உலகில் விரைவாகப் பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் நாடுகளில் இந்தியா முதன்மையானது. இதன் பெரு நகரங்களின் வளர்ச்சி அபரிமிதமானது. இவை இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமையைப் பெற்றுத் தந்துவருகின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தப் பெரு நகரங்கள் பெரிய அளவில் கைகொடுத்து வருகின்றன. மாநிலங்களின், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து இந்தப் பெரு நகரங்களுக்கு அநேகர் குடிபெயர்ந்துள்ளனர். வேலை வாய்ப்பு போன்ற தேவைகளின் காரணமாக இவர்கள் இடம்பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஆகவே பெரு நகரங்களில் விரைவாக நகரமயமாக்கம் நடைபெற்றது. ரியல் எஸ்டேட் துறைக்கு இங்கே நல்ல அறுவடை கிடைத்தது. ஆனால் தேவையான குடியிருப்புகள், வணிக வளாகங்கள் எல்லாமே அமைந்துவிட்ட நிலையில் அது கிட்டத்தட்ட உச்சபட்ச நிலையை அடைந்துவிட்டது. இனியும் பெரு நகரங்களை மட்டும் சார்ந்து ரியல் எஸ்டேட் துறையினர் செயல்படும் நிலை இல்லை. ஏற்கனவே அவர்கள் பெரு நகரங்களை ஒட்டிய புற நகர்ப் பகுதியிலேயே தங்கள் கவனத்தைச் சில ஆண்டுகளாக செலுத்திவருவதும் கண்கூடு.
பெருநகரங்களில் நிலங்களின் விலையும் தொழிலைத் தொடர முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. காலி நிலங்களை எல்லாம் கட்டிடங்களாக மாற்றி விட்ட பின்னர், எங்கேயோ கிடைக்கும் அரிதான ஒரு சில காலி நிலங்களின் விலை தாறுமாறாக எகிறிவிடத் தானே செய்யும்? இது போக கடுமையான போக்குவரத்து நெரிசல், மாசுபாடான சூழல் ஆகியவை ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் சவால்களாக மாறியுள்ளன.
இவற்றை எல்லாம் ரியல் எஸ்டேட் துறையினர் சமாளித்துவந்த போதிலும் பெரு நகரங்களை விட்டுவிட்டு அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் நகரங்களில் அவர்களது கவனத்தைச் செலுத்தினால் அங்கே அவர்கள் வளர்ச்சி காண வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசின் திட்டமான 2022-க்குள் எல்லோருக்கும் வீடு போன்றவையும் ரியல் எஸ்டேட்டுக்குக் கைகொடுக்கக் காத்திருக்கிறது. இந்நகரங்களில் நிலங்களின் விலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சகாயமாகவே உள்ளது; உள் கட்டமைப்பும் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கிறது. அப்படியான சில நகரங்கள், அங்கே ரியல் எஸ்டேட்டுக்குச் சாதகமான சூழல் ஆகியவற்றைப் பற்றி ஜேஎல்எல் ரியல் எஸ்டேட் துறை ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடுத்தர மக்கள் வீடு வாங்குவதற்குத் தகுதியான மலிவு விலை வீடுகள் கொண்ட 10 நகரங்களை இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. அவற்றில் தென்னிந்தியாவைச் சேர்ந்த, கோயம்புத்தூர், ஹைதராபாத், கொச்சி ஆகிய மூன்று நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
முதலில் கோயம்புத்தூர்:
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய தொழில் மையம் கோயம்புத்தூர். இங்கே தொழில் தொடங்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகைகூட வழங்கப்படுகிறது. இங்கே உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த அரசு உதவுகிறது. ஆகவே அதிகரித்து வரும் குடியிருப்பு தேவை காரணமாக ஆர்.எஸ்.புரம், ரேஸ் கோர்ஸ், அவினாசி ரோடு போன்ற நகரின் பிரதானப் பகுதிகளில் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. மேலும் இங்கே வீடுகளை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஓய்வுபெற்ற பின்னர் எஞ்சிய வாழ்நாளைக் கழிக்க ஏற்ற நகரம் இது என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. அத்துடன் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் சம்பாதிக்கும் இளைஞர்களும் இந்த நகரத்தில் முதலீடு செய்வதை விரும்புகிறார்கள். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் இங்கு முதலீடு செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் இங்கு நிலவும் மிதமான தட்வெப்ப நிலை. சென்னை போல இன்னும் நெருக்கடி இல்லாத நிலையில் இங்கு அன்றாட வாழ்க்கைச் சுலபமாக இருக்கிறது. இந்தக் காரணங்களால் தனி வீடு, அடுக்குமாடி வீடு என அனைத்துக்கும் இங்கே தேவை இருக்கிறது என்கிறார்கள் கட்டுமானத் துறையை உற்றுக் கவனிப்பவர்கள்.
ஹைதராபாத், தெலங்கானா:
உலக அளவிலான பொருளாதாரச் சரிவு, உள்ளூர் அரசியல் சூழல் போன்ற காரணங்களால் தொடர்ந்து மந்தமாக இருந்த ஹைதராபாத்தின் சந்தைச் சூழல் இப்போது மேம்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியால் ரியல் எஸ்டேட் துறைக்கான வாடிக்கையாளர்கள் பெருகியுள்ளனர். குடியிருப்புகள், வணிக வளாகங்களின் போன்றவற்றுக்கான தேவை அங்கே அதிகரித்திருப்பதே இதற்குச் சான்று.
ஹைதராபாத்தின் பிரதான பகுதிகளில்கூட ஒரு அடுக்குமாடி வீட்டை சுமார் 30-லிருந்து 50 லட்சத்துக்குள் வாங்கிவிடலாம் என்கிறார்கள். சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் நிலவும் விலையில் 60 சதவீதமே இங்கு வீட்டின் விலை எனச் சொல்லப்படுகிறது. மாநிலம் புதிதாக உருவாகியிருப்பதால் இங்கு ரியல் எஸ்டேட் துறைக்கு வளமான எதிர்காலம் உள்ளதாக நம்பப்படுகிறது.
கொச்சி: கேரள மாநிலத்தின் புராதனமான நகரமான கொச்சியில் நவீன வாழ்வும் வசதிகளும் ஊடுருவத் தொடங்கியுள்ளன. கொச்சியில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி உயரத் தொடங்கியபோது கொச்சிக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்தது. நகரத்தில் மட்டுமல்ல அதன் எல்லையை ஒட்டிய பகுதியான பலாரிவட்டம், காக்கநாடு, எடப்பள்ளி போன்ற இடங்களில்கூட மக்கள் பரவ ஆரம்பித்தனர்.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் கொச்சி இடம்பெற்றதால் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படும் சூழலும் உருவாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் இங்கே அதிகரித்துவரும் சூழலில் அவற்றின் தேவைகளைப் பூர்த்திசெய்ய ரியல் எஸ்டேட் துறையினரின் பங்களிப்பு அவசியமாகிறது.
ஒரு காலத்தில் வசதி நிறைந்தவர்களை மட்டுமே வாடிக்கையாளர்களாக நம்பி இருந்தது இந்நகரின் ரியல் எஸ்டேட் துறை. ஆடம்பர குடியிருப்புகளின் உருவாக்கமே அதிகமாக இருந்தது. இன்று நிலை அப்படியல்ல. நடுத்தர வகுப்பினர் வாங்கும் விலையுள்ள குடியிருப்புகளே ரியல் எஸ்டேட் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. நகரின் குடியிருப்புத் திட்டங்களில் 60 சதவீதமானவை விலை மலிவுக் குடியிருப்புகளே.
இந்தத் தென்னிந்திய நகரங்களைப் போல குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், சூரத், மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூர், நவி மும்பை, புனே, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், டெல்லியின் காஸியாபாத் போன்ற நகரங்களிலும் ரியல் எஸ்டேட் துறைக்கு வளமான எதிர்காலம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெரு நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை அதன் உச்சபட்ச அளவை எட்டிய நிலையில் அடுத்த நிலையில் உள்ள மேற்கண்ட நகரங்கள் அந்தத் துறையினருக்கு கைகொடுக்கின்றன என்பதை மிகவும் ஆரோக்கியமான சேதியாகப் பார்க்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக