இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், நவம்பர் 27, 2023

சின்ன புறா... பொன் மான்... நல்ல மனம்...


சில திரைப்படப் பாடல்களை நீண்ட காலமாக அலுப்போ சலிப்போ இல்லாமல் வெவ்வேறு தருணங்களில் கேட்கிறோம். முதன்முதலில் எப்போது கேட்டோம், இந்தப் பாடல் ஏன் இவ்வளவு பிடித்திருக்கிறது என்றெல்லாம் யோசித்துக்கொண்டே கேட்போம். அந்த யோசனையால் வரிகளைத் தவறவிட்டுவிடுவோம். ஆகவே, மீண்டும் கேட்போம். 

அப்படியான பாடல்களில் ஒன்று, சின்னபுறா ஒன்று... அன்பே சங்கீதா படத்தில் இடம்பெற்ற பாடல். முதன்முதலில் இந்தப் பாடலைக் குறித்துக் கேள்விப்பட்டபோது, படத்தில் இது தேங்காய் சீனிவாசனுக்கு என்பதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஒரு நகைச்சுவை நடிகருக்கு இவ்வளவு நல்ல பாட்டா என்று தோன்றியது. இதில் நாயகியைக் குழந்தையாகப் பார்த்திருப்பான் நாயகன். இந்தப் பாடலைக் கேட்கும்போது, இதில் நாயகன் காதலிப்பதே நாயகிக்குத் தெரியாது போல. ஒருதலைராகம் டைப் காதலாக இருக்குமோ? 

அடுத்த பாடல், நெஞ்சிலாடும் பூ ஒன்று படத்தில் இடம்பெற்ற, ஒரு மூடன் கதை சொன்னால்... பாடல். இந்தப் பாடலில் விழிகளா விஷமா என்று கேள்வி கேட்கும் அளவுக்கு நாயகன் கொடூரமானவனாக இருக்கிறான். இவன் சற்றுச் சிக்கலான ஆளாக இருப்பான் போல. தனது காதல் நிறைவேறாத காரணத்தால், பெண்ணைப் படைக்காதே பிரம்மனே என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு யோசிக்கிறான். இந்தப் பாடலைக் கேட்கும்போது, சிலோன் ரேடியோ ஸ்டேஷனில் கேட்ட அந்த நாள்கள் நினைவில் எழும். ஒருநாளும் திரும்பி வர வாய்ப்பே இல்லாத அந்த நாள்களை ஏக்கத்துடன் நினைத்துப் பார்ப்பதில் மனம் ஒரு சுகம் காணும்.

இன்னொரு பாடல், எங்க ஊர் ராசாத்தி படத்தின், பொன்மானைத் தேடி... இது சோகப் பாடல் என்றபோதும், நம்பிக்கை தொனிக்கும் பாடல். இந்தப் பிறப்பில் நாம் சேர்ந்துவாழ முடியாமல் போனாலும் இனியேதோ ஒரு பிறப்பில் சேர்ந்துவாழ்வோம். அப்படி ஒருவேளை சேராவிட்டாலும் அதற்காக வருந்த வேண்டியதில்லை. நான் வானத்தில் ஒரு வெள்ளியாக மாறியிருப்பேன் என்னை அடையாளம் கண்டுகொள் என நாயகி நாயகனிடம் வேண்டுவாள். 

இந்த மூன்று படங்களையும் பார்த்ததில்லை. பாடல்கள் மட்டுமே பரிச்சயம். முதல் பாடலில் காதலிக்கே தெரியாமல் காதலித்திருக்கிறான் ஒருவன். இரண்டாம் பாடலில் காதலித்தான் ஆனால், அவள் வேறு ஒரு பக்கம் போய்விட்டிருப்பாள் போல. மனம் நொந்து பாடுகிறான். மூன்றாம் பாடலில் இருவருமே காதலித்திருக்கிறார்கள். ஆனால், சூழல் ஒத்துழைத்திருக்காதுபோல. இருவரும் நிலைமையைப் புரிந்துகொண்டு மனத்தைத் தேற்றியபடி பாடுகிறார்கள். 

இந்த வரிசையில் யோசித்துக்கொண்டே போனால், ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்தின், நல்ல மனம் வாழ்க பாடலும் கூட நினைவுக்கு வருகிறது. அந்தப் பாடலில் நாயகன் காதலித்த பெண் இன்னொருவரைத் திருமணம்செய்துகொண்டிருப்பாள். அவர்கள் இருவரையும் வாழ்த்தி நாயகன் பாடுவான். எங்கிருந்தாலும் வாழ்க ரகக் காதலன் இவன் போல. வெளிப்படையாக வாழ்த்துப் பாடலாக இருந்தபோதும், மெலிதான கழிவிரக்கம் உள்ளூடாகப் பரவியிருக்கும் பாடல் இது. 

பழகிய தடத்தில் அசை போட்டபடி பயணிப்பதில் பிரியம் காணும் நெஞ்சங்களுக்கு இந்தப் பாடல்கள் பிடிக்கும்…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக