ஒரு முழு நாளைச் செலவழித்து மூன்றாம் வகுப்பு பிரயாணத்தின் கடும் அசதியுடன் நிறைமாதக் கர்ப்பிணியான மனைவியுடன் அல்ஜே நகரிலிருந்து போன் நகரத்துக்கு வந்திறங்குகிறான் ஆன்ரி கோர்மெரி. அராபிய வண்டியோட்டியின் குதிரை வண்டியில் படுத்தபடியே வலிதாங்காமல் மவுனமாக அழுதபடியே வருகிறாள் லூசி. பிரசவத்துக்கு இந்தச் சிறு கிராமத்துக்கா வர வேண்டும்? என மருத்துவரே ஆச்சரியப்படும் படி அவர்களை விதி வழிநடத்தியிருக்கிறது. ழாக் கோர்மெரியின் பிறப்பு அங்கேதான் நிகழ்கிறது. திராட்சைக் கொடிகளின் வாசனை, எரிசாராய மணம், புகையிலை வாடை எனப் பல வாசனைகள் கமழ்ந்தபடி தொடங்குகிறது ஆல்பர் காம்யுவின் முதல் மனிதன் நாவல். இத்தகைய பல்வேறு வாசனைகள் நாவலின் அத்தனை அத்தியாயங்களிலும் இடையிறாது கசிந்துகொண்டேயிருக்கின்றன.
சுயசரித வர்ணனை கொண்ட இந்நாவலின் நாயகன் ழாக் கோர்மெரி வேறு யாருமல்ல ஆல்பர் காம்யுதான். ழாக் கோர்மெரி காம்யு என்றுணர்ந்த பின்னர் நாவலின் பரப்பெங்கும் நம்மை வழி நடத்துகிறது காம்யுவின் ஆன்மா. புனைவின் அசாத்திய மெருகும் யதார்த்தத்தின் துல்லியமும் பின்னிப் பிணைந்த நடை வாசிப்பவருக்கு உன்மத்தம் தரும் வகையில் நாவலின் பரப்பைச் செறிவுடன் ஆக்கிரமித்திருக்கிறது. விட்டேத்தியான மனத்தை அந்நியனில் தரிசித்து வந்தோருக்கு வாஞ்சை வழிந்தோடும் மனம் இதில் காட்சியாகிறது. ஈரப்பதம் காயாத நேசத்தின் பசுஞ்சுவடு நாவல் பயணப்படும் இடங்களிலெல்லாம் தட்டுப்படுகிறது.
கண்ணெதிரே பால்யம் காலாவதியாகிக்கொண்டே வருவதை அறிந்தபோதும் அதைத் தடுக்க எதுவுமே செய்ய இயலாத கையறுநிலையும் பருவத்திடம் பால்யம் பறிபோகும் அவலமும் கலந்த விம்மலுடனான கேவல் நாவலில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. அந்தக் குரல் வாசகனின் பால்யத்துக்கு அவனை நகர்த்துகிறது. நன்கறிந்த பிரதேசத்தைக் கண்ணை மூடிக் கொண்டு கண்ணெதிரே நிற்பவருக்கு விளக்குவது போல ழாக் கோர்மெரியின் பால்யத்தை கவித்துவமான நடையில் காம்யு நகர்த்துகிறார்.
தன் வாழ்வில் ஒருபோதும் யாரென்றே அறிந்திராத அந்த மனிதரின் கல்லறையின் முன் சம்பிரதாயத்துக்காக நிற்கிறார் ழாக் கோர்மெரி. அப்போது கல்லறையில் துயில் கொண்ட மனிதர் இறந்தபோது அவருடைய வயது 29 என்ற கல்லறை வாசகம் அவர் கண்ணில் படுகிறது. ழாக் கோர்மெரி இதை வாசிக்கும்போது அவருடைய வயது 40. தன்னைவிட வயது குறைந்த தந்தைக்குத் தான் பிறந்தேனா என்னும் விநோத எண்ணம் அவரது மனத்தில் குடிபுகுகிறது. மனத்தில் சட்டெனக் கிளம்பிய ஒரு சூறாவளி அவரைச் சடுதியில் நிலைகுலைத்து மீண்டும் சமநிலைக்குக் கொண்டுவருகிறது. தன் தந்தை குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் கட்டுக்கடங்காமல் பொங்குகிறது. தனக்கு ஒரு வயதானபோது, முதல் உலகப் போருக்குத் தன்னுயிர் தந்த தந்தையை அறியப் புறப்படுகிறார் ழாக் கோர்மெரி. இந்தப் பயணத்தில் தான் ழாக்கின் பால்ய கதையை மழையின் ஈரத்தைத் தாங்கிய நிலத்தில் தங்கிய குளுமையுடன் சொல்கிறார் ஆல்பெர் காம்யு.
நினைவுகளில் பிரவாகமெடுக்கும் பால்ய நதி பாளம் பாளமாய் வெடித்துக்கிடந்த கதையைப் பட்டும் படாமலும் சொல்கிறார் காம்யு. ஏழைச் சிறுவன் ழாக்கின் இல்லத்தில் வறுமைக்குப் பஞ்சமில்லை. ஆனால் ழாக்கை வறுமையால் வெறுமையாக்க முடியவில்லை. தனக்குக் கிடைத்த வாய்ப்புகளின் மூலம் சந்தோஷத்தை அனுபவிப்பது எப்படி என்ற தேவ ரகசியத்தை அவன் எப்படியோ கற்றுத் தேர்ந்துவிட்டான். ஆனாலும் இருளைத் தவிர்க்க இயலா இரவு போல அவனும் துயரைத் துரத்த முடியாமல் அதிலேயே அமிழ்ந்தான், அதன் சுகத்தில் திளைத்தான். ஓரிடத்தில் தன் தந்தை தனக்களித்த சொத்து என மன உளைச்சலைக் குறிப்பிடுகிறார் காம்யு.
வறுமை குறித்த புலம்பல் அவனிடம் இல்லை என்றபோதும் பால்யத்தின் வெகுளித் தனத்தைப் பருவம் களவாடுவதை எதிர்த்து எதுவும் செய்ய இயலவில்லையே என்னும் பரிதவிப்பு அவனுள் பதைபதைப்பை விதைக்கிறது; பெரியவனான தருணத்தை அதீத பதற்றத்துடன் எதிர்கொள்கிறான். ஒருபோதும் திரும்பிச்செல்ல இயலாத பால்யத்தின் நாள்களை மீண்டும் சிருஷ்டித்துப் பார்க்கிறார் காம்யு. அந்த சிருஷ்டியில் ஜீவன் இருக்கிறது. வாழ்வின் எளிய தருணங்களில் ஒளிந்திருக்கும் சந்தோஷ மலர்களைக் காட்டித் தரும் தோட்டக்காரனாக மாறிவிடுகிறார் காம்யு. ழாக் கோர்மெரி தன் தந்தையைத் தேடி அலைந்த பயணத்தின் வழியே வாசகனுக்கு அவனுடைய தாய் லூசியும், ஆசிரியர் பெர்னாரும், மாமா , நண்பர்கள் எல்லோரும் அறிமுகமாகிறார்கள்.
ழாக் வாழ்ந்த வாழ்க்கை நீரினடியில் குளுமையாகக் கண்சிமிட்டும் கூழாங்கல் போல் வாசகனுக்குத் தெளிவாகத் தென்படுகிறது. வறுமையும் அதன் துயரமும் இரவின் இருளைப் போல் நின்று நிலைத்துவிட்ட அந்தச் சிறுவனின் மனம் படும் பாட்டை அந்தச் சிறுவன் எங்கேயும் மொழியவில்லை. அவன் சூழலைச் சொல்கிறான். அதன் மேல் சூழ்ந்துகிடக்கும் துக்கம் வாசகனின் மனத்தைப் பிழிகிறது. போரால் விளையும் அபத்தங்களை நாவலில் காம்யு உணர்த்தும் விதத்தில் மனம் கொள்ளும் அவசம், அவசம் வழியே கிடைக்கும் இலக்கிய ருசி இரண்டும் சேர்ந்து இந்நாவலை சிறந்த இலக்கியப் படைப்பாகக் கொண்டாடிக் களிக்கிறது. போரில் மாண்ட தன் தந்தையின் மறைவு குறித்து நாவலில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “பிரபஞ்சத் தீ ஒன்றில் விழுங்கப்பட்டுவிட்ட இந்த மனிதரில் எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை; காட்டுத்தீயில் எரிந்துபோன பட்டாம்பூச்சியின் சிறகின் சாம்பலைப் போல, தொட்டுணர முடியாத ஒரு நினைவைத் தவிர…”. தந்தையைப் பறிகொடுத்த எண்ணற்ற தனயர்களின் சோகம் இது. அவர்கள் எல்லோருமே வழிகாட்டுதல்களை இழந்த முதல் மனிதர்கள்தான். கணவர்களை இழந்த எண்ணற்ற மனைவிகள், தந்தையை இழந்த எண்ணற்ற குழந்தைகள்… இவர்களின் விசும்பலும் கேவலும் போர் என்னும் கேவலத்தை, தேசப் பற்று என்னும் களவாணித் தனத்தை மவுனமாகக் கேலிசெய்கின்றன. முதல் மனிதன் ஒவ்வொருவரும் வாசித்து அனுபவிக்க வேண்டிய நாவல்.