புத்தாண்டைக் கொண்டாடி மகிழும் மனநிலை எப்போதுமே இருந்ததில்லை. பெரிய உற்சாகத்தை மனம் உணர்ந்ததில்லை என்பது ஒரு காரணம். வீடு என்பது தொல்லையான இடமாக இருந்தால் வெளியில் செல்லலாம். ஆனால் வீட்டில் இருப்பதே நிம்மதி என்னும் உணர்வு தான் உள்ளது. அதனால் வீட்டில் அமர்ந்தே பொழுதுபோனது. ஃபேஸ்புக், டுவீட்டர் என சமூக வலைதளங்கள் தனிமையைக் கலைக்க பெரிதும் உதவும். நம் நண்பர்கள் உலகமெங்கும் விழித்துக்கொண்டிருப்பதை ஃபேஸ்புக்கில், ஜிமெயிலில் ஒளிரும் சிறு பச்சை வட்டம் உணர்த்தும். பக்கத்திலேயே அமர்ந்து அவர் வேறு ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று தான் தோன்றும். அவர் எங்கோ எந்த மாநிலத்திலோ எந்த நாட்டிலோ எந்த நகரத்திலோ இருக்கக்கூடும். ஃபேஸ்புக்கை உருட்டும்போது நண்பர்கள் யாரை நண்பர்களாக சேர்த்திருக்கின்றனர், எதை விரும்புகின்றனர், எதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர் போன்ற செய்திகளை அறிந்துகொள்ளலாம். ஆக தனியே இருந்தாலும் தனிமை அல்ல அது.
24 மணி நேர செய்தி அலைவரிசைகள் வந்த பின்னர் புத்தாண்டு கொண்டாட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்வது உள்ளிட்ட கொண்டாட்ட போக்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் வந்துகொண்டும் போய்க்கொண்டும் தான் இருக்கிறது. விஷேசமாக சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனாலும் புத்தாண்டை சடங்குத் தனமாகக் கொண்டாடி மகிழ்வோர் இருக்கத்தான் செய்கின்றனர். இந்தப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆறேழு பேர் இறந்துள்ளனர். ஜனனமும் மரணமும் இயல்பானது தான். ஆனால் அநியாயத்திற்குச் செத்துப்போகிறார்களே என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது. வழக்கம்போல் தொலைக்காட்சிகளை திரையுலக ஆளுமைகள் நிறைக்கின்றனர். பைசா பெறாத விஷயங்களைக் கிடைப்பதற்கரிய பொக்கிஷமாய் பேசி மாய்கிறார்கள். கையில் ரிமோட் கண்ட்ரோல் இருந்தபோதும் எந்தப் பெரிய மாற்றமுமில்லை. ஒரே ஆளுமைகள் வெவ்வேறு தொலைக்காட்சிகளில் சொன்னதையே சொல்லிச் செல்கிறார்கள்.
சினிமா தவிர்த்த பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்த பிரக்ஞை எந்தத் தொலைக்காட்சிக்கும் இருப்பது போல் தெரியவில்லை. தொலைக்காட்சி என்பது ஆற்றல்மிக்க ஊடகம் தான். ஆனால் தமிழில் வெளிவரும் நிகழ்ச்சிகள் எவையும் ஆழமானவையோ பரிசீலிக்கத்தக்கவையோ அல்ல. ஒரே ஒரு தூர்தர்ஷன் இருந்தபோது கிடைத்த ஆசுவாசம் இத்தனை தொலைக்காட்சி அலைவரிசைகள் வந்து பின்னர் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அயர்ச்சியை உண்டுபண்ணும்விதமாகவே தொலைக்காட்சிகள் அமைந்துள்ளன. ஒரே விதமாக யோசிக்கின்றன. ஏற்கனவே வெற்றிகரமாக நடைபெறும் நிகழ்ச்சிகளை நகலெடுக்கும் வேலை தான் நடக்கிறது.
பரிசோதனை பண்ணி பார்க்க எந்தத் தொலைக்காட்சியும் முயல்வதில்லை. எல்லாவற்றிற்கும் பணம் பண்ணும் ஆசை மட்டுமே உள்ளது. மக்கள் திரளுக்கு அதை எல்லாம் உணர வாய்ப்பே இல்லை. அவர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கிடைக்கும் இடைவெளியில் அவர்களைத் தொந்தரவு செய்யாத நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்க விரும்புகிறார்களோ என்னவோ? அறிவியல், இலக்கியம், வரலாறு தொடர்பான ஆழமான நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் தைரியம் எந்தத் தொலைக்காட்சிக்கும் இல்லை. ஒருவேளை மக்களும் அவற்றைப் பார்க்கத் தயாராக இல்லையோ என்னவோ? தொடர்ந்து ஒரு நாள் முழுவதும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளை யாராவது பார்த்தால் பைத்தியம் பிடித்துவிடும். அதிலும் நெடுந்தொடர்கள் உங்கள் கொதவளையை நெரிச்சிரும். ஆனாலும் பைத்தியம் பிடிக்காதபடி மக்கள் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். மக்களிடம் ஏதோ ஒரு வெறுமை உள்ளது. அதைப் பூர்த்திசெய்ய அவர்களுக்கு கிடைப்பது போதும் போல. ஆழமான விஷயங்களை நோக்கி அவர்கள் நகர விருப்பப்பட மாட்டார்கள் என்பது நமது சூழலின் சாபமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக