இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், ஏப்ரல் 30, 2015

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது



தமிழ்த் திரையுலகில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் சென்னையில் நண்பர்கள் அறையில் தங்கியிருக்கிறார் செல்லப் பாண்டியன் (சிம்ஹா). அவருடைய நண்பன் நாகராஜ் (பிரபஞ்செயன்) சினிமா கனவுடன் திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிவருகிறான். செல்லப் பாண்டியன் அறையில் தங்கியிருக்கும் கார்த்தி (லிங்கா) பெண் மோகத்தில் உழல்பவன். நாகராஜ் தங்கியிருந்த அறையில் பிரச்சினை ஏற்படவே அங்கிருந்து செல்லப் பாண்டியனின் அறைக்கு வருகிறான். கார்த்திக்கும் நாகராஜுக்கும் தொடக்கத்தில் இருந்தே ஒத்துப்போகவில்லை. இந்நிலையில் கார்த்திக்கும் வினோதினி என்ற கிராமத்துப் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. எல்லை மீறிய உறவால் கர்ப்பமாகிறாள் வினோதினி. கார்த்தி அவளிடமிருந்து விலகுகிறான். செல்லப் பாண்டியனும் நாகராஜும் அவளுக்கு உதவுகிறார்கள். இதனிடையே செல்லப் பாண்டியன் தங்கியிருக்கும் அறையின் உரிமையாளருடைய மகள்மீது அவனுக்குக் காதல் ஏற்படுகிறது. செல்லப் பாண்டியன் காதலில் வெற்றிபெற்றானா, படம் இயக்கினானா, வினோதினியும் கார்த்தியும் இணைந்தார்களா என்பதையெல்லாம் யதார்த்தமான போக்கில் சொல்லிச் செல்கிறது சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது.


அறிமுக இயக்குநர் மருதுபாண்டியன் இப்படத்தை மிகவும் யதார்த்தமான தளத்தில் நகர்த்திச் செல்கிறார். சினிமா பாவனைகளைப் பெருமளவில் தவிர்த்துள்ளார். சென்னையில் சினிமாக் கனவுடன் திரியும் இளைஞர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கலில் தலையாயது சரியான ரூம் அமையாமல் போவது. வெற்றிபெற்ற பின்னர் சமூகத்தால் கொண்டாடப்படும் திரைத்துறையினர் தங்குவதற்கு ஓர் அறைகூடக் கிடைக்காத அவலத்தைப் பகடியாகவும் வேதனையாகவும் சித்தரிக்கிறது இப்படம். ஆனால் வழக்கமாகத் திரைக்கதையில் காணப்படும் ஒரே திசை சார்ந்த குவியம் இல்லை இப்படத்தில். இப்படத்தைக் கட்டமைப்பவர்கள் சென்னையின் இக்கட்டுகள் நிறைந்த வாழ்வை எதிர்கால வெற்றி எனும் கனவால் சகித்துக்கொள்ளும், கொசுக்கடியால் தூங்க இயலாத அறைகூடக் கிடைக்காத அவலத்தையும் எதிர்கொள்ளும் பரிதாபத்துக்குரிய இளைஞர்கள். இவர்களிடம் பலவீனமான பல குணாம்சங்கள் குடிகொண்டிருக்கின்றன. ஆனாலும் அவர்கள் அப்படியே சினிமாவுக்கான ஒப்பனையின்றி உலாவருகிறார்கள். அதனால் இது வழக்கமான திரைப்படம் தரும் அனுபவத்திலிருந்து விலகிநிற்கிறது.

வெவ்வேறு விதமான மனிதர்கள் தங்கள் வாழ்வு ஒளிர வேண்டி, விரும்பி சென்னை என்னும் பெருநகரில் குவிகிறார்கள். செல்லப் பாண்டியனின் கனவு இயக்குநராவது என்றால் அவனைத் தேடி வரும் கிராமத்து அண்ணன் சரவணனின் (இயக்குநர் மருது பாண்டியன்) கதையோ வேறு. கிராமத்தில் குடித்து குடித்துச் சீரழியும் அவரைப் பிழைப்புக்காகவும், குடியிலிருந்து மீட்கவும் சென்னைக்கு அனுப்புகிறார்கள் குடும்பத்தினர். குடிகாரக் கணவன் ஆனாலும் அந்த மனைவிக்கு வெறுப்பு அவனது குடியின் மீது தானே ஒழிய அவன்மீது அல்ல. ஆனால் எப்போதும் படம் திருடுபோய்விட்டதாகச் சொல்லி அந்தப் பணத்துக்கு குடித்துவிடும் கணவன் உண்மையிலேயே பணத்தைத் தொலைத்துவிட்டு கிராமத்துக்கு திரும்பும்போது அதை நம்ப முடியாத மனைவி நடுத்தெருவில் அவரைத் துடைப்பத்தால் கடுமையாக அடித்துவிடுகிறார். சரவணனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் இருக்கும் கணவன் மனைவி உறவு சிறிதுகூட அரிதாரம் பூசப்படாமல் அப்படியே ஈரத்தன்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



கார்த்தியின் காதலி வினோதினிக்குக் கார்த்தி துரோகம் இழைத்து தலைமறைவாகச் சென்றுவிடுகிறான். ஒவ்வொரு முறையும் உன்னை மட்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும் என மொழிகிறான். அதை நம்பி அந்தப் பேதைப் பெண் தன்னை இழக்கிறாள். ஆனால் அவன் பழகும் அனைத்துப் பெண்களிடமும் அதேபோல்தான் பேசுகிறான். ஆனால் ஏற்கெனவே மணவாழ்க்கையிலிருந்து வெளியேறிய வினோதினி அவனது வார்த்தைகளை அப்படியே நம்புகிறாள். அவனது ஏமாற்றத்தை எதிர்கொண்டபோதும் அவளால் கார்த்தியை வெறுக்க இயலவில்லை. ஏனெனில் அவள் அவனை உண்மையாக நேசிக்கிறாள். அவன் அவளைத் தேடி வருவானோ மாட்டானோ தெரியாது. ஆனால் அவனை மட்டுமே உள்ளத்தில் இருத்தி அவனுடன் கழித்த அன்பான நாட்களின் நினைவாக அவன் தந்த குழந்தையுடன் அந்தப் பெருநகரில் சிரமமான ஒரு வாழ்வை நடத்துகிறாள். அவளால் கிராமத்துக்குப் போக இயலாது. உன்னத கிராமம் அவளது நிலையைப் புரிந்துகொள்ளாது. அவளுக்கான அடைக்கலத்தை ஒரு பெரு நகரமே வழங்க முடியும் என்பதைப் படம் போகிற போக்கில் சொல்கிறது.

கார்த்தியைக் காமம் அலைக்கழிக்கிறது. பெற்றெடுத்த தாய் மரணத்தின் விளிம்பில் தவித்துக்கொண்டிருக்கையில் தனக்குக் காமத்தை வாரி இறைக்கத் தயாராகும் காதலியின் அணைப்பைத் தவிர்க்க இயலாமல் கார்த்தி காமத்தில் நனைகிறான்.  அதே கார்த்தி தாய் இறந்த சோகத்தைச் சொல்லும் பாடல் ஒலிக்கும்போது தன்னை மறந்த போதையில் விக்கித்து அழுகிறான். அவன் துரோகி என எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் கார்த்தி சாதாரண மனிதன். உணர்வுகள் உந்தித் தள்ளும்போது அதைத் தட்டிவிடத் தெரியாமல் அவற்றிடம் சரணாகதி அடைந்துவிடும் சாமானியன்.



இயக்குநராகும் ஆசையில் கதை எழுத உட்காரும்போதெல்லாம் அவனுக்கு ஏதாவது இடையூறு ஏற்படுகிறது. விவேகாநந்தரின் பொன்மொழியைச் சொல்லிச் சொல்லித் தான் ஆரம்பிக்கிறான். ஆனால் நடைமுறை அவனை நகரவிடாமல் தடுத்துக்கொண்டே இருக்கிறது. சொந்த அறையிலேயே அந்நியன் போல ரகசியமாக இரவில் வந்து தங்குகிறான். வீட்டு உரிமையாளர் இரவில் எல்லாம் சிவாஜி படப் பாட்டுகளை ரசிக்கிறார். ஆனால் செல்லப் பாண்டியனுக்கு அவர் மனம் இளகவில்லை. இதுதான் யதார்த்தம். சினிமாக்காரனான அவனால் தான் காதலித்த பெண்ணிடம் காதலைக்கூடச் சொல்ல இயலவில்லை. அந்தக் காதல் அவனுக்குள் நறுமணம் வீசிவிட்டு காற்றோடு கலந்துவிடுகிறது. தான் காதலித்த பெண் தனக்குத் திருமணம் என்னும் சேதியைச் சொல்லிச் சென்ற பின்னர்தான் தனது கதையின் தொடக்கப்புள்ளியைக் கண்டடைகிறான். விரைவில் பெரிய இயக்குநராகிவிடுங்கள் என அந்தப் பெண் வாழ்த்திவிட்டு மாநகரின் ஏதோ ஒரு வீட்டுக்கு வாழச் சென்றுவிடுகிறாள். அதன் பின்னர் செல்லப் பாண்டியனுக்குத் தேவையான ஒரு முடுக்கம் கிடைத்துவிடுகிறது. அதுவும் உள்ளடங்கியே ஒலிக்கிறது. வெளிப்படையான காட்சிதன்மை கொண்டிருக்கவில்லை.

நண்பர்களுடன் ஓசியில் குடிக்கும் நாகராஜ் தன் அண்ணன் மகனுக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தர விரும்புகிறான். ஆனால் அவனால் அதைக்கூட நிறைவேற்ற இயலவில்லை.சென்னையில் பெரிய அளவில் சம்பாதிப்பதாய் ஊரிலுள்ளோர் நம்பும் சூழலில் சென்னையில் சினிமாக் கனவுடன் அலையும் இளைஞர்கள் சிங்கிள் டீக்கு வழியின்றித் தள்ளாடுகிறார்கள். கனவுக்கு நனவுக்கும் இடையிலான யதார்த்தம் புரியாத மனிதர்கள் பிரபு தேவாவுக்கும் நயன் தாராவுக்கும் இடையிலான பிணக்கு பற்றியான கிசுகிசுவைக் கிளுகிளுப்புடன் வினவுகிறார்கள். இவையெல்லாம் சினிமாக்காரர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள். இந்தச் சிக்கலை யதார்த்தமான சினிமாவாக்கிய மருது பாண்டியன் அதை சினிமாத் தனம் என்னும் பூச்சற்று தந்துள்ளார்.



வசனங்கள் மிகவும் இயல்பானவை. பாதியில் நின்றுபோன படத்தை இயக்கிய இயக்குநருடன் இரவில் செல்லப் பாண்டியன் பேசும்போது, ஏன் சார் படம் நின்று போனது எனக் கேட்கும்போது, மருதநாயகமே டிராப் ஆயிருச்சு, சினிமாவுக்கு லாஜிக் ஏது? அவர் மொழியும்போது அதில் விரக்தி மட்டும் தொனிக்கவில்லை பச்சை உண்மை தெறிக்கிறது. அதே இயக்குநர் படம் கமிட் ஆன பின்னர் காரில் வந்திறங்குகிறார். அதுதான் சினிமா. நடைமேடையில் திரியும் ஏதோ ஒரு மனிதர் சட்டென நவநாகரிக வாழ்வுக்குத் தாவிவிடுவார். இரண்டுக்கும் இடையில் கண்கட்டி வித்தை காட்டும் முதல் பட வெற்றி  கிடந்து ஆட்டுவிக்கிறது.



வினோதினி பாத்திரமேற்ற சரண்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட நடிகர்கள் இயல்பான நடிப்பைத் தந்துள்ளனர். ஒளிப்பதிவில் தென்படும் குறை என்றால் படத்தின் வண்ணக்கலவை சீர்மையாக இல்லை. வெவ்வேறு திட்டுத் திட்டான சம்பவங்களின் தொகுப்பாகப் படம் அமைந்துவிட்டிருக்கிறது. சில இடங்களில் தேவைப்படும் மவுனத்தைப் பேணியவகையில் இசையும் படத்துக்கு உதவியுள்ளது. அப்துல்ரகுமான், விக்கிரமாதித்யன் கவிதையென இலக்கிய ரசனையுடன் வெளிப்பட்டிருக்கும் இப்படத்தின் குறைகளைப் புறக்கணித்து படத்துக்கு ஆதரவாக நிற்கிறது பார்வையாளனின் மனம்.

வெள்ளி, ஏப்ரல் 17, 2015

ஒமர்

நீராய்ப் பரவும் துரோகம்


அவர்கள் மூவரும் பால்ய சிநேகிதர்கள். துறுதுறுப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த அவர்களது தோழமையில் களங்கம் சேர்கிறது. வெகுளித் தனமான அவர்கள் உறவில் கல்மிஷம் சுவராக எழும்பி நிற்கிறது. தனிமனிதர்களிடையே அச்சுறுத்தும் அளவிலான வெம்மை சூழ்ந்த இடைவெளியை ஏற்படுத்தி அதில் குளிர்காய்கிறது தந்திரம். தனிமனித உறவில் ஏற்படும் சிக்கல்களை விவரிப்பதன் மூலம் துயரத்திலும் தீர்க்கப்பட முடியாத சிக்கலிலும் தவித்துக்கொண்டிருக்கும் தேசத்தின் பிரச்சினையை ஒமர் படம் மூலம் உணர்த்துகிறார் இயக்குநர் ஹேனி அபு அஸாத். இவர் இஸ்ரேலின் நாஸரேத்தில் பிறந்த பாலஸ்தீன இயக்குநர். பாலஸ்தீனப் பிரச்சினையை அவர் கையில் எடுப்பது இதுவே முதல் முறை. சிறந்த வெளிநாட்டுப் படம் என்னும் பிரிவில் 86ஆவது ஆஸ்கர் பரிசுக்காக அனுப்பப்பட்டது. 2013-ல் கேன் படவிழாவில் ஜூரி விருதைப் பெற்றது.   

பேக்கரி ஒன்றில் பணிபுரியும் ஒமர் (ஆதம் பக்ரி) ஒவ்வொரு முறையும் தனக்கெதிரே உயர்ந்து நிற்கும் பெரிய சுவரைத் தாண்டியே தன் காதலி நடியாவைச் (லீம் லுபானி) சந்திக்கச் செல்கிறான். பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதியை இஸ்ரேலிலிருந்து பிரிப்பதற்காக இஸ்ரேலியத் தரப்பு அமைத்தது இந்த 25 அடி உயர தடுப்புச் சுவர். ஒமர், தரே (இயாத் ஹூரானி), அம்ஜத் மூவரும் பாலஸ்தீனிய விடுதலைக்காகப் போராடும் தெருவோரக் குழுவினர். இந்தக் குழுவுக்குத் தலைவன் தரே, அவனுடைய தங்கைதான் நடியா.


நண்பர்கள் மூவரும் துப்பாக்கி ஏந்த அவசியமான நுட்பமான பயிற்சி எடுக்கிறார்கள். இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவரை ஓரிரவில் தொலைவில் இருந்து சுட்டுக்கொல்கிறார்கள். மூவரும் இந்தச் சம்பவத்தில் இணைந்து செயல்பட்டாலும் துப்பாக்கியால் சுடுவது அம்ஜத்தான். இந்தச் சம்பவத்தைத் துப்பு துலக்க வரும் இஸ்ரேலிய விசாரணக் குழுவிடம் ஒமர் அகப்பட்டுக்கொள்கிறான். தனியறையில் வைத்துத் துன்புறுத்துகின்றனர். விசாரணை நடத்தும் ராமி (வலீத் ஜுவைதர்) ஒமரின் அந்தரங்கப் பகுதியின் மயிர்களை சிகரெட் லைட்டரால் கொளுத்துகிறான். பெரிய அலறலோ இதயத்தைப் பிளக்கும் பகீர் இசையோ பின்னணியில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் மயிர் பொசுங்கும் வாசனை நம்மை நிலைகுலையச் செய்கிறது.

இஸ்ரேலிய வீரரைக் கொன்றது தரே என நினைத்து அவனை ஒப்படைக்கும்படி ஒமரை வற்புத்துகிறான் ராமி. நடியா குறித்தும் ஒமரின் காதல் பற்றியும் எல்லாவற்றையும் அறிந்திருப்பதாகத் தெரிவிக்கும் ராமி அதைக் கொண்டே ஒமரைத் தங்களுக்கு ஒத்துழைக்கப் பணிக்கிறான். வேறு வழியற்ற சூழலில் ராமிக்கு ஒத்துழைப்பதாகத் தெரிவித்து அங்கிருந்து வெளியேறுகிறான் ஒமர்.


தரேவிடம் ஒமர் நடந்ததை விவரிக்கிறான். யாரோ ஒருவன் துரோகியாகச் செயல்படுவதாகவும் அவனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தரே ஒமரிடம் கூறுகிறான். மூவரும் அது பற்றி விரிவாக விவாதிக்கிறார்கள். துரோகி நீயாகவோ நானாகவோ அம்ஜத்தாகவோ வேறு யாராகவோ இருக்கலாம் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறான் தரே. இஸ்ரேலியர்களுக்கு எதிராக மற்றொரு தாக்குதல் நடவடிக்கை எடுக்க முயல்கிறார்கள். இப்போது மீண்டும் ஒமர் பிடிபடுகிறான். தங்களை ஏமாற்றியதாகக் கடிந்துகொள்கிறான் ராமி. அவன் ஒரு அரேபியன் என்பதை அவன் பேசும் பாஷையை வைத்துக் கண்டுபிடிக்கிறான் ஒமர். நடியா குறித்த ரகசியம் எல்லாவற்றையும் தான் அறிந்திருப்பதாகத் தெரிவிக்கிறான் ராமி. எப்போது வேண்டுமானாலும் அவளை ஒரு பரத்தையாகத் தங்களால் மாற்ற முடியும் என வக்கிரத்துடன் மொழிகிறான் அவன். மனித மனத்தின் மென்மையான பகுதியை கீறுவதன் மூலம் தனக்கான அனுகூலத்தை எதிர்பார்க்கிறான் ராமி. அந்த வார்த்தைகள் ஒமரைச் சரியான இடத்தில் தாக்குகின்றன. மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கேட்கிறான் ஒமர். அவனது காலில் ஆட்காட்டிக் கருவியைப் பொருத்தி அவனை வெளியே அனுப்புகிறான் ராமி.


இருமுறை ஒமர் விசாரணையிலிருந்து வெளியே வந்ததால் அவன் மீது சந்தேகம் வலுக்கிறது. அவன் இரண்டு பக்கங்களுக்கும் வேலை செய்கிறானோ என்ற ஐயம் நடியாவுக்கே வருகிறது. நடியாவும் அம்ஜத்தும் தனியே பார்த்து உரையாடுவதை ஒமர் காண்கிறான். அவன் மனம் புண்படுகிறது. இருவரும் விவாதிக்கும்போது அவன் நாட்டுக்குத் துரோகம் செய்வதாக நடியா நினைக்கிறாள், நடியா தனக்குத் துரோகம் செய்வதாக ஒமர் எண்ணுகிறான். தனி மனித உணர்வுகளும் நாட்டுப் பற்றும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. விவாத முடிவில் கோபத்துடன் வெளியேறுகிறாள் நடியா. ஆழ்ந்த துக்கத்துடன் நகர்கிறான் ஒமர். அப்போது மன அழுத்தம் தாங்காமல் சுவரில் கைகளால் ஓங்கிக் குத்திக் காயமேற்படுத்திக்கொள்கிறான். காதலால் ஏற்பட்ட ரணத்தை கைகளின் வலியில் கரைந்துபோகச் செய்கிறான். மிகச் சிக்கலான தருணங்களை இப்படியான எளிய காட்சிகளில் உயிரோட்டத்துடன் வெளிப்படுத்துகிறது படம்.

தரே இறந்த பின்னர், அம்ஜத் கூறியதை நம்பி ஒமர் அவளை அம்ஜத்துக்கு மணம் முடிக்கும் பொருட்டுப் பேசச் செல்லும் காட்சியிலும் காபி கோப்பையின் கீழ் வழக்கம் போல் காதல் கடிதத்தை வைக்கிறாள் நடியா. ஆனால் ஒமர் அதைப் புறக்கணித்துவிடுகிறான். அவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்று கருதி அம்ஜத்துக்குச் சம்மதம் சொல்கிறாள். இருவருமே அதைப் பற்றி விவாதிக்கவே இல்லை. சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். வாழ்வில் பெரும் பிழை தரும் முடிவை வெறும் ஈகோ காரணமாக எடுத்துவிடுகிறார்கள்.  


நடியாவுடன் சேர்ந்து வாழ விழைந்து ஒமர் சிறுகச் சிறுகப் பணம் சேர்க்கிறான். தேனிலவுக்கு மகிழ்ச்சி நிறைந்த பாரீஸ் நகருக்குச் செல்ல விரும்புகிறாள் நடியா. இருவரும் காதலைச் சன்னமாக வெளிப்படுத்திருக்கிறார்கள். ஆனால் ஆழ் மனதை ஊடுருவும் அடர்த்தியான பார்வையைப் பரிமாறிக்கொள்கிறார்கள். சிறு சிறு காதல் கடிதங்கள் அவர்களை இணைக்கும் பாலமாக இருக்கின்றன. பதுங்கு குழி போன்ற தனிமைச் சிறையில் கிடக்கும் அவன் ஒற்றை எறும்புடன் தனது பேசுமளவுக்கு மென்மையான குணம் கொண்டவன். சிறு பூச்சியைக் கூட கொல்வதை அவன் மனம் ஒப்புவதில்லை.  

நடியாவை அடைவதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டவனாக, நேர்மையானவனாக ஒமர் இருக்கிறான். நடியாவும் ஒமரை ஆழமாக நேசிக்கிறாள். ஆனால் ஒமரும் நடியாவும் சேர முடியாமல் போய்விடுகிறது. இதன் பின்னணியில் சூதும் வாதும் கைகோத்து நிற்கின்றன. ஆகவே அம்ஜத் நடியாவுடன் சேர்ந்துவிடுகிறான். அவனும் நடியாவை விரும்புகிறான். ஆனால் தந்திரமாக அவளை அடைந்துவிடுகிறான். மெல்ல மனத்திரையில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தை நம்மால் உணர முடிகிறது.

இறுதியில் மீண்டும் தன்னைத் தேடி வந்து மற்றொரு போராளிக் குழுத் தலைவனைப் பற்றிய தகவல்களைக் கேட்கிறான் ராமி. அவற்றைச் சொல்லாவிட்டால் ஒமரையும், நடியாவையும், அம்ஜத்தையும் அழித்துவிடுவதாக மிரட்டுகிறான். நொறுங்கிப் போன மனத்துடன் எப்போதும் சரசரவென ஏறும் சுவரில் ஏற முடியாமல் தடுமாறி உட்கார்ந்துவிடுகிறான் ஒமர். அப்போது அந்த வழியே யாசர் அரபாத் போன்ற ஒருவர் வந்து அவனுக்குச் சுவர் மீது ஏற உதவுகிறார். எல்லாம் விரைவில் சரியாகிவிடும் என்று கூறும் அவர் அவன் சுவர் மீதேறிக்கொண்டிருக்கும்போதே மெதுவாக அந்த இடத்தைக் கடந்துபோய்விடுகிறார்.

மகிழ்ச்சி, நட்பு, காதல், சந்தேகம், ஏமாற்றம், துரோகம், விரக்தி போன்ற மனிதர்களை அலைக்கழிக்கும் உணர்வுகள் படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ஆழ் மன உணர்வுகள் மிக மிக மென்மையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எங்கேயும் பெரிய அளவிலான நாடகத் தன்மை இல்லை. படத்தின் கதையில், திரைக்கதையில் முக்கோணக் காதல் போன்ற நாடகத்தனமாக அம்சங்கள் இருந்தபோதும் அவை வெளிப்படும் விதம் நாடகத் தன்மையைப் புறந்தள்ளியதாக இருக்கிறது. 


பின்னணி இசையில் ஆங்காங்கே நாய்க் குரைப்பின் ஓசையும், தேவைப்படும் இடங்களில் வாகனங்களின் அச்சமூட்டும் ஒலியும் வெளிப்படுகின்றன. பல இடங்களில் மௌனமாகவும் அடங்கிய ஒலியுடன் காட்சிகள் நகர்கின்றன. காட்சிகள் கண்களை உறுத்தாதவாறு மிக நிதானமாக நகர்த்தப்பட்டுள்ளன. காட்சிகளின் உணர்வுகளைப் பார்வையாளன் தனக்குள் வாங்கி அவற்றை அனுபவிக்க அவசியமான கால இடைவெளிகளைப் படம் ஏற்படுத்தித் தருகிறது. நம்பிக்கைகளை நடுவது சமூகக் கடப்பாடு என்னும் வாசகத்தைத் தாங்கிய விளம்பரப் பலகை ஒன்று பின்னணியில் இடம்பெறுகிறது. ஆனால் அவர்கள் வாழ்விலோ நம்பிக்கைகள் தகர்க்கப்படும் சம்பவங்கள் நிரம்பி வழிகின்றன. பார்வையாளன் அந்த வாசகத்தின் அபத்தத்தை எண்ணி வேதனையுடன் கூடிய மெல்லிய புன்னகை பூக்கிறான். ஒரு தேசம் அந்நிய சக்தியிடம் அகப்படக் காரணம் எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளும்கூட. அவர்களை அழிப்பது எதிரிகளை அழிப்பதைவிட பிரதானமானது என்னும் செய்தி நுட்பமாக வெளிப்பட்டுள்ளது. பாலஸ்தீனப் பிரச்சினையைக் கையாண்டாலும் படம் நகரும் விதத்தில் ஒரு திரில்லராகவே உள்ளது. ஆனால் அடர்த்தியான கேள்விகளை ஆழ் மனதில் உருவாக்குவதில் படம் தனித்தன்மையுடன் செயல்படுகிறது. இந்தக் காரணத்தாலேயே ஒமர் பிற படங்களிலிருந்து தனிப்பட்டு நிற்கிறது.

நண்பர் முரளியின் அடவி ஏப்ரல் 2015 இதழில் வெளியானது.

புதன், ஏப்ரல் 08, 2015

அதிக இருள் குறைந்த வசனம்

இயக்குநர் தனிதகரம் இயக்கும் படம் என்றால் வெகுளி வெள்ளைச்சாமிக்கு உயிர். அனைத்துப் படங்களின் பெயரையும் தமிழிலேயே வைப்பதால் அவர்மீது வெள்ளைக்குத் தனிப் பிரியம். அவரது நரியகன் படம் வந்தபோது வெள்ளை பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். அந்தப் படத்தைப் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டான். ஹாலிவுட்டில் வெளியான படத்தை அப்படியே எடுத்துவிட்டார் எனப் பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். அதைப் பார்த்த வெள்ளைக்குப் பத்திரிகைகள் மீது பயங்கர வெறுப்பு. ஓர் இயக்குநர் எவ்வளவு சிரமப்பட்டு ஒரு படத்தை இயக்குகிறார் இவர்கள் ஓர் அறையில் உட்கார்ந்து கொண்டு எளிதாக இப்படிக் கிண்டலடிக்கிறார்களே முட்டாள்கள் எனக் கோபம் கோபமாய் வரும். ஆனால் தனிதகரம் இதற்கெல்லாம் கோபப்படவே மாட்டார் போல. உண்மை அறிந்த ஞானி போல் தனி சார் இருப்பார் என வெள்ளைக்குத் தோன்றும். 

நரியகன் படத்தில் நடிகர் கம்மல் தமிழ் சாவுக்கு ஹாலிவுட் அழுகை அழுவார். அதைப் பார்க்கும்போதே கண்களில் நீர் கொட்டோ கொட்டென்று கொட்டும். “நாலு பேர் நாசமாப் போகனும்னா எதைச் செஞ்சாலும் சரிதான்” என்று வில்லன் பேசும் வசனம் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டது. அதன் பின்னர் அநேகப் படங்களில் அந்த வசனத்தைக் கிண்டல் செய்து நகைச்சுவைக் காட்சிகளில் பயன்படுத்திக்கொண்டார்கள். அந்த அளவுக்கு தீர்க்கதரிசன காட்சிகளை அமைப்பதில் தனிசாருக்கு நிகர் தனிசார்தான். நரிநாயகனை லூஸ்கர் பரிசு விழாவுக்கு அனுப்பினார்கள். ஆனால் அதைப் போலவே ஒரு ஹாலிவுட் படம் வெளியாகிவிட்டதால் நரிநாயகனுக்குப் பரிசு கிடைக்கவில்லை. ஆனால் அதன் பிறகு நடிகர் கம்மல் லூஸ்கர் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். 

ரோகினி நட்சத்திரம் இரண்டு புருஷர்கள் படம். கிருஷ்ணரின் நட்சத்திரமான ரோகினியில் பிறந்த கதாநாயகனின் அம்மா ரோகினிக்கு இரண்டு கணவர்கள். மூத்த கணவர் பிள்ளைக்குக் கிடைக்கும் மரியாதை இரண்டாவது கணவரின் பிள்ளைக்குக் கிடைக்காது. அதை வைத்து அட்டகாசமாகப் படம் பண்ணியிருப்பார். யாருடைய தாலி தனது கழுத்தில் இருக்க வேண்டும் என தன் மகன்கள் அடித்துக்கொள்வதைப் பார்க்க முடியாமல் இறுதியில் தாலியை அடகுக் கடையில் கொண்டு நிரந்தரமாகவைத்து விடுவார் ரோகினி. அந்தப் பணத்தில் இரு கணவருக்கும் இரு மகன்களுக்கும் ஆளுக்கொரு க்வாட்டர் வாங்கித் தந்து அருந்தச் சொல்வார். தமிழ்ச் சமூகத்தை ஒரு கலக்கு கலக்கியது அந்தப் படம். ஒரு மனைவிக்கு இரு கணவர்களா தமிழ்ச் சமூகத்துக்கு இழுக்கு என்று தமிழ்ப் பண்பாட்டாளர்கள் பொங்கி எழுந்தார்கள். அவர்கள் அனைவருமே இரண்டு மனைவிக்காரர்கள் என்று தனிசார் தனது உதவி இயக்குநர்களிடம் கிண்டலாகக் கூறினாராம். அதையும் பத்திரிகையில்தான் படித்தான் வெள்ளை. 

இலங்கைப் பிரச்சினையை வைத்து அவர் எடுத்த கடலில் தள்ளிவிட்டால் படம் வெள்ளைக்கு மிகவும் பிடித்த ஒன்று. இலங்கை கொடூரமான நாடு என்று எண்ணி வந்த வெள்ளையின் கண்களைக் கடலில் தள்ளிவிட்டால் படம்தான் திறந்தது. இலங்கை பசுமையான தேசம், சிங்களர்கள் கண்ணியமானவர்கள் என்பன போன்ற தனிதகரத்தின் சித்தரிப்புகள் அவர் எவ்வளவு பெரிய அறிவுஜீவி, ஞானி என்பதைக் காட்டியது. அந்தப் படத்தைப் பார்த்த பின்னர் எந்தக் காரணத்தைக் கொண்டும் யாரையும் தத்து எடுத்துவிடக் கூடாது என்னும் ஞானம் வெள்ளைக்கு ஏற்பட்டுவிட்டது. தத்து எடுப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை அவ்வளவு அழகாக அவர் படமாக்கியிருந்தார். 

குருடர் படத்தில் தமிழ் அரசியல் தலைவர்களின் அந்தரங்கப் பிரச்சினைகளைப் படமாக்கியிருந்தார். கொள்கைரீதியான விமர்சனங்கள் இல்லையே எனக் கேள்வி எழுந்தபோது எனக்கு என்ன வருமோ அதைத் தானே நான் எடுக்க முடியும் எனச் சொல்லி கேள்வி கேட்டவர்களின் வாயை அடைத்தார் தனிசார். துரு வீடுகளில் பழைய இரும்பு சாமான்களைப் பொறுக்கித் திரிந்த இளைஞர் நாட்டின் இரும்பு எஃகு தொழிலின் சக்கரவர்த்தியாக உயர்வதைக் காட்டியிருப்பார். அந்தப் படத்தில் வட இந்திய இளைஞர் நெல்லைத் தமிழ் பேசி வருவதைப் பார்க்கும்போதே மனக் கவலை எல்லாம் மறந்து அழகாகச் சிரிக்கலாம். அப்படி ஒரு கற்பனையை தனிசார் மட்டும்தான் தர முடியும். 

இப்போது அவரது ஆ சாதல் பொன்மொழி படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் வசனகர்த்தா இயக்குநர் தனிதகரத்திடம் அதிக சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் தனிதகரம் அவ்வளவு தர ஒப்புக்கொள்ளவில்லையாம். தனிசார் சொன்ன தொகைக்கு ஒரு பக்கம் வசனம் மட்டுமே எழுத முடியும் என்றார் வசனகர்த்தா. அது போதும் அதிலேயே பாதியைத் தான் பயன்படுத்துவேன் எனத் தடாலடியாகச் சொன்னாராம் தனிசார். ஏற்கனவே இட்லியைத் திருடாதே, கலைசாயுதே போன்ற படங்களில் எல்லாம் காதலைக் கண்ணாபின்னாவென்று காட்டியுள்ளார் என்பதால் இந்தப் படமும் சிறப்பாக இருக்கும் என்று வெள்ளைக்கு நம்பிக்கை இருக்கிறது.