இந்த வலைப்பதிவில் தேடு

சனி, செப்டம்பர் 26, 2020

பாடிப் பறந்த கிளி...

தோற்றம்: 1946 ஜூன் 4 மறைவு: 2020 செப்டம்பர் 25

ஆளுமைகளில் பலரை கரோனா அழைத்துக்கொண்டுவிட்டது. அரசியல் துறையில் திமுகவைச் சேர்ந்த ஜே.அன்பழகனின் மரணம் போல் திரைத்துறையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மரணம் எல்லோரையும் கடுமையாகப் பாதித்துள்ளது. 

கரோனா விழிப்புணர்வுக்காக ரசிகர்கள் வேண்டி விரும்பிக் கேட்ட பாடல்களைப் பாடி கரோனாவை ஆக்கபூர்வமாக எதிர்கொள்ளத் தூண்டியவர். ஆகஸ்ட் முதல் வாரத்தில் மருத்துவமனையில் சென்று சேர்ந்தார். எஸ்பிபி என எல்லோராலும் பிரியத்துடன் அழைக்கப்படும் அவரது பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தது போலவே அவரது நடத்தையும் எப்போதும் ரசிகர்களால் வியந்தோதப்படுகிறது. மனிதாபிமானத்துடன் எல்லோரிடமும் நடந்துகொள்பவர் அவர் என்பதால் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  

மிக எளிதாக சிகிச்சை பெற்றுவிட்டுத் திரும்பிவிடலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால், இயற்கை வேறுவிதமான கணக்குப் போட்டிருக்கிறது. அவருக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்தார்கள். அவரை மருத்துவமனையில் இருந்து மீட்டுக்கொண்டுவந்துவிட வேண்டும் என்ற எண்ணம் இசை ரசிகர்களுக்கும் இருந்தது. ஆனால், அது நடைபெறாமல் போனது சோகம்தான். 

செப்டம்பர் 24 அன்றே எஸ்பிபி பற்றி வந்த தகவல்கள் நம்பிக்கையளிக்கக்கூடியதாக இல்லை. செப்டம்பர் 25 அன்று மருத்துவமனையில் காவலர்கள் குவிக்கப்பட்டார்கள். இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு வந்தது எல்லாம் சேர்ந்து எஸ்பிபியின் உடல்நிலையைக் குறித்த கவலையை அதிகரித்தது. அதுவும் பாரதிராஜாவின் பேட்டி கிட்டத்தட்ட எஸ்பிபி நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டாரோ எனும் எண்ணத்தை உறுதிசெய்தது. 

அதே போல் சில நிமிடங்களுக்குப் பிறகு சன் டிவி நியூஸில் மதியம் 1:20 அளவில் எஸ்பிபியின் மரண செய்தி ஒளிபரப்பானது. மதிய உணவு நேரத்தில் தட்டில் சோறு போட்டுக் குழம்பு ஊற்றும் தருணத்தில் இந்தச் செய்தி வெளியானது. அதன் பிறகு வீட்டில் நிம்மதியாக உணவு உண்ணும் சூழல் வாய்க்கவில்லை. அம்மா புலம்பிக்கொண்டே இருந்தார். அவரால் எஸ்பிபியின் மரணத்தை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.  இதைப் போன்ற எண்ணங்களால் உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் பீடிக்கப்பட்டிருந்தனர். புதிய தலைமுறை செய்தி அலைவரிசையில் அவரது உடல் மண்ணைப் போட்டு மூடும் வரை எஸ்பிபியின் இறப்பை நேரலை செய்தார்கள். இந்த அளவுக்கான நேரலை அவசியம்தானா என்ற எண்ணத்தையே அது ஏற்படுத்தியது.

தன் குரலால் எல்லோரையும் மகிழ்வித்த அந்த மனிதர் இனி ஒரு பாடலையும் பாட முடியாது என்னும் உண்மை எல்லோரையும் உறையவைத்துவிட்டது. இதுவரை அவர் பாடிய பாடல்களே பல தலைமுறைகளுக்குத் தாங்கும் என்றபோதும் இனி அவர் பாட மாட்டார் என்பதே ரசிகர்களின் மனத்தைக் கலங்கச் செய்கிறது.  அவரது பாடல்களில் ஆறுதலைத் தேடுகிறார்கள். எல்லா அலைவரிசைகளும் அவரது மறைவை மறக்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த இரண்டு நாட்களாகக் காற்றலை எங்கும் எஸ்பிபியின் பாடல்களே கலந்துள்ளன. பாடல்கள் உள்ளவரை அவரது நினைவும் இருக்கும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக