இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஜூலை 30, 2017

டன்கிர்க் (ஆங்கிலம்): பிழைத்திருப்பதே பெரும் சாதனை



ற்கால ஹாலிவுட் இயக்குநர்களில் கிறிஸ்டோபர் நோலன் என்னும் பெயர் ரசிகர்களைச் சட்டென்று புருவம் உயர்த்தவைக்கும். இவரது முதல் படமான ‘ஃபாலோயிங்’ 1998-ல் வெளியானது. ஆனால், இரண்டாம் படமான ‘மெமண்டோ’ வழியாகவே ரசிகர்களின் பெரும் செல்வாக்கைப் பெற்றார். ‘த டார்க் நைட்’ வரிசைப் படங்கள், ‘இன்செப்ஷன்’, ‘இண்டெர் ஸ்டெல்லார்’ எனத் தொடர்ந்து அறிவியல் புனைவுப் படங்களின் மூலம், தனது இயக்குநர் என்னும் பொறுப்பை அழுத்தமாகவும் திருத்தமாகவும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியவர் நோலன். இவரது பத்தாம் படமான ‘டன்கிர்க்’ ஜூலை 13 அன்று லண்டனில் முதன்முறையாகத் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து உலக நாடுகளிலும் இந்தியாவிலும் வெளியாகியிருக்கிறது. எல்லா ஹாலிவுட் இயக்குநர்களுக்கும் ஆஸ்கர் விருது என்பது ஒரு இலக்காகவே இருக்கும். நோலன் குறிப்பிடத்தகுந்த படங்களை உருவாக்கியுள்ளபோதிலும் இதுவரை ஆஸ்கரின் சிறந்த இயக்குநர் பிரிவுக்காகப் பரிந்துரைக்கப்பட்டதில்லை. இந்தப் படத்துக்காக நோலனுக்கு அந்த ஆஸ்கர் விருது கிடைக்கலாம் என்று இப்போதே ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.


‘டன்கிர்க்’ என்னும் பெயர் இரண்டாம் உலகப் போர் வரலாற்றில் வலுவான இடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஃபிரான்ஸில் ஊடுருவிய நாஜிப் படையினர், நேசப்படையினரைச் சுற்றிவளைத்துவிட்டனர். அவர்கள் தப்பிப்போக கடல் மார்க்கம் மட்டுமே மிச்சமிருந்தது. ஆகவே, இங்கிலிஷ் கால்வாய் வழியே இங்கிலாந்தை அடையலாம் என்னும் நிலையில், ஆங்கிலேயப் படைவீரர்கள் உள்ளிட்ட சுமார் 4,00,000 படைவீரர்கள் மீட்கப்பட்டனர். ராணுவ வரலாற்றில் மிகவும் அதிசயமான, ‘ஆபரேசன் டைனமோ’ என அழைக்கப்படும் இந்த நிகழ்வையே நோலன் ‘டன்கிர்க்’ படத்துக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால், படத்தில் அரசியல் சம்பவங்களைக் கொண்ட காட்சிகளை அவர் இணைக்கவில்லை. இறுதியாக நாளிதழில் மட்டுமே வின்ஸ்டன் சர்ச்சிலின் உரை இடம்பெறுகிறது. வழக்கமாக இரண்டாம் உலகப் போரைப் பற்றிய படங்களில் நாஜிக்களும் அவர்களின் வதை முகாம்களுமே ஆதிக்கம் செலுத்தும். மனிதவர்க்கத்தையே இரண்டாகக் கிழித்துப் போடும் இந்தப் போர் எதற்காக என்று மனசாட்சியை உலுக்கும். ஆனால், நோலன் டன்கிர்க்கில் இரண்டாம் உலகப் போரின் அந்த எதிர்மறைப் பக்கத்தைத் தவிர்த்துவிட்டார்; அதைப் போல் பெரும்பாலும் பெண்களையும் தவிர்த்துவிட்டார்.

1958-ல், லெஸ்லி நார்மன் இயக்கத்தில் வெளியான ‘டன்கிர்க்’கில்கூடப் படத்தின் முதல் பாதியில் ஆங்கிலேயக் காலாட் படைவீரர்களுக்கும் நாஜிக்களுக்குமிடையே நடைபெறும் துப்பாக்கி மோதல் காட்சிகள் உண்டு. அதன் மறுபாதியில்தான் டன்கிர்க் கடற்கரைப் பகுதியின் மோல் என அழைக்கப்படும், கடல் நீரால் கடற்கரைக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க அமைக்கப்பட்டிருக்கும் அந்த மரப்பலகைகளாலான தடுப்புப் பகுதிக்கு வருகிறார்கள். ஆனால், நோலனின் ‘டன்கிர்க்’கில் படத்தின் தொடக்கமே, வீரர்களைக் கடற்கரையை நோக்கித் துரத்துகிறது. டாமி என்னும் அந்த ஆங்கிலேய இளம் வீரன் (ஃபியான் வொயிட்ஹெட்) உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தலைதெறிக்க ஓடுகிறான். வழியெங்கும் நாஜிக்களின் குண்டுகள் துரத்துகின்றன; கடற்கரையில் காத்திருக்கும் வேளையிலும் வானிலிருந்து போர் விமானங்கள் குண்டுமழை பொழிகின்றன. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்னும் பதற்றத்தினிடையே நேசப் படையின் வீரர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்னும் மனநிலையுடன் காத்திருக்கிறார்கள்.


பொதுவாக, நோலனின் படங்கள் நேர்கோட்டுப் பாதையில் செல்லாமல் முன்னதும் பின்னதுமான நான் லீனியர் வகையைச் சார்ந்தே செல்லும் தன்மை கொண்டவை. இந்தப் படத்தின் திரைக்கதையை மூன்று கோணங்களாகப் பிரித்துச் சொல்லியிருக்கிறார் . முதல் கோணம் மோலில் காத்திருக்கும் படைவீரர்களின் பயணம். இரண்டாம் கோணம் இங்கிலாந்திலிருந்து படைவீரர்களைக் காப்பாற்ற படகைக் கொண்டுவரும் டாசனின் (மார்க் ரிலயன்ஸ்) பயணம். மற்றொரு கோணம் நாஜிக்களின் வான் தாக்குதலை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆங்கில விமானப் படைவீரர்களான ஃபாரியர், காலின் ஆகியோரது பயணம். இந்த மூன்று பயணங்களும் மாறி மாறி வருகின்றன.1958-ல் வெளியான ‘டன்கிர்க்’கில் ஆங்கிலேயே விமானப் படை வீரர்களது முறியடிப்புக் காட்சிகள் இடம்பெற்றிருக்காது. 
ஹான்ஸ் ஜிம்மரின் இசை , காத்திருப்பின் படபடப்பையும் மூச்சிரைக்க ஓடுவதையும் துப்பாக்கிக் குண்டுகளின் வெடியோசையையும் துல்லியமாக உணர்த்துகிறது. இதனால் பார்வையாளர்களும் கடற்கரையில் காத்திருக்கும் வீரர்களின் மன நிலையைச் சட்டென பெற்றுவிட முடிகிறது. என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க முடியாமல் எல்லாவற்றையும் தனிமையச்சத்துடனும் பதைபதைப்புடனும் பார்த்துக்கொண்டிருக்கச் செய்வதில் நோலன் வெற்றிபெற்றிருக்கிறார். அதற்கு நடிகர்களின் இயல்பான நடிப்பும் நோலனின் ஆளுமைப் பண்பும் ஒளிப்பதிவு, இசை போன்ற தொழில்நுட்பங்களும் பெருமளவில் கைகொடுத்துள்ளன. பார்வையாளர்களை உணர்ச்சி வெள்ளத்துக்குள் ஆழ்த்தாமல் படம் அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்ந்துவிடுகிறது. ஏதாவது ஒரு காட்சியில் உணர்ச்சி மேலிடும்போது, சட்டெனப் படம் அடுத்த கோணத்துக்குச் சென்றுவிடுகிறது.


வழக்கமாக, பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்த இரண்டாம் உலகப் போர் படங்களைப் பார்க்கும்போது, இந்தப் போர் எதற்காக என்னும் கேள்வி அழுத்தமாக எழும். ஆனால், நோலனின் ‘டன்கிர்க்’கைப் பார்த்தபோது, போர் பற்றிய எந்தக் கேள்வியும் எழவில்லை. பொதுவாகப் போர்களில் குடிமக்களுக்கு எந்த வேலையும் இருக்காது. போரால் பெருமளவில் குடிமக்கள் பாதிக்கப்பட்டாலும்கூட அவர்களது நேரடியான ஈடுபாடு என்பது இருக்காது. ஆனால், டன்கிர்க் சம்பவத்தில் குடிமக்கள் நேரடியாகத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். அதனாலேயே நோலன் இதைப் படமாக்க எண்ணியிருக்கலாம். ஏனெனில், போரின் வெற்றி - தோல்வி என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு உயிர் பிழைத்திருப்பதே பெரும் சாதனைதான் என்பதை இந்தப் படம் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

டன்கிர்க் சம்பவத்தைப் பொறுத்தவரையில் லட்சக்கணக்கான வீரர்கள் காப்பாற்றப்பட்டதைப் போல், ஆயிரக்கணக்கான வீரர்கள் மாண்டும்போனார்கள். அதைப் போல் வீரர்கள் பலர் எதிரிகளிடம் கைதிகளாக மாட்டியிருக்கிறார்கள். அவை எல்லாவற்றுக்கும் இந்தப் படம் உதாரணங்களைத் தந்துள்ளது. ஆனால், வரலாற்றை முழுமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. ஒரு நல்ல படம் பார்த்திருக்கிறோம் என்னும் திருப்தி ஏற்பட்டபோதும் ஒரு சிறந்த படம் பார்த்த திருப்தியை நோலனின் ‘டன்கிர்க்’ தரவில்லை. இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட இந்தியர்களது பங்களிப்பை எந்தப் படமும் நினைவுவைத்துப் பிரதிபலித்ததில்லை. அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல. இது பற்றி நௌபிரேக்கிங் இணையதளம் எழுப்பியிருக்கும் கேள்வி முக்கியமானது. ‘இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து சண்டையிடவில்லை, ஆனால், ஆங்கிலேயப் பேரரசு சண்டையிட்டது’ என்று ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் யாஸ்மின் கான் தனது ‘த ராஜ் அட் வார்’ (The Raj At War: A People's History Of India's Second World War)என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை மேற்கோள் காட்டி எழுப்பியிருக்கும் கேள்வியையும் சேர்த்துப் பார்க்கும்போது, படம் ஏன் முழுமையான திருப்தியைத் தரவில்லை என்பதற்கு விடை கிடைக்கிறது.

வெள்ளி, ஜூலை 21, 2017

சினிமா ஸ்கோப் 40: இரத்தக்கண்ணீர்


குற்றச் செயல்களால் எளிதில் ஈர்க்கப்படும் மனிதர்கள் அவற்றின் பின் விளைவுகளை எதிர்கொள்ளவே அச்சப்படுகிறார்கள். குற்றத்துக்குத் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தைவிடப் பிறரை எதிர்கொள்ளத் தயங்கியே பல குற்றங்களை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவ்வளவு எளிதில் எந்தக் குற்றத்தையும் மறைத்துவிட இயலாது; எல்லாக் குற்றங்களும் தம்மை வெளிப்படுத்திக்கொண்டுவிடும் என்பதுதான் இயற்கையின் ஏற்பாடு. அது தன்னை வெளிப்படுத்தும் புள்ளியிலிருந்து தொடங்குகிறது திரைக்கதையின் பயணம். அவை எப்படி வெளிப்படுகின்றன என்னும் பாதைதான் திரைக்கதையில் சுவாரசியத்தைச் சேர்க்கிறது. 

ஸ்பெயினைச் சேர்ந்த இயக்குநர் உவான் அந்தோனியோ பர்தெம் (Juan Antonio Bardem) இயக்கிய டெத் ஆஃப் எ சைக்ளிஸ்ட் என்னும் படம் 1955-ல் வெளியானது. இந்தப் படம் கான் திரைப்பட விழாவில் திரைப்பட விமர்சகர்களின் சர்வதேசக் கூட்டமைப்பு பரிசை வென்றது. சாதாரணமான ஒரு விபத்துச் சம்பவத்தில் படம் தொடங்குகிறது. காரில் ஒரு ஜோடி செல்கிறது. ஆளற்ற சாலையில் விரைந்து சென்ற அந்த கார், சைக்கிளில் சென்ற மனிதன் ஒருவன்மீது மோதிவிடுகிறது. இளைஞன் இறங்கிச் சென்று பார்க்கிறான் அடிபட்ட மனிதனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அந்தப் பெண் அங்கிருந்து சென்றுவிடலாம் என இளைஞனைத் தூண்டுகிறாள். இருவரும் நகர்கிறார்கள். அடிபட்ட மனிதன் இறந்துவிடுகிறான். மறு நாள் நாளிதழில் இது செய்தியாகிறது. அவர்கள் இருவரும் காரில் சென்றதைப் பார்த்ததாகக் கலை விமரிசகன் ஒருவன் அவர்களைக் குறிப்பாக அந்தப் பெண்ணை மிரட்டுகிறான். அவர்கள் மனங்களில் பீதி படர்கிறது. 

காரில் வந்த இருவரும் கணவனும் மனைவியும் அல்ல. இருவரும் காதலர்கள். காரில் சென்ற ஆண் கல்லூரி ஒன்றில் பேராசிரியர். அந்தப் பெண்ணும் சமூக அந்தஸ்து பெற்ற ஒருவருடைய மனைவி. அந்தப் பெண்ணால் ஒரே நேரத்தில் ஒருவருடைய மனைவியாகவும் மற்றொருவருடைய காதலியாகவும் இருக்க முடிகிறது. இரு உறவுகளின் அனுகூலங்களையும் அனுபவிக்க ஆசைப்படுகிறாள். காதல் உறவைத் தைரியமாக வெளியில் சொல்ல முடியவில்லை; மிகவும் ரகசியமாகப் பேணுகிறாள். அதனால்தான் அவள் மிரட்டப்படுகிறாள்.


அவர்களால் கொலையை மறைக்க முடிந்ததே ஒழிய அதன் குற்ற உணர்விலிருந்து தப்பித்துக்கொள்ள இயலவில்லை. பேராசிரியர், இறந்த மனிதரின் வீட்டுக்குச் செல்கிறார். மிகவும் சாதாரண நிலையிலிருக்கும் குடும்பத்தின் வருமானத்துக்குரியவரை அவர்கள் விபத்தில் கொன்றிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் நடந்ததற்கு மறு நாள் கல்லூரியில் மனக் குழப்பத்துடன் இருக்கும் பேராசிரியர் தன் மாணவி தேர்வில் தோற்றுப்போகக் காரணமாகிறார். ஒரு குற்றச் செயலைப் பல குற்றக் கண்ணிகள் தொடர்கின்றன. இந்தப் படம் வழியாக ஸ்பெயின் நாட்டின் இருவேறு தரப்புகளையும் காட்சிக்குவைக்கிறார் இயக்குநர். மேல் தட்டின் விசாலமான, பிரம்மாண்ட மாளிகைகளும் கீழ்த் தட்டினர் வசிக்கும் குறுகலான நெருக்கமான குடியிருப்புப் பகுதிகளும் காட்டப்படுகின்றன. போர், காதல், காமம், சமூக அந்தஸ்து போன்றவை பற்றிய தார்மிகக் கேள்விகள் பலவற்றைப் படம் எழுப்புகிறது. இந்தப் படம் வாழ்வின் பல வண்ணங்களைக் கறுப்பு வெள்ளையில் துல்லியமாகத் தந்திருக்கிறது. 

இந்த ஸ்பேனிஷ் படத்தைப் பார்த்த பின்னர் மயங்குகிறாள் ஒரு மாது (1975), ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது (1976),  விடிஞ்சா கல்யாணம் (1986) போன்ற சில தமிழ்ப் படங்கள் மனதில் நிழலாடின.          

ஒரு பாசமான தாயும் மகளும் சேர்ந்து இளைஞன் ஒருவனைக் கொன்றுவிடுகிறார்கள். அந்தக் கொலையைப் பிறரிடமிருந்து மறைப்பதற்காக யாரும் அறியாதவகையில் அந்தச் சடலத்தை ஒரு முகட்டிலிருந்து உருட்டிவிடுகிறார்கள். அதலபாதாளத்தில் விழும் அந்தச் சடலம் யார் கண்ணிலும் படாது என்று திரும்பிவிடுகிறார்கள். யார் கண்ணிலும் படாமல் இருந்தால் என்ன சுவாரசியம் இருக்கும்? அது ஒருவர் கண்ணில்படுகிறது. அதுவும் அவர் அப்போதுதான் சிறையிலிருந்து தப்பி வந்திருக்கும் மரண தண்டனைக் கைதி. அவர் நேரடியாக அந்த தாயும் மகளும் குடியிருக்கும் வீட்டுக்கு வந்துவிடுகிறார். அந்தக் கொலையை வெளியில் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியே தனது காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார் கைதி. அந்தக் கொலையை விசாரிப்பதோ மகளை மணந்துகொள்ள இருக்கும் காதலன். இப்படி ஆர்வமூட்டும் பல முடிச்சுகள் தொடக்கத்திலேயே விழுந்துவிடுகின்றன. தாயும் மகளும் எதற்காகக் கொன்றார்கள், அந்தத் தூக்குத் தண்டனைக் கைதி யார் அவருக்கும் தாய், மகளுக்கும் என்ன தொடர்பு போன்றவற்றைத் தெளிவாக்கும் வேலையைத் திரைக்கதை செய்கிறது. இது மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான விடிஞ்சா கல்யாணம் (1986). 


ஒரு கதையின் டைரி, பூவிழி வாசலிலே போன்ற திரில்லர் வகைப்படம்தான் இது. கொலையைச் சரி என்று பார்வையாளர்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமானால் அதன் பின்னணியில் வலுவான உணர்வுபூர்வ காரணம் இருக்க வேண்டும். ஒரு கொலையை யார் செய்கிறார்கள் எதற்காகச் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதற்குப் பார்வையாளர்களின் ஆதரவு கிடைக்கும். கொலை என்பதைத் தீய செயலாகவும் குற்றச் செயலாகவும் பார்க்கும் நம் பார்வையாளர்கள் அதை நல்லவர்கள் செய்தால், நல்ல நோக்கத்துடன் செய்தால் நியாயம் என்று எடுத்துக்கொள்வார்கள். அதிலும் பெண்களின் மானத்தைக் காப்பாற்றச் செய்யப்படும் கொலைகள் பார்வையாளர்களால் கொண்டாடப்படும். 

சமூகத்தின் பார்வையில், பூவிழி வாசலிலே படத்தில் வில்லன் செய்த கொலைக்கான காரணம் அநியாயமானது; ஆனால் ஒரு கைதியின் டைரி, விடிஞ்சா கல்யாணம் போன்ற படங்களில் நாயகர்கள் செய்யும் கொலைக்கான காரணம் நியாயமானது எனவே, அது சமூகத்தின் பார்வையில் குற்றச்செயலாகப் பார்க்கப்படாது. பாபநாசத்தில் சுயம்புலிங்கத்துடைய குடும்பத்தின் பக்கம் ஒட்டுமொத்தப் பார்வையாளர்களும் நின்றதற்குக் காரணம் அதுதானே. 

மயங்குகிறாள் ஒரு மாது, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது இரண்டையுமே எஸ்பி.முத்துராமன்தான் இயக்கினார். முன்னதன் கதை பஞ்சு அருணாசலம் பின்னதன் கதை புஷ்பா தங்கதுரை. இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே போன்ற சம்பவங்களால் ஆனவை. ஒருவனைக் காதலித்து மற்றொருவனைக் கரம்பிடித்த பெண் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள்தான் இந்தப் படங்கள். முதல் படத்தில் ஒரு மிரட்டல்காரர் வருவார். இரண்டாம் படத்தில் மிரட்டல்காரர் இல்லை. இரண்டு படங்களிலும் சுஜாதாதான் கதாநாயகி. ஸ்பானிஷ் படத்தில் மணமானதற்குப் பின்னர் எந்தச் சஞ்சலமுமின்றிக் காதலனைச் சந்திக்கிறாள் நாயகி. ஆனால், ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்தில் காதலனின் வேண்டுகோளை ஏற்று ஒருநாள் அவனுக்கு மனைவியாக இருக்கிறாள். அதுதான் சிக்கலாகிறது. இவ்வளவுக்கும் அவள் தமிழ்ப் பண்பாட்டைச் சிறிதுகூட மீறாமல் நடந்துகொள்கிறாள். மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் தான் காதலித்த ரகசியத்தைக் கணவனுக்குத் தெரியாமல் காப்பாற்றும் பொருட்டு மிரட்டல்காரனுக்கு அடிபணிகிறாள்.  

வாழ்வைப் புரிந்துகொண்ட இயக்குநர்கள் குற்றங்களை வெறும் குற்றங்களாகப் பார்க்காமல் அவற்றின் பின்னணியுடன் சேர்த்துப் புரிந்துகொள்ளச்செய்யும் வகையிலேயே படங்களை உருவாக்குகிறார்கள். ஒரு குற்றத்தில் தனிநபரின் பங்கு என்ன, சமூகத்தின் பங்கு என்ன என்பவற்றை எல்லாம் சுட்டிக்காட்டுகிறார்கள். வெறுமனே குற்றம், பழிவாங்கல், தண்டனை, மன்னிப்பு என்று முடிந்துவிட்டால் அது சராசரியான படமாக நின்றுவிடுகிறது. அதைத் தாண்டி ஏன் இந்தக் குற்றம் நிகழ்கிறது? ஏன் இது குற்றமாகப் பார்க்கப்படுகிறது? இதைத் தவிர்க்க முடியுமா, தடுக்க முடியுமா போன்ற பல சிந்தனைகளைப் பார்வையாளரிடம் உருவாக்கும் படங்கள் மேம்பட்டவையாக அமைந்துவிடுகின்றன.

ஞாயிறு, ஜூலை 16, 2017

பண்டிகை

நல்லவர் வாழ்வார் தீயவர் அழிவார் என்னும் பழம் பஞ்சாங்க நீதியின் டிஜிடல் வடிவம் பண்டிகை.

நேர்மையான வழியில் உழைத்து தனக்கொரு நல்ல வாழ்வு அமைத்துக்கொள்ள முயல்கிறான் வேலு (கிருஷ்ணா). குடும்பத்தை நிம்மதியாக வைத்துக்கொள்ளச் சூதாடினாலும் தப்பில்லை என்று எண்ணுகிறான் முனி (சரவணன்). சமூகம் எக்கேடு கெட்டாலும் தன் கருவூலம் நிரம்பினால் போதும் என்று செயல்படுகிறான் தாதா (மதுசூதனன் ராவ்). சூதாட்ட சூழ்ச்சி காரணமாகத் தாதாவிடம் தான் இழந்த பணத்தை வேலு உதவியுடன் பெற்றுவிட ஒரு திட்டம் தீட்டுகிறான் முனி. இதற்கு ஒரு ஐடியா கொடுக்கிறான் முந்திரி (நிதின் சத்யா). இதில் வென்றது யார் தாதாவா, முனியினரா என்பதே இந்தப் பண்டிகை.
கதை பழைய பாடாவதி கதைதான். திரைக்கதையில் கொஞ்சம் வேலை செய்திருக்கிறார்கள். அது ஒன்றுதான் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. அதிலும் அநியாயத்துக்கு ஓட்டைகள். அவ்வளவு பெரிய தாதாவின் வீட்டில் பணத்தைப் பாதுகாக்க ஜிஎஸ்டிக்குப் பின்னான தியேட்டரில் இருப்பதைப் போல் பலவீனமான நாலைந்து பேரா இருப்பார்கள்? வீட்டுக்கு உள்ளே மட்டும்தான் கேமரா வைப்பார்களா? திக்கும்வாயன் என அடையாளப்படுத்தப்படும் ராட்டின குமார் (கருணாஸ்) போன்ற கதாபாத்திரங்கள்தான் இப்படியான திரைக்கதையைச் சுவாரசியமாக நகத்தும். மற்றபடி, பாண்டி நகைச்சுவை என்ற பெயரில் பண்ணும் கேலிக்கூத்து வெறும் அவஸ்தை.

பண்டிகை என்னும் பெயரில் இருவரை எதிரெதிரே மோதவிட்டு அதில் பந்தயம் நடத்துகிறார்கள். இது சூதாட்டம் அல்ல; சூழ்ச்சியான ஆட்டம். இதில் தாதா, முந்திரி, மாலிக், விக்டர் எனப் பல கதாபாத்திரங்களின் பங்கு இருக்கிறது. கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங்கை அம்பலப்படுத்த பண்டிகை ஒரு களம் அமைத்துத் தந்திருக்கிறது. வேலு பண்டிகைக் களத்தில் எதிரியின் மீது தரும் அடியை உணர்த்த அவரைவிட அதிகமாக சவுண்ட் எஃபக்ட் உழைத்திருக்கிறது. கதாநாயகி காவ்யா (ஆனந்தி) வாராது வந்த விருந்தாளி போல் ஓரிரு முறை வந்துவிட்டு ஓடிப்போய்விடுகிறார். அந்த செல்ஃபிய ஏம்மா எடுத்த காவ்யா? கொள்ளையைத் துப்புத் துலக்க வரும் இருவரில் ஒருவர் பயன்படுத்தும் அந்த ஆயுதம். பார்வையாளரைக் கிழிப்பது போல் இருக்கிறது. அநிச்சையாக உடம்பைத் தடவிப்பார்க்க வைக்கிறது. திரையில் ஒரு விஷயத்தைக் காட்டுவதால் ஏற்படும் மனரீதியான பாதிப்பு பற்றிய அக்கறையுடன் படம் எடுப்பது அவசியம் என்பதை பெரோஸ் உணர்ந்துகொள்வது நல்லது. 
வேலு பெற்றோரை இழக்கிறார், அவருக்கு எதுவுமே அடித்தால்தான் கிடைக்கிறது. திடீரெனக் காதல் கொள்கிறார், திடீரெனப் பிறருக்கு உதவுகிறார், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முடித்துவிட்டு அடிதடியில் புகுந்துவிளையாடுகிறார். கைதேர்ந்த கொள்ளைக்காரர் போல் நடந்துகொள்கிறார், அவ்வப்போது பாடல்களும். முத்தாய்ப்பான சில வசனங்களும் வேறு வருகின்றன. சூதாட்டத்தின் பின்னணியில் காவல் துறை இருப்பதை பால்ராஜ் (சண்முகராஜா) கதாபாத்திரம் வழியே சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் தொழில்நுட்ப உதவியுடன் திரையில் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். எல்லாம் துண்டு துண்டாக இருக்கிறதே என நினைக்கிறீர்களா படத்திலும் அப்படித்தான் இருக்கிறது. மொத்தத்தில் பண்டிகை என்னும் பெயரில் ஒரு படம் காட்டியிருக்கிறார்கள். அதில் கொண்டாட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை வைத்தே தனி சூதாட்டம் நடத்தலாம்.

ஞாயிறு, ஜூலை 09, 2017

சினிமா ஸ்கோப் 39: உன்னைச் சொல்லிக் குற்றமில்லை


நகரம் சூதுவாதுகளில் கைதேர்ந்தது, அதன் மனிதர்கள் மனிதநேயத்தை மறந்தவர்கள். இப்படியான நம்பிக்கை விதைப்பில் திரைப்படங்கள் பிரதானப் பங்களித்தன. நகரம் குறித்துக் கட்டமைக்கப்படும் பிம்பங்கள் ஏராளம். இவை முழுவதும் உண்மையில்லை அதே நேரம் இவற்றில் உண்மையில்லாமலும் இல்லை. ஏதேதோ கற்பனைகளில் நகரங்களில் கால்பதித்தவர் பலருக்கும் ஏதோவொரு பெருங்கனவிருக்கும். பெரும்பாலும் அந்தக் கனவு ஈடேறுவதேயில்லை. 

நகரங்களுக்கு இரண்டு முகம் உண்டு. ஒன்று பளபளப்பானது; மற்றது பரிதாபமானது. ஒன்றில் வளமை தூக்கலாயிருக்கும்; மற்றதில் வறுமை நிறைந்திருக்கும். வளமைக்கு ஆசைப்பட்டு வறுமையில் உழல்பவரே அநேகர். நகரத்தின் பெரும்பசிக்கு இரையாகும் மனிதர்களைப் பற்றிய யதார்த்த படமெடுப்பது இயக்குநர்களின் படைப்புத் திறனுக்குச் சவாலானது. கான் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதுபெற்ற, முதன்மையான லத்தீன் அமெரிக்கப் படங்களில் ஒன்றான லொஸ் ஒல்விதாதோஸ் (Los Olvidados), இத்தாலிய இயக்குநர்கள் ரோபார்த்தோ ரொஸ்ஸெல்லினியின் ஜெர்மனி இயர் ஸீரோ, வித்தாரியோ தெ சிகாவின் ஷூஷைன் (கவுரவ ஆஸ்கர் விருதுபெற்றது), பிரெஞ்சு இயக்குநர் ஃபாஸுவா த்ரூஃபோவின் த 400 ப்ளோஸ்  உள்ளிட்ட பல படங்கள் இந்தச் சவாலை எதிர்கொண்டு வெற்றிபெற்றவை.   

லொஸ் ஒல்விதாதோஸ் (1950) திரைப்படத்தில் மெக்ஸிகோ நகரின் குடிசைப் பகுதிகளில் வாழும் சிறார்களின் அவல வாழ்க்கைச் சம்பவங்கள் வழியே அந்நகரத்தின் குரூரத்தைப் படம்பிடித்திருக்கிறார் இயக்குநர் லூயிஸ் புனுயெல். சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து தப்பிவந்த எல் கைபோதான் படத்தின் பிரதானப் பாத்திரம். அவன் சிறார்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு தீய வழிகளில் நடப்பவன். கண் பார்வை தெரியாத வீதிப்பாடகர், கால்களை இழந்து அமர்ந்த நிலையிலேயே தள்ளுவண்டியில் நகரை வலம்வரும் பிச்சைக்காரர் போன்றவர்களிடம்கூட ஈவு இரக்கமின்றி நடந்துகொள்வது இவர்களது வழக்கம். எல் கைபோவின் கூட்டாளி பெத்ரோவின் தீய நடவடிக்கைகளால் அவன் மீது அன்பு செலுத்தாமல் ஒதுக்குகிறாள் அவனுடைய தாய். 


எல் கைபோ ஜூலியன் என்னும் சிறுவனைக் கொல்கிறான். ஜூலியன் உழைப்பில்தான் குடும்பம் பசியாறிக்கொண்டிருந்தது. ஜூலியனின் தந்தை ஒரு குடிகாரார். செய்யாத தவறொன்றுக்காக பெத்ரோவைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறாள் அவனுடைய தாய். சீர்திருத்தப்பள்ளியின் தலைவர். பெத்ரோவைப் புரிந்துகொள்கிறார். தன் மீது யாராவது நம்பிக்கையும் அன்பும் வைக்க வேண்டுமென அவன் ஏங்குகிறான் என்பதை அறிந்து அவனிடம் பரிவுடன் நடந்துகொள்கிறார். ஆனால், பெத்ரோவை வாழ்க்கை அலைக்கழிக்கிறது. இறுதியில் பெத்ரோவை அவனுடைய தாய் புரிந்துகொண்டபோது, பெத்ரோவை எல் கைபோ கொன்றுவிடுகிறான். இது அறியாத அவனுடைய தாய் அவனைத் தேடிக்கொண்டேயிருக்கிறாள். படத்தில் தன் தந்தைக்காகக் காத்திருக்கும் சிறுவன் பாத்திரம் ஒன்றுண்டு. இறந்தவர்களின் பல்லை எடுத்து அதைக் கழுத்தில் போட்டால் தீமை அணுகாது என்னும் நம்பிக்கையைக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் இறுதிவரை தன் தந்தையைக் கண்டடைவதேயில்லை. வறுமையில் வாடுவோரின் இழிசெயல்களைப் பழித்துப் பேசுபவர்களை வறுமையின் வேருக்கருகே அழைத்துச் சொல்லும் இந்தப் படம். 

ஷூஷைன் (1946) திரைப்படத்தில் வீதியோரம் ஷூ பாலீஷ் போடும் இரு சிறுவர்கள் பணம்சேர்த்து குதிரை ஒன்று வாங்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால். ரோம் நகரில் அவர்கள் வாழ்க்கை சிக்கி சின்னாபின்னமாக்கப்படும் ஊழல்மிக்க அந்நகரம் அவர்களைச் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைத்துவிடும். இயக்குநர் ரொஸ்ஸெல்லினி, தன் மகன் ரமனோ நினைவுக்கு சமர்ப்பித்திருந்த, ஜெர்மனி இயர் ஸீரோ (1948) படத்தில் பெர்லின் நகரைச் சேர்ந்த ஒரு சிறுவன் நோயால் படுத்த படுக்கையாகிவிட்ட தன் தகப்பனுக்கு விடுதலை தர அவருக்கு விஷம் கொடுத்து நிரந்தரமாக உறங்கவைப்பான். இந்தச் செயலின் குற்றவுணர்வு உந்தித்தள்ள உயரமான கட்டிடத்திலிருந்து கீழே குதித்து தந்தை சென்ற இடத்துக்கே செல்வான். படத்தின் ஒரு காட்சியில் வீராவேசமான ஹிட்லரின் உரை ஒன்று காற்றில் தவழ்ந்துவரும்.    

இவற்றைப் போன்றே பம்பாய் வீதிகளில் அலைந்துதிரியும் சிறார்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட படம் மீரா நாயரின் இயக்கத்தில் உருவான சலாம் பாம்பே (1988). இந்தப் படம் சிறந்த வெளிநாட்டுப் படம் என்னும் பிரிவில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட இரண்டாம் இந்தியப் படம். ஆனால், பரிசுவென்ற படம் டச்சு மொழியில் உருவான பெல் த கான்க்யுரர். பம்பாயின் வறுமையைக் காட்சிப்படுத்திய ஸ்லம்டாக் மில்லியனர் (2008) அளவுக்குக் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளாவிட்டாலும் சலாம் பாம்பேயும் சில எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்ளவே செய்தது. 


சலாம் பாம்பேயில் பிழைப்புக்காக கிருஷ்ணா தனது பூர்வீகக் கிராமமான பெங்களூர் அருகே உள்ள பிஜாபூரிலிருந்து பம்பாய் செல்கிறான். டச்சுப் படத்தில் பிரதானக் கதாபாத்திரங்களான லஸ்ஸேவும் அவருடைய மகனான பெல்லும் அதே பிழைப்புக்காக சுவீடனிலிருந்து டென்மார்க் செல்கிறார்கள். 

சலாம் பாம்பே பொழுதுபோக்குப் படமல்ல; மாநகரத்தின் வீதியோரம் வீசப்பட்ட சிறார்களின் சிதிலமடைந்த வாழ்க்கையின் பக்கங்களைக் கலாபூர்வமாக வெளிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி. இயல்பாகப் படமாக்கப்பட்ட மாநகரின் துயரம் தொனிக்கும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் இசைக் கலைஞரான டாக்டர் எல்.சுப்ரமணியத்தின் இசை இந்தப் படத்தை உயிரோட்டமாக்கியிருக்கிறது. 

அண்ணனின் இருசக்கர வாகனத்தை எரித்ததன் காரணமாக சர்க்கஸில் பணிக்குச் சேர்த்துவிடப்பட்ட கிருஷ்ணா 500 ரூபாய் சேர்த்துவிட்டால் மீண்டும் தன் ஊருக்கு வந்துவிடலாம். இறுதிவரை அவன் சொந்த ஊருக்குத் திரும்பாமலேயே அந்த மாநகரத்திலேயே அல்லல்படுகிறான். ஒரு கிருஷ்ணா படும் பாட்டைக் காட்டியதன் வழியே உலகெங்கும் மாநகரங்களில் தங்கள் வாழ்வைத்தேடி தட்டழியும் பல கிருஷ்ணாக்களின் வாழ்வையும் பற்றி யோசிக்க வைக்கிறார் மீரா நாயர். 


பெண்களைப் பாலியல் தொழிலில் தள்ளும் பாபா, பாலியல் தொழிலில் ஈடுபடும் அவனுடைய மனைவி, இந்தச் சூழலிலேயே வளரும் மஞ்சு என்னும் குழந்தை, பாபாவின் போதைப் பொருளை விற்பவனான சில்லிம், பாபா மூலமாக பாலியல் விடுதிக்கு வந்து சேரும் 16 வயதுப் பெண் போன்ற படத்தின் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் ஒரு சோற்றுப் பதங்கள். இப்படத்தின் பாலியல் விடுதிக் காட்சிகளைப் பார்க்கும்போது, கமல் ஹாசன் திரைக்கதையில் சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான மகாநதியில் தன் மகளை மீட்கச் சென்ற சோனார் கஞ்ச் காட்சிகளும் சாப் ஜான் திரைக்கதையில் சந்தான பாரதி இயக்கிய குணா படத்தில் குணா வசிக்கும் வீட்டின் சூழலும் மனதில் நிழலாடுகின்றன. 

அன்றாடப் பாட்டுக்கே அனுதினமும் படும் அவஸ்தை காரணமாகப் பல மனிதர்களின் நல்லுணர்வுகளை உறிஞ்சி எடுத்துவிடுகிறது மாநகரம் வறுமை எனும் நெருப்பில் விழுமியங்கள் கருகுகின்றன. அவர்களது வறுமையைப் போக்காது அறவுணர்வை அவர்கள் மீது ஊற்றுவது கற்சிலையின்மீது பாலூற்றுவது போன்றதே என்பதையே இந்தப் படங்கள் எல்லாம் சொல்கின்றன. ஆனால், கொலையொன்றைப் புரிந்துவிட்டு பம்பாய் சென்ற சிறுவன் வேலு நாயக்கராவது போன்ற மகத்தான கற்பனை மணிரத்னம் போன்றவர்களுக்குத் தோன்றுகிறது. சலாம் பாம்பேயின் தாக்கத்தில் தமிழில் உருவான படம் மெரினா என்பது உண்மையிலேயே வியப்பான தகவலே. இது தவிர கோலிசோடா, அங்காடித் தெரு போன்ற படங்களைத் தான் தமிழகத்தால் தர முடிகிறது.