இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், ஜூன் 30, 2014

உணவு தயாரிக்கும் 3டி பிரிண்டர்


குழந்தைகளுக்குச் சாப்பாடு தருவது என்பது தாய்மார்களின் சிரமமான வேலை. குழந்தைகளுக்குப் புதுப் புது வடிவங்கள், புதுப் புது வண்ணங்கள் ஆகியவை விருப்பத்துக்குரியதாக இருக்கின்றன. ஆனால் அவர்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்யும் அளவுக்குத் தாய்மார்களிடம் தொழில்நுட்பம் இல்லை. அதே உணவு வகைகள்; அதே வடிவம்; அதே நிறம்; அதே சுவை. இவை எல்லாம் குழந்தைகளை உணவை விட்டுத் தூரத்திற்கு விரட்டி விடுகிறது. அடுத்ததாக ஊட்டச் சத்துகளை எப்படிச் சரிவிகிதத்தில் கலந்து குழந்தைகளுக்குத் தருவது என்பது ஒரு சிக்கலே. இந்த இரண்டையும் களையும் விதத்தில் செயல்படுகிறது உணவுக்கான 3டி பிரிண்டர். இதெற்கெல்லாமா 3 டி பிரிண்டர் என்றுதான் தோன்றும். ஆனால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இதற்கும் கருவியைக் கொண்டு வந்துவிட்டது. 

அரிசியையும் உளுந்தையும் நன்கு அரைத்து புளிக்கவைத்து அவித்து சுடச்சுட மல்லிகைப் பூ இட்லி தயாரிக்கிறோம். 3டி பிரிண்டரில் மாவு ஊற்றிவிட்டால் அது இட்லியைத் தந்துவிடுமா? அதைத்தான் குக்கரே தந்துவிடுமே. அப்படியானால் 3 டி பிரிண்டரால் என்ன பயன்? அவசரப்படாதீங்க. பயன் இருக்கிறது. இட்லியை ஆண்டாண்டு காலமாக வெள்ளை நிறத்தில் வட்ட வடிவமாகவே பார்க்கச் சலிப்பாக இல்லையா? அதை மாற்றிவிடும் இந்த 3டி பிரிண்டர். விதவிதமான வடிவங்களில் வண்ணங்களில் இட்லி மாவை வடிவமைக்க இது உதவும். குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்பைடர்மேன் வடிவத்தில், சிவப்பு நிறத்தில் இட்லி வரவேண்டுமா? கவலையே இல்லை. தேவையான மாவில் வண்ணங்களைச் சேர்த்து 3டி பிரிண்டரில் இட்டு தேவையான வடிவத்தையும் உள்ளீடு செய்தால் போதும் நீங்கள் விரும்பிய வடிவத்தில் இட்லி தயார். ஆனால் அதை அப்படியே எடுத்துச் சாப்பிட முடியாது. ஏனெனில் இட்லியின் வடிவத்தையும் நிறத்தையும் தான் 3டி பிரிண்டர் உருவாக்கித் தரும். ஆனால் அதை அவிக்கும் வேலையை அது செய்யாது. அதை நாம்தான் செய்ய வேண்டும்.


இட்லி என்பது வெறும் உதாரணத்திற்குத் தான். அனைத்துவித உணவு வகைகளையும் இதில் உருவாக்கலாம் என்னவொன்று, எல்லாவற்றையும் பேஸ்ட் வடிவத்தில் மாற்றித்தான் பிரிண்டரின் கேப்சுயூல்களில் உள்ளீடு செய்ய வேண்டும். பெண்கள் தங்களை அழகுபடுத்த மெகந்தி கோன்களில் மெகந்தியை இட்டி கைகளையும் பாதங்களையும் வண்ண வண்ணமாக நுட்பமான உருவங்களால் மெருகேற்றிக் கொள்வது போல் உணவையும் கண்களைக் கவரும் வகையில் மாற்றிக்கொள்ள 3 டி பிரிண்டர் உதவும். பூப்போன்ற மிருதுவான இட்லி என்பதை உண்மையிலேயே பூப்போன்ற வடிவத்திலும் வண்ணத்திலும் பெறலாம் என்பது சுவையாகத்தானே இருக்கும். இவற்றை எல்லாம் கேட்க நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் பயன்படுத்த முடியுமா என்னும் சந்தேகம் எழத்தான் செய்யும். அந்தச் சந்தேகங்கள் எல்லாம் களையப்பட்டு எதிர்காலத்தில் எல்லோரது வீடுகளில் ஒரு 3 டி பிரிண்டர் இருக்கலாம். எல்லாம் சரி இதன் விலை என்ன? இப்போது 3,000 அமெரிக்க டாலர்.

கட்டுமானச் செங்கல்லை மாற்றலாமே


எவ்வளவு விலை கொடுத்தும் செங்கற்களையே வாங்கிப் பயன்படுத்திப் பழகிவிட்டோம். இதை விடுத்து மாற்றுச் செங்கற்களையும் பயன்படுத்த முயலலாம். மாற்றுச் செங்கற்களை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும்போது ஏன் பயன்படுத்த வேண்டும் என்னும் கேள்வி எழுவது இயல்பு. வழக்கமான செங்கற்களின் தயாரிப்பு காரணமாக வளமான நிலம் பாழ்படுகிறது, இதைத் தயாரிக்க அதிக ஆற்றலும் தேவைப்படுகிறது. இத்தைகய காரணங்களால் மாற்றுச் செங்கற்களை நாம் ஊக்குவிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. நம்மிடம் சில மாற்றுக் கட்டுமானப் பொருட்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தும்போது கொஞ்சம் கொஞ்சமாகச் செங்கற்களின் பயன்பாடு குறையும். செங்கல் உற்பத்தியாளர்களும் இந்த மாற்றுச் செங்கற்களைத் தயாரிக்க வேண்டும். இதன் மூலம் செங்கல் உற்பத்தியாளர்கள் உற்பத்தியையும் லாபத்தையும் மேம்படுத்த முடியும். இதனால் தொழிலாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

கான்கிரீட் சாலிட் ப்ளாக், கான்கிரீட் கேவிட்டி ப்ளாக், ப்ளை ஆஷ் செங்கல், சாய்ல் சிமெண்ட் ப்ளாக் ஆகியவை மாற்றுச் செங்கற்களாகப் பாவிக்கப்படுகின்றன. இத்தகைய மாற்று செங்கற்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பமும், இவற்றுக்கான மூலப் பொருட்களும் எளிதில் கிடைக்கக்கூடியதே. அனல் மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களிலிருந்தே இவற்றைத் தயாரிக்க முடியும்.  இந்த மாற்றுச் செங்கற்கள் சுற்றுச்சூழலுக்கும் கேடுவிளைவிக்காது. 

இத்தனை அனுகூலங்கள் இருப்பினும் அதிகமாக மாற்றுச் செங்கற்கள் பயன்படுத்தப்படாததன் காரணம் நமது மனநிலையே. மாற்றுச் செங்கல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே நாம் மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்த தயங்குகிறோம். இந்த மனநிலையைப் போக்க அரசு முயல வேண்டும். அரசுக் கட்டிடங்களின் கட்டுமானத்திற்கு மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்தலாம். மாற்றுச் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கலாம்.  

இதே போல் செங்கல் உற்பத்தியாளர்கள் ப்ளை ஆஷ் செங்கற்களை உற்பத்தி செய்ய முன்வரும்போது அவர்களுக்கும் மானியம் வழங்க ஏற்பாடு செய்யலாம். இத்தகைய நடவடிக்கைகள் ப்ளை ஆஷ் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும், அவர்களின் விற்பனை அதிகரிக்கவும் வாய்ப்பாக அமையும். ஏனெனில் ஏற்கனவே பில்டிங் ப்ளாக்ஸ் உருவாக்குவதில் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு முன் அனுபவமும் அவற்றை உருவாக்கத் தேவையான உள்கட்டமைப்பும் உள்ளன.  

செங்கல் தயாரிப்புத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாற்று தொழில்வாய்ப்பாகவும் இது அமையும். மழைக்காலங்களிலும் செங்கல் உற்பத்தி அதிகமாக இராத காலங்களில் மாற்றுச் செங்கள் உற்பத்தியில் அவர்கள் ஈடுபட இயலும். சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு விரைவில் அதிகரித்து செங்கல் உற்பத்திக்கு வளமிக்க விவசாய நிலத்தைப் பாழ்படுத்தக் கூடாது என்பது விதியாக அமலாக்கப்படலாம். அப்போது மாற்றுச் செங்கற்களே கைகொடுக்கக்கூடும். மேலும் செமி ஸ்கில்டு தொழிலாளர்கள் எனச் சொல்லப்படும் குறைந்த திறன் தொழிலாளர்களைக் கொண்டே மாற்றுச் செங்கற்களைத் தயாரிக்கலாம். இயந்திரமயமாக்கலை அறிமுகப்படுத்தி மாற்றுச் செங்கல் உற்பத்தியைக் கூட்டலாம். 

பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் கான்கிரீட் கேவிட்டி ப்ளாக்குகளும் கான்கிரீட் சாலிட் ப்ளாக்குகளும் அதிகமாகப் பயன்படுகின்றன. இத்தகைய பெரு நகரங்களில் செங்கற்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் கட்டுநர்கள் கான்கிரீட் ப்ளாக்குகளை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும் இத்தகு நகரங்களில் செங்கல் தயாரிக்கத் தேவைப்படும் தரமான களிமண் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணம். கல் குவாரிகளில் கிடைக்கும் கழிவான கற்களே கான்கிரீட் ப்ளாக்குகளின் தயாரிப்புக்குப் போதுமானவை. 

கட்டுமானத் துறையில் ஈடுபடும் பொறியாளர்களும் கட்டுநர்களும் ஆலோசகர்களும் மாற்றுச் செங்கற்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். ஏற்கனவே கான்கிரீட் ப்ளாக்குகளை காம்பவுண்ட் சுவர்களுக்கும், தற்காலிகக் கட்டிடங்களுக்கும் பயன்படுத்தும் போக்கு பரவலாக உள்ளது என்பதை இந்த இடத்தில் நினைவூட்ட வேண்டியுள்ளது. 

சில தொழிற்சாலைக் கட்டிடங்கலுக்கும் சிறிய அளவிலான கட்டிடங்களுக்கு இத்தகைய கான்கிரீட் ப்ளாக்குகளை உபயோகிக்கிறார்கள். ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் வணிக வளாகங்களின் கட்டுமானத்திலும் அதிக எடையைத் தாங்கும் தேவையில்லாத இடங்களில் கான்கிரீட் ப்ளாக்குகளின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டும். 

நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். ஏனெனில் இவை சுற்றுச்சூழலுக்கும் உகந்தவையாகவே உள்ளன. கட்டுமானச் செலவும் குறையும். வழக்கமான செங்கற்களாலான கட்டிடமே உறுதியானவை என்னும் பழமைவாத எண்ணத்திலிருந்து விடுபட்டு எங்கெல்லாம் மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்த இயலுமோ அங்கெல்லாம் அவற்றைப் பயன்படுத்தும் புதுமை எண்ணம் அனைவரிடம் உருவாக வேண்டும். அரசும் மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்துவதை ஊக்கவிக்க வரிச்சலுகைகள் போன்றவற்றை அறிமுகப்படுத்துவது நல்லது.

ஞாயிறு, ஜூன் 29, 2014

சர்வதேச சினிமா: சஸ்பெக்ட் எக்ஸ்

சஸ்பெக்ட் எக்ஸ் படத்தில் ஷினிச்சி சட்சூமி
கெய்கோ கிகாஷினோ (Keigo Higashino) என்னும் ஜப்பானிய எழுத்தாளரின் நாவலான ‘த டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்’ 2005-ல் வெளியானது. பெரிய வரவேற்பு பெற்ற இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு ஹிரோஷி நிஷிடானி என்னும் இயக்குநர் ‘சஸ்பெக்ட் எக்ஸ்’ என்ற ஜப்பானியத் திரைப்படத்தை உருவாக்கினார். இது 2008-ல் வெளிவந்தது. உலக நாடுகளில் இந்தப் படம் பெரிதாகக் கவனிக்கப்படாவிட்டாலும் ஜப்பானிய ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் அளித்த ஏகோபித்த வரவேற்பு காரணமாக அந்த ஆண்டின் வசூல் சாதனை படைத்த படங்களில் இதுவும் ஒன்றானது.

த பெர்பெக்ட் நம்பர்
தென் கொரிய இயக்குநர் பாங் யுன்ஜின் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளிவந்த ‘த பெர்பெக்ட் நம்பர்’ என்னும் திரைப்படமும் இதே நாவலை அடிப்படையாகக் கொண்டதே. கேரளாவில் சமீபத்தில் பெரிய வெற்றிபெற்ற ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் இதைத் தழுவியே எடுக்கப்பட்டிருந்தது. மூன்று படங்களில் முன்னணியில் நிற்பது ஜப்பானியப் படமே.

திருஷ்யம் படத்தில் ஒரு காட்சி
பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக இருக்கும் டெட்ஷியா இஷிகாமி சமூகத்தைப் புறக்கணித்துத் தனித்து வாழ்பவன்; கணித மேதை. வாழ்வில் கணிதம் தவிரப் பிறிதொன்றை நினைத்தே பார்க்காதவன். வாழ்வில் சலிப்பும் மனக்கசப்பும் கொண்டு திரியும் அவனது வாழ்வில் வருகிறாள் அவள். அவனது அனைத்துக் கவனங்களையும் ஒருசேர ஈர்த்துக்கொள்கிறாள் அவள். கணிதம் பரவிக் கிடந்த அவனுக்குள் காதல் வேர் விடுகிறது. அந்தக் காதலின் ஊடாகப் பயணப்படும் திரைக்கதையை ஒரு த்ரில்லராகப் படமாக்கியுள்ளார் இயக்குநர். காட்சிகளில் தென்படும் அடர்த்தியான இருளும் மெல்லிய ஒளியும் படத்தை மர்மமானதொரு தளத்திற்கு நகர்த்திவிடுகின்றன. தீவிர அக உணர்வு சார்ந்த இப்படத்தைத் திரைக்கதைக்குத் தோதாக வழக்கத்திலிருந்து மாறுபட்ட நிதானத்துடன் படமாக்கியிருக்கும் உத்தி படத்தின் செய் நேர்த்தியையும் நுட்பத்தையும் எளிதில் உணர்த்துகிறது.

சஸ்பெக்ட் எக்ஸ்

இஷிகாமியின் பிரியத்திற்குரியவளான யாசுகோ ஹனவோகா ஒரு ரெஸ்டாரண்டை நடத்திவருகிறாள்; விவாகரத்து பெற்றுத் தனியே தன் மகள் மிஸாடோவுடன் வாழ்கிறாள். ஆனால் அவளுக்குத் தொடர்ந்து தொல்லை தந்துகொண்டிருக்கிறான் அவள் கணவன். ஒரு கணத்தில் நேரும் அசம்பாவிதத்தால் அவள் கணவனைக் கொன்றுவிடுகிறாள். அவள் மாத்திரமல்ல அவளது பராமரிப்பில் இருக்கும் அவளுடைய மகளும் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டுவிடுகிறாள். இந்தக் கொலையைப் பார்த்துவிடுகிறான் இஷிகாமி. யாசுகோ ஹனவோகாவின் மீது கொண்ட அளவற்ற வாஞ்சையால் அவளையும் அவளது மகளையும் கொலைக் குற்றத்திலிருந்து விடுவிக்க விரும்புகிறான். அதற்காகத் தனது கணித மூளையைப் பயன்படுத்துகிறான். இந்தக் கொலைக்குற்றத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரிக்கு உதவ வருகிறான் இஷிகாமியின் கல்லூரி நண்பனான, இயற்பியல் பேராசிரியர் மானபு யுகாவா.

சஸ்பெக்ட் எக்ஸ்
அன்பு, நட்பு, காதல், பரிவு, துரோகம், கோபம், கழிவிரக்கம் ஆகிய மனித உணர்வுகள் சார்ந்த பயணத்தில் புத்தியும் அறிவும் குறுக்கிடுகின்றன. இதனால் அம்மனிதர்களுக்குள் ஏற்படும் உளவியல், வாழ்வியல் போராட்டங்கள் இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மிகைப்படுத்தப்படாத உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தியுள்ளார் இஷிகாமியாக நடித்திருக்கும் ஷினிச்சி சட்சூமி. அதிர்ந்து பேசாத குரல் தொனிக்க அவர் பேசும் விதம் அவருக்குள் உறைந்து கிடக்கும் தீவிர உணர்ச்சியைக் கண்களில் கசியவிட்டபடியே இருக்கிறது. கிட்டத்தட்டத் தன்னை மோப்பம் பிடித்துவிட்ட மானபு யுகாவாவுடன் பேசும் தருணத்திலும் யாசுகோ ஹனவோகா தன்னைவிட்டுப் பிரிந்துவிடுவாள் என்று கலக்கம் கொள்ளும் நிலையிலும் அவர் நிதானத்தைக் கைவிடுவதே இல்லை. 38 வயது கணித ஆசிரியர் வேடத்தை நுட்பமாகக் கையாண்டுள்ளார் ஷினிச்சி சட்சூமி.

சஸ்பெக்ட் எக்ஸ்
வழக்கமான பாதையில் அடிபிறழாமல் தினந்தோறும் நடைபெறும் அவரது வாழ்க்கைச் சம்பவத்தில் காணப்படும் அமைதி அடி நெஞ்சில் கலக்கத்தை உண்டு பண்ணிக்கொண்டேயிருக்கிறது. ஏதோ ஒரு துயரம் அவரது இதயத்தை எப்போதும் துளைத்துக் கொண்டே இருக்கிறது என்பதை உணர்த்திடும் விதமாக ஒலிக்கும் பின்னணியிசை சில இடங்களில் மௌனமாகிவிடுகிறது. அப்போதெல்லாம் துயரம் அதன் உச்சத்திற்குச் சென்றுவிடுகிறது. 

நான்கு வார்த்தைகள் தேவைப்படும் இடங்களில் கதாபாத்திரங்கள் இரண்டு வார்த்தைகளே பேசுகின்றன. வசனங்களும் ஷாட்களும் மிகச் சிக்கனமாகப் பயன் படுத்தப்பட்டுள்ளன. இதனால் படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் ஒவ்வொரு வசனமும் பார்வையாளரின் கவனத்தைக் கோருகின்றன. ஒரு த்ரில்லரை உணர்வுபூர்வ திரைப்படமாக்கியதில் ஒளிப்பதிவும் இசையும் குறிப்பிடத்தக்க விதத்தில் பங்களித்துள்ளன. 

இஷிகாமியும் மானபு யுகாவாவும் பனி பொழியும் மலைமீது ஏறிச் செல்லும் காட்சி படத்தின் அழகியலையும் செறிவையும் உயரத்திற்குக் கொண்டுசெல்கிறது. தனது காதலியைக் காப்பாற்றும் பொருட்டு காதலன் இஷிகாமி எடுக்கும் முடிவு மானபுவை மட்டுமல்ல பார்வையாளரையும் பரிதவிக்க வைத்துவிடுகிறது. தனது வாழ்வைப் பொருள்மிக்கதாக மாற்றியவளுக்காகத் தனது வாழ்வை ஒரு பொருட்டாக நினைக்காமல் இஷிகாமி மேற்கொள்ளும் முடிவு துக்கம் மேலிடச் செய்கிறது. படம் முடிந்த பின்னர் மனத்தில் சூல் கொள்ளும் இறுக்கம் சில புதிர்கள் அவிழ்க்கப்படாமலே இருந்திரக் கூடாதா என்னும் ஏக்கத்தை உருவாக்குகிறது.

திருஷ்யம்
ஜப்பானியப் படத்தை மூலமாகக் கொண்டாலும் திருஷ்யம் அதைக் கேரளச் சூழலுக்குத் தக்கவாறு மாற்றி அமைத்துக்கொண்டது. திருஷ்யத்தின் அடிப்படையென்று பார்த்தால் ஜப்பான் படமே. அதில் காதல்; இதில் குடும்ப பாசம். மோகன்லாலில் யதார்த்தமான நடிப்பும் மீனா உள்ளிட்ட குழுவினரின் ஒத்துழைப்பும் திருஷ்யத்தைக் கண்களிலேயே நிலைக்கச் செய்துவிட்டன. இந்தப் படத்தைத் தான் கமல் ஹாசனும் ரீமேக் செய்ய உள்ளார். அவரது அநியாய நடிப்பை நினைத்தால் கொஞ்சம் கலக்கமாகத்தான் உள்ளது.

தி இந்துவில் வெளியான கட்டுரையில் சில மாற்றங்களை மேற்கொண்டு பதிவிட்டுள்ளேன்.

புதன், ஜூன் 25, 2014

சமூக நீதி காத்த அரசியல் ஆளுமை

ஜூன் 25 - விஸ்வநாத் பிரதாப் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு தி இந்து வெற்றிக்கொடி பகுதியில் எழுதிய கட்டுரை. இது அரசியல் கட்டுரை அல்ல. மாணவர் பகுதிக்காக எழுதியது.

 
வி.பி. சிங் என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங் அலகாபாத் நகரில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ல் அரச குடும்பத்தில் பிறந்தார். பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்த மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தியதற்காக நன்றியுடன் நினைவுகூரப்படும் அரசியல் தலைவர் வி.பி.சிங். இவர் தனது பள்ளிப் படிப்பை அலகாபாத்தில் முடித்தார். பின்னர் பூனா பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்தார். 1969-ல் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் உத்தப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினரானார். 1971-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வென்று நாடாளுமன்றத்திற்குச் சென்றார். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வி.பி.சிங்கை வர்த்தகத் துறை இணை அமைச்சராக்கினார். 

மத்தியில் 1975 ஜூன் 25-ல் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு இந்தியாவில் நெருக்கடி நிலைச் சட்டத்தை அமல்படுத்தியது. இதை அடுத்து 1977-ல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப்போனது. மீண்டும் காங்கிரஸ் கட்சி 1980-ல் ஆட்சிக்கு வந்தது. அப்போது உத்தப் பிரதேச மாநிலத்தை ஜனதாவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியது, வி.பி. சிங் அம்மாநிலத்தின் முதலமைச்சராக்கப்பட்டார். 1982-வரை இந்தப் பொறுப்பில் அவர் இருந்தார். பின்னர் 1983-ல் மீண்டும் வர்த்தகத் துறை அமைச்சரானார். 

1984-ல் இந்திரா காந்தி மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது வி.பி. சிங் நிதியமைச்சராக்கப்பட்டார். அப்பதவியில் இருந்தபோது வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில் வியாபாரக் கொள்கைகளை மாற்றியமைத்தார். இந்த நடவடிக்கையால் வி.பி. சிங் பாராட்டுப் பெற்றார். அதன் பின்னர் 1987 ஜனவரியில் சிங் பாதுகாப்புத் துறை அமைச்சரானார். அந்தத் துறையில் நடந்த ஆயுதக் கொள்முதல் தொடர்பாக அவர் ஆய்வுசெய்தார். இதைத் தொடர்ந்து போபர்ஸ் பீரங்கி பேர ஒப்பந்தம் காரணமான நெருக்கடியால் அமைச்சரவையில் இருந்தும் கட்சியிலிருந்தும் வெளியேறினார். 

1988-ல் ஜனதா தளம் என்னும் கட்சியைத் தொடங்கினார். ஜன்மோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து ஜனதா தள் கட்சியை ஜெய்பிரகாஷ் நாராயணின் பிறந்த தினமான அக்டோபர் 11 அன்று ஆரம்பித்தார். அதன் மூலம் தேசிய அளவில் எதிர்க் கட்சிகளை ஒன்று திரட்டி தேசிய முன்னணி என்னும் கூட்டணியை ஏற்படுத்தி 1989 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டார். அந்தத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிபெற்றதால் அதன் தலைவரான வி.பி. சிங் இந்தியாவின் எட்டாம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் மத, சாதியவாதப் பிரச்சினைகளால் இவரது ஆட்சிமீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து 1990 நவம்பர் 7 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 

1991 ம் ஆண்டுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த வி.பி.சிங்கை நீண்ட காலமாகப் புற்றுநோய் துன்புறுத்திவந்தது. புற்றுநோயுடன் சிறுநீரகப் பிரச்சினையும் சேர்ந்துகொண்டதால் டெல்லி அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வி.பி.சிங் சிகிச்சை பலனின்றி 2008 நவம்பர் 27 அன்று காலமானார்.

ஞாயிறு, ஜூன் 22, 2014

கைவசமாகும் கனவு இல்லம்

சென்னையில் வாடகை வீட்டில் குடியிருக்கும் எல்லோருக்கும் சொந்த வீடு வாங்கிக் குடியேற வேண்டும் என்பது கனவே. மாதாந்திரச் சம்பளத்தில் கைக்கும் வாய்க்கும் சரியாக அமையும் வாழ்க்கையில் வீடு என்பது தொடர்ந்து வரும் கனவாக அமைந்துவிடுகிறது. கையில் இரண்டு லட்சம் புரட்ட முடியும் என்னும்போது வீட்டின் விலை நான்கைந்து லட்சங்களாக இருக்கும். கையில் நான்கைந்து லட்சங்கள் வந்துவிழும்போது வீட்டின் விலை பத்து இருபது லட்சங்களைத் தொட்டு நிற்கும். கழுதை கழுத்து கேரட்டாகவே வீடு விஷயமும் மாறிவிடுமோ என்னும் பரிதவிப்பு தொற்றும். 

எலி வளை என்றாலும் தனி வளை வேண்டும் என்னும் பழமொழி செல்லும் இடங்களில் எல்லாம் எதிரொலிக்கும். இப்போதெல்லாம் வீடு வாங்க வங்கிகள் கடன் வழங்கத்தான் செய்கின்றன. ஆனாலும் வீடு வாங்க இயலாமை தொடர்வது எதனால்? யோசித்தால் ஒரு சில காரணங்கள் தெரியவரும். ஓரிடத்தில் வசித்துப் பழகிவிட்டால் அங்கேயே வீடு வாங்க வேண்டும் என ஆசை கொள்வோம். ஆனால் அங்கு வீட்டின் விலை நாம் தொட முடியாத உயரத்தில் நிலைத்து நிற்கும். இல்லையெனில் நாம் தொடக்கூடிய விலைக்குள் அடங்கும் வீடுகள் நம்மை விட்டு தொலைவான இடத்தில் இருக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த இரண்டு காரணங்களால் தான் வீடு வாங்கும் ஆசை கைநழுவிக் கொண்டே இருக்கும். 

வழக்கமாக நாம் என்ன செய்கிறோம்? நமக்குக் கட்டுப்படியாகும் விலையில் வீடு  வரட்டும் வரட்டும் என்று காத்திருக்கிறோம். ஆனால் நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கும் ஒரு நாட்டில் இது சாத்தியமா? நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் இதற்கு ஒருபோதும் வாய்ப்பே இல்லை. நமது பொருளாதாரம் மேம்பட்ட பின்னர் வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்னும் நினைப்பில் முன்பைவிட ஓடி ஓடி உழைக்கிறோம். ஆனால் அந்த வேகத்தைவிட அதிகமாக வீட்டின் விலையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. உதாரணமாகப் பத்து லட்சம் மதிப்புள்ள வீடு நமது கனவு என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நம்மால் ஐந்து லட்சம் ரூபாய்தான் புரட்ட முடியும் என்னும் சூழலில் இன்னுமொரு ஐந்து வருடங்களில் பத்து லட்சம் புரட்டிவிடலாம் என்று நினைத்து வீடு வாங்குவதைத் தள்ளிப்போடுவோம். ஆனால் ஐந்து வருடங்கள் கழித்து அதே வீட்டின் விலை பத்து லட்சமாகவா இருக்கும்? அது இருபது இருபத்தைந்து என்று உயர்ந்திருக்கும். 

ஆக, வீடு வாங்குவது நமது கனவு எனில் தாமதம் அவசியமல்ல. நமது பட்ஜெட்டுக்கு ஏற்ற வீட்டை உடனே வாங்க வேண்டும். நாம் குடியிருக்கும் பகுதியிலேயே நமது பட்ஜெட்டுக்குத் தக்க சிறிய வீட்டைக் கூட வாங்கலாம். அல்லது சற்றுத் தொலைவில் என்றாலும் பரவாயில்லை நம்மிடம் உள்ள தொகைக்கேற்ற வீட்டை உடனடியாக வாங்க வேண்டும். கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடு என்றால்கூட வாங்கிவிடலாம் அது குடியேற தகுதி பெறும்வரை நமது செலவுகளைக் கொஞ்சம் சமாளித்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். நாளாக நாளாக வீட்டின் விலை உயர்ந்துகொண்டேயிருக்கும். ஒருபோதும் வீட்டின் விலை குறையப்போவதே இல்லை. கனவு இல்லத்தை மட்டுமே வாங்குவேன் என்று காத்திருக்காமல் வீடென்ற கனவை நனவாக்குவதே நல்லது.  

தீண்டாய் மெய் தீண்டாய்…

திரைப்படப் பாடல் என்பது நமது பால்யம் தொட்டே நம்மைத் தாலாட்டிவருகிறது. ஒரே பாடல் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு வகையான பொருள் தந்து  நம்மை மகிழ்வூட்டும். அப்படியான ஒரு பாடலை வேறொரு சந்தர்ப்பத்தில் எண்ணிப் பார்த்ததால் விளைந்த பதிவு இது. புது யுகம் தொலைக்காட்சிக்காக எழுதியது இது. 
வைரமுத்து
திரைப்படப் பாடல்: தீண்டாய் மெய் தீண்டாய்
திரைப்படம்: என் சுவாசக் காற்றே
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்பி பாலசுப்பிரமணியம், சித்ரா
இசை: .ஆர்.ரஹ்மான்
வெளியான ஆண்டு: 1999
ஒரு கன்னம் தந்தேன் முன்னே
மறு கன்னம் தந்தாய் பெண்ணே
இயேசு நாதர் காற்று வந்து வீசியதோ
வெள்ளிவீதியார் பாடிய கன்றும் உண்ணாது கலத்தினும் படாது என்னும் குறுந்தொகைப் செய்யுளுடன் தொடங்கும் இந்தப் பாடல் காதலனும் காதலியும் காதல் மயக்கம் கொண்டு பாடுவது போன்ற காட்சியமைப்பை கொண்டது. இதில் கையாண்டுள்ள இயேசு நாதர் காற்று வந்து வீசியதோ என்னும் உவமை இந்தப் பாடலைக் கவனிக்கச் செய்கிறது

பரிசுத்த வேதாகமப் புத்தகத்தில், மத்தேயு சுவிஷேசத்தில், 5 ஆம் அதிகாரம் 39 ஆம் வசனத்தில், ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு என்று இயேசு அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. தீமையை நன்மையால் தான் எதிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்திய வசனத்தைக் காதலுக்குரிய மனநிலையை வெளிப்படுத்த பாடலாசிரியர் வைரமுத்து கையாண்டுள்ளார்.

காதலிக்கு ஒரு கன்னத்தில் முத்தம் கொடுத்திருக்கிறான் காதலன். அந்த அன்பில் நெகிழ்ந்த காதலி மறு கன்னத்தைக் காட்டி நிற்கிறாள். எப்போதும் சிணுங்குபவள் மறு கன்னம் தருகிறாளே கிறிஸ்துவைப் படித்திருப்பாளோ என ஐயம் கொள்கிறான் காதலன். அதனால் இந்த உவமையைப் பயன்படுத்தியிருக்கலாம்.  

அடுத்த சரணத்தில், கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல உடலோடு ஒட்டிக்கொள்ளவோ எனக் கேட்கிறான் காதலன். தொடுவானம் கடலைத் தொட்டுநிற்கும் காட்சி காதலனுக்கு வானம் பூமியை முத்தமிட்டு நிற்பதாகத் தெரிகிறது. அவ்வளவு பரந்த முத்தத்தையே விலக்கிக்கொள்ள முடியவில்லையே வானத்திற்கு எனக் காதலன் பாடும்போது அவனது ஏக்கமும் ஆசையும் ஒருசேர வெளிப்படுகின்றன

முதல் சரணத்தில் முத்தம் என்னும் சொல்லையே காதலன் பயன்படுத்தியிருக்க மாட்டான். அடுத்த சரணத்தில் முத்தத்தை வெளிப்படையாகச் சொல்வான். இறுதியாகப் பாடல் முடியும் தருணத்தில் பனியோ பனியின் துளியோ உன் இதழ் மீது என்ன எனக் காதலன் கேட்கிறான், பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன எனக் காதலி காமுறுவதுடன் பாடல் முடிகிறது. காதலுக்கும் காமத்திற்குமான முறையான பயணத்தைத் தரமான சொற்களுடன் கையாண்டவிதத்தால் இந்தப் பாடல் மனசுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது