இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், டிசம்பர் 31, 2009

ஏதோ சொல்ல இருக்கிறது


இரண்டாயிரத்துப் பத்தைப் பிரசவிக்க அதன் தாய் மருத்துவமனையில் அல்லாடிக்கொண்டிருக்கும் போது படிக்கும் துறைக்கும் அலைந்துகொண்டிருந்த அப்பாவி ஒருவனின் மன ஊசலாட்டம் இது.

எக்ஸ்க்யூஸ்மீ நீங்க தான் அந்த அப்பாவியா நடத்துங்க நடத்துங்க...

ஊரில் எல்லோரும் - பெரும்பாலானோர் - மிக மகிழ்ச்சியாக புத்தாண்டைக்கொண்டாடிக்கொண்டிருக்கும் தருணம் இது. ஏனோ தெரியவில்லை மனம் கொண்டாட்டங்களின் பக்கம் தனது பார்வையைச் செலுத்துவதில்லை. சிறுவயது முதலே மிக மகிழ்ச்சியாக உணர்ந்த தருணம் என்று எதுவுமே நினைவிலில்லை. மிக துக்கமாகவும் எதுவும் தோன்றியதில்லை. ஆனாலும் துக்கங்களும் துயரங்களும் எனக்குப் பிடிக்கும் என்று தோன்றுகிறது. வாழ்வில் பெரிய துன்பமும் வந்ததில்லை. பெரிய மகிழ்ச்சியும் ஏற்பட்டதில்லை. எது துக்கம் எது மகிழ்ச்சி எதுவுமே புரியவில்லை. ஏன் இப்படித் தோன்ற வேண்டும்? பெரும்பாலானவர்கள் போல் இருக்க முடியாதது ஏன்? இப்படியெல்லாம் கிறுக்கத் தோன்றுவது எதனால்? ஏன்களின் கோட்டைக்குள் வாழ்வது எதனால். என்னைச் சுற்றி மிக மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்போதும் நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழல்வதோ என்றுதான் தோன்றும் அதில்தான் எனக்கு மகிழ்ச்சி. சோகங்கள் இல்லாத வாழ்வில் பொய்யாய் ஒரு சோகத்தை உருவாக்கிக்கொண்டு அதிலே முழுவதுமாய் என்னை மூழ்கடித்துவிட்டு இன்பம் காணுவது ஒரு தனி சுகம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சுகம். மனம் போன போக்கில் எதையாவது எழுதுவது என்பது மனநோயா மனநோய்க்கான மருந்தா தெரியவில்லை. Everybody wish you happy new year என எல்லோருக்கும் சொல்லலாம்தான் ஆனால் விருப்பமே இல்லாமல் அதையேன் சொல்ல வேண்டும்? சமூகச் சூழலோடு ஒத்துப்போகவே முடியாதா? பத்துவரி எழுதினாலே பதினைந்து முறை படித்துப்பார்க்க தோன்றுகிறது. எப்படித்தான் இணையத்தில் சளைக்காமல் எழுதித் தள்ளுகிறார்களோ நமது எழுத்தாள பிரம்மாக்கள். டைரியில் விரும்பியதைக் கிறுக்கிக்கொள்வதைப் போல் எதை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ள வசதியாக இருக்கிறது.யாருக்காக அல்லது எதற்காக எல்லாம். எல்லாம் நமக்காகவா தனக்காகவா.


வெள்ளி, டிசம்பர் 18, 2009

வெளியில் மிதக்கும் ஓவியம்


அவள் பெயர் ...

அவளை நான் காதலிக்கிறேன்.

சுவை மிகு தருணத்தில் அறுபடும் கனவாய்
அடிக்கடி காணாமல் போகும்
அவளை நான் காதலிக்கிறேன்

யாரையாவது காதலித்திருக்கிறாயா என
யாரேனும் வினவும்போதெல்லாம்
இல்லையெனத் தைரியமாகப் பொய்யுரைக்கும் போதெல்லாம்
ஊமையாய்
உள் நெஞ்சைப் பிறாண்டும்
அவளை நான் காதலிக்கிறேன்

ஊகிக்க முடியாத பொழுதுகளில்
எதிர்பாராத இடங்களில்
எதிப்படும்
அவளைத் தான் காதலிக்கிறேன் நான்..

கரு மேகம்
கன மழை
இரண்டுக்கும் இடைப்பட்ட தருணங்களில்
வந்து மறையும்
அவள்
முத்தம் தந்ததில்லை
முற்றும் துறந்ததில்லை

நுனி விரல் உரசும் போது மட்டும்
நூறு சர்ப்பங்கள் நுழைந்து கொத்தும்
காமக் களிறு ஒன்று
பிளிறிச்செல்லும் காடுமேடெல்லாம்

கண்ட துண்டமாய் வெட்டிப்போட ஆசை அலைபாயும்

ஆனாலும் என்ன செய்ய
அவளை நான் காதலிக்கிறேன்.

உறக்கம் தொலைத்த இரவுகளில்
இரக்கம் கொன்ற நினைவுகளில்
உலா வரும் அவளை ஒருநாளும்
மறந்ததில்லை
அவளுக்கு முகம் மட்டும் இருந்ததில்லை

அவளைத் தான் நான் காதலிக்கிறேன் 
ஆனால் ஏன்?

(தூக்கம் வராமல் பாயைக்கிழிக்கவைக்கும் பிறாண்டல் சமயத்தில் கணினி கிடைத்ததால் கிடைத்த கிறுக்கல் இது. உறக்கத்தில் உளறுவது போய், அதையும் எழுதிவைக்க ஏனோ தோன்றியது)

நள்ளிரவு, சாலையில் நடந்துபோகும் பெண்...


காந்தி இறந்துவிட்டான் என்பதைக் கேள்விப்பட்டபோது முதலில் நம்பவே முடியவில்லை. அடுத்ததாக மரணம் அவனை அழைத்துக்கொண்டவிதம். கொஞ்சம்கூட மனிதத்தன்மையே இல்லாமல் காலன் அவனைக் கூட்டிச் சென்றிருந்தான். அவன் வாழ்ந்தது தென்காசியில். அவன் தன்னைத் தானே கொன்றான். சாகும்போது அவனுக்கு வயது பதினாறு. சாகும்போது மார்க்கண்டேயன் வயது தான். வாழ்வில் மாறன் அம்புகள் மலர் சொரியத் தொடங்கும் தருணத்தில் பாசக்கயிறை மாலையாய் வாங்கிக்கொண்டவன். பருவத்தில் அறிந்த முதல் அதிர்ச்சிகரமான ம...ரணம்.

ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவனுக்குத் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு என்ன துயரமிருந்ததோ தெரியவில்லை. மரணத்திற்கு மனிதர்கள் பயப்படும்போது அதைத் துணிச்சலோடு எதிர்கொண்டது வீரமா, வாழத்தைரியமற்று மாண்டது கோழைத்தனமா என்றெல்லாம் எதுவுமே புரியாத வயது, சரோஜாதேவியைப் படிக்கத் தொடங்கியிருந்தாலும். என் நெருங்கிய நண்பனில்லை காந்தி ஆனால் நண்பன். சத்யராஜ் ரசிகன். அன்று நான் பள்ளிக்கு லீவு எடுத்திருந்தேன். பல்வலியின் காரணமாக எனது வலது கன்னம் நன்றாக வீங்கியிருந்தது. பல்வலி தாங்க முடியாததாய் இருந்தது. அடிக்கடி மண்ணெண்ணெய்யைப் பல்லில் ஊற்றி வலி தீர்த்துக்கொண்டிருந்தேன்.

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக்கொண்டு மாண்டிருந்தான் காந்தி. செய்தி கேள்விப்பட்டு நண்பர்கள் அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கிளம்பினார்கள். வழியில் எனது வீட்டிற்கு வந்து விஷயத்தைச் சொன்னதும் எனக்கும் அவர்களோடு போக வேண்டும் போல இருந்தது. கிளம்பிவிட்டேன். ஆஸ்பிட்டலில் போஸ்ட்மார்ட்டம் செய்து காந்தியை பார்சலாக்கிக் கொடுத்தார்கள்.

காக்கி பேண்ட் வெள்ளை சட்டை அணிந்திருந்த நாங்கள் அனைவரும் ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள மயானத்திற்கு சென்று வந்தோம். அங்கே காந்தி தகனம் செய்யப்பட்டான். அதன் பின்பு அந்த ஆற்றைக் கடந்து செல்லும் போதெல்லாம் காந்தியின் மரணம் ஞாபகத்தில் வந்து செல்லும். நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்று இதை எழுதுவதன் மூலம் காந்தியின் மரணம் ஞாபகம் வந்தது. ஏற்கனவே சொன்னதைப் போல காந்தி என் நெருங்கிய நண்பனில்லை ஆனால் இதை எது எழுதவைத்தது? புரியவில்லை. காந்தி எதனால் இறந்தான் என்பதைப் போலவே இதுவும். அந்த நாளை இப்போது நினைத்துப்பார்க்க முற்படும்போது சம்பவங்கள் பனிமூட்டத்தினிடையே நிகழ்ந்தது போன்று தெளிவற்று வலம் வருகிறது. ஆனால் அந்தக் கோர நிகழ்வு மனத்தில் ஒரு வடுவாய் மறைந்துள்ளது போலும். மனத்தின் ஆழத்தில் மறைந்துள்ள சில நினைவுகள் கனவில் மட்டுமன்றி இதைப் போல சில சந்தர்ப்பங்களிலும் உலவும் போல யாருக்குத் தெரியும். அமானுஷ்யத்தின் அழகு நள்ளிரவுச் சாலையில் நடந்துபோகும் பெண்தானோ?

வசூல் ராஜாவும் சாமான்யமானவனும்


புனிதமாகக் கருதப்பட்ட கல்வியும் மருத்துவமும் காசு கொழிக்கும் தொழில்களாக மாறியதன் அவலம் சாதாரண மனிதர்களை வாட்டிவதைக்கிறது. மருத்துவம் தரும் மகராசர்கள் தங்களை மாண்புமிகுக்களாகக் கருதி கதிகலங்கவைக்கின்றனர்.

சமீபத்தில் காய்ச்சல் காரணமாக ஒரு மருத்துவரைப் பார்க்கப் போனேன். மளிகைக் கடைக்காரர் போல் வரிசையாகப் பணத்தை வகை பிரித்து அவரது மேசையின் உள்ளே வைத்திருப்பவரது கவனம் எல்லாம் காசு வாங்குவதில் தான் உள்ளதே தவிர நோயாளியின் நோய் குறித்து விசாரிப்பதில் இல்லை. போன உடனே வைரஸ் காய்ச்சல் என மாத்திரை. அதை எழுதிக்கொடுக்க ஆகும் நேரத்தில் அடுத்த நோயாளியைப் பார்க்க வசதியாக மருந்து எழுதிக்கொடுக்க ஓர் உதவியாளர். ஏதோ டெஸ்ட் எழுதிக்கொடுத்தார். அது என்ன டெஸ்ட் எனக் கேட்டதற்கு அவருக்கு வந்ததே கோபம். எரித்துவிடுவதுபோல் பார்த்துவிட்டு 'சொன்னதை மட்டும் செய்' என எச்சரிப்பதுபோல் நடந்துகொண்டார்.

பணம் தரப்போகிறவனுக்கு எதனால் அந்த டெஸ்ட் என அறிந்துகொள்ளக்கூட உரிமை இல்லையா? ஆனால் அவர் மருத்துவம் படித்துள்ள மகத்தான மனிதர். அவர் எழுதித்தந்த டெஸ்ட்டை நவீன வசதிகளோடு சுவருக்கு சுவர் விலை உயர்ந்த டிவி அலங்கரித்துக்கொண்டிருந்த ஸ்கான் சென்டரில் எடுக்கச் சொல்லியிருந்தார். அந்த ஸ்கான் சென்டர் அவருக்கு அளித்திருந்த லெட்டர் பேடில் தான் டெஸ்ட் குறித்து எழுதித்தந்திருந்தார். மலேரியா டைபாய்டு குறித்த டெஸ்ட் அது. இரண்டுமே இல்லை எனக்கு என ரிப்போர்ட் சொன்னது. அதற்கான செலவோ ஒட்டிக்கு ரெட்டி. டாக்குக்கு (டாக்டரைச் செல்லமாக) கமிஷன் கிடைத்திருக்கக் கூடும். மன உளைச்சல்தான் மிச்சம் எனக்கு. இதில் அந்த மருத்துவர் நல்லவர் என மக்களிடம் கருத்து நிலவுகிறது. மற்ற மருத்துவர்களை நினைத்தால் ஆழ்வார்பேட்டை ஆண்டவனது படம் மனதில் வந்துபோகிறது. எந்த மருத்துவரையும் மனதார நம்ப இயலவில்லை. வியாதி வராத வரை தப்பித்தோம் வந்தால் நம் கதி அதோ கதி தான். சிறு வயதில் பார்த்த ஒரு துணுக்கு ஞாபகத்தில் வந்து போகிறது. கையில் ஆயுதங்களோடு கொள்ளையடிக்க ஒரு கும்பலும் ஆபரேஷன் தியேட்டருக்கு ஒரு கும்பலும் செல்லும். அடுத்த படத்தில் கொள்ளையடிக்க சென்ற கும்பலில் ஒருவர் ஆபரேஷன் செய்த கும்பலைப் பார்த்துச் சொல்வார் இப்படி, அடப்பாவிகளா நாங்களாவது உயிரோடாவது விட்டுவிடுகிறோமே என. இது கிட்டத்தட்ட இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பென்றால் இன்றைய நிலையை நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது.

மாமா நீங்க எங்க இருக்கீங்க?


இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகு எதேச்சையாகத் தன் மனைவியை போன் குரலில் கண்டுபிடித்து சுமதி என்ன ஞாபகம் இருக்காம்மா...ன்னு வசனம் பேசும் திரிசூலம் சிவாஜியை யாரும் மறந்திருக்க முடியாது. அதுலயும் குறிப்பா, இடையில் ஒரு முறை எக்ஸ்டென்ஸன் ப்ளீஸ் அப்படின்னு கத்துவாரு. அதுதான் சிவாஜி. ட்ரெங்க்கால் புக் பண்ணி பேசிய அனுபவம் உள்ளங்களுக்குத் தான் இதோட முக்கியத்துவம் புரியும். கலர் கலர் மொபைல்ல காதலியோட மணிக்கணக்கா கதைக்கும் இளைஞர்களோட பிரச்சினை எல்லாம் சிக்னல் ப்ராப்ளம் தான். லைன் கட்டாகி திரும்ப கிடைக்குறதுக்குள்ள வேற யாரும் பார்ட்டிய பிக்கப் பண்ணிரக் கூடாதுங்குற அவஸ்தை அவங்களுக்கு. பாவம் பாஸ்ட் புட் யுகம்.

நம்மோட லைஃப்ல எவ்வளவோ பேரைப் பார்க்குறோம்; பழகுறோம். சிலரை ஏதோ ஒரு கட்டத்தில் ஏதேதோ காரணங்களால் பிரிந்துவிடுகிறோம். ஆனால் சப்கான்ஸியஸ்ல அவங்க உலவிட்டே இருக்காங்க. அப்படிப்பட்ட சிலரை எங்கேயாவது ஒரு முறையாவது பார்த்துற மாட்டோமான்னு மனம் ஏங்கும். அப்படிப்பட்ட ஒருவரது ஞாபகத்தின் விளைவே இப்பதிவு. அவர் பாண்டியன் மாமா. அவரை நான் கடைசியாகப் பார்த்தது 1987இல். கோவில்பட்டியில இருந்த பாண்டியன் மாமா வீட்டுக்கு நாங்க முழுப் பரீட்சை லீவுல போவோம். மாமா அங்க இருந்த ஜவுளிக்கடையில் ஒன்றில் வேலை பார்த்தார். அங்க இருக்குற நாட்களில் நாடார் ஸ்கூல்ல நடக்குற பொருட்காட்சிக்குப் போவோம். டெய்லி ஒரு படம் போடுவான் அங்கே. பூவிழி வாசலிலே படம்கூட பொருட்காட்சியில் பார்த்ததா ஞாபகம். தென்காசி அருகே இருந்த இலஞ்சியில் இருந்தோம் நாங்க. குற்றாலம் சீஸனுக்கு குடும்பத்தோடு மாமா வருவார். பல ஆண்டுகள் இந்த வழக்கம் தொடர்ந்தது ஆனால் ஏனோ 87ஆம் வருஷத்தோடு அந்த உறவு முடிந்துபோனது. எனக்குத் தெரிந்து எந்தச் சண்டையும் இல்லை எங்கள் குடும்பங்களுக்கிடையே. இப்போது அவர் எங்கே இருப்பார் அவரது குடும்பத்தினர் என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் அறிய அவ்வப்போது ஆவல் ஏற்படும். ஆனால் தேடிச்சென்று கண்டுபிடிக்க ஏனோ தருணம் வாய்ப்பதேயில்லை. சில நட்புகளும் சில உறவுகளும் முன்னறிவிப்பின்றி காற்றோடு காற்றாய்க் காணாமல் போய் விடுகிறதே! ஏன் காலம் திடீரென இப்படிச் சிலரைப் பிரித்துவிடுகிறது? (இந்தமாதிரியான விபரீத எண்ணங்கள்தாம் சிலரை பொக்கிஷம்வரை கொண்டுபோய் பொசுக்கிவிடுகிறதோ?) பாண்டியன் மாமா போல் பலர் அப்படி அப்படியே சில குறிப்பிட்ட காலங்களில் வந்து சென்றிருக்கிறார்கள். நினைவுகளாய் நிலைத்துவிட்ட அவர்கள் நிஜத்தில் வரப்போவதே இல்லை தான். ஆனாலும் வந்துவிட்டால் எப்படி இருக்கும் என மனம் ஏங்காமல் இருந்ததே இல்லை. இதற்கெல்லாம் என்ன காரணம் புரியவேஇல்லை. புரிந்தால் ஏன் இப்படி நள்ளிரவில் அமர்ந்து வலைப்பதிவு செய்யப்போகிறோம்?

வியாழன், செப்டம்பர் 24, 2009

செந்தமிழே வணக்கம்

செந்தமிழே வணக்கம்...னு தொடங்கும் இந்தப் பாட்டு ஊர்ல எல்லா விஷேச வீட்டுலயும் மொத பாட்டா இருக்கும். உங்கள் வீட்டில் நடக்கும் கல்யாணம் சடங்கு மற்றும் சகலவிதமான வைபங்களுக்கும் சிறந்த முறையில் ஒளி ஒலி அமைக்க நீங்கள் நாட வேண்டியது ... ஒலி ஒளி அமைப்பகம் எனப் பேசிய கிராமத்தானுக்கு கருணாநிதி, பாரதிராஜா கனவுகள் தானே இருந்திருக்கும் மனதில். ஒரு சில ராசைய்யாக்கள் தானே இளையராஜாக்கள் ஆகின்றனர். ஏனையோர் எங்கே? வாழ்வின் சிலந்தி வலையில் சின்னாபின்னமாகி விட்டனரோ? இந்த மாதிரியான நினைப்புனால தான் இந்த வலைப்பதிவைத் தொடங்கனும்னு நினைத்தேன். (நீ நென, நன... காயப்போடு! அதைப் பத்தி எங்களுக்கு என்ன?)

நான் கொஞ்சம் மொக்கப் பார்ட்டி தான். சீரியஸ்ஸா எதையும் எனக்கு எழுதத் தெரியாது .எழுதவே தெரியாதுங்கறதுதான் உண்மை. ஆனா ஆசை மட்டும் வந்துருச்சு. ஆஹா வந்துருச்சு ஆசையில் ஓடி வந்தேன் வாடி என் கப்பங்கிழங்கேன்னு ஆரம்பிச்சுட்டேன். முன்னோடிகளோட ஆசிர்வாதத்தோட (பெரியப்பாட்ட கோட்ட எடுத்துட்டு ஓடின பாரிஸ்டர் ரஜினி மாதிரியான ஆசிர்வாதம்தான்) உங்கள அடிக்கடி (பயப்படாதீங்க! சொல்லுவேன் ஆனால் செய்ய மாட்டேன்.) சந்திக்கிறேன். பிள்ளையார் சுழியாக நான் எழுதிய சில காதல் (என்ன கண்றாவியோ) கவிதைகளைப் படிச்சுப்பாருங்க. (கிழிக்க முடியாதுல்ல...கிளம்பிட்டேன்யா கிளம்பிட்டேன்) எவ்வளவு நாள் தான் அதை நான் மட்டுமே படிச்சிட்டு இருக்கிறது. (இப்ப மட்டும் என்னவாம்)

நீ

என்னுள் நிலமதிர

நடக்கின்றாய்.

நான்

உன்னுள் பூனை போலாவது

நகர்கின்றேனா?

(திருட்டுப்பய வேற எப்படிப் போவான்)


எனக்கு

உன் மீது காதலில்லை

நிச்சயமாய்த் தெரியும்.

ஆந்தைகளும், வௌவால்களும்

அலையும் அர்த்த ராத்திரியில்

உன் இல்லத்தை

வலம் வந்த பின்பே

படுக்கைக்குள் சுருள்வதின்

பொருள் மட்டும் புரியவில்லை.

(தூக்கத்துல நடக்குற வியாதிடா சனியனே)


வந்த மணித்துளிக்கும்

வருவதாய்ச் சொன்ன மணித்துளிக்கும்

இடைப்பட்ட கணத்தில்

கடந்துபோன கடிகார முட்கள்

உதிர்த்துப்போன அமிலத்துளிகள்

உனது புன்னகை பூசிய

மன்னிப்பால்

ஒருபோதும் உலர்ந்து போகா.

(டேய் கிரிமினல் நீ எதுக்கு அடி போடுறன்னு தெரியுதுடா)


தொட்டுக்கொள்ளும் தூரத்தில்

தொடமுடியாத சோகத்தில்

தண்டவாளங்கள்!

(தட தடன்னு ரயில் ஓடுற தண்டனை போதாதா தண்டவாளத்திற்கு)

இந்தக் கவிதைகளைப் பார்த்து எரிச்சலாகி அடிக்க வராதீங்க. இது அறியாப் பருவத்துல தெரியாம செஞ்ச தவறு. எப்போதுமே நாம செஞ்ச தப்ப முதல்ல சொல்லிர்றது நல்லதுதான அதனால சொன்னேன். மற்றவற்றைப் பிறகு பார்க்கலாம். பயப்படாதீங்க. துணிச்சலோடு தொடர்ந்து வாங்க. கவிதையெல்லாம் (தைரியம்தான்) இனிவராது. ஆமா நீங்க இனி வருவீங்களா?

ஒரு சுய தம்பட்டம்


நீங்கள் தெரியாத்தனமாகவோ முகதாட்சனியத்துக்காகவோ இப்பக்கத்திற்கு வந்திருக்கலாம். ஒருவேளை இப்பக்கத்தைப் படிக்கவும் கூடும். ஒரு நம்பிக்கைதான். அப்படிப் படிக்கும் உங்களுக்கு என் வணக்கம். வணக்கத்துக்கே இவ்வளவு சுத்தி வளைக்கானேன்னு வெறுத்துப் போயிறாதீங்க. என்னைப் பற்றி சொல்ல பெருசா எதுவும் இல்லை. கொஞ்சமாவாது சொல்லணுமேங்கிறதால சொல்றேன்.

ஸ்கூல் படிப்பு திருநெல்வேலி மாவட்டம், தென்காசி தாலுகாவிலுள்ள இலஞ்சி கிராமத்துல. வேலை கிடைச்சிடுச்சுன்னு ஒரு படம் வந்தது. அந்தப் படம் எங்க ஊர்லதான் ஷூட் பண்ணாங்க. பச்சைப் பசேல்லுன்னு இருக்குற அந்தக் கிராமத்துல பிழைக்கத் தெரியாம (எங்க போனாலும் எனக்குப் பிழைக்கத் தெரியாது) எப்போதும் தகிக்கிற பட்டணம் வந்து சேர்ந்தேன். காலேஜ் படிப்பு கீழக்கரை முகம்மது சதக் இஞ்சினியரிங் காலேஜ்ல. ஸ்கூல்லயோ காலேஜ்லயோ காதல் செய்ய வாய்ப்பு இல்ல. ஸ்கூல் கோயட் தான். நமக்குத் தான் எந்தக் குடுப்பினையும் இல்ல. காலேஜ்ல பசங்க மட்டும்தான். பாடம் நடத்த சில பெண்கள் வந்துட்டுப்போனது அழியாத கோலங்களா மனசுல இருக்கு. குரு தெய்வம்தான் ஆனால் பலர் அநியாயத்துக்கு அழகான தெய்வங்களா இருந்தது யார் குற்றம்? இதெல்லாம் உருப்படவா என சில நல்லவர்கள் முணுமுணுக்கலாம். என்ன செய்ய ஆசையும் அவதியும் இறைவன்செயல்.

மெட்ராஸ் வந்த பிறகு, அப்பல்லாம் மெட்ராஸ்தான் இப்பதான் சென்னை, மந்தைவெளி, ஆவடி, பழவந்தாங்கல் போன்ற பல இடங்களில் தங்கியிருந்தேன். கடைசியா இப்போ திருவல்லிக்கேணியில் வாசம். டிகிரி முடித்து கிட்டத்தட்ட பதினைந்து வருஷம் ஆகிய போதும் சொல்லிக்கொள்ளும் படியான ஒரு வேலை கிடையாது எனக்கு. அதற்கான முயற்சியும் கிடையாது என்னிடம். ஏதாவது ஒரு உப்புமா கம்பெனியில் கிடைக்கும் ரவை தூவும் வேலையைக் கிடைப்பதற்கரிய சிறப்பான வேலையாய் செய்வேன். எதன் மேலும் பெரிய மரியாதையோ விருப்பமோ இல்லாத ஒரு வாழ்க்கையே எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை விருப்பமாகவே வாழ்கிறேன் அல்லது அப்படி நினைக்கிறேன். சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளே ஜால்ராவை சுருதி சுத்தமாக இசைக்கிறார்கள். எனவே ஜால்ரா ஒரு சிறந்த கருவி என்பது புரிந்தும் அதை இசைக்கக் கற்றுக்கொள்ளாமல் வாழ்க்கையை வீணடித்துவிட்டேன். கூடிய விரைவில் கற்றுக்கொள்வேன் என நம்புகிறேன்.

நான் புத்திசாலி என நினைத்து ஒவ்வொரு செயலையும் செய்கிறேன். ஆனால் விதியோ தொடர்ந்து நான் முட்டாள் என்பதை நிரூபித்துச் செல்கிறது. விதிக்கும் எனக்குமான கண்ணாமூச்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தொடந்து தோற்றபோதும் வெற்றிவரும் என்ற நம்பிக்கையில் சூதாடும் ஒரு சூதாடி நான். வெற்றியோ தோல்வியோ விளையாடப் பிடித்திருக்கிறது. விளையாடுகிறேன். (ஓவர் பில்ட்டப்பாத்தான் இருக்கு)