நான்கு தனித்தனிக் கதைகள். மென்னுணர்வு கலந்து பிசைந்து அவற்றை முழுநீளப் படமாகத் தந்திருக்கிறார் ஹலிமா சமீம். முதல் கதையான பிங்க் பேக், குப்பை பொறுக்கும் சிறுவன் மகேஷின் வாழ்க்கையுடன் பணக்காரச் சிறுமி ஒருத்தியை இணைக்கிறது. இரண்டாம் கதையான காக்கா கடி, புற்றுநோய் பாதித்த முகிலன் என்ற ஐடி இளைஞன், மது என்னும் ஃபேஷன் கலைஞர் பெண்ணுக்குமான பிரியத்தைப் பேசுகிறது. டர்ட்டில்ஸ் என்னும் கதை, திருமணமேசெய்துகொள்ளாமல் முதுமை அடைந்துவிட்ட யசோதா, முப்பதாண்டுகளுக்கும் மேல் குடும்பம் நடத்திய பின்னர் மனைவியை இழந்த நவநீத கிருஷ்ணன் இவர்களுக்கிடையேயான நேசத்தைச் சொல்கிறது. திருமணம் முடிந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு தம்பதிக்கிடையே ஏற்படும் உரசலையும் தீர்வையும் முன்வைக்கிறது இறுதிக் கதையான ஹே அம்மு.
பாலுமகேந்திராவின் கதை நேரம் போல் மெல்லுணர்வு நிரம்பி வழியும் திரைக்கதையையே எழுதியிருக்கிறார் ஹலிமா. குப்பை பொறுக்கும் சிறுவன் டேஷ் என்னும் கதாபாத்திரம் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கிறது. மாஞ்சா என்னும் மகேஷ் கதாபாத்திரம் தட்டையாக அமைக்கப்பட்டிருக்கிறது. வைர மோதிரம், ஏழைச் சிறுவன், செல்வந்தச் சிறுமி என்னும் வழியில் பயணப்பட்டு நீதிபோதனைக் கதையாகிறது இதன் பயணம்.
சொல்லக் கூச்சப்படும் இடத்தில் புற்றுநோய் பாதித்த முகிலனுக்கும் மதுவுக்கும் ஓலாவில் தொடர்ந்து நிகழும் சந்திப்பும் காதலும் சினிமாத்தனமானது. முடிந்தவரை புற்றுநோய் சோகத்தைத் தவிர்த்திருக்கிறார் என்பது ஆறுதலாக உள்ளது. இந்த அத்தியாயம் பார்த்திபனின் பொண்டாட்டி தேவை படத்தை நினைவுபடுத்தியது.
மனைவியை இழந்த நவநீதனுக்கும் யசோதாவுக்குமான முதிய வயது சந்திப்பும் முதலை நடையிடையே அவர்களுக்குள் ஏற்படும் உரையாடலும் ஒருவகையில் ஓர் அந்தி மந்தாரை. திருமணத்தை மறுத்தவராக இல்லாமல் திருமணம் ஆகாதவராக யசோதாவைச் சித்தரித்திருப்பது மிகப் பழமையாக உள்ளது. அவர்களுக்கிடையே ஏற்படும் அணுக்கமும் அன்பும் புதுமையாக உள்ளன.
தனபாலுக்கும் அமுதினிக்குமான திருமண உறவைச் சொல்லும் கதை ஓரளவு உற்சாகமாகக் கையாளப்பட்டுள்ளது. அவர்களிடையே எழும் விரிசல் புதிதில்லை என்றபோதும் புத்துணர்வுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சமுத்திரகனியை மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர். சுனைனாவின் நடிப்பு மிக இயல்பாக உள்ளது.
துண்டு துண்டுக் கதைகள் என்பதால் ஒரு சினிமாவைப் பார்த்த உணர்வு எழவே இல்லை. ஏதோ வெப் சீரிஸின் சில அத்தியாயங்களைப் பெரிய திரையில் பார்ப்பது போலவே தோன்றுகிறது.
பிறர் சொல்லத் தயங்கும் வித்தியாசமான விஷயங்களை எடுத்துக்கொண்டு அவற்றைப் படமாக்க வேண்டும் என்னும் யத்தனிப்பு படத்தில் துருத்தலாகத் தெரிகிறது. தனபால் உறங்கும்போது வாக்கும் கிளீனரால் அமுதா சுத்தப்படுத்தும்போது அவனுக்கு ஏற்படும் எரிச்சல்போல் அது உள்ளது. எல்லாக் கதைகளிலும் அறவுணர்வானது முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. சினிமாவில் அறவுணர்வு சொல்லப்படலாம் ஆனால், அதற்காகவே படம் எடுத்தது போன்ற உணர்வை இந்தச் சில்லுக்கருப்பட்டி ஏற்படுத்திவிடுகிறது.
ஒளிப்பதிவு உறுத்தலில்லாமல் இருக்கிறது. ஆனால், பின்னணியிசை படத்தின் மென்னுணர்வை உச்சபட்சமாக அதிகரிக்கும் வகையில் பல காட்சிகளில் முழங்கிக்கொண்டே இருக்கிறது.
மிகையுணர்வு இல்லாமல் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குநர் வெற்றிபெற்றிருக்கிறார். ஆனால், படத்தின் இயல்பில் ஒரு செயற்கைத் தனம் ஒட்டியிருக்கிறது. அது சில்லுக்கருப்பட்டியை இயல்புக்கு மாறான சினிமாவாகக் காட்டுகிறது. மென்னுணர்வாளர்களுக்கு இப்படம் பெரிய சுவாரசியம் தரலாம். ஆனால், அதிகப்படியான வன்முறை நிறைந்த சினிமாவில் குருதிபாய்வது போல் இதில் நல்லுணர்வு பாய்ந்துகொள்கிறது.
ஓலா போன்ற வாடகை வாகனங்களில் இப்படி ஒரே மனிதர்கள் தொடர்ந்து பயணம்செய்வது சாத்தியமா? அமேசான் அலெக்ஸா ஒரு மாபெரும் தேவ தூதன் போல் செயல்படுவது நகைப்புக்குரியதாகிறது.
சில்லுக்கருப்பட்டியையே மிகச் சிறந்த சினிமாவாக விதந்தோதும் வகையில் தான் தமிழ் திரைப்பட உலகம் இருக்கிறது என்பது வேதனையானதே. இந்தச் சில்லுக் கருப்பட்டி ஒரு டிஜிட்டல் கருப்பட்டி, பார்க்க முடியும் உண்ண முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக