இந்த வலைப்பதிவில் தேடு

சனி, ஜனவரி 25, 2020

தோல்வி நிலையென நினைத்தால்…

டிசம்பர் 2019-ல் நடைபெற்ற சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெரும்பாலான படங்கள் ‘ஏன்டா படம் பார்க்க வந்தோம்’ என எண்ணவைத்தன. விதிவிலக்காக இருந்தது டிசம்பர் 13 அன்று கேசினோவில் திரையிடப்பட்ட ஜெர்மனியப் படமான பலூன் (2018). மைக்கேல் ஹெர்பிக் இயக்கிய இந்தப் படம் விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தது. இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல் படத்துடன் படமாக ஒன்ற முடிந்தது.

கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிப்போக கோந்தா, பீட்டா இருவருடைய குடும்பங்களும் முடிவுசெய்கின்றன. பிரம்மாண்டமான வெப்பக் காற்று பலூனை உருவாக்கி அதில் தப்பிச் செல்லலாம் என முடிவுவெடுத்து பலூனை உருவாக்கிவிட்டனர். காற்றின் திசை தங்களுக்குச் சாதகமாகும் நாளுக்காகக் காத்திருக்கின்றனர். அப்படியொரு நாள் வருகிறது. ஆனால், பலூன் எட்டுப் பேரைத் தாங்காது என்பதால் திட்டத்தை நிறைவேற்றுவது கடினம் என்கிறார் கோந்தா. முன்வைத்த காலைப் பின்வைக்க பீட்டாவுக்கு விருப்பமில்லை. தன் குடும்பத்தினருடன் செல்ல முடிவெடுக்கிறார். யாருமறியாமல் இரவுடன் இரவாகப் புறப்படுகிறார்கள். வனப் பகுதிக்குச் சென்று காரிலிருந்து பலூனை இறக்கி, பறக்கத் தொடங்குகிறார்கள். எல்லாம் கூடிவந்த வேளையில் இயற்கை சதி செய்கிறது. உயரப் பறந்த பலூன் சட்டென்று தாழ்கிறது. சரசரவென்று கீழ் நோக்கி வருகிறது. எரிபொருள் தீர்ந்துபோகிறது. அவர்களது முயற்சி தோல்வியில் முடிகிறது. தரையில் வந்து விழுந்து விடுகிறார்கள்.

அவர்களது கனவு ஒருமுறை முறிந்துபோகிறது. ஆனால், முறிந்த கனவை எண்ணி நொடிந்துபோகவில்லை பீட்டா. மீண்டும் முயல விரும்புகிறார். இப்போது நிலைமை முன்பைவிடச் சிக்கலாகிறது. ஒருபுறம் இவர்கள் விட்டுவந்த தடயத்தைப் பின் தொடர்ந்து ராணுவம் அவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் யாருமறியாமல் மீண்டும் ஒரு பலூனை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். இந்த இரண்டாம் முயற்சி வென்றதா இல்லையா என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. 1976 முதல் 1988 வரையான காலகட்டத்தில் சுமார் 38,000 தப்புதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சுமார் 462 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிப்போக முயன்றவற்களைத் துரோகிகளாகக் கருதியது ஜெர்மனியின் ஜனநாயகக் குடியரசு. எனவே, அது எல்லையில் கண்காணிப்பைப் பலமாக வைத்திருந்தது. அதை மீறித் தப்பித்துப்போவதென்பது பெரிய துணிகரச் செயலே. அந்தச் செயலில் முதல் முறை தோற்றார் பீட்டா.
முதன்முறை இரவில் வீட்டை விட்டு வெளியேறும் வேளையில், மீண்டும் திரும்ப வர மாட்டோம் என்று தெரிந்தும் வீட்டைச் சுத்தமாக வைத்துவிட்டே பீட்டாவுடைய மனைவி தோரிஸ் புறப்படுகிறார். தன்னை யாரும் மோசமான குடும்பப் பெண் என்று சொல்லிவிடக் கூடாது என்று என்பதில் அவர் முனைப்புடன் இருக்கிறார். பலூனில் ஏற மறுக்கும் இளைய மகனிடம் மேற்கே அவன் விரும்பிய பிஎம்எக்ஸ் பைக் வாங்கித் தருவதாகச் சொல்லிச் சம்மதிக்கவைக்கிறார். அந்த முயற்சி தோற்றபோது அந்த மகனுக்குத் தனக்கு பிஎம்எக்ஸ் கிடைக்காமல் போய்விட்டது என்பதே கவலை. முதல் மகன் ஃபாங்க், தன் காதலிக்குக் கடிதம் எழுதி அவளுடைய வீட்டின் தபால் பெட்டியில் போட்டுவிட்டுச் செல்கிறான்.  முயற்சி தோற்றதால், மறுநாள் காலை அதை அவனே வந்து எடுக்க நேர்கிறது. கடிதத்தைத் தபால்பெட்டியில் போடும் செயல் எளிதாக இருந்தது; ஆனால் கடிதத்தை எடுக்கத்தான் சிரமப்படுகிறான்.

இரண்டாம் முயற்சியின் போது நாமே கிழக்கிலிருந்து மேற்குக்குத் தப்பித்துப் போக முயல்வது போன்ற எண்ணத்தை உருவாக்கிவிடுகிறது திரைக்கதையின் போக்கு. பின் தொடர்ந்து வரும் நிழல்போல் ராணுவத்தினர் ஒவ்வொரு துப்பாகத் துலக்கிக்கொண்டே வருகிறார்கள். எந்த நேரத்திலும் பீட்டாவின் குடும்பம் ராணுவத்திடம் மாட்டிக்கொள்ளுமோ என்ற பதைபதைப்புடன் திக் திக்கென ஒவ்வொரு நொடியும் நகர்கிறது. முதன்முறை ஒரு குடும்பம் என்றால், இரண்டாம் முறை கோந்தாவின் குடும்பமும் சேர்ந்துகொள்கிறது. மொத்தம் எட்டுப் பேர். ராணுவத்தினர் கண்ணில் மண்ணைத் தூவி பலூனில் ஏறிவிடுகிறார்கள். மொத்தப் பார்வையாளர்களுக்கும் அவர்கள் எப்படியாவது தப்பிவிட வேண்டுமே என்ற எண்ணம் நெஞ்சில் நிறைந்து கிடக்கிறது. எதிர்பார்ப்பு  வீணாகவில்லை. 
முதலில் இடறிய பீட்டாவின் முயற்சி இறுதியில் துலங்கியது. ஏனெனில், வாழ்வில் சிலவேளை எல்லாச் செயலும் இடறும்; சில நேரம் தொட்டதெல்லாம் துலங்கும். எப்போது இடறும், எப்போது துலங்கும் என்பதை நாமறியாததால் வாழ்வு ருசிகரமாகிறது.  

சனி, ஜனவரி 11, 2020

ஒரே கட்சி, ஒரே நாடு, ஒரே மதம்


வரலாறு திரும்பிக்கொண்டே இருக்கிறது. அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். இரண்டாம் உலகப் போர் காலத்தில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் 1943-ல் Don't Be a Sucker என்னும் ஒரு குறும்படத்தை உருவாக்கி வெளியிட்டிருந்தனர். ஜெர்மனியை ஹிட்லர் எப்படித் தன் முழு ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்தார் என்பதையும் அதற்குப் பயன்பட்ட உத்தியையும் மக்களுக்கு அது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் இந்தப் படம் மிகத் தெளிவாக விளக்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க மாணவர்கள் மத்தியில் இந்தப் படம் சுற்றுக்கு விடப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் ஆட்சியில் அமெரிக்காவைப் பார்க்கும்போது வரலாறு திரும்புகிறதோ என்ற எண்ணத்தை அது மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் படத்தில் அமெரிக்காவைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கர் ஒருவர், பொதுவெளியில் தன் நாட்டின் வேலைவாய்ப்புகளையும் வளங்களையும் அமெரிக்காவில் குடியேறிய பிற நாட்டினர் அனுபவித்துவருவதை ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார். இந்த நாட்டிலுள்ள கறுப்பர்களையும் கத்தோலிக்கரையும் பிற நாட்டினரையும் ஃப்ரீமேசன் அமைப்பினரையும் வெளியேற்றாவிட்டால் இது நமக்கான நாடாக இல்லாமல் போய்விடும் என்றும் நாம் அவர்களை அழிக்காவிட்டால் அவர்கள் நம்மை அழித்துவிடுவார்கள் என்றும் அச்சுறுத்துகிறார். அதன் பின்பு அவர் கூறிய உண்மைகளை விளக்கும் சிறு பிரசுரம் ஒன்றையும் விநியோகிக்கிறார். இதை ஃப்ரீமேசனான மைக் என்பவர் பெற்றுக்கொண்டு வாசிக்க முடிவெடுக்கிறார்.


அப்போது மைக் அருகே நின்றுகொண்டு இதைக் கவனித்த ஹங்கேரியில் பிறந்த, இப்போது அமெரிக்கக் குடிமகனான பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் வாழும் அனைவரும் அமெரிக்கர்தான் என்றும் இதைப் போன்று பேச்சுக்கள் ஆபத்தானவை என்பதையும் மைக்கிடம் கூறுகிறார்.

1932-ல் ஜெர்மனியில் இதைப் போன்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டதை நினைவுகூர்கிறார். நாஜிக்கள் மட்டுமே ஜெர்மனியில் இருக்க வேண்டும் யூதர்களும் கத்தோலிக்கர்களும் நமது வளத்தைச் சுரண்டுகிறார்கள். இப்படிப் பலவாறு பேசி நாட்டைத் துண்டாடினார்கள். மக்களைத் தூண்டிச் சிறு சிறு குழுக்களாகப் பிரித்தார்கள். மக்களிடையே வெறுப்புணர்வை வளர்த்தார்கள். பின்னர் ஒவ்வொன்றாக அழித்தார்கள். சிறு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் என ஒவ்வொன்றாக அழித்து ஒரே கட்சி, ஒரே நாடு, ஒரே மதம் என்னும் சித்தாந்தத்தை வலிமைப்படுத்தினார்கள். இறுதியில் ஆட்சிக்கும் வந்தார்கள். ஆனாலும், அவர்கள் முன்மொழிந்த வளமான ஆட்சியை வழங்க இயலவில்லை. உண்மை அவர்களை உறுத்தியது. உண்மையை எதிர்கொள்ள இயலாமல் உண்மையைப் பேசுபவர்களையும் எழுதுபவர்களையும் அடக்கினார்கள். லட்சக்கணக்கான புத்தகங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். தங்கள் நாட்டுப் பிரச்சினைகளை மறைக்க போர் வெறியைத் தூண்டினார்கள். இறுதியில் ஜெர்மனி வீழ்ந்தது. இதில் அதிக நஷ்டமடைந்தது நாஜிக்கள் வாக்களித்த பொன்னான ஜெர்மனி மலரும் என நம்பிய அப்பாவி ஜெர்மானியர்கள்தாம்.

இந்தப் படத்தில் ஒரு பேராசிரியர் அறிவியல்ரீதியாக ஒவ்வொருவரும் தனித்தனியான மனிதர்தான் என்றும், ஒவ்வொருவரும் தனித் தனியான சிறப்புகளுடன் உள்ளனர் என்றும் உயர்ந்த இனம் என எதுவும் இல்லை என்றும் கூறுவார். எல்லா இனங்களிலும் மேன்மையான மனிதர்களும் கீழ்மையானவர்களும் உள்ளனர். மனிதர்களை இனரீதியாகப் பிரித்தல் சரியல்ல என்றும் விளக்குவார்.

மனிதர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். எல்லா வகையான மனிதர்களும் ஒருங்கிணைந்து வாழும் நாட்டை ஒரே மதம் ஒரே கட்சி ஒரே நாடு எனப் பிரிக்க முயலும் மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்னும் பாடத்தைப் புகட்டுகிறது. ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது.  

புதன், ஜனவரி 08, 2020

என்னடே சோலி முடிஞ்சிருச்சா?

சில சொற்களைச் சொல்லிவிட்டாலே போதும். அது தொடர்பான பல சம்பவங்களும் மனிதர்களும் நமது நினைவில் வந்துவிடுவார்கள். ஹைகோர்ட்டுன்னு சொன்னா டக்குன்னு ஒரு ஞாபகம் வரும். துண்டுச் சீட்டுன்னா வேற ஒரு ஞாபகம் வரும். சமீபத்தில் அப்படியான சொல் ஒன்று பலருடைய சோலியைக் கெடுத்தது. அது சோலிய முடி. சோழின்னா எல்லோருக்கும் தெரியும். சோலின்னா தெக்கத்திக்காரங்களுக்குத்தான் தெரியும். சோலின்னா வேலை என்பது பொருள். வேலைன்னா  ஒரு வேலை இல்லைங்க பலவேலை. ஜோலி என்பது இதன் கிரந்த வடிவம் என்று சொல்கிறார்கள். ஜோலின்னு சொன்னா உடனே நமக்கு ஏஞ்சலினா ஜோலிதான் நினைவுக்கு வருவாங்க. ஆனால் சோலி கதையே வேற.  
விளக்கை அணைத்தான் என்பது ஒரு வாக்கியம். அவளை அணைத்தான் என்பது ஒரு வாக்கியம். இரண்டிலும் அணைத்தல் என்னும் வினை வருகிறது. ஆனால், அணைத்தல் முதல் வாக்கியத்தில் ஒரு செயலின் முடிவைக் குறிக்கிறது. இரண்டாம் வாக்கியத்தில் ஒரு செயலின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது ஒரு மொழியின் சிறப்பு. அதைப் போல் சோலிய முடிச்சிட்டாங்க. அப்படின்னா, அது சொல்லும் விதத்தைப் பொறுத்து, சொல்லும் சூழலைப் பொறுத்து பொருளில் மாறுபடும்.
என்ன மாப்ள ஏதோ சோலியாப் போறாப்ல இருக்குன்னு நெருங்கிய நண்பர்களுக்குள்ளான உரையாடலில் இடம்பெறும் சோலி கிண்டல் மிகுந்தது. சோலி என்றால் வேலைதான் ஆனால் இது கொஞ்சம் கிளுகிளுப்பான, விவகாரமான வேலை. உனக்கென்ன அங்க சோலி என்பது கண்டிப்பு கலந்து ஒரு எச்சரிக்கை. இனி அங்க போவாத தேவையில்லாத பிரச்சினை வரும் என்பதன் எச்சரிக்கை. அவனுக்கு இதே பொழப்பாப் போச்சு சோலிக்கழுதையைப் பாத்துக்கிட்டுக் கிடக்கமாட்டானா? என்ற சொற்றொடரிலும் ஒரு சோலி இடம்பெறுகிறது. இந்தச் சொற்றொடரில் குறிப்பிடப்பட்டிருக்கும் மனிதர் தொடர்ந்து ஏதோ தொந்தரவைத் தந்துகொண்டே இருக்கிறார். அவர் அமைதியாக இருக்க மாட்டாரா என்பதையே இந்த சோலி சுட்டுகிறது.
சீக்கிரம் சோலிய முடிச்சிட்டு வாடே என்று அறுவடைக் களத்தில் சொன்னால் ஒரு பொருள்; ஆவேசக் குணத்தில் சொன்னால் ஒரு பொருள். எடுத்துக்காட்டாக, ஒருவன் கையில் அரிவாளைத் தூக்கிக்கொண்டு ஆவேசமாக கெட்ட வார்த்தையைச் சொல்லியபடியே ஒஞ்சோலிய முடிக்காம விடமாட்டம்ல என்று சொன்னார் என்றால் அங்கே சோலியை முடித்தல் என்பது எமனின் கணக்கில் ஒன்றைக் கூட்டிவிடும்.
இப்படிப் பல சோலிக்காரங்க நாம. சோலியை முடித்தல் என்பதை ஒரு பொருளில் தட்டையாகப் புரிந்துகொள்வது சரியல்ல. ஆனால், அதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் மொழியறிவு வேண்டும். சிலருக்கு மொழியறிவு இருக்கும். ஆனால், வேண்டுமென்றே நடிப்பார்கள். அவர்களை நாம் எதுவும் செய்ய இயலாது அவங்க வேற எதோ சோலிக்காக இப்படிச் சொல்வாங்க. நாம நமது சோலியப் பாத்துட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான்.

புதன், ஜனவரி 01, 2020

நஞ்சுண்டன்: பிழைகள் அஞ்சும் மனிதர்



அறியப்பட்டவர்களின் மரணச் செய்தியைக் கேட்ட மறுகணம் மனம் அவர்களை இறுதியாக எப்போது சந்தித்தோம் எனத் தேடுவது வாடிக்கை. இப்படியான சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் மனம் தோல்வியைத் தழுவும். நஞ்சுண்டன் மரணச் செய்தியை அறிந்தவேளையிலும் அதே போன்று முயன்றது மனம்; இறுதியில் தோல்வியே எஞ்சியது. அவரைச் சந்தித்து ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும் என்பதை மட்டும் உணர முடிந்தது. சட்டென்று இந்தச் செய்தியை உண்மை என்று நம்ப மாட்டேன் என மனம் அடம்பிடித்தது. ஏனெனில், அண்மையில் ஞானக்கூத்தன் பற்றிய கட்டுரை ஒன்றை இந்து தமிழில் எழுதியிருந்தார். அது தொடர்பாகப் பேசியபோது இதே போல் பல ஆளுமைகள் குறித்துத் தொடர்ந்து எழுத இருப்பதாகக் கூறினார். அப்படியான கட்டுரைகளை எழுதி முடிக்காமல் எப்படி அவர் இறந்திருக்க இயலும் என மனம் அறியாமையில் உழன்றது. ஆனாலும், அவரது மரணம் உறுதிப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தன் இறுதிக் கணங்களை மருத்துவமனையில் கழித்துக்கொண்டிருந்த வேளையில் ஒருமுறை நஞ்சுண்டன் அழைத்தார். கருணாநிதியின் மரணம் தொடர்பாக உலவும் வதந்தியின் உண்மை நிலைமை என்ன என்பதைக் கேட்டறிந்துகொண்டார். இப்படிச் சில அரிதான வேளைகளில் தொலைபேசியில் அழைப்பது அவரது வழக்கம். அரிதாகச் சில தனிப்பட்ட செய்திகளையும் பகிர்ந்துகொள்வார். வேலை நிமித்தமாகப் பல்கலைக்கழகத்தில் ஞாயிறு அன்று கூட வேலை செய்ய நேர்ந்திருக்கிறது என்பதையெல்லாம் கூறியிருக்கிறார். பணிச்சுமை அவரை அழுத்தியிருக்கக்கூடும்.

நான் அவரது மாணவனல்ல. ஆனாலும், முத்துசாமி, ந.கவிதா, பாலசுப்ரமணியம் வரிசையில் என்னையும் வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதை அவருடனான உரையாடலில் குறிப்பிட்டிருக்கிறார். ‘அவர் திருத்திய கட்டுரைகளின் பிரதிகளிலிருந்து தமிழின் நுட்பத்தைக் கற்றிருக்கிறேன்’ என்பதை அவரிடம் ஒருமுறை தெரிவித்தேன். அதைக் கேட்டதும் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. ‘இதை நீங்கள் எப்போதும் குறிப்பிடுவீர்கள்தானே’ என வினவினார். ‘நிச்சயமாகச் சொல்வேன்’ என்று கூறியிருக்கிறேன். ஆனால், அதை இப்படி அஞ்சலிக் குறிப்பில் எழுதுவேன் என்பதை மட்டும் நினைத்துப் பார்த்ததில்லை.  

மார்க்கேஸின் சிறுகதை ஒன்றை சுகுமாரன் மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார். அந்தக் கதையைத் திருத்திக்கொண்டிருந்த வேளையில் ஓரிடத்தில் கப்பலில் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் படுக்கையிலிருந்து எழுந்து தரையில் கால் வைத்தது என்பதைப் போன்று ஒரு வரி வந்தது. கப்பலில் எப்படித் தரையைத் தொட முடியும் அது தளம் என்றுதானே இருக்க வேண்டும் என்று கூறித் திருத்தினார் அவர். இதுதான் நஞ்சுண்டன். மொழிரீதியாக அதன் இலக்கணங்களைக் கறாராகக் கைக்கொள்வார். இலக்கிய நயத்துக்காக இலக்கணத்தை மீறுவதை அவரால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக உண்மையிலேயே வருத்தப்படுவார்; அதை வெளிப்படுத்தவும் செய்வார். அதனால் சிலரிடம் அவருக்கு அபிப்ராய பேதம் ஏற்படுவதும் இயற்கை. அவரது கருத்தில் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் தான் சொல்வது மட்டுமே சரி என்று வாதிட மாட்டார்.


கடந்த ஆண்டு ஏப்ரல் 25 அன்று அழைத்தார். இன்று ஓர் உலக அதிசயம் நடந்தது என்றார். அன்று சுபவீ கலைஞர் தொலைக்காட்சியில் தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர் என புதுமைப்பித்தனைக் குறிப்பிட்டுப் பேசியிருந்ததுதான் அவர் குறிப்பிட்ட அதிசயம். கருணாநிதி இருந்தவரை திமுக தரப்பினர் இப்படியான நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை என்பதைக் குறிப்பிட்டார். கலைஞர் தொலைக்காட்சியில் திங்களன்று வெள்ளிவரை ஒளிபரப்பாகும் சுபவீயின் உரையைத் தொடர்ந்து கேட்பதாகவும் அது தொடர்பாக அவருக்குச் செய்தி அனுப்புவதாகவும் கூறினார். தன்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும் இத்தகைய சம்பவங்களையும் நிகழ்ச்சிகளையும் குறித்து நண்பர்களுடன் பேசுவதில் அவருக்கு அலாதி மகிழ்ச்சி. இதை அவரது உரையாடல் உணர்த்தும். தனது தனிமையைப் போக்கும் வழிகளில் ஒன்றாக இதை அவர் கருதியிருக்கக்கூடும்.

காலச்சுவட்டில் அவருடன் இணைந்து பணியாற்றிய காலம் உண்மையிலேயே மொழி தொடர்பான பல அனுபவங்களைத் தந்த காலம். அவருக்கும் அந்தப் பணி மிகவும் பிடித்தமான பணி. அதைக் குறித்துப் பேசும்போதெல்லாம் சிறிது மனப்பிறழ்வுக்காளானதுபோல் தன்னை மறந்து சிரிப்பார். தேவிபாரதி தன் தந்தையைக் குறித்து உயிர் எழுத்தில் எழுதிய கட்டுரையை ஒருமுறை குறிப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தார். கண்ணன் தன் தந்தையின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது குறித்து நேர்மறையாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஒருபோதும் தனது படைப்புகளை முன்னிறுத்தியோ அவற்றை வாசிக்கும்படியோ கூறியதேயில்லை அவர். அவர்மீதான மதிப்பை இது அதிகப்படுத்துகிறது.

காலச்சுவடில் பணியாற்றிய காலங்களில் வார இறுதி நாட்களில் பெங்களூருலிருந்து வருவார். பெரும்பாலும், காலச்சுவடு அலுவலக நண்பர்களுக்குக் கொறிப்பதற்கு ஏதாவது வாங்கிவருவார். அவரது ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பு வரை பிழைகளைத் திருத்துவது பிரதிகளை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார். தொடர்ந்து பக்கங்களைப் பார்க்க வேண்டியதிருந்தால், இடையில் சிறிது இடைவெளி எடுத்துக்கொள்வார். அவருக்கான ஓய்வல்ல அது தொடர்ந்து பக்கங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் பிழைகளைச் சரியாகக் கவனிக்காதபடி போய்விடும் என்ற காரணத்தாலேயே அந்த இடைவெளி. அவர் பணியாற்றிய ஒழுங்கில் கணக்கில் பார்த்தால் சுமார் பத்துப் பன்னிரண்டு ஆண்டு காலத்தில் 20,000 பக்கங்களையாவது (ஒவ்வொரு கட்டுரையையும் இரண்டு மூன்று முறை பிரிண்ட் எடுத்து வாசிப்பது அவர் வழக்கம்) எடிட் செய்திருப்பார் நஞ்சுண்டன். சென்னைக்கு வர முடியாத நாட்களில் கட்டுரைகளை மின்னஞ்சலில் அனுப்பி, திருத்தி வாங்கியிருக்கிறேன். தனது எழுத்துப் பணியைவிடத் தனது எடிட்டிங் பணியில்தான் அவருக்குப் பெரும் திருப்தி கிடைத்திருக்கலாம்.   

நான் காலச்சுவடில் உதவி ஆசிரியராகச் சேர்ந்ததே ஒரு விபத்துதான். இந்த வாக்கியத்தை எழுதும்போதே காலச்சுவட்டில் என்பதுதான் சரி ஆனாலும் காலச்சுவடில் என்று எழுதுவது பழகிவிட்டது என அவர் மொழிந்தது நினைவில் எழுந்தடங்கியது. இப்படியாக எங்கேயாவது தமிழில் ஒரு பிழையைப் பார்க்க நேர்ந்தால் உடனே மனம் நஞ்சுண்டனை நினைத்து மீளும். மொழியியல்ரீதியான ஏதாவது சந்தேகம் எழுந்தால் அதைத் தீர்த்துக்கொள்ள அவரை அழைப்பேன். இனி, அந்த வாய்ப்பற்றுவிட்டது என்பதே சுயநலம் கொண்ட மனத்தை உறுத்துகிறது.

சில்லுக் கருப்பட்டி ஒரு டிஜிட்டல் கருப்பட்டி,

நான்கு தனித்தனிக் கதைகள். மென்னுணர்வு கலந்து பிசைந்து அவற்றை முழுநீளப் படமாகத் தந்திருக்கிறார் ஹலிமா சமீம். முதல் கதையான பிங்க் பேக், குப்பை பொறுக்கும் சிறுவன் மகேஷின் வாழ்க்கையுடன் பணக்காரச் சிறுமி ஒருத்தியை இணைக்கிறது. இரண்டாம் கதையான காக்கா கடி, புற்றுநோய் பாதித்த முகிலன் என்ற ஐடி இளைஞன், மது என்னும் ஃபேஷன் கலைஞர் பெண்ணுக்குமான பிரியத்தைப் பேசுகிறது.  டர்ட்டில்ஸ் என்னும் கதை, திருமணமேசெய்துகொள்ளாமல் முதுமை அடைந்துவிட்ட யசோதா, முப்பதாண்டுகளுக்கும் மேல் குடும்பம் நடத்திய பின்னர் மனைவியை இழந்த நவநீத கிருஷ்ணன் இவர்களுக்கிடையேயான நேசத்தைச் சொல்கிறது. திருமணம் முடிந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு தம்பதிக்கிடையே ஏற்படும் உரசலையும் தீர்வையும் முன்வைக்கிறது இறுதிக் கதையான ஹே அம்மு.

பாலுமகேந்திராவின் கதை நேரம் போல் மெல்லுணர்வு நிரம்பி வழியும் திரைக்கதையையே எழுதியிருக்கிறார் ஹலிமா. குப்பை பொறுக்கும் சிறுவன் டேஷ் என்னும் கதாபாத்திரம் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கிறது. மாஞ்சா என்னும் மகேஷ் கதாபாத்திரம் தட்டையாக அமைக்கப்பட்டிருக்கிறது.  வைர மோதிரம், ஏழைச் சிறுவன், செல்வந்தச் சிறுமி என்னும் வழியில் பயணப்பட்டு நீதிபோதனைக் கதையாகிறது இதன் பயணம்.

சொல்லக் கூச்சப்படும் இடத்தில் புற்றுநோய் பாதித்த முகிலனுக்கும் மதுவுக்கும் ஓலாவில் தொடர்ந்து நிகழும் சந்திப்பும் காதலும்  சினிமாத்தனமானது. முடிந்தவரை புற்றுநோய் சோகத்தைத் தவிர்த்திருக்கிறார் என்பது ஆறுதலாக உள்ளது. இந்த அத்தியாயம் பார்த்திபனின் பொண்டாட்டி தேவை படத்தை நினைவுபடுத்தியது.

மனைவியை இழந்த நவநீதனுக்கும் யசோதாவுக்குமான முதிய வயது சந்திப்பும்  முதலை நடையிடையே அவர்களுக்குள் ஏற்படும் உரையாடலும் ஒருவகையில் ஓர் அந்தி மந்தாரை. திருமணத்தை மறுத்தவராக இல்லாமல் திருமணம் ஆகாதவராக யசோதாவைச் சித்தரித்திருப்பது மிகப் பழமையாக உள்ளது. அவர்களுக்கிடையே ஏற்படும் அணுக்கமும் அன்பும் புதுமையாக உள்ளன.

தனபாலுக்கும் அமுதினிக்குமான திருமண உறவைச் சொல்லும் கதை ஓரளவு உற்சாகமாகக் கையாளப்பட்டுள்ளது. அவர்களிடையே எழும் விரிசல் புதிதில்லை என்றபோதும் புத்துணர்வுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சமுத்திரகனியை மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர். சுனைனாவின் நடிப்பு மிக இயல்பாக உள்ளது.

துண்டு துண்டுக் கதைகள் என்பதால் ஒரு சினிமாவைப் பார்த்த உணர்வு எழவே இல்லை. ஏதோ வெப் சீரிஸின் சில அத்தியாயங்களைப் பெரிய திரையில் பார்ப்பது போலவே தோன்றுகிறது.

பிறர் சொல்லத் தயங்கும் வித்தியாசமான விஷயங்களை எடுத்துக்கொண்டு அவற்றைப் படமாக்க வேண்டும் என்னும் யத்தனிப்பு படத்தில் துருத்தலாகத் தெரிகிறது. தனபால் உறங்கும்போது வாக்கும் கிளீனரால் அமுதா சுத்தப்படுத்தும்போது அவனுக்கு ஏற்படும் எரிச்சல்போல் அது உள்ளது. எல்லாக் கதைகளிலும் அறவுணர்வானது முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. சினிமாவில் அறவுணர்வு சொல்லப்படலாம் ஆனால், அதற்காகவே படம் எடுத்தது போன்ற உணர்வை இந்தச் சில்லுக்கருப்பட்டி ஏற்படுத்திவிடுகிறது.

ஒளிப்பதிவு உறுத்தலில்லாமல் இருக்கிறது. ஆனால், பின்னணியிசை படத்தின் மென்னுணர்வை உச்சபட்சமாக அதிகரிக்கும் வகையில் பல காட்சிகளில் முழங்கிக்கொண்டே இருக்கிறது.

மிகையுணர்வு இல்லாமல் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குநர் வெற்றிபெற்றிருக்கிறார். ஆனால், படத்தின் இயல்பில் ஒரு செயற்கைத் தனம் ஒட்டியிருக்கிறது. அது சில்லுக்கருப்பட்டியை இயல்புக்கு மாறான சினிமாவாகக் காட்டுகிறது. மென்னுணர்வாளர்களுக்கு இப்படம் பெரிய சுவாரசியம் தரலாம். ஆனால், அதிகப்படியான வன்முறை நிறைந்த சினிமாவில் குருதிபாய்வது போல் இதில் நல்லுணர்வு பாய்ந்துகொள்கிறது.

ஓலா போன்ற வாடகை வாகனங்களில் இப்படி ஒரே மனிதர்கள் தொடர்ந்து பயணம்செய்வது சாத்தியமா? அமேசான் அலெக்ஸா ஒரு மாபெரும் தேவ தூதன் போல் செயல்படுவது நகைப்புக்குரியதாகிறது.

சில்லுக்கருப்பட்டியையே மிகச் சிறந்த சினிமாவாக விதந்தோதும் வகையில் தான் தமிழ் திரைப்பட உலகம் இருக்கிறது என்பது வேதனையானதே. இந்தச் சில்லுக் கருப்பட்டி ஒரு டிஜிட்டல் கருப்பட்டி, பார்க்க முடியும் உண்ண முடியாது.