இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், ஏப்ரல் 12, 2022

விரும்புகிறேன்

யூடியூபில் பழைய படங்களை அவ்வப்போது பார்ப்பது வழக்கம். அப்படி ஒரு படத்தைப் பார்ப்பதற்கு ஏதாவது ஒரு தூண்டுகோல் தேவைப்படும். அந்தப் படத்தைப் பற்றி எதையாவது கேள்விப்பட்டால் பார்க்கத் தோன்றும். அண்மையில் வெளிவந்த டாணாக்காரன் படத்தில் சாதி தொடர்பான காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் நடித்த பழையபடத்தில் அவர் சாதிப்பெயரைப் பெருமையுடன் சொல்லும் காட்சியையும் விக்ரம் பிரபு சாதி பற்றிக் கேட்பதன் அபத்தத்தைச் சொல்லும் காட்சியையும் இணைத்து ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதைக் கண்டவுடன் இதைப் போல் சாதி தொடர்பான ஒரு காட்சியை விரும்புகிறேன் படத்தில் பார்த்த நினைவுவந்தது. எனவே, அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற  எண்ணம் வந்து. யூடியூபில் தேடினால் படம் கிடைத்தது. 

சுசி கணேசன் இயக்கிய முதல் படம் இது. ஆனால், படம் காலதாமதமாகத் தான் வெளியானது. அதற்குள் அவர் ஃபைவ்ஸ்டார் படத்தை இயக்கிவிட்டார் என ஞாபகம். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் சுசி கணேசன். இவரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் மௌனகுரு, மகாமுனி ஆகிய படங்களை இயக்கிய சாந்தகுமார். படம் வந்தபோதே பார்த்திருக்கிறேன். பொதுவாகத் தமிழ்ப் படங்களில் பாரதிராஜா பாதிப்பிலான கிராமங்களைத்தாம் அதிகம் பார்க்க முடியும். ஆனால், சுசி கணேசன் காட்டிய கிராமம் முற்றிலும் வேறான ஒரு கிராமமாக இருந்தது. 

படத்தின் கதைக் களமும் புதிது. கதாநாயகனாக பிரசாந்த்  நடித்திருந்தார். பிரசாந்தை நடிகராகப் பார்க்க முடிந்த படங்களில் இதுவும் ஒன்று. சிநேகாவின் அறிமுகப் படம் இது. ஆனால், அவர் நடித்த என்னவளே இதற்கு முன்னரே வெளியாகிவிட்டது. நடன இயக்குநர் கலாவின் உறவுக்காரப் பெண்ணான சிநேகா இந்தப் படத்தில் வசீகரமான கிராமத்துப் பெண்ணாக வலம்வருகிறார். தந்தைக்கு அடங்கிய அப்பாவின் பெண்ணான தவமணி- அவரது கதாபாத்திரப் பெயர் இதுதான் - காதல் பிறந்தபிறகு துணிச்சலும் தைரியமும் கொண்ட பெண்ணாக மாறிவிடுகிறார். இரண்டின் சுபாவங்களையும் இயல்பாகச் செய்திருந்தார் சிநேகா. 

சுசி கணேசன் எழுதிய வாக்கப்பட்ட பூமி என்னும் நாவலே இந்தப் படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கண்ணின் கடைப்பார்வையைக் காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் இளைஞர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்னும் கவிதை வரிகளுக்குத் தகுந்த காட்சியாக்கம் ஒன்று படத்தில் உண்டு. கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவில் ஒரு கிராமத்தின் வேறுபட்ட தோற்றங்களைப் படம் காட்சிப்படுத்தியிருந்தது. தீயணைப்பு வீரர் சிவனாகப் படத்தில் நடித்திருந்தார் பிரசாந்த். தீயணைப்பு வீரரான தந்தை பணியின்போது மரணமுற்றதால் அந்த வேலையில் சிவன் சேர வேண்டியதாகிவிடும். அவருக்கு இரண்டு தம்பிகள். இருவரையும் கரையேற்றும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வார். அதே போல் தவமணிக்கும் இரண்டு தங்கைகள். அம்மா இல்லாத குடும்பம் அவர் அம்மா நிலையிலிருந்து தங்கைகளைக் கரையேற்ற வேண்டியதிருக்கும். இவர்கள் இருவருக்கும் காதல் முளைத்துவிடுகிறது. அந்தக் காதல் அவர்களை என்ன செய்தது, இவர்கள் காதலால் தவமணி வாழ்ந்த கிராமம் என்ன ஆனது என்பதைப் படம்  கூறும். 

நல்ல காரியத்துக்காக ஒன்றுசேராத கிராமம் காதலைப் பிரிக்க ஒன்றுசேரும். சாதி என்னும் பித்து கிராமத்து மனிதர்களின் மனங்களில் எவ்வளவு கேட்டைக் கொண்டுவந்துசேர்க்கும் என்பதையும் படம் தெரிவிக்கும். காதல் காட்சிகளும் பாடல்களும் காட்சிப்படுத்தியிருந்த விதமும் ரசனைக்குகந்தவை. ஈஸ்வரி ராவ் ஏற்றிருந்த லதா என்னும் கதாபாத்திரம் மிகவும் ஈர்ப்புக்குரிய ஒன்று. தினந்தோறும் படத்தில் வரும் ரேணுகா கதாபாத்திரம் போல் இதுவும் சுவாரசியமான பாத்திரப் படைப்பு. நாசர், லிவிங்ஸ்டன், ஸ்ரீமன், செந்தில், வினுச்சக்ரவர்த்தி எனப் பல நடிகர்கள் படத்துக்கு உயிரூட்டியிருந்தனர்.    

என்னதான் கிராமத்துக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி ஒடுங்கி நடந்த பெண்ணாக இருந்தாலும் காதல் தோன்றிவிட்டால் அவர் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் துணிவு பெற்றிடுவார் என்னும் கருத்துக்குப் படம் வலுச்சேர்த்திருந்தது. இசை தேவா. பாடல்கள் சில முணுமுணுக்கவைக்கும். சிநேகாவின் கள்ளம்கபடமற்ற அழகை ஆனந்தின் கேமரா வாழையிலை விருந்தாகத் திரையில் காட்சி படுத்தியிருந்தது. படம் போரடிக்காமல் செல்கிறது. இடையிடையே பாடல்கள் அடிக்கடி வந்தபோதும்,  அவையும் காட்சி விருந்தாக அமைவதால் பார்க்க முடிகிறது. படத்தின் பெண் கதாபாத்திரங்கள் சுவாரசியமானவை. வில்லத்தனமான தந்தை  தரும் தண்டனை விநோதமானது. மகள் காதலனுக்கு எழுதிய கடிதத்தை ஊரறிய வாசிக்கச் செய்யும் காட்சி அதற்கோர் உதாரணம். அந்தக் கடிதத்தை வாசிக்கும் குட்டி தங்கை பார்வையாளர்களை ஈர்த்துவிடுவார். குடும்பக் கடமை இருந்த இருவருக்கிடையே காதல் முளைத்தால் கடமை என்னவாகும், காதல் என்னவாகும் என்ற கேள்விக்கெல்லாம் விடையாக இருக்கும் படம். வழக்கமான பொழுதுபோக்குப் படம் என்றபோதும், அந்த எல்லைக்குள் மாறுபட்ட காட்சியனுபவத்தைத் தந்துவிட வேண்டும் என்ற இயக்குநரின் முனைப்பு படத்தை மாறுபட்டதாக்கிவிடும். நேரம் கிடைத்தால் தாராளமாக ஒருமுறை பார்க்கக்கூடிய படம் விரும்புகிறேன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

தலைப்பிலேயே ’த’வைக் காணோம்

தொடர்பவர்