பிழைப்பின் நிமித்தம் சென்னையில் வாழ்ந்த எழுத்தாளர்களின் மனங்களில் அவர்கள்
வாழ்ந்த, அவர்களைத் தன்னோடு இணைத்துக்கொண்ட நகரம் ஏற்படுத்திய நேர்மறை, எதிர்மறை
பாதிப்புகளைப் பகிர்ந்துகொண்ட கட்டுரைகளின் தொகுப்பு சென்னைக்கு வந்தேன். கடந்த
காலச் சென்னையைக் கண்முன் காட்டி நிகழ்காலச் சென்னையைப் புரிந்துகொள்ள உதவுவது
இந்நூல் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், பழ. அதியமான் “இந்தக் கட்டுரைகளை எழுதிய
படைப்பாளர்கள் காட்டும் சென்னை அநேகமாகப் பத்திரிகையாளர், எழுத்தாளர்களுடையதாக
இருக்கிறது” (பக்.15) எனக் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. சென்னையின் நுழைவாயிலில்
நின்றபடி கிட்டத்தட்ட அனைத்துக் கட்டுரைகளைக் குறித்தும் சென்னையின் இன்றைய
பிரச்சினைகள் குறித்தும் தமது பார்வையை மிகத் தெளிவாக விவரித்த பின்னரே வாசகனைச்
சென்னைக்குள் அழைத்துச் செல்கிறார் தொகுப்பாசிரியர். எனவே வாசகனுக்குக் கட்டுரைகள்
பற்றிய குறைந்தபட்ச அறிமுகம் கிடைத்துவிடுகிறது. கட்டுரைகளுக்குள் விரவிக் கிடக்கும்
தகவல்களும் அனுபவங்களும் சென்னையைவிட அங்கு வாழ்ந்த எழுத்தாளர்களது மனநிலைகளையே
பெரிதும் விவரித்துச் செல்கின்றன. “தொடர்ந்து நமது சினிமா கிராமத்தை உயர்வாகவும்
நகரத்தை மோசமானதாகவும் சித்தரித்துக்காட்டி வாழ்விட பேதாபேதத்தை நமது
பொதுப்புத்தியில் இறக்கிவிட்டது” (பக்.12) எனத் தன் உரையில் குறிப்பிட்டிருக்கும்
அதியமான், “இது சென்னை நகரத்தைப் பற்றிய நூல் என்றாலும் உண்மையில் கிராம
வாழ்க்கையைப் பற்றிய தீவிரமான சாதகப் பார்வையே இந்நூலின் அடி நீரோட்டம்” (பக்.16)
என்றும் குறிப்பிட்டுள்ளார். பொதுப்புத்தியோ சுயபுத்தியோ வகைக்குள்
அடங்காவிட்டாலும் கிராம வாழ்வை நோக்கியே தம் முள்ளைச் சரியவிடுகின்றன
இத்தொகுப்பின் பெரும்பான்மையான கட்டுரைகள்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்
எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை இன்றைக்கு வாசிக்கும்போது அன்றைய நிலையோடு இன்றைய
நிலையை ஒப்பிட்டுப் பார்ப்பது வாசகனின் இயல்பு. முப்பதுகளில் சென்னை வந்த சி. சு.
செல்லப்பா ஐம்பதுகளில் எழுதும்போது, முப்பதுகளில் பத்திரிகைகளும் வாசகர்களும் மிகச்
சொற்பமாக இருந்தபோதும் இலக்கியத் தீவிரம், அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும் ஆனால்
“இப்பொழுது பல மடங்கு வாசகப் புற உலகம் விரிந்திருப்பதற்குத் தக்க விகிதத்தில்,
எழுத்தாள அக உள்ளம் அந்த அழுத்தம் தீவிரம் காட்டவில்லை...” (பக். 25) என்றும்
எழுதியுள்ளார். இன்றைக்கு இணையதள வசதிகள் மலிந்திருக்கும் காரணத்தால் தம் வீட்டுக்
குப்பையைக்கூட அவற்றில் உலவவிட்டுவிடுகிறார்கள் எழுத்தாளர்கள். “போலிகள் மலிய மலிய,
ஜேம்ஸ் ஜாய்ஸ் சொன்ன மாதிரி, ‘இலக்கியத்திலே குடும்ப ஸ்திரீகளுக்கும்
விபசாரிகளுக்கும் உள்ள வித்தியாசம் குறையக் குறைய’ இலக்கிய நோக்கம் தடைப்பட்டுத்
தேங்குகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது” என்று க.நா.சு தன் கட்டுரையில்
(பக்.72) எழுதியுள்ளது காலகாலத்துக்குமான வாசகமே.
பக்கம் 33இல் வல்லிக்கண்ணன், “தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலரது உள்ளத்தில் உண்மை
ஒளி இல்லை, எண்ணத்தில் நல்லது இல்லை, என நாங்கள் உணர்ந்தோம். அவர்கள் எழுத்திலே
அழுத்தமில்லை, வாழ்விலே ‘சுரத்’ இல்லை என அறிந்தோம். எழுத்தாளர்கள் பெரும்பாலும்
சொல்வாணிபர்களாக மாறிவந்ததையும் தங்கள் எழுத்துக்களைத் தவிரப் பிறர் எழுத்தைப்
படித்து ரசிக்க மனமற்றவர்களாக வளர்வதையும் உணர்ந்தோம். பரஸ்பர முகஸ்துதிப்
பிரியர்கள் பெருத்து வந்ததை உணர்ந்தோம். பத்திரிகைக்காரர்களும் புத்தக
வெளியீட்டாரும் ‘பிஸினஸ் பிஸினஸ்’ என்ற மந்திரத்தை உச்சரிக்கக் கற்றுக்கொண்டார்கள்”
என்று எழுதியுள்ளதை வாசிக்கும்போதுதான் இதைத் தமிழ் வாசகர்கள் அதிலும்
எழுத்தாளர்கள்மீது ஆர்வங்கொண்டலையும் தொடக்கநிலை வாசகர்கள் படிக்க வேண்டியதன்
அவசியம் புரிகிறது. தமிழ் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் பற்றிய முக்கியமான
எழுத்தாளர் ஒருவரின் இக்கணிப்பு வாசகனின் மனத்தில் அவர்களைப் பற்றிய மதிப்பீட்டை
மறுபரிசீலனைசெய்ய வைக்கும் என்னும் வகையில் இக்கட்டுரை வாசகனின் மேல் வாஞ்சை
கொண்டுள்ளது.
இத்தொகுப்பின் மிக யதார்த்தமான கட்டுரையாக அமைந்துள்ளது கு. அழகிரிசாமியின்
கட்டுரை. “சென்னையில் இருக்கும்போது மூன்று வேளைச் சாப்பாட்டுக்கு ஆசை; மூன்று
வேளைச் சாப்பாடு கிடைக்கும் இடத்தில் இருக்கும்போது சென்னைமீது ஆசை” (பக்.49).
சென்னையின் சாதக பாதகங்களைக் கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் உள்ளதை உள்ளபடியே
சொல்லிச்சென்றுள்ளார் அழகிரிசாமி. அலைபாயும் நெஞ்சில் கலையார்வம் துளிர்ப்பதால்
லௌகீக வாழ்வில் உருவாகும் அதிர்வுகள் காரணமான மன உளைச்சலை உணர்த்தியுள்ளார் இவர்.
சாமி சிதம்பரனார் தனது கட்டுரையில், “எழுதும் திறமை மட்டும் இருந்தால் போதாது.
எதிலும் “நான் நான்” என்று முன்னே போகும் குணம் வேண்டும். அழைப்பு இருக்கிறதோ
இல்லையோ எந்தக் கூட்டத்திலும் விழுந்தடித்துச் சென்று தன்னை
விளம்பரப்படுத்திக்கொள்ள வேண்டும். பத்திரிகாசிரியர்களையும் பத்திரிகை
அதிபர்களையும் காக்காய்பிடிக்கும் குணம் வேண்டும்” என்று எழுத்துத் துறையிலே
முன்னேற விரும்புபவர்களை அறிவுறுத்தியுள்ளார். மூத்தோர் சொல்லும் முதிர்நெல்லியும்
முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்.
“நான் சென்னைக்கு வந்துதான் எழுத்தாளன் ஆனேன் என்பதாக என்னால் எண்ண முடியவில்லை.
ஆமாம், நான் எழுத்தாளனாகப் பிறந்தவன்!” (பக்.85) எனச் சுயமரியாதை தொனிக்கச்
சொல்லியுள்ளார் ஜெயகாந்தன். அதைப் படித்துக்கொண்டிருந்தபோது மனம் சில
பக்கங்களுக்குமுன் படித்த வரி ஒன்றை நினைத்துப் பார்த்தது. அவ்வரியில்,
“எழுத்தையும் எழுத்தாளர்களையும் வைத்து அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும்
ஒப்பிட்டுப் பார்த்தால் ருசிகரமாகத்தானிருக்கும்” (பக்.79) என ந. சிதம்பரசுப்ரமணியன்
குறிப்பிட்டுள்ளார். ருசிகரமாகத்தானிருக்கிறது.
அனைத்து தருக்கத்தையும் சுவடின்றி மறையவிட்டு வெளிப்படும் கனவுக் காட்சிபோல்
ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்வுரும் களம் நகரம்.
நொடிதோறும் தன் வண்ணத்தை மாற்றிக்கொள்ளும் மாய ஓவியம் போன்ற சிக்கல் மிகுந்த
நகர்ப்புறக் காட்சிகள் படைப்பாளியின் அகத்தில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தி
எழுதுவதற்குத் தேவையான உந்துதலைத் தருகின்றன. கிராமத்தில் எழுதுவதற்கு அடிப்படையான
அமைதிச்சூழல் அமைகிறது. ஆக இரு வாழ்விடங்களுமே ஒவ்வொரு வகையில் முக்கியமானதாகிறது.
பல்வேறு இடங்களிலிருந்து சென்னை வந்த எழுத்தாளர்களது எதிர்பார்ப்புகள்
பூர்த்தியான விகிதத்தைப் பொறுத்தே அவர்களது சென்னைக் காதலும் இருந்திருக்கக்கூடும்.
இத்தொகுப்பின் கட்டுரைகளை எழுதிய எவரும் சென்னையைப் பிறப்பிடமாகக் கொள்ளாதவர்கள்.
சென்னையிலேயே பிறந்து வளர்ந்த ஒருவரது கட்டுரைகூட இல்லாமல் எப்படிச் சென்னையை
முழுமையாகப் புரிந்துகொள்ள இயலும்? எனும் கேள்வி எழத்தான் செய்கிறது. ஆனாலும் நகர
வாழ்வு படைப்புக்கு வலுசேர்க்கிறதா அல்லது படைப்பாளிக்கு வலுசேர்க்கிறதா என்னும்
விவாதம் எழுப்பும் பாதையில் பயணப்பட்டுக் கிராம, நகர வாழ்வு குறித்த புரிதலுக்குத்
துணைபுரிவதால் இத்தொகுப்பு முக்கியமான ஒன்று. தங்களது குறைகளை நகரத்தின்மீது
உதறிவிட்டு அப்பழுக்கற்றவர்களாய்த் தங்களை நிறுவ முயலும் மனிதர்களின் மனம்
குறுகிக்கொண்டே போக, அது பற்றிய பிரக்ஞையற்று விரிந்துகொண்டே செல்கிறது நகரம்.
பக். : 136 விலை: ரூ. 95
முதற்பதிப்பு: ஆகஸ்ட் 2008
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் - 629 001
தொலைபேசி: 04652-278525/159
முதற்பதிப்பு: ஆகஸ்ட் 2008
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் - 629 001
தொலைபேசி: 04652-278525/159
காலச்சுவடு மே 2009 இதழில் வெளியான மதிப்புரை