அறியப்பட்டவர்களின்
மரணச் செய்தியைக் கேட்ட மறுகணம் மனம் அவர்களை இறுதியாக எப்போது சந்தித்தோம் எனத் தேடுவது
வாடிக்கை. இப்படியான சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் மனம் தோல்வியைத் தழுவும். நஞ்சுண்டன்
மரணச் செய்தியை அறிந்தவேளையிலும் அதே போன்று முயன்றது மனம்; இறுதியில் தோல்வியே எஞ்சியது.
அவரைச் சந்தித்து ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும் என்பதை மட்டும் உணர முடிந்தது. சட்டென்று
இந்தச் செய்தியை உண்மை என்று நம்ப மாட்டேன் என மனம் அடம்பிடித்தது. ஏனெனில், அண்மையில்
ஞானக்கூத்தன் பற்றிய கட்டுரை ஒன்றை இந்து தமிழில் எழுதியிருந்தார். அது தொடர்பாகப்
பேசியபோது இதே போல் பல ஆளுமைகள் குறித்துத் தொடர்ந்து எழுத இருப்பதாகக் கூறினார். அப்படியான
கட்டுரைகளை எழுதி முடிக்காமல் எப்படி அவர் இறந்திருக்க இயலும் என மனம் அறியாமையில்
உழன்றது. ஆனாலும், அவரது மரணம் உறுதிப்பட்டது.
திராவிட
முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தன் இறுதிக் கணங்களை மருத்துவமனையில் கழித்துக்கொண்டிருந்த
வேளையில் ஒருமுறை நஞ்சுண்டன் அழைத்தார். கருணாநிதியின் மரணம் தொடர்பாக உலவும் வதந்தியின்
உண்மை நிலைமை என்ன என்பதைக் கேட்டறிந்துகொண்டார். இப்படிச் சில அரிதான வேளைகளில் தொலைபேசியில்
அழைப்பது அவரது வழக்கம். அரிதாகச் சில தனிப்பட்ட செய்திகளையும் பகிர்ந்துகொள்வார்.
வேலை நிமித்தமாகப் பல்கலைக்கழகத்தில் ஞாயிறு அன்று கூட வேலை செய்ய நேர்ந்திருக்கிறது
என்பதையெல்லாம் கூறியிருக்கிறார். பணிச்சுமை அவரை அழுத்தியிருக்கக்கூடும்.
நான்
அவரது மாணவனல்ல. ஆனாலும், முத்துசாமி, ந.கவிதா, பாலசுப்ரமணியம் வரிசையில் என்னையும்
வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதை அவருடனான உரையாடலில் குறிப்பிட்டிருக்கிறார். ‘அவர்
திருத்திய கட்டுரைகளின் பிரதிகளிலிருந்து தமிழின் நுட்பத்தைக் கற்றிருக்கிறேன்’ என்பதை
அவரிடம் ஒருமுறை தெரிவித்தேன். அதைக் கேட்டதும் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. ‘இதை நீங்கள்
எப்போதும் குறிப்பிடுவீர்கள்தானே’ என வினவினார். ‘நிச்சயமாகச் சொல்வேன்’ என்று கூறியிருக்கிறேன்.
ஆனால், அதை இப்படி அஞ்சலிக் குறிப்பில் எழுதுவேன் என்பதை மட்டும் நினைத்துப் பார்த்ததில்லை.
மார்க்கேஸின்
சிறுகதை ஒன்றை சுகுமாரன் மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார். அந்தக் கதையைத் திருத்திக்கொண்டிருந்த
வேளையில் ஓரிடத்தில் கப்பலில் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் படுக்கையிலிருந்து
எழுந்து தரையில் கால் வைத்தது என்பதைப் போன்று ஒரு வரி வந்தது. கப்பலில் எப்படித் தரையைத்
தொட முடியும் அது தளம் என்றுதானே இருக்க வேண்டும் என்று கூறித் திருத்தினார் அவர்.
இதுதான் நஞ்சுண்டன். மொழிரீதியாக அதன் இலக்கணங்களைக் கறாராகக் கைக்கொள்வார். இலக்கிய
நயத்துக்காக இலக்கணத்தை மீறுவதை அவரால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக உண்மையிலேயே
வருத்தப்படுவார்; அதை வெளிப்படுத்தவும் செய்வார். அதனால் சிலரிடம் அவருக்கு அபிப்ராய
பேதம் ஏற்படுவதும் இயற்கை. அவரது கருத்தில் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் தான்
சொல்வது மட்டுமே சரி என்று வாதிட மாட்டார்.
கடந்த
ஆண்டு ஏப்ரல் 25 அன்று அழைத்தார். இன்று ஓர் உலக அதிசயம் நடந்தது என்றார். அன்று சுபவீ
கலைஞர் தொலைக்காட்சியில் தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர் என புதுமைப்பித்தனைக் குறிப்பிட்டுப்
பேசியிருந்ததுதான் அவர் குறிப்பிட்ட அதிசயம். கருணாநிதி இருந்தவரை திமுக தரப்பினர்
இப்படியான நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை என்பதைக் குறிப்பிட்டார். கலைஞர் தொலைக்காட்சியில்
திங்களன்று வெள்ளிவரை ஒளிபரப்பாகும் சுபவீயின் உரையைத் தொடர்ந்து கேட்பதாகவும் அது
தொடர்பாக அவருக்குச் செய்தி அனுப்புவதாகவும் கூறினார். தன்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும்
இத்தகைய சம்பவங்களையும் நிகழ்ச்சிகளையும் குறித்து நண்பர்களுடன் பேசுவதில் அவருக்கு
அலாதி மகிழ்ச்சி. இதை அவரது உரையாடல் உணர்த்தும். தனது தனிமையைப் போக்கும் வழிகளில்
ஒன்றாக இதை அவர் கருதியிருக்கக்கூடும்.
காலச்சுவட்டில்
அவருடன் இணைந்து பணியாற்றிய காலம் உண்மையிலேயே மொழி தொடர்பான பல அனுபவங்களைத் தந்த
காலம். அவருக்கும் அந்தப் பணி மிகவும் பிடித்தமான பணி. அதைக் குறித்துப் பேசும்போதெல்லாம்
சிறிது மனப்பிறழ்வுக்காளானதுபோல் தன்னை மறந்து சிரிப்பார். தேவிபாரதி தன் தந்தையைக்
குறித்து உயிர் எழுத்தில் எழுதிய கட்டுரையை ஒருமுறை குறிப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தார்.
கண்ணன் தன் தந்தையின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது குறித்து நேர்மறையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒருபோதும் தனது படைப்புகளை முன்னிறுத்தியோ அவற்றை வாசிக்கும்படியோ கூறியதேயில்லை அவர்.
அவர்மீதான மதிப்பை இது அதிகப்படுத்துகிறது.
காலச்சுவடில்
பணியாற்றிய காலங்களில் வார இறுதி நாட்களில் பெங்களூருலிருந்து வருவார். பெரும்பாலும்,
காலச்சுவடு அலுவலக நண்பர்களுக்குக் கொறிப்பதற்கு ஏதாவது வாங்கிவருவார். அவரது ரயில்
புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பு வரை பிழைகளைத் திருத்துவது பிரதிகளை ஒழுங்குபடுத்துவது
போன்ற பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார். தொடர்ந்து பக்கங்களைப் பார்க்க வேண்டியதிருந்தால்,
இடையில் சிறிது இடைவெளி எடுத்துக்கொள்வார். அவருக்கான ஓய்வல்ல அது தொடர்ந்து பக்கங்களைப்
பார்த்துக்கொண்டிருந்தால் பிழைகளைச் சரியாகக் கவனிக்காதபடி போய்விடும் என்ற காரணத்தாலேயே
அந்த இடைவெளி. அவர் பணியாற்றிய ஒழுங்கில் கணக்கில் பார்த்தால் சுமார் பத்துப் பன்னிரண்டு
ஆண்டு காலத்தில் 20,000 பக்கங்களையாவது (ஒவ்வொரு கட்டுரையையும் இரண்டு மூன்று முறை
பிரிண்ட் எடுத்து வாசிப்பது அவர் வழக்கம்) எடிட் செய்திருப்பார் நஞ்சுண்டன். சென்னைக்கு
வர முடியாத நாட்களில் கட்டுரைகளை மின்னஞ்சலில் அனுப்பி, திருத்தி வாங்கியிருக்கிறேன்.
தனது எழுத்துப் பணியைவிடத் தனது எடிட்டிங் பணியில்தான் அவருக்குப் பெரும் திருப்தி
கிடைத்திருக்கலாம்.
நான்
காலச்சுவடில் உதவி ஆசிரியராகச் சேர்ந்ததே ஒரு விபத்துதான். இந்த வாக்கியத்தை எழுதும்போதே
காலச்சுவட்டில் என்பதுதான் சரி ஆனாலும் காலச்சுவடில் என்று எழுதுவது பழகிவிட்டது என
அவர் மொழிந்தது நினைவில் எழுந்தடங்கியது. இப்படியாக எங்கேயாவது தமிழில் ஒரு பிழையைப்
பார்க்க நேர்ந்தால் உடனே மனம் நஞ்சுண்டனை நினைத்து மீளும். மொழியியல்ரீதியான ஏதாவது
சந்தேகம் எழுந்தால் அதைத் தீர்த்துக்கொள்ள அவரை அழைப்பேன். இனி, அந்த வாய்ப்பற்றுவிட்டது
என்பதே சுயநலம் கொண்ட மனத்தை உறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக