நேற்றிரவு மனம் ஒருநிலையில் இல்லை. அண்மைக்காலமாகவே அடிக்கடி அப்படியொரு மனநிலை வாய்த்துவிடுகிறது. எதையுமே செய்யாமல் இருப்பது தொடர்பான ஒருவிதமான அலுப்பை மனம் உணர்கிறது. இரவில் ஏதாவது ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். என்ன படம் பார்ப்பது என ஒரு முடிவுக்கு வராமலேயே மடிக் கணினியைத் திறந்தேன். அது என்னை ப்ரீஃப் என்கவுண்டர் என்னும் படத்தைப் பார்க்கச் சொன்னது. படத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர் அது குறித்த விவரங்களைப் பார்த்தேன்.
டேவிட் லீன் இயக்கிய பிரிட்டிஷ் படம் இது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த ஆண்டில், 1945இல் வெளிவந்திருந்த படம். என்கவுண்டர் என்னும் சொல்லை வைத்துப் படம் கொலை தொடர்பானது என மனம் முடிவுசெய்திருந்தது. ஆனால், படம் திருமணத்துக்கு வெளியேயான காதல் தொடர்பானது. கறுப்பு வெள்ளைப் படம். வெறும் எண்பத்தாறு நிமிடங்கள்தாம் படம்.
லாரா என்னும் நடுத்தரவர்க்கத்துப் பெண்மணிக்கும் அவர் யதேச்சையாக ரயில் நிலையத்தில் சந்திக்கும் அலெக் என்னும் டாக்டருக்கும் இடையில் உருவாகும் காதல் தான் படத்தின் மையப் பொருள். லாராவுக்கு ஓர் அழகான குடும்பம் உள்ளது. அன்பான கணவர், ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகள். அவள் வாரம் தோறும் வியாழக் கிழமை அன்று அருகிலுள்ள நகரத்துக்குச் சென்று ஷாப்பிங், ரெஸ்டாரெண்ட், சினிமா எனப் பொழுதைக் கழிக்கிறாள். அப்படி வெளியே செல்லும் போதுதான், அலெக் உடன் அவளுக்கு நட்பு உருவாகிறது.
ஒருநாள் ரயில் நிலையத்தின் தூசு ஒன்று அவள் கண்ணில் விழுந்துவிடுகிறது. அதை எடுக்கும் முயற்சியில் அவளுக்கு உதவுகிறான் அலெக். கண்ணிலிருந்த தூசை எடுத்த அலெக் உத்திரம் போன்ற காதலை மனதில் போட்டுவிடுகிறான். முதல் சந்திப்பில் காதலாகவெல்லாம் அது மாறவில்லை. ஓர் அறிமுகம் மட்டுமே அப்போது கிடைக்கிறது. அறிமுகம் மெதுமெதுவாக நட்பாக மாறி, ஒரு கட்டத்தில் காதலாகக் கனிந்துவிடுகிறது. அலெக்குக்கும் குடும்பம் உள்ளது. மனைவியைப் பற்றிச் சொல்கிறான். ஆனால், அவனது குடும்பம் திரையில் காட்டப்படவில்லை.
ஒரு வியாழக்கிழமை இருவரும் படத்துக்குச் செல்கிறார்கள். இன்னொரு முறை காரில் உலாப் போகிறார்கள். அருகிலுள்ள கிராமத்துக்குச் செல்கிறார்கள். அங்குள்ள ஆற்றுப் பாலத்தில் சிறிது நேரம் செலவிடுகிறார்கள். இப்படி அவர்களது உறவு ஆழமாக வேர் விட்டு விடுகிறது. லாராவுக்கும் இந்தக் காதல் முதலில் தித்திப்பாகத்தான் இருக்கிறது. நாளாக நாளாக தான் செய்வது சரியா என்ற கேள்வி எழுந்துவிடுகிறது. இப்போது, இந்தக் காதல் தொடர்ந்தால் தனது வாழ்வு என்ன ஆகும் என்ற கேள்வி மனதில் எழ அச்சமும் நிம்மதியின்மையும் அவளை அலைக்கழிக்கின்றன. ஆனாலும், வியாழன் தோறும் அலெக்கைப் பார்க்காவிட்டால் அவளுக்கு மனம் இருப்புக்கொள்வதில்லை. தவறென்று தெரிந்தும் மனம் அதையே நாடுவதை எப்படித் தவிர்க்க என அந்தப் பேதைப் பெண்ணுக்கும் டாக்டர் பட்டம் பெற்ற அந்த ஆணுக்கோ தெரியவில்லை. ஆனாலும், எல்லா உறவுக்கும் ஒரு முடிவு வந்துதானே ஆகவேண்டும். அவர்கள் காதலுக்கும் ஒரு முடிவு வந்துவிடுகிறது. அந்த முடிவை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் படத்தில் பாருங்கள்.
படத்தில் ரயில் நிலையம், அதன் பயணியர் உணவகம், திரையரங்கம், லாரா வீடு ஆகியவையே திரும்பத் திரும்ப இடம்பெறுகின்றன. கறுப்பு வெள்ளைப் படம் என்பதால் இயல்பாகவே காட்சிகள் ஈர்க்கின்றன. பயங்கரமான ஒலியெழுப்பியபடி தூசு பரப்பி ரயில் விரைந்து செல்லும் காட்சி அப்படியே மனதில் ஒட்டிக்கொள்கிறது. ஒரு நடுத்தர வயதுக்குரிய பெண்மணியின் உணர்வுகளை எல்லாம் அப்படியே நடிப்பில் கொண்டுவந்து, ஒரு பெண்மணியின் வாழ்வை நேரில் பார்ப்பது போன்ற எண்ணத்தைக் கொண்டுவந்துவிடுகிறார் லாராவாக நடித்திருக்கும் செய்லா ஜான்சன். அலெக்கின் நண்பருடைய அபார்ட்மெண்டில் ஓர் இரவு நேரத்தில் அலெக்குடன் லாரா இருக்கும்போது, அலெக்கின் நண்பர் திரும்பிவந்துவிடுகிறார். அலெக் பின் கதவு வழியே லாராவை அனுப்புகிறான். அந்த இரவில் அவளுடைய மனம் படும் பாடு... காதல் ஒரு பக்கம் சுயமரியாதை இழப்பு தந்த வலி ஒரு பக்கம் என அவளைத் துன்புறுத்துகிறது.
நோயல் கவர்டு எழுதிய ஸ்டில் லைஃப் என்னும் நாடகமே இந்தப் படமாக உருமாறியுள்ளது. படத்தின் திரைக்கதையை நோயல் கவர்டு தான் எழுதியுள்ளார். அலெக்குடன் இறுதியாக விடைபெறும் தருணத்தில் சிவபூஜையில் கரடி போல் வந்து சதா பேசிக்கொண்டே இருக்கும்போது, லாராவின் தவிப்பை வசனங்களேயின்றி வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் நோயல் கவர்டு. தனது காதலனை இனி ஒருபோதும் பார்க்க முடியாது என்பதால் இறுதியில் அவனோடு விடைபெறும் தருணத்தை வாழ்வின் உன்னதத் தருணமாக நினைத்து எதிர்கொள்ளத் தயாராகும் லாராவால் அதை அப்படி எதிர்கொள்ள முடியவில்லை. தோழி ரூபத்தில் அந்தத் தருணம் தடைப்படுகிறது. அந்தக் கணம் உயிரை விட்டுவிடலாமா என்னும் எல்லைக்கே போய்விடுகிறாள் லாரா.
மத்தியதர வயதில் வந்த காதல் லாராவையும் அலெக்கையும் பள்ளி மாணவர்கள் போல செயல்பட வைக்கிறது. அவர்கள் மனம் அந்தக் காதலின் உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறது. காதல் பூரணமாக அரும்பிய பின்னர் இது சரிப்பட்டுவருமா என்ற வேதனைத் தழல் நெருப்பை அள்ளி மனத்தில் வீசுகிறது. காதலுக்குப் பின்னான காதல் தொடர்பாக சமூகம் என்ன சொல்லும், அது சரியாக வருமா என்ற தனிமனிதர்களின் தத்தளிப்பு இன்னும் தொடரும் சூழலில் தானே உலகம் உள்ளது. அப்படியொரு தடுமாற்ற உணர்வுக்கும் தன்னிலை மறக்கச் செய்யும் காதல் உணர்வுக்கும் இடையில் அல்லாடும் மனிதர்களைப் பற்றிய படமா இது இருப்பதால் என்றென்றைக்குமான படமாகிறது.
1946 ஆம் ஆண்டில் நடைபெற்ற கேன் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருதுவென்ற திரைப்படம் இது. டேவிட் லீன் இயக்கிய ஆலிவர் ட்விஸ்ட், த ப்ரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய், லாரென்ஸ் ஆஃப் அரேபியா, டாக்டர் ஷிவாகோ, ரேயான்ஸ் டாட்டர் ஆகிய படங்கள் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்தவை. அகத்தில் நிகழும் மாற்றங்களை, எண்ணவோட்டங்களைக் காட்சிகளில் வெளிப்படுத்தி, உயர்தர திரைப்பட அனுபவம் தருவதில் மாஸ்டர் டேவிட் லீன். தன் கணவனிடம் லாரா வாக்குமூலம் போலச் சொல்வதாகத் தான் திரைக்கதை அமைந்துள்ளது. அவளது மனவோட்டங்களையும் நினைவோட்டங்களையும் ஒரு நேர்த்தியான திரைக்கதைக்குள் கொண்டுவந்து அதை எப்போதும் பார்ப்பதற்கான சினிமாவாக மாற்றியதில் டேவிட் லீன் தனித்துத் தெரிகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக