ரஜினி காந்த் இரட்டை வேடங்களில் நடித்த படங்களில் ஒன்று இது. பாலு என்ற பாலசுப்ரமணியன் என்னும் கல்லூரிப் பேராசிரியராகவும் ஷங்கர் எனும் ரௌடியாகவும் ரஜினி காந்த் நடித்திருக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நடிகை சுஹாசினி நடித்துள்ளார். மனதில் உறுதி வேண்டும் படத்தில் வங்காளக் கடலே என்ற பாடலுக்கு சுஹாசினி ரஜினிகாந்த், விஜய காந்த், சத்யராஜ் ஆகியோருடன் ஆடிப்பாடுவார். அதற்குப் பிறகு அந்த மூவருடன் அவர் நடித்துவிட்டார். ரஜினியுடன் இந்தப் படம். விஜய் காந்துடன் என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், சத்ய ராஜுடன் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு.
கதையில் ஆக்ஷனுக்குப் பெரிய வாய்ப்பில்லை. ஆனால், ஷங்கர் என்னும் கதாபாத்திரம் ரௌடி என்பதால் ஆங்காங்கே சில சண்டைகள் இடம்பெற்றுள்ளன. நடிகர் நாசர், ரகுபதி என்னும் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். குரு சிஷ்யன் படத்துக்குப் பிறகு ரஜினியும் பிரபுவும் சேர்ந்து நடித்த படம் இது. பாலு பணியாற்றும் கல்லூரியிலேயே படிக்கிறார் அவருடைய தம்பியான ராஜு (பிரபு). ராஜு படித்து முடித்து செட்டிலான பிறகு திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனக் காத்திருக்கிறார்கள் பாலுவும் சுமதியும் (சுஹாசினி).
கல்லூரியில் ரகுபதிக்கும் ராஜுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. அந்தத் தகராறு முற்றிவிடுகிறது. பிரபுவை பெங்களூரு அனுப்பிவிடலாம் என்று பாலு முடிவெடுக்கிறார். அந்த வேளையில் ஏற்பட்ட அடிதடி சண்டையில் எதிர்பாராதவிதமாக பாலு இறந்துவிடுகிறார். இறக்கும் தருவாயில் சுமதிக்குத் திருமணம் செய்துவைக்க ராஜுவிடம் கோரிவிட்டுச் சாகிறார். பாலு இறந்த சேதி அறிந்த சுமதி பித்துப் பிடித்ததுபோல் ஆகிவிடுகிறார். சுமதியின் நிலைமை என்னவாயிற்று அண்ணனுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை ராஜுவால் காப்பாற்ற முடிந்ததா என்று செல்கிறது மீதிப் படம்.
படத்தின் முதல் பாதியில் வேட்டி சட்டையில் அமைதியாக ரஜினி வருவார். அதற்கு நேரெதிராக பிற்பாதியில் ஜீன்ஸ் அணிந்து, பையில் மது பாட்டிலோடு எந்நேரமும் உலவார். அப்படியே அண்ணனை உரித்துவைத்ததுபோல் இருக்கும் ரௌடியைத் தன் அண்ணன்போலவே நினைத்து அன்பு செலுத்துகிறார் ராஜு. ராஜுவுடைய காதலி தேவியாக குஷ்பூ நடித்திருக்கிறார். ராஜுவின் அந்தப் பாசம் ஷங்கருக்குப் புதிது. ஆகவே, முதலில் ராஜுவிடம் விலகினாலும் கொஞ்சம்கொஞ்சமாக ராஜுவுடன் ஒட்டிக்கொள்கிறார் ஷங்கர். வழக்கமாகவே ரஜினி படங்களில் இடம்பெறும், 'நீ என்ன என்னன்னு சொன்ன?' என்ற கேள்வி இதிலும் உண்டு.
சுமதி கதாபாத்திரத்துக்குப் பெரிய வேலை இல்லை. அவரது திருமணம்தான் படத்தின் பிரதானச் சிக்கல். ஆசையுடன் காதலித்த அத்தான் இறந்தபின்னர் அவரையே எண்ணி எண்ணி அவரது படத்தை வரைவதிலேயே தனது வாழ்நாளைக் கழிப்பதில் பிரியம் கொண்ட பத்தாம்பசலித்தனமான பாத்திரம் அது. அத்தான் சாயலில் உள்ள ரௌடியை முதலில் வெறுக்கிறார் சுமதி. தெரு நீரும் கங்கை நீரும் ஒன்றா என்று கேள்வியெல்லாம் கேட்கும் சுமதி இறுதியில் தெரு நீரைக் கங்கை நீராகக் கொள்வதுடன் படம் முடிவடைகிறது. படமும் மிகவும் சுமாரான படம்தான். இப்போது பார்க்கவே இயலவில்லை. ஞாபக மறதியை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளை இப்போது பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
படத்தின் தணிக்கைச் சான்றிதழ் 1988 செப்டம்பர் 23 அன்று பெறப்பட்டிருக்கிறது. படம் வெளியான நாள் செப்.29 என்று படத்தின் ஆங்கில விக்கிபீடியா பக்கம் தெரிவிக்கிறது. தென்மதுரை வைகை நதி பாடல் காரணமாகவோ என்னவோ படம் மதுரையில் 136 நாட்கள் ஓடியுள்ளது. மதுரை சிந்தாமணி, சோலைமலை என்னும் இரண்டு தியேட்டர்களில் படம் வெளியாகியிருக்கிறது. இளையராஜாவின் இசையில் தென் மதுரை வைகை நதி, முத்தமிழ்க் கவியே வருக ஆகிய பாடல்கள் சுகமானவை. நான் தட்டிக் கேட்பேன் ஆனால் கொட்டிக் கொடுப்பேன் என்னும் பஞ்ச் டயலாக் படத்தில் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக