இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஜனவரி 29, 2017

கொண்டாட்டமாக நிகழ்ந்த தை எழுச்சிப் போராட்டம்

மெரினா போராட்டம் 

ஓரிடத்தில் மொத்தமாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றுகூடினால் அந்த இடம் எப்படியான கலகலப்பு கொண்டதாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கே இப்படி என்றால், லட்சக்கணக்கில் மாணவர்கள் திரண்டால் எப்படி இருக்கும்? அதுவும் அந்தத் திரட்சி ஒரு கேளிக்கைக்காக என்பதல்லாமல் ஒரு சமூகக் காரியத்துக்காக என்று நினைக்கும்போது, மாணவர்கள் குறித்தான நமது நம்பிக்கை பெருகத்தானே செய்கிறது. அப்படி நம்பிக்கை கொள்ளும் வகையில் தமிழரின் பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் திரண்டார்கள் மாணவர்கள். வெறும் ஐம்பது அறுபது பேருடன் தொடங்கிய மாணவர்கள் லட்சக்கணக்காக மாறினார்கள். அவர்கள் கையிலிருந்த கைபேசி, உலகை அவர்களை நோக்கித் திருப்பியது.


மாணவர்களின் ஆர்ப்பரிப்பு சொல்லில் அடங்காதது. கடற்கரையின் பரப்பெங்கும் அவர்களின் முழக்கங்களைச் சுமந்து சென்ற காற்றே சுவாசத்துக்குக் கிட்டியது. அண்ணா சதுக்கம் தொடங்கி கலங்கரை விளக்கம்வரை உற்சாகத்துடன் அவர்கள் நடைபோட்டார்கள். விதவிதமான பதாகைகளைத் தாங்கிய வாகனங்களில் மாணவர்கள் கடற்கரைச் சாலையை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்திருந்தார்கள். போக்குவரத்தைக்கூட அவர்களே ஒழுங்குசெய்தார்கள். தாங்கள் யாரென உலகுக்குக் காட்டும் முனைப்புடன் இயங்குவது போலத் தோன்றினார்கள். யாராவதொரு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி இந்த நிகழ்வைக் கவனித்திருந்தால் இதில் வெளிப்படும் கோலாகலத்தையும் கொண்டாட்டத்தையும் மீறி, அது ஒரு போராட்டம் என்பதை அவரால் உள்வாங்கிக்கொண்டிருந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அப்படி ஒரு உற்சாகத்துடன் செயல்பட்டார்கள் இளைஞர்கள். அது மிகப் பெரிய குடும்ப விழா போல் சூல் கொண்டிருந்தது. ஆண், பெண், இளைஞர், முதியவர், குழந்தை என்ற எந்தப் பேதமுமின்றி, சாதி, சமயப் பூசலின்றி அனைத்து வகையான வேறுபாடுகளையும் களைந்துவிட்டுத் ‘தமிழர்’ என்ற ஒரே இழையில் அவர்கள் இணைந்திருந்தார்கள்.


இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின்னர் தமிழக மாணவர்கள் இப்போதுதான் இவ்வளவு எழுச்சியுடன் திரண்டிருக்கிறார்கள் என்றே பேசப்பட்டது. லட்சக்கணக்கானோர் திரண்டிருந்த சூழலில், அவர்கள் காட்டிய கண்ணியமும் கட்டுப்பாடும் இந்தியாவை மட்டுமல்ல உலகின் பிற நாட்டினரையும் வியப்புக்கொள்ள வைத்திருக்கின்றன. எந்நேரமும் தலைகவிழ்ந்து தங்கள் கைபேசியை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் அவர்கள். இப்போதோ மக்களனைவரும் தலைநிமிர்ந்து அவர்களைக் கவனிக்கும் சூழலை உருவாக்கினார்கள். மாணவர்கள் போராட்டம் நடத்துவதும், தங்கள் உரிமைகளுக்கும் மக்களின் உரிமைகளுக்கும் குரல் கொடுப்பதும் உலகெங்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்பட்ட விஷயம்தான். ஆனால், மெரினா போராட்டத்தைப் பொறுத்தவரை இது பிற போராட்டங்களிலிருந்து வேறுபடுவதற்குக் காரணம், அது நடத்தப்பட்ட விதம். கிட்டத்தட்ட ஒரு திருவிழா போல், இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அந்தப் போராட்ட நாள்களில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சென்னைக்கு வந்த மாணவர்களே, சென்னைப் புறநகர் ரயில்களில் நிறைந்திருந்தனர்.


ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும் மாணவர்களின் முழக்கம் விண்ணை அதிரவைத்தது. அதே நேரத்தில் அந்த ரயிலில் வரும் எந்தப் பயணிக்கும் அவர்கள் இடையூறு செய்யவில்லை. அவர்கள் ரயிலில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். இந்த இங்கிதத்தை அறிந்த மாணவர்களாக பொதுச் சமூகத்தால் அவர்கள் கருதப்படாதவர்கள் என்பதை இந்த இடத்தில் நினைவூட்ட வேண்டியதிருக்கிறது. போராட்டக் களமாக மெரினா தேர்ந்தெடுக்கப்பட்டது தற்செயலா, திட்டமிட்ட செயலா என்பது தெரியவில்லை. ஆனால், அந்தக் களம் இத்தகைய மக்கள் திரளுக்கு நெகிழ்ந்துகொடுத்தது. போராட்ட நாள்களில் மெரினா முழுக்க முழுக்க மாணவர்களாலும் இளைஞர்களாலும் நிரம்பி வழிந்தது. இவர்களைத் தவிர குடும்பம் குடும்பமாக மெரினாவுக்குத் திரண்டு வந்து, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தந்து மகிழ்ந்தனர் தமிழர்கள். என்னதான் உணர்வுடன் போராடினாலும் சில நாட்களில் போராட்டக் குழுவுக்கு ஒரு அயர்ச்சி ஏற்பட்டுவிடும். ஆனால், இந்தப் போராட்டக் குழுவினர் அயர்ச்சி இன்றிப் போராடினார்கள். உரிமைக்காகப் போராடுகிறோம் என்ற உணர்வுடன் இரவு பகல் பாராது, எப்போதும் துள்ளித் திரியும் உற்சாகத்துடன் மெரினாவை வளையவந்தார்கள். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் சுழற்சி முறையில் கலந்துகொண்டார்கள் என்றுதான் கருத முடிகிறது. ஒரு நீரோட்டத்தில் நீர் தேங்காமல் ஓடிக்கொண்டிருப்பதைப் போல் மாணவர்கள் காணப்பட்டார்கள்.


கிராமத்து பஞ்சாயத்து போர்டு அலுவலகத்தின் முன்னே திரளுவது போல், மெரினாவில் ஆங்காங்கே சிறு சிறு குழுவாகப் பிரிந்து அமர்ந்திருந்தனர். அவர்களிடையே பல்வேறு பிரிவினர் ஜல்லிக்கட்டு பற்றியும் தமிழர் நலன் பற்றியும், நமது பாரம்பரிய விவசாயம் பற்றியும் உரையாற்றியவண்ணம் இருந்தனர். அனைவருக்குமான மேடையாக அது பயன்பட்டது. அதில் பல கருத்துகள் பேசப்பட்டன. பேச விருப்பம் உள்ள அனைவருக்கும் வாய்ப்பு தரப்பட்டது. இரவில் பதினோரு மணி தொடங்கி அதிகாலை 3 மணிவரை ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறை தங்கள் கைபேசியை ஒளியூட்டி அதைக் கையுயர்த்திக் காட்டி கடற்கரை முழுவதையும் ஒளிப்புள்ளிகளாலான கோலம் போல மாற்றினார்கள். இப்படித் தங்களைத் தாங்களே அவர்கள் உற்சாகப்படுத்திக்கொண்டார்கள். தலைமை இல்லாத போதும், ஓர் ஒழுங்கைப் பின்பற்றினார்கள். கடற்கரையில் தவறிய குழந்தைகளையும் தொலைந்துபோன பொருள்களையும் உரியவரிடம் ஒப்படைத்தார்கள். இப்படித்தான் நடைபெற்றது இந்தப் போராட்டம்.


ஏழு நாட்களாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தின் வழியே மாணவர்கள், தமிழரின் பண்பாட்டு உரிமையான ஜல்லிக்கட்டை நடத்த நிலவிய தடையை அகற்றவைத்திருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு நிறைவேற்றத் தவறிய காரியத்தை இந்த மாணவர் போராட்டம் நிறைவேற்ற வைத்திருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாகத் தமிழக சட்டப்பேரவையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது அவசரச் சட்டம் என்றபோதும் இதை நிரந்தரமாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மாணவர் திரட்டிய மக்கள் திரளால் இப்படியொரு வெற்றியைப் பெற முடிந்தது குறித்த பெருமிதம் மாணவர்களிடம் உலவுவதைக் காணமுடிகிறது. அரசியல் என்றால் என்ன, போராட்டம் என்றால் என்ன என்பன போன்ற பல விஷயங்களை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது இந்தப் போராட்டம் என்பதே யதார்த்தம்.


தொடங்கியது முதல் எந்தவித அசம்பாவிதமும் இன்றி சுமுகமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மெரினா போராட்டத்துக்கு வன்முறை என்ற கரும்புள்ளி முற்றுப்புள்ளியாக அமைந்தது துரதிர்ஷ்டம். உறுதியாக அப்படிச் சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை. அதுவரையான அமைதிப் போராட்டத்தின் மத்தியில் சமூக விரோதிகள் காவல் துறையின் கண்காணிப்பை மீறி எப்படிப் புகுந்தார்கள் என்பது அனைவரையும் குடையும் கேள்வி. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து செல்ல, அவர்கள் கோரிய கால அவகாசம் தரப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. மாணவர்கள் கலையும் முன்பே வன்முறை விதை தூவப்பட்டது. ஆங்காங்கே தீவைப்புச் சம்பவங்கள் போன்ற அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன. அவற்றுக்கும் மாணவர்களுக்கும் தொடர்பில்லை எனக் காவல் துறையே சொல்கிறது. மாணவர்கள் யாருமற்றுப் போய்விடக் கூடாதே என்ற பதற்றத்தில் அவர்களுக்கு ஆதரவாகத் திரண்ட மீனவர்கள், காவல் துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இது ஏன்? தலைமை இல்லாத சூழலிலும் லட்சியத்தையே துணையாகக் கொண்டு கட்டுக்கோப்பாக நடைபெற்ற போராட்டம், எப்படி இப்படி ஒரு அலங்கோல நிலைக்குத் தள்ளப்பட்டது என்பதை விளக்கும் பொறுப்பைக் காவல் துறையிடம் விட்டுவிட்டு இப்போதைக்கு மாணவர்கள் கலைந்து சென்றிருக்கிறார்கள்.

திங்கள், ஜனவரி 09, 2017

தமிழ் சினிமா 2016: கவனம் ஈர்த்த இயக்குநர்கள்

ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் தமிழில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை முழுமையான பொழுதுபோக்குப் படங்களே. திரைப்படம் பார்க்கவரும் ரசிகர்கள் பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்னும் உந்துதலில் மாறுபட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் ஓரிரண்டு படங்களே ஒவ்வோர் ஆண்டும் தேறுகின்றன. இந்த ஆண்டும் இந்தப் போக்கிலிருந்து தமிழ்ப் படங்கள் வேறுபடவில்லை என்பதையே 2016-ல் வெளியான தமிழ்ப் படங்கள் நிரூபிக்கின்றன. கறார்த் தன்மையுடன் சொல்ல வேண்டுமானால் தமிழ்த் திரைப்படங்களில் இயக்குநர்களின் பிடி தொடர்ந்து தளர்ந்துவருகிறதோ என்னும் அச்சத்தையே இந்த ஆண்டில் வெளியான பல படங்கள் உருவாக்குகின்றன. சொல்லிக்கொள்ளத் தக்கவையாக, ‘விசாரணை', ‘ஜோக்கர்', ‘மாவீரன் கிட்டு' போன்ற சில படங்களையே சுட்ட முடிகிறது. 
இயக்குநர் வெற்றிமாறன்


சிறந்த வெளிநாட்டுப் படம் என்னும் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டிருக்கும் ‘விசாரணை'யை இயக்கிய வெற்றி மாறன், தொடர்ந்து ஓரளவு நம்பிக்கைக்குரிய இயக்குநராக இருக்கிறார் என்பது முக்கியமான விஷயமாகப் படுகிறது. விசாரணை பல விழாக்களில் விருதுகளைப் பெற்றிருந்தபோதும், இந்தப் படம் கலாபூர்வமாகப் பல சறுக்கல்களைக் கொண்டிருந்தது என்று எழுந்த விமர்சனங்களையும் மறுக்க முடியாது. ஆனாலும்கூட வெற்றி மாறன் உருப்படியான படத்தைத் தருவார் என்னும் நம்பிக்கை இன்னும் அடிவாங்காமலேயே உள்ளது என்பதை ஆரோக்கியமாகப் பார்க்க வேண்டியதிருக்கிறது. 

இயக்குநர் சுசீந்திரன்
‘மாவீரன் கிட்டு’ படத்தை ஒரு தலித் படம் எனச் சொல்லலாம். பா. இரஞ்சித்தால் இயக்கப்பட்ட, தலித் படம் எனப் பெரும்பாலானோரால் கருதப்பட்ட ரஜினிகாந்த் நடித்த கபாலி என்னும் சராசரியான மசாலா சினிமா கவனிக்கப்பட்ட அளவுக்கு மாவீரன் கிட்டு கவனிக்கப்படாமைக்குக் காரணம், அது வெளியான நேரம் என்று நினைத்துக்கொள்வது நியாயமானதுதானா என்பது சந்தேகமே. ரஜினி என்னும் நடிகர் நடித்த ஒரு படத்துக்கு ஊடகங்களில் கிடைத்த முக்கியத்துவம் மாவீரன் கிட்டு போன்ற உருப்படியான முயற்சிக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
பார்த்திபனுடன் இயக்குநர் சுசீந்திரன்
எப்போதும் ஏதாவது ஒன்றை வித்தியாசமாகச் செய்து ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துவிட வேண்டும் என்ற தன்முனைப்புடனேயே திரையில் தோன்றும் பார்த்திபன் மாதிரியான ஒரு நடிகரின் வாயைக் கட்டிப் படம் எடுப்பது என்பது மூக்கால் உணவு உண்பதைப் போல. அதைத் திறம்பட நிறைவேற்றியிருக்கிறார் என்றால் சுசீந்திரனின் திறமையைச் சாதாரணமாக எடைபோட்டுவிட முடியாது. சாதியப் படங்களில் பொங்கி வழியும் சத்தமின்றி, ரத்தமின்றி ஒரு சமூகம் நிமிர்ந்தெழத் தன் உயிரைத் தந்த தியாகி ஒருவரின் தியாகத்தை ஆரவாரமின்றி அமர்த்தலாகச் சொன்ன விதத்தில் மாவீரன் கிட்டு மூலம் சுசீந்திரன் நிமிர்ந்து நிற்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
ஜோக்கர்
ஜோக்கர் திரைப்படத்தைப் பொறுத்த அளவில் ராஜுமுருகன் இயக்கிய ‘குக்கூ’வை ஒப்பிடும்போது, ‘ஜோக்கர்’ சற்று மேம்பட்டிருந்தது. முழுக்க முழுக்க செயற்கைத் தன்மை கொண்ட படம் குக்கூ. ஆனால், ஜோக்கருக்கு அந்த விபத்து நேரவில்லை. அடித்தட்டு நிலையில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை அரசு நிர்வாகம் எப்படிப் பாதிக்கிறது என்பதை மனதில் பதியும் வகையில் படமாக்கியிருந்தார் ராஜுமுருகன் .பெரிய நட்சத்திரங்களை நம்பாமல் கதையின் பிரதான வேடங்களுக்கே சோமசுந்தரத்தையும் மு.ராமசாமியையும் பயன்படுத்தி யிருந்த தன்மை இயக்குநரின் தன்னம்பிக்கையை வெளிக்காட்டியது. எதைச் சொல்ல வேண்டுமோ அதை எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்லியிருந்த விதத்தில் ஜோக்கரைத் தந்த ராஜுமுருகனின் அடுத்த படைப்பைப் பொருட்படுத்தக்கதாகக் கருதலாம் என்னும் நம்பிக்கையை அளித்திருக்கிறது ஜோக்கர்.

‘காக்கா முட்டை’ மூலம் எதிர் பார்ப்பை உருவாக்கிய மணிகண்டனின் ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்தன. ‘குற்றமே தண்டனை’ படமாக்கப்பட்ட விதத்தில் வித்தியாசம் தெரிந்தது, திரைக்கதை, இயக்கம் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அது முழுமையான திரைப்படமல்ல. திரைக்கதையில் ‘காக்கா முட்டை’யில் வெளிப்பட்டிருந்த நேர்த்தியை இதில் காண முடியவில்லை. ஆண்டவன் கட்டளை பொழுதுபோக்குத் திரைப்படமே. என்றபோதும் அதில் இடம்பெற்றிருந்த நீதிமன்றக் காட்சிகளில் தென்பட்ட இயல்புத்தன்மை மணிகண்டன் யாரென அடையாளம் காட்டியது. இந்த நீதிமன்றக் காட்சிகளில் மராட்டியப் படமான கோர்ட்டின் சாயலை உணர முடிந்தது. 

விஜய் சேதுபதியுடன் இயக்குநர மணிகண்டன்
‘சூது கவ்வும்’ படத்தின் வாயிலாகப் பலத்த கவனத்தை ஈர்த்திருந்த நலன் குமாரசாமியின் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு ‘காதலும் கடந்து போகும்’ படம் வெளியானது. இது ஒரு மறு ஆக்கப்படம் என்பதால் அதில் இயக்குநருக்குப் பெரிய வேலையில்லை. மூலப் படத்தை அப்படியே தமிழில் தந்திருந்தார் என்பதைத் தவிர வேறு குறிப்பிட்டுச் சொல்ல அப்படத்தில் எதுவுமில்லை. அது ஒரு வழக்கமான பொழுதுபோக்குத் திரைப்படம். அதில் இயக்குநருக்குரிய தனித்துவம் எதுவும் பளிச்சிடவில்லை. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ படங்களின் மூலம் தொடர்ந்து முன்னேறிவந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’யும் இந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தைச் சிறப்பான படம் என்று சொல்ல எந்த ஒரு தடயத்தையும் இப்படம் விட்டுச்செல்ல வில்லை. பெரும் பாய்ச்சல் எடுக்க விரும்பி, பாதியில் விழுந்தது போன்ற சித்திரத்தையே படம் தந்தது.
ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் தமிழ்த் திரையில் பெண் இயக்குநர்கள் சரியான இடத்தைப் பிடிப்பதற்குப் பெரும் பிரயத்தனம் தேவைப்படுகிறது என்னும் நிலைமையில் இந்த ஆண்டும் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஆண்டில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘இறுதிச்சுற்று’ அவருக்குக் கவுரமான ஓரிடத்தை அளித்திருக்கிறது. ஓரளவு கவனிக்கத்தக்க விதத்தில் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் அவர் இப்படத்தை உருவாக்கியிருப்பதாகவே பரவலான விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
இவற்றைத் தவிர்த்து ‘உறியடி’, ‘ஒருநாள் கூத்து’, ‘மெட்ரோ’, ‘அப்பா’, ‘தர்மதுரை’ போன்ற படங்கள் வெளியான சமயத்தில் முணுமுணுப்புகள் எழுந்தன. தமிழில் முக்கிய இயக்குநராகக் கருதப்படும் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. இவ்வளவு மோசமான படத்தை இனி பாலாவாலேயே உருவாக்க முடியாது என்பதையே இந்தப் படம் உணர்த்தியது. 

சற்றேறக்குறைய 200 படங்கள் தமிழில் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்றன இதில் சில படங்களே மாற்றுப்பட முயற்சிகள், சில படங்களே வணிகரீதியிலும் பெரிய வெற்றிபெற்றிருக்கின்றன. இதுபோக எஞ்சிய நூற்றுக்கணக்கான படங்கள் உருவாக்கப்படுவதன் நோக்கம்தான் என்ன? இது குறித்து அந்த இயக்குநர்கள் யோசிப்பது அவர்களுக்கும் தமிழ்த் திரைப்படத் துறைக்கும் நலம் பயக்கும்.

சனி, டிசம்பர் 10, 2016

காற்றின் திசைவழியே ஒரு பயணம்

த வின்ட் வில் கேரி அஸ்


சில திரைப்படங்கள் வாழ்க்கையைச் சுவாரசியப்படுத்துபவை. சில படங்களோ வாழ்க்கையை மேம்படுத்துபவை. இந்த இரண்டுவகைப் படங்களுமே நமக்கு அவசியமானவை. நமது மனநிலையைப் பொறுத்து ஏதோ ஒரு வகையைப் பார்க்கிறோம். திரைப்படத்தை ஒரு கலையாகக் கருதும் இயக்குநர்கள் இரண்டாம் வகைப் படங்களை உருவாக்குவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதுமே இப்படியான இயக்குநர்கள் வாழ்வு பற்றியும் சமூகம் பற்றியும் தாங்கள் கொண்டிருக்கும் புரிதலை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தை, மனிதர்களை மேம்படுத்தும் வகையிலான படங்களை இயக்கினார்கள், இயக்குகிறார்கள். இவர்களில் ஒருவரென ஈரானிய இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தமியைக் குறிப்பிடலாம்.

அப்பாஸ் கியரோஸ்தமியின் குளோஸ் அப், த்ரூ த ஆலிவ் ட்ரீஸ், டேஸ்ட் ஆஃப் செரி, த வின்ட் வில் கேரி அஸ் போன்ற படங்களுக்கு உலகெங்கும் பார்வையாளர்கள் அநேகர். கியரோஸ்தமியின் படங்களில் பார்வையாளருக்குப் பிரதான இடமிருக்கும். அவரும் படைப்புடன் பிணைக்கப்படுவார். அவரது அனுபவங்கள் வழியேதான் படத்தின் காட்சிகளை அவரால் புரிந்துகொள்ள இயலும். இதனால் ஒரே படம் ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒவ்வொருவித அனுபவம் தரும். அவரவரது வாழ்வனுபவங்களின் அடிப்படையில் படத்தின் கருவும் கதையும் பார்வையாளருக்குத் தரிசனம் தரும்.


படைப்பூக்கம் மிக்க கலையின் தரம் கொண்ட ஒரு திரைப்படம் நல்ல நாவலை வாசித்த திருப்தி தரும். அப்பாஸின் த வின்ட் வில் கேரி அஸ் திரைப்படமோ ஒரு கவிதையைப் படித்த உணர்வைத் தருகிறது. ஒரு கதை, அதற்கான திரைக்கதை, அதைத் தூண்டும் வகையிலான சம்பவங்கள், பின்னணியிசை என்ற மரபார்ந்த திரைப்பட மொழியை மட்டுமே அறிந்தவர்களுக்கு இந்தப் படத்தின் திரைமொழி அந்நியமாகத் தோன்றலாம், ஆனால் இதன் பயணம் வித்தியாசமானது என்பதை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

நவீனமான திரைமொழியை வெளிப்படுத்தி பார்வையாளரின் திரைப்பட அனுபவத்தை விசாலமாக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கும் திரைப்படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. கதை என்றும் திரைக்கதை என்றும் இருந்தபோதும் படம் திரையைவிட நம் மனதிலேயே அதிகம் நகர்கிறது. திரையில் சொல்லப்படம், காட்டப்படும் சம்பவங்களைவிட அவற்றைத் தொடர்ந்து நம் மனதில் அவை உருக்கொள்ளும் அனுபவம் புதுவிதமானது. அதுதான் இப்படத்தை வித்தியாசமானதாக்குகிறது. காட்சிகளை முழுவதுமோ கதாபாத்திரங்களை முழுமையாகவோ கியரோஸ்தமி காட்டவில்லை. இப்படத்தின் பிரதான பாத்திரமே பார்வையாளருக்குக் காட்டப்படவில்லை. இப்படி முகம் காட்டாத பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகம் இந்தப் படத்தில். படத்தில் ஒரு காதல் உண்டு. ஆனால் காதலன் காட்டப்படவில்லை, காதலியின் முகத்தைப் பார்க்க முடியாது.


ஃபெஹ்சாத் என்னும் ஊடகவியலாளர் தலைமையில் குழு ஒன்று அந்த மலைக் கிராமத்துக்கு வருகிறது. அவர்களின் நோக்கம் அங்கே இறக்கும் தருவாயிலிருக்கும் மலேக் என்னும் மூதாட்டி ஒருவரது மரணத்தின் பின்னர் அனுசரிக்கப்படும் பாரம்பரிய வழக்கமான மரணச்சடங்கைப் பதிவுசெய்வதே. ஃபர்சாத் என்னும் சிறுவன் ஃபெஹ்சாத்துக்குக் கிராமத்தில் வழிகாட்டி போல இருக்கிறான். அந்த நோக்கத்துக்காக அவர்கள் காத்திருக்கும்போது, பண்பாட்டின் எச்சமாய் விளங்கும் அந்தக் கிராமத்தைப் பார்வையாளர்களுக்கு கேமரா படம்பிடித்துக் காட்டுகிறது. மலையின் அழகையும், புழுதி கிளம்பும் சாலையையும், அதனூடே செல்லும் காரையும் அதில் அமர்ந்து செல்லும் மனிதர்களின் உரையாடலையும் தாங்கியபடி தொடங்கும் முதல் காட்சியே உங்களைப் புதியதொரு பயணத்துக்குத் தயார்படுத்திவிடும்.

ஃபெஹ்சாத் தனது கைப்பேசியில் ஓர் அழைப்பை ஏற்றுத் தொந்தரவு இல்லாமல் பேச வேண்டுமானால்கூட வீட்டிலிருந்து கிளம்பி தனது ஜீப் போன்ற வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்த ஊரிலேயே மிகவும் மேடான இடுகாட்டுக்கு வந்தால்தான் முடியும். அந்த அளவு புராதனமான கிராமம் அது. கிராமத்தின் நிலக்காட்சிகளை மிகவும் நிதானமாகவும், விரிவாகவும் அந்தக் கிராமத்திலேயே நாம் இருப்பது போன்ற உணர்வுடனும் அந்த உணர்வை ஏற்படுத்தும் பின்னணியொலியுடன் படமாக்கியிருக்கிறார் கியரோஸ்தமி. ஆடுகள் மேய்ச்சலுக்குச் சென்று வீட்டுக்குத் திரும்புவது, கோழிகள் தன் குஞ்சுகளுடன் அலைந்து திரிவது, பெண்கள் ஏதாவது வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டே இருப்பது- ஃபெஹ்சாத் தங்கியிருக்கும் வீட்டுக்கு எதிர் வீட்டில் வாழும் அந்தப் பெண் பத்தாவது குழந்தையைப் பெற்றெடுத்த மறுதினமே வழக்கம்போல வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறாள்- போன்ற கிராமத்தின் இயல்பான எந்த நிகழ்வையும் அதன் தன்மை கெடாமல் ஒரு மலரைச் சற்றுத் தொலைவில் இருந்துகொண்டு வெற்றுக்கண்களால் பார்ப்பது போல் படமாக்கியிருக்கிறார்.


அந்தக் கிராமத்தில் சில பண்பாட்டு வழக்கங்கள் நடைமுறையில் உள்ளன. மரணமடைந்தவர் மீது பெண்கள் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தும்விதமாக முகத்தின் மீது தழும்பிட்டுக்கொள்ளும் வழக்கமிருக்கிறது. அது தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. இந்த வழக்கம் பெண்கள் மீது விழுந்திருக்கும் அழுத்தமான சுமை என்றே சொல்ல விழைகிறார் கியரோஸ்தமி. வயது முதிர்ந்தோர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையிலிருக்கும்போது, அவருக்கு ஊரிலுள்ள அனைவருமே ஏதாவது உணவுப் பொருளைத் தந்தவண்ணம் இருக்கின்றனர். யாருடைய உணவை முதியவர் உண்கிறாரோ அந்த உணவை அளித்தோர் மனதில் நினைத்திருக்கும் காரியம் நிறைவேறும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. இப்படி நவீன வாழ்வின் நச்சுக் காற்றுத் தன்னைத் தீண்ட அனுமதிக்காத ஒரு கிராமத்தின் முகத்தை அம்மனிதர்களின் வாழ்வை உறுத்தலின்றிப் படம் பிடித்திருக்கிறார் அப்பாஸ் கியரோஸ்தமி.  

ரகசியத்தை பாதுகாப்பதைவிட அதைப் பிறரிடம் பரப்புவதிலேயே நமக்குப் பிரியம் போன்ற மிகச் சாதாரணமாக நாம் கடந்துவிடும் பல விஷயங்களைப் படம் பல இடங்களில் சுட்டிச் செல்கிறது. ஆனால் அதன் போக்கு மிகவும் இயல்பாக உள்ளதால் அதை ஒரு விஷயமாகக் கருதாமல் கடந்துசெல்லும் ஆபத்தும் இருக்கிறது. நம்மைக் கடந்து செல்லும் சிறு சிறு தருணங்களையும் கவனிக்கச் செய்யும் நிதானத்துக்குப் பார்வையாளரைப் பக்குவப்படுத்துகிறது இந்தப் படம். மனிதர்கள் மீது, இயற்கை மீது கொள்ள வேண்டிய கரிசனம் காட்சிகளில் இடையே மிகவும் அநாயாசமாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு காட்சியில் ஃபெஹ்சாத், புதையுண்டு கிடந்த மூதாதையரின் கால் எலும்பை ஒரு கையிலும் மறு கையில் கைபேசியையும் சுமந்தபடி பேசும் காட்சி புராதனத்தையும் நவீனத்தையும் ஒரு கோட்டால் இணைக்கிறது. கியரோஸ்தமி எதையும் முழு வெளிச்சத்தில் வெளிப்படுத்தவில்லை. புலர்ந்தும் புலராத அதிகாலை போன்ற தன்மை படம் முழுவதும் வெண்மேகக் கூட்டம் போல் விரவிக் கிடக்கிறது. அந்த மஞ்சுப் பொதியை விலக்கி காட்சியை நுட்பமாகக் காணும் பொறுமையை மட்டும் படம் வேண்டி நிற்கிறது. அப்பாஸ் கிரயோஸ்தமி ஒரு நேர்காணலில், ‘கதைப் படமாக இருப்பினும் அதில் சில வெற்றிடங்களும் இடைவெளிகளும் இருக்கும்போது பார்வையாளர் ஒரு புதிரை நிரப்புவது போலோ புலன் விசாரணை அதிகாரி துப்புத் துலக்குவது போலோ அவற்றை நிரப்பி மகிழ்வார்’ என்று கூறியிருப்பது இந்தப் படத்துக்கு மிகவும் பொருந்தும்.


ஃபரூக் ஃபரோஹ்சாத் என்னும் ஈரானிய நவீனக் கவிஞரின் கவிதையிலிருந்து இந்தப் படத்தின் தலைப்பை எடுத்திருக்கிறார் கியரோஸ்தமி. 32 வயதில் மறைந்த கவிஞரும் திரைப்பட இயக்குநருமான ஃபரூக் பற்றிப் பால் கறக்கும் இளம்பெண்ணிடம் ஃபஹ்சாத் உரையாடும் காட்சியில் அந்தக் கவிதையை அந்தப் பெண் பால் கறக்கும் பொழுதில் இருவருக்குமான இடைவெளியை இட்டு நிரப்பப் பயன்படுத்துகிறார். ஒரு புதரை விலக்கி  வயல்வெளியைப் பார்ப்பது போலவோ ஒரு புதிரை அவிழ்ப்பது போலவோ பல காட்சிகள் ஒரு சன்னல் போல் பயன்பட்டுள்ளன. அவற்றின் வழியே பரந்துவிரிந்த உலகத்தை நீங்கள் பார்க்க முடியும். ஒரு திரைப்படம் தொட வேண்டிய உச்சபட்ச உயரத்தைத் தொட்டு நிற்கிறது இந்தப் படம்.

நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் கிடக்கும் மலேக் என்ற அந்த நூறு வயதுப் பெண்மணியின் மரணத்துக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். அவருடைய மகன் வீட்டின் வெளியே படியில் அமர்ந்தபடி காத்திருக்கிறார். அவரின் மரண நிகழ்வு இன்று நாளை என இழுத்துக்கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் அவர் சற்றுத் தேறிவிடுகிறார், உணவுண்ணாமல் எவரிடம் உரையாடாத அவர் அந்த ஊரில் டீக்கடை நடத்தும் தாஜ்தோலத் தந்த சூப்பைக் குடிக்கிறார், தெம்பாகப் பேசுகிறார், உறவுகள் குறித்து விசாரிக்கிறார். இனி அவர் இறக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் அவருடைய மகன்கூட வேலைக்குத் திரும்பிவிடுகிறார். ஆனால் ஃபெஹ்சாத் அவர் இன்னும் மூன்று நாள்களில் இறந்துவிடுவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். அதே நேரத்தில் ஃபெஹ்சாத்தின் உறவினர் ஒருவரது மரணத்துக்கு அவரால் சென்றிருக்க முடியவில்லை. அவர் இந்த வேலையில் மாட்டிக்கொள்கிறார். வாழ்வு பற்றி, மரணம் பற்றி, மரணத்துக்குப் பின்னான நிலை பற்றி, மருத்துவம் பற்றி, பெண்ணியம் பற்றி எனப் பல விஷயங்களைச் சிந்திக்கத் தூண்டுகிறது படம். ஆனால் திரைப்படம் என்னும் கலையின் வரம்புக்குட்பட்ட நிலையிலேயே இது நடக்கிறது.


கேமராவின் நகர்வு இயற்கையான ஒளியில் அந்த மலைக் கிராமத்தின் ஒவ்வொரு அசைவையும் கிராமத்து முதியவரின் கண்கள் வழியே பார்ப்பது போல் காட்டிச் செல்கிறது. பின்னணியில் கிராமத்தில் ஒலிக்கும் சத்தங்களைத் தவிர இசை என்று எதுவுமே இல்லை. நாய்க் குரைப்பு, கோழிகளின் கொக்கரிப்பு, ஆடுகளின் ம்ம்மே, என ஒரு கிராமத்தில் இயல்பாக ஒலிக்கும் அத்தனை சத்தங்களையும் அப்படியே இசையாக நிரப்பியிருக்கிறார் இயக்குநர். இறுதிக் காட்சியில் அதுவும் படம் நிறைவடைந்து இறுதி டைட்டில் இடம்பெறும் தருணத்தில் மட்டுமே பின்னணியிசை படத்தின் பின்னணியில் படர்கிறது. மலேக் இறந்துவிடுகிறார், புதையுண்டு கிடந்த மூதாதையரின் கால் எலும்பு நீரோடையில் மேலே அழகாக மிதந்து செல்கிறது, அந்தப் பயணம் தொடர்கிறது, படத்தின் பயணம் நிறைவுறுகிறது. அந்தக் காட்சி ஓர் அழகான படிமமாக நம் மனதில் தங்கிவிடுகிறது.

நண்பர் முரளியின் அடவி அக்டோபர் 2016 இதழில் வெளிவந்தது. 

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்