இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஜூலை 31, 2016

சினிமா ஸ்கோப் 9: ரெண்டும் ரெண்டும் அஞ்சு


பொதுவாகவே திரைக்கதை என்பது ஒரு முரண்களின் விளையாட்டு. எப்போதுமே முரணான விஷயங்களை எடுத்துக்கொண்டு அதில் பயணப்படும்போதுதான் திரைக்கதையின் சுவாரசியம் கூடும். நல்லவர் நல்லது செய்வார் என்பதில் பெரிய சுவாரசியமிருக்காது. ஆனால் ஒரு தீய செயலை அவர் செய்யும்போது, அதற்கான காரணத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்படும். அப்படியான ஆர்வத்தைத் தூண்டும்வகையிலான திரைக்கதையை அமைக்கும்போது ரசிகர்களை எளிதில் ஈர்க்கலாம். 

எனவேதான் பெரும்பாலான திரைக்கதைகள் முரண்களின்மீதே களம் அமைத்துக்கொள்ளும். சின்ன தம்பி திரைப்படத்தில் குடும்ப கவுரவத்தின் சின்னமான குஷ்பு, தாலியென்றால் என்னவென்றே அறியாத பிரபுவைக் காதலித்ததுபோல் நிஜத்தில் எங்காவது நடக்குமா, காலணியைக் கழற்றிவிட மாட்டாரா? அது சினிமா, அங்கே ஒரு முரண் தேவைப்பட்டது அவ்வளவுதான்.  

முரண்களைக் கொண்டு அமைக்கப்படும் திரைக்கதையை ஒரு வகையில் குதிரை சவாரிக்கு ஒப்பிடலாம். சவாரி பிடிபட்டால் காற்றாகப் பறக்கலாம். இல்லையென்றால் காற்றில் பறக்க நேரிடும். இந்த உண்மை புரியாமல் பலர் இதில் சிக்கிக்கொண்டு அல்லல்படுகிறார்கள். சினிமா பார்க்கும்போது திரைக்கதை என்பது மிகவும் சாதாரணமாகத் தோன்றும். இதை எழுதுவது அவ்வளவு கடினமா என்ற எண்ணத்தில் சினிமாவுக்கு வந்துவிடுகிறார்கள். சினிமாவுக்கு எழுதவும் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் பின்னர்தான் அதன் நடைமுறைச் சிரமத்தை உணர்வார்கள். 


ஒருவர் நன்றாகப் படித்திருப்பார், புலமைபெற்றவராக இருப்பார். ஆங்கிலம் அவருக்குத் தண்ணீர்பட்ட பாடாக இருக்கும். ஆனால் அவற்றை நம்பி அவர் ஒரு திரைக்கதையை எழுதத் துணிந்தால் விழி பிதுங்கிவிடும். அதே நேரத்தில் இன்னொருவர் எதுவுமே பெரிதாகப் படித்திருக்க மாட்டார். பள்ளிப் படிப்பையே பாதியில் விட்டுவிட்டு வந்திருப்பார். வெட்டியாகப் பொழுதைக் கழிப்பவராக இருப்பார், ஆனால் சுவாரசியமான திரைக்கதைகளாக எழுதிக் குவிப்பார்.

இதுவே முரண் தானே? இது எப்படிச் சாத்தியம். இதை அறிவால் அறிந்துகொள்ள முயன்றால் தோல்வியே மிஞ்சும். இதை உணர்வுரீதியில் அணுகினால் மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். அப்படியான உணர்வுகொண்டோரால் தான் திரைக்கதையை உருவாக்க முடியும். ஏனெனில் அது ஒரு குழந்தையைக் கையாள்வது போன்றது. அதற்கு அறிவு அடிப்படைத் தேவையல்ல, ஆனால் இங்கிதமான உணர்வும் கரிசனமும் இன்றியமையாதவை. திரைக் கதாபாத்திரங்கள் வெறும் நிழல்கள். ஆனால் அவற்றை ரசிப்பவர்கள் ரத்தமும் சதையுமான மனிதர்கள். இந்தப் புரிதலுடனும் நெகிழ்ச்சியான உணர்வுடனும் கதையைக் கட்டுக்கோப்பாகவும் அனைவரும் ரசிக்கும்படியாகவும் இயல்பான சம்பவங்களால் கட்டி நகர்த்திச் செல்லும் திறமை இருந்தால்போதும், சின்னச் சின்ன சம்பவங்களில் ரசிகர்களை நெகிழ்த்திவிட முடியும். 

அப்படியான காட்சிகள்தான் ரசிகர்களை ஈர்க்கவும் செய்யும். கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் நெகிழ்ச்சி என்பது அதன் வரம்பைக் கடந்துவிடாமலிருக்க வேண்டும். இல்லையென்றால் ரசக்கேடாய் அமைந்துவிடும். இந்த வரம்பைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி, சேரனின் தவமாய்த் தவமிருந்து போன்ற திரைப்படங்களைப் பாருங்கள். உங்களுக்கே புரிந்துவிடும்.


திரைக்கதையில் ஒரு காட்சி அதிகாலை புலர்வது போல் இயல்பாகத் தொடங்க வேண்டும்; மாலையில் கதிரவன் மறைவது போல் கச்சிதமாக நிறைவுபெற வேண்டும். இதற்கான பயிற்சியைக் காலமும் அனுபவமும் தான் கற்றுத்தரும், லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் பின்னிரவில் நடிகை ஸ்ரீவித்யா வீட்டின் பண்ட பாத்திரங்களை எடுத்துப் போட்டு விளக்கிக்கொண்டிருப்பார். பல குடும்பங்களில் இந்தக் காட்சியை அன்றாடம் நாம் பார்த்திருப்போம். அதைத் திரைப்படத்தில் பார்க்கும்போது நமக்கு உணர்வெழுச்சி ஏற்படுகிறது. 

இப்படியான சின்னச் சின்ன இயல்பான சம்பவங்கள் ஒரு படத்தில் இருந்தாலே அந்தப் படம் ரசிகர்களுக்கு நெருக்கமானதாக மாறிவிடும். இந்தக் காட்சியை அமைக்கப் பெரிய அறிவு அவசியமல்ல. ஆனால் வீடுகளில் அம்மாக்கள் செய்யும் அப்படிப்பட்ட வேலைகளைக் கண்களால் அல்லாமல் மனதால் கவனித்திருக்க வேண்டும். அப்படிக் கவனித்திருந்தால் பொருத்தமான ஒரு தருணத்தில் அதேவிதமான காட்சியை அமைக்கலாம். 

நடைமுறை வாழ்க்கையில் பார்க்கும் ஒரு சம்பவத்தைத் திரைக்கதையில் கொண்டுவரும்போது கற்பனை வளத்துடன் அந்தக் காட்சி அமைய வேண்டும். இல்லையென்றால் அதற்கு ஒரு ஆவணப் படத் தன்மை வந்துவிடும். யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் ஆவணப் படத் தன்மையிலிருந்து விலகியிருக்க வேண்டும். அப்படியான விதிகளையொட்டி காட்சி அமையும்போது ரசிகர்களின் உணர்வோடும் அது கலந்துவிடும். இதைப் போல் வெயில் திரைப்படத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் பாண்டியம்மாளும் முருகேசனும் தீப்பெட்டிகள் இறைந்துகிடக்கும் வீதியில் பேசியபடி நடந்துசெல்லும்போது சாக்குகளை உதறிக்கொண்டிருக்கும் ஒரு காட்சி வரும். இதைப் போன்ற அவர்கள் வாழ்வில் பார்த்த ஒரு விஷயத்தை ரசனையுடன் பதிவு செய்யும்போது ரசிகர்கள் கிளர்ந்தெழுந்துவிடுவார்கள்.


இப்படியான காட்சிகள் திரைக்கதையில் கைகூடுவதற்குப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அதற்கான பொறுமை இன்றி திரைக்கதையில் கைவைத்தால் வாகை சூட வா, அழகர்சாமியின் குதிரை, மெரினா, நந்தலாலா, தாரை தப்பட்டை, இறைவி போன்ற படங்களைப் போல் படம் அமைந்துவிடலாம். தரக் குறைவான படங்களை எடுக்கக் கூடாது என்ற விருப்பம் உள்ளவர்கள் தாராளமாகத் தமிழ்ப் படங்களைப் பார்க்கலாம், அதிலிருந்து பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். 

உன்னதமான உலகத் திரைப்படங்கள் உங்களை மெருகேற்றுவது போல் தமிழ்ப் படங்களும் உங்களை மேம்படுத்தும். தரமான படத்தில் கற்றுக்கொள்ளும் அனைத்து விஷயங்களையும் தரமற்ற படங்களிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே உலகப் படங்களுடன் இணைந்து உள்ளூர்ப் படங்களையும் பாருங்கள்; அப்போது தான் சினிமாவை முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியும்.

கே.பாக்யராஜ், ஸ்ரீதர் போன்றவர்கள் திரைக்கதையை அமைத்துச் செல்லும் விதத்தைப் பாருங்கள். பெரிய மெனக்கெடுதல் இல்லாமல் மிகவும் இயல்பான சம்பவங்களை அடுக்கிக்கொண்டே சென்று திரைக்கதையை அமைப்பார்கள். அடிப்படையில் ஏதாவது ஒரு முரண் மட்டும் இருந்துகொண்டேயிருக்கும். உதாரணமாக, எந்தப் பெண்ணும் குழந்தையைக் கீழே போட்டுத் தாண்டி பொய் சொல்ல மாட்டாள் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் அப்படி ஒரு பெண்ணால் பொய்ச் சத்தியம் பண்ண முடிகிறது என்பதை வைத்தே அவர் முந்தானை முடிச்சு என்னும் படத்தை உருவாக்கினார். 


அந்தப் பொய்ச் சத்தியத்தின் பின்னணியில் ஓர் உண்மை அன்பு மறைந்திருக்கும். அதுதான் திரைக்கதையின் மைய நரம்பு. அதன் பலம் ரசிகர்களை இறுதிவரை படத்துடன் பிணைத்திருக்கும். ஆகவே, பிரயத்தனத்துடன் காட்சிகளுக்காக மூளையைச் சூடாக்கிக்கொள்வதைவிட நமது வாழ்வில் நாம் கடந்த, கேள்விப்பட்ட சம்பவங்களை, நிகழ்வுகளைப் பொருத்தமான இடங்களில் பொருத்தமான வகையில் பொருத்திவிட்டால்போதும் திரைக்கதை வலுப்பெறும்.

புதன், ஜூலை 20, 2016

சினிமா ஸ்கோப் 8: அழியாத கோலங்கள்


தாவணி அணிந்த கண்ணுக்கினிய பெண் மார்கழி மாதத்தில் வீட்டின் முற்றத்தில் போடும் அழகிய கோலம் போன்றது சினிமாக் கதை. அது நேரிடையானது. ஆனால் திரைக்கதை அப்படியல்ல. அது ஒரு தேர்ந்த ஓவியன் வரையும் ஓவியம் போன்றது. எங்கோ தொடங்கி எங்கோ முடியும் அது. ஆனால் அந்தப் பணி முடிவடையும்போது முழு ஓவியத்தையும் நம்மால் ரசிக்க முடியும்.

திரைக்கதையை எழுதுவது எப்படி என்பதைப் புத்தகத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். ஆனால் அதைவிட எளிதான வழி திரைப்படங்களைப் பார்த்து அதன் வழியே புரிந்துகொள்வதுதான். ஏனெனில் இந்த முறையில் உங்களுக்கு யாரும் கற்றுத் தர மாட்டார்கள். நீங்களே ஒவ்வொன்றாகக் கண்டுபிடிப்பீர்கள். ஒரு கதாபாத்திரத்தை எப்படி அமைக்கிறார்கள், அந்தக் கதாபாத்திரம் எப்படித் திரைக்கதைக்கு உதவுகிறது, திரைக்கதையில் அந்தக் கதாபாத்திரம் பற்றிய தகவல்களை ஒரே நேரத்தில் விளக்குகிறார்களா, துண்டு துண்டாக விளக்குகிறார்களா? ஒரே நேரத்தில் தருவதற்கும் வெவ்வேறு தருணங்களில் தருவதற்கும் என்ன வேறுபாடு? 

பெரும்பாலான படங்களின் திரைக்கதையில் தொடர்புடைய அனைத்துக் கதாபாத்திரங்களையும் படம் தொடங்கிய பத்து இருபது நிமிடங்களுக்குள் அறிமுகப்படுத்திவிடுகிறார்களே அது ஏன்? இப்படியான கேள்விகளை நீங்களே எழுப்பிக்கொண்டு படங்களைப் பார்க்கத் தொடங்கினால், நீங்கள் பார்க்கும் படங்களே உங்களுக்கு விடைகளைத் தரும். அப்படியான கேள்விகளுடன் நீங்கள் படங்களை அணுகும்போது கிடைக்கும் விடை உங்களுக்கு மிகத் தெளிவாகப் புரியும். ஏனெனில் நீங்களே முட்டி மோதி கண்டறிந்த உண்மை அது. அதன் வீரியத்துக்கு இணையே இல்லை.


குறைந்த தகவல்களைக் கொண்டு கதாபாத்திர சித்தரிப்பை நிறைவுசெய்வது நலம். தகவல்களைக் குறைவாகக் கொடுக்க வேண்டும் என்ற எல்லை வகுத்துக்கொண்டால் மிக முக்கியத் தகவல்கள் மட்டுமே அதில் இடம்பெறும். ஆகவே அந்தக் கதாபாத்திரச் சித்தரிப்பு கச்சிதமாக அமையும். ரசிகர்களுக்கும் அந்தக் கதாபாத்திரத்தை மிகவும் பிடித்துவிடும். குறைந்த தகவல்களிலேயே நிறைவான கதாபாத்திரத்தை உருவாக்கிவிடுகிறாரே திரைக்கதையாசிரியர் என்ற ஆச்சரியம் ரசிகருக்கு ஏற்படும். அந்த ஆச்சரியத்துடன் திரைக்கதையை அவர் நம்பிக்கையுடன் பின்தொடர்வார்.

அடுத்து, திரைக்கதைக்குத் தேவையான விளக்கங்கள் மட்டுமே அதில் இடம்பெறுவது நல்லது. இருட்டில் நடக்கும்போது வெளிச்சத்துக்காகக் கையில் விளக்கை ஏந்திச் செல்வோம். அப்போது பாதையில் வெளிச்சம் விழும்படிதான் விளக்கைப் பிடித்துச் செல்வோம். அப்படி நடந்துகொண்டால்தான் கவனம் தவறாமல் நடக்க முடியும். சுற்றுப்புறங்களில் வெளிச்சத்தைச் சிதறவிட மாட்டோம். ஏதாவது சத்தம் கேட்டாலோ அவசியம் ஏற்பட்டாலோ மட்டுமே சுற்றுப்புறங்களில் வெளிச்சம் பாய்ச்சுவோம். திரைக்கதையிலும் அதே போல்தான் செயல்படுவது நல்லது. திரைக்கதையின் பாதையிலேயே போக வேண்டும். அநாவசிய விளக்கத்துக்குள் சென்றுவிட்டால் திரைக்கதையின் பாதையும் திசையும் தப்பும். ஆகவே திரைக்கதைக்கு எது தேவையோ அதை மட்டும் விவரித்துச் சென்றால்தான் முடிவை நோக்கி சீராக நகர முடியும்.  


பாசிலின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளியான படம் பூவிழி வாசலிலே. மலையாளப் படமொன்றின் மறு ஆக்கப்படமான இது ஒரு த்ரில்லர் வகைப் படம். கண்ணாடித் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வேணு கோபால் என்பவரை அவருடைய கம்பெனி எம்.டி. ஆனந்தும் ரஞ்சித் என்னும் உதவியாளரும் கத்தியால் குத்திக் கொல்கிறார்கள். கொலைக்கான காரணம் பெண் விவகாரம். கொலையை பென்னி என்ற குழந்தை பார்த்துவிடுகிறது. பென்னியைத் தேடிவரும் அதன் தாய் ஸ்டெல்லாவும் பார்த்துவிடுகிறார். கொலைகாரர்கள் ஸ்டெல்லாவைக் கொன்றுவிடுகிறார்கள். பென்னி தப்பித்துவிடுகிறான்.

மனைவியையும் குழந்தையையும் இழந்து சாக வேண்டும் என்னும் துடிப்புடன் வாழும் ஜீவாவிடம் வாழ வேண்டிய இந்தக் குழந்தை தஞ்சமடைகிறது. குழந்தைக்கு ராஜா என்னும் பெயரிட்டு அழைக்கிறான் ஜீவா. அவன் ஒரு முன்னாள் டென்னிஸ் ஆட்டக்காரன், அத்துடன் ஓவியனும்கூட. ஜீவாவின் மனைவி சுசிலா தன் குழந்தை ராகுல் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டவள். சுசிலா புத்திபேதலித்துப் போனவள். தன் கணவன் தன் குழந்தையைக் கொன்றுவிடுவான் என்னும் பயம் அவள் மனத்தைப் பேயாய் ஆட்டுகிறது. இந்த எண்ணம் முற்றிய நிலையில்தான் அந்த விபரீதம் நிகழ்ந்திருக்கிறது. அது நடந்த தினம் நவம்பர் 18. அதேபோல் ஒரு நவம்பர் 18-ல் தான் ஜீவாவிடம் ராஜா வந்து சேர்கிறான். ராஜா மூலமாக யமுனா அறிமுகமாகிறாள். இவள் கங்காவின் தங்கை. கங்கா மைக்கேல் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தவள் (இந்த கங்கா வேறு யாருமல்ல. ஸ்டெல்லாதான்). எனவே குடும்பத்துக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்போது ராஜாவுக்கும் யமுனாவுக்கும் சித்தி மகன் உறவு. இப்படிப் போகிறது கதை.


படம் முழுவதும் ஒவ்வொரு இழையாக நெய்யப்படும். கதாபாத்திரங்களுக்கு இடையேயான தகவல்கள் அனைத்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தரப்படும். ஒரு கொலை அதற்கான பின்னணி, அதனால் ஏற்படும் விளைவு என ஒரு புதிர் விடுபடுவது போல் படத்தில் ஒவ்வொரு முடிச்சாக விடுபடும். த்ரில்லர் என்றபோதும் படத்தில் வெளிப்படும் மனித உணர்வுகள் முக்கியமானவை. அந்த உணர்வுகள் இல்லாது வெறும் த்ரில்லராக மட்டும் இருந்திருந்தால் இந்தப் படம் நம் கவனத்தில் நிலைத்திருக்காது. தன் சோகத்தை ஜீவா ராஜாவிடம் விவரிப்பான். காது கேட்காத, பேச முடியாத ராஜா அதைக் கேட்டுக்கொண்டிருப்பான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளருக்கு கதாபாத்திரங்கள் மீது உறவும் பிரியம் கூடும். பேச இயலாத 3 வயதுக் குழந்தையை வைத்து அழகுடன் திரைக்கதையை நகர்த்திச் சென்ற உத்தியே இதைத் தனித்தன்மை கொண்ட படமாக்குகிறது. ஆகவே இந்தப் படத்தைப் பார்க்கும்போது கிடைக்கும் திரைப்பட அனுபவம் அலாதியானது.

பூவிழி வாசலிலே போலவே குறிப்பிடத் தகுந்த மற்றொரு த்ரில்லர் புதிய பறவை. சிவாஜியின் நடிப்பில் தாதாமிராஸியின் இயக்கத்தில் உருவான படம். ஆங்கிலப் படத்தின் தழுவலில் அமைந்த வங்காளப் படத்தின் மறு ஆக்கம் இது. பூவிழி வாசலிலே படத்தில் பாசம் என்றால் புதிய பறவையில் காதல். அதன் மையமும் கொலைதான். ஆனால் சாட்சி கிடையாது. கொலையைச் செய்தவரே ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கான திரைக்கதையை வலுப்படுத்துகிறது உணர்வுபூர்வமான காதல். ஆக என்ன கதை என்றாலும் திரைக்கதையில் மனித உணர்வுகளுக்குப் பிரத்யேகமான இடம் வேண்டும். அப்படி இருந்தால்தான் ரசிகர்களால் படத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். அப்படியான படங்கள் தரும் சந்தோஷத்துக்கு ஈடு இணை இல்லை. எல்லாப் படங்களும் மனிதர்களுக்காக அவர்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்படுகின்றன என்பதை நாம் மறந்துவிடலாகாது.

புதன், ஜூலை 13, 2016

சினிமா ஸ்கோப் 7: ஒரு கைதியின் டைரி



திரைப்படத்தின் முதல் படி கதை. அடுத்த படி திரைக்கதையே. திரைக்கதை திரைக்கதை என்கிறார்களே அதற்கும் கதைக்கும் என்ன பெரிய வித்தியாசம் எனத் தோன்றலாம். ஒரு கதையைச் சுவாரசியமான சம்பவங்களைக் கொண்ட ரசிக்கும்படியான காட்சிகளாக மாற்றும் உத்திதான் திரைக்கதை. கரும்பு போன்றது கதை என்றால் வெல்லம் போன்றது திரைக்கதை. ஆனால் அதை அரிசி மாவுடன் சேர்த்து சுவையான அதிரசமாக மாற்றும்போது அதற்குக் கிடைக்கும் ருசியே தனி. கைப்பக்குவமான சமையல்காரரிடம் அரிசி மாவும் வெல்லமும் சென்று சேர்ந்தால்தானே நமக்கு சுவையான அதிரசம் கிடைக்கும். அதைப் போலவே நல்ல கதையை, சுவாரசியமான சம்பவங்கள் அடங்கிய திரைக்கதையாக மாற்றி ரசனையான சினிமாவாக மாற்றக்கூடிய மாயாஜாலம் அறிந்தவர் இயக்குநர். திரைக்கதையை இயக்குநரே உருவாக்கிக்கொள்ளலாம் அல்லது பிறரை வைத்தும் எழுதச் செய்யலாம்.

திரைக்கதையைப் பற்றி யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். ஆனால் திரைக்கதை எழுதுவது எளிதல்ல. திரைக்கதையை எழுத ரசனையுணர்வும், வாழ்வனுபவமும் தேவை. எப்படிச் சொன்னால் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்பது பற்றிய அனுபவ அறிவு இருந்தால்தான் திரைக்கதையை எழுத முடியும். இல்லாவிட்டால் எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்பதாக முடிந்துவிடும். டி.ராஜேந்தரும் திரைக்கதை எழுதுகிறார், பாரதிராஜாவும் திரைக்கதை எழுதுகிறார். எது நம்மை ஈர்க்கிறது என்பதே திரைக்கதையின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும். 

பாட்ஷா திரைப்படத்தில் ரஜினி

கதை என்றால் கதாநாயகன் எப்படிப்பட்டவன் என்பதைப் பக்கம் பக்கமாக வசனமெழுதி சொல்ல வேண்டும். ஆனால் திரைக்கதையில் வசனமற்ற காட்சி மூலமே சொல்லிவிடலாம். உதாரணமாக ‘பாட்ஷா’ படத்தின் ஒரு காட்சி. ஆட்டோ டிரைவர் மாணிக்கமான ரஜினிகாந்த் கல்லூரி முதல்வரான சேது விநாயகத்திடம் பேசும் காட்சியை நினைத்துப் பாருங்கள். அவர்கள் கண்ணாடி அறைக்குள் பேசிக்கொள்வார்கள். எனவே எந்த வசனமும் கிடையாது. ரஜினி பேசப் பேச, சேதுவிநாயகத்திடம் பதற்றமும் பயமும் கூடும். அவர் மரியாதையுடன் தானாக எழுந்து நிற்பார். காட்சியின் முடிவில் வெளியேவரும் ரஜினி தன் தங்கையான யுவராணியிடம் ‘உண்மையைச் சொன்னேன்’ என்று கூறும்போது திரையரங்கமே அதிரும். மாணிக்கம் ஒரு காலத்தில் பாட்ஷாவாக பம்பாயைக் கலக்கிக்கொண்டிருந்த டான் என்பதை அழகாக, எந்த வசனமுமின்றி மிகவும் அநாயாசமாக விளக்கிவிடுகிறாரே சுரேஷ் கிருஷ்ணா. இதுதான் திரைக்கதையின் பலம். ஆனால் இந்தக் காட்சி ரஜினி போன்ற ஒரு நடிகருக்கு எடுபடும். இதுவே ஒரு புதுமுக நடிகர் என்றால் காலைவாரிவிட்டுவிடும். ஆக எந்த நடிகருக்கு, எந்தக் கதைக்கு எப்படியான திரைக்கதை அமைக்க வேண்டும் என்ற தெளிவு வேண்டும். இந்தத் தெளிவை அனுபவம்தான் கற்றுத்தரும். 

திரைக்கதையில் முக்கியமான விஷயம் லாஜிக்தான். சில லாஜிக்களை மீற வேண்டும். சில லாஜிக்களுக்கு நியாயம் சேர்க்க வேண்டும். ஏனெனில் சில லாஜிக் மீறல்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள், சிலவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதை ஏற்பார்கள் எதை மறுப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அது தெரியாமல்தான் திரைக்கதை பற்றிய ஒரு முடிவுக்கு வர முடியாமல் திரைத்துறையினர் தடுமாறுகிறார்கள். ‘சின்னக் கவுண்டர்’ படத்தில் விஜய்காந்த் கொங்கு பாஷையா பேசினார்? ஆனால் படம் வெற்றிபெற்றதே! ஆடவே தெரியாத ராமராஜன் ‘கரகாட்டக்கார’னாக நடித்து படம் வெள்ளிவிழா கொண்டாடியதே! ஆக லாஜிக் மீறல் சினிமாவில் தவிர்க்க முடியாதது. ஆனால் அதை மிகச் சாமர்த்தியமாகக் கையாளத் தெரிய வேண்டும். அந்த சாமர்த்தியம் எல்லோருக்கும் எப்போதும் வாய்க்காது என்பதில்தான் சினிமாவின் வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது.



‘ஒரு கதையின் டைரி’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதியால் வஞ்சிக்கப்படும் தொண்டனான டேவிட் அரசியல்வாதியையும் அவனுக்கு உடந்தையான இரு நண்பர்களையும் பழிவாங்குவதே கதை. இந்தக் கதைக்குப் பல திருப்பங்களும் நெகிழ்ச்சியான சம்பவங்களும் கொண்ட திரைக்கதையை அமைத்திருப்பார் பாரதிராஜா. அயோக்கியர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக மகனை அயோக்கியனாக வளர்க்கச் சொல்லி நண்பன் வேலப்பனிடம் தந்துவிடுகிறான் டேவிட். சிறைக்குச் சென்ற டேவிட் 22 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து வெளியே வருகிறான். நண்பனோ அவனைக் காவல் துறை அதிகாரியாக வளர்த்துவிடுகிறான். ஆகவே வயது முதிர்ந்த நாயகனே பழிவாங்கலில் ஈடுபடுகிறான். முதியவன் பழிவாங்கத் துடிக்கிறான். இளைஞன் அதைத் தடுக்க முயல்கிறான். எதிரும் புதிருமான இடத்தில் தந்தையும் மகனும் இருக்கிறார்கள். இப்போது நிலைமை என்ன ஆகும் என்ற ஆவலை ஏற்படுத்தி, கடமை, காதல், பாசம், பழிவாங்கும் உணர்ச்சி எனத் திரைப்படத்தை அழகாக நகர்த்திச் செல்கிறார் பாரதிராஜா.


குற்றமிழைத்த மூவரும் 22 ஆண்டுகள் உயிருடன் இருப்பார்களா? டேவிட் வந்து பழிவாங்க வேண்டும் என்றே காத்திருப்பார்களா? 22 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த கைதியான டேவிட் எப்படித் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடுகிறான்? எல்லாப் பாதுகாப்புகளையும் மீறி சிலை மனிதனாக மாறி இறுதிக் கொலையை நிகழ்த்துவது சாத்தியமா? இப்படியான பல கேள்விகளை நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த லாஜிக்கான கேள்விகளைக் கேட்கவிடாமல், உங்களை உணர்ச்சியில் ஆழ்த்திவிடும் நெகிழ்ச்சியான தருணங்களை உள்ளடக்கிய திரைக்கதை. டி.ஐ.ஜி.யின் மகளான ரேவதி டேவிட்டான கமலை, ஒரு கொலைகாரரைத் தனது வீட்டிலேயே தங்கவைக்கிறார். சட்டப்படி அவர் செய்வது தவறு, ஆனால் அதைச் செய்வதில் தவறில்லை எனச் சொல்லும்வகையிலான உணர்ச்சிகரமான சம்பவத்துடன் திரைக்கதையைப் பின்னியிருப்பார் பாரதிராஜா. இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும் திரைக்கதை. ஆனால் அதை எப்படி லாவகமாக இழுக்க வேண்டும் என்ற ஞானத்தைக் கற்க பொறுமையும் அர்ப்பணிப்பும் தேவை.


டாக்டர் உன்னிகிருஷ்ணனுக்கு டேவிட் போனில் பேசும் காட்சி ஒன்றில், ‘நான் இங்கே இருப்பது உனக்கெப்படித் தெரியு’மென டாக்டர் கேட்பார். அப்போது டேவிட், பரிசித்து மகராஜாவின் கதையைச் சொல்லிச் சமாளிப்பார். டாக்டர் அங்கே இருப்பது டேவிட்டுக்கு எப்படித் தெரியும் என்பதை அவருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கே சொல்லாமல் கடந்துசெல்லும் சாமர்த்தியம் அது. திரைக்கதையில் இப்படிச் சில சமாளிப்புகளைச் சமயோசிதமாக செய்யும் திறமை இருந்தால்தான் நல்ல திரைக்கதையை உருவாக்க முடியும். ஒரே விஷயம், லாஜிக் மீறல்களை உணராதபடி பார்வையாளரின் கவனத்தைத் திருப்பி திரைக்கதையை நகர்த்திச் செல்ல வேண்டும். ஏனெனில் அடிப்படையில் சினிமா ஓர் ஏமாற்றுக் கலை. திரைக்கதையில் புத்திசாலித்தனமாக ஏமாற்றத் தெரிந்தால் போதும் சினிமாவை வெற்றிக்கு நகர்த்தலாம். ‘சைலன்ஸ்’ என எல்லோரையும் அமைதிப்படுத்திவிட்டுத்தான் டைரக்டர், ‘ஆக்‌ஷன்’ எனக் கத்தி சினிமாவின் படப்பிடிப்பையே தொடங்குவார். எல்லோரையும் அமைதிப்படுத்திவிட்டு நீங்கள் கத்துகிறீர்களே எனக் கேட்க முடியாது, இந்த முரண்தான் சினிமா.

புதன், ஜூலை 06, 2016

சினிமா ஸ்கோப் 6: புது வசந்தம்




தமிழில் கதைகள் அநேகம், கதையாசிரியர்களும் அநேகர். திரையுலகிலேயே எத்தனையோ உதவி இயக்குநர்கள் நல்ல கதைகளுடன் ஒரே ஒரு வாய்ப்புக்காகச் சுற்றித் திரிகிறார்கள். ஆனால் பிற மொழியில் பெரிய வெற்றிபெற்ற படங்களின் மறு ஆக்க உரிமையைப் பெறுவதில் தமிழ்த் திரையுலகம் காட்டும் ஆர்வத்தைத் தமிழ்க் கதைகளைக் கண்டடைவதில் காட்டுவதில்லை என்பதுதான் யதார்த்தம். சமீபத்தில் வசூல் சாதனை படைத்த பிரேமம் மலையாளப் படத்தின் மறு ஆக்க உரிமையைப் பெறுவதில் தமிழ்த் தயாரிப்பாளர்களிடையே பலத்த போட்டி நிலவியது. கெய்கோ ஹிகாஷினோ என்னும் ஜப்பானிய எழுத்தாளர் எழுதிய த டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ் நாவலைப் போன்ற கதைதான் த்ரிஷ்யம். ஜப்பானிய நாவலின் அடிப்படையில் சஸ்பெக்ட் எக்ஸ் என்னும் திரைப்படமும் வெளியாகி அங்கு பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறது. த்ரிஷ்யம், சஸ்பெக்ட் எக்ஸ் ஆகிய இரண்டு படங்களையும் பார்த்தால் இரண்டும் ஒரே கதை என்பதை யாரும் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் த்ரிஷ்யத்தின் இயக்குநர் ஜீத்து ஜோஸப் தனது படம் சஸ்பெக்ட் எக்ஸின் தழுவலோ நகலோ அல்ல எனத் தைரியமாக மொழிந்தார். கமல் ஹாசன் அதை உண்மை என ஏற்றுக்கொண்டு அந்தக் கதையைப் பாபநாசம் என்னும் பெயரில், ஜீத்து ஜோஸப் இயக்கத்தில் மறு ஆக்கம் செய்து பெருமை தேடிக்கொண்டார். உத்தமவில்லனின் தோல்வியால் துவண்டிருந்த கமல் ஹாசனுக்கு இந்தப் படம் உற்சாகம் கொடுத்து தூங்காவனம் என்னும் மற்றொரு மறு ஆக்கப் படத்தை உருவாக்கவைத்தது. இந்தப் போக்கு, ஒரு புதிய கதைக்குத் திரைக்கதையை உருவாக்கும் சவாலை எதிர்கொள்ளத் திரையுலகினர் அச்சப்படுகிறார்களோ என்னும் சந்தேகத்தை எழுப்புகிறது. 


தமிழ்க் கதையாசிரியருக்கு ஆயிரங்களில் ஊதியம் கொடுக்கவே பலமுறை யோசிக்கும் திரையுலகம் மறு ஆக்க உரிமையைப் பெற வரிசையில் நிற்கிறது, லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கிறது. ஒருவேளை தமிழிலேயே நல்ல கதையை உதவி இயக்குநர் ஒருவரிடம் கண்டறிந்தாலும் அவரை ஏய்த்து, அந்தக் கதையை அபகரித்து, அல்லது குறைந்த விலைக்கு வாங்கி யாரோ ஒரு புகழ்பெற்ற இயக்குநரின் பெயரில் படத்தை உருவாக்கும் போக்கும் நிலவுகிறது என்பது கவலை தரும் செய்தி. வெற்றிபெற்ற பல படங்களின் கதைகளுக்குப் பலர் உரிமை கொண்டாடிவருவது அனைவரும் அறிந்தது. பெரும் தோல்வி அடைந்த லிங்கா படத்துக்குக்கூட ஒருவர் உரிமை கொண்டாடி நீதிமன்றத்தின் படியேறினார். வறுமையை நீக்க வேறு வழியற்ற உதவி இயக்குநர்கள் தங்கள் கதையைத் சொற்பத் தொகைக்குத் தாரைவார்த்துவிட்டு அதன் வெற்றியை யாரோ கொண்டாடுவதை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மறு ஆக்க உரிமை மூலம் கிடைக்கும் வருவாயின்பொருட்டே இப்படிக் கதைகளுக்கான டைட்டில் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையென்றால் இது எவ்வளவு பெரிய அநீதி. அறம் போதிக்கும், கருணையை முன் மொழியும் திரைப்படங்களை உருவாக்குவதில் பேரார்வம் கொண்ட திரைக் கலைஞர்களிடம் மலிந்துகிடக்கும் இந்த அவலத்துக்கு யாரைக் குற்றம்சாட்டுவது?



ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, அவர் தமிழில் பரவலான அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர். அவரைத் தமிழில் குறிப்பிடத்தகுந்த ஓர் இயக்குநர் அழைக்கிறார். தனது புதிய படம் பற்றிய சில தகவல்களையும் ஆலோசனைகளையும் கேட்கிறார். கதையாசிரியரும் எழுத்தாளருமான அவரும் இயக்குநர் யாசித்த உதவியைச் செய்வதாக வாக்களிக்கிறார். எல்லாப் பேச்சுகளும் நிறைவுற்று சன்மானம் என்ற இடத்துக்கு வந்து சேர்கிறார்கள். பிடிகொடுக்காமல் நழுவுகிறார் இயக்குநர். அவர் சுற்றிவளைத்து தெரிவித்த விஷயம், உங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுக்கிறேனே அதுவே சன்மானம்தான் என்பதாக முடிகிறது. தன்மானம் தலைதூக்க எழுத்தாளர் இருகைகூப்பி விடைபெற்றுவிட்டார். இந்த எழுத்தாளர் யார், இந்த இயக்குநர் யார் என்ற விவாதம் அவசியமல்ல. ஆனால் தமிழின் சூழல் இப்படித்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தால் போதும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கிறது. எழுத்தாளர் ஒரு கதையை உருவாக்க எந்தச் செலவும் செய்வதில்லை என்று நினைப்பது அறிவுடைமையா? முழு நேர எழுத்தை நம்பிச் செயல்படுபவர்கள் பாடு இன்றும் கவலைக்கிடமானதுதான் என்பது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அவமானமில்லையா? சில கதையாசிரியர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு அவர்களின் சமூக மதிப்பை உத்தேசித்து கருணை காட்டும் திரையுலகம் தான் பயன்படுத்தும் அத்தனை எழுத்தாளர்களையும் மதிப்புடன் நடத்த வேண்டியது அவசியமல்லவா?


தமிழ்க் கதைகளுக்கும் கதையாசிரியர்களுக்கும் உரிய கவுரவம் கொடுத்து, சன்மானம் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நம் மண் சார்ந்த, நம் பண்பாட்டை எடுத்தியம்பும் கதைகளைத் திரைப்படங்களாக காணும் வாய்ப்பு உருவாகும். எத்தனையோ உணர்வுசார் செய்திகளும் சம்பவங்களும் நிகழ்வுகளும் தினந்தோறும் நடந்தேறிவருகின்றன. இவை குறித்த கதைகளை யாராவது எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் உங்கள் அருகில் கூட இருக்கலாம். அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி தேவை. அவற்றின் மீது நம்பிக்கை தேவை. ஓர் எழுத்தாளரது கதைகளுக்கு உரிய மதிப்பும் ஊதியமும் கிடைத்தாலே போதும் அவர் திருப்தியுறுவார். திரைப்படத்தின் அடிப்படை விஷயமான கதை விவகாரத்தில் இவ்வளவு கஞ்சத்தனம் காட்டிவிட்டுப் பின்னர் படம் தோல்வி அடைந்த உடன் வருந்துவது சரிதானா? கதைகளின் தேர்வு குறித்து ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் திரையுலகம் இறங்க இனியும் தாமதிப்பது சரியா? தமிழ் சினிமா நூற்றாண்டு கொண்டாடிவிட்டது. இன்னும் பழைய பாதையிலேயே பயணம் மேற்கொள்ளலாமா?


புது வசந்தம் படத்தில் முரளி, சித்தாரா

பிற மொழிப் படங்களைப் பார்ப்பது நமது சினிமா மொழியை விஸ்தரித்துக்கொள்ள உதவும் என்பது உண்மை. திரை நுட்பங்களுக்கான அறிவைப் பெற்றுக்கொள்ள அவை உதவும். தொழில்நுட்பம் வளர்ந்து கிடக்கும் இந்நாட்களில் நம் மண்ணின் அசலான படைப்பை உருவாக்கினால் அவற்றை வாங்க பிற மொழியினர் வரிசையில் வருவார்கள். மீண்டும் பாரதிராஜா, மகேந்திரன் எனத் தான் சுட்ட வேண்டியதிருக்கிறது. அவர்களுடைய கதைகள் நம் கதைகள் தானே. நமது ஆதார பிரச்சினைகளைத் தானே அவர்கள் படமாக்கினார்கள். எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வெளியான அந்தப் படங்களை இன்னும் பேசுவது எதற்காக. அவை பரப்பிய அசலான மண்ணின் மணத்துக்காகத் தானே?  எழுபதுகளில் 16 வயதினிலேயும், எண்பதுகளில் ஒரு தலை ராகமும், தொண்ணூறுகளில் புது வசந்தம், சேது, இரண்டாயிரத்தில் சுப்ரமணியபுரம் போன்ற படங்கள் இங்கேயுள்ள கதைகளைக் கொண்டு தானே சரித்திரம் படைத்தன. தமிழ்த் திரையுலகுக்கும் இலக்கிய உலகுக்கும் இப்போது ஓரளவு ஆரோக்கியமான உறவு உள்ளது போலத் தான் தோன்றுகிறது. தமிழ்க் கதை பற்றிய தேடலைத் தொடங்க இது சரியான தருணம் தான்.

சனி, ஜூலை 02, 2016

இருளில் மூழ்கிய வெளிச்சம்


பெயரில் மட்டுமல்ல தம் புனைவுகளிலும் பெரும் புதுமைகளை மேற்கொண்டவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். அவரைப் போல் தன் புனைபெயருக்கு நியாயம் சேர்ந்த பிறிதொரு எழுத்தாளரைக் கண்டுபிடிப்பது அரிது. நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த புதுமைப்பித்தனின் எழுத்துகள் அவருக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கௌரவமான இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. புதுமைப்பித்தனின் எழுத்துகளை யார் பிரசுரித்தாலும் அவற்றை வாங்கிக்கொள்ள ஒரு பெரும் வாசகர் கூட்டம் இருக்கிறது. இந்த அளவுக்குத் தமிழ் இலக்கிய உலகில் தனிக் கவனத்தைப் புதுமைப்பித்தனுக்குப் பெற்றுத்தந்ததில் புதுமைப்பித்தன் வரலாறு என்னும் இந்நூலுக்குக் கணிசமான பங்கிருக்கிறது.

இது புதுமைப்பித்தனது அனைத்து வாழ்க்கைச் சம்பவங்களையும் நிகழ்வுகளையும் விரிவாக விளக்கும் வரலாறு அல்ல, ஆனால் இந்த நூலின் வழியே புலப்படும் புதுமைப்பித்தனின் ஆளுமை வாசக மனத்தில் கல்வெட்டுப் போல பதிந்துவிடுகிறது. அதன் முக்கியக் காரணம் தொ.மு.சி.ரகுநாதனின் பள்ளத்தில் பாயும் தெள்ளிய நீரைப் போன்ற நடை. புதுமைப்பித்தனின் உருவம், பழக்க வழக்கம், பழகும் தன்மை என அவரது ஆளுமையின் அத்தனை பரிமாணங்களையும் திரட்டித் தந்துவிடும் முயற்சியை நூலில் உணர முடிகிறது.      

1906 ஏப்ரல் 25 அன்று திருப்பாதிரிப்புலியூரில் பிறந்த புதுமைப்பித்தன் 1948 ஜூன் 30 அன்று திருவனந்தபுரத்தில் காலமானார். இந்த இடைப்பட்ட காலத்தில் பத்திரிகை, இலக்கியம், திரைப்படம் போன்ற காரணங்களுக்காகத் திருநெல்வேலி, திருவனந்தபுரம். புனே எனப் பல்வேறு திசைகளில் வாழ்க்கை அவரை அலைக்கழித்திருக்கிறது. அவருக்கு எட்டு வயதானபோது அவருடைய தாயார் வையத்திலிருந்து விடைபெற்றுவிட்டார். அன்னையின் பராமரிப்போ பாசமோ கிட்டாத நிலையில் பால்யத்தைக் கடந்த புதுமைப்பித்தனின் நெஞ்சில் தாயன்பு குறித்த ஏக்கம் நிரந்தரமாகவே தங்கிவிட்டது. அந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் தன் மகளுக்கு பர்வதகுமாரி எனத் தாயாரின் பெயரைச் சூட்டவைத்திருக்கிறது. தந்தையுடன் சுமூக உறவு அற்ற அவரை மனைவியின் அன்புதான் மலரச் செய்திருக்கிறது. மனைவியை விட்டு வெகுதூரத்தில் இருக்க நேர்ந்த நாட்களில்கூட அவரை ஆற்றுப்படுத்தி அமைதிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருந்திருக்கிறது அவருடைய அன்பு. கலைமகளின் கருணையால் எழுத்தாளராகப் பெரும் புகழைப் பெற்ற நேரத்தில் திரைப்பட முயற்சியில் ஈடுபட்டுத் திருமகளின் திருவுளத்தையும் சம்பாதிக்க முயன்ற புதுமைப்பித்தனை எமன் அழைத்துக்கொண்டான்.

புதுமைப்பித்தன் என்னும் பெயரைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் மகத்தான எழுத்தாளர் என்ற பெருமிதம் நெஞ்சில் எழுகிறது. ஆனால் வாழ்ந்த காலத்தில் புதுமைப்பித்தன் வாழ்வில் எதிர்கொண்ட துயரங்களைப் பக்கம்தோறும் பேசுகிறது இந்நூல். தினசரி வாழ்வை நடத்தவே திண்டாடிய அவருடைய எழுத்துகள் இப்போது பலரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது என்பது நகைமுரணே. எழுத்தைத் தொழிலாகக் கொண்ட எழுத்தாளரின் வாழ்வைக் காலமென்னும் கரையான் கொஞ்சம் கொஞ்சமாக அரிப்பதில்லை, சிறிதுகூட விட்டுவைக்காமல் மொத்தமாக அரித்துவிடுகிறது என்பதற்குச் சான்றாக அமைந்திருக்கிறது புதுமைப்பித்தனின் வாழ்க்கை.

புதுமைப்பித்தனின் எழுத்துகளை அறிந்தவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தும் இந்நூல் அவருடைய சிறுகதை ஒன்றைப் போல் விறுவிறுப்பாகச் செல்கிறது.   சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்புகள். கட்டுரைகள், விமர்சனங்கள் எனப் பெரிய ராஜாங்கத்தையே பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள் கட்டியெழுப்பியிருக்கிறார் புதுமைப்பித்தன். இப்படியொரு கலைமேதையின் வாழ்க்கை வரலாற்றை வெறும் 28 வயதில் எழுதி முடித்திருக்கிறார் தொ.மு.சி.ரகுநாதன். புதுமைப்பித்தன் வரலாறு என்னும் இந்நூல் முதல் பதிப்பு கண்டது 1951-ல். முதலில் தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்ட இந்நூலின் அடுத்தடுத்த பதிப்புகளை 1958-ல் ஸ்டார் பிரசுரமும் 1980-ல் மீனாட்சி நிலையமும் பின்னர் என்.சி.பி.எச். 1991-லும் வெளியிட்டிருக்கின்றன. கணக்குக்கு ஐந்தாவது படைப்பான இந்நூலை, புதுமைப்பித்தன் படைப்புகளுக்குச் செம்பதிப்பை உருவாக்கியிருப்பவரும் தமிழின் குறிப்பிடத்தகுந்த வரலாற்றாய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதியின் விரிவான முன்னுரையுடன் காலச்சுவடு பதிப்பகம் பதிப்பித்திருக்கிறது.

புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றுக்கான நல்ல பொருள் என முன்னுரையில், புதுமைப்பித்தனின் வார்த்தைகளில் பதிப்பாசிரியர் சலபதி கூறியிருப்பது சத்தான வாசகம் மட்டுமல்ல சத்தியமான வாசகமும்கூட. அந்தப் பொருளுக்குச் சுவையும் சுவாரசியமும் கூட்டுவதற்காகத் தன்னால் இயன்ற முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்டிருக்கிறார் அவர். 04.03.1978 அன்று திருச்சி வானொலி நிலையத்தில் தொ.மு.சி.ரகுநாதனை சுந்தர ராமசாமி செய்த நேர்காணல் இந்நூலுக்கு முழுமையைக் கூட்டும் முனைப்பின் விளைவே. புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றில் சில இடங்களில் காணப்படும் வெற்றிடங்களை இந்த நேர்காணல் நிரப்புவதால் புதுமைப்பித்தன் குறித்த முழுமையான சித்திரத்தைத் தீட்டுவதற்கு இது உதவுகிறது. இது தவிர, பின்னிணைப்பில் இந்த நூலில் பெயர் குறிப்பிடாத ஆளுமைகள் யார் யாரென்ற தகவலைத் தந்திருக்கிறார் சலபதி. இது இலக்கிய ஆர்வலருக்கும் ஆய்வாளருக்கும் பெருந்துணையாக அமையும். தமிழ் எழுத்தாளர்களுக்கு முறையான வரலாறு எழுதப்படாத சூழலில் ரகுநாதன் மூலம் கிடைக்கப்பெற்ற இந்த வரலாற்று நூல் சிறப்பான ஆக்கமாக இருப்பதால் இதை வறண்ட சூழலில் பூத்த அத்தி என முன்னுரையில் சலபதி குறிப்பிடுவது மிகப் பொருத்தமே.

புதுமைப்பித்தன் வரலாறு
தொ.மு.சி.ரகுநாதன்
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,
669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001
தொலைபேசி: 04652278525

இதன் எடிட் செய்யப்பட்ட பிரதி 02.07.2016 அன்று தி இந்துவில் வெளியானது.