இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், டிசம்பர் 30, 2014

பனிக்காலத்தில் ஒரு கூலிங் கிளாஸ்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் மிகச் சிறந்த திறமைசாலிகளில் ஒருவரான ரஸ்பின் பயங்கர உற்சாகத்தில் இருந்தார். சமீபத்தில் வெளியான அவருடைய கைக்காசு படம் சக்க போடு போடுது. அந்தப் படத்தின் ஒரிஜினலை அவர் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு ப்ளைட்ல போகும்போதுதான் பார்த்தார். செர்பியப் படமான அதை எப்படியும் தமிழில் பண்ணிரணும்னு அர்த்த ராத்திரியில் அவருக்குத் தோணுச்சு.

உடனே தன்னோட லேப்டாப்பத் திறந்து வச்சு, அந்தப் படத்த அப்படியே வரிக்கு வரி தமிழில் எழுதி அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தபோது தமிழ்ப் படத்தின் கதையை எழுதிமுடித்துவிட்டார். அவரது மனக் கண்ணில் படம் முடிந்தவுடன் போடும் எ ஃபில்ம் பை ரஸ்பின் என்னும் வாசகம் ஒளிர்ந்தது. ஒருமுறை உடலைச் சிலிர்த்துக்கொண்டார். கண்ணில் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியை லேசாக அசைத்துச் சரிசெய்தார்.

படம் தயாரிப்பதில் ஆர்வம் கொண்ட என்ஆர்ஐ சிலரை அமெரிக்காவில் பார்த்தார். சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு துடிச்சிட்டிருந்த அவங்களுக்கு அந்தப் படத்தின் கதை ரொம்பப் பிடிச்சிப் போச்சு. கடைசிக் காட்சியில் மனித உணர்வூட்டும் மாத்திரைகளை வில்லன்கள் வாயில் திணிக்கும் காட்சியைப் பட்டை தீட்டியிருந்தார்.

என்ஆர்ஐகள், ரஸ்பினைத் தலையில் தூக்கி வச்சுக்கிட்டு ஆடாத குறையாகக் கொண்டாடினாங்க. அதுல ஒருத்தர் ரஸ்பின்னின் முதல் படமான பைத்தியம் பிடிக்குதடி படத்தின் ஒவ்வொரு காட்சியையும் வசனத்துடன் ஒப்புச்சார். அவர் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலயே ரஸ்பின் குறட்டைவிடத் தொடங்கிவிட்டார். ஆனால் ஆர்வம் காரணமாக அந்த ரசிகர் விடிய விடிய கதையைச் சொல்லி முடித்தபின்னர் உறங்கிவிட்டார்.

ரஸ்பின் தனியா இருக்கும்போது தன்னோட பழைய வாழ்க்கையை யோசித்துப் பார்ப்பார். வெகுளி வெள்ளச்சாமின்னு அவர எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க. ஸ்கூலில் படிக்கும்போது ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் படிச்சு முடிச்சிட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்கன்னு கேட்டபோது, ஜெராக்ஸ் கடை வைக்கப்போறதா வெள்ள சொன்னான். கூடப் படிச்சவங்க எல்லோரும் மாடியில இருந்து கீழ விழுந்து சிரிச்சாங்க. ஏன் அப்படிச் சொன்னோம்னு வெள்ளைக்கே தெரியல. ஏனோ தோணுச்சு சொன்னான். அவ்வளவுதான். அவன் எப்போதுமே அப்படித்தான் எதையாவது கோக்குமாக்கா சொல்வான். கேட்பவங்க எல்லாரும் அதுல ஏதோ அர்த்தம் இருக்குதுன்னு நினைச்சுக்குவாங்க. படம் பண்ணும்போதும் அப்படித்தான் ஏன் எதுக்குன்னு தெரியாம இஷ்டத்துக்கு எதையாவது எடுப்பான் அதுல அந்தக் கூறு இருக்கு இதுல இந்தக் கூறு இருக்குன்னு விமர்சகர்கள் பிச்சி மேய்வாங்க. ஆனா ரஸ்பின்னுக்குத் தெரிஞ்சதெல்லாம் கத்தரிக்கா கூறுதான்.

அவர் எடுத்த தெருநாயும் கருங்கல்லும் படம் தமிழ்நாட்டில் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. அந்தப் படத்துக்கு எல்லா வேலையையும் அவர் பார்த்தார். போஸ்டர் ஒட்டினாரு, கவுண்டருல டிக்கெட் கொடுத்தார் இன்னும் என்னவெல்லாமோ பண்ணினாரு.

தெருநாய் மேல பாசம் வைத்து அதோட பிறந்தநாளை ஒரு கல்லறையில் கேக் வெட்டிக் கொண்டாடும் காட்சியில் அவருடைய நடிப்பைப் பார்த்து அந்த நாயே கண்ணீர்விட்டதெனப் பத்திரிகைகள் புகழ்ந்தன. சுமார் அரைமணி நேரம் தேம்பித் தேம்பி தனது கதையை அந்த நாயிடம் சொல்லுவார் ரஸ்பின். நாயையும் சக தோழனாக நினைத்து தோழமை காட்டும் மனித நேயமான காட்சிக்கு எல்லா தியேட்டர்களிலும் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது.

டைரக்டர் ஆகுறதுக்கு முன்னால, வெள்ளை ஒரு புத்தகக் கடையில் கொஞ்சநாள் வேலை பார்த்தார். அங்க உள்ள புத்தகங்களை எல்லாம் ஒண்ணுவிடாம தொடச்சி வைக்கணும், அதுதான் அவரோட வேலை. புத்தகங்கள் அவரை ரொம்ப கஷ்டப்படுத்தும். பெரிய பெரிய ரஷ்ய இலக்கியங்களால் அவருக்கு ஆஸ்துமாவே வந்துவிட்டது. அதைத் தான் அவர் முதலில் அவரைப் பேட்டி எடுத்த செய்தியாளரிடம் சொன்னார். ரஷ்ய இலக்கியங்கள் என்னைப் பாதித்தன என்னும் தலைப்பில் அவர் பேட்டியை பேப்பரில் போட்டார். அன்றிலிருந்து ரஸ்பின்னுக்குப் பெரிய அறிஞர் அந்தஸ்து கிடைத்துவிட்டது.

தன்னை வித்தியாசமா காட்டிக்கொள்ள என்ன பண்ணனுன்னு வெள்ளை யோசித்தார். அவரோட நண்பன் கொடுத்த ஐடியா கறுப்புக் கண்ணாடி போட்டுக்கோ தமிழ்நாட்டுல பெரிய ஆளுங்க எல்லாம் கறுப்புக் கண்ணாடி போட்டவங்கதான்னு உசுப்பேத்தினான். அன்றிலிருந்து ரஸ்பின் கறுப்புக் கண்ணாடியுடன் தான் எப்போதும் இருந்தார். உறங்கும் போதும், குளிக்கும்போதும் கூட அவர் அந்தக் கண்ணாடியைக் கழற்றுவதேயில்லை.

அதே போல் புரியாத மாதிரி எதையாவது சொல்லு. ஜனங்களுக்கு ஒன்னும் புரியாது ஆனா சூப்பராயிருக்குன்னு சொல்லிருவாங்கன்னான். உதாரணத்துக்கு நடிகர் டமால்ஹாசன் பேட்டி ரெண்டு மூண எடுத்துக் காண்பிச்சான். எல்லாமே ஒரே விஷயம்தான் ஆனால் எதுவுமே புரியாத மாதிரி கந்த கோலமா இருந்துச்சு. அதன் பின்னர் பேட்டிகளில் ரஸ்பின் பொளந்து கட்டுனார். 

தி இந்துவில் வெளியானது

திங்கள், டிசம்பர் 22, 2014

நீ எப்போதும் யங்கா?!

வெகுளி வெள்ளச்சாமிக்கு சந்தோஷமான வாரம் இது. அவனோட தலைவர் குஜினி காந்த் நடித்த யங்கா படம் ரிலீஸ் ஆகப் போகுது. பயங்கர உற்சாகமாயிட்டான் அவன். தலைவருக்கும் எழுபது வயது கிட்ட ஆயிருச்சு. ஆனாலும் இன்னும் டூயட், பஞ்ச் டயலாக்குன்னு சும்மா அதிரடியா களம் இறங்கியிருக்காரு. ஐந்தாறு வருஷத்துக்குப் பிறகு இப்போதுதான் குஜினி காந்த் நடிச்ச படம் வருதுங்கிறது அவனோட குதூகலத்துக்கு காரணம். ஸ்கூல் புக்குகளில் எல்லாம் உடல் மண்ணுக்கு உயிர் குஜினிக்கு என ஒவ்வொரு பக்கத்திலும் எழுதி வைப்பான். அவ்வளவு கிறுக்கு அவன்.
குஜினிகூட இந்தப் படத்துல நடிக்கிறது அவரோட பேத்தியின் க்ளாஸ் மேட். ஒருமுறை பேத்தியோட ஆண்டு விழாவுக்குப் போன குஜினிக்கு அந்தச் சிறுமியின் நடனம் ரொம்ப பிடிச்சுப்போச்சு. அப்பவே முடிவு பண்ணிட்டாரு அந்தப் பெண்ணோட ஒரு டூயட் பாடனும்னு. ஆனா அதுக்கு இப்பதான் நேரம் வாய்ச்சிருக்கு.

வயது அதிகமாயிட்டுதுன்னு ரசிகர்கள் ஏமாந்துறக் கூடாதுங்கிறதுல குஜினி உறுதியாயிருந்தார். அவரப் பொறுத்தவரை வெள்ளச்சாமி போன்ற ரசிகர்களின் சந்தோஷம்தான் முக்கியம். அதுக்காக எத்தனை படம் வேண்டுமானாலும் அவர் நடிப்பார். ரசிகர்கள் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை நல்ல விஷயங்களையும் தனது படங்களின் மூலம் கொடுப்பது தனது கடமை என அவர் நினைக்கிறார். சொத்தை எல்லாம் எழுதி வைப்பார், நீர்ப்பாசன வசதி செய்து கொடுப்பார். கல்வி நிறுவனங்கள் தொடங்குவார். இன்னும் என்னென்ன உண்டோ அதையெல்லாம் படங்களில் செய்துவிடுவார் குஜினி காந்த். வெள்ளைக்கு அதனால் அவர்மீது பயங்கர மரியாதை.

எல்லோரும் குத்துப்பாட்டு கும்மாங்குத்துன்னு படம் எடுப்பாங்க. ஆனால் குஜினி காந்தின் படத்தைக் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழலாம். ஆபாசமே இருக்காது. ஒருமுறை குஜினி காந்தின் மேக்கப் தவிர படத்தில் வேறு ஆபாசமே இல்லை என கோகோ படத்தின் விமர்சனத்தில் ஒரு நாளிதழ் தெரியாத்தனமாக எழுதிவிட்டது. அவ்வளவுதான் குஜினியின் ரசிகர்கள் பொங்கிவிட்டார்கள். அந்தப் பத்திரிகையின் பிரதிகளைக் கொளுத்தினார்கள். ஆனால் தனது அடுத்த படத்தின் விளம்பரங்கள் முழுவதையும் அந்தப் பத்திரிகைக்கே வழங்கினார் குஜினி காந்த். அந்த அளவு எதிரிகளையும் நேசிக்கும் இயல்பு கொண்டவர் அவர். அதனால்தான் வெள்ளை போன்ற ரசிகர்களின் மனதில் கடவுளாக வாழ்கிறார்.

யங்கா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய குஜினி, இவ்வளவு சின்ன வயதுப் பெண்ணோட டூயட் பாடும் தண்டனையைக் கடவுள் தனக்குத் தந்துவிட்டானே என்று வருந்தினார். வெள்ளை தன்னையும் அறியாமல் கண் கலங்கிட்டான். கடவுள் தனக்குப் பிடிக்காதவங்களுக்கு நிறைய பணம் கொடுத்து கஷ்டப்படுத்துவார். என்னைப் பாருங்க எனது பணத்தால எனக்குச் சந்தோஷமே இல்ல. நிம்மதிங்கிறதே போயிருச்சு. அடிக்கடி ஏதாவது சாமியாரைத் தேடி ஓடுகிறேன். இந்த நிலைமை என்னோட ரசிகர்களுக்கு வர விடமாட்டேன்.

அதனால அவங்க எல்லோரும் ஓட்டாண்டி ஆகுற வரைக்கும் நடிச்சுக்கிட்டே இருப்பேன். அதன் மூலம் எனக்குப் பணம் அதிகமாகச் சேர்ந்து நிம்மதி போகும். ஆனால் காசை எல்லாம் இழந்த என்னோட ரசிகர்கள் இமயமலை துறவிகள் போல வாழ்வின் மகிழ்ச்சியை அடைவார்கள் என்றும் பேசினார். இந்த அளவு தன்னோட ரசிகர்கள் மேல் உயிரா இருக்குற இன்னொரு நடிகர் பிறந்துதான் வரணும்னு வெள்ள நினைச்சான்.

இனிமே ‘யங்கா யங்கா நீ எப்போதும் யங்கா கிங்கா கிங்கா’ இங்க இன்னொருத்தன் கிங்கா... ங்கிற பாட்டு பொறந்த கதையை பாடலாசிரியர் தங்கதகரம் ‘சந்தோஷ ரொக்கம்’ பத்திரிகையில் விரிவாப் பேசியிருந்தாரு. சூரியனைப் பத்தி எழுதுறதுக்கு நட்சத்திரங்களிடையே சொற்களைத் தேடி இரவு முழுவதும் காத்திருந்தாகவும் பொழுது புலர்ந்த வேளையில் வார்த்தைகளும் வசப்பட்டதாகவும் அதற்கு குஜினியின் ஆன்மிக ஷக்தியே காரணம் என்றும் புளகாங்கிதம் அடைந்திருந்தார்.

இந்தப் படத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி மீடியாக்கள் ஏகப்பட்டதை எழுதித் தள்ளின. ஒரு புக் விடாம எல்லாத்தையும் வெள்ளை வாங்கிப் படிச்சான். தலைவரோட தோல் சுருக்கம் தெரியக் கூடாதுங்கிறதுக்காக ஸ்பெஷலா அமெரிக்காவுல இருந்து வரவழைச்ச அயர்ன் பாக்ஸ் மூலம் தோல் சுருக்கத்தை எல்லாம் நேர்த்தியாக்கியிருக்காங்க. கறுப்பு மயிர்களை எல்லாம் கனடாவிலிருந்து கொண்டுவந்திருக்காங்க. கடைவாயில் ஒரு பிளாட்டினப் பல் பொருத்தியதால் அது தெரியும்படி வாயை அகற்றி குஜினி சிரிக்கும் சிரிப்பு ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது. 

ஓபனிங் ஷோ டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய். ஆனால் எப்படியும் படத்தைப் பாத்திரணுங்கிறதுல வெள்ளை குறியாய் இருந்தான். கையில் காசில்லை. வீட்டில் அவசரத்துக்கு அடகு வைக்க தங்க நகைகூட இல்லையே என வருத்தம் வெள்ளைக்கு. அப்போது ரத்த தானம் தேவை என்ற எஸ்.எம்.எஸ். அவனுக்கு வந்தது. உடனடியாக ரத்தத்தைக் கொடுத்துப் பணத்தைத் தேற்றினான் வெள்ளை. டிக்கெட்டையும் வாங்கிவிட்டான். இரவு உறங்கியபோது வந்த கனவிலேயே படத்தைப் பார்த்துவிட்டான். ரசிகர்களுக்காக ரத்தம் சிந்தி உழைக்கும் தலைவன் படத்தை ரத்த தானம் செய்து பார்க்கப் போவதில் வெள்ளைக்கு அளவில்லாத சந்தோஷம்.

தி இந்துவில் வெளியானது

திங்கள், டிசம்பர் 15, 2014

அழகு நடிகை அஸ்குவின் அரசியல்

 

நடிகை அஸ்கு தேசியக் கட்சியில் சேர்ந்துட்டதா அரசல் புரசலாப் பேசிக்கிட்டாங்க. அப்ப வெகுளி வெள்ளச்சாமி சும்மா சொல்றாங்கன்னு விட்டுட்டான். ஏன்னா, ஏற்கனவே இப்படித்தான் நடிகர் பைக்தின் அந்தக் கட்சியில் சேர்ந்துட்டாருன்னு சொன்னாங்க. ஆனா அவர் ஞாபக மறதியில் தன்னோட கார அவர் கட்சி ஆபீஸுக்கு விடுறதுக்குப் பதிலா தேசியக் கட்சி ஆபீஸுக்கு விட்டுட்டாராம். இது தெரியாம அவரு கட்சியில சேர்ந்துட்டாருன்னு தலைவரு சொல்ல பெரிய பரபரப்பாயிருச்சு. 

யாருமே இல்லாத தெருவுலகூட எதாவது நடந்தா அத நியூஸாக்கிற மாட்டமான்னு துடிக்கிற பத்திரிகையாளர்கள் எப்பவும் குவிஞ்சிகிடப்பாங்களே. அவங்களுக்கு யாராவது தும்மிட்டா போதும் டெங்கு பரவும் அபாயம்னு தலைப்பையே யோசிக்க ஆரம்பிச்சு டைப்படிக்கத் தொடங்கிருவாங்களே. நடிகர் பைக்தின் மேட்டர விட்டுவைப்பாங்களா! இதெல்லாம் தெரிஞ்ச வெள்ளை, நடிகை அஸ்கு அந்தக் கட்சியில சேர்ந்திருக்க மாட்டாங்கன்னு நினைச்சான்.

ஆனா இப்ப பேப்பரிலேயே கொட்ட எழுத்துல போட்டுட்டாங்க. 1980-ல ஒரு படத்துல மட்டும் நடிச்ச நடிகை இப்ப என்ன பண்றாங்கங்கிற அளவுக்கு நியூஸத் துருவி துருவி தேடித் தேடி போடுற பத்திரிகைகள் இதுல பொய் சொல்லாதுன்னு வெகுளிக்குத் தோணுச்சு. அதனால நடிகை அஸ்கு கட்சியில சேர்ந்த விஷயம் உண்மையாத்தான் இருக்கும். அஸ்குன்னா உயிர் வெள்ளைக்கு. அஸ்கு படம் ஒன்னுவிடாம எல்லாத்தையும் தியேட்டருல போய் பாத்திருக்கான் வெள்ள. 

ஒருமுறை அவனோட தலைக்குழந்தை டைபாய்டுல துடிச்சிக்கிட்டிருந்த அன்னைக்குன்னு பார்த்து அஸ்கு நடிச்ச தந்தைமகள் படம் ரிலீஸாச்சு. வெள்ளயால படம் பார்க்காம இருக்க முடியல. நரம்பெல்லாம் விறுவிறுன்னு இருந்துச்சு. கூட ரெண்டு மாத்திரையைக் குழந்தைக்குக் குடுத்துட்டுப் படம் பார்க்கப் போயிட்டான். அந்த அளவு அவன் அஸ்கு மேல உயிரா இருக்குறான். 

ஏற்கனவே அஸ்கு மஞ்ச கட்சியில இருந்தாங்க. ஆனா அந்தக் கட்சியில ஏற்கனவே நிறைய தலைவர்கள் இருந்ததால அங்க இருந்தா எப்படி அஸ்கு மேல வர முடியும்னு வெள்ளைக்கு வருத்தமா இருந்துச்சு. ஆனாலும் அவங்க பிரச்சாரத்துக்கு வந்ததால மஞ்சக் கட்சிக்கே ஓட்டுப் போட்டான். அஸ்கு முதலமைச்சராயிட்டா எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்குவாங்க. நாடும் நல்லா இருக்கும்னு வெள்ளைக்குத் தோணுச்சு. இப்ப தேசிய கட்சிக்கு வந்ததால தமிழ்நாட்டுல அந்தக் கட்சி ஜெயிச்சா அஸ்குதான் முதல்வருன்னு நினைச்சு வெள்ளை குஷியாயிட்டான். அந்தக் கட்சியில் தேர்தலில் நிக்கிறதுக்கே ஆட்களை கூகுளில்தான் தேட வேண்டியதிருக்கும். தேர்தல் அறிவிச்ச உடனே வேட்பாளர் தேர்ந்தெடுக்குறதுக்குள்ளயே கட்சிக்கு தாவு தீர்ந்துரும். வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் நாள்களில் எல்லா கட்சி அலுவலகங்களும் ‘ஜே ஜே’ன்னு இருக்கும். தேசியக் கட்சித் தலைமை அலுவலகமோ எழவு வீடு மாதிரி வெறிச்சோடிக் கிடக்கும். எல்லாத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் கிடைச்சுட்டாலே போதும் மாபெரும் வெற்றிதான். அப்படிப்பட்ட ஒரு கட்சியில் அஸ்கு சேர்ந்ததால அவரு ஈஸியா தலைமைப் பொறுப்புக்கு வந்துரலாம்னு கணக்குப் போட்டான் வெள்ளை. 

தேசிய கட்சியின் கொள்கையான எளிமையை வாழ்க்கையில கடைப்பிடிக்கிறவர் நடிகை அஸ்கு. அவரு பச்சைக் கட்சி சார்ந்த ஒரு தொலைக்காட்சியில ஷோ ஒன்னு பண்ணினாரு. அதுல அவரு எவ்வளவு குறைந்த துணியால ரவிக்கை தைச்சுப் போட முடியுமோ அவ்வளவு குறைஞ்ச துணியால ரவிக்கை தைச்சுப் போட்டிருந்தாரு. இதுலயே இவ்வளவு சிக்கனம் காமிக்கிறவரு ஆட்சிக்கு வந்தா இருக்குற நிதியை வச்சு மக்களுக்குக் கண்டிப்பா நல்லது பண்ண முடியும்னு வெள்ளை நம்பினான். 

ஒரு பொருளாதார நிபுணருக்கு இருக்க வேண்டிய பண்பு இதுன்னு ஒரு அறிஞர்கூட சொன்னாரு. அதைக்கூட நடிகை அஸ்கு கத்துவச்சிருந்தார். ஆனா இதைப் புரிஞ்சிக்காம அவர விமர்சிக்கிறாங்களேன்னு வெள்ளைக்கு வருத்தமா இருக்கும். ஆனா அவரு எப்படி டிஸைன் டிஸைனா ரவிக்க போடுறாருன்னுப் பார்க்கவே நிறைய தாய்க்குலங்கள் அந்த ஷோவப் பாத்தாங்க. அந்த அளவுக்கு மக்கள் ரசனையைப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கும் அஸ்கு கண்டிப்பா அரசியலில் ஜெயிப்பார்னு வெள்ளைக்கு உள்ளூர ஒரு நம்பிக்கை. 

சோர்ந்து கிடக்கும் கட்சிய உசுப்பேத்துவேன்னு அஸ்கு அறிக்கை விட்டாரு. அதைக்கூட கிண்டல் பண்ணி இவரு என்ன லேகிய வைத்தியரான்னு எதிர்க் கட்சிக்காரங்க வாட்ஸ் அப்ல மெஸேஜ் பாஸ் பண்ணினாங்க. ஒரு பெண்மணியை எப்படி நடத்த வேண்டுங்கிற அடிப்படை நாகரிகம்கூட இல்லாதவங்களா இருக்காங்களேன்னு வெள்ளைக்குக் கஷ்டமாப்போச்சு. 

உண்மையில் தேசிய கட்சி தேர்தல் வெற்றிபெற ஒரே அஸ்திரம் அஸ்குதான். அதுல வெள்ளைக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஏன்னா, தேசியக் கட்சியின் முக்கிய பிரபலம் லாருக் எந்த மாநிலத்துக்குப் பிரச்சாரத்துக்குப் போனாலும் அந்த மாநிலத்தில் கட்சி அதலபாதாளத்துக்குப் போயிடுது. ஜெயிக்குற மாதிரி தெரியுற மாநிலங்களில்கூட அவர் போயிட்டா போதும் அப்படி ஒரு அலை அடிச்சு கட்சிய காணாமல் பண்ணிருது. இந்த நிலைமைல அஸ்கு போன்ற துணிச்சலான ஒருத்தரத் தவிர வேறு யாரால கட்சிய காப்பாற்ற முடியும்? காலம் பதில் சொல்லும்னு ஒரு வேதாந்தி மாதிரி சொல்லிகிட்டே திரியுறான் வெள்ள. 

தி இந்துவில் வெளியானது

திங்கள், டிசம்பர் 01, 2014

ருத்ரய்யா: அவர் ஓர் அத்தியாயம்

முப்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த, 27,000 அடிகள் நீளம் கொண்ட அந்தப் படத்தில் 39 காட்சிகளே இடம்பெற்றிருந்தன. ஆனால் அவை அனைத்தும் தனித்துவமான காட்சியமைப்பைக் கொண்டவை, முன்னுதாரணமற்றவை. 


 முதன்மைக் கதாபாத்திரங்களில் கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா ஆகிய மூவரும் நடித்திருந்த போதும் ஒளிப்பதிவாளர், இயக்குநர் எனப் படத்தின் பிரதான தொழில்நுட்பக் குழுவினர் அனைவருமே புதுமுகங்கள்.அந்தப் படக் குழுவினருக்குத் தொடர்ந்து படங்கள் கிடைத்திருந்தால் தமிழ் திரைப்பட வரலாற்றில் பெயர் சொல்லத்தக்கப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும். 

திரைப்பட ரசிகர்கள் அனைவரும் பார்த்திருக்கும் தமிழ்ப் படமாக 'அவள் அப்படித்தான்' (1978) இருக்கும். அது வெளியான காலத்தில் மட்டுமல்ல இப்போது பார்த்தாலும்கூட அப்படி ஒரு கதையைக் கையாளும் துணிச்சலோ பக்குவமோ சமூகப் பார்வையோ இப்போதைய இளம் தமிழ் இயக்குநர்களுக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே. 

படித்த, மத்திய தர வர்க்க இளைஞர்களுக்கும் சமூகத்திற்குமிடையேயான குழப்பமான உறவை, சமூகத்துடன் அவர்களுக்கு ஏற்படும் முரணை, ஆண் - பெண் உறவில் ஏற்படும் அகச் சிக்கலை கச்சிதமாகவும் நுட்பமாகவும் பேசிய படம் அது. பெண்ணியம், பெண் சுதந்திரம் போன்ற சிந்தனைகளை முன்னெடுத்த தமிழ்ப் படங்களில் முதன்மையான படமென அதைச் சுட்டலாம். 

திரைக்கதைகளுக்கான இலக்கணங்களாகத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வந்த மரபுகளை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டுப் படார் படாரென உண்மைகளைப் போட்டுடைக்கும் வசனங்கள், எண்ணிக்கையில் அதிகமான அண்மைக் காட்சிகள் எனத் புதிய காட்சிப்படுத்துதலைக் கொண்டிருந்த படம் அவள் அப்படித்தான். 



மத்திய தரப் பெண்களின் மனப் போராட்டத்தை, வாழ்வியல் சிக்கலைப் பாலசந்தர் அதிகமாகக் கையாண்டிருந்தாலும் சினிமாவின் அழகியல் கூறுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டால் ருத்ரய்யாவின் 'அவள் அப்படித்தான்' முன்னணிக்கு வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. நமது சமூகத்தின், உறவுகளின், ஊடகத்தின் போலித் தனங்களை எல்லாம் ஈவு இரக்கமின்றி உறித்துப் போட்ட துணிச்சல்காரர் அப்படத்தை இயக்கிய ருத்ரய்யா. 

சேலம் அருகே உள்ள ஆத்தூரைச் சேர்ந்தவர் அவர். சினிமா கனவுகள் அவரைத் தூங்கவிடாமல் துரத்தியதால் அவர், சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை இயக்கம் பிரிவில் சேர்ந்து படித்தார். படித்து முடித்த பின்னர் குமார் ஆர்ட்ஸ் என்னும் பெயரில் சினிமா நிறுவனத்தைத் தொடங்கினார். முதலில் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் என்னும் கதையைப் படமாக்க முடிவு செய்திருந்தார். நடிகர் கமல் ஹாசன் நடிப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. தன் கதையைப் படமாக்க தி. ஜானகிராமன் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் அப்படக் கனவு கலைந்துபோனது. 

அடுத்து ருத்ரய்யாவின் மனதைத் துளைத்தெடுத்த கதையே அவள் அப்படித்தான். அனந்துவின் சீரிய ஒத்துழைப்பில் எழுத்தாளர் வண்ணநிலவன், இயக்குநர் கே.ராஜேஷ்வர், ஒளிப்பதிவாளர் நல்லுசாமி, ஞானசேகரன் போன்றோரின் உதவியுடன் அப்படத்தை ருத்ரய்யா இயக்கினார். படமும் வெளியானது. ஆனால் பெரிய வரவேற்புக் கிடைக்கவில்லை. ஆனால் படம் வெளியான ஒருசில நாட்களின் இப்படத்தைப் பார்த்த புகழ்பெற்ற இயக்குநர் மிருணாள் சென் படத்தின் சிறப்பைப் பாராட்டிப் பேட்டி கொடுத்தார். அதன் பின்னர் படம் சொல்லிக்கொள்ளுமளவுக்கு ஓடியது. 


வசூலில் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் கூட இப்படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மறுக்க முடியாத படமாக நிலைபெற்றுவிட்டது என்பது இயக்குநர் ருத்ரய்யாவுக்குக் கிடைத்த உண்மையான வெற்றியே. 1980-ல் வெளியாகி பெரிய தோல்வியைச் சந்தித்த கிராமத்து அத்தியாயம் அவரது இரண்டாவது படமும் இறுதிப் படமுமானது. தமிழ்த் திரையில் ருத்ரய்யாவுக்குக் கிடைத்தது ஓர் அத்தியாயம் மட்டும்தான் என்பது கசப்பான உண்மை. ஆனால் அந்த ஓர் அத்தியாயத்தை ஒரு வரலாறாக மாற்றிய பெருமையுடன் அவர் 18.11.2014 அன்று மறைந்துவிட்டார். 

தி இந்து இணையதளத்தில் வெளியானது