மக்களின் கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தி ஆன்மிகவாதிகள் என்னும் போர்வையில் மதவாதிகள் எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை நகைச்சுவையாகக் கூறியிருக்கும் படம் மூக்குத்தி அம்மன். அரசியல் காமெடிப் படமாக எல்.கே.ஜி.யைத்தந்த ஆர்ஜே பாலாஜி இப்போது இந்த பக்தி காமெடியை என்ஜே.சரவணனுடன் இணைந்து தந்திருக்கிறார். மூக்குத்தி அம்மனாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அழகழகான சேலைகளில் தரிசனம் தந்து பெண்களைப் பரவசப்படுத்துகிறார்.
நாகர்கோவிலில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஏங்கெல்ஸ் ராமசாமி (ஆர்.ஜே.பாலாஜி). இவருக்கு தெய்வாமிருதம், தேவாமிருதம், வேண்டாமிருதம் என மூன்று தங்கைகள். அப்பா குடும்பத்தைவிட்டு ஓடிச் சென்றுவிட்டார். அம்மா ஊர்வசி. அப்பாவழித் தாத்தா மௌலி. வெள்ளிமலைப் பகுதியில் 11,000 ஏக்கர் நிலத்தை சாமியார் ஒருவர் ஆக்கிரமிக்க முயல்கிறார். இதைச் செய்தியாக்குகிறார் ஏங்கெல்ஸ் ராமசாமி.
வீட்டுக்கு ஒரு மகாலட்சுமி வந்தபின்னரே வீட்டு மகாலட்சுமிகளை வெளியில் அனுப்ப வேண்டும் என்பதால் முதலில் ஏங்கெல்ஸுக்குத் திருமணத்துக்குப் பெண் பார்க்கிறார் அம்மா. சுசீந்திரம் கோயிலில் சென்று பெண் பார்க்கிறார்கள். அவரும் திருமணத்துக்கு மறுப்பு சொல்கிறார். எதுவுமே சரியாக நடக்காததால் குடும்பத்துடன் ஒருநாள் குலதெய்வம் கோயிலுக்குப் போகும் ஆர்.ஜே.பாலாஜிக்கு குலதெய்வமான மூக்குத்தி அம்மன் காட்சி தருகிறார். முதலில் கடவுள் என்பதை நம்ப மறுக்கிறார் பாலாஜி. பின்னர் அம்மன் நிகழ்த்திய அதிசயத்தை உணர்ந்த பின்னர் நம்புகிறார்.
பக்தர்களே வராமல் பாழடைந்த தன் கோவிலைப் பிரபலமாக்கும் வேலையை அம்மன் பாலாஜியிடம் ஒப்படைக்கிறார். அவரும் அதற்கு முயல்கிறார் ஆனால், பாச்சா பலிக்கவில்லை. அப்போது தான் அம்மன் ஒரு ஐடியா தருகிறார். அம்மன் கோயில் புற்றிலிருந்து பாலை ஊற்றெடுக்கவைக்கிறார் அம்மன். இப்போது புற்றில் பால் பொங்கிவழிவதைப் பார்க்க ஊரார் திரண்டு வருகிறார்கள். மூக்குத்தி அம்மனும் பிரபலமாகிறாள். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பகவதி பாபா என்னும் சாமியார் 11,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்கப் பார்க்கிறார். சாமியார் நிலத்தை ஆக்கிரமித்தாரா, மூக்குத்தி அம்மன் ராமசாமிக்கு ஏன் காட்சி தந்தார் போன்ற கேள்விகளுக்கு விடைதருகிறது மூக்குத்தி அம்மன்.
நாடி ஜோதிடர்கள் முதல் யோகா சாமியார்வரை மக்களை எப்படிப் பணத்துக்காக ஏமாற்றுகிறார்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது மூக்குத்தி அம்மன். தமிழில் இப்படிப் பல படங்கள் வந்துள்ளன. வி.கே.ராமசாமி தயாரித்த ருத்ர தாண்டவம் தொடங்கி சிம்பு தேவனின் இயக்கத்தில் வெளிவந்த அறை எண் 305-ல் கடவுள் எனப் பல படங்களைப் பார்த்துள்ளோம். இதுவும் அதே விஷயத்தைத் தான் சொல்கிறது என்பதால் புதிதாக எதுவும் இல்லை. சம கால விஷயங்களைக் குறிப்பிடுவதால் அவற்றுடன் பொருத்திப் பார்த்துச் சிரிக்க முடிகிறது. மற்றபடி இந்த மூக்குத்தி அம்மன் பெரிய விசேஷமானவள் அல்ல.
படத்தை ஊர்வசி ஓரளவு கலகலப்பாக்குகிறார். என்றாலும் அவரை இப்படியான பல படங்களில் பார்த்துப் பார்த்து சலித்துவிட்டது. மௌலியை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கிறோம் என்பதைத் தவிர பெரிய திருப்தி இல்லை. அடுத்ததாக, படத்தின் பெரிய பலவீனம் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. அவரைப் பார்க்கத்தான் சுத்தமாக முடியவில்லை. அதுவும் அவர் விரைவாக சத்தமாக மளமளவென வசனங்களைப் பேசுவது ஆகியவற்றை ரசிக்க முடியவில்லை. இதுபோதாதென்று ரஜினி படத்தில் ரஜினி ஷாட்டுக்கு ஷாட் வருவது போல் இவரும் படம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறார்.
கதை இலாகா உதவியுடன் கதையை எழுதியுள்ள பாலாஜி, நண்பர்கள் உதவியுடன் திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கிறார். படத்தைப் பார்க்கும்போது, அத்திவரதர், நித்தியானந்தா, ஜக்கிவாசுதேவ் எனப் பலர் நினைவுக்கு வருகிறார்கள். எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒரு அம்மன் பாடல் இடம்பெற்றுள்ளது. குறிப்பிடத் தகுந்த படம் இல்லை என்றாலும், சும்மா பொழுதுபோக்க குடும்பத்துடன் பார்க்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜோராக ஜொலிக்கவில்லை என்றாலும் பார்க்கக்கூடியவள் இந்த மூக்குத்தி அம்மன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக