இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஜனவரி 31, 2016

மறுபடியும் ஒரு டைட்டானிக்?


கடல், கப்பல் இவற்றுடன் காதலையும் இணைத்து படமாக்கப்பட்ட ‘டைட்டானிக்’ போல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அநேக திரைப்படங்கள் ஹாலிவுட்டில் வந்துள்ளன. அந்த வரிசையில் வரும் மற்றொரு ஹாலிவுட் படம் ‘த ஃபைனஸ்ட் ஹவர்ஸ்’. அமெரிக்க எழுத்தாளர் கேஸி ஷெர்மன் எழுதிய ‘த ஃபைனஸ்ட் ஹவர்ஸ்’ என்னும் நாவல் 2009-ல் வெளியானது.

1952-ல் கேப் காட் என்னும் கடலோரப் பகுதியில் கடும் புயலில் எஸ் எஸ் ஃபோர்ட் மெர்ஸர், எஸ் எஸ் பெண்டில்டன் என்னும் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மாட்டிக்கொண்டன. இவற்றில் மாட்டிக்கொண்டவர்களைக் கடலோரப் பாதுகாப்பு படையினர் எப்படி மீட்டனர் என்பதை இந்த நாவலில் கேஸி ஷெர்மன் சித்தரித்திருந்தார்.

இந்தக் கதைக்கு ஸ்காட் சில்வர், எரிக் ஜான்சன், பால் தாமஸி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களை நேர்காணல் செய்து அதன் அடிப்படையில் திரைக்கதையை செழுமைப்படுத்தியுள்ளனர்.

ஜாவியர் அகிர்ரெஸ்ரோப் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை ஆஸ்திரேலியா இயக்குநர் கிரிக் கில்லஸ்பி இயக்கியிருக்கிறார். கோயன் பிரதர்ஸ் படங்களில் அதிகமாக இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் கார்டர் பர்வெல் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

க்ரிஸ் பைன், கேஸி அஃப்ளெக், பென் ஃபோஸ்டர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். வால் டிஸ்னி பிக்சர்ஸும், விடேகர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். மாசாசுஸெட்ஸ் மாகாணத்தின் குய்ன்ஸி நகரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பதைத் தொடங்கி நடத்தியுள்ளார்கள்.

கடும் புயல்.. சுழன்று சுழன்று வீசும் காற்றுக்கு நடுவில் தாறுமாறாக எகிறும் அலைகளில் மாட்டிக்கொண்ட கப்பல்கள் உள்ளே கடல் நீர் அதிவேகத்தில் புகுந்துவிட்ட நிலையில் அது முழுவதும் மூழ்குமா தப்பிக்குமா என்னும் பதைபதைப்பை உருவாக்கும் வகையில் படம் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். துணிச்சலுடன் மீட்புப் படையினர் மேற்கொள்ளும் சாகச சம்பவங்களும் பயணிகளின் பரிதவிப்பும் ரசிகர்களை வியப்பின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்திவிடும்போல.

இசையும் படமாக்கமும் தந்திருக்கும் தத்ரூபத்தால் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் புயலில் மாட்டிய கப்பல்கள் நம் கண் முன்னே மீண்டும் ஆழிப் பேரலையில் மாட்டிக்கொண்ட உணர்வு ஏற்படுகிறது. டிரெயிலரைப் பார்க்கும்போதே நடுக்கடலில் கடும் புயலில் மாட்டித் தவிப்பது போன்ற உணர்வு வருகிறது. முழுப் படமும் பார்த்தால் 1952- ம் ஆண்டுக்கே போய்விடுவோம் என்றுதான் தோன்றுகிறது.

ஜனவரி 29 தி இந்து நாளிதழில் வெளியானது

திங்கள், ஜனவரி 25, 2016

ரியல் எஸ்டேட்டுக்கு சாதகமான நகரங்கள்


உலகில் விரைவாகப் பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் நாடுகளில் இந்தியா முதன்மையானது. இதன் பெரு நகரங்களின் வளர்ச்சி அபரிமிதமானது. இவை இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமையைப் பெற்றுத் தந்துவருகின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தப் பெரு நகரங்கள் பெரிய அளவில் கைகொடுத்து வருகின்றன. மாநிலங்களின், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து இந்தப் பெரு நகரங்களுக்கு அநேகர் குடிபெயர்ந்துள்ளனர். வேலை வாய்ப்பு போன்ற தேவைகளின் காரணமாக இவர்கள் இடம்பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஆகவே பெரு நகரங்களில் விரைவாக நகரமயமாக்கம் நடைபெற்றது. ரியல் எஸ்டேட் துறைக்கு இங்கே நல்ல அறுவடை கிடைத்தது. ஆனால் தேவையான குடியிருப்புகள், வணிக வளாகங்கள் எல்லாமே அமைந்துவிட்ட நிலையில் அது கிட்டத்தட்ட உச்சபட்ச நிலையை அடைந்துவிட்டது. இனியும் பெரு நகரங்களை மட்டும் சார்ந்து ரியல் எஸ்டேட் துறையினர் செயல்படும் நிலை இல்லை. ஏற்கனவே அவர்கள் பெரு நகரங்களை ஒட்டிய புற நகர்ப் பகுதியிலேயே தங்கள் கவனத்தைச் சில ஆண்டுகளாக செலுத்திவருவதும் கண்கூடு.

பெருநகரங்களில் நிலங்களின் விலையும் தொழிலைத் தொடர முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. காலி நிலங்களை எல்லாம் கட்டிடங்களாக மாற்றி விட்ட பின்னர், எங்கேயோ கிடைக்கும் அரிதான ஒரு சில காலி நிலங்களின் விலை தாறுமாறாக எகிறிவிடத் தானே செய்யும்? இது போக கடுமையான போக்குவரத்து நெரிசல், மாசுபாடான சூழல் ஆகியவை ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் சவால்களாக மாறியுள்ளன.

இவற்றை எல்லாம் ரியல் எஸ்டேட் துறையினர் சமாளித்துவந்த போதிலும் பெரு நகரங்களை விட்டுவிட்டு அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் நகரங்களில் அவர்களது கவனத்தைச் செலுத்தினால் அங்கே அவர்கள் வளர்ச்சி காண வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசின் திட்டமான 2022-க்குள் எல்லோருக்கும் வீடு போன்றவையும் ரியல் எஸ்டேட்டுக்குக் கைகொடுக்கக் காத்திருக்கிறது. இந்நகரங்களில் நிலங்களின் விலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சகாயமாகவே உள்ளது; உள் கட்டமைப்பும் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கிறது. அப்படியான சில நகரங்கள், அங்கே ரியல் எஸ்டேட்டுக்குச் சாதகமான சூழல் ஆகியவற்றைப் பற்றி ஜேஎல்எல் ரியல் எஸ்டேட் துறை ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடுத்தர மக்கள் வீடு வாங்குவதற்குத் தகுதியான மலிவு விலை வீடுகள் கொண்ட 10 நகரங்களை இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. அவற்றில் தென்னிந்தியாவைச் சேர்ந்த, கோயம்புத்தூர், ஹைதராபாத், கொச்சி ஆகிய மூன்று நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

முதலில் கோயம்புத்தூர்:

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய தொழில் மையம் கோயம்புத்தூர். இங்கே தொழில் தொடங்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகைகூட வழங்கப்படுகிறது. இங்கே உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த அரசு உதவுகிறது. ஆகவே அதிகரித்து வரும் குடியிருப்பு தேவை காரணமாக ஆர்.எஸ்.புரம், ரேஸ் கோர்ஸ், அவினாசி ரோடு போன்ற நகரின் பிரதானப் பகுதிகளில் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. மேலும் இங்கே வீடுகளை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஓய்வுபெற்ற பின்னர் எஞ்சிய வாழ்நாளைக் கழிக்க ஏற்ற நகரம் இது என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. அத்துடன் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் சம்பாதிக்கும் இளைஞர்களும் இந்த நகரத்தில் முதலீடு செய்வதை விரும்புகிறார்கள். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் இங்கு முதலீடு செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் இங்கு நிலவும் மிதமான தட்வெப்ப நிலை. சென்னை போல இன்னும் நெருக்கடி இல்லாத நிலையில் இங்கு அன்றாட வாழ்க்கைச் சுலபமாக இருக்கிறது. இந்தக் காரணங்களால் தனி வீடு, அடுக்குமாடி வீடு என அனைத்துக்கும் இங்கே தேவை இருக்கிறது என்கிறார்கள் கட்டுமானத் துறையை உற்றுக் கவனிப்பவர்கள்.

ஹைதராபாத், தெலங்கானா:

உலக அளவிலான பொருளாதாரச் சரிவு, உள்ளூர் அரசியல் சூழல் போன்ற காரணங்களால் தொடர்ந்து மந்தமாக இருந்த ஹைதராபாத்தின் சந்தைச் சூழல் இப்போது மேம்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியால் ரியல் எஸ்டேட் துறைக்கான வாடிக்கையாளர்கள் பெருகியுள்ளனர். குடியிருப்புகள், வணிக வளாகங்களின் போன்றவற்றுக்கான தேவை அங்கே அதிகரித்திருப்பதே இதற்குச் சான்று.

ஹைதராபாத்தின் பிரதான பகுதிகளில்கூட ஒரு அடுக்குமாடி வீட்டை சுமார் 30-லிருந்து 50 லட்சத்துக்குள் வாங்கிவிடலாம் என்கிறார்கள். சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் நிலவும் விலையில் 60 சதவீதமே இங்கு வீட்டின் விலை எனச் சொல்லப்படுகிறது. மாநிலம் புதிதாக உருவாகியிருப்பதால் இங்கு ரியல் எஸ்டேட் துறைக்கு வளமான எதிர்காலம் உள்ளதாக நம்பப்படுகிறது.

கொச்சி: கேரள மாநிலத்தின் புராதனமான நகரமான கொச்சியில் நவீன வாழ்வும் வசதிகளும் ஊடுருவத் தொடங்கியுள்ளன. கொச்சியில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி உயரத் தொடங்கியபோது கொச்சிக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்தது. நகரத்தில் மட்டுமல்ல அதன் எல்லையை ஒட்டிய பகுதியான பலாரிவட்டம், காக்கநாடு, எடப்பள்ளி போன்ற இடங்களில்கூட மக்கள் பரவ ஆரம்பித்தனர்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் கொச்சி இடம்பெற்றதால் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படும் சூழலும் உருவாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் இங்கே அதிகரித்துவரும் சூழலில் அவற்றின் தேவைகளைப் பூர்த்திசெய்ய ரியல் எஸ்டேட் துறையினரின் பங்களிப்பு அவசியமாகிறது.

ஒரு காலத்தில் வசதி நிறைந்தவர்களை மட்டுமே வாடிக்கையாளர்களாக நம்பி இருந்தது இந்நகரின் ரியல் எஸ்டேட் துறை. ஆடம்பர குடியிருப்புகளின் உருவாக்கமே அதிகமாக இருந்தது. இன்று நிலை அப்படியல்ல. நடுத்தர வகுப்பினர் வாங்கும் விலையுள்ள குடியிருப்புகளே ரியல் எஸ்டேட் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. நகரின் குடியிருப்புத் திட்டங்களில் 60 சதவீதமானவை விலை மலிவுக் குடியிருப்புகளே.

இந்தத் தென்னிந்திய நகரங்களைப் போல குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், சூரத், மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூர், நவி மும்பை, புனே, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், டெல்லியின் காஸியாபாத் போன்ற நகரங்களிலும் ரியல் எஸ்டேட் துறைக்கு வளமான எதிர்காலம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெரு நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை அதன் உச்சபட்ச அளவை எட்டிய நிலையில் அடுத்த நிலையில் உள்ள மேற்கண்ட நகரங்கள் அந்தத் துறையினருக்கு கைகொடுக்கின்றன என்பதை மிகவும் ஆரோக்கியமான சேதியாகப் பார்க்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையினர்.

ஜனவரி 23 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, ஜனவரி 17, 2016

துரோகத்தை வென்றவன்


ஜனவரி 10 அன்று 73-வது கோல்டன் க்ளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஹாலிவுட்டின் கலக்கல் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ டிராமா பிரிவின் சிறந்த நடிகர் விருதை வென்றிருந்தார். அவருக்கு இந்த விருதைப் பெற்றுத் தந்திருந்த ‘த ரெவனன்ட்’ திரைப்படம் வேறு இரு விருதுகளையும் பெற்றிருந்தது. டிராமா பிரிவின் சிறந்த படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அது சிறந்த இயக்குநருக்கான விருதை ‘அமோரஸ் பெரஸ்’, ‘21 கிராம்ஸ்’, ‘பேபல்’, ‘பேர்ட்மேன்’ போன்ற படங்களை இயக்கிப் புகழ்பெற்றிருக்கும் அலெஹாண்ட்ரோ இன்யாரீட்டூவுக்கு வாங்கித் தந்திருந்தது.

கடந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் கலக்கிக்கொண்டிருக்கும் இந்தப் படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்த உடன் ஹாலிவுட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் இந்தப் படத்தின் மீது விழுந்துவிட்டது. டிகாப்ரியோவின் அதிரடி ஆக்‌ஷன் நடிப்பைக் காணத் திரையரங்குகளுக்குப் படையெடுக்கிறார்கள் அவர்கள். இது ஒரு பழிவாங்கல் கதைதான். அதுவும் 1820-களில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

‘மாண்டவன் மீண்டு வந்தால்’ என்பதுதான் படம் சொல்லும் கதை! மைக்கேல் புங்கே என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதி 2002-ல் வெளியான ‘த ரெவனன்ட்: எ நாவல் ஆஃப் ரிவஞ்ச்’ என்ற நாவலுக்கு மார்க் எல் ஸ்மித்தும் இயக்குநர் இன்யாரீட்டூவும் இணைந்து திரைக்கதை அமைத்திருந்தார்கள். டிகாப்ரியோவுடன் டாம் ஹார்டி, வில் பவுல்டர் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் பென்ஸில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த வேட்டைக்காரரான ஹுயுக் க்ளாஸ் வேடத்தை ஏற்று நடித்திருக்கும் டிகாப்ரியோவின் நடிப்பு ரசிகர்களை மெய்மறக்கச் செய்கிறது. துரோகத்தை எதிர்கொண்டு துணிச்சலுடன் போராடும் நாயக பாத்திரத்தை டிகாப்ரியோவின் செறிவான நடிப்பு பன்மடங்கு உயர்த்திவிட்டிருக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில் அவருக்கு கோல்டன் க்ளோப் விருதும் கிடைத்திருக்கிறது என்று புளகாங்கிதம் அடைகிறார்கள் ரசிகர்கள். டிகாப்ரியோ, டாம் ஹார்டி ஆகியோரின் நடிப்பை ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் வரவேற்றுள்ளார்கள் என்பது படத்தின் மீதான மதிப்பை அதிகரிக்கிறது.

கடுங்குளிர் பிரதேசத்தில் பிரயத்தனத்துடன் படப்பிடிப்பை நடத்தி முடித்திருந்த இயக்குநரின் மனதை இந்தப் படத்துக்குக் கிடைத்திருக்கும் விருதுகள் குளிரவைத்துவிட்டன. விருதுகளால் மகிழ்ந்த இன்யாரீட்டூ “வலி தற்காலிகமானது; திரைப்படமோ என்றென்றைக்குமானது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டிருப்பவர் கிராவிட்டி, பேர்ட்மேன் ஆகிய படங்களுக்காக அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ள இம்மானுவேல் லுபெஸ்கி.

ஜனவரி 15 தி இந்து நாளிதழில் வெளியானது

தாரை தப்பட்டை


சாமிப் புலவன் (ஜி.எம்.குமார்) பிரபலமான இசைக் கலைஞர். இவருடைய மகன் சன்னாசி (சசிகுமார்), தாரை தப்பட்டை மற்றும் கரகாட்டக் குழுவை நடத்தி வருகிறார். அதில் பிரதான நடனக்காரி சூறாவளி (வரலட்சுமி). சூறாவளிக்கு சன்னாசி மீது தீராக் காதல். சன்னாசிக் கும் சூறாவளி என்றால் கொள்ளைப் பிரியம் ஆனால் வெளிக்காட்டுவ தில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் சூறாவளிக்குச் சிறப்பான வரவேற்புக் கிடைக்கிறது. அவளுடைய ஆட்டத்தைத் தொடர்ச்சியாகக் காணும் அரசாங்க ஊழியர் கருப்பையா (ஆர்.கே.சுரேஷ்) சூறாவளியை மணமுடிக்க விரும்புகிறார்.

“ஆயுளுக்கும் ஆட்டக்காரியாக அவள் அவதிப்பட வேண்டாம் நிம்மதியாக வாழட்டும்” என நினைக்கும் சன்னாசி, தனது காதலைத் தியாகம் செய்கிறான். திருமணத்துக்கு மறுக்கும் சூறாவளியைச் சம்மதிக்கவைக்கிறான். அவனுடைய விருப்பத்துக்காகச் சூறா வளி கருப்பையாவை மணமுடிக்க ஒப்புக்கொள்கிறாள். திருமணமான பின்பு சூறாவளி சந்தோஷமாக இருக் கிறாளா? சன்னாசியின் குழுவுக்கு என்ன நடந்தது போன்றவற்றைத் தனது பாணியில் தாரை தப்பட்டை யாக்கியிருக்கிறார் பாலா.

ஜி.எம்.குமாருக்கு அழுத்தமான வேடம். கர்வமிக்க இசைக் கலைஞராகப் படம் முழுக்க வலம் வருகிறார். மகன் மீது பிரியத்தைக் கொண்டிருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை அவர். அதைப் போலவே சன்னாசியும். அவருக்கும் தன் தந்தை என்றால் உயிர். மேலும் தனக்குத் தொழில் கற்றுத் தந்த குரு என்பதால் கூடுதல் மரியாதை.

அன்றாட வாழ்வு நடத்த வேண்டி பிணத்தின் முன்னர் பாட்டுப் பாடி ஆட்டம் ஆட நேர்ந்தது பற்றிய வேதனையுடன் வந்தபோது சாமிப்புலவன் நையாண்டி செய்வதால் வெகுண்டு எழுந்து தந்தை யைத் திட்டி, முகத்தில் காறி உமிழ்ந்து விடுகிறார். அந்த அவமானம் சாமிப் புலவனைப் புரட்டி எடுத்துவிடுகிறது. அதைப் போக்கும் வகையில் ஆஸ்திரேலிய ஆளுநர் முன்னிலையில் அவர் பாடும் ‘என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்’ பாடல் சுகமான ராகம். மொழிபுரியாத ஆளுநருக்குப் பாடலைப் புரியவைத்ததில் நிறைவு கொண்டு, அவரது பரிசை அவருக்கே தந்து செல்லும்போது கலை மிடுக்கை வெளிப்படுத்துகிறார்.

சூறாவளியாக வரலட்சுமி சரத்குமார். ‘மாமா மாமா’ என்று சன்னாசியையே சுற்றி சுற்றி வருகிறார். மாமனாருடன் அமர்ந்து ஒன்றாக மது அருந்துகிறார். தனது உடம்பைக் கேட்கும் பெரிய மனிதர்களைப் போட்டுப் புரட்டி எடுக் கிறார். தனக்கு அளிக்கப்பட்ட வேடத்தைப் பாலா எதிர்பார்த்த வகையில் நிறைவேற்றியிருக்கிறார். கருப்பையாவாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், நடிகர் விக்ரமின் உடல்மொழியை நினைவு படுத்துகிறார். அப்பாவியாகவும் குரூரமாகவும் வெளிப்படும் இரு வேறு பட்ட முகங்களிலும் நன்றாக வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

இளையராஜாவின் ஆயிரமாவது படம்!

ஒளிப்பதிவு இயக்குநர் செழியன் காட்சிகளைத் துல்லியமாகவும் ரசனை யோடும் படம்பிடித்திருக்கிறார். நாட்டுப் புறக் கலைகள் கவனிக்கப்படாமல் போகும் சோகத்தைச் சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் கதை, திடீரெனத் தடம் மாறிச்செல்கிறது. வழக்கமான பழிவாங்கும் கதையாக மாறிவிடுகிறது. கதையின் பலவீனம் திரைக்கதையைச் சுவாரசியமற்றதாக்குகிறது. தன்மேல் உயிராக இருக்கும் சூறாவளியைக் காதலித்தும் அவளைக் கைப்பிடிக்கா மல் மற்றொருவருக்கு மணமுடித்து வைப்பதற்கான காரணம் அழுத்தமான தாக இல்லை. அந்தமானில் அம்போ வாக நிற்கும் குழுவினர் எப்படித் தாயகம் வந்தார்கள்? சட்டென திரைக்கதை தாவிவிடுகிறது.

நாயகி மது அருந்துவது, அதிர்ச்சிகரமான வார்த்தைகளைப் பிரயோகிப்பது - இதெல்லாம்தான் டிரெண்டா?! மகாத்மா காந்தி சிலையின் முன்பு காசுக்காகக் குறைவான ஆடைகளுடன் ஆடுவது போன்ற அவலச் சுவைக் காட்சியின் காலம் எப்போதோ முடிந்துவிட்டது. முதலிரவில் தன்னுடன் இருக்கும் நபர் தன் கணவன் அல்ல என்பது தெரி யாமலா ஒரு பெண் இருப்பாள்? நாயகி யைக் கலகக்காரியாக காட்டுவதில் இயக்குநருக்கு இருக்கும் முனைப்பு, அவளை நுண்ணுணர்வு கொண்ட வளாகக் காட்டுவதில் இல்லை. கதைக்கோ திரைக்கதைக்கோ தேவையற்ற, அளவுக்கு அதிகமான குரூரம், வன்முறை, குரோதம் போன்ற வற்றை வெளிப்படுத்தித்தான் மனித நேயத்தை உணரவைக்க வேண்டுமா?

இந்தத் தப்பட்டைக்கு இல்லை தனி முத்திரை..!

ஜனவரி 15 தி இந்து நாளிதழில் வெளியானது

புதன், ஜனவரி 06, 2016

ரயில் சிநேகம்



சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று 06.01.2016 வெற்றிகரமாகத் தொடங்கியது. டிசம்பர் மாதமே நடைபெற்றிருக்க வேண்டிய விழா டிசம்பரின் கடும் வெள்ளம் காரணமாக கால தாமதமாகத் தொடங்கியிருக்கிறது. இன்று கேஸினோ தியேட்டரில் ஃபார் எவர் என்னும் திரைப்படம் பார்த்தேன். கிரேக்க நாட்டுப் படம்.


எளிமையான கதை. ஆனால் தத்துவார்த்தமான படம். மத்திய வயதைக் கடந்த ஆணுக்கு ஒரு பெண் மீது ஏற்படும் அன்பு தான் படத்தின் மையம். படத்தில் வசனங்கள் சொற்பம். படத்தின் மிகுதியும் காட்சிபூர்வ நகர்வே. படம் முழுவதுமே ஒரு பனிமூட்டம் போன்ற கலர் டோனைக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட படத்தின் மனநிலையும் அதுதான். இரவுப் பொழுதில் மெட்ரோ ரயில் செல்லும் வழியெங்கும் கேமரா செல்வது ரம்மியம். லாங் ஷாட்டில் இரவில் தூரத்தில் ரயில் போகும் அழகை கேமரா படம் பிடித்திருக்கும் விதம் ரசிக்கத்தக்கது. தனியாகவே இருக்கும் நாயகன் தனியாகவே இருக்கும் நாயகி. இவர்கள் தான் மையப் பாத்திரங்கள். அவர் ரயில் இன்ஜின் டிரைவர். நாயகி படகு போக்குவரத்துத் துறையில் பயணச்சீட்டு வழங்கும் பணியில் உள்ளவர்.


வசனங்களைப் போலவே கதாபாத்திரங்களும் சொற்பமே. நீளம் குறைந்த படம். மிகவும் நிதானமாக ஆனால் அடர்த்தியான காட்சிகள் நிரம்பியிருந்த படம். மிகவு சிறந்த படம் என்று சொல்ல முடியவில்லை என்றபோதும் பார்க்கத் தகுந்த படமாக இருந்தது. பின்னணி இசையும் படத்தில் மிக மிக சொற்பம். பல காட்சிகள் இசையே இல்லாமலேயே நகர்கிறது.மிக அவசியப்பட்ட இடங்களில் மட்டும் காட்சிக்குத் தேவையான இசை சன்னமாக ஒலிக்கிறது.



ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பை விதவிதமாகச் சொல்லும் படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் கால ஓட்டத்தில் நாம் இழந்துபோனவற்றை எல்லாம் படம் நினைவுபடுத்துகிறது. நவீன வாழ்வு நம் கலாசார வாழ்வைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்தெடுப்பதை நயமாக எடுத்துச்சொல்கிறது. படத்தின் பூடகத் தன்மைக்காகவும் காட்சிகளின் நிதானத்துக்காகவும் அழகுக்காகவும் இந்தப் படத்தைக் காணலாம்.  திரையில் எழுதப்பட்ட கவிதை இந்தப் படம் எனலாம்.

ஞாயிறு, ஜனவரி 03, 2016

தேசிய விளையாட்டுக்குள் ஒரு திகில்!


கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்காவில் வெளியாகியிருக்கும் ஹாலிவுட் படம் கன்கஷன் (Concussion). அமெரிக்காவின் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஏழாம் இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தப் படம். பீட்டர் லேண்டெஸ்மேன் இயக்க ஹாலிவுட்டின் ஆற்றல்மிக்க நடிகர் எனச் சொல்லப்படும் வில் ஸ்மித் நடித்திருக்கும் இந்தப் படம் விளையாட்டு வீரர்களைத் தாக்கக்கூடிய வியாதியான சிடிஇ பற்றி விவாதிக்கிறது. சிடிஇ என்பது தலைமீது ஏதேனும் தொடர்ந்து வலுவாக மோதுவதால் மூளையில் ஏற்படும் அதிர்ச்சியால் உருவாகும் ஒருவித நோய். இந்த நோயைக் கண்டறிந்தவர் நைஜீரியாவைச் சேர்ந்த நோயியல் நிபுணரான டாக்டர் பென்னெட் ஒமாலு.

டாக்டர் பென்னெட் ஒமாலுவின் வேடத்தைத்தான் வில் ஸ்மித் இந்தப் படத்தில் ஏற்று நடித்திருக்கிறார். டாக்டர் பென்னெட் ஒமாலு அமெரிக்க தேசியக் கால்பந்துக் கழகத்துக்குப் பெரும் சவாலாக இருந்தவர். விளையாட்டு வீரர்களுக்கு மூளையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய அவருடைய ஆய்வை முடக்குவதற்கான முயற்சியை அமெரிக்க தேசியக் கால்பந்து கழகம் மேற்கொண்டது. ஏன்? அமெரிக்காவின் தேசிய விளையாட்டு கால்பந்து. அமெரிக்க தேசியக் கால்பந்துக் கழகம் ஆண்டுதோறும் ஏராளமான வருமானத்தை ஈட்டுகிறது. 2013-ம் ஆண்டு அது ஈட்டிய வருமானம் 9 பில்லியன் டாலர் என்று புள்ளிவிவரம் ஒன்று குறிப்பிடுகிறது.

ஆனாலும் தனது முயற்சியில் தளராத டாக்டர் சிடிஇ பற்றிய தனது ஆய்வை வெற்றிகரமாக முடித்தார். அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. பயோபிக் வகை திரில்லராக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் இந்தியாவில் 2016 பிப்ரவரி 5 அன்று வெளியாக இருக்கிறது.

அமெரிக்க தேசியக் கால்பந்தாட்ட வீரர்களில் 96 சதவீதத்தினருக்கு சிடிஇ வியாதிக்கான அறிகுறி இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இந்நிலையில் இந்தப் படம் அமெரிக்கப் பெற்றோர்களின் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் சிடிஇ பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இப்படியான பல சுவாரசியமான, அதிர்ச்சிதரத்தக்க சம்பவங்களைக் கதைக்களமாகக் கொண்ட கன்கஷன் இங்கேயும் அத்தகைய அதிர்ச்சிகளை ஏற்படுத்துமா என்று பார்ப்போம்.

ஜனவரி 1 தி இந்து நாளிதழில் வெளியானது

லேட்டஸ்ட்

இலக்கற்ற வாசிப்பு சரியா, தவறா?

தொடர்பவர்

பார்வையாளர்