இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், ஜனவரி 21, 2014

மர்மமும் புதிரும் கொண்ட லடோகா ஏரி


ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரேய் ஜயஜிந்த்சேவ் இயக்கி 2003இல் ரஷ்யாவிலும் பிற உலக நாடுகளில் 2004இலும் வெளியான திரைப்படம் த ரிடர்ன். இது 2003ஆம் ஆண்டில் வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லைன் விருது பெற்றது. வாரத்தின் ஏழு நாட்களில் நடைபெறும் சம்பவங்களை உள்ளடக்கிப் புனையப்பட்ட இது இயக்குநரின் முதல் முழுநீளத் திரைப்படம்.  

ஆந்த்ரேய் ஜயஜிந்த்சேவ்
ரஷ்யப் படம் என்றாலும் இது அரசியல் படமல்ல. சாதாரண ரஷ்யக் குடும்பம் ஒன்றின் கதை. அம்மா, பாட்டியுடன் வசித்துவரும் இரு சிறுவர்கள். மூத்தவன் ஆந்த்ரேய், இளையவன் இவான். 12 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென ஒரு நாள் வீட்டிற்குத் திரும்பும் தந்தை, ஓடெட்ஸ். இவர்கள் தாம் படத்தை வழிநடத்தும் கதாபாத்திரங்கள். 

படத்தின் தொடக்கக் காட்சியில் நீருக்கடியில் மூழ்கிய படகொன்று காண்பிக்கப்படுகிறது. அப்போது பின்னணியில் ஒலிக்கும் இசை மனத்தின் தடித்த சுவரை ஏதோவொரு துயரத் தந்தி அறுக்கும் உணர்வை ஏற்படுத்தும். படம் நெடுகிலும் அந்த வேதனை பார்வையாளனைத் துரத்துகிறது. அதிலிருந்து அவன் தப்பிக்கவே இயலாது. படம் முடிந்த பின்னரும் உள்ளுக்குள் வழிந்து வழிந்து உறைந்துபோன குருதியை என்ன செய்யப்போகிறோம் என்பதை அவனால் சொல்ல முடியாது. அது பாரமாக மாறியிருக்கும். அந்தப் பாரம் அவனுக்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பும். படத்தின் காட்சிகள் அனைத்தும் நடந்து முடிந்த பின்னும் அவனது சிந்தையை ஏதோவொரு மர்மத் துடுப்பு அசைத்துக்கொண்டிருக்கும்.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. நண்பர்களுடன் ஆந்த்ரேயும் இவானும் மிக உயரமான ஒரு கோபுரத்திலிருந்து கீழே உள்ள நீர்நிலையில் குதித்து விளையாடத் தொடங்குகிறார்கள். அனைவரும் குதித்து முடித்த பின்னர் இவானின் முறை. ஆனால் அவனால் குதிக்க முடிவதில்லை. பயம் அவனை முற்றிலும் ஆட்கொண்டுள்ளது. நண்பர்கள் அனைவரும் கேலிசெய்துவிட்டு  அகன்றுவிடுகின்றனர். தனியே உயரமான கோபுரத்திலேயே அவன் விடப்பட்ட நிலையில் அவனைத் தேடி அவனுடைய அம்மா மேட் அங்கே வருகிறாள். இவான் தேம்பித் தேம்பி அழுகிறான். தனது இயலாமை குறித்த தாங்க முடியாத வருத்தம் அவனுக்கு. தான் உயரத்திலிருந்து குதிக்க இயலாததை அறிந்தால் நண்பர்கள் தன்னைக் கிண்டல்செய்வார்களே எனப் பதறுகிறான். தான் யாரிடம் அதைச் சொல்லமாட்டேன் என அவன் தாய் அவனைத் தேற்றி அழைத்துவருகிறாள். 


அடுத்து, திங்கள்கிழமை. நண்பர்களோடு ஆந்த்ரேய் விளையாடும் இடத்திற்கு இவான் வருகிறான். அனைவரும் அவனைக் கோழை எனத் தூற்றுகின்றனர். ஆந்த்ரேயும் அதே வார்த்தையைச் சொல்கிறான். இவான் வருத்தம் மேலிட ஆந்த்ரேயுடன் சண்டையிடுகிறான். இருவரும் தாயிடம் புகார் சொல்ல ஓடிவருகிறார்கள். வீட்டின் வெளியே தாய் சாவதானமாகப் புகைபிடித்துக்கொண்டிருக்கிறாள். ஆற்றாமையோடு தன் தரப்பு நியாயத்தை இவான் உரக்கச் சொல்லத் தொடங்குகிறான். அவன் தாய் அவனது தந்தை உறங்குவதாகச் சொல்லி அவனை ஒன்றும் பேசவிடாமல் செய்கிறாள். தந்தை வந்ததாக அவள் தெரிவித்த செய்தி அவர்கள் இருவரையும் பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறார் தந்தை. ஓடிச் சென்று பார்க்கிறார்கள். அவர் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறார். அவருடைய புகைப்படம் ஒன்றைத் தேடி எடுக்கிறான் இவான். அவர்தான் தந்தை என ஆந்த்ரேய் உறுதிப்படுத்துகிறான். உணவு மேசையில் தந்தை, தாய், பாட்டி ஆகியோருடன் இருவரும் உணவருந்துகின்றனர். மறுநாள் அவர்களை மீன்பிடிக்க அழைத்துப்போவதாகத் தந்தை சொல்கிறார். இருவருக்கும் மகிழ்ச்சி. வழக்கமான எந்தச் சுவடும் தென்படாதவாறு படமாக்கப்பட்டிருக்கும் அந்த உணவுமேசைக் காட்சி இறுக்கமான அமானுஷ்ய சூழலைப் பிரதிபலிக்கும்.

செவ்வாய்க்கிழமை. மூவரும் மீன்பிடிக்கக் காரில் புறப்படுகின்றனர். வழியில்  எதிர்கொள்ளும் சம்பவங்களை அவர்கள் சமாளிக்கும் முறையும் சிறுவர்கள் கற்றுக்கொள்ளும் பாடமும்தான் படத்தின் உயிர்நாடி.

மீன்பிடித்தலில் மகிழ்ச்சிகொண்டு மறுநாளையும் அங்கேயே கழிக்க விரும்பும் இவானைக் கட்டாயப்படுத்தித் தீவைப் பார்க்க தந்தை அழைத்துச் செல்கிறார். அவன் புலம்பிக்கொண்டே வருகிறான். பாதி வழியில் அவனைக் காரிலிருந்து அவர் இறக்கிவிட்டுவிடுகிறார். ஆந்த்ரேயும் தந்தையும் சென்றுவிடுகின்றனர். ஒரு பாலத்தின் மீது தனியே நீண்ட நேரம் இவான் காத்திருக்கிறான். கொட்டும் மழையில் முழுக்க முழுக்க அவன் நனைந்துவிடுகிறான். மறுபடியும் தந்தை வந்து அவனை அழைத்துச் செல்கிறார். இவான் அவரிடம் சண்டையிடுகிறான். தீவுக்குச் செல்லும் வழியில் இயந்திரக் கோளாறு காரணமாகப் படகு பாதியில் நின்றுவிடுகிறது. மகன்களைத் துடுப்பு வலிக்கச் சொல்கிறார் தந்தை. இவானுக்கு அவர்மீது கோபம். பலம் கொண்ட அவர் துடுப்பு வலிக்கலாமே என்னும் எண்ணம் அவனுக்கு. ஆனால் அவர் செய்பவராக இல்லாமல் செய்யவைப்பராகவே உள்ளார் என்பதும் படகு மிதப்பதைச் சமன்படுத்த அவர் ஓரிடத்தில் அமர்ந்து கட்டளையிடுவது மட்டுமே சாத்தியம் என்பதும் பார்வையாளனால் உணர முடியும் விஷயங்கள். 

 தீவில் மீன்பிடிப்பதற்காகத் தூண்டிலில் மாட்ட புழு சேகரிக்க ஆந்த்ரேயும் இவானும் செல்கின்றனர். அந்த நேரத்தில் தந்தை ஏதோ ஒரு குழியைத் தோண்டி அதிலிருந்து புதையல் ஒன்றை எடுத்துப் படகில் பத்திரப்படுத்துகிறார்.


 புழுவைச் சேகரிக்கும் இருவரும் கடலுக்குள் சற்றுத் தூரம் சென்று மீன்பிடித்துவர முடிவுசெய்து கிளம்புகின்றனர். தந்தையிடம்  அனுமதி கேட்க வேண்டும் என்கிறான் ஆந்த்ரேய். அதில் இவானுக்கு எரிச்சல். வேண்டாம் எனச் சொல்லிவிடுகிறான். இருவரும் கிளம்பும்போது தந்தை  பார்த்துவிடுகிறார். அவர்களிடம் தனது கடிகாரத்தைத் தந்து 3 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்றும் தனது கண் பார்வையிலேயே இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துக் கடலுக்குள் அனுப்புகிறார். கரையிலிருந்து படகின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதை நீக்குவதில் மும்முரமாகிவிடுகிறார்.


இருவரும் நீண்ட தூரம் சென்றுவிட்டு 7 மணிக்குக் கடலிலிருந்து திரும்புகின்றனர். அவரது இரண்டு எச்சரிக்கைகளையும் அவர்கள் சட்டைசெய்யவில்லை. கோபத்துடன் தந்தை தட்டிக்கேட்கிறார். ஆந்த்ரேயை அடிக்கிறார். அவனும் அவரைத் திட்டுகிறான். இவான் தந்தையைக் கொன்றுவிடுவதாகக் கோபத்தில் மிரட்டுகிறான். அவர்மீது தங்களால் அன்பு செலுத்த முடியவில்லை என்றும் அவர் மிருகத்தனமாக நடந்துகொள்வதாகவும் தெரிவித்து அவரைவிட்டு ஓடுகிறான். இவானைத் தடுத்துநிறுத்த தந்தையும் ஓடுகிறார். கோபுரம் ஒன்றின் மீதிருந்து தீவைப் பார்க்க முதலில் அவர் அழைத்தபோது மறுத்த அதே உயரமான கோபுரத்தில் விறுவிறுவென ஏறிவிடுகிறான் இவான். பின்தொடர்ந்துவந்த தந்தை அவனைக் கீழே இறங்கச் சொல்லிக் கெஞ்சுகிறார். கதவை மூடிக்கொண்ட அவன் கீழே குதித்துவிடுவதாக மிரட்டுகிறான். இவான் கோபுரத்தின் விளிம்புக்குச் செல்கிறான். தந்தை அவனைத் தடுத்துநிறுத்த முயல்கிறார். முயற்சி பலனளிக்கவில்லை எதிர்பாராத ஒரு தருணத்தில் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுகிறது. அவர் தவறி விழுந்து இறந்துவிடுகிறார். சிறுவர்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்துபோகின்றனர். இப்போது அவர்கள் இருவரும் அவரைக் கரைக்கு எடுத்துவர நேர்கிறது. சிறுவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிஜமான நெருக்கடி இது. 


அந்த நெருக்கடியை அவர்கள் இருவரும் சமாளிக்கிறார்கள். தந்தையின் பாடங்கள் அவர்களுக்குப் பயனளிக்கத் தொடங்குகின்றன. முன்பொரு முறை காரின் சக்கரம் சகதியில் மாட்டிக்கொண்டபோது, சக்கரத்தின் அடியில் பள்ளம் தோண்டி மரத்தின் கிளைகளை முறித்துப் போடு எனத் தந்தை கூறும்போது, ஆந்த்ரேய் “எப்படி” எனக் கேட்பான் ‘உனது பிஞ்சுக் கைகளால்’ என அவர் பதிலளிப்பார். இப்போது தந்தையின் சடலத்தை எப்படி எடுத்துச்செல்வது என இவான் கேட்கிறான் ‘நமது பிஞ்சுக்கைகளால்’ எனப் பதிலளிக்கிறான் ஆந்த்ரேய். தந்தையின் இடத்துக்கு அவன் வந்து நிற்பதை உணர்கிறான் பார்வையாளன்.  


இறுதியாகச் சனிக்கிழமை. சடலத்தைப் படகில் ஏற்றிக் கரைக்கு வந்த பின்னர் படகிலிருந்த பொருள்களை எல்லாம் காரில் ஏற்றிவிட்டு இருவரும் சற்றுக் கண்ணயர்ந்துவிடுகிறார்கள். 


அதற்குள் ஒரு விபரீதம் நடந்துவிடுகிறது. படகைக் கரையில் கழியில் கட்ட மறந்துவிடுவதால் அது நீரில் இழுத்துக்கொண்டு போய்விடுகிறது. தந்தையின் சடலம் அவர்களது கண்ணெதிரில் கைநழுவிக்கொண்டிருக்கிறது. ‘அப்பா’ என அலறியபடி இவான் ஆந்த்ரேயை முந்திக்கொண்டு ஓடுகிறான். தந்தையை அவன் பழுதற நம்புகிறான் என்பதன் சான்று அந்த ஓட்டம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகப் படகு தந்தை பத்திரப்படுத்திய புதையலுடன் நீருக்குள் மூழ்கிவிடுகிறது. 


பின்னர் காருக்குத் திரும்பும்போது, காரில், ஆந்த்ரேய், இவான் அவர்களுடைய அம்மா மூவரும் இருக்கும் புகைப்படத்தை அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்ததைப் பார்க்கிறார்கள். இப்போது அவர்களுக்குத் தந்தையின் அன்பு விளங்குகிறது. நெருக்கடியை இனி இவர்களால் சமாளித்துவிட முடியும். இனிமேல் தந்தையின் துணை தேவையில்லை. அவர் வந்த வேலை இனிதே நிறைவுபெற்றுவிட்டது.


உணவு விடுதியில் பணியாளரை அழைப்பது, குளிர்காய்ந்து முடித்த பின்னர் மறக்காமல் நெருப்பை அணைப்பது, சேற்றில் சிக்கிக்கொண்ட காரை அதிலிருந்து மீட்பது, நடுவழியில் இயந்திரப் படகின் மோட்டார் பழுதடைந்ததால் துடுப்பு கொண்டு அதைக் கரைசேர்ப்பது எனச் சின்னச் சின்ன விஷயங்கள் முதல் நெருக்கடியான நிலைமையைச் சமாளிப்பதுவரை அவர் தன் மகன்களுக்கு அனைத்தையும் சொல்லித்தருகிறார். ஆனால் அன்பு மிக்கத் தந்தையாக அல்ல. ராணுவத் தளபதியின் கண்டிப்புடன். அன்பை அவர் வெளிப்படுத்துவதில்லை. ஆனால் அவரது அத்தனை நடவடிக்கைகளின் பின்னும் அன்புதான் உள்ளது என்பது தொடக்கத்திலிருந்தே இவானுக்குப் புரியவில்லை. அவன் புரிந்துகொண்டபோது ஓடெட்ஸ் இல்லை.


ஆந்த்ரேய் தந்தையை நம்புகிறான். பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் வந்திருக்கும் தந்தைமீது ஆந்த்ரேய் எவ்விதக் கேள்விகளுமற்று அன்பு செலுத்துகிறான். அவனால் அவரிடம் எளிதாக ஒட்டிக்கொள்ள முடிகிறது. ஆனால் இவானால் அது முடியவில்லை. இவானுக்கு அவர் தன் தந்தையா என்பதில் தொடக்கத்திலிருந்தே சந்தேகம். அவனது ஒவ்வொரு அசைவிலும் அது வெளிப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் அவன் அவரை அப்பா என்று அழைப்பதையே தவிர்க்கிறான். அவராக வற்புறுத்தித்தான் அவனை அப்பா என அழைக்கவைக்கிறார்.  நடுத்தர வயது தந்தை காரில் இருந்துகொண்டு சாலையில் செல்லும் பெண்ணின் பிருஷ்டத்தைக் கண்ணாடி வழியே காண்பதையும் கூர்ந்து கவனிக்கிறான்.  தகப்பன் குறித்த  தனது சந்தேகத்தை உறுதிப்படுத்தும் சான்றுகள் வெளிப்பட்டுவிடாதா என்று கண்கொத்திப்பாம்பாய் அவரைக் கண்காணிக்கிறான்.

தந்தை மிகக் கறாரானவர். சிரிப்பது பேசுவது என ஒவ்வொரு விஷயத்திலும் சிறிதும் அவர் எல்லை மீறுவதுமில்லை; குழந்தைகளையும் மீற அனுமதிப்பதில்லை. தன் மகன் கூறும் ஒரு நகைச்சுவைத் துணுக்கைக் கேட்டுச் சற்று மலர்ச்சியுடன் அகலச் சிரிப்பை உதிர்க்கிறார். அந்த ஒரு காட்சியில் மட்டும்தான் அவர் சற்றே வெளிப்படையான புன்னகையை உதிர்க்கிறார். மற்றபடி படம் முழுவதும் ராணுவக் கண்டிப்பு இயல்பாகப் புழங்கும் மனிதராகவே அவர் வலம்வருகிறார். உற்சாகத்துடன் ஆந்த்ரேய் அடுத்த ஜோக்கை நோக்கி நகர எத்தனிக்கையில் சட்டென அதைக் கத்தரித்துவிடுகிறார். குளிர் தெரியாதிருக்க மதுவைக் கொஞ்சம் பிள்ளைகளுக்குத் தருகிறார். மறுக்கும் இவானுக்குக் கட்டாயத்துடன் புகட்டுகிறார். ஆனால் எதையும் வரம்புமீறாமல் பார்த்துக்கொள்வதில் தனிக்கவனத்துடன் இருக்கிறார். 


தந்தை குறித்துப் படத்தில் அதிகமான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. அத்தனை ஆண்டுகள் அவர் எங்கேயிருந்தார், என்ன செய்தார் என்பதற்குத் தெளிவான காட்சிபூர்வ விவரணைகளோ வசனங்களோ இல்லை. அவர் பைலட்டாக இருந்தார் என்பதும் அதிகமாக மீன் உண்டார் என்பதும் அதனால் தற்போது அவர் மீனே உண்ணுவதில்லை என்பதும்தாம் பார்வையாளன் அறிந்துகொள்ளக்கூடிய விஷயங்களாக உள்ளன. தந்தை குறித்த மர்மத்தை இயக்குநர் விருப்பத்துடன் தான் செய்திருக்க வேண்டும். ஏனெனில் நுட்பமான பல உணர்வுகளைக் காட்சிப்படுத்தியவருக்கு மேலதிக விவரங்களைத் தருவது கடினமாக இருந்திருக்காது.

 கதாபாத்திரங்களிடையே எழும் உணர்ச்சிப் பிரவாகங்களைச் சிறிதும் வீணாக்காமல் அப்படியே பார்வையாளனின் மனத்தில் நேரடியாகக் கொண்டுசேர்த்ததுதான் இயக்குநரின் பலம். மனத்தின் அடையாளம் காண முடியாத ஆழத்தில் வேதனையை உருவாக்கும் காட்சிகளை எளிதில் கடந்துசெல்வது சாத்தியமல்ல.


மிகச் சில கதாபாத்திரங்களே படத்தில் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டமான இசையோ ஒளி வெள்ளம் பெருகிய காட்சிகளோ இல்லை. மிகச் சுருக்கமான உரையாடல்கள்தாம் பாத்திரங்களுக்கிடையே நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் கையாளப்பட்டுள்ள பின்னணி இசை, காட்சியைத் துலக்கமாக்கும் வெளிச்சம் - ஒருசில துண்டுக்காட்சிகளில் இருட்டு, கதாபாத்திரங்கள் சட்டகத்தை ஆக்கிரமித்த விதம், சட்டகத்துக்குள் அஃறிணைப் பொருள்கள் அடங்கியிருக்கும் பாங்கு ஆகியவற்றை உள்ளடக்கிய காட்சிக் கலவையின் பின்னணியில் இயக்குநரிடம் வெளிப்பட்டிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு திரைப்படத்திற்கும் பார்வையாளனுக்கும் இடையே நெருக்கத்தை உருவாக்குகிறது. கதாபாத்திரங்களின் மனநிலையைப் பார்வையாளனின் மனநிலையோடு சற்றும் பிசிறறப் பொருத்துவதில் இயக்குநரின் ஆளுமை வெளிப்படுகிறது. தந்தையாக நடித்துள்ள கான்ஸ்தந்தின் லவ்ரோனென்கோ,  இவான் கதாபாத்திரமேற்றுள்ள இவான் தோப்ரோன்ரவாவ் இருவரும் வெளிப்படுத்தியுள்ள பாத்திர உணர்வுகள் படத்தைச் செறிவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. காட்சிகளை மாறுபட்ட விதத்தில் படமாக்க இசையும் ஒளிப்பதிவும் முழுக்க முழுக்க உதவியுள்ளன. இல்லையெனில் இப்படிப்பட்ட பரிபூரணத் திரைப்படம் சாத்தியப்பட்டிருக்காது.  


கடும் பிரயத்தனத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் இது என்பதை எளிதாக உணர்ந்துகொள்ளலாம். ஒரு வாரத்திற்குள் அடுக்கடுக்கான இது போன்ற சம்பவங்கள் தனி மனித வாழ்வில் நடந்தேறுவது சாத்தியமில்லாதது. ஆழ்ந்து யோசித்தால் தத்துவார்த்த சாயை படத்தின் பெரும்பாலான பரப்பை ஆக்கிரமித்துள்ளது. கிறித்தவ மதம் போதிக்கும் சந்தேகமற்ற விசுவாசத்தைப் படம் வலியுறுத்துகிறதோ என்னும் ஐயத்தை உருவாக்கும் அளவுக்குப் படத்தில் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் அமைதியாக  ஆனால்  அழுத்தமாகவும் ஆழமாகவும் அலசப்படுகின்றன.
தந்தை புதையலோடு மூழ்கியது உள்ளிட்ட பல சம்பவங்கள் குறியீடுகளாகத் தோன்றுகின்றன. அந்தப் புதையல் என்னவென்பது யாருக்குமே தெரியாது. அதன் மர்மம் மனித மனத்தின் மர்மம் போலப் புதிரானது தான்.
பின்குறிப்பு: 
இத்திரைப்படத்தில் ஆந்த்ரேயாக நடித்த 15 வயதான விளாடிமிர் கரின் என்னும் சிறுவன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த சில தினங்களுக்குப் பின்னர் படத்தின் தொடக்கத்தில் இடம்பெற்ற உயரமான கோபுரத்திலிருந்து நீருக்குள் குதிக்கும் முயற்சியில் உயிரை இழந்துவிட்டான் என்பதுதான் சோகம். வெனிஸ் திரைப்பட விழாவில் இந்தப் படத்திற்குக் கிடைத்த விருதை விளாடிமிர் கரினுக்கு இயக்குநர் சமர்ப்பித்துள்ளார்.


நண்பர் முரளியின் அடவி பிப்ரவரி 2014 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக