங்கல் சட்டங்கள், கிரிமினல் வழக்குச் சட்டங்கள், சொத்து சம்பந்தமான சட்ட நுணுக்கங்கள் போன்ற எல்லாவற்றிலும் ஆழமான அறிவு உடையவர் இவர். எட்வர்டு அரசர் செய்த ஒரு குற்றத்திற்கு என்ன தண்டனை தருவது என்பதில் நிலவிய குழப்பத்தை இவர் தான் தீர்த்துவைத்தார். தவறு செய்தவர் மன்னர் என்பதால் அவரது படம் போட்டு வெளியிடப்படும் நாணயத்தில் கிரீடம் இல்லாத மன்னரின் தலை இடம்பெற வேண்டும் என்பது இவரது யோசனை. இதுதான் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அழியாப் புகழைப் பெற்ற இவர் 1895 ஜனவரி 25 அன்று மரணமடைந்தார். 

சர் வி பாஷ்யம் அய்யங்கார் 



சென்னை உயர் நீதிமன்றத்தினுள்ளே நீதிமன்றத்தைப் பார்த்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் சிலை தான் வெம்பாக்கம் பாஷ்யம் அய்யங்காருடையது. 1927 இல் எம் எஸ் நாகப்பா வழங்கிய சிலை இது. பாஷ்யம் அய்யங்கார் வசதியான வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவர். அந்தக் கால பிராமணர்களிடையே அரசாங்க உத்தியோகத்திற்கு மவுசு அதிகம். அதற்கேற்ப இவரும் சில ஆண்டுகள் சப்ரிஜிஸ்ட்ரராக பணி புரிந்தார். அவ்வேலையின் கெடுபிடிகள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் மனச்சோர்வு ஆகியவற்றின் காரணமாக அவ்வேலையிலிருந்து வெளியேறினார். சட்டம் படித்தார். மாகாணத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். 1872இல் பார் கவுன்சிலில் பதிவு செய்தார். அன்றைய சென்னை அட்வகேட் ஜெனரலான பாரிஸ்டர் ஓ. சல்லிவன் என்னும் வெள்ளையரிடம் ஜூனியராகச் சேர்ந்தார். பாஷ்யம் அய்யங்கார் சிவில் வழக்குகளுக்கு மட்டும்தான் வாதாடுவார். தென் இந்தியாவின் பிரமுகர்கள் பெரும்பாலானோர் இவரது கட்சிக்காரர்கள். அக்காலத்திலேயே இவரது வருமானம் பல ஆயிரம் ரூபாய்களாக இருந்தது. இவர் சட்ட மேதை ஆனால் சுவையான பேச்சாளர் அல்ல. மிகவும் நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக தாழ்ந்த குரலில் தான் பேசுவார். பாஷ்யம் அய்யங்காருக்கு சட்டம், வழக்கு, நீதிமன்றம் இவற்றைத் தவிர வாழ்க்கையில் வேறு எதிலுமே ஈடுபாடு கிடையாது. பிப்ரவரி 1897 முதல் மார்ச் 1898வரை, செப்டம்பர் 1899முதல் மார்ச் 1900வரை ஆகிய கால கட்டங்களில் இந்திய அட்வகேட் ஜெனரலாக இருந்துள்ளார். இப்பதவி வகித்த முதல் இந்தியர் இவர். 1901 முதல் 1904வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக சேவையாற்றினார். மயிலாப்பூரில் இவர் வாழ்ந்த வீடுதான் இன்றைய காமதேனு தியேட்டர். பாஷ்யம் அய்யங்கார் நவம்பர் 18, 1908 இல் காலமானார்.   

பகதூர் சுப்பிரமணிய அய்யர் 


சென்னைப் பல்கலைக் கழக செனட் கட்டடத்தின் முன்னே அமர்ந்தபடி இருக்கும் சிலை சர் எஸ் சுப்பிரமணிய அய்யருடையது. முதல் இந்தியத் துணைவேந்தராக இருந்ததால் 1935இல் இவரது சிலை செனட் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் இந்திய உயர் நீதிபதி முத்துசாமி ஐயர் 1895இல் மறைந்ததும் அப்பதவிக்கு மணி அய்யர் நியமிக்கப்பட்டார். இவர் மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 1, 1842இல் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றிருந்தும் முதலில் வக்கீலாகாமல் மதுரை மாவட்ட துணை ஆட்சியாளர் அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தார் சில காலம். பின்னர் 1869இல் தனது வக்கீல் தொழிலைத் தொடங்கினார். 1875இல் வேல்ஸ் இளவரசர் மதுரை வந்தபோது மதுரை மக்கள் சார்பாக வரவேற்புரை நிகழ்த்தியுள்ளார் இவர். மதுரை நகராட்சி துணைத் தலைவராக 1882லிருந்து சென்னைக்கு குடிபெயரும் வரை இருந்துள்ளார். 1884இல் இவரது மனைவி லக்ஷ்மி அம்மாள் இறந்தபிறகு 1885இல் சென்னைக்கு வந்து குடியேறினார். குறுகிய காலத்திலேயே சென்னையின் பிரபல வக்கீலானார். 1888 இல் அரசாங்க வக்கீலாக நியமிக்கப்பட்டார். இப்பதவியை வகித்த முதல் இந்தியர் இவர்தான். மணி அய்யர் 1895இல் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார். கண் பார்வையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பதவிக்காலம் முடியும் முன்பே நீதிபதி பதவியிலிருந்து விலகிக்கொண்டார். ஓய்வு பெற்ற பிறகு மணி அய்யர் பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டார். 1885இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக நியமிக்கப்பட்ட இவர் 1896இல் அதன் துணைவேந்தரானார். அச்சமயத்தில் பல கல்வித் திட்டங்களை நிறைவேற்றினார். அன்னிபெசண்ட் அம்மையார் நடத்திய ஹோம் ரூல் இயக்கத்தில் தீவிரமாகப் பங்குகொண்டார். 1893இல் திவான் பகதூர் பட்டமளித்துச் சிறப்பிக்கப்பட்டார். நாட்டில் தலைவிரித்தாடிய அடக்குமுறைகளைக் கண்டித்து தனக்கு அரசாங்கம் அளித்த பட்டங்களை எல்லாம் உதறித் தள்ளினார். தியோஸோபிக்கல் சொஸைட்டியின் துணைத் தலைவராக 1907முதல் 1911வரை இருந்துள்ளார். 1908இல் சென்னைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டமளித்தது இவருக்கு. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் கௌரவ பட்டம் இவருக்குத் தான் அளிக்கப்பட்டது. 1917இல் இந்திய விடுதலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்ஸனுக்கு ஒரு கடிதம் எழுதினார். இக்கடிதம் இந்தியாவின் தேசிய சரித்திரத்தில் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது. மணி அய்யர் டிசம்பர் 5, 1924இல் காலமானார். 

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

மேலும் சில சிலைகள்

மேயர் நமச்சிவாயம் சிவராஜ்

சென்னை நகர மேயராக இருந்த ராவ் பகதூர் நமச்சிவாயம் சிவராஜின் திரு உருவச்சிலை சென்னை வள்ளலார் நகர் பேருந்து நிலையச் சந்திப்பில் நிறுவப்பட்டுள்ளது. 1994 டிசம்பர் 6 அன்று அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா இச்சிலையைத் திறந்துவைத்துள்ளார். இச்சிலையின் தகவல்களைச் சற்று சிரமப்பட்டே படிக்க வேண்டியுள்ளது. பராமரிப்பற்று இருக்கிறது இச்சிலை. சிவராஜ் மெட்ராஸ் மாகாணத்தைச் சார்ந்த கடப்பாவில் 1892, செப்டம்பர் 29இல் பிறந்தவர். இவரது தந்தை தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர். பின்னர் புத்த மதத்தைத் தழுவினார். சென்னை மாநிலக் கல்லூரியில் 1911இல் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் 1915இல் வழக்கறிஞர் பட்டம் பெற்று சர் சி பி ராமசுவாமி அய்யரிடம் ஜூனியராகப் பயிற்சி எடுத்துக்கொண்டார். சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராக 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். செங்கல்பட்டு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1957 முதல் 1962வரை இருந்துள்ளார். மேயர் சிவராஜ் 1964 செப்டம்பர் 29 அன்று காலமாகியுள்ளார்.
டாக்டர் ரங்கச்சாரி


டாக்டர் ரங்கச்சாரியின் முழு உருவச் சிலை சென்னை பொது மருத்துவமனையின் முகப்பில் நுழைவாயிலருகே நிறுவப்பட்டுள்ளது. எப்போதும் கையைப் பின்புறம் கட்டிவைத்தபடி நடக்கும் பழக்கம் உடையவர் இவர் என்பதால் இச்சிலையும் அப்படியே அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை நவம்பர் 6, 1939 அன்று மெட்ராஸ் கவர்னர் லார்டு எர்ஸ்கின்னால் திறந்துவைக்கப்பட்டது. முழுக்க முழுக்க பொதுமக்கள் தந்த நிதியால் உருவாக்கப்பட்டது இச்சிலை.

சருக்கை ரங்காச்சாரி மெட்ராஸ் மாகாணத்தைச் சார்ந்த பிரசித்தி பெற்ற மருத்துவர். இவர் 1892 ஏப்ரலில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணமாச்சாரி மெட்ராஸ் மாகாண அரசாங்கப் பொறியியலாளர். ரங்கச்சாரியையும் பொறியியலாளராக்க விரும்பினார். ஆனால் ரங்கச்சாரி மருத்துவராகவே விருப்பம் கொண்டார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்தவர். தனது பள்ளிப்படிப்பை கும்பகோணத்தில் முடித்தார். பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே படித்து முடித்தபின் தான் மருத்துவம் படிக்க இருப்பதாக அறிவித்தார். இங்கிலாந்து சென்று படிக்க விரும்பினார். ஆனால் அவரது குடும்ப சூழ்நிலை காரணமாகவும் அந்தக் கால ஆச்சார பிராமணர்கள் கடல் தாண்டி செல்வது தடைசெய்யப்பட்டிருந்ததாலும் அவரால் அங்கே சென்று படிக்க இயலவில்லை. ஆனால் வெகு சீக்கிரமே அனைத்துத் தடைகளையும் கடந்து பலரும் அறிந்த மருத்துவரானார் ரங்கச்சாரி. நாகப்பட்டிணம், தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பல இடங்களில் பணிபுரிந்தார் இவர். 1919இல் மெட்ராஸுக்கு மாற்றப்பட்டார். அனைவரும் அறிந்த பூங்கா நகரிலிருந்த பொது மருத்துவமனையில் பணியாற்றினார் இவர். எந்நேரமும் மக்களுக்குச் சேவையாற்றினார். தனது நோயாளிகளைப் பார்ப்பதற்குச் செல்வதற்காக ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கினார். பின்னர் தென்னிந்தியாவில் உள்ள தனது நோயாளிகளைப் பார்ப்பதற்காக சொந்தமாக ஒரு சிறிய விமானத்தையே வாங்கினார். அந்தக் காலத்தில் அது ஒரு அரிதான செயல். தனது புத்திசாலித்தனம், மருத்துவத்திறமை அளவுக்கு மனித உளவியலையும் நம்பினார். தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு ஏராளமான மருந்து மாத்திரைகளை, விலை உயர்ந்த ஊசி மருந்துகளை அளிப்பதை ஊக்குவிப்பதில்லை இவர். குழப்பமிகுந்த நோய்களுக்குக் கூட மருந்துகளுக்குப் பதில் மனித உளவியல் சார்ந்தே மருத்துவம் அளித்தார். நோயாளிகளின் அந்தஸ்தை அவர் பொருட்படுத்தியதில்லை. வசதி மிக்கவர்களையும் வறியவர்களையும் ஒன்றுபோலவே பாவித்தார். மிக வறிய நோயாளிகளுக்குத் தேவையான தினசரிச் செலவுகளுக்கு தன் கையிலிருந்து பணமளிப்பார். டாக்டர் ரங்கச்சாரிக்குக் குழந்தைகள் இல்லை. தனது 52ஆவது வயதில், ஏப்ரல் 1934இல் கடுமையான டைபாயிட் நோயால் அவதியுற்று மாண்டுபோனார் இவர். மிக குறைந்த வயதில் ஏற்பட்ட இவரது மரணம் மருத்துவத் துறைக்கும் நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது இழப்பை நினைவுகூரும் விதத்தில் நிறுவப்பட்டுள்ள இவரது சிலையில் அரிதான மருத்துவத் திறமைக்காகவும் எல்லையற்ற மனிதநேயத்துக்காகவும் சிலை நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேயர் எஸ் சத்தியமூர்த்தி


1939 - 40இல் சென்னை மேயராகப் பணியாற்றிய சத்தியமூர்த்தியின் சிலை சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை நிறுவப்பட்ட போது மேயராக திரு சி குசேலர் இருந்துள்ளார். இந்தியப் பிரதமர் ஜவஹர் லால் நேருஜி 1963, ஜூன் 14 அன்று திறந்துவைத்த சிலை இது.

காங்கிரஸ் அரசியல்வாதியும் இந்திய விடுதலைப்போராட்ட வீரருமான சத்தியமூர்த்தி ஆகஸ்டு 19, 1887 அன்று மதுரை மாவட்டத்தில் பிறந்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டம்பெற்ற பின்னர் சட்டம் பயின்றார். கல்லூரி நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். இவை அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த பிடிப்பை உண்டாக்கியது. இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர். தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் பிரித்தானிய இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர். அவரது பங்காற்றலை நினைவுகூரும் விதத்தில் சென்னையிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு சத்தியமூர்த்தி பவன் என அழைக்கப்படுகிறது.

 இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற நேரத்தில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. இப்பஞ்சத்தைப் போக்க பிரிட்டிஷ் அரசுடன் போராடி பூண்டி நீர்தேக்கத்திற்கான வரைவு ஒப்புமை பெற்று தமது பணிக்காலத்திலேயே அதன் அடிக்கல்லை நாட்டினார். ஆயினும் 1944ஆம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது இவர் உயிருடன் இல்லை. இவரது முதன்மை சீடரான காமராஜர் பின்னர் இத்தேக்கத்திற்கு இவரது பெயரையே வைத்தார்.

அவரது பேச்சாற்றல் திறனைக் கொண்டு காங்கிரசின் பிரதிநிதியாக மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் ரௌலத் சட்டத்திற்கெதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட இங்கிலாந்து அனுப்பப்பட்டார். 1930ஆம் ஆண்டு சென்னை பார்த்தசாரதி கோவிலில் இந்தியக் கொடி ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார். 1942ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு செல்லும்போது ஏற்பட்ட முதுகுத்தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு மார்ச் 28, 1943ஆம் ஆண்டு சென்னை பொதுமருத்துவமனையில் இயற்கை எய்தினார் சத்தியமூர்த்தி

புதன், ஏப்ரல் 13, 2011

நான் கடவுள்

காவி முலாம் பூசிய பிச்சைப்பாத்திரம்

மனிதனைக் கடவுள் தன்மையிலிருந்து விலக்கிவைப்பதே நான்தான். நான் அழிந்தால்தான் கடவுள் தன்மை உருவாகும். நான் கடவுள் என்று சொல்லும்போதே அதில் தொனிக்கும் ஆணவத் தன்மை கடவுள் தன்மையிலிருந்து பெருமளவு மாறுபட்டது. இத்தகு முரண்பட்ட தலைப்பின் மூலம் வித்தியாசமான தமிழ்ப் படம் என்ற கருத்தை உருவாக்கிக்கொண்ட, தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நீண்ட நாள்கள் படம்பிடிக்கப்பட்ட படமான நான் கடவுளைத் திரையில் பார்க்கும் ஆவலைத் தொடக்க நாள் முதலே தூண்டிய படம் இது. இந்தியர்களின் புனிதத் தலமான காசியில் சம்ஸ்கிருதப் பாடல் (படத்தில் வசனம்தான் ஜெயமோகன்) பின்னணியில் ஒலிக்கத் தொடங்கும் இந்தத் தமிழ்ப் படத்தின் முதல் இருபது நிமிடங்களில் இளையராஜா, ஆர்தர் வில்சன் இருவரது பக்க பலத்தோடு சராசரித் தமிழ் ரசிகனைத் தனது பிடிக்குள் கொண்டுவருவதில் வெற்று பெற்றுள்ளார் பாலா.  வழக்கமான பல விஷயங்களைச் சர்வசாதாரணமாக அலட்சியப்படுத்தி விட்டு வித்தியாசமான ஒரு திசையில்  நம்மை அழைத்துச் செல்லப் போகிறார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கையில் படம் வேறு திசையில் பயணப்படுவது வரமா சாபமா. பாலாவின் முந்திய படங்களிலும் சரி இந்தப் படத்திலும் சரி படங்களின் அடி ஆழத்தில் விதியோ சாபமோ பயணப்படுவது நிகழ்கிறது. கதாநாயகனின் பின்னால் நாய்கள் வரும் இரண்டு காட்சித் துண்டுகள் படத்தில் இருக்கின்றன.


சேதுவில் பித்துப்பிடித்த பெண் கதாநாயகனைச் சுற்றிச் சுற்றிவர அவனோ மற்றொரு பெண்ணைக் காதலித்துப் பித்துப்பிடித்து அலைய அந்தக் காதல்கூடக் கைகூடாமல் போனதற்கும் நந்தாவில் வலியவரும் நல்வாழ்வை வெறுத்து ஒதுக்கும் கதாநாயகன்  தாய் கையாலேயே கொல்லப்பட்டதற்கும் பிதாமகனில் கலகலப்பான ஏமாற்று வியாபாரி கதாபாத்திரத்துக்கும் மௌனியான வெட்டியானுக்கும் இடையே மலரும் நட்புக்கும் காரணம் என்னவாக இருக்க முடியும்? இப்படத்திலும் 14 வருடம் குடும்பத்தைப் பிரிந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கதாநாயகனுக்கு ஏற்படுத்தியது வெறும் ஜாதகம்தானா? அறிவுத்தளம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய இடங்கள் இவை. இத்தகைய கதைகளைக் கையில் எடுத்துக்கொண்டு ஏதோவொரு வித்தியாசமான களம் அமைத்து - சேதுவில் பாண்டிமடம், நந்தாவில் இலங்கைத் தமிழர்கள், பிதாமகனில் கஞ்சா வியாபாரம், இதில் அகோரியும் அகோரப் பிச்சைக்காரர்கள் -  அதில் வர்த்தக வெற்றிக்கான விஷயங்களைச் சரியான விகிதத்தில் கலந்துதருவதில் சமர்த்தர் பாலா. இந்த விகிதாசாரக் கலப்பு மிக இயல்பான ஒன்றாக அமைந்திருந்தது சேதுவில் மட்டுமே. செண்டிமெண்ட்ஸ்களைத் துறந்ததாகவே தனது கதாநாயகப் பாத்திரங்களை வடிவமைக்கிறார். ஒழுங்குகளைக் குலைப்பதிலும் உறவுகளைத் துறந்து திரிவதிலும் பெருவிருப்பம் கொண்டு அலையும் அவை. வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் அதற்கான காரணங்களையும் அலசி ஆராயத் துடிக்கும் ஆழ்மனத் தேடுதலின் வடிகால்கள் போன்ற தோற்றம்கொள்கின்றன பாலாவின்  படைப்புகள். தனித்துத் திரிய விரும்பும் தனிமனிதனுக்கும் அவனை ஒரு கூட்டுக்குள் அடைத்துவிடத் துடிக்கும் சமூகத்துக்குமான உறவில் ஏற்படும் முரண்களினூடாக வாழ்க்கை பற்றிய சமூகம் குறித்த தனது புரிதல்களை, விமர்சனங்களை வெளிப்படுத்துகிறார் இவர். மனங்களில் பரவிக்கிடக்கும் இருட்டை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து திரையில் கடைபரப்புகிறார். இளமையின் வசந்தம் திளைக்கத் திரிபவனைப் பைத்தியமாக்கிச் சங்கிலிகொண்டு கட்டிப்போடவும் வன்புணர்ச்சி செய்த ஆணுறுப்பை அப்படியே அறுத்து எடுக்கவும் பழிவாங்கும் பொருட்டுக் குரல்வளையைக் குதறி உதிரத்தை உறிஞ்சவும் ஊனமுற்றவர்களைக்கூட ஈவு இரக்கமின்றி கொடுமைப்படுத்தவும் பாலாவின் கதாபாத்திரங்களால் முடிகிறது. கருணையும் குரூரமும் குடிகொண்டிருக்கும் மனித மனத்திலிருந்து குரூரத்தைக் கருணையின்றிக் காட்சிகளாக்குவதை விருப்பத்தோடு செய்கிறார் இயக்குநர். 

      

இத்தகைய பின்னணியோடு பார்க்கும்போது கடவுள் பற்றிய படமெனும் போது அதில் குவிக்கப்படும் கவனம் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று.   கால் கை முகம் எனத் தனித்தனியாகக் காட்டிப் பெரும் ஆரவாரத்தோடு கதாநாயகனை அறிமுகப்படுத்தும் தமிழ்த் திரைப்படச் சூழலில் தலைகீழாக ஆசன நிலையில் கதாநாயகனை அறிமுகப்படுத்தும் துணிச்சல் பாலாவுக்கு உள்ளது. அந்தத் துணிச்சல்தான் கதாநாயகி கதாநாயகன் சந்திக்கும் முதல் காட்சியைப் பிணவறையில் வைக்கும்படிச் செய்திருந்தது நந்தாவில். இயன்ற வரை அழகாகக் கதாநாயகிகளைக் காட்டுவதிலேயே அக்கறை காட்டும் இயக்குநர்கள் மத்தியில் அழகான கதாநாயகியை அசல் பிச்சைக்காரி போலவே காட்டியிருப்பதன் மூலம் கதைக்குத் தான் நடிகர்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்த்தியுள்ளார்.  பூஜாவின் ஒப்பனையும் உடையமைப்பும் நடிப்பும் கதாபாத்திரத்திற்கும் நடிகருக்குமான இடைவெளியை இல்லாமல் ஆக்குகிறது. ஆர்யாவின் கதாபாத்திரம் காட்ட வேண்டிய உக்கிரத்தையும் உணர்ச்சியையும் இசைதான் உச்சத்துக்கு எடுத்துச்செல்கிறது. பிச்சைக்காரர்களின் உலகத்தைத் தனது இயல்பான நக்கல் நையாண்டியோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் பாலா. படத்தைச் சுவாரசியப்படுத்த பிச்சைக்காரர்களை உருவாக்குபவனாக ஒரு வில்லனை உருவாக்கி அவனைக் கதாநாயகனுக்கு எதிர்ப்புறத்தில் நிறுத்துவது உதகிறது. ஆனால் பிச்சைக்காரர்கள் உருவாவதின் காரணம் பற்றிய தவறான புரிதலுக்கு வழிகாட்டுகிறது படம்.   (பிச்சைக்காரர்கள் பின்னணியில் எச்சில் இரவுகள் என்றொரு படம் ரவீந்தர் நடித்துத் தமிழில் வந்ததாக ஞாபகம்) பிதாமகனில் வெற்றிபெற்ற சூத்திரம் என்பதற்காகப் பழைய பாடல்களை இந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டுமா? ரசிகர்களைத் தன் பக்கம் இழுக்கும் திறன்பெற்ற இயக்குநர் அவர்கள் வழியில் பயணப்படுவது அவசியமா?


கண் பார்வையற்ற பிச்சைக்காரிக்கு ஆதரவென யாருமில்லை. தன் வளர்ப்புத் தகப்பனிடமிருந்து பிடுங்கிவரப்பட்டு தாண்டவன் குழுவில் பிச்சை எடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறாள். வேறு வழியற்ற அவள் அவ்வாழ்வுக்குத் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுக்கிறாள். அதற்கும் ஆபத்து வருகிறது. பார்க்கச் சகிக்க இயலாத முகம் கொண்ட ஒருவன் மணந்துகொள்வதற்காக அவளைத் தாண்டவன் விலைபேசுகிறான். அவளுக்கு மனம் அதில் ஒப்பவில்லை. தப்பிக்க முயல்கிறாள். மாதா கோவில் கன்னியாஸ்திரி அவளுக்கு வெறுமெனப் போதிக்கிறாள். ஆறுதலாக பைபிள் வசனத்தைச் சொல்கிறாள். தன்னைக் கட்டாயப்படுத்தும் தாண்டவனிடம் அவ்வசனங்களைப் பேசுகிறாள் பிச்சைக்காரி. அவை அவளைக் காப்பாற்றவில்லை. அவளை வாங்க வந்தவன் அவளது விருப்பமின்மையை அறிந்து ஓடிவிட அவளை விற்கமுடியாத கோபத்தில் கண்மூடித்தனமாக அவளைத் தாக்குகிறான் தாண்டவன். ஓரிடத்திலும் அவளுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை. பந்த பாசங்களை அறுத்துவிட்டுவரும்படி குருவால் அனுப்பப்பட்டிருக்கும், அடிக்கடி இந்தி, சம்ஸ்கிருத வசனமும் அவ்வப்போது தமிழ் வசனமும் பேசும், காசியிலிருந்து திரும்பியிருக்கும் கஞ்சா சாமியிடம் -கதாநாயகனிடம்- வருகிறாள். முருகனோ காளியாத்தாளோ மாதாவோ அல்லாவோ தனக்கு உதவவில்லையே திக்கற்ற, வாழ இயதாத தனது கதி என்னவாகும் என வினவுகிறாள். அவள் சொல்லும் கடவுள்கள் பட்டியலில் ராமரோ விஷ்ணுவோ ஏன் இல்லையென நாம் நினைக்க இயலாது ஏனெனில் பிச்சைக்காரிக்குத் தெரிந்த தெய்வங்களைத் தான் அவள் குறிப்பிட முடியும். பிச்சைக்காரிக்கு அரசியல் தெரியாது அது வசனகர்த்தாவுக்கும் இயக்குநருக்கும்தான் தெரியும். அவளுக்குத் தன்னைக் கடவுளாக நினைத்துக்கொண்டிருக்கும் அந்தக் காசி ரிடர்ன் என்னவித ஆறுதலைத் தரப்போகிறார் என எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்க அவர் தரும் வரம் அவளுக்கு மரணம். வாழவழியில்லாதவர்களுக்கு எல்லாத் திசையிலிருந்தும் பிரச்சினைகள் வரும் அவற்றிலிருந்து அவர்களைத் தப்புவிக்க என்ன செய்யலாம்? பிரச்சினைகளை அழிக்கலாம். அல்லது வாழ வழியற்றவர்களை அழிக்கலாம்.  பிரச்சினைகள் அனைத்தையும் அழிப்பது சாத்தியமற்றது. ஆனால் வாழ வழியற்றவர்களை அழிப்பது எளிது. அத்தகைய தீர்வுகளை அவர்களே மேற்கொண்டால் அது தற்கொலை, பாவம். சாதாரணமானவர்கள் அதைச் செய்தால் கொலை ஆனால் காசிச் சாமியார் அதே விஷயத்தைச் செய்தால் வெறும் மரணமல்ல அது. பிறவாமையிலிருந்து காக்கும் முக்தி. ஏனெனில் அவர் வேதமறிந்தவர்; சம்ஸ்கிருதம் கற்றவர்; தன்னை உணர்ந்த சுயம்பு;  தூமை என்றால் என்னவென்று தெரியுமா எனத் தாயை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ‘ஞானி’.


 “வாழ வழியில்லாதவர்களுக்கு நீ தரும் மரணம் வரம்; வாழத் தகுதி இல்லாதவர்களுக்கு நீ தரும் மரணம் தண்டனை” எனப் படம் முன்வைக்கும் கருத்து ஆன்மிகத்தைத் தாண்டிய அரசியலாக மாறியுள்ளதை எதிர்கொள்ள நேரிடும்போது மனத்தில் பரவும் அதிர்ச்சி அலைகள் அடங்க மறுக்கின்றன. படத்தின் பெரும்பான்மையான சமயத்தில் வசனகர்த்தாவின் வேலையை இசையமைப்பாளரே செய்துவிடுகிறார். பல இடங்களில் வசனத்தைத் தவிர்த்துப் பின்னணி இசையை ஒலிக்கவிட்டே காட்சிகள் நகர்த்தப்பட்டிருக்கின்றன. கிடைத்த இடத்தில் தனது வசனங்கள் மூலம் மிகச் சாதுர்யமாக இந்துத்துவக் கருத்துகளை முன்வைத்துள்ளார் வசனகர்த்தா.  நீதிமன்ற காட்சியில் நீதிபதியே, ‘சாமியார் ஒருவர் முதல்வரைக் கொல்வதாகவே சொன்னாரே அவரை உங்களால் என்ன செய்ய முடிந்தது? சாமியார்களை மதியுங்கள்’ எனச் சொல்லும் விதமாக வசனங்கள் வருகின்றன. திக்கற்றவர்கள் வேறு மார்க்கமற்றதால் அறியாமையால் கிறித்துவத்திற்குச் செல்கிறார்கள். இஸ்லாமோ கிறித்துவமோ மற்ற கடவுள்களோ அவர்களுக்கு உதவுவதில்லை எனும்படியான புரிதலை உருவாக்குவதன் பின்னணிக் காரணம் குறித்து ஆழ்ந்து யோசிக்க வேண்டியுள்ளது. கதாபாத்திரங்களை வித்தியாசமாக வடிவமைத்து படம் நெடுகத் திரியவிட்டிருப்பதில் தனது ஆளுமையைக் கட்டிக்காப்பாற்றியபோதும் படத்தின் மூலம் உணர்த்த முயன்ற தீர்வும் அதில் பொதிந்துள்ள கருத்தும் அரசியலும் படத்தின் மீது மூன்றாம் கண் கொண்ட பரிசீலனையைக் கோருகின்றன.        

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்