இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், நவம்பர் 12, 2020

சூரரைப் போற்று: ஒரு தடவையாவது ஃப்ளைட்ல ஏறிடணும்


எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பது உண்மையானால் விமானம் என்பது ஏழைகளும் பயணம் செல்லும் வகையில் அமைய வேண்டுமல்லவா? அதற்கு என்ன வழி? விமானத்தில் அவர்கள் கட்டணம் செலுத்திச் செல்லும் வகையில் அதன் கட்டணம் குறைந்துவிட்டால் அவர்களும் செல்ல முடியும். அப்படியான ஒரு விமான நிறுவனத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் நிறுவனத்தின் ஜி.ஆர்.கோபிநாத்துடைய வாழ்க்கைச் சம்பவங்களுடன் கற்பனை கலந்து உருவாக்கப்பட்ட படமே சூரரைப் போற்று. 

சூரியா கதாநாயகனாக நடித்த இந்தப் படம் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்றது. அதை அவர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்துக்குத் தந்ததே அதற்குக் காரணம். பெரிய நடிகர் ஒருவர் நடித்து ஓடிடியில் வெளியாகும் படமாக அது மாறியுள்ளது. 11.11.2020 அன்று இரவு பத்து மணிக்கு அமேசான் பிரைமில் படம் பார்க்கக் கிடைத்தது. தந்தை மரணம் அடைந்ததால் உடனடியாகச் சொந்த ஊரான சோழவந்தானுக்கு விமானத்தில் செல்ல முடிவெடுக்கிறார் நெடுமாறன் (சூர்யா) ஆனால் அவரால் அந்த அளவு கட்டணம் செலுத்திச் செல்ல முடியவில்லை. கட்டணத்துக்காகப் பிறரிடம் நெடுமாறன் கையேந்தும் காட்சி அப்பட்டமான நாடகம். அப்பாவின் மரணத்தில் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளவும் முடியவில்லை. அந்த நேரத்தில் அவருக்கு ஏழைகளும் செல்லும் வகையில் விமானக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும், அப்படி ஒரு விமான நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்றும் வைராக்யம் வருகிறது. ஒழுங்காக டாக்ஸி பிடித்துச் சென்றாலே அவரிடம் இருந்த தொகைக்கு மதுரை சென்றிருக்கலாமே என்று தோன்றுகிறதா?


பள்ளிக்கூட ஆசிரியரான ஆறுவிரல் வாத்தியார் (பூ ராம்) அறவழியில் மனுப் போட்டு சோழவந்தான் கிராமத்தில் ரயில் நின்று செல்லப் போராடுகிறார். அவருடைய மகனான நெடுமாறனோ ரயில் மறியல் நடத்துகிறார். மனு எழுதி மனு எழுதித் தோற்றுப்போன தந்தையின் மகனான தான் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்னும் வெறியுடன் இயங்கும் இளைஞராக இருக்கிறார் நெடுமாறன். இப்படியான நிலையில் உள்ள நெடுமாறன் கையில் குறைந்தவிலையில் விமானப் பயணம் செய்வதற்கு உதவும் விமான நிறுவனம் அமைக்கும் ஐடியாவை வைத்திருக்கிறார். அவருடைய ஹீரோ ஜாஸ் விமான நிறுவனத்தின் அதிபர் பரேஷ் கோஸ்வாமி. அவரைப் போல் தானும் ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்கிவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார். விமானப் படையில் சேர்ந்து பயிற்சி பெற்று, விமானப் படை அதிகாரியாகப் பணியாற்றுகிறார். அந்த வேலையிலிருந்து விடுபட்டு வருகிறார். தனது கனவை நனவாக்கப் புறப்படுகிறார். அதில் அவர் வெற்றிபெற்றாரா இல்லையா என்பதே கதை. 

விமானம் என்பது பணக்காரர்களுக்கான வாகனம் என்னும் மாயையை உடைக்க வேண்டும் என்பதே மாறனின் கனவு. கிராமங்களுக்கும் விமானம் வந்துசெல்ல வேண்டும் என ஆசைப்படுகிறார். அவர் விமான நிறுவனம் அமைக்க ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். அவருடைய ஆதர்ஸமான பரேஷ் கோஸ்வாமியே அவரை அவமானப்படுத்துகிறார். கனவுக்கும் நனவுக்கும் இடையில் மிகப் பெரிய பள்ளமிருக்கிறது. அதை அவர் கடந்தால்தான் எல்லாருக்கும் விமானம் என்னும் கனவு நனவாகும். அந்தப் பள்ளத்தை அவர் எப்படிக் கடக்கிறார் என்பதையே திரைக்கதை விவரிக்கிறது. 


மனுவைப் பற்றிப் பேசுகிறார் நெடுமாறன். அந்த மனு அல்ல, புகார் மனு. படத்தில் சுயமரியாதைத் திருமணம் இடம்பெறுகிறது. பின்னணியில் ஒரு காட்சியில் பெரியார் படம் இடம்பெறுகிறது. இதனால் இதைத் திராவிட ஆதரவுப் படம் என முடிவுகட்ட வேண்டியதில்லை. இன்னொரு காட்சியில் விவேகானந்தர் படம் இடம்பெற்றுள்ளது. அலைபாயுதே திரைப்படத்துச் சுவரொட்டியும் தென்படுகிறது. ஒரு காட்சியில் நாயகி சீதாவுடன் ஒப்பிடப்படுகிறார்.  ஷாலினி உஷாதேவியும் சுதா கொங்கராவும் திரைக்கதை எழுதி, சுதா கொங்கரா இயக்கினாலும், கதாநாயகனுக்குப் பையன் பிறந்தால் அவர் நாயகனின் தந்தை போல் ஆறுவிரல்களுடன்தான் பிறக்க வேண்டியதிருக்கிறது. 

ஒரு உடுப்பி ஹோட்டல் தோசையுடன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் தோசையை ஒப்பிட்டு நெடுமாறன் பேசுகிறார். அந்தக் காட்சியின் போது உஸ்தாத் ஹோட்டல் காட்சி ஒன்று நினைவுவருகிறது. விமான நிறுவனம் அமைக்கும் முயற்சியில் அவர் தடுமாறும் காட்சிகளும் அவற்றிலிருந்து அவர் மீண்டு எழும் காட்சிகளும் படபடவென்று நகர்கின்றன. அப்துல் கலாம் போன்று ஒரு ஜனாதிபதியைக்கூடச் சந்திக்கிறார் நெடுமாறன். ஜனாதிபதி அமர்ந்திருக்கும் நாற்காலியின் பின்னால் ஒரு வீணை சுவரில் சாத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் தனது தந்தை இறந்த கதையை எல்லாம் ஜனாதிபதியிடம் சொல்கிறார். அவரும் பொறுமையாகக் கேட்டு உடனடியாக அவருக்கு உதவுகிறார். இந்த இடத்தில் எழுவர் விடுதலைக்குத் தமிழ்நாடு படும்பாடு உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?

அவருடைய கனவில் அவர் தோல்வியுறும்போதெல்லாம்  அவருக்கு ஏதோவோர் உதவி கிடைக்கிறது. மீண்டும் மீண்டும் அவர் முயல்கிறார். எந்த இடத்திலும் தனது கனவிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. வட்டிக்குப் பணம் வாங்குகிறார், கிராமத்தினர் அதுவும் ஊர்க்காரர்கள் திரண்டு உதவுகிறார்கள். இப்படி எல்லாம் அவருக்குச் சாதகமாக இருந்தாலும் அவருக்குத் தடைகள் வருகின்றன. தடைகளை நாயகன் உடைக்காவிட்டால் என்ன நாயகன்? ஆக, அவற்றை அவர் சுலபமாக ஊதித்தள்ளுகிறார். 


நெடுமாறனுக்கு விமான நிறுவனம் தொடங்கும் கனவு இருப்பதைப் போல் அவருடைய மனைவிக்கு பேக்கரி தொடங்குவது கனவு. ஆனால், நெடுமாறனுக்கு முன்னர் அவர் கனவை நனவாக்கிவிடுகிறார். நெடுமாறனின் கனவு எல்லாரும் விமானத்தில் பறக்க வேண்டும் என்பது. அதில் அடிப்படையிலேயே ஒரு பிரச்சினை இருக்கிறது. அவர் விமானம் என்பதைப் பணக்காரர்களுக்கான வாகனம் என்கிறார். உண்மையில் அது நேரத்தை மிச்சப்படுத்த நினைப்பவர்களுக்கான வாகனம். எளிய மனிதர்களுக்கு விமானம் அடிக்கடி தேவைப்படுவதில்லை. எப்போதோ ஒரு முறை தேவைப்படலாம். விமானம் இல்லாமலே மகிழ்ச்சியான வாழ்வு வாழ்பவர்கள் எளிய மனிதர்கள். அவர்களை விமானப் பயணத்துக்காக ஏங்குபவர்களாகச் சித்தரித்திருப்பது மிகையானது. சிலருக்கு அப்படியோர் ஆசை இருக்கலாம். அதைப் பொதுவான ஆசையாகக் கட்டமைப்பது சரியா? ஏனெனில், எளியவர்கள் வாழ்வு பூமியுடன் தொடர்புகொண்டது. அது மரத்தின் வேரைப் போல் நிலத்துடன் பிணைப்பைக் கொண்டது. 

அண்மையில் வந்த க.பெ/ ரணசிங்கம் படத்துடன் இந்தப் படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒன்று புலப்படுகிறது. மனிதர்கள் கசப்பான உண்மையைவிட இனிப்பான பொய்க்கே முகம் கொடுக்கிறார்கள். சூரரைப் போற்று படத்தைப் பார்க்கும்போது, அது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் பழைய சோறு சாப்பிடுவது போல் இருக்கிறது. மணி ரத்னத்தின் படம் போல் எலைட் தன்மையுடன் சாமானியர்களின் விமானப் பயணக் கனவை விவரிக்கிறது. மணிரத்னம், குரு என்னும் ஒரு படத்தை உருவாக்கினார். சுதா கொங்கரா, சூரரைப் போற்று என்னும் படத்தை உருவாக்கியிருக்கிறார். பொழுதுபோக்குப் படம் என்பதால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளலாம். சூர்யா இந்தப் படம் விவகாரத்தில் செய்த ஒரு புத்திசாலித்தனம் என்னவென்றால் இதை ஓடிடியில் வெளியிட்டது. அதன் மூலம் எல்லாரும் படத்தைப் பார்க்கும் வாய்ப்பைத் தந்தது. நெடுமாறன் செயலைவிட சூர்யாவின் செயல் மெச்சத்தகுந்தது. மொத்தத்தில், ஆகாயத்தில் பறக்கும் விமானத்துக்கும் அதைத் தரையில் இருந்து பார்க்கும் மனிதருக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி இருக்குமோ அதைவிட அதிகமான இடைவெளி படத்துக்கும் எனக்கும் இருந்தது. என்னைப் பொறுத்தவரையில், படத்தின் எந்தக் காட்சியும் அன்போடு பார்வையாளனை அணைக்கவில்லை. காட்சிகளில் ஆடம்பரம் மிளிர்கிறது. ஏழைக்குடிசையை அலங்கார விளக்குகளால் அலங்கரித்ததுபோல் பார்ப்பதற்கே ஒவ்வாததாக இருக்கிறது.  

எழுத்து இயக்கம்: சுதா கொங்கரா

திரைக்கதை: ஷாலினி உஷாதேவி, சுதா கொங்கரா

வசனம்: விஜயகுமார்

ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி

இசை: ஜி.வி.பிரகாஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக