இந்த வலைப்பதிவில் தேடு

புதன், ஆகஸ்ட் 25, 2021

ஏழைகளின் இதயத்தில் வீற்றிருக்கும் மதுரைக்காரன்

விஜயகாந்த் தான் நடித்த இரண்டாம் படத்தில்தான் முதலில் கதாநாயகனானார். அந்தப் படம் ‘அன்னக்கிளி’ ஆர் செல்வராஜ் இயக்கிய ‘அகல் விளக்கு’. அது 1979 டிசம்பர் 4 அன்று வெளியானது. அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் தனுஷ்கோடி. கதைப்படி மக்களுக்கு நல்லது செய்தல் வேண்டும் என்ற துடிப்புள்ள இளைஞரான அவர் தேர்தலில் நின்று வெல்வார். மதுரை நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரது குடும்பத்தினர் அவர் பெயரைப் பயன்படுத்தி லஞ்ச, ஊழலில் ஈடுபட்டு அதிகமாகச் சொத்து சேர்த்துவிடுவார்கள். இறுதியில் இதை அறிந்த விஜயகாந்த் தனது நேர்மையை நிரூபிக்கச் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார். திரைப்படம் என்பதால் அவருடைய குடும்பத்தினர் தங்கள் தவற்றை உணர்ந்து திருந்திவிடுவார்கள். விஜயகாந்த் மீதான கறை துடைக்கப்பட்டுவிடும். இந்தப் படத்தின் ‘ஏதோ நினைவுகள்…’ பாடல் இன்றளவும் பலரது விருப்பத் தேர்வில் ஒன்று. இந்தப் படத்தைப் பார்க்கும்போது வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது என்று தோன்றுகிறது. ‘மாந்தோப்புக் கிளியே’ படத்தை இயக்கிய எம்.ஏ.காஜாவின் ‘இனிக்கும் இளமை’ என்னும் படத்தில் வில்லனாக அறிமுகமானார் விஜயகாந்த். அந்தப் படத்தின் நாயகன் சுதாகர். இதே சுதாகர் ரஜினிகாந்த் நடித்த ‘அதிசயப் பிறவி’யில் காமெடி வில்லனாக நடித்தார்.

அடுத்து அவரது அறிமுகப்படம் என்றே பலராலும் இன்றளவும் நினைவுகூரப்படும் ஒரு படம் என்றால் அது, ‘தூரத்து இடிமுழக்கம்’. கே. விஜயன் தயாரித்து இயக்கிய, மீனவர் வாழ்வை மையப்படுத்தியிருந்த இந்தப் படம் அப்போதைய மாற்றுப்பட முயற்சி வகையிலானது. படத்துக்கு இசையமைத்தவர் சலீல் சௌத்ரி. படத்தின் பாடல்களை எழுதியிருந்தவர் கு.மா.பாலசுப்ரமணியன். 1981-ல் டெல்லியில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம் இது. அங்கே திரையிடப்பட்ட மற்றுமொரு தமிழ்ப் படம் பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’. 


இதற்கு அடுத்து வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’தான் விஜயகாந்தின் முதல் வெற்றிகரமான படம் எனலாம். நடிகராக இருந்த விஜயகாந்தை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய படம் இது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் அறிமுகப்படமான இது அடிப்படையில் பழிவாங்கும்தன்மையிலானது. சங்கர் கணேஷ் இசையில் ஒலிக்கும் ‘தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம்’ பாடல் அந்தக் காலக் காதல் இன்னிசையின் பெருமையை இன்றும் காதோடு காதாகச் சொல்லிவருகிறது.  இப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘அந்தா கானூன்’ படத்தின் மூலமாகத் தான் ரஜினிகாந்த் இந்திப் படவுலகில் நுழைந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘சாதிக்கொரு நீதி’, ‘பட்டணத்து ராஜாக்கள்’, ‘ஓம் சக்தி’, ‘சாட்சி’, ‘நீதியின் மறுபக்கம்’, ‘வசந்தராகம்’ எனத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திர சேகரின் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

ஏவி.எம். தயாரிப்பில், இராம நாராயணன் இயக்கத்தில் இவர் செஞ்சட்டை நாயகனாக நடித்த, ‘சிவப்பு மல்லி’ தான் விஜயகாந்தை ஏழைகளின் வேந்தனாக்கியது. 1981 ஆகஸ்ட் 15 அன்று வெளியான இப்படம் தொழிலாளர் வர்க்கத்தில் ஒருவராக அவர்களுடைய நம்பிக்கையக்குரியவராக இவரை மாற்றியது. வைரமுத்துவின் வரிகளில் இடம்பெற்ற ‘எரிமலை எப்படிப் பொறுக்கும்…’ பாடல் அனல்கக்கும் ஒன்று என்றால், இதே படத்தில் இடம்பெற்ற ‘ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்’ பாடல் காதல் களிப்பின் உச்சம். இந்தப் படத்தின் இசையும் சங்கர் கணேஷ்தான். சந்திரசேகருக்கு அடுத்தபடியாக விஜயகாந்தை அதிகப் படங்களில் இயக்கியவர் அநேகமாக இயக்குநர் இராமநாராயணன்தான். ‘சிவப்பு மல்லி’ தொடங்கி, ‘சபாஷ்’, ‘தண்டனை’, ‘கரிமேடு கருவாயன்’, ‘வீரன் வேலுத்தம்பி’ எனப் பல படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். மு.கருணாநிதியின் வசனத்தை ‘வீரன் வேலுத்தம்பி’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’ ஆகிய படங்களில் பேசி நடித்துள்ளார். விஜயகாந்தின் தொடக்க காலத்தில் பெரும்பாலான படங்களுக்கு சங்கர் கணேஷ்தான் இசையமைத்திருக்கிறார். ‘ஆட்டோ ராஜா’  படத்தில் இவர் இசையமைத்த ‘மலரே என்னென்ன கோலம்’ பாடல் காதல் தோல்விப் பாடல்களின் தோரணத்தில் எந்நாளும் பசுமையைப் பரப்பிக்கொண்டேயிருக்கும். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சங்கத்தில் காணாத தமிழை’ பாடலுக்கு மாத்திரம் இசை இளையராஜா.   

ஏழைப் பங்காளனாகவும் கோபக்கார இளைஞனாகவும் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களிலும் புரட்சிப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்த விஜயகாந்தின் மென்மையான பக்கத்தை வெளிப்படுத்திய, அவரைப் பாசக்கார மனிதனாக ஆக்கிய படம் விசுவின் ‘டௌரி கல்யாணம்’. இதற்கு இசையமைத்திருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். இதில் இடம்பெற்றிருந்த ‘ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்’ பாடலும் இனிமையானது. 1984 -ல் 18 படங்கள் 85 -ல் சுமார் 14 படங்கள் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ளன என்பது ஒரு சாதனைதான்.

இந்தக் காலகட்டத்தில் வெளியான ‘வெள்ளைப் புறா ஒன்று’ என்ற படத்தில் ஒரு காட்சியில் அநேகமாக அது விஜயகாந்த் அறிமுகமாகும்போதாக இருக்கலாம், அவரது கழுத்தில் அணிந்திருக்கும் அரிவாள் சுத்தியல் டாலர் அணிந்த சங்கிலி சட்டையைத் தாண்டி தென்பட்டு ரசிகர்களைப் புரட்சி நீரில் நனைக்கும். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியானதொரு படம் ‘வெற்றி’. இதில் எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டி வெற்றிபெறுபவராக விஜய காந்த் நடித்தார். இந்தப் படத்தில் சிறுவன் விஜயகாந்தாக அறிமுகமானார் நடிகர் விஜய. பின்னாளில் நடிகர் விஜயின் வளர்ச்சிக்காக செந்தூரப்பாண்டியில் நடித்துக்கொடுத்தவர் இவர். ‘வெற்றி’ தெலுங்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க மறு ஆக்கம் செய்யப்பட்டது. அது தமிழில் ‘பந்தயம்’ என்னும் பெயரில் டப்பிங் ஆனது.

1984 தீபாவளி நாளில்தான் விஜயகாந்தின் பெரிய வெற்றிப்படமான ‘வைதேகி காத்திருந்தாள்’ வெளியானது. வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதையை நினைவூட்டும் இந்தப் படத்தில் பரிமளம் என்றொரு நடிகை விஜயகாந்தின் முறைப்பெண்ணாக வேடமேற்றிருந்தார். அதன் பின்னர் அவரை எந்தப் படத்திலும் பார்த்ததாக நினைவில்லை. இந்தப் படத்தை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜனின் ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படமும் இதைப் போலவே பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை இவர் பெற்றுள்ளார். இரண்டு படங்களிலும் இளையராஜாவின் இசையிலான பாடல்கள் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின. இதே போல் பாடல்களுக்குப் பெயர்பெற்ற விஜயகாந்தின் இன்னொரு படம் கே.ரங்கராஜ் இயக்கிய ‘நினைவே ஒரு சங்கீதம்’.

சிறுமுகை ரவி இயக்கிய ‘அலை ஓசை’ படத்தின் ‘போராடடா ஒரு வாளேந்தடா’ பாடல் ஒடுக்கப்பட்டோரின் இதய கீதமாக இப்போதும் ஒலிக்கிறது. பாலு ஆனந்தின் இயக்கத்தில் இவர் நடித்த ‘நானே ராஜா நானே மந்திரி’ நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டது. ஆனால், அதன் நகைச்சுவையைவிட ரசிகர்கள் மனத்தில் நிற்பது ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ என்னும் காதல் பாடல்தான்.

இருபது படங்களுக்கும் மேலாகக் காவல் துறை அதிகாரியாக இவர் நடித்துள்ளபோதும் ‘ஊமை விழிகள்’ படத்தின் டிஎஸ்பி தீனதயாளன் கதாபாத்திரம் மிகச் சிறப்பானது. வழக்கமான வசனங்களை அள்ளிவீசாமல் மிகவும் இயல்பாகத் தனது நடிப்பை அதில் விஜய காந்த் தந்திருப்பார். திரைப்படக் கல்லூரி மாணவர்களின் உழைப்பில் உருவான இந்தப் படத்துக்கு விஜயகாந்த் பெரிய ஒத்துழைப்பை நல்கியிருக்கிறார். உண்மையில் இந்த வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் நடிகர் சிவகுமார் தான் என்கிறார்கள். பத்திரிகையாளர்களின் உணர்வை வெளிப்படுத்திய இப்படத்தின் ‘தோல்வி நிலையென நினைத்தால்’ பாடல் தளர்வுற்றவர்களின் ஊக்க மருந்தாக இன்றுவரை செயல்படுகிறது. 

விஜயகாந்தின் நூறாம் படம் ‘கேப்டன் பிரபாகரன்’. படத்தின் பெயரே அவரது தமிழாதரவு நிலையைச் சொல்லும். பொதுவாக நூறாம் படம் பெரிய நடிகர்களுக்குக் காலைவாரிவிடும் என்பது தமிழ்த் திரைப்பட வரலாறு. ஆனால், இந்தப் படம் வெள்ளிவிழா கண்டது புதிய வரலாறு. விஜயகாந்த் நடித்த ‘மனக்கணக்கு படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். சிவாஜி கணேசனுடன் ‘வீர பாண்டியன்’ படத்திலும் பிரபுவுடன் ‘காலையும் நீயே மாலையும் நீயே’ படத்திலும் இணைந்து நடித்துள்ளார். கா.நீ.மா.நீ. படத்தில் ‘தூங்காத கண்ணின்று ஒன்று’ பாடலை மீண்டும் பயன்படுத்தியிருப்பார்கள். இவர் நடித்த, டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்த ‘கூலிக்காரன்’ படத்தில் முதலில் நடிப்பதற்காகப் பேசப்பட்டவர் ரஜினிகாந்த். ஆனால், அப்போது அவர் கேட்ட சம்பளத்தில் அந்தப் படமே எடுக்கப்பட்டுவிட்டதாக அந்த நேரத்தில் பத்திரிகைகள் எழுதியிருந்தன. தமிழின் முதல் முப்பரிமாணப் படமான ‘அன்னை பூமி’யில் இவரும் நளினியும் நடித்திருந்தார்கள்.

எல்லோருக்கும் உதவுபவராகத் திரைப்படத்தில் நடிப்பதைவிட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகப் பிறருக்குத் தன்னால் இயன்றவரை உதவியவர் இவர். நடிகை வடிவுக்கரசிக்காக ‘அன்னை என் தெய்வம்’, நடிகர் சரத் குமாருக்காக ‘தாய்மொழி’ எனத் தன்னைப் போன்ற சக நடிகர் நடிகைகளுக்காகப் படங்களில் நடித்துக்கொடுத்தவர் விஜயகாந்த். இளம் இயக்குநர்களை உற்சாகப்படுத்தியதில் இவருக்கு நிகரான ஒரு நட்சத்திரம் இல்லவே இல்லை.

‘சிறைப்பறவை’, ‘உழவன் மகன்’, ‘தெற்கத்திக் கள்ளன்’, ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’, ‘பூந்தோட்டக் காவல் காரன்’, ‘செந்தூரப்பூவே’ (இந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது இவருக்குக் கிடைத்தது), ‘புலன் விசாரணை’, ‘சத்ரியன்’, ‘சின்ன கவுண்டர்’, ‘வானத்தப்போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ என எண்ணற்ற படங்கள் விஜயகாந்தின் வெற்றி மகுடத்தை அலங்கரித்துள்ளன. இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட வெற்றி நாயகன் விஜய காந்தின் பிறந்தநாள் இன்று.  

சனி, ஆகஸ்ட் 21, 2021

புல்லுக்குப் பாயும் நீரா இலவசங்கள்?


திராவிட இயக்கப் பின்புலத்திலிருந்து வந்து அமைச்சராகியிருக்கும் தமிழ்நாட்டு நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை அறிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசியபோது, சமூகப் பொருளாதார நீதிக்கு ஏற்ப எல்லாருக்கும் எல்லாவற்றையும் இலவசமாக வழங்க முடியாது, அப்படிச் செய்தால் அரசு திவாலாகிவிடும் என்று கூறியுள்ளார். திமுக ஆட்சி அமைந்த உடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட 4,000 ரூபாய் உதவி தகுதியற்ற பலருக்கும் சென்று சேர்ந்தது என்பதை அவர் வருத்தத்துடன் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். அதே போல் அரசு ஊழியர் ஓய்வூதிய விஷயத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த அரசின் பொருளாதார நிலைமை கைகொடுக்கவில்லை என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். அப்படிச் சொன்னபோதுதான், எல்லாவற்றையும் இலவசங்களாகக் கொடுத்தால் அரசு திவாலாகிவிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.  நிதியமைச்சரின் இந்தக் கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. இதைத் தொடக்கமாகக் கொண்டு இலவசங்கள் பற்றிய சில விஷயங்களை அலசிப் பார்க்கலாம்.  

தமிழ்நாட்டு அரசியல் களத்தில், குறிப்பாகத் தேர்தல் அரசியலில் இலவசங்கள் குறிப்பிடத்தக்கச் செல்வாக்கைச் செலுத்துகின்றன. இலவசங்கள் குறித்த ஆதரவான எதிரான கருத்துகளுக்கு எப்போதுமே பஞ்சமேயில்லை. பொதுவாகவே இலவசங்கள் தொடர்பான எதிர்ப்பு மனநிலை உள்ளதுபோலவே அவை தொடர்பான சாய்வு மனநிலையும் நம்மிடையே உள்ளது. ஆயிரக்கணக்கான ரூபாய்க்குப் பொருள்களை வாங்குவோம் அதற்காகப் பத்து ரூபாய் பெறுமான பொருள் இலவசமாகக் கிடைத்தால் போதும் கிடைப்பதற்கரிய பொருள் கிடைத்தது போல் மகிழ்வோம். உண்மையில் அது இலவசமாக இருக்காது நம்மிடம் அதற்கும் சேர்த்துத்தான் பணம் பெற்றிருப்பார்கள். ஆனால், அது குறித்து நாம் யோசிப்பதேயில்லை. அந்த நேரத்து சந்தோஷம் நமக்கு எப்போதும் முதன்மையாகிவிடுகிறது. மேலும், ஆழமாக யோசிக்கும்போதுகூட, அதற்கும் சேர்த்துத்தான் பணம் கொடுத்துவிடுகிறோமே ஆதலால் அது இலவசமன்று நமக்கான உரிமைதானே என நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்கிறோம். இப்படிச் சந்தோஷப்படும் நம்மிடம் யாராவது ஒருவர் சும்மா எதையாவது கொடுத்தால் உடனே நாம் வாங்கிவிடுவதில்லை. அவர் ஏன் நமக்குக் கொடுக்க வேண்டும் என ஒருமுறைக்குப் பலமுறை யோசிக்கிறோம். ஓரிடத்தில் இலவசத்தை எந்தக் கேள்வியுமின்றி பெறுவதில் மகிழ்ச்சியடையும் நாம்தான் இன்னோரிடத்தில் அதே இலவசம் தொடர்பாக ஆயிரம் சந்தேகங்களை எழுப்பிக்கொள்கிறோம்; இரண்டு வகையாகவும் நாம்தான் செயல்படுகிறோம்.

சில இடங்களில் இலவசத்தை அனுபவிக்கும் நாம் சில இடங்களில் அதே இலவசத்தை அனுபவிக்க மறுக்கிறோம். ஏன் இந்த முரண்பாடு? எந்த இடத்தில் நாம் அனுபவிக்கிறோம் எந்த இடத்தில் மறுக்கிறோம் என்பதை நிதானமாகச்  சிந்தித்துப்பார்க்கும்போது, நமக்கு உரிமை என்று நம்புமிடத்தில் நாம் அதை அனுபவிக்கிறோம், நமக்கு உரிமையானதில்லை என்று கருதுமிடத்தில் அதை மறுத்துவிடுகிறோம். ஆக, இலவசம் பெறுவது தொடர்பாக நமக்கு ஒரு தெளிவு இருக்கத்தான் செய்கிறது. ஓடும் ரயிலில் சிலர் வெறுமனே பிச்சை கேட்டுச் செல்வார்கள். சிலரோ அந்த ரயில் பெட்டியைச் சுத்தப்படுத்தியபடி காசு கேட்பார்கள். வெறுமனே பிச்சை கேட்பவருக்குக் கொடுப்பவர்களும் இருப்பார்கள்; சுத்தப்படுத்திவிட்டுக் காசு கேட்பவருக்குக் கொடுக்காதவர்களும் இருப்பார்கள். பெறுபவர்களுக்கு ஒரு தெளிவு இருப்பதைப் போல் கொடுப்பவர்களுக்கும் ஒரு தெளிவு இருக்கவே செய்கிறது.

இப்படி இலவசத்துக்கு இரண்டு பக்கங்கள் உள்ளபோது, அது தொடர்பான விவாதங்களும் விமர்சனங்களும் எழுவது இயல்பு. அதிலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு தரும் இலவசங்கள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகிவருகின்றன; அதே நேரத்தில் ஒரு தரப்பாரால் வரவேற்கவும் படுகின்றன. இலவசங்கள் தருவதால் மக்கள் சோம்பேறிகளாகிவிடுவார்கள் என்கிறது ஒரு தரப்பு. இலவசங்கள் மக்களுக்கான உரிமைதான் அரசுகள் அத்தகைய இலவசங்களைத் தருவதில் எந்தத் தவறுமில்லை அதே வேளையில் அது ஜனநாயக நாட்டில் மக்கள் நலம் நாடும் அரசின் கடமையே என்றுரைப்பாரும் உண்டு.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 1967 ஆம் ஆண்டில் ஆட்சியதிகாரத்தை காங்கிரஸிடமிருந்து கைப்பற்றிய திமுகவின் ஆட்சிதான் இத்தகைய இலவசங்களுக்கு வழிவகுத்தது என அண்ணாவின் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்னும் திட்டத்தைக் கைகாட்டுபவர்கள் இருக்கிறார்கள். அதே மனிதர்கள், அந்தத் திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை, அரசின் பொருளாதாரம் இடம்கொடுக்கவில்லை என்பதையும் குறையாகச் சொல்வார்கள். அண்ணாத்துரை தலைமையில் அமைந்த அந்த ஆட்சி தமிழ்நாட்டை ஒரு முன்னுதாரண மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டது. அப்படியமைந்த ஆட்சி கண்டிப்பாக மக்களைச் சோம்பேறி ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படியொரு முடிவை எடுத்திருக்க இயலாது. அப்படியெனில், மக்களில் ஒரு பகுதியினருக்கு அப்படியொரு உதவி தேவைப்பட்டது என்பதே உண்மை.

இலவசங்களைப் பொறுத்தவரை கல்வி, மருத்துவம் போன்றவற்றை இலவசமாகத் தர வேண்டும் என்றே பெரும்பாலானோர் கருதுகிறார்கள். அவர்கள் எங்கே முரண்படுகிறார்கள் என்றால், இலவச அரிசி, இலவச தொலைக்காட்சி, இலவச மிக்ஸி, இலவச கிரைண்டர் போன்ற விஷயங்களையே எதிர்க்கிறார்கள். இப்படி எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுக்கும்போது மக்களை அது சோம்பேறிகளாகிவிடக் கூடும் என்று அஞ்சுவதாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால், இலவசங்களை ஆதரிப்போர் இது அடிப்படையற்ற அச்சம் என்கிறார்கள். வெறுமனே இப்படியான இலவசங்களைப் பெற்றுக்கொண்டு மக்கள் எந்த வேலையும் செய்யாமல் இருந்துவிடுவார்கள் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.  

இதில் இன்னொரு அம்சமும் கவனிக்கத்தக்கது. இலவசங்களை ஆதரிப்போரில் பெரும்பாலானோர் இடது சாரி மனப்போக்கு கொண்டவர்களாகவும், எதிர்ப்போரில் பெரும்பாலானோர் வலது சாரி மனப்போக்கு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். நடிகர் ரஜினி காந்த் திரைக்கதை வசனம் எழுதி வள்ளி என ஒரு திரைப்படம் வெளிவந்தது. அந்தப் படத்தில் மந்திரி ஒருவர் இலவச வேட்டி, சேலை வழங்குவார். அங்கே வரும் வீரைய்யன் என்னும் கதாபாத்திரமேற்றிருந்த ரஜினி, சேலை வேட்டி வேண்டாம் வேலை வெட்டி கேளுங்க, வேலை வெட்டி இருந்தா சேலை வேட்டி நாமே வாங்கிக்கலாம் என்று கூறுவார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதிய சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்கார் திரைப்படத்திலும் இலவசத் தொலைக்காட்சி பெட்டிகளைத் தெருவில் போட்டு உடைப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். 

அரசியலில் ரஜினிகாந்த் இடதா வலதா என்பதை முடிவுசெய்யும் முன்பே அவர் அரசியலிலிருந்து விலகிவிட்டபோதும், அவரது நடவடிக்கைகள் அவர் எந்தப் பக்கம் சாய்ந்திருந்தார் என்பதைத் தெளிவுபடுத்தியது. அதைப் போலவே எழுத்தாளர் ஜெயமோகனும் வலதுசாரிச் சாய்வு கொண்டவர் என்பதைத் தமிழ்நாடு அறியும். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இலவசங்களுக்கு எதிராக இருப்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், தமிழ்நாட்டு நிதியமைச்சர் போன்ற திராவிட இயக்கப் பின்னணி கொண்ட ஒருவர் இலவசம் தொடர்பான மாற்றுக்கருத்தை முன்வைக்கும்போது அது பரிசீலிக்கத்தக்கதாகிறது.

உண்மையில் இலவசம் என்பதை வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ சட்டென்று முடிவுகட்டிவிட முடியாது என்றே தோன்றுகிறது. மகளிருக்கு உரிமைத் தொகையாக அரசு வழங்கவிருக்கும் ரூ. 1,000 தொடர்பாகக் கணக்கெடுப்பு நிகழ்த்தி அதன் பின்பே அதை வழங்க முடியும் என்று நிதியமைச்சர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றே பெரும்பாலானோர் கருதுகிறார்கள். என்னதான் மக்கள் நலத் திட்டமாக இருந்தபோதும், அது தகுதியானோரை மட்டும் சென்றடையும்போதுதான் அதனால் பலன் இருக்கும். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் சிறிது பாயலாம் அதைச் சகித்துக்கொள்ள முடியும். ஆனால், நீரில் பெரும்பகுதியைப் புல்லே பெற்றுக்கொள்ளுமானால் அது பயனற்றுப் போய்விடும். அரசு தரும் இலவசங்களைப் பெறுவதில் பொதுமக்களுக்கு எந்தத் தயக்கமுமில்லை அது நமது வரிப்பணத்தில் தரப்படுவதுதானே என அத்தகைய இலவசங்களை உரிமையாகவே கருதுகிறார்கள். எனவே, இத்தகைய இலவசங்களை வழங்குவதில் ஒரு தெளிவையும் கறார்தன்மையையும் அரசுதான் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. வாக்கு வாங்குவதற்காக இலவசங்களைப் பயன்படுத்தாமல் உண்மையிலேயே பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்படுவோருக்கான இலவசங்கள் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டும். அவற்றைப் பெறத் தகுதியானோரைச் சரியாக இனங்கண்டு மக்கள் நலத் திட்டங்களை அவர்களிடம் கொண்டுசேர்ப்பதில் எந்தப் பாரபட்சமுமற்று அரசு நடந்துகொள்ளும்போது இலவசங்களால் எதிர்பார்க்கும் பயனும் பலனும் கிடைக்கக்கூடும். அதை விடுத்து வெறுமனே எல்லாருக்கும் எல்லாவற்றையும் வாரி இறைத்தால் அதனால் பொருளாதார நிலை மேலும் பலவீனமாகுமே தவிர யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும். நிதியமைச்சர் சொல்வது போல் அரசு திவாலாகிவிடும் என்பதை மறுப்பதற்கில்லை. 

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக ரோஹின் என்னும் பெயரில் எழுதப்பட்டது. 

புதன், ஆகஸ்ட் 18, 2021

ஒரு காட்சி இரண்டு படங்கள்


தற்செயலாக இரண்டு படங்களை 17.08.2021 அன்று கே டிவியில் பார்த்தேன். ஒன்று  கலைஞர் மு.கருணாநிதி கதை வசனத்தில் இராம.நாராயணன் இயக்கிய மக்கள் ஆணையிட்டால்; மற்றொன்று விசு கதை வசனம் எழுதி இயக்கிய மீண்டும் சாவித்திரி. முதல் படம் நான்கு மணிக் காட்சியாக ஒளிபரப்பானது. இரண்டாம் படம் இரவு 10:30க்கு ஒளிபரப்பானது. இரண்டு படங்களிலும் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. ஏழை எளியவர்களுக்குத் தண்ணீர் தேவை என்பதால் ஃபயர் இன்ஜினுக்கு போன் செய்து வரவழைக்கும் காட்சி அது. 

மக்கள் ஆணையிட்டால் 1988இல் வெளியாகியிருக்கிறது. மீண்டும் சாவித்திரி 1996இல் வெளியாகியிருக்கிறது. முதல் படத்தில் விஜய்காந்த் ஃபயர் இன்ஜினுக்கு போன் செய்து வரவழைக்கிறார். இரண்டாம் படத்தில் விசு வரவழைக்கிறார். அவரது அறிமுகக் காட்சியே அது தான். இரண்டு படங்களிலும் ஏழைகளில் வயிறு எரிகிறது அதை அணைக்கத் தண்ணீர் தேவை என்பதாக வசனம் வருகிறது. முந்தைய படத்தைப் பார்க்காமலேயே விசு அப்படியான காட்சியை வைத்திருந்தாரா என்பது தெரியவில்லை. கவனக் குறைவால் நேர்ந்ததாகவும் இருக்கலாம். ஏனெனில், முந்தைய படத்தைப் பார்த்திருந்தால் கண்டிப்பாக அப்படியொரு காட்சியை வைத்திருந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை உதவி இயக்குநர் யாராவது ஒருவர் சொன்ன காட்சியாகவும் இருக்கலாம். 

இதேபோல் பாலைவன ரோஜாக்கள் படத்தில் கலைஞர், வாள் முனையைவிட வலிமையானது பேனா முனை என வசனம் எழுதியிருப்பார். ஆர்.சி.சக்தி தனது பத்தினி என்ற படத்தில் இதே கூற்றை நெப்போலியன் கூறியதாக- அப்படித்தான் நினைவு- வசனம் எழுதியிருப்பார்.  

சனி, ஆகஸ்ட் 14, 2021

இருளாய்த் தொடரும் வெறுப்பு


தெளிவற்ற சம்பவங்களாகத் தொடங்குகிறது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள குருதி என்னும் மலையாளப் படம். சிறிது சிறிதாகப் படம் தெளிவடைகிறது. படம் தெளிவடையும்போது, நமக்குக் குழப்பம் அதிகரிக்கிறது. மதம், மனித நேயம், கடவுள், தண்டனை, நம்பிக்கை, கடவுள் நிமித்தமான பழிவாங்கல் எனப் படம் பல விஷயங்களைப் பேசுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருப்பதில் பிழையில்லை. ஆனால், ஒன்றை விரும்பி மற்றதை வெறுக்கும்போது அங்கே சிக்கல் உருவாகிறது. மனிதர்களை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சமயங்களும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் உண்மையில் என்ன செய்து வருகின்றன? மக்களிடையே வெறுப்பை வளர்த்து அதில் குளிர்காய்கின்றன. அப்படிக் குளிர்காயும் மதங்களில் சிக்குண்டு சாமானிய மனிதர்களின் வாழ்வு சிதிலமடைகிறது. மதம் சீரழிப்பதறியாமல் மீண்டும் மீண்டும் கடவுள், மதம் என அந்தக் கழிசடைக் கருத்துருக்களிலேயே கிடந்துழல்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவேயில்லையா?

இப்ராஹிம் தன் மனைவியையும் குழந்தையையும் நிலச்சரிவில் இழந்துவிட்டு அவர்களை மறக்க முடியாமல் வனப் பகுதியில் ஒரு தனிமையான வீட்டில், தன் தம்பி ரசூல், தந்தை மூசா ஆகியோருடன் வசித்துவருகிறான். அந்த வீட்டுக்கு அருகிலேயே, நிலச்சரிவில் தன் மனைவியை இழந்த தன் தமையனுடன் வசித்துவருகிறாள் சுமதி. சுமதி  இப்ராஹிம் மீது அன்புகொள்கிறாள். பெண்ணற்ற அந்த வீட்டுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் அவள்தான் செய்கிறாள். இப்ராஹிமுக்கு அவள் மீது பிரியம் இருக்கிறது. ஆனால், அவனால் அவளைத் திருமணம்செய்துகொள்ள முடியவில்லை. மனைவி குழந்தை ஞாபகம், மதம் போன்றவை அவனைத் தடுக்கின்றன. இந்தச் சூழலில் ஓரிரவில் இப்ராஹிம் வீட்டுக்கு சப் இன்ஸ்பெக்டர் சத்யன் ஓர் அப்பாவி வியாபாரியான இஸ்லாமியரைக் கொன்ற இந்து இளைஞனான விஷ்ணு என்னும்  ஒரு கொலைக் குற்றவாளிக் கைதியுடன் வருகிறார். யாரையும் வெளியே செல்லக் கூடாது என்று சொல்லி அவர்களது மொபைல் போன்களைப் பறித்துவைத்துவிடுகிறார். சிறிது நேரத்தில் வீட்டுக்குள் உணவு கொண்டு வந்து மாட்டிக்கொள்கிறாள் சுமதி. அடுத்து விஷ்ணுவைப் பழிவாங்கும் நோக்கத்துடன் அவனைத் தேடி வருகிறார் கொல்லப்பட்ட வியாபாரியின் மகனான லைக். அதைத் தொடர்ந்து அந்த இரவில் அடுத்தடுத்துப் பல திகில் சம்பவங்கள் நிகழ்ந்தேறுகின்றன.

மனித மனங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை மிக அண்மையில் போய்ப் படம்பிடித்துத் திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். பெரும்பாலான சம்பவங்கள் ஓரிரவில் நடந்துமுடிந்துவிடுகின்றன. ஓரிரவில் இத்தனை சம்பவங்களை ஒரு குடும்பம் எதிர்கொண்டால் அதன் நிலைமை என்னவாகும்? துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதம் மனிதரைப் பயமுறுத்தவும் பயன்படுகிறது; பாதுகாப்புக்கும் பயன்படுகிறது. அது யார் கையில் எந்தச் சூழலில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பயன்பாடு இருக்கிறது. கைதியைப் பத்திரமாகப் பாதுகாக்கத் துடிக்கிறார் சத்யன். வீட்டுக்கு வந்த அவர்கள் மாற்று மதத்தினர் என்றபோதும் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் இப்ராஹிம் இருக்கிறான். ஆனால், அவன் தம்பி ரசூலுக்கோ மனிதர்களைவிட மதம் முக்கியமாகப் படுகிறது. தங்கள் மதத்துக்காக ஏதாவது செய்தாக வேண்டும் அது தனது புனிதக் கடமை என்ற கருத்தில் ஊறிப்போய்க்கிடக்கிறான். சுமதிக்கு இப்ராஹிம் மீது காதல் இருக்கிறது. அதே நேரத்தில் தன் மதத்தினனான விஷ்ணுவைக் காப்பாற்றவும் விரும்புகிறாள். இது ஒருவகையான ஆடு புலி ஆட்ட விளையாட்டுதான்.

சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்வதற்காகத் திரைக்கதையில் பலவிடங்களில் லாஜிக் மீறலை எதிர்கொண்டிருக்கிறார்கள். நம்ப முடியாத விஷயங்களைச் சகித்துக்கொண்டுதான் படத்தைத் தொடர வேண்டியதிருக்கிறது. இது முழுக்க முழுக்க சினிமாவுக்காக உருவாக்கப்பட்ட திரைக்கதை. இருவேறு மதங்களைப் பற்றி விமர்சிக்கிறார்கள். ஒவ்வொரு பக்கத்திலும் வலுவான வாதங்களை எடுத்துவைக்கிறார்கள். வசனங்களும் கூராயுதம் போல் படத்தில் பயன்பட்டிருக்கின்றன. பல காட்சிகளில் பூடகமான மன உணர்வை இசை வழியே வெளிப்படுத்துகிறார்கள். பெரும்பாலான காட்சிகள் இருளின் மத்தியிலேயே நகர்ந்தாலும் மதங்களில் நிரம்பி வழியும் வெறுப்பு அரசியலை அம்பலமாக்குகிறார்கள்.

முதல் இருபது நிமிடங்கள் எதுவும் புரியாமலே படத்தைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. படம் எங்கே போகப் போகிறது என்ன நடக்கப் போகிறது என்பதையே உணர முடியாத திரைக்கதையில் சப் இன்ஸ்பெக்டர் சத்யன் நுழையும் போதுதான் ஓரளவுக்குப் படத்தின் திசையை ஊகிக்க முடிகிறது. ஒரு குற்றச் செயல் அதுவும் மத அடிப்படையிலான கொலைச் சம்பவம் மனிதர்களிடையே எப்படி விஷ விதைகளைத் தூவுகிறது என்பதை மிகவும் துணிச்சலாக, வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள்.

அடிப்படையில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்வதை விரும்புகிறார்கள். ஆனால், அப்படிப் பகிர்வதைச் சிக்கலாக்குகின்றன மதமும் அது தொடர்பான நம்பிக்கைகளும். மனிதர்களுக்குத் தேவை மனிதர்கள்தாம் மதமல்ல. ஆனால், இன்னும் மனிதர்கள் மதத்தைத் தூக்கிச் சுமந்துகொண்டே இருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு காலம் இப்படி ஆடு புலி ஆட்டம் விளையாடிக் கொண்டே இருப்பார்களோ? இந்த விபரீத விளையாட்டுக்கு எல்லையே இல்லையா? இப்படியான பல கேள்விகளுடன் படம் முடிந்துவிடுகிறது. இப்படியான கேள்விகளை எழுப்பவதையே படம் முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இயக்குநர் மானு வாரியரின் முதல் மலையாளப் படம் இது. கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார் அனிஷ் பல்யால். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவைக் கவனிக்க இசையமைத்திருக்கிறார் ஜேக்ஸ் பிஜாய். ரோஷன் மேத்யூ, பிரித்வி ராஜ், மம்மு கோயா, ஸ்ரீண்டா, முரளி கோபி, சைன் டாம் சாக்கோ ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கிறது குருதி. திரில்லர் வகைப் படமாக இருந்தபோதும், தீவிரமான மன உணர்வுகளையும் படம் வெளிப்படுத்தியிருக்கிறது; சமூகம் சார்ந்த அரசியலை விவாதித்திருக்கிறது. ஆகவே, லாஜிக் மீறல்களைச் சகித்துக்கொண்டு படத்தை அலுப்பில்லாமல் ரசிக்க முடிகிறது. 

வியாழன், ஆகஸ்ட் 12, 2021

மிக்சர் மாமா

அவன் ஒரு லோக்கல் செய்திப் பத்திரிகையில் செய்தி உற்பத்திப் பணியைச் செய்துகொண்டிருந்தான். காலை முதல் இரவுவரை சற்றும் அலுப்பில்லாமல் செய்தியை உற்பத்திசெய்துகொண்டேயிருப்பான். எந்தச் செய்திக்கு உப்பு தூக்கலாக இருக்க வேண்டும். எந்தச் செய்திக்கு நாட்டுச் சர்க்கரை போட வேண்டும் எந்தச் செய்திக்குக் காரம் மிகுதியாகவும் எந்தச் செய்திக்குக் காரம் மிகாமலும் இருக்க வேண்டும் என்பவை எல்லாம் அவனுக்கு அத்துப்படி.

ஒருநாள்  திடீரென்று அவனை எடிட்டர் அழைப்பதாக அவனுடைய குழுத் தலைவர் தெரிவித்தார். ஏன் அவனை அழைக்கிறார் எடிட்டர் என்று  அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், எடிட்டர் அழைத்தால் ஒன்று ஏதோ ஒரு பெரிய தவற்றை அவன் இழைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அவன் ஏதோ சாதனை செய்திருக்க வேண்டும். தான் செய்தது என்ன என்பது அவனுக்குப் புலப்படவில்லை. சரி என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என அவனுடைய எடிட்டரைப் பார்க்கப் போனான். அவன் போன நேரம் அவர் அமைதியாக மிக்சரைத் தின்றுகொண்டிருந்தார். அவர் மிக்சர் தின்னும் அழகு பார்ப்பதற்குச் சுவையாக இருக்கும். அது மிக அரிதான செயலன்று. நாள்தோறும் நடைபெறும் ஒன்றுதான். என்றபோதும், மலை போல் கடலலை போல் எத்தனைமுறை பார்த்தாலும் அது அலுக்காத காட்சி. மிக்சர் சாப்பிடுவதற்காகவே பிறந்தவர் போல் அவர் மிக்சர் சாப்பிடுவார்.

மிக்சரை வலக் கையால் ஒரு குத்து அள்ளுவார். அதை அப்படியே இடது உள்ளங்கையில் கொட்டுவார். அப்படிக் கொட்டும்போதும் அவரது முகத்தில் தென்படும் மலர்ச்சியை அவர் முதல் காதல் பொழுதிலோ காமப் பொழுதிலோகூடக் கொண்டிருந்திருக்க மாட்டார் என்றே தோன்றும். மிகவும் நிதானமாக ஓமப்பொடியையும் காராப்பூந்தியையும் தனித்தனியாக எடுத்து எடுத்து வாயில் போட்டு அதக்குவார். இடையிடையே வேர்க்கடலையும் மொறுமொறுப்பான கருவேப்பிலையையும் ஊடுபயிர் போல் வாயில் போட்டு மெல்லுவார். வேர்க்கடலையை எடுக்கும்போது, அதன் தொலியை விரல்களிடையே வைத்து அகற்றி மென்மையாக ஊதுவார். கடலையும் பறந்துவிடக் கூடாது தொலியும் அகல வேண்டும் வாயிலுள்ள மிக்சரும் சிந்திவிடக் கூடாது. இந்த மூன்றையும் அனுசரித்து மிக லாகவமாக அதை அவர் செய்வார். இத்தனை லாகவமாக அவர் எடிட்டர் பணியைக்கூடச் செய்ததில்லை. மிக்சர் தின்பதே ஒரு தவம் போல் தோன்றச் செய்துவிடுவார். அவர் மிக்சர் சாப்பிடும் அழகில் சொக்கிப்போன அவன் தனது வேலையை மறந்துவிட்டான். மிக்சர் சாப்பிடுவதில் லயித்திருந்த  எடிட்டரும் அவனைக் கவனிக்கவில்லை. ஒரு வேர்க்கடலை தவறிக் கீழே விழுந்தபோது, பதறிப்போய் அதை எடுப்பதற்காகக் குனிந்தவர் நிமிர்ந்தபோது, எதிரே நின்ற அவனைக் கவனித்தார்.

என்ன என்பதுபோல் பார்த்தார். வாயில் மிக்சரை நிறைத்துவைத்திருந்ததால் அவரால் பேச இயலவில்லை என்று சொன்னால் உங்கள் புத்திக்கூர்மையைச் சந்தேகிப்பதுபோல் ஆகிவிடும். மிக்சரைத் தின்று முடித்துக்கொள்ளுங்கள் கேட்கிறேன் என்றான். அவர் சிரித்துக்கொண்டே, அது ஆயுளுக்கும் நீளும் என்பதுபோல் சைகை காட்டினார். அவ்வளவு நாள் தாங்காது என்பதால் அவன், தன்னை ஏன் அழைத்தார் என்று வினவினான்.

உடனடியாக எடிட்டர் மிக்சரைக் கொட்டிவைத்திருந்த காகிதத்தை அவனிடம் நீட்டினார்அவனது வேலை நீக்கத்தை அறிவித்த நிறுவனத்தின் கடிதம் அது. ஆங்காங்கே மிக்சரைப் பொரித்த எண்ணெய்க் கறை அந்தக் காகிதத்தில் தெரிந்தது. அது பார்ப்பதற்கு ஒரு சர்க்கஸ் கோமாளியைப் போல இருந்தது. அதைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். எடிட்டர் வழக்கம்போல் மிக்சர் கொறிக்கத் தொடங்கிவிட்டார்.

அவன் பார்த்துவந்த செய்தி உற்பத்திக் கண்காணிப்பாளர் பணியிலிருந்து நீக்கப்படுவதாகவும் அவனுக்கு இழப்பீடாக ஒரு கிலோ மிக்சர் தரப்படும் என்றும் வீடு செல்லும்வரை கொறித்துக்கொண்டே போக ஏதுவாக நிர்வாகத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், நிறுவனம் இப்போது இருக்கும் பொருளாதார நிலையில் இந்த மிக்சரை வாங்கவே சிலரது இதயத்தை அறுத்தெடுத்து அடகுக் கடையில் வைத்திருக்கிறோம் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்திருந்த அந்தக் கடிதம் அழகான ஆங்கிலத்தில் இலக்கணச் சுத்தமாக எழுதப்பட்டிருந்தது. ஆனால், கடிதத்தை எழுதியிருப்பது என்பதை அறிவிக்கும் எந்த ஒரு கையெழுத்தும் இடப்பட்டிருக்கவில்லை. அந்தக் கடிதத்தின் இலக்கண மேன்மையை ரசிக்கும் நிலையில் அவன் இல்லை. இனி எடிட்டரிடம் கேட்க ஒன்றுமில்லை. அவரிடம் கேட்பதில் எந்த அர்த்தமுமில்லை. அவர் நிம்மதியாக மிக்சர் சாப்பிடட்டும். யார் வாழ்ந்தாலும் அழிந்தாலும் அவருக்கென்ன? அவராவது இன்பமயமான வாழ்வை அனுபவிக்கட்டும் என்றெண்ணி வந்துவிட்டான்.  

அவனுக்கு, செய்தி உற்பத்தியாளனான தன்னை ஏன் செய்தி உற்பத்திக் கண்காணிப்பாளர் எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள் எனப் புரியவில்லை. அதை யாரிடம் கேட்கலாம் என யோசித்தான்குழுத் தலைவரான தோழரிடம் கேட்கலாம் என்று போனான். அவரிடம் தான் பணி நீக்கம் செய்யப்பட்ட செய்தியைச் சொன்னான். அப்படியா என்பதுபோல் பார்த்தாரா, அப்பாடா என்பதுபோல் பார்த்தாரா என்பது அவனது சிற்றறிவுக்குப் புலப்படவில்லை. தன்னை ஏன் உற்பத்திக் கண்காணிப்பாளர் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள் எனக் கேட்டான். நீங்கள் உற்பத்திக் கண்காணிப்பாளர் என்பதை மறந்து உற்பத்திப் பணியில் ஈடுபட்டதுதான் நீங்கள் செய்த தவறு அதனால்தான் பணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றார் அவர். இதை யார் சொன்னது எக்ஸா என்று எடிட்டரின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டான். அவர் பதறிப்போய் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஆமாம் எடிட்டர் சார் சார் சார் தான் என்று சொன்னார். ஏன் இத்தனை சார் என்று யோசித்தவன் அங்கிருந்த சிசிடிவியைப் பார்த்தான். உதட்டசைவில் எடிட்டர் மூன்று சாரைக் கவனித்துவிடுவார் என்ற தோழரின் நம்பிக்கையை உணர்ந்துகொண்டான்.

தான் உற்பத்தியாளன் என்றே நினைத்திருந்தவனுக்கு இது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. உற்பத்திக் கண்காணிப்பாளன் என்பதை இதுவரை யாருமே ஏன் சொல்லவில்லை என்று கேட்டான். அதையெல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள், அதை நீங்களே முதலிலேயே கேட்டுத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும் என்று தோழர் கூறினார். தோழர் கொஞ்சம் கறாரான பேர்வழி. தனக்கு மேல் உள்ளவர்களிடம் மட்டும் நெடுஞ்சாண்கிடையாக நடந்துகொள்வாரே தவிர கீழுள்ளவர்களிடம் கறாரென்றால் கறார்தான்.

சரி என்று கிளம்பினான். வரவேற்பறையில் அவனுக்கான மிக்சர் தரமான பாக்கிங் செய்யப்பட்டுக் காத்திருந்தது. அந்த மிக்சரை எடுத்துக்கொண்டவன், நேரே மீண்டும் எடிட்டர் அறைக்குப் போனான். தன்னிடமிருந்த மிக்சரை அவருக்குக் கொடுத்தான். அவர் திடுக்கிட்டுப் பார்த்தார். நல்லா மிக்சர் சாப்பிடுங்க மாமா, அதுக்குத்தான் பொறந்திருக்கீங்க, நல்லா மிக்சர் சாப்பிடுங்க என்றான். வழக்கம்போன்ற டிரேட் மார்க் புன்னகையுடன் எடிட்டர் மிக்சரைப் பத்திரப்படுத்திக்கொண்டார்.