சென்னை புத்தகக் காட்சி 2011
புத்தகங்கள் மூலம் சமூகத்தில் மாற்றங்கள் கொண்டுவர விரும்பினான் பாரதி. புத்தகங்களை வைத்துப் பல்வேறு கணக்குகள் போட்டான் அவன். எல்லாம் காற்றோடு காற்றாகக் கலந்து போயிற்று. அறிவுக்களஞ்சியங்கள் எனப் புத்தகங்கள் போற்றப்படுகின்றன. உலகமயமாதல் வழிவந்த நுகர்வோர் கலாச்சாரம் காரணமான சீரழிவு புத்தகங்களையும் விட்டுவைக்கவில்லை. முப்பத்து நான்காம் புத்தகக் கண்காட்சி சென்னையில் நடந்துவருகிறது. பதிப்பகங்கள் நல்ல அறுவடை நடத்துகின்றன. எழுத்துக்கள் நல்ல விலை போகின்றன. மேலோட்டமாக யோசிக்கையில் நல்ல விஷயம் தானே எனத் தோன்றும். ஆனால் அதன் பின்னணி குறித்து ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் ஏமாந்த வாசகனை வைத்து வலைபின்னுவதை உணர முடியும். எவ்வளவோ செலவு செய்கிறோம் புத்தகங்கள் வாங்குவதற்கா யோசிக்க வேண்டும் என்ற அப்பாவி வாசகன் தலையில் குடம் குடமாக மிளகாயை அரைக்க இந்தப் பதிப்பகங்கள் தயங்குவதே இல்லை. சமூக அக்கறையோடு தாங்கள் செயல்படுவதாக பெயர் பண்ணிக்கொண்டு வாசகனைச் சுகமாகச் சுரண்டுகின்றன அவை. ஆண்டுதோறும் புத்தகச் சந்தையில் தங்கள் வியாபாரம் கொடிகட்டுவதாகப் பறைசாற்றும் பதிப்பகங்கள் ஊழியர்கள் தங்களுக்கான சம்பள உயர்வு குறித்துப் பேசும் போது மட்டும் பஞ்சப்பாட்டு பாடத் தவறுவதே இல்லை.
பதவிக்காக அரசியல்வாதிகளைச் சுற்றி வாலாட்டியபடியே செல்லும் நபர்களுக்கும் புத்தகங்கள் போடுவதற்காக பதிப்பாளர்களுக்கு வால் பிடிக்கும் கூட்டங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அதிகாரத்திற்கான கனவு எல்லோருக்குமே இருக்கிறது. எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கார்ப்பரேட் கனவுகளோடு தாம் பதிப்பகங்களும் நடைபோடுகின்றன. ஆட்சியாளர்களின் தவறுகளைத் தட்டிக்கேட்கும் பத்திரிகைகளுக்குத் தங்கள் தவறு தெரிவதில்லை. சமூக அக்கறையோடு எழுதிய முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துக்கள் அவர்களது வாரிசுகளுக்கு அமுதசுரபியாக மாறிவிடுகிறது. எதுவும் தவறில்லை என்ற மனோபாவம் நமக்கு வந்து வாய்த்துவிட்டதால் நாம் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டு விடுகிறோம்.
அடுத்தவர் தவறு சுட்டிக்காட்டுவதில் பிரியப்படும் உள்ளங்களுக்குத் தங்கள் தவறு சுட்டிக்காட்டப்படும் போது அதை ஏற்றுக்கொள்ளும் துணிவு இருக்குமா எனத் தெரியவில்லை. அதிகாரமையத்துக்கான ஒரு வாய்ப்பாக அறிவுத்துறையும் மாறியுள்ளது நமது அவலம் என்றுதான் சொல்ல வேண்டும். புனிதமான துறைகளாக மதிக்கப்பட்ட மருத்துவம் கல்வி போன்றவற்றைத் தொடர்ந்து எழுத்துலகத்தைவைத்து காசு பண்ணும் கூட்டங்கள் அதிகரித்துவிட்டன. வாசகன் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ அய்யோ என்று போவான எனப் பாடினான் பாரதி. ஆனால் காலம் இப்போது அப்படி இல்லை. படித்தவனின் சூதும் வாதும் ஆஹா ஓஹோ எனப் புகழப்படும் காலம் இது.